YNM-3
YNM-3
3
உயிர் (கொல்லி) நண்பன்
சுசீந்திரன் பரி மகிழினியை பார்த்து கொண்டிருப்பதை கவனித்து தீவிரமாக அவனையே நோட்டமிட,
அதை எப்படியோ கவனித்துவிட்ட சமீர் நண்பனை எச்சரிக்கை செய்தான்.
“டே மச்சான்! உன் எதிர்காலம் எனக்கு இப்பவே நல்லா தெரியுது?” என்று அவனிடம் ரகசியமாக சொல்ல,
“என்னடா உளற?” என்று புரியாமல் கேட்டான் பரி!
“அவசரப்படாம கொஞ்சம் பொறுமையா திரும்பி பாருடி… உன் மாமன் உன்னையேதான் பார்த்திட்டிருக்கான்… அவரு மீசை வேற பயங்கரமா துடிக்குது… இங்கேயே நீ கைமாதான் நினைக்கிறேன்” என்று அவன் எதிர்காலத்தை படித்தது போல் சொன்னான் சமீர்.
பரி கொஞ்சமும் அசராமல் ஓரபார்வையால் தன் மாமனை பார்த்துவிட்டு, சில நொடிகளில் அந்த இடத்தின் காட்சியையே மாற்றிவிட்டான்.
ஓரே ஒரு வரிதான் சொன்னான்.
“நான் பொண்ணு கூட தனியா பேசணும்” என்று!
அங்கே இருந்த குழுமிய கூட்டத்தில்
உள்ள எல்லாம் அவனை ஒவ்வொரு விதமாக பார்த்தனர். இதில் அவர்களுக்குள் ரகசிய பேச்சுவார்த்தை வேறு!
சுசீந்திரனுக்கு ஒன்றும் புரியவில்லை. தலையே சுற்றியது. தான்தான் ஏதோ தவறாக புரிந்து கொண்டோமோ என்று யோசிக்கும் போது அவரின் தமையன் விமலன், “மாப்பிள்ளை இப்படி கேட்கிறாரு… என்னடா தம்பி சொல்றது? அதுவும் சொந்த காரங்க எல்லாம் ஒண்ணா கூடி இருக்கும் போது” என்று யோசனை செய்து தயங்கி கொண்டிருந்தார்.
கலிவரதன் அப்போது தாமரையை பார்த்து, “உன் பையன் அடங்கவே மாட்டானா…அதான் போன்ல மணிக்கணக்கா சௌந்தர்யாகிட்ட பேசுறானே… அப்புறம் எதுக்கு இப்ப தனியா அவனுக்கு பேசணும்” என்று கடுப்படித்து கொண்டிருந்தார்.
“பொண்ணை நேர்ல பார்த்து பேசணும்னு அவனுக்கும் ஆசை இருக்காதாங்க” என்று தாமரை மகனுக்காக பரிந்து பேசி கொண்டிருக்கும் போதே கலிவரதன் மனைவியை முறைத்து வைக்க, அவர் பட்டென தன் வாயை மூடி கொண்டார்.
இவர்கள் எல்லோரும் அரசல் புரசலாக பேசி கொண்டிருக்க, சமீருக்கு விவாகரமான ஓர் சந்தேகம் உதித்தது.
“டே! நீ எந்த பொண்ணுக்கிட்ட தனியா பேச போற… முதல அதை சொல்லு” என்று கேட்டு வைக்க,
பரி விஷமமான புன்னகையோடு அவனை பார்த்தான்.
“இவன் அடி வாங்கறது இல்லாம நம்மலயும் சேர்த்து அடி வாங்க வைப்பான் போல இருக்கே” என்று சமீர் புலம்பி கொண்டிருக்க,
அங்கே நிலுவிய உறவினரின் சலசலப்பை அடக்கியது போல ஓர் பாட்டியின் குரல் ஓலித்தது.
“அட! என்னப்பா நீங்க… இதுக்கு போய் இம்புட்டு நேரம் யோசிச்சிக்கிட்டு… புள்ளைய அனுப்பிவிடுங்க… மாப்பிள்ளை தனியா பேசட்டும்… எங்க காலத்துலதான் இப்படி எல்லாம் ஒண்ணும் நடக்கல” என்று கம்பீரமாக ஆரம்பித்து அவர் புலம்பலோடு முடிக்க,
பரி முகமெல்லாம் புன்னகை வழிந்தோடியது.
“பாட்டி! நீங்க செம டிரெண்டிங்கான ஆளு” என்று பாராட்டி பாட்டியின் டொக்கு விழுந்த கன்னத்தை கிள்ளி வைத்தான் பரி!
அந்த காட்சியை பார்த்த அங்கிருந்த எல்லோரும் ஒரே மொத்தமாக சிரிக்க, அந்த இடமே சிரிப்பு சத்தத்தில் அதிர்ந்தது.
