அழகியே 24

அழகியே 24

அழகு 24
 
வருண் தன் அம்மாவை ஒரு கையால் அணைத்து அவரையும் தன்னோடு சேர்த்துக் கொண்டான். ராகினியை பார்த்ததும் அனு தன் அப்பாவை இன்னும் இறுக கட்டிக் கொண்டது.
 
“இந்தப் பிள்ளைகள் என்னை எதிரி மாதிரி பார்க்கிற நிலையில என்னை வெச்சுட்டியே தம்பி!” ராகினி மீண்டும் கண் கலங்கினார்.
 
“அம்மா… நீங்கள் ஏன் அப்பிடியெல்லாம் நினைக்கிறியள்?  சின்னக் குழந்தைகள்தானே, அதையெல்லாம் வெகு சுலபமா மறந்து போவாங்க.” அம்மாவைச் சமாதானம் செய்த மகன் தான் பெற்றவளிடம் திரும்பினான்.
 
“அனுக்குட்டி, இது பாட்டி… பாட்டிக்கு ஹாய் சொல்லுங்க.” ராகினியின் வழக்கப்படி தந்தையின் தாயை ‘அப்பம்மா’ என்றுதான் சொல்வார்கள். ஆனால் குழந்தைக்கு அழைக்க இலகுவாக இருக்குமே என்று வருண் இப்படிக் கற்றுக் கொடுத்தான்.
 
“நோ!” ஒற்றை எழுத்தால் தன் பாட்டியைக் குழந்தை எதிர்த்தது. 
 
“அச்சச்சோ! அப்பிடிச் சொல்லக்கூடாது, பாட்டி பாவம் இல்லையா?” என்றவன் தன் தாயை அழைத்துக்கொண்டு போய் ரூமிலிருந்த கட்டிலில் அமர வைத்தான்.
 
தானும் பக்கத்தில் அமர்ந்து கொண்டு மகளிடம் இப்போது மீண்டும் பேச ஆரம்பித்தான்.
 
“சின்னக்குட்டி பேசலைனா பாட்டி அழுவாங்க, பாவமில்லையா பாட்டி!” என்றவன் தன் தாயை அணைத்து முத்தமிட்டான்.
 
அப்பா அந்தப் பெண்மணியை முத்தமிட்டதும் குழந்தை கொஞ்சம் இறங்கி வந்தது. இதுவரை ராகினியை பார்த்த பார்வையை மாற்றிக் கொண்டது. 
 
“சின்னக் குழந்தைங்க அம்மா, இதையெல்லாம் நீங்க பெருசா எடுக்காதீங்கோ.” ஒருவாறாக அம்மாவை வருண் சமாதானம் செய்ய ராகினி இன்னொன்றை இப்போது ஆரம்பித்தார்.
 
“பிள்ளைங்க மட்டும்தான் எங்கூடப் பேசாம இருந்தவங்க என்டு நினைச்சனீயோ? உன்ட மனுசியும்தான் என்னைத் திரும்பியும் பார்க்கேயில்லை.” அந்தப் புகாரில் மயூரி திடுக்கிட்டுப் போனாள்.
 
அம்மாவும் மகனும் ஏதோ தங்களுக்குள் பேசிச் சமாதானம் ஆகட்டும் என்று அமைதியாக இதுவரை அங்கேதான் மயூரி நின்றிருந்தாள்.
 
ஆனால் சட்டென்று ராகினி பேச்சைத் தன் புறமாகத் திரும்புவார் என்று அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
 
வருண் இப்போது திரும்பித் தன் மனைவியைப் பார்த்துச் சிரித்தான். மயூரிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
 
“நடுக்கடல்ல கொண்டு போய் வெச்சிருக்கிறன், வேற யாருமா இருந்தாக் கத்திக் கூப்பாடு போட்டிருப்பாங்கள், உங்கன்ட மருமகள் என்னென்டா, உங்கன்ட அம்மா நல்ல வடிவா இருப்பாங்களாமே, மெய்யோ என்டு கேட்டது.” வருண் சொல்லி விட்டுச் சத்தமாகச் சிரித்தான்.
 
அவன் சிரிப்புச் சத்தத்தில் ஆர்யன் திடுக்கிட மயூரி சட்டென்று குழந்தையை அணைத்துக் கொண்டாள்.
 
“சத்தம் போடாதே தம்பி.” மகனை அதட்டிய ராகினி மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.
 
