Yadhu weds aaru 8

Yadhu weds aaru 8

அத்தியாயம் 8

“உன்னோட பிறப்பு…நீ எங்கே..யாருக்கு..எந்த ஜாதில பிறக்குறேன்றது…”

“கட்…கட்…யாதவ் என்ன பண்ணிட்டு இருக்க…இப்படி ஒரு உணருவுமே இல்லாமல் சொன்னா எப்படி…நீ பிறந்ததில இருந்து நீ சந்திச்சுட்டு வந்துருக்க அவமானம்…நிராகரிப்புகள்…உனக்கு நியாமா கிடைக்க வேண்டிய மரியாதை உன்னோட பிறந்த சமூகத்தின் காரணமா உனக்கு மறுக்கப்படுது…அது எல்லாத்தையும் முறியடிச்சு இப்ப நீ மேலே வந்துருக்க… உன்னோட அவமானங்கள் எல்லாமே முடிச்சிருச்சுனு நினைக்கும் போது மீண்டும் ஒரு அவமானம் …ஒரு ஆசிரியரான உன்னையே உன் ஸ்டுடென்ட்ஸ் உனக்குத் தெரியாம கேவலமா பேசுறாங்க…உனக்கே இப்படின்னா உனக்குக் கீழே இருக்குற உன்னோட சமூகத்தைச் சார்ந்தவங்களோட நிலைமையை நினைச்சு உன் நெஞ்சுல சுளீர்னு ஒரு வலி வருது…இந்த இடத்தில இவங்க எல்லாம் நிமிர்ந்து பார்க்க கூடிய ஒரு ஆளுமையா வரணும் அப்படின்ற வெறியோட முதல் விதை உனக்குள்ள விழுது… இதுக்கப்புறம் தான் கதையோட போக்கே மாறப் போது.. இதை நீ பாக்குற ஆடியன்ஸுக்கு உன் நடிப்பு மூலமா புரிய வைக்கவேண்டும்…..உன் உடல்மொழில இவங்கல்லாம் ஒரு ஆளா அப்படினும் …உன் கண்ணுல ஒரு வெறியோட…உன் குரல்ல வருத்தம் இருக்கனும்…அப்படி பேசு…”என்று அந்தக் காட்சி எப்படி வரவேண்டுமென்று உணர்வுகளுடன் கூறினார் யாதவை அறிமுகப்படுத்திய இயக்குனர் வேதன்…அவர் தான் இந்தப் படத்தினுடைய இயக்குனரும்…

வேதன் சொல்வதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த யாதவ் அவர் முடித்ததும் சரியென்பதுபோல் தலையாட்ட…அவரும் சிரிப்புடன் தலையாட்டிவிட்டு தனது இருக்கையில் அமர்ந்து ஆக்ஷ்ன் என்று குரல் கொடுக்கப் படப்பிடிப்பு ஆரம்பித்தது…