“நீ பாட்டியை கூட விட்டு வைக்க மாட்டியாடா?” என்று சமீர் நண்பனை கலாய்த்து வைக்க, அவனை கடுப்பாக முறைத்துவிட்டு அனுமதி கிடைத்த சந்தோஷத்தில் சௌந்தர்யாவோட தனியாக பேச சென்றான் பரி!
அந்த வீட்டின் பின்வாயிலில் அமைந்த தோட்டத்தில்தான் அவர்கள் தனியாக பேச அனுப்பி வைக்கப்பட்டனர்.
‘நானும் வரவா?’ என்று கெஞ்சி கேட்ட தங்கையை சாமர்த்தியமாக கழற்றிவிட்டுவிட்டு சென்றாள் சௌந்தர்யா!
இன்னொரு புறம் சொந்தங்கள் எல்லாம் மெல்ல மெல்ல களைந்து செல்ல,
பாட்டிகள் கூட்டங்கள்
சுற்றி அமர்ந்து கொண்டு,
‘மாப்பிள்ளை அப்படி என்ன பேசுவாரு?’ என்று சிரித்து பேசி வெட்கப்பட்டு கொண்டிருந்தனர்.
இந்த காட்சியை பார்த்த சமீர், “ஐயோ! ஐயோ!” என்று தலையிலடித்து கொண்டு தன் நண்பர்களோட வெளியே வர,
பெரிய தூண் போல வழிமறித்து நின்றார் சுசீந்திரன்.
அவர் முகத்தை பார்த்ததும் சமீருக்கு வயிற்றிலிருந்து தொண்டை வரை ஏதோ பெரிதாக மேலும் கீழுமாக உருண்டது.
“உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என்று சுசி அழுத்தமாக சொல்ல,
‘அவன் பொண்ணு கூட்டிக்கிட்டு தனியா பேச போனா இந்த ஆளு என்ன நம்மல கூப்பிடுறான்… டேய்! பரி இப்படி சிக்க வைச்சிட்டியே டா’ என்று மனதில் புலம்பி தீர்க்க,
“கொஞ்சம் அப்படி வர்றீங்களா?” என்று சொல்லிவிட்டு சுசி கூட்டமில்லாத இடமாக தள்ளி சென்று நின்றார்.
“நீ போய் பேசிட்டு வாடா… நாங்கெல்லாம் ரூமுக்கு போறோம்” என்று அவன் நண்பர்கள் எல்லாம் சாமர்த்தியமாக கழண்டு கொள்ள,
“அடப்பாவிங்ளா… டேய் இருங்கடா” என்று அவர்கள் பின்னோடு ஓட பார்த்த சமீரின் பின்பக்கம் ஓர் வலிய கரம் பற்றியது. அவன் திரும்பி பார்த்து அதிர்ந்துவிட,
சுசீந்திரனின் ஆள் ஒருவன் நின்று கொண்டு, “ஐயா! காத்திட்டிருக்காரு போங்க” என்று படுபயங்கர குரலோடு மீசையை நீவி கொண்டே உரைத்தான்.
அவனை பார்த்ததும் பகீரென்றது சமீருக்கு!
‘இவன் என்ன கரடிக்கு காண்டாமிருகம் வேஷம் போட்ட மாறி இருக்கான்’ என்று சமீர் பயந்து கொண்டே வேறுவழியின்றி சுசீந்திரன் முன்னே வந்து நின்று,
“பேன்ன எசனும்? சீ… என்ன பேசணும்?” என்று குழறி கொண்டே பேச,
சுசீந்திரன் சுமுகமாக அவன் தோளில் கை போட்டு கொண்டு, “எதுக்கு பயப்படுறீங்க தம்பி? சும்மா மாப்பிள்ளை எப்படி என்னன்னு தெரிஞ்சுக்கலாம்னுதான் உங்ககிட்ட பேசணும்னு சொன்னேன்” என்று அவனை மெல்ல நடத்தி கொண்டே கேட்டார்.
சமீர் எச்சிலை விழுங்கி கொண்டான்.
“ஆமா! மாப்பிள்ளை பழக்கம் வழக்கமெல்லாம் எப்படி?” என்று சுசீந்திரன் அவனிடம் கேட்க,
“பரி ரொம்ம்ம்ம்ம்ப நல்லவன்” என்றான்.
“ரொம்ப குடிப்பாரோ?” சுசீந்திரன் அடுத்த கேள்விக்கு வர,
“சும்மா எப்பயாச்சும் பிரெண்ட்ஸ்லாம் சேர்ந்தா பீர் அடிப்போம்… நாங்கெல்லாம் அதிகமா அடிச்சாலும் அவன் கொஞ்சமாதான் காபி டீ மாறிதான் குடிப்பான்” என்று நண்பனுக்காக வேண்டி அசராமல் பொய்யுரைத்தான் சமீர்!
“பொண்ணுங்க விஷயத்தில” என்று சுசி கேட்டு அவனை ஓரப்பார்வை பார்க்க,
“ஐயோ பரி! பொண்ணுங்க மூஞ்சை பார்த்து பேசவே மாட்டானே!” என்று சமீர் சூசகமாக சொல்ல, “என்ன?” ஏன்று சுசி கேட்டு அவனை ஆழ்ந்து பார்த்தார்.
“இல்ல… அந்தளவு பொண்ணுங்க மேல மரியாதை… பாசம்…” என்று அதற்கு பிறகான வார்த்தைகள் எதுவும் மேலே வரவில்லை. வந்தால் நிச்சயம் அவன் கைமாதான்.
அவன் பேசியதை கேட்ட சுசீந்திரன், “நிஜமாவா?!” என்றபடி அவனை நம்பாமல் பார்க்க ஆமா என்பது போல் தலையை மட்டும் ஆட்டினான்.
“நான் போகட்டுமா?” என்று இறுதியாக தப்பிக்கும் நோக்கில் படபடப்பாக கேட்டான் சமீர்!
“இருங்க போகலாம் தம்பி” என்றவன் சமீரை மெல்ல பின்னோடு இருந்த தோப்பிற்கு நடத்தி அழைத்து வந்திருக்க, பகலிலும் கூட அந்த இடம் கொஞ்சம் பயங்கரமாகத்தான் காட்சியளித்தது.
சுசீந்திரன் பின்னோடு வந்த ஆட்களிடம், “என்னடா மண்ணை கிளறி உரம் வைக்க சொன்னனே வைச்சிட்டீங்களாடா?” என்று மிரட்டலாக கேட்க, சமீருக்கு சுசியின் பேச்சில் உடல் நடுக்கமுற்றது.
“இல்லைங்க ஐயா… நாளைக்கு வைச்சுடுறோம்”
“சரி… பார்த்து வையுங்க… கிளறும் போது ரொம்ப ஆழமா கிளறாடாதீங்க… உள்ளே இருக்க பிணம் கிணம் வெளிய வந்திர போகுது” என்று சுசீந்திரன் சாதாரணமாக சொல்ல, அதை கேட்ட சமீரின் விழிகள் வெளியே வந்து வீழ்ந்துவிடுமளவுக்கு பெரிதானது.
அப்போது அவரின் ஆட்களோ, “அதெல்லாம் ஆழமா கிடக்கும்… வெளியே எல்லாம் வராது… வந்தாலும் திரும்பி உள்ளே போட்டிரலாம்” என்றான்.
‘பிணத்தை போடறதை பணத்தை பேங்க்ல போடற மாறி அசால்ட்டா சொல்றானுங்க” என்று
எண்ணி சமீர் வியர்வையில் நனைந்திருந்தான்.
சுசீந்திரன் அவன் முகத்தை பார்த்து, “என்ன தம்பி பயந்துட்டீங்களா?… அரசியலில் இதெல்லாம் சாதாரணம்… அதுவும் எனக்கு இந்த பொய்யெல்லாம் சொன்னா பிடிக்கவே பிடிக்காது… அப்படியே எவனாச்சும் என்கிட்ட கோக்கு மாக்கு வேலை பண்ணி ஏமாத்துனான்னு வையுங்க…
எங்க ஆளுங்க அவன்ஸோலியை முடிச்சு குழி தோண்டி புதைச்சிடுவாங்க… அப்புறம் அது மேல நான் ஓரு செடியை நட்டுடுவேன்… நாடு பசுமையா இருக்கணும் பாருங்க” என்று ஈவு இரக்கமே இல்லாமல் சொன்ன சுசீந்திரனை பார்த்து குலை நடுங்கியது சமீருக்கு!
‘அடப்பாவி! எம்புட்டு மரத்தை நட்டு வைச்சிருக்கான்…அடேய் பரி… நீயும் கூடிய சீக்கிரம் இங்க மரமாக போற போல… ஐயோ! துணைக்கு நம்மலயும் கூட்டு சேர்த்துப்பானோ?!’ என்று மைன்ட் வாய்ஸில் பேசி கொண்டிருந்த சமீருக்கு நடந்தது கனவா நினைவா என்றே விளங்கவில்லை.
தான் எப்போது அறைக்கு வந்தோம் என்பதே தெரியவில்லை சமீருக்கு! அவன் நண்பர்கள் எல்லோரும் சுற்றி அமர்ந்து அவனை ஆராய்ச்சியாக பார்த்து,
“ஒரு வேளை நேசமணி சித்தப்பா தலையில சுத்தியல் விழுந்த மாறி இவன் தலையிலயும் ஏதாச்சும் விழுந்திருக்குமோ?!” என்று தீவிரமாக ஆலோசித்து கொண்டிருந்தனர்.
சமீரை அவர்கள் எல்லோரும் உலுக்கி பின் பலவகையாக ஆட்டி பார்த்தும் அவன் ஒரு ரியாக்ஷன் கூட இல்லாமல் இருந்தான்.
அப்போது அவனின் உயிர் (கொல்லி) நண்பன் பரி, “டேய்! சமீர்” என்று அழைக்கவும்தான் அடித்து பிடித்து பதறி கொண்டு சுற்றும் முற்றும் பார்த்து பேய் முழி முழித்தான்.
மோகினி வருவாள்…