“ஏன்? உன்ட பொஞ்சாதிக்கு என்னைப் பத்திக் கேட்க வேறொன்டும் கிடைக்கல்லையாமோ?” மகன் கப்பலைப் பற்றிய பேச்சை எடுத்தபோது ராகினிக்கு சுளீர் என்றது.
 
ஆனாலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். இன்னும் இன்னும் தனது அதிருப்தியை வெளியிட்டு அந்த வீட்டிலிருக்கும் நிம்மதியைக் குலைக்க அவர் விரும்பவில்லை.
நடந்தது எதுவாக இருந்தாலும், எப்படி நடந்திருந்தாலும் எல்லாம் முடிந்து போன விஷயம். அதை இனி மீண்டும் மீண்டும் பேசுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. 
 
விஷாகா கூட தன்னை இவ்வளவு தூரம் சமாதானம் செய்து கொண்டிருக்கும் போது தான் மட்டும் எதற்குக் கிடந்து மறுக வேண்டும்! 
இனி நடக்க இருப்பதைச் சரிவர திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார்.
 
“சரி தம்பி, நீங்க தூங்குங்கோ, பதினொரு மணி ஆகிப்போச்சு.” சொல்லிவிட்டு ராகினி எழுந்து கொண்டார். 
 
குழந்தையின் கன்னத்தை லேசாகத் தடவிக் கொடுத்தவர் மயூரியையும் திரும்பிப் பார்த்துவிட்டு வெளியே போய்விட்டார்.
 
அனுவை தன் அருகில் வருண் கிடத்திக் கொள்ள எழுந்து லைட்டை ஆஃப் பண்ணிய மயூரி ஆர்யனுக்கு அப்பால் படுத்துக் கொண்டாள். 
 
ராகினியின் மனது இன்னும் முழுமையாகத் திருப்தி அடையவில்லை என்று மயூரிக்கு புரிந்தது. எல்லாம் சீராக நாட்கள் எடுக்கலாம். அதுவரைப் பொறுமையாக இருக்கத்தான் வேண்டும்.
 
வருணும் அனுவும் பேசும் சத்தம் கேட்டபடியே இருந்தது. மயூரிக்கு தன் வாழ்க்கைப் பற்றிய ஏதேதோ எண்ணங்கள் இப்போது மனதில் சுழல ஆரம்பித்தது.
 
அவள் அத்தான் அவளைத் தேடி வந்ததை அவளால் இன்னும் நம்ப முடியவில்லை. இன்றைக்கு அந்த கேப்டன் என்னென்னவோ சொன்னாரே?!
 
அத்தானுக்கு என்னைப் பற்றிய ஞாபகம் இருந்தது உண்மையா? அவர் மனதில் நான் இருந்தேனா? அதனால்தான் திருமணத்தை மறுத்தாரா?
 
அப்படியிருந்தால் ஏன் என்னைத் தேடி வரவில்லை? அவரைத் தடுத்தது எது? நான் அழககோனின் மகள் என்பதுதான் அவரின் தடைக்கல் என்றால் அந்தக் காரணம் என்றைக்கும் மாறப்போவது இல்லையே!
 
அல்லது… அவர் கனவை நனவாக்கும் முயற்சியில் இருந்ததாலா? அதை முடித்துக்கொண்டு வர இருந்தாரா? அது யார் லோரா? 
இன்றைக்கு கேப்டன் அந்தப் பெயரைத்தானே சொன்னார்?
 
அனுவின் பேச்சு இப்போது நின்று போயிருந்தது. வருண் குழந்தையைத் தட்டிக்கொடுக்கும் மெல்லிய ஓசை மாத்திரம் மயூரிக்கு கேட்டது.
 
அந்தப் பெண்ணை அத்தான் ஏன் மறுத்தார்? அவளுக்கு இவரென்றால் பைத்தியமாமே! நினைக்கும் போதே மயூரிக்கு உடம்பெல்லாம் எரிந்தது.
 
வேலியில்லாத பயிரென்றால் கண்டதும் மேயத்தான் செய்யும். கேப்டனாக தெரிந்தவனுக்கு இது தெரியவில்லையாமா?
மனதுக்குள் அவனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தவள் அவன் எழுந்து வந்ததையோ தன்னருகே நின்று பார்த்ததையோ கவனிக்கவில்லை.
 
யாரென்றே தெரியாத ஒரு பெண் உருவோடு வருணை இணைத்துப் பார்த்துத் தன் நெஞ்சைப் புண்ணாக்கிக் கொண்டிருந்தாள் மயூரி.
 
திடுமென அவனைத் தான் உணர்ந்த பிறகுதான் தன்னருகே அவன் படுத்திருப்பது புரிந்தது.
 
“அத்தான்!” என்றாள் அதிர்ந்து போய்.
 
“அனுவை ரொம்ப கஷ்டப்பட்டுத் தூங்க வெச்சிருக்கேன், சத்தம் போடாதே!” என்றவன் பின்புறமாக அவள் கூந்தலுக்குள் முகம் புதைத்தான்.
 
“லோரா ன்னா யாரு?” கேட்க வேண்டும் என்று மயூரி நினைக்கவில்லை. ஆனால் அவளையும் அறியாமல் கேட்டிருந்தாள்.
 
வருண் ஒரு நொடி திகைத்தான். பின் தன்னை மீட்டுக் கொண்டவன் போல பேச ஆரம்பித்தான்.
 
“அதை நாளைக்கு ஃபோனை போட்டு அந்த கேப்டன் கிட்டயே கேளு.”
 
“அத்தான்!” அவள் அவனை அதட்டினாள்.
 
“அதான் நீயே சொன்னே இல்லை, வாழ்க்கையில அப்பா மாதிரி காதலிக்கணும்னு ஆசைப்பட்டீங்களே அத்தான் ன்னு, அதுக்கு நான் செலெக்ட் பண்ணின பொண்ணுதான் லோரா.” 
 
“அப்ப அவளைக் காதலிக்காம எதுக்கு இங்க வந்தீங்க?” மயூரியின் சுருதி ஏறியது.
 
“என்னோட பசங்களைப் பார்க்க வந்தேன்.” வருண் சிரிப்பில் உடல் குலுங்கச் சொல்லி முடித்ததுதான் தாமதம், அவன் புறமாகத் திரும்பியவள் அவனைக் கட்டிலிலிருந்து தள்ளி விட்டிருந்தாள்.
 
ஆனால் அவனா அசருபவன்? விழும்போது அவளையும் இழுத்துக்கொண்டு நிலத்தில் வீழ்ந்திருந்தான். மயூரி அவனைத் தள்ளிவிட்டு எழுந்து கொள்ளப் போக அவன் விடவில்லை.
 
அவள் திமிறத் திமிற முரட்டுத்தனமாக அணைத்தவன் அந்த இதழ்களில் அழுந்த முத்தமிட்டான். ஆனால் மயூரி அனுமதிக்கவில்லை. அவனை விலக்கி ஒதுக்கினாள்.
 
“ஏன் ப்ரதாயினி?” அவன் குரல் கெஞ்சியது. ஆனாலும் மயூரி அசைந்து கொடுக்கவில்லை. நிலத்திலேயே படுத்திருந்தாள். எழுந்து போகவுமில்லை. அவனை நெருங்கி வரவுமில்லை!
 
***
 
அடுத்த நாள் பொழுது புலர்ந்ததில் இருந்து ராகினி மிகவும் பரபரப்பாக இருந்தார். அன்றைக்கே எல்லோரும் கொழும்பிற்கு போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்.
வருணுக்கு தலை வெடித்தது.
 
விடிந்ததிலிருந்து மயூரி அவன் முகத்தைப் பார்க்கவில்லை. ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை.
காரணம் புரியாமல் அவள் பின்னோடு போய் கெஞ்சிப் பார்த்தான். அவள் மனம் இரங்கவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் சோர்ந்து போனவன் இப்போது புதிதாக அம்மா வேறு ஆரம்பிக்கவும் அப்படியே அமர்ந்து விட்டான்.
 
விஷாகாவிற்கும் முதலில் இது எதற்காக என்று புரியவில்லை. ஆனால் காரணத்தை ராகினி விளக்கிய போது அவர் சொல்வது சரியென்றே பட்டது.
 
“இவ்வளவு காலமும் எப்பிடியோ… பெரியவங்க நமக்கு எல்லாம் தெரிஞ்ச பிறகு இப்பிடி இவங்க ரெண்டு பேரும் முறையாத் தாலி கட்டாம ஒன்டா வாழுறது சரியென்டே நீ நினைக்கிறாய்?” 
அதற்கு மேல் விஷாகா எதுவுமே பேசவில்லை. தயாராகி விட்டார்.
 
மயூரியிடம் என்ன சொன்னாரோ அவளும் எதுவும் பேசாமல் ஆயத்தமானாள்.
 
ஒருவேளை ராகினி சொன்னதை வருண் அவளிடம் சொல்லி இருந்தாள் மறுத்திருப்பாளோ என்னவோ? ஆனால் விஷாகா சொன்ன போது அமைதியாகிப் போனாள்.
 
ராகினியோடு மோத உண்மையிலேயே மயூரிக்கு தைரியம் இல்லை. அத்தோடு… சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இரண்டு வருடங்களுக்கு முன் தான் சொன்னதைக் கேட்ட தாய் இப்போதும் கேட்பார் என்று அவள் நம்பவில்லை.
 
தன் பெண்ணின் வாழ்க்கையை நினைத்து, பேரக் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து உள்ளுக்குள் சதா மறுகியவர் விஷாகா.
 
வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும் அவரை அந்த வேதனை அரித்துத் தின்றது. இன்று அவற்றிற்கெல்லாம் விடிவுகாலம் வந்திருக்கும் போது மயூரியின் வறட்டுப் பிடிவாதத்தை அவர் நிச்சயம் அலட்சியப் படுத்துவார்.
 
அன்று மதிய உணவோடு குடும்பம் முழுவதும் கொழும்பு நோக்கிப் பயணப்பட்டது. இரண்டு கார்களும் தயாராக நின்றிருந்தன.
 
குழந்தைகள் இரண்டையும் தன்னால் தனியாகச் சமாளிக்க முடியாதென்று கூறி மயூரி ஆர்யனோடு சரவணனின் காரில் போய் ஏறினாள்.
 
அந்தக் காரணம் நியாயமானதாக இருக்கவே யாரும் அதைப் பெரிது படுத்தவில்லை. ஆனால் அவள் தன்னைத் தவிர்ப்பதற்காகவே இதைச் செய்கிறாள் என்று வருணுக்கு நன்றாகவே புரிந்தது.
 
வருண் எந்த விவாதத்திலும் இறங்கவில்லை. அவள் போக்கிலேயே விட்டுவிட்டான். அனு அவனை அதற்கு மேல் சிந்திக்கவும் விடவில்லை.
 
ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி அவர்கள் ஓய்வெடுத்த போது ஆர்யனை போய் பார்த்துக் கொண்டான். அப்போதும் கூட அவள் அவனை விட்டு அப்பால்தான் போனாள். 
 
வீடு வந்து சேர்ந்த போது இரவு ஆகியிருந்தது. விஷாகாவிற்கும் மயூரிக்கும் அந்த வீட்டைப் பார்த்த போது ஏதேதோ எண்ணங்கள் முட்டி மோதின. 
 
இந்த இரண்டு வருட காலத்தில் விஷாகா இங்கு வந்திருக்கிறார், ராகினியை பார்க்க. ஆனால் மயூரி… அன்றைக்குப் போனவள், இன்றைக்குத்தான் வருகிறாள்.
அவள் பிறந்து, வளர்ந்து, ஆண்டு அனுபவித்து… பின் இல்லையென்றாகிப் போன வீடு.
 
அதற்குள் மீண்டும் காலடி எடுத்து வைத்த போது அவளுக்கு உடம்பை ஏதோ செய்தது. ராகினிக்கும் கடந்த இரண்டு வருடங்களாக ஜாகை இங்கேதான் என்பதால் எதுவும் வித்தியாசமாகத் தோன்றவில்லை.
 
கொஞ்சம் சிரமப்பட்டது வருணும் அவன் பிள்ளைகளும்தான். பிள்ளைகள் கூட அந்த விசாலமான வீட்டில் தங்களைச் சட்டென்று பொருத்திக் கொண்டார்கள்.
 
எங்கெல்லாம் ஓட முடியுமோ அங்கெல்லாம் ஓடினார்கள்.
ஊஞ்சலில் ஏறி உட்கார்ந்து ஆடினார்கள். மாடிப்படிகளில் ஏறினார்கள். அவர்கள் பின்னால் ஓடுவதற்கே எல்லோருக்கும் நேரம் சரியாக இருந்தது.
 
ஒரு கட்டத்தில் ராகினி கண்ணீர் விட்டழுதார். இந்த வீட்டில் வருண் இப்படியெல்லாம் ஓடியாடி விளையாட வேண்டும் என்றுதானே அவர் கணவர் ஆசைப்பட்டார். 
 
வருணுக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. ஆனால் அவன் குழந்தைகளுக்கு அந்த பாக்கியம் கிட்டியிருக்கிறது.
 
தன் மனதில் தோன்றிய காரணத்தை வெளியே சொன்னால் விஷாகா வருந்தக்கூடும் என்று மறைத்தவர் தன் கண்ணீரை மறைக்கவில்லை.
 
அம்மா தன் அப்பாவை நினைத்து அழுகின்றார் என்றுதான் வருணும் நினைத்தான். சட்டென்று மூண்ட எரிச்சலில் தன் தாய் மேல் எரிந்து விழுந்தான் மகன்.
 
“எதுக்கு இப்பக் கண்ணைக் கசக்குறீங்க? அதான் நீங்க ஆசைப்பட்டபடி எல்லாம் நடக்குதுதானே?” வருணின் இந்த முகத்தில் அனைவரும் திடுக்கிட்டுப் போனார்கள்.
 
“உனக்கும் உன்ட பொஞ்சாதிக்கும் ஏதாவது பிரச்சினை என்டா நீ ஏன் தம்பி என்ட மேல எரிஞ்சு விழுறாய்?” ராகினி முறைத்தபடி கேட்க வருண் வாயை இறுக மூடிக் கொண்டான். 
அம்மா இவ்வளவு தூரம் தங்களைக் கவனித்திருப்பார் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.
 
தனக்கென தற்காலிகமாக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் புகுந்து கொண்டான். 
 
***
 
அடுத்த நாள் சரவணனின் உதவியோடு அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார் ராகினி. நகைகள் வாங்க என்று கடைக்குப் போனபோது ராகினி, விஷாகா, அனு என்று அனைவருக்கும் சேர்த்தே வாங்கினான் வருண். 
 
அதே போல பட்டுப்புடவை வாங்கும் போதும் அப்படித்தான், அனைவருக்கும் சேர்த்தே வாங்கினான். மயூரி கடைகளுக்கு வரவில்லை. குழந்தைகளோடு வீட்டில் இருந்து விட்டாள்.
 
வருண் அவளின் முழுதான நிராகரிப்பை இந்த இரண்டு நாட்களிலும் உணர்ந்தான். மனது வலித்தது. ஆனாலும் சமாளித்துக் கொண்டான்.
 
எதற்காகவும் அவளை வற்புறுத்தவில்லை. எதுவோ ஒன்று அவள் மனதை அரித்துத் தின்கிறது என்று மட்டும் அவனுக்குப் புரிந்தது. விட்டுப் பிடிக்கலாம் என்று அமைதியாகி விட்டான்.
 
அன்று அவர்கள் வீட்டில் இந்து முறைப்படி எளிமையாக வருண், மயூரி திருமணம் நடந்தேறியது. தாலி கட்டும் போது மாத்திரம் மயூரியின் விழிகள் லேசாகக் கலங்கின.
 
குடும்ப அங்கத்தவர்கள் தவிர்த்து வேற்று நபராக சரவணன் மாத்திரமே வந்திருந்தான். டாமினிக் அனைத்து சடங்குகளையும் நேரடியாக இணையதளம் மூலம் பார்த்தான். 
சுற்றம் சூழ நின்று வாழ்த்தவில்லை…
 
உன் தாய், என் தாய், நம் பிள்ளைகள்… இவர்கள் மட்டும் போதுமென்று அவர்கள் உறவைப் பலப்படுத்திக் கொண்டார்கள்.
 
பட்டுப்புடவை, மல்லிகைப்பூ, நகைகள் என்று அந்த வீடே அன்று ஜொலித்தது. அனுக்குட்டி கூட அன்று பட்டுப் பாவாடை அணிந்திருந்தது. 
குழந்தையின் அழகில் பெருமைப்பட்ட அந்தத் தந்தை மனைவியின் அழகில் மதிமயங்கிப் போனான். ஆனால் மயக்கியவள் எல்லாவற்றையும் மறுக்கிறாளே!
 
ஒருவேளை நான் மன்னிப்பை யாசிக்க வேண்டும் என்று நினைக்கிறாளா?! வருணுக்கு எதுவுமே புரியவில்லை.
இரவு நெருங்கி இருந்தது.
 
நேற்றைக்குப் போல் அல்லாமல் இன்றைக்கு எல்லா அறைகளும் அவரவர்க்கென ஒதுக்கப்பட்டது.
வருண் குடும்பத்திற்காக அந்தப் பெரிய படுக்கையறை தயாராக இருந்தது. குழந்தைகளை அன்றைக்கு விஷாகா தான் வைத்துக் கொள்வதாகக் கூற வருண் மறுத்துவிட்டான்.
 
நேற்றைக்கு ஒரு நாள் அவர்களைப் பார்க்காமல் தூங்குவதே அவனுக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்தது. அன்றைக்கு முழுவதும் புத்தாடை அணிந்து, வீட்டில் விசேஷம் நடந்தால் களைத்துப் போன குழந்தைகள் அன்று சீக்கிரமாகவே உறங்கி இருந்தார்கள். 
 
மயூரி இன்னும் பட்டுப்புடவையை மாற்றவில்லை. ஏனோ தெரியவில்லை, தலையிலிருந்த வாடிய பூவை மட்டும் அகற்றிவிட்டு புதிதாக நிறைய வைத்துக் கொண்டாள்.
 
வருணுக்கு பெரிய வேதனையாக இருந்தது. இன்றைக்கு அவளிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்ற முடிவில் இருந்தான்.
 
ஆனால் இப்படி சிங்காரித்துக் கொண்டு நிற்பவளிடம் எப்படிப் பேசுவது? அவன் கைகள் அவன் பேச்சைக் கேட்குமா? 
 
“ட்ரெஸ் சேஞ்ச் பண்ணலை?” இயல்பாகப் பேச்சை ஆரம்பித்தான் வருண். ஆனால் அவள் பதில் சொல்லாமல் அமைதியாக ஜன்னலோரம் நின்று வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
குழந்தைகள் உறங்கிவிட்டதால் விளக்கை அணைத்து விட்டிருந்தாள் மயூரி. வானில் நிலா ஜாஜ்வல்லியமாக ஜொலித்துக் கொண்டிருந்தது.
 
நிலவொளியில் எழிலுருவாக நின்றிருந்த மனைவியைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடி அவளருகே வந்தான் வருண்.
 
உன்னோடு ஓர் ஐந்து நாட்கள் வாழ ஆசைப்படுகிறேன் என்று கப்பலில் சொன்ன பெண் இவளில்லையே?!‌
 
“என்னாச்சு ப்ரதாயினி? ஏன் என்னை அவாய்ட் பண்ணுறே?” நிதானமான குரலில் கேட்டான் வருண். ஆனால் பதில் வரவில்லை. தலையை மாத்திரம் குனிந்து கொண்டாள்.
 
“என்ன கோபம் உனக்கு எம்மேல? அந்த லோரா பத்தி கேப்டன் சொன்னதுக்கா?” இப்போதும் அவள் எதுவும் பேசவில்லை.
 
“இல்லைன்னா… கையில ஒத்தைப் பூவை வெச்சுக்கிட்டு நான் முழங்கால்ல நின்னு உங்கிட்ட ஐ லவ் யூ ன்னு சொல்லணும்னு எதிர்பார்க்கிறியா?” அவன் அடுக்கிக்கொண்டு போனான்.
 
“சாரி ம்மா, நான் அந்த வயசையெல்லாம் தாண்டி ரொம்ப நாளாச்சு.” யதார்த்தமாகச் சொன்னவன் அவளை ஊடுருவுவது போல பார்த்தான்.
 
“இல்லைன்னா… பார்த்த உடனேயே உன்னை எனக்கு அவ்வளவு புடிச்சிதுன்னு என்னைப் பொய் சொல்லச் சொல்லுறியா? அதுதான் உனக்குப் பிடிக்கும்னாச் சொல்லு, அதையும் நான் சொல்றேன்… உனக்காக!”
மயூரி இப்போதும் அமைதியாகவே நின்றிருந்தாள். அவள் முகம் அமைதியாக இருந்தது. 
 
வானில் தெரிந்த நிலவை அவள் அண்ணார்ந்து பார்த்த போது கண்ணாடியில் அவள் பிம்பத்தைப் பார்ப்பது போலவே இருந்தது!
 
“சொந்தம்னுதான் நினைச்சு வந்தேன், ஆனா அப்பிடி இல்லைடான்னு உன்னோட ஆச்சியும் அப்பாவும் செவிட்டுல அறையுற மாதிரி சொன்னாங்க, அவங்க வீட்டுப் பொண்ணு நீ, அவ்வளவு சுலபத்துல உம்மேல காதல் வராது பொண்ணே!” முதன்முதலாகத் தன் மனம் திறந்தான் வருண்.
 
“காதல் வராத உனக்கு எம்மேல எதுக்கு அத்தனை அக்கறை வந்ததுன்னு நீ கேட்கலாம், ஆனா அதுக்குப் பதில் இன்னைக்கு வரைக்கும் எனக்குத் தெரியாது.” அவள் பதிலை எதிர்பார்க்காமல் தன்பாட்டில் இப்போது வருண் பேச ஆரம்பித்திருந்தான்.
 
“அந்த அக்கறைக்குப் பேர்தான் காதல்னா… எனக்குச் சொல்லத் தெரியலைம்மா… நான் அப்பவே உன்னை உள்ளுக்குள்ள காதலிக்க ஆரம்பிச்சிருக்கணும்!” இப்போது மயூரி தன் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.
 
“வீட்டுக்காக உன்னைத் தூக்கணும்னு நினைச்சனே தவிர, உன்னைக் கஷ்டப்படுத்தனும்னு நான் துளிகூட நினைக்கலை.” வருண் தடையின்றிப் பேசிக்கொண்டே போனான்.
 
“உங்கூட இருந்த அந்த நாட்கள்ல… ஒரு பொண்ணோட தனியா இருக்கோமேன்னு முதல்ல கஷ்டப்பட்டாலும் பின்னாடி நான் நானாத்தான் இருந்தேன்.” மயூரி இப்போது குனிந்து தன் நகக்கண்களை ஆராய்ந்தாள்.
 
“நீ எங்கூட இருத்தப்போ உன்னை நல்லாப் பார்த்துக்கணும்னு தோணிச்சு… உங்கூட ஊர்சுத்தப் பிடிச்சுது… அன்னைக்கு கிச்சன்ல உனக்கு எண்ணெய் பட்டப்போ…” வருண் வாக்கியத்தை முடிக்கவில்லை. மயூரி முகத்தைத் திருப்பிக் கொண்டாள். வெட்கப்பட்டிருப்பாளோ?!
 
“எனக்கு அவ்வளவு கஷ்டமா இருந்துச்சு, கேப்டன் ஒவ்வொரு முறையும் உன்னை நெருங்கும் போது… நான் எப்பிடி உணர்ந்தேன்னு எனக்குச் சொல்லத் தெரியலை!” இப்போது வருணே பேச்சைக் கொஞ்ச நேரம் நிறுத்தினான்.
 
அடுத்து என்ன வரப்போகிறது என்று மயூரிக்கும் புரிந்தது. இருந்தாலும் அமைதியையே கடைப்பிடித்தாள்.
 
“அன்னைக்கு… அன்னைக்கு எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை, நான் நிதானமா இருந்திருக்கணும், உன்னோட மனசுல அத்தான், காதல், ஆசை ன்னு ஏதேதோ இருந்துச்சு…
 
ஆனா எம்மனசுல எதுவுமே இல்லைன்னு பிடிவாதமாச் சொல்லிக்கிட்ட நான் எப்பிடி அப்பிடி நடந்துக்கலாம்? அப்போ எனக்கும் மிருகத்துக்கும் என்ன வித்தியாசம்?” 
பேசியது போதும் என்று நினைத்தானோ, இல்லை… இனி பேச எதுவுமே இல்லை என்று நினைத்தானோ, இப்போது வருண் கட்டிலை நோக்கி நடந்தான்.
சட்டென்று ஏதோ தோன்ற நின்று திரும்பிப் பார்த்தான்.
 
“கேப்டன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் எனக்குப் புரியலை, புரியலைன்னு சொல்றதை விட அந்த உண்மையை ஏத்துக்க முடியலைன்னுதான் சொல்லணும், எனக்கும் என்னோட குடும்பத்துக்கும் அநியாயம் நினைச்சவங்க வீட்டுப் பொண்ணு மேல நான் ஆசைப்படுறதாங்கிற…” மேலே பேச முடியாமல் வருண் திணறினான்.
 
“அம்மா பொண்ணