அழகியே 21

அழகியே 21

அழகு 21
 
அவள் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் வருண் சிறிது நேரம் அப்படியே நின்றிருந்தான். எதிர்பார்த்ததுதான்! 
 
இங்கு புறப்பட்டு வரும்போதே இப்படியெல்லாம் கேள்விகள் வரும் என்று எதிர்பார்த்துத்தான் வந்திருந்தான். பதில் சொல்ல வேண்டிய கடமையும் அவனுக்கு இருக்கிறதுதான்!
 
பதில் சொல்ல வேண்டும். ஆனால் யாருக்கும் வலிக்காத வகையில் வார்த்தைகளை அடுக்க வேண்டும். அது வருணை பொறுத்தவரைக் கொஞ்சம் கஷ்டமான காரியம்.
 
கோபம் வந்துவிட்டால் அவன் வாயிலிருந்து வார்த்தைகள் தெறித்து விழும். அது அவளுக்கும் தெரியும்!
 
ஆனாலும் அவன் செய்த குற்றம் என்ன? தன் தந்தையின் ஆசையை, அவர்களுக்குச் சேர வேண்டிய சொத்தைக் கேட்டு வந்தான்.
 
கேட்டவுடன் கொடுத்திருந்தால் இத்தனைப் பிரச்சனைகளும் வந்திருக்காதே! 
 
கப்பலில்… இதோ தனக்கு முன்னால் நிற்கும் இந்தப் பெண்ணைக் காதலிக்கும் எண்ணம் அவனுக்குக் கிஞ்சித்தும் இருக்கவில்லையே! தொட்டுவிடும் ஆசை துளிகூட இருக்கவில்லையே!
 
அவளாக அவளை அவனுக்குக் (அவளே) கொடுத்த போது அவளை ஏற்றுக் கொண்டது மட்டும்தானே அவன் செய்த தவறு! 
 
அதைக் கூட அவன் எவ்வளவு தூரம் மறுத்தான். ஆனால் வாழ ஆசைப்பட்டவளே இப்போது நிறுத்தி வைத்துக் கேள்வி கேட்கிறாள்!
 
“குழந்தைங்களோட பர்த் சர்டிஃபிகேட்ல அப்பா பெயர் போடவே இல்லைப் போல?” நிரம்பவும் அமைதியாகக் கேட்டான் வருண்.
 
“நான் ஒரு சிங்கிள் மதர், அப்பிடியிருக்க எதுக்கு அத்தான் அப்பா பெயர்?”
 
“இது அந்தப் பிள்ளைங்களோட வாழ்க்கையை எவ்வளவு தூரம் பாதிக்கும்னு உனக்குப் புரியுதா?”
 
“இதையே இன்னும் எத்தனைக் காலத்துக்குச் சொல்லி பயமுறுத்தப் போறீங்க அத்தான்?” மயூரி சிரித்தாள்.
 
“ஆனா எத்தனைக் காலம் போனாலும் உண்மை அதுதானே?”
 
“இந்த உண்மை, பொய், ஊரு, உலகம் இதைப்பத்தியெல்லாம் எனக்கு எந்தக் கவலையும் இல்லை.”
 
“அது உனக்கு மட்டுந்தான் பொருந்தும், நீ ஒருத்தி தனியா இருக்கும்போது மட்டுந்தான் அது செல்லுபடியாகும்.”
 
“இப்ப என்ன ஆகிப்போச்சு அத்தான்?”
 
“பொறுப்பாப் பேசு, ரெண்டு குழந்தைங்களோட அம்மா மாதிரி பேசு!” அவன் சற்றே குரலை உயர்த்த மயூரி முகத்தை அந்தப்புறமாகத் திருப்பிக் கொண்டாள்.
 
“வாழ்க்கையில எல்லாருக்குமே ஒவ்வொரு லட்சியம் இருக்கும், உனக்கெப்பிடியோ தெரியாது, நான் ஒரு இலக்கை நோக்கி ரொம்ப வெறித்தனமா ஓடிக்கிட்டு இருந்தேன், அந்தக் கட்டத்துல என்னோட வாழ்க்கையில வந்தவ நீ!” வருண் பேச ஆரம்பித்தான்.
 