“எனக்குப் புரியலை…உன் சமூகத்தை நினைச்சு நீ பெருமை பட என்ன இருக்கு…உன் மார்தட்டி எங்களைச் சீண்ட என்ன நீ கிழிச்சுருக்க….நீ இந்தச் சமூகத்துல பிறந்தது வெறும் உன்னோட அதிர்ஷ்டம்…இன்னும் சொல்ல போனா கடவுள் போட்ட பிச்சை…பிச்சைக்கு நீங்க பெருமை பட்டுட்டு இருக்கீங்க…. ஆனால் நான் எனக்கு நானா உருவாக்கிட்ட அடையாளம்….நீ சொன்னது சரி தான் எங்க பசங்க உங்களை விட மார்க் கம்மியா இருந்தாலும் கோட்டா மூலமா உள்ளே வந்துறாங்க அப்படினு…என் சமூகத்து பேரை கேட்டவுடனே உன் முகத்துல ஒரு ஒதுக்கம் வந்துச்சு பார்த்தியா….அதை பிறந்ததுல இருந்து சகிச்சுட்டு….எங்க அவமானங்களைத் தாங்கிட்டு…ஒரு சபையிலே எங்க கருத்தை கூடச் சொல்ல முடியாத…கேவலம் ஒரு டீ கடைல கூடக் கால் மேல காலு போட்டு உட்கார முடியாத எங்க பசங்க எண்ணுறு மார்க் எடுத்தாலும் அது அதிகம் தான்…. அப்படி எங்கபசங்களுக்குக் கொடுக்குற கோட்டா உங்களுக்கு உருத்துச்சுன்னா…இப்படி பண்ணுங்களேன்…இந்த இந்தியா திருநாட்டில் செய்ய முடியாத போர்ஜரியா உங்க கம்யூனிட்டி செர்டிபிகேட்ல எங்க சமூகம் பேரை போட்டு வாங்கி நீங்க கோட்டா யூஸ் பண்ணிக்க வேண்டியது தானே…உங்களால முடியாதுல…பேருக்கு கூட எரியுதுல…அதை வாழ்க்கை முழுக்கக் கூட வைச்சுருக்க எங்களுக்கு இந்தச் சலுகைகள் குடுத்து தான் ஆகணும்… ”

என்று யாதவ் இயக்குநர் கூறிய அத்துணை உணர்வுகளுடனும் ஜீவானந்தம் கதாபாத்திரமாகவே மாறி பேசிமுடிக்க அந்த டாவ்கி நதிக்கரையோரம் முழுவதும் நிச்சல மௌனம்…வேதன் எழுந்து பிரமாதம் என்றுக் கூறி கைதட்ட…படப்பிடிப்பு இடம் முழுவதும் கைதட்டலால் அதிர்ந்தது…கனிஷ்கா ஓடிவந்து அவனை அணைத்துக்கொண்டாள்…ஆமாம் இந்த படத்திலும் கனிஷ்கா தான் கதாநாயகியாக நடிக்கிறாள்…

“டார்லி…செம…இந்த தடவை கண்டிப்பா பிலிம் பேர் உனக்குத் தான்…”என்று கனிஷ்கா சிரிப்புடன் கூற…”அப்படினு சொல்லுற…பார்க்கலாம்…இந்த தடவை உன்னை விட அதிகமா அவார்ட் வாங்கணும் அதான் என் ட்ரீம்”என்று யாதவ் கண்ணடித்துக் கூற “அது முடியாது…உன்னாலே..”என்ற கனிஷ்காவுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்…

இருவரும் டாவ்கி இடத்தில் இந்தியாவையும் வங்காள தேசத்தையும் இணைக்கும் தொங்கு பாலத்தில் நின்று கொண்டிருந்தனர்…

வட கிழக்கு இந்தியா இன்னும் இயந்திர மயமாகாத இயற்கை கொஞ்சும் உறவுகளுடன் அழகிய இடமாகத் திகழ்கிறது. அப்படி ஒரு இடம்தான் மேகாலயாவில் இருக்கும் டாவ்கி…

மேகாலயாவின் தலைநகர், ஷில்லாங்கிலிருந்து 95 கி.மீ தொலைவில் இருக்கிறது இந்த டாவ்கி நகரம். இங்கிருந்து வங்கதேசம் இரண்டு கி.மீ.தான். டாவ்கி, இந்தயாவிற்கும், வங்கதேசத்திற்கும் இடையே இருக்கும் வணிக உறவிற்கான முக்கிய இணைப்பு. இதனால், டாவ்கியை, வங்கதேசத்தின் நுழைவாயில் என்று கூறுகின்றனர்.

டாவ்கியில் உள்ள உம்ன்காட் என்னும் நதியைக் பாலத்தின் மேலிருந்து பார்த்தால் நதியின் அடியாழம் வரை தெரியும். துளி தூசி இல்லாத பளிங்கு போல் ஓடும் ஆற்றில், படகுகள் போகும் காட்சி கண்ணாடியில் வழுக்கிக் கொண்டு செல்வது போல் தெரியும். இங்கு மீன்பிடித்தொழில் பிரதானம். ஆற்றில் நிறைய படகுகளைப் பார்க்கலாம். இந்த நதியோரத்தில் இருக்கும் தொங்கு பாலம்தான் இரு நாடுகளை இணைக்கிறது. இது ஆங்கிலேயர்களால் 1932’அம் ஆண்டில் கட்டப்பட்டது. இரு நாட்டு மக்களின் வசதிக்காக, இங்கு ஒரு சிறிய சந்தையும் இருக்கிறது…

அவர்கள் பின்னயே வந்த கவி “அண்ணா சார்…அண்ணா சார்…”என்று இரண்டு மூன்று தடவைக்கு மேல் கூப்பிட்டும் அவன் திரும்பிப் பார்க்கவே இல்லை…அதில் கடுப்பான கவி “அண்ணா சார்…இப்ப நீங்க திரும்பி பார்க்காட்டி இந்த பாலத்தில் இருந்து குதிச்சுருவேன்…”

அவளை நோக்கித் திரும்பாமலே”என்கிட்டே வேலைக்கு வந்ததிலிருந்து நீ செய்யுறேன்னு சொல்லிருக்க உருப்படியான வேலை இதான்…”என்று யாதவ் கூறவும் கனிஷ்கா வாய்விட்டுச் சிரித்துவிட்டாள்…

“ஆரம்பிச்சுட்டீங்களா…இரண்டு பேரும்…கவி இந்த தடவை என்ன தப்பு பண்ண…உங்க அண்ணா சார் பேசக்கூட மாட்டேன் சொல்லுற அளவுக்கு…”என்று கனிஷ்கா கேட்கவும் கவி சொல்லப்போக…அவளைத் தடுத்தவன்

“உனக்கு எதுக்கு அதெல்லாம்…என் மானேஜருக்கும் எனக்கும் ஆயிரம் இருக்கும்…”என்றவன் கவியிடம் திரும்பி “நீ பேசாதே என் கூட கவி….உன்னால தான் அந்த பஜாரிக்கிட்ட அசிங்கப்பட வேண்டியதா போச்சு…”என்று யாதவ் கோவப்பட…

“அதான் இரண்டு நாள் பேசாம இருந்துட்டீங்கள…அப்பறம் என்ன அண்ணா சார்..பேசுங்க…”என்று கவி பாவம் போல் எஜமானரிடம் ஏங்கும் பப்பி நாயைப் போல் முகத்தை வைக்கவும் சிரித்தவாறு அவள் மண்டையில் தட்டிய யாதவ் அவளது தண்டனையை முடித்துவைத்தான்…

அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்த கனிஷ்காவுக்கு என்றும் போல் தனது நண்பன் இன்றும் ஏதோ அனைவரிடமிருந்தும் வித்தியாசமாகத் தெரிந்தான்…approachable personality என்று ஆங்கிலத்தில் ஒரு பதம் இருக்கிறது அல்லவா…அதற்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு யாதவ் தான்…யாரும் எளிமையாக அணுகும் விதம் அவன் இருந்தான்…கவி மட்டுமில்லை யாராக இருந்தாலும் அவனிடம் இப்படி உரிமையாக விளையாட்டாக பேசலாம்…அவன் இப்படி இருக்கவேண்டிய அவசியமே இல்லை…மிகப்பெரிய பணக்கார வாரிசு…மிகப்பெரிய ரசிக வட்டத்தைக் கொண்ட திரை பிரபலம்…அதற்கான எந்த பந்தாவும் இல்லாமல் சராசரி மனிதனாக இருந்தான்…இவர்கள் குடும்பமே திமிர்த்தனத்துக்கும்…எடுத்தெறிந்து பேசுவதற்கும் பெயர் போனவர்கள்…அப்படிப்பட்ட குடும்பத்தில் இப்படி ஒருவன்…இவளுக்கு மட்டும் இப்படிக் கவி மாதிரி ஒரு சொதப்பல் மேனேஜர் கிடைத்திருந்தால் முதல் நாளே வேலையை விட்டு அனுப்பிருப்பாள்…அப்பா முகம் அப்பத்தா முகம் என்றெல்லாம் பார்த்திருக்க மாட்டாள்…

இந்தியாவின் மேற்கே சுட்டெரிக்கும் தார் பாலைவனம் இருக்கிறதென்றால் கிழக்கே உலகிலேயே மிக ஈரப்பதமான இடங்களில் ஒன்றான சிரபுஞ்சி அமைந்திருக்கிறது. ஸோஹ்ரா என்று உள்ளூர்வாசிகளால் அறியப்படும் சிரபுஞ்சி மேகாலயாவில் உள்ளது. அலை அலையாக மேடு பள்ளங்களுடன் காணப்படும் மலைகள், ஏராளமான நீர்வீழ்ச்சிகள், வங்கதேசத்தின் நீள அகலங்கள் நன்றாக துலங்கும் பூரண காட்சி,

உலகிலேயே அதிக அளவு மழை பெறும் பகுதி என்று கருதப்பட்டது. எனினும் தற்போதைய ஆய்வுகளின் படி மௌசின்ரம் என்ற இதற்கருகிலுள்ள ஒரு இந்திய ஊரே உலகிலேயே அதிக அளவு சராசரி மழையைப் பெறும் இடமாகும்.

சிரபுஞ்சிக்கு அருகில் உள்ள நோகலிகை நீர்வீழ்ச்சியே, இந்தியாவின் உயரமான முங்கு நீர்வீழ்ச்சியாகும். இங்கு வருடம் முழுக்கவே மலை பெய்வதால் எப்போதும் வற்றாத அருவியாகவே இது உள்ளது. மிக ஆபத்தான மலை முகட்டில் இருப்பதால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நோகலிகை அருவியை தொலைவில் இருந்தே பார்க்கும்படியாக இருந்தது. தற்போது படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருப்பதால் மிக அருகில் சென்றே இந்த அருவியை கண்டு ரசிக்க முடியும்.

“ஷா லைட்டிங் வேணாம்னு சொன்னிங்களாம்…ஹை லைட்டிங் வைச்சுக்கலாமே…”என்று அந்த படத்தின் இயக்குநர்….ஒளிப்பதிவாளரான ஆருஷாவிடம் யோசனையுடன் கேட்டார்…இவர்கள் இப்பொழுது படப்பிடிப்புக்கு வந்திருப்பது நோகலிகை நீர்வீழ்ச்சி…

“இல்லை சார்…வேண்டாம்…இயற்கை அமைப்பு நல்லா இருக்கு…நமக்கு இங்கே இருக்க வெளிச்சமே போதுமானது…அப்பத் தான் பாக்குறவங்களுக்கு ஒரு லைவ் பீலிங்…அண்ட் பிளேசண்டப்பில்ல இருக்கும்…இல்லாட்டி உங்களுக்கே தெரியும்…”என்று ஆருஷா இதைப் புரிந்துகொள்ளுங்களேன் என்பது போல் கூறினாள்…

ஒரு படம் உருவாக்கத்தில் மிகவும் ஒன்றிணைவாகச் செல்லவேண்டியவர்கள் இயக்குநரும்…ஒளிப்பதிவாளரும் தான்…அவர்கள் இருவரும் நீண்ட நாட்கள் பழகிய நண்பர்கள் போல் பயணிக்க வேண்டும்…ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து…அவர் மனதில் நினைப்பதை இவர் புரிந்துகொண்ட ஒன்றிணைந்த ஆதர்ச தம்பதிகள் போல் சென்றால் தான் இந்த படம் என்னும் குடும்பத்தை நல்லபடியாக கரைசேர்க்க முடியும்…இருவருக்குள் சின்னபிணக்கு வந்தாலும் எல்லாமே முடிந்தது… இயக்குநர் உருவாக்கி வைத்திருக்கும் கதாபாத்திரங்களுக்கு ஒளிப்பதிவாளரால் தான் உயிர்கொடுக்க முடியும்…

நடிகர்களின் உணர்வுகள்…அழுகை..சிரிப்பு …வருத்தம்…ஈகை…பழிவெறி…பாவம் என்று அனைத்தையும் லைட்டிங்… போட்டு அதை ஒளிபடசுருளில் பிடித்து சிறிது ஒளிப்பதிவாளர் மசாலாவையும் தூவி இறக்கினால் தான் அது நல்லதொரு படமாக அமையமுடியும்…

ஒளிப்பதிவாளர் ஒரு ஓவியர்…அவரது கேன்வாஸ் திரை…அவரது தூரிகை நடிகர்கள்…இட அமைவு…வெளிச்சம்…செட்….இதை கொண்டு ஓவியம் என்னும் திரைப்படத்தை படைப்பார்…

அதுவும் இது தான் அவளது முதல் படம்…இந்தப்படம் நல்லபடியாக அமைந்தால் தான் அடுத்து அடுத்து எல்லாம் நல்லபடியாக அமையும்…

சில நொடிகள் யோசித்தவர் “ஒகே…ஷாட் போகலாமா…”என்று சாவிடம் கூறியவர்…நதியின் அருகில் நின்றிருந்த சித்தார்த்திடம் ” ஆக்ஷன் சொன்னவுடனே தண்ணிக்குள்ள குதிக்கணும்…சரியா…” என்றவாறு திரை முன் சென்று அமர்ந்தவர்…ஆக்ஷன் என்று சொல்ல கிளாப் போர்டு தட்டப்படப் படப்பிடிப்பு ஆரம்பித்தது…

ஷா காமெராவுடன் பயணித்து அந்த காட்சியைப் பதிந்து கொண்டிருந்தாள்…நீர்வீழ்ச்சி என்பது இயற்கையின் நிரந்தர ரீவைண்ட் காட்சி என்று நினைத்தவள் அதற்கு ஏற்றாற்போல் ஒளிப்பதிவு செய்தாள்…

“ரொம்ப நல்லா வந்துருக்கு…சூப்பர் சித்…சூப்பர் ஷா…”என்ற இயக்குநர் அடுத்த காட்சிக்கான ஆயத்தங்களை உதவி இயக்குநர்களுடன் பார்க்கச் சென்றுவிட்டார்…

ஆருஷாவின் சிறுவயது லட்சியமே ஒளிப்பதிவாளர் ஆகவேண்டும் என்பது தான்…அவளது தாயின் இறப்புப்பிற்கு பிறகு அவளால் எதையும் தன் தந்தையுடன் பகிர்ந்து கொள்ளா முடியாத பட்சத்தில் அப்பாவிற்கு மாற்றாக வந்தவர் தான் விஸ்வநாதன்…அவர் மற்றவர்களுக்கு எப்படியோ ஆருஷாவிற்கு மிகவும் நல்லவராகவே இருந்தார்…அவரின் மூலமே புனே திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவாளருக்கான படிப்பை முடித்தாள்… புனேவில் படிப்பை முடித்துவந்த கையோடு இந்திய ஒளிப்பதிவாளரில் சிறந்தவராக விளங்கி கொண்டிருக்கும் பாலுவிடம் பல மெனக்கிடல்களுக்கு பிறகு உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தாள்…அவரிடம் பணிபுரிந்த இரண்டுவருடங்களுக்கு பிறகு அங்கிருந்து வெளியேறி விளம்பரப்படங்கள்…ஆல்பம் சாங்ஸ்…குறும்படங்கள் என்று ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தாள்…ஒரு வருடத்திற்கு முன்பு பாலுவின் குறிப்பிடலின் மூலம் இவளுக்கு ஒரு படம் வந்தது அது யாதவால் தட்டி போகிவிட…

காலநிலை மாற்றத்தால் கடல்களில்….அங்குள்ள உயிரினங்கள் வாழ்வியலில் ஏற்படும் மாற்றம் அதனால் உலகின் சமநிலையில் ஏற்படப்போகும் மாற்றம் முதலியவற்றை தொகுத்து தி ப்ளூ பிளானட்…ஸ்டோரி ஆப் தி ஓசன் (the blue planet …story of the ocean) என்றொரு டாக்குமெண்டரி எடுத்திருக்கிறாள்…படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்ட நிலையில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் ஒளிப்பதிவு செய்ய அழைப்பு வந்ததும் ஏற்று கொண்டாள்…(முதல் அத்தியாயத்தில் யாதவ் மற்றும் கனிஷ்காவுடன் அறிமுகம் ஆனவன் இன்னொருத்தன் இருக்கிறான் என்றேன் அல்லவா அது இவர் தான்…)

“அகலே லொகேஷன் மே கேமரா செட் பண்ணவா தீதி…”என்று ஷாவின் முகம் பார்க்காமல் கேட்டான் மாஹிர்…

அவளோ மாஹிர் என்கிற ஒருத்தன் அங்கு இல்லாதது போலவே வேறு ஒருவனை அழைத்து எதுவோ பேசிக்கொண்டிருந்தாள் ஷா…அப்பொழுது அந்த இடத்துக்கு இந்த படத்தின் கதாநாயகன் சித்தார்த் வந்து சேர்ந்தான்…

சித்தார்த்க்கு நமஸ்தே வைத்த மாஹிர் அங்கேயே நின்றுக் கொண்டிருந்தான்…அவனது வரவேற்பை தலையாட்டி ஏற்றவன் “ஹாய் ஷா….சித்தார்த்…”என்று கையை நீட்டவும் சின்ன சிரிப்புடன் அவனிடம் கைகுலுக்கினாள் ஆருஷா…

“உங்களை பத்தி நிறைய கேள்வி பட்டு இருக்கேன்..இன்னைக்கு தான் பார்க்க முடிந்தது…”என்று சித்தார்த் கூறவும் “என்னை பத்தி என்ன கேள்வி பட்டு இருக்கீங்க…ஓஹ் அந்த விடியோஸ் ஆஹ்…”என்று எந்தவித பொய்ப்பூச்சும் இல்லாமல் ஷா நேரடியாக கேட்கவும்…ஒரு நிமிடம் தடுமாறியவன்

“அதுவும் ஒன்னு…இன்னொன்னு உங்க டாக்குமெண்டரி பத்தி கேள்விப்பட்டேன்…”என்று சித்தார்த் அழகாக சமாளிக்கவும்…உன் சமாளிப்பு எனக்கு புரிந்து விட்டது எனபது போல் சிரித்தவள் “யாதவ் friend தானே….அப்படி தான் இருப்பிங்க…”என்று ஷா கூறியவுடன் கையில் வைத்திருந்த அடுத்த காட்சிக்கான தாள்களை டம்மென்று அருகிலிருந்த நாற்காலியில் வைத்துவிட்டு ஆருஷவை நோக்கி ஒரு முறைப்பை செலுத்தி நிலம் அதிர தக் தக்கென்று தாயிடம் கோவித்துக்கொண்ட சிறுபிள்ளை போல் நடந்துசென்றான் மாஹிர்…

இவனுக்கு இப்பொழுது என்ன என்பது போல் மாஹிர் செல்வதை திரும்பி பார்த்த சித்தார்த் ஆருஷாவை நோக்கி என்ன ஆயிற்று இவனுக்கு என்று பார்வையாலே இவளிடம் வினவினான்…

“யாதவ் பேர் சொன்னேன்ல அதுக்கு…” என்று ஷா தோளை குலுக்கி சாதாரணம் போல் கூறவும்…சித்தார்த்தும் சிரிப்புடன் தலையாட்டினான்…

இரண்டு நாட்களுக்கு முன்பு…

“ஆமா இவ்வளவு நேரம் பேசுனே…முக்கியமான விஷயத்தை கேட்காம விட்டுட்டேன் கௌஹாத்தி எதுக்கு வந்த…”என்று யாதவ் ஆருஷாவிடம் பயணப்பொதிகளை எடுத்துக்கொண்டே கேட்கவும் தீதி என்ற அழைப்புடன்…யாதவை ஹல்க்கின் அக்கா பையன் போல் முறைத்துக்கொண்டே அந்த இடத்தை வந்தடைந்தான் மாஹிர்…

“தும் உஸ்க்கே சாத் கியூன் போல்தெ ஹேன்….”என்று யாதாவிற்கும் ஷாவிற்கும் இடையில் வந்து நின்றவன் யாதாவிற்கு முதுகை காட்டிக்கொண்டு ஷாவின் முகத்தை பார்த்துக்கேட்டான்…இவன் இப்படி கேட்டுக்கொண்டிருக்கும் போதே கவி அங்குவந்து சேர்ந்தாள்…

ஷாவோ கண்ணடித்து எதுவோ சைகை செய்துகொண்டிருந்தாள்…அது மாஹிர்க்கு புரியாமல் போய்விட ” மு கோல்கர் சோர் சே பாத் கரோ.. தீதி…”என்று மாஹிர் கேட்கவும்…தனது தலையில் தானே அடித்துக்கொண்டவள் வாயில் கைவைத்து அமைதியாக இருக்குமாறு சைகை செய்தாள்…

“வாய் பேச முடியாத பிள்ளைகிட்ட என்ன டா சோர் சே போலோ…”என்று கூறியவாறு மாஹிரின் சட்டையை பிடித்து தன்பக்கம் திருப்பினான் யாதவ்…

இவன் யாரு டா பைத்தியம் என்பது போல் அவனது வார்த்தைகளில் யாதவை நோக்கியவன்….”க்யா தும் பாகல் ஹோ…”என்று நக்கலாக கேட்கவும்…அவ்வளவு நேரம் எதுவும் புரியாமல் நின்றிருந்த கவி “ஏய்ய்…என்ன என் அண்ணா சாரை…லூசு னு சொல்ற…பார்க்க கொஞ்சம் அப்படி தான் இருப்பாரு…அதுக்காக இப்படி சத்தமா சொல்லுவியா நீ…நீ தான் டா பாகல்…மெண்டல்…பைத்தியம்…பிராந்தன்…எல்லாம்”என்று கவி எகிற…

“மெய்ன் ஆப்செ பாத் நஹின் கர்னே வாலா…”

“தமிழ்…தமிழ்ல பேசு டா…நாங்க எல்லாம் பெரியார் பேத்திங்க டா…”என்று மாஹிரும் கவியும் சண்டை போட ஆரம்பித்துவிட்டனர்…அந்த இடைப்பட்ட நேரத்தில் தான் யாதாவிற்கு ஒரு உண்மை புரிந்தது…விமானத்தில் எறியதிலிருந்து இந்த நிஷா என்ற ஆருஷா சொன்னது அனைத்தும் பொய் என்று…புரிந்தவுடன் நறநறவென்று பல்லை கடித்தவன்…சண்டை போட்டுக்கொண்டிருந்த..அது சண்டை மாதிரி தெரியவில்லை எதுவோ செய்துகொண்டிருந்த இருவரையும் இட கையால் விலக்கிவிட்டு ஷாவை அடைந்தவன் அவளை நோக்கி கையை உயர்த்திருந்தான்….

 

error: Content is protected !!