YNM-6

YNM-6

6

அதிர்ச்சி

மகிழினிக்கு நடப்பதொன்றும் விளங்கவில்லை. பரபரப்பாக சுற்றி கொண்டிருக்கும் எல்லோரையும் என்ன நடந்தது என்று கேட்டு கேட்டு அவள் ஒய்ந்தே போய்விட்டாள். யாரும் எதுவும் சொல்லவில்லை.

‘இரு வரேன்’ ‘தோ வந்திடுறோம்’ ‘ கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டியா?’ ‘நீ அமைதியா உள்ளே போ’ இப்படியான பதில்கள்தான் எல்லோரிடமும் இருந்து வந்தது. அதோடு வீட்டு வாசலையும் யாரும் அவளை தாண்டவிடவில்லை. என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்று விடிந்ததிலிருந்து ஒன்றும் புரியாமல் தலையை பிய்த்து கொண்டிருந்தாள்.

இன்னும் கொஞ்சம்விட்டால் அவளுக்கு மண்டையே வெடித்துவிடும் போலிருந்தது. கடுப்பின் உச்சத்திற்கே போனவள் சமையலறையில் முகமெல்லாம் புன்னகையோடு இருந்த தன் அம்மா வசந்தாவை பார்த்து அதிர்ச்சியானாள்.

“என்னம்மா நீ மட்டும் தனியா நின்னு சிரிச்சிட்டு இருக்கு… எல்லா டென்ஷனா இருக்காங்க… என்னதான்ம்மா நடக்குது?” என்று நொந்து போய் அவள் கேட்க,

வசந்தா வெளியே எட்டி பார்த்துவிட்டு மகளை படுக்கையறைக்கு அழைத்து சென்று கதவை மூடினாள்.

“என்னம்மா?” என்று மீண்டும் புரியாமல் மகிழினி கேட்க,

“ஹ்ம்ம்… உன் பெரியப்பா மவ ராத்திரியோட ராத்திரியா இந்த கல்யாணத்துல எனக்கு இஷ்டமில்லன்னு எழுதி வைச்சிட்டு ஓடியே போயிட்டா” என்று சொன்ன நொடி மகிழினி அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள்.

வசந்தா மேலும் வக்கிரமான புன்னகையோடு, “வேணும்… எல்லோருக்கும்  நல்லா வேணும்… உங்க அப்பனுக்கும் இது நல்லா வேணும்… அண்ணன் பொண்ணு கல்யாணம்னு அந்த ஆடு ஆடு ஆடினாரு இல்ல… நல்லா எல்லோர் மூஞ்சில கரியை பூசிட்டு போயிட்டா பார்த்தியா” என்று சந்தோஷமாக சொல்லி கொண்டிருக்க, மகிழினி முகம் வெறுப்பை காண்பித்தது.

“என்ன ம்மா நீ… இப்படி பேசுற… பெரியம்மா மேல உனக்கு ஆயிரம் கோபம் வருத்தம் இருந்தாலும்  இது சந்தோஷபடுற விஷயமா?” என்று முகம் சுளிக்க,

“சந்தோஷப்படாம… உன் பெரியம்மாதானடி உன்னை பத்தி உங்க அப்பன்கிட்ட தப்பு தப்பா சொல்லி உன்னை காலேஜ் போக விடாம மூலையில உட்கார வைச்சிட்டா… அதுவும் எப்படி… உங்க பொண்ணுக்கு அடக்கம் ஒடுக்கமே இல்ல… இவ கண்டிப்பா எவனையாச்சும் இழுத்துட்டு ஓடிதான் போவான்னு உங்க அப்பன்கிட்ட சொல்லி உன்னை மேல படிக்கவிடாம தடுத்தா… விளங்குவாளா

அதான் கடவுள் வைச்சான் இல்ல ஆப்பு … உமைகொட்டான் மாறி இருந்துட்டு கடைசில யார் ஓடி போனது… அவங்க பொண்ணுதானே” என்று ஆவேசம் பொங்க சொல்லி கொண்டிருந்த அம்மாவை பார்த்து என்ன சொல்வதென்றே புரியவில்லை மகிழினிக்கு!

அவர் சொன்னதும் ஒரு வகையில் உண்மைதான். விமலனும் சுசீந்தரனும் காதல் கல்யாணங்களுக்கு எதிரிகள் என்பது ஊரறிந்த விஷயம். அதன் காரணமாக நிறைய சாபங்களையும் வாங்கி கட்டி கொண்டிருக்கிறார்கள்.

‘ஜாதி ஜாதின்னு வெறி பிடிச்சு சுத்திட்டு இருக்கானுங்க… ஒரு நாள் இல்ல ஒரு நாள் இவனுங்க பொண்ணுங்கள எவளாச்சும் ஒருத்தி எவனாச்சும் கீழ் சாதிக்காரனை இழுத்துட்டு ஓடத்தான் போறா’ இந்த வார்த்தைகள் ஒரு வகையில் உண்மையாகிவிடுமோ என்ற அச்சம் அந்த இரு சகோதரர்களுக்கும் இருந்தது.

அதில் அதிக பயமும் சந்தேகமும் மகிழினி மேல்தான். ஏனெனில் சௌந்தர்யா இயல்பாகவே ரொம்பவும் அமைதியான வீட்டுக்கு அடங்கிய பெண். ஆண்களிடம் அதிகம் பேச கூட மாட்டாள். ஆனால் மகிழினி அப்படியில்லை. ஆண் பெண் பேதமில்லாமல் பள்ளியில் அரட்டை என்று நிறைய நிறைய புகார்கள் சுசீந்திரனுக்கு. அதுவும் வெள்ளந்தியாக அவள் எல்லோரிடமும் பேசுவாள். இதனால் நிறைய அடிகளும் வாங்குவாள். மொத்தத்தில் வீட்டிற்கு அடங்காத பெண் என்ற முத்திரை குத்தப்பட்டது அவள் மீது. அதோடு மகிழினியின் அழகும் சேர்ந்து கொண்டது.

இதனால் சுசீந்திரனுக்கு உள்ளுர மகளை குறித்த அச்சம் தொற்றி கொள்ள, எரிகின்ற நெருப்பில் எண்ணெய்யை வார்த்தார் மஞ்சுளா.

அவர் மகிழினி பன்னிரெண்டாவது முடித்ததும், “புள்ள சரியில்ல… பார்த்து சூதனமா இருந்துக்கோங்க மச்சினரே!” என்று சுசீந்திரனை அவர் ஏற்றிவிட்டதில்,

பாவம்!!! மகிழினியின் கல்லூரி போகும் கனவு சுக்குநூறாகி போனது. அதோடு அல்லாது எந்த தவறுமே செய்யாமல் மகிழினி வீட்டு வாசலை தாண்ட கூட அனுமதி கிடையாது. அப்படியே போனாலும் கூடவே அடியாட்கள் துணை வேறு.

சௌந்தர்யா மட்டும் இல்லையென்றால் எப்போதோ மகிழினுக்கு ஒரு பையனை பார்த்து திருமணமே முடித்திருப்பார் சுசீந்திரன். நல்ல வேளையாக சௌந்தர்யா இருந்ததால் மகிழினி தப்பி கொண்டுவிட்டாள்.

ஒரு வருடம் ஓடி போனது. ஆனால் வசந்தா கணவனை சும்மா விடவில்லை. சௌந்தர்யாவை பொறியியல் படிக்க வைத்திருப்பதை குத்தி காட்டி கொண்டேயிருந்தார். வீட்டு வேலை செய்பவர் பெண்ணெல்லாம் கூட கல்லூரி சென்று படிக்கும் போது என் மகள் மட்டும் வீட்டில் இருக்க வேண்டுமா என்று கணவனிடம் தினமும் சண்டையிட்டு நினைத்ததை சாதித்துவிட்டார்.

ஆனாலும் சுசீந்திரன் நிறைய கட்டுப்பாடுகள் விதித்துதான்  மகிழினிக்கு இந்த வருடம் கல்லூரியில் சேர்ப்பித்தார். அதுவும் டவுனில் இருக்கும் ஒரு மகளிர் கல்லூரியில் இளங்கலை படிப்பு!

வசந்தா அந்த கடுப்பில் சௌந்தர்யா ஓடி போனதை எண்ணி சந்தோஷப்பட்டு கொண்டிருக்க, மகிழினியால்தான் இந்த விஷயத்தை நம்பவும் முடியவில்லை. தாங்கவும் முடியவில்லை.

அந்தளவுக்கு அவளும் சௌந்தர்யாவும் நெருக்கம். மாற்றான் தாய் வயிற்றில் பிறந்தவர்கள் என்ற எண்ணம் இருவருக்கும் இருந்ததில்லை. அப்படியிருக்க எப்படி அக்கா தன்னிடம் இந்த விஷயத்தை சொல்லவில்லை என்று எண்ணி மனதில் குமிறி கொண்டிருந்தாள் மகிழினி!

சுசீந்திரன் மூளையிலும் இதே சந்தேகம்தான் தற்போது உதித்தது. அவர்களின் அரசியல் பலம் மற்றும் போலீஸ் பலம் என்று எதுவுமே பயன்படவில்லை. நேரம் பிற்பகலை கடந்தும் சௌந்தர்யா எங்கே போனாள்? யாருடன் போனாள் என்று எந்த தகவலும் இல்லை.

அதுதான் சுசீந்திரனுக்கு பெரிய ஆச்சரியம். யாருடைய உதவியும் இல்லாமல் அவள் எப்படி வீட்டிலிருந்து சென்றிருப்பாள் என்று யோசித்த சுசீந்திரன் மிகுந்த சினத்தோடு தன் வீடு நோக்கி வந்தார்.

இன்னோரு புறம் சமீர் எப்போது தப்பித்து ஓடலாம் என்பதிலேயே கண்ணாக இருந்தான்.

“டே எப்படா போறோம்?” என்று நண்பனை கேட்டு ஒரு வழி செய்ய, “இருடா மச்சான்… அவசரப்பட்டு போனா சந்தேகம் வந்துரும்… டைம் பார்த்து எஸ் ஆகணும்” என்று சொல்ல,

“என்னத்த டா பண்ணி தொலைச்சிருக்க?” என்று சமீரின் கேள்விக்கு பரி பதில் சொல்லவில்லை. சில நிமிடங்கள் அந்த அறையின் வாசலில் பதட்டமாக காத்திருந்தவன் சுசீந்திரன் கோபத்தோடு வீட்டிற்குள் நுழைவதை பார்த்தான்.

இதுதான் சரியான வாய்ப்பு என்று முடிவுக்கு வந்தவன், “எல்லா பேகை தூக்கிட்டு கீழே வாங்கு… எப்படி பேசி இங்கிருந்து எஸ் ஆகிறேன்னு மட்டும் பாருங்க” என்று சொல்லிவிட்டு பரி படிகெட்டில் இறங்க, சமீர் மூச்சை இழுத்துவிட்டு கொண்டான்.

எதுவும் பிரச்சனை வராமல் இருந்தால் சரியென்று மனதில் எண்ணி கொண்டு அவனும் அவன் நண்பர்களும் பரியோடு கீழே இறங்கினர்.

அதேநேரம் சுசி வீட்டில் கோபத்தில் சாமியாடி கொண்டிருந்தார்.

“எங்கடி சௌந்தர்யா? யார் கூட டி போனா?” என்று மகளிடம் சுசி கோபமாக பொங்கி கொண்டிருக்க, மகிழினுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்பாவை பார்த்து மிரட்சியுற்று, “ஐயோ! சத்தியமா எனக்கு தெரியாது ப்பா” என்று அவள் பின்வாங்கினாள்.

“ஓடி போனது உங்க அண்ணன் பொண்ணு… என் பொண்ணை மிரட்டினா அவளுக்கு என்ன தெரியுமா?” என்று மகளுக்காக முன்னே வந்து நின்ற வசந்தாவை சுசி கோபமாக ஓரம் தள்ள அவர் தரையில் சரிந்தார்.

“ஒட்டி பொறுந்த பிறவி மாறி இல்ல இரண்டு பேரும் சுத்திட்டு இருந்தாங்க… அப்புறம் எப்படி உன் பொண்ணுக்கு தெரியாம இருக்கும்… கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்” என்று  மனைவியிடம் ஆக்ரோஷமாக சொன்னவர் மகளிடம் சீற்றமாக திரும்ப,

“எனக்கு தெரியாது ப்பா… அக்கா என்கிட்ட சொல்லல” என்று அழுது கொண்டே மகிழினி சொல்ல சுசீந்திரன் கோபம் கொஞ்சமும் குறையவில்லை.

“யாரை ஏமாத்த பார்க்கிற… உங்க அக்கா உன்கிட்ட சொல்லாம போயிருப்பாளா? நேத்து நடுராத்திரி கூட நீ எங்கயோ எழுந்து போனேன்… நான் கேட்டதுக்கு ஏதேதோ காரணம் சொல்லி மழுப்பிட்ட… எங்கடி போன?” என்று அவர் மகளை மிரட்ட,

“அவதான் எதுவும் தெரியாதுன்னு சொல்றாளே யா” என்று வசந்தா சூதாரித்து எழுந்து நின்றார்.

“நீ வாயை திறந்து பேசுன… உன்னை கொன்றுவேன்… பார்த்துக்கோ” என்று எரிமலையாக வெடித்தவர் மகளின் புறம் திரும்பி,

“எங்கடி போன… உங்க அக்காவை வழியனுப்ப போனியா?” என்று உக்கிரமாக கேட்டார்.

“ஐயோ! இல்லப்பா” என்று சொன்ன மகிழினியின் முகம் பயத்தில் வெளுத்து போனது.

“ஒழுங்கா கேட்டா சொல்ல மாட்ட” என்று வேகமாக மகளை அடிக்க அவர் கை ஒங்க, “மாமாஆஆஆஅ” என்று பின்னே வந்து சத்தமாக அழைத்தான் பரி.

சுசீந்திரன் திரும்பி பார்த்து அதிர்ந்துவிட பரி உச்சபட்ச கோபத்தோடு, “பெருசா மீசையை வளர்த்து வைசிருக்கீங்க… பாவம் சின்ன பொண்ணுகிட்ட போய் உங்க வீரத்தை காண்பிக்கிறீங்க… அசிங்கா இல்ல உங்களுக்கு?” என்று கேட்க சுசீந்திரன் ரத்தமெல்லாம் கொதித்தது.

சமீர் மிரண்டு, ‘அடப்பாவி… இவன் கானடமிருகத்தை கிட்ட போய் செல்பி எடுக்க பார்க்கிறான்… மவனே இவன் அடி வாங்கிறது இல்லாம் நம்மளையும் சேர்த்து அடி வாங்க வைச்சிட்டுதான் மறுவேலை பார்ப்பான் போலவே’ என்று அவன் மனதிற்குள் புலம்பி கொண்டிருந்தான்.

சுசீந்திரனோ பரியிடம் பதில் பேச முடியாமல் நின்றார். தங்கை மகனாக போய்விட்டான். அதோடு இப்போதிருக்கும் சூழ்நிலையும் அவருக்கு சாதமாக இல்லை. குற்றவுணர்வோடு என்ன பேசுவதென்று புரியாமல் அவர் நிற்க,

“மகி நைட் பின்னாடி இருந்த அவ முயல் கூண்டைத்தான் பார்க்க போனா… நான் பார்த்தேன்… அது தெரியாம அவளை போய் கை நீட்ட போறீங்க… இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல மாமா” என்று பரி சுசியை பார்த்து நிதானமாக பேசினாலும் அவன் முகத்தில் அத்தனை கோபம் இருந்தது.

‘நம்ம பொண்ணை அடிக்க போனதுக்கு இவன் எதுக்கு இப்படி பொங்கிறான்? அதுவும் அவ முயலை பார்க்க போனது இவளுக்கு எப்படி தெரியுமாம்’ என்று அவர் மனதில் குழம்பி கொண்டு நிற்க,

அப்போது பரியின் பின்னே வந்து சமீர், “டே… நீயே வாக்குமூலம் குடுத்து இப்படி உன் மாமன் கிட்ட சிக்கிரியே டா… ஒழுங்கா எதாச்சும் சொல்லி சமாளிச்சிட்டு வா ஓடிடலாம்” என்று எச்சிரிக்கை செய்ய,

“இப்ப பாரு?” என்று சுதாரித்து கொண்டான் பரி!

பரி தன் தோரணையை மாற்றி கொண்டு, “சௌந்தர்யா இப்படி பண்ணுவான்னு நான் சத்தியமா எதிர்ப்பார்க்கல… என்கிட்ட நல்லா சிரிச்சி சிரிச்சி பேசிட்டு இப்படி ஏமாத்திட்டு போயிட்டாளே… இதுல நீங்கெல்லாம் ஊர் தலைவன்னு சொல்லி சுத்துக்கிட்டு இருக்கீங்க… கேவலம்” என்று அவன் மனப்பாடமாக ஒப்பித்து கொண்டிருக்க,

“டே ஒரேடியா ஓவரா போகாதா டா…  உள்ளே வைச்சி உன் மாமன் உன்னை கும்மிட போறான்’ என்று சமீர் மீண்டும் பின்னோடு இருந்து எச்சிரிக்கை செய்தான்.

பரி உடனே, “எங்களை குடும்பத்தோட கூட்டிட்டு வந்து அசிங்கப்படுதிட்டீங்க இல்ல… பார்த்துக்கிறேன்… இனிமே இங்க இருந்தா எனக்கு அசிங்கம்… வாங்க டா போகலாம்” என்று நண்பனிடம் திரும்பி கொண்டே பரி பெருமூச்சுவிட,

“அப்பாடா தப்பிச்சோம்” என்று சொல்லி கொண்டான் சமீர்!

வேகமாக எல்லோரும் காரை நோக்கி போக தாமரை வழிமறித்து நிற்க, “டே என்னடா கிளம்புற… உங்க அப்பா வந்தா” என்று சொல்ல,

“அவர் வந்தா இவங்ககிட்ட முட்டிக்கட்டும்… அவர்தான் இந்த சம்பந்தத்தை பேசி முடிச்சாரு… நீயும் என் கூட ஒழுங்கா கிளம்பி வா” என்று அம்மாவையும் அழைத்து கொண்டான்.

தாமரைக்கு அப்போதும் தமையன்களை விட்டு கொடுக்க மனம் வரவில்லை. சுசியை வேதனையோடு பார்த்து கொண்டே மகனுடன் செல்ல, பரி காரில் ஏறி புறப்பட தயாரானான்.

சுசியால் எதுவும் பேச முடியவில்லை. மெளனமாக அவர்கள் செல்வதை சுசி பார்க்க, பரி தன் காரை இயக்கிய மாத்திரத்தில் வேகமாக இன்னொரு கார் உள்ளே நுழைந்தது.

“இது யாரு?” என்று சமீர் கடுப்பாக, காரிலிருந்து கொந்தளிப்பாக இறங்கினார் கலிவரதன்.

“ஐயோ! அப்பா” என்று பரி ஜெர்க்காக, கலிவரதன் வேகமாக நுழைந்தார். மகன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருப்பதை பார்த்து,

“இறங்கு டா கீழே” என்று மிரட்டவும்,

“இல்ல ப்பா” என்று அவன் தயங்க கார் சாவியை உள்ளே கையை விட்டு எடுத்து கொண்டார்.

“ஒழுங்கா உள்ளே வா டா” என்று அவர் மிரட்டிவிட்டு செல்ல, ‘வர்றவரு ஒரு அஞ்சு நிமிஷம் லேட்டா வந்து தொலைய கூடாது’ என்று பரி மனம் அங்கலாய்த்துக் கொண்டது.

‘போச்சா போச்சா… ஒழுங்கா அன்னைக்கே கிளம்பி இருப்பேன்… நல்லா வந்து கொலைகார குடும்பத்தில மாட்டினேன்’ சமீர் மைன்ட் வாய்ஸ் புலம்பி தீர்க்க, பரி தன் அம்மா முகத்தை பார்த்தான். அவர் முகத்தில் ஏகபோகமாக பயம்!

“இப்ப என்னடா பண்றது?” என்று மகனின் முகத்தை அச்சத்தோடு அவர் பார்க்க, “சமாளிப்போம் வா” என்று பரி எழுந்து கொண்டே நண்பனை பின்னே திரும்பி பார்த்தான்.

“நாங்க திரும்பியும் அந்த வீட்டுக்குள்ள வரலடா… ஒழுங்கா நீயே போய்  சாமாளிசிட்டு வா” என்றான். ஆனால் பரி விடாமல் சமீரின் சட்டையை பிடித்து உள்ளே இழுத்து கொண்டு சென்றுவிட்டான்.

பரி எச்சிலை விழுங்கி கொண்டு மெல்ல வீட்டிற்குள் நுழைய கலிவரதன் சிகரெட்டை புகைத்து கொண்டு இப்படியும் அப்படியுமாக நடந்து கொண்டிருந்தார். சுசீந்திரனின் முகத்திலும் அச்சம் படர, அண்ணனுக்கு தன் செல்பேசியின் மூலம் அழைப்பு விடுத்து கொண்டிருந்தார்.

கலிவரதனுக்கு உறவினர் மூலமாக ஏற்கனவே சௌந்தர்யா ஓடி போன விஷயம் அவர் காதுக்கு போய்விட்டது. அதானால்தான் மாலை வர வேண்டியவர் அடித்து பிடித்து பிற்பகலே வீடு வந்து சேர்ந்தார். பரி ஒரு ஓரமாக  சமீரோடு நிற்க,

“என்னடா உங்க அப்பாவை பார்த்து காண்டாமிருகமே பயப்படுது” என்று ரகசியமாக கேட்க, “மதம் பிடிச்ச யானையை பார்த்தா எல்லோரும் பயந்துதானே ஆகணும்… எங்க அப்பாவோட கோபமும் அப்படிதான்… இன்னைக்கு யாரெல்லாம் மிதி வாங்க போராங்களோ… லெட்ஸ் வைட் அன் ஸீ” என்றான்.

“என்னடா கூலாசொல்ற?”

“வேற வழி… இப்போதைக்கு ஒன்னும் பண்ண முடியாது… அவர் பேசி முடிக்கட்டு போகலாம்”

“என்ன எதுக்குடா இழுத்துட்டு வந்த… இங்க நின்னு நான் என்னடா பண்றது?” என்று சமீர் கடுப்பாக கேட்க,

“நீ சண்டையை பாரு… நான் என் ஆளை பார்க்கிறேன்” என்றவன் பயந்தபடி நின்று கொண்டிருந்த மகிழினியை பார்த்து கொண்டேதான் பேசினான்.

“அடப்பாவி! ஊரே பத்திக்கிட்டு எரியுது… உனக்கு ரொமான்ஸ் கேட்குதா?” என்ற சமீரின் வார்த்தையை அவன் காதில் வாங்கவில்லை. அங்கே பேச்சுவார்த்தை படுதீவிரமாக நடந்து கொண்டிருக்க, “என்னடா ஒரே டைலாக்கை திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்காரு உங்க அப்பா… மானம் போச்சு மரியாதை போச்சுன்னு” என்றான்.

உண்மையிலேயே வரதன் அந்த சகோதரர்களை ஒரு வழி செய்து கொண்டிருந்தார்.

“என் ஒரே பையன் கல்யாணம்… நான் எப்படியெல்லாம் நடத்தி வைக்கணும்னு ஆசைப்பட்டேன்… என் பிரெண்ட்ஸ் எல்லாம் நாளைக்கு வருவாங்க… நான் எல்லோருக்கும் என்ன பதில் சொல்லுவேன்… அண்ணனும் தம்பியும் சேர்ந்து இப்படி பண்ணிட்டீங்களே?” என்று ஏறு ஏறு என்று அவர் அவர்களை ஏறி கொண்டிருக்க,

விமலன் தாங்க முடியாமல், “இப்ப என்ன மச்சான் உங்க பிரச்சனை… இந்த கல்யாணம் நடக்கணும் அவ்வளவுதானே… எங்க மகிழினியை உங்க புள்ளைக்கு கட்ட சம்மதமான்னு கேட்டு சொல்லுங்க… இந்த கல்யாணத்தை எப்படி நடந்தனும்னு நினைச்சோமோ அப்படியே நடத்திடலாம்” என்றார்.

சுசீந்திரன் அதிர்ச்சியோடு தமையனை பார்க்க மகிழினிக்கு பேரதிர்ச்சி!

‘கடைசில எல்லோரும் சேர்ந்து நம்ம வாழ்க்கையில கல்லை போட பார்க்கிறாங்களே’ என்றவள் எண்ண, பரி இன்ப அதிர்ச்சியில் நின்றான்.

“அடேங்கப்பா… இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே டா” என்று சமீர் சொல்ல, அப்போது கலிவரதன் தீவிரமாக யோசித்து பார்த்துவிட்டு மகிழினியை திரும்பி பார்த்தார். அவளும் நல்ல சாய்ஸ் என்றே தோன்றியது அவருக்கு!

இன்னும் கேட்டால் சௌந்தர்யாவை விட அவள் அழகு. வயதும் குறைவு.

அதோடு மகனின் திருமணம் நடக்க வேண்டுமென்ற எண்ணமே  மேலோங்க கலிவரதன் விமலன் சொன்னதை ஏற்று மௌனமாக மகனை திரும்பி பார்த்தார். அவனின் சம்மதத்தை எதிர்ப்பார்த்து!

மகிழினி எதிர்புறத்தில் நின்று பரியிடம் கண்ணசைவால் வேண்டாம் வேண்டாம் என்று தலையாட்ட, அவனுக்கு அவள் சொல்வது புரிந்தாலும் தானாக தேடி வரும் வாய்ப்பை அவன் நழுவ விட விரும்பவில்லை. சம்மதம் என்று தந்தையிடம் தலையசைத்துவிட்டான்.

error: Content is protected !!