“நானா வரலை… நீங்களாத்தான் வரவெச்சீங்க.”
 
“ஒத்துக்கிறேன்… நானாத்தான் வர வெச்சேன், அதே மாதிரி உன்னை நானே திருப்பியும் உங்க வீட்டுல ஒப்படைச்சிருப்பேன்.”
 
“எப்பிடி? எங்கிட்டக் குடுத்தீங்களே ஒரு ஃபைல்… பாஸ்போர்ட், மேரேஜ் சர்டிஃபிகேட் எல்லாம் வெச்சு, அதோட ஒப்படைச்சிருப்பீங்களா?” கேலியாகக் கேட்டாள் பெண்.
 
“எங்க, என்னோட முகத்தைப் பார்த்து உண்மையைச் சொல்லு? நீ ஆசைப்பட்டதை அடைய அந்த பாஸ்போர்ட்டும், மேரேஜ் சர்டிஃபிகேட்டும் உனக்கு உதவி பண்ணலை?” சரியாக பாயிண்ட்டைப் பிடித்தான் வருண். 
 
“அந்த பேப்பர்ஸால என்னோட வாழ்க்கையே நாசமாப் போச்சுன்னு நீ பொய்யா ஒரு நாடகம் ஆடலை?”
 
“…………….”
 
“இதெல்லாம் ஒன்னுமே நடந்திருக்காட்டிக் கூட நான் தனியாத்தான் வாழுவேன் அத்தான்னு நீ எங்கிட்டச் சொல்லலை?” மயூரி இப்போது பேச்சற்றுப் போனாள்.
 
அவனோடு அந்த ஐந்து நாட்களும் வாழ்ந்துவிடும் வேகத்தில் அவள் எல்லாவற்றையும் உளறி இருந்தாளே!
 
“அதுக்காக நான் பண்ணினது எதையுமே நான் சரின்னு சொல்லலை ப்ரதாயினி, நான் பண்ணினது எல்லாமே தப்புத்தான், சுயநலந்தான்.” அடக்கிய கோபத்தைக் காட்டியது அவன் குரல்.
 
“உங்களைக் குற்றவாளிக் கூண்டுல நிறுத்தி இருக்கிறது என்னோட அம்மா, அதுவும் தன்னோட அண்ணன் மகன் இப்பிடிப் பண்ணிட்டானேங்கிற ஆதங்கத்துல, உரிமையில… நான் உங்களை எதுவுமே சொல்லலையே அத்தான்!” 
 
“நீ வாயால சொல்லலை, ஆனா செயல்ல காட்டி இருக்கே!” சொல்லிவிட்டு வருண் சிரித்தான். எப்போதும் போல இப்போதும் அந்தச் சிரிப்பு அவளை ஈர்த்தது.
 
“உன்னோட குழந்தைகளுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லைன்னு சொல்லாமச் சொல்லி இருக்கே!”
 
“சம்பந்தம் இல்லைதானே அத்தான்? உங்க உறவை விரும்பி ஏத்துக்கிட்டது நான், அப்போ அதோட பின்விளைவுகளை ஏத்துக்க வேண்டியதும் நான்தானே?”
 
“இப்பவும் சொல்றேன்… ரெண்டு குழந்தைகளோட அம்மா மாதிரி பொறுப்பாப் பேசு, என்னைப் பழிவாங்குறதா நினைச்சு அந்தப் பிள்ளைங்களோட வாழ்க்கையை நாசம் பண்ணிடாதே.”
 
“நான் யாரையும் பழி வாங்கலை அத்தான், என்னோட வாழ்க்கையை நான் இயல்பா வாழுறேன், அவ்வளவுதான்.” 
 
“அது நீ தனியா, ஒருத்தியா இருக்கும் போது… இப்போ அது உன்னால முடியாது.”
 
“இப்போ என்னை என்னதான் பண்ணச் சொல்றீங்க?” சலிப்போடு கேட்டது பெண்.
 
“ஊருக்காக ஒரு கதையைச் சொல்லி வெச்சிருக்கீங்க இல்லை அம்மாவும் பொண்ணும்… அதை உண்மையாக்கிடு.”
 
“அது நான் சொன்ன கதை அத்தான், நான் விரும்பிச் சொன்ன பொய், அதே பொய்யை நிஜமாக்க நீங்க உங்க வாழ்க்கையைத் தியாகம் பண்ணணும்னு எந்தக் கட்டாயமும் இல்லை! இதுக்கு நான் ஒருநாளும் சம்மதிக்கப் போறதும் இல்லை!” அவள் ஆணித்தரமாகச் சொன்னாள்.
 
“என்னோட வாயைப் புடுங்காதே பொண்ணே! சொல்றதைக் கேளு!” வருணுக்கு இப்போது கோபம் வந்தது. முயன்று தன்னை அடக்கிக் கொண்டான்.
 
“நீங்க என்னதான் சொன்னாலும் என்னால அதை மட்டும் பண்ணவே முடியாது!” 
 
“என்னோட நிலைமையை என்னோட இடத்துல இருந்து பார்த்தா மட்டுந்தான் உன்னால புரிஞ்சுக்க முடியும், அதை நீ புரிஞ்சுக்கவும் வேணாம், நான் அதை உனக்குப் புரிய வெக்க முயற்சிக்கவும் மாட்டேன்.”
 
“என்னை என்னோட போக்குல விட்டுருங்க அத்தான்.”
 
“நீ தனியா இருந்திருந்தா ஒருவேளை அதுதான் நடந்திருக்குமோ என்னவோ?”
 
“அப்போ குழந்தைகளுக்காகத்தான் வந்திருக்கீங்க எங்கிறதை ஒத்துக்கிறீங்களா?” 
 
“அழககோனோட மகளை ஏத்துக்கிறதா இருந்தா அன்னைக்கே, அந்தக் கப்பல்லயே ஏத்துக்கிட்டுருப்பேனே!”
 
“இப்போ இங்க இருக்கிறதும் அதே அழககோனோட மகள்தான்!” மயூரியும் இப்போது ஆங்காரமாகக் கத்தினாள். 
 
“இல்லை… இப்போ இங்க இருக்கிறது அனு, ஆர்யனோட அம்மா! என்னோட ரெண்டு பிள்ளைங்களோட அம்மா!” அவன் ஆணித்தரமாகச் சொன்னான்.
 
“அதை எப்பிடி உங்களால இவ்வளவு நிச்சயமாச் சொல்ல முடியுது அத்தான்?!”
 
“எதை?” அவன் பார்வைக் கூரானது.
 
“அனுவும் ஆர்யனும் உங்கக் குழந்தைங்கதான் எங்கிறதை.” மயூரியின் வார்த்தைகளில் அவன் முகம் சிவந்து போனது.
அப்போது அவர்களைத் தாண்டி ஒரு இளைஞன் போகவும் அவனை அழைத்தான் வருண்.
 
“மல்லி, பொட்டக் என்டகோ.” (தம்பி இங்க கொஞ்சம் வாங்களேன்)
அருகில் வந்த இளைஞனின் கையை எடுத்து மயூரியின் தோளில் வைத்தான் வருண். சட்டென்று அந்தக் கையைத் தட்டிவிட்டது பெண்.
 
“அத்தான்! என்னப் பண்ணுறீங்க?!” அவள் கத்துவதைப் பொருட்படுத்தாமல் இப்போது அவன் அவளை இறுக அணைத்தான்.
மயூரி மிரண்டு போனாள். பொது இடம், அதுவும் யாரென்றே தெரியாத ஒரு அந்நிய இளைஞன் பக்கத்தில் இவர்களைப் பார்த்தபடி நிற்கிறான். 
 
இதுவெல்லாம் புத்தியில் தோன்ற வருணை பிடித்துத் தள்ளிவிட வேண்டும் என்ற வேகம் மனதில் எழுந்தது. ஆனால் அணைத்திருப்பது அவனல்லவா?!
 
இப்போது வருணாகவே அவளை விடுவித்தான். இவன் அழைத்த அந்த இளைஞன் ‘இது காதலர்கள் சண்டை’ என்பது போல தலையை இடம் வலமாக ஆட்டிவிட்டுப் போய்விட்டான்.
 
“சாரி.” வருண் நின்ற இடத்தில் நின்றபடியே சத்தமாகச் சொல்ல, திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போனான்.
 
“இப்போ சொல்லு, அவங்க என்னோட குழந்தைங்கதானே?!” அவளை அவன் நிரூபித்த பிறகும் அவள் வாயைத் திறக்கவில்லை.
 
“என்னோட குழந்தைங்க பர்த் சர்டிஃபிகேட்ல என்னோட பெயரில்லை, இது எனக்கு எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? ஒரு ஆம்பிளையை இதை விடக் கேவலமாத் தண்டிக்க முடியாதுடீ.” அவன் அடிக்குரலில் உறுமினான்.
 
“நான் அந்த அர்த்தத்துல அப்பிடிப் பண்ணலை.”
 
“வேற எந்த அர்த்தத்துல பண்ணினே?”
 
“குழந்தைங்கன்னு வந்துட்டா… நீங்க என்னைத் தேடி வருவீங்க… உங்க வாழ்க்கை…” வருண் பார்த்த பார்வையில் அவள் பேச்சு பாதியில் நின்றது.
 
இரண்டு குழந்தைகள் தனக்கு இருக்கின்றன என்று தெரியாத போதும் இந்த இடைப்பட்ட காலத்தில் அவன் வேறு யாரையும் நாடவில்லையே!
ஆனால் அந்தத் தன்னிலை
 
விளக்கத்தை அவளிடம் சொல்ல வருண் பிரியப் படவில்லை.
 
“ப்ரதாயினி… நான் சொல்றதைத் தயவு பண்ணி கேளு, கடந்து போனது, நீ, நான் எல்லாத்தையும் மறந்திடு, இப்போ நமக்கு முக்கியம் அனு, ஆர்யன்… இவங்க மட்டுந்தான், அது நம்ம குழந்தைங்க, அவங்களுக்காக நாம சேர்ந்து வாழணும்.” வருண் மிகவும் இதமாகப் பேசினான்.
 
“முடியாது அத்தான், அவங்க என்னோட குழந்தைங்க!” மயூரி தன் பிடியிலேயே நின்றாள். வருண் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வெகுவாக முயன்றான். 
 
அவன் வாழ்க்கையில் இத்தனைப் பொறுமையை அவன் என்றைக்கும் கடைப்பிடித்ததில்லை. அவள் என்று வந்துவிட்டால் எல்லாம் தலைகீழாக ஆனது!
 
“சரி… அவங்க உன்னோட குழந்தைங்க, எனக்கும் அவங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, பரவாயில்லை… என்னை நீ கல்யாணம் பண்ணிக்கோ.”
 
“எதுக்கு?” அதற்கும் அவள் முரண்பட்டாள்.
 
“உனக்கு, உன்னோட குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பு வேணும்.”
 
“ஏன்? எங்களால தனியா நீங்க இல்லாம வாழ முடியாதா?”
 
“முடியாது.”
 
“இதுவரை நாளும் நாங்க அப்பிடித்தான் வாழ்ந்திருக்கோம் அத்தான்.”
 
“பால் குடிக்கிற ரெண்டு பச்சைக் குழந்தைங்களை வளர்க்கிறது ஒன்னும் பெரிய சாதனை இல்லை, அவங்க வளர வளர நீ திணறிப் போவே, சொன்னாப் புரிஞ்சுக்கோ.”
 
“எது எப்பிடி இருந்தாலும் எனக்கு நீங்க வேணாம் அத்தான்.”
 
“ஆனா எனக்கு நீ வேணும்டீ!” சொன்னதோடு மட்டும் நிறுத்தாமல் அதைச் செயலிலும் காட்ட ஆரம்பித்திருந்தான் வருண்.
 
‘அந்த ஒத்த ராத்திரியில என்னோட உசிரு வரைக்கும் இறங்கினது நீதான்டீ! இன்னைக்கு வரைக்கும் எந்தப் பொண்ணைப் பார்த்தாலும் அந்தப் பொண்ணுக்குள்ள நான் தேடுறதும் உன்னைத்தான்டீ!’ 
மனதுக்குள் தோன்றிய அனைத்தையும் வருண் வாய்விட்டுச் சொல்லி இருந்திருக்கலாம். ஆனால் அது வேறு வேலையில் லயித்திருந்ததால் மனதுக்குள்ளேயே அனைத்தையும் பூட்டிக் கொண்டான். 
 
பெண் கூட அவன் தீண்டலில் முதலில் லேசாகக் கிறங்கி பின் விலகிக் கொண்டது. தன்னை விடுவித்துக் கொண்டது.
 
***
 
அந்த ப்ளாக் ஆடி நர்சரியின் முன்பாக வந்து நின்றது. இப்போது காரை வருண் ஓட்டிக்கொண்டு வந்திருந்தான். அந்தப் பென்னம்பெரிய கப்பலையே ஓட்டுபவனுக்கு இந்த கார் என்ன பிரமாதம்!
 
காரை பார்க் பண்ணிவிட்டு இயல்பாக இறங்கி நர்சரிக்குள் போனான். ஏதோ நெடுநாள் பழகிய இடம் போல இருந்தது அவன் ஒவ்வொரு செய்கைகளும்.
மயூரி எதுவும் பேசாமல் தானும் உள்ளே போனாள்.
 
அனு அவனிடம் ஒட்டிக்கொள்வாள். ஆனால் ஆர்யன் நிச்சயமாக இவளைத் தேடுவான். 
 
அவள் நினைத்தது போலவேதான் நடந்தது. வருணை கண்டதும் அந்தச் சின்னக் குட்டி ஓடி வந்து அவனிடம் தாவி ஏறிக்கொண்டது. அதில் அவனுக்கு அத்தனைப் பெருமை.
 
ஆனால் ஆர்யன் மயூரியிடம்தான் வந்தான். மயூரி சட்டென்று குழந்தைகளைத் தூக்க மாட்டாள். ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான்.
 
ஒன்றாக இருந்திருந்தால் ஒரு வேளை அப்படியெல்லாம் நடந்திருப்பாளோ என்னவோ! இரண்டாகப் பிறந்து விட்டதால் அவளால் அது இயலவில்லை.
 
பெண்ணை மட்டும் தூக்கினால் பையனின் மனம் வாடிப்போகும் என்று வருண் சின்னவனின் உயரத்திற்குக் குனிந்தான்.
 
கொஞ்சம் பரிட்சயமாகி இருந்த தன் தந்தையைப் பார்த்து சிரித்தான் ஆர்யன். அவன் கன்னத்தில் முத்தம் வைத்த வருண் அவனையும் தன் மறுபக்கம் தூக்கிக் கொண்டான்.
 
“பார்த்து… கவனம் அத்தான்!” சட்டென்று பதறினாள் மயூரி.
 
“இல்லையில்லை… சரியாத்தான் பிடிச்சிருக்கேன், நீ காரை ஓப்பன் பண்ணு.” அவன் சொல்லவும் மயூரி சட்டென்று போய் காரின் கதவுகளைத் திறந்து விட்டாள்.
 
அவளுக்கு எங்கே வருண் குழந்தைகளை நழுவவிட்டு விடுவானோ என்று பயமாக இருந்தது. ஆனால் இனி அத்தனை சுலபத்தில் அவன் குழந்தைகளை விடப்போவதில்லை என்பதை அவள் அறியவில்லை.
 
இப்போதும் வருண்தான் காரை ஓட்டிக்கொண்டு வந்தான். மயூரி இறங்கி கேட்டை திறக்கப் போக வருண் அவளை விடவில்லை. ஹார்னை பலமாக அடித்தான்.
 
விஷாகா சட்டென்று வெளியே வந்தவர் கேட்டை திறந்து விட்டார். குழந்தைகள் தங்கள் ஆச்சியைக் கண்டதும் ஆர்ப்பரித்தார்கள். 
 
கார் நிற்கும் வரைப் பொறுத்திருந்த விஷாகா எப்போதும் போல ஒரு கதவைத் திறந்து ஆர்யனை தூக்கினார். மயூரி அனுவை தூக்கும் முன்பாக வருண் தூக்கிக் கொண்டான். 
 
இதுவரை அமைதியாக இருந்த வீடு இப்போது ஜேஜே என்று ஆகிப்போனது. வருணும் அவர்கள் ரூமிற்குள் போகாமல் சட்டமாக வந்து டைனிங் டேபிள் செயாரில் அமர்ந்து கொண்டான்.
 
விஷாகாவால் எதுவும் செய்ய இயலவில்லை. தன் வீட்டிலேயே அன்னியமாக உணர்ந்தார். இது போதாததற்கு இன்றைக்குப் பக்கத்து வீட்டுப் பெண்மணி கூட வருணை பற்றி விசாரித்திருந்தார்.
 
இவர்கள் இந்த வீட்டிற்குக் குடியேறிய இந்த இரண்டு வருட காலத்தில் உறவு, நட்பு என்று யாருமே வந்ததில்லை. 
 
உறவென்று இவர்கள் சொல்லிக் கொண்டதெல்லாம் அக்கம்பக்கத்து மனிதர்களைத்தான். மயூரியின் கணவர் எங்கே என்ற கேள்வி எழுந்த போது கப்பலில் வேலை செய்கிறார் என்று சொல்லிச் சமாளித்தார்கள்.
 
இது காலமும் இல்லாமல் இப்போது புதிதாக வந்து முளைத்திருக்கும் இந்தப் புது மனிதன் பற்றி பக்கத்து வீடு, எதிர்வீடு என்று அனைவரும் விசாரித்தார்கள்.
 
ஏற்கனவே வருண் மேல் கோபமாக இருந்த விஷாகாவிற்கு இப்போது வந்த இந்த விசாரிப்புகள் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல இருந்தது.
 
“எனக்குப் பசிக்குது ப்ரதாயினி.” குழந்தைகளுக்கு உடம்பு கழுவி, துணி மாற்றி என்று பிசியாக இருந்த மயூரியிடம் சொன்னான் வருண்.
 
“இதோ… வர்றேன் அத்தான்.” கிச்சனுக்குள் அவசரமாகப் போனவள் அம்மா சமைத்து வைத்திருந்த வெஞ்சனங்களைக் கொண்டு வந்து டேபிளில் வைத்தாள்.
 
“பசங்க சாப்பிட்டாங்களா?” 
 
“இனித்தான் அத்தான்.”
 
“இங்கேயே கூட்டிட்டு வாயேன்.” வருண் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கிச்சனில் பாத்திரம் ஏதோ உருண்டது.
 
“என்னவாம்?” விஷாகா தன் மேலுள்ள கோபத்தைத்தான் பாத்திரத்தின் மேல் காட்டுகிறார் என்று புரிந்து கொண்ட வருண் சிரித்தான்.
 
“ஒன்னுமில்லை.”
 
“பரவாயில்லை, சும்மாச் சொல்லு.”
 
“பக்கத்து வீட்டுல நீங்க யாருன்னு கேட்டாங்களாம்.”
 
“கேட்டாச் சொல்ல வேண்டியதுதானே.” அவன் சுலபமாகப் பதில் சொன்னான்.
 
“நீங்க சாப்பிடுங்க அத்தான்.” பேச்சை மாற்றினாள் மயூரி.
 
“இனி யாராவது என்னை யாருன்னு கேட்டா எம் பொண்ணோட புருஷன்னு சொல்லச் சொல்லு, என்னோட பேரக் குழந்தைங்களோட அப்பான்னு சொல்லச் சொல்லு.” வேண்டுமென்றே சத்தமாகச் சொன்னான் வருண்.
 
மீண்டும் இன்னொரு பாத்திரம் கிச்சனில் உருண்டது. வருண் உணவருந்திக் கொண்டிருக்கும்போதே மயூரி குழந்தைகள் இருவரையும் டேபிளில் அமர்த்தி உணவூட்ட ஆரம்பித்திருந்தாள்.
 
இந்த வேலைகளில் எல்லாம் தினமும் விஷாகா பங்கெடுத்துக் கொள்வார். ஆனால் நேற்றிலிருந்து எல்லாம் மாறிப் போனது. 
 
வருண் வீட்டிலிருந்ததால் அவரால் எதையும் இயல்பாகச் செய்ய முடியவில்லை. குழந்தைகளை மிகவும் மிஸ் பண்ணினார். 
 
எல்லாக் கோபமும் வருண் மேலேயே மையம் கொண்டது. எத்தனை நேரம்தான் கிச்சனிலேயே நிற்பது. தனது ரூமிற்குப் போய்விட்டார் விஷாகா.
 
சாப்பிட்டு முடித்து விட்டு அங்கேயே நின்றபடி கை துடைத்துக் கொண்டிருந்த வருண் விஷாகா ரூமிற்குள் போவதைப் பார்க்கவும் பின்னோடு போனான்.
 
“அத்தான்!” மயூரி ஓடிவந்து அவன் கையைப் பிடித்துத் தடுத்தாள்.
 
“ஏதாவது மனசு நோகுற மாதிரி பேசிடாதீங்க அத்தான், ப்ளீஸ்… அம்மா பாவம்!” அவள் குரல் கெஞ்சியது. வருண் அவளின் கையை லேசாக விலக்கிவிட்டு ரூமிற்குள் போனான்.
 
விஷாகா கட்டிலில் சாய்ந்தபடி கண்மூடி அமர்ந்திருந்தார். இவன் அங்கே வருவான் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லைப் போலும். சட்டென்று கண்களைத் திறந்தவரின் முகம் கடுகடுத்தது. 
 
“இப்போ உங்களோட பிரச்சினை என்ன? எதுக்கு நான் வந்ததுல இருந்து இப்பிடி மூஞ்சைத் தூக்கி வெச்சுக்கிட்டு இருக்கீங்க?” வருண் நிதானமாகத்தான் கேட்டான். ஆனால் விஷாகா வெடித்தார்.
 
“பின்னே… உனக்கு வெத்திலை, பாக்கு வெச்சு வரவேற்பாங்கன்னு நினைச்சியா வருண்?” 
 
“கோபம் வந்தா இப்பிடி நாலு வார்த்தைத் திட்டுங்க, இல்லைன்னா அடிங்க, அதென்ன முகத்தைத் திருப்பிக்கிறது?” அவர் அவனிடம் பேசியது அவனுக்குச் சந்தோஷமாக இருந்தது.
 
“நீ பண்ணின காரியத்துக்கு உங்கூடப் பேசுறதே பாவம்டா!” உச்சஸ்தாயியில் கத்தினார் விஷாகா. வருண் மெதுவாக அவர் பக்கத்தில் போய் கட்டிலில் அமர்ந்தான்.
 
“நீங்களுமா என்னைப் புரிஞ்சுக்கலை மாமி?” அவனின் அந்த அழைப்பில் பொங்கத் துடித்த கண்ணீரை அடக்கினார் விஷாகா.
 
“நான் கெட்டவனா? உங்க அண்ணாவோட பையன் கெட்டவனா? இந்த வருண் கெட்டவனா?”
 
“நீ அப்பிடித்தானே நடந்திருக்கே!” விஷாகாவின் குரல் எந்த வேளையிலும் உடைந்து போகும் கட்டத்தில் இருந்தது.
 
“நான் உங்ககிட்ட அன்னைக்கே சொன்னேனே, நான் அந்த வீட்டுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவேன்னு.”
 
“அதுக்காக…”
 
“நான் பண்ணப்போற காரியம் உங்களைக் காயப்படுத்தும்னும் சொன்னேன், நீங்களும் சம்மதிச்சீங்க, என்னைத் தப்பா எடுத்துக்கக் கூடாதுன்னு சொன்னேன், வாக்கு மாறிடக் கூடாதுன்னும் கேட்டுக்கிட்டேன்.”
 
“அதுக்காக நீ எப்பிடி எம் பொண்ணு மேல கை வெக்கலாம்?”
 
“எனக்கு வேற வழி தெரியலையே!” வருண் சொல்லி முடித்த போது விஷாகா வெடித்து அழுதார்.
 
“நீ அதோட நிறுத்தலை வருண்!” தன் மாமியின் அந்த வார்த்தைகளில் வருணின் தலை குனிந்தது.
 
“தப்பு… அது மகா தவறு! ஒத்துக்கிறேன், அதுக்காக என்னை நீங்க மன்னிக்கக் கூடாதா மாமி? உங்க வருணை நீங்க மன்னிக்கக் கூடாதா?” விஷாகாவின் அழுகை இப்போது இன்னும் அதிகரித்தது.
 
“அன்னைக்கு நீங்க ஆசைப்பட்டதுதானே நடந்திருக்கு? உங்க அண்ணன் பையன் உங்க பொண்ணைக் கட்டிக்கணும்னுதானே நீங்க ஆசைப்பட்டீங்க?” இப்போது கண்களில் நீர் வடிய விஷாகா தலையை மேலும் கீழுமாக ஆட்டினார்.
 
“நடந்த முறை வேணும்னாத் தப்பா இருக்கலாம், ஆனா நீங்க ஆசைப்பட்டதுதான் நடந்திருக்கு, நான் எல்லாத்தையும் சரி பண்ணுறேன், ப்ளீஸ்… என்னை மன்னிச்சிடுங்க மாமி.” விஷாகாவின் மடியில் தலை வைத்து இருந்த வாக்கிலேயே படுத்துக் கொண்டான் வருண்.
 
அண்ணன் மகன் என்றால் சாதாரணமாகவே கரைந்து போவார் விஷாகா. இப்படி வேறு பேசினால் பாவம், அவர்தான் என்ன செய்வார்?!
 
பேசி தீர்க்க முடியாத பிரச்சனை என்று இந்த உலகத்திலே எதுவுமே இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் அந்தப் பக்குவம் வர வேண்டும்.
 
கோபப்பட தெரிந்த மனிதனுக்குக் கொஞ்சம் நிதானித்து தன் பிரச்சனைகளை ஆராய நேரம் இருப்பதில்லை. உட்கார்ந்து மனம்விட்டுப் பேச மனதிருப்பதில்லை.
 
ஆனால் வருண் அந்தத் தவறைச் செய்யவில்லை. தன் மேல் உயிராக இருந்தவர் விஷாகா என்பதை அவன் நன்கறிவான்.
 
தான் செய்த தவறினால் இன்று இப்படி நடந்து கொள்கிறார். அவரிடம் தன்னை விளக்கிச் சொல்லி பாவமன்னிப்புக் கேட்பதால் அவனுக்கொன்றும் குறைந்து போகப் போவதில்லை.
 
அதைத்தான் வருண் செய்தான். விஷாகா தன் மருமகனின் தலையைக் கோதிக் கொடுத்தார். விம்மி அழுதார்.
 
ஆச்சியையும் அப்பாவையும் நீண்ட நேரமாகக் காணாத அந்தப் பொடுசு அவர்களைத் தேடிக்கொண்டு ரூமிற்குள் வந்தது.
 
தன் ஆச்சியின் மடியில் அப்பா தலை வைத்திருப்பதைப் பார்த்ததுதான் தாமதம், ஓடி வந்து வருணின் தலை முடியைப் பிடித்து இழுத்தது.
 
“ஆ…” வருண் அலறியபடி நகர, இப்போது ஆச்சியின் மடியில் தான் தலை வைத்துக் கொண்டது. இது எப்போதுமே இரண்டு குழந்கைகளுக்கும் நடுவில் நடக்கும் விளையாட்டு என்பதால் விஷாகா சிரித்தார்.
 
“என்னையே விரட்டுறியா நீ?” அனுவை தூக்கி கட்டிலில் வைத்தவன் மீண்டும் விஷாகாவின் மடியில் படுத்துக் கொண்டான்! 
 
இப்போது வேண்டுமென்றே முழுதாகக் கால்நீட்டிப் படுத்துக் கொண்டான். குழந்தைக்கு அது இன்னும் குஷியாகிப் போனது.
 
அன்று காலையில் கிடைத்த அப்பாவின் முதுகு சவாரி இப்போதும் கிடைக்கவும் வருணின் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டது.
 
வருணும் விஷாகாவும் சத்தமாகச் சிரித்தார்கள். குழந்தையும் அவர்களோடு கைகொட்டிச் சிரித்தது.
வெளியே நின்றிருந்த மயூரியின் நெற்றி சுருங்கிப் போனது!
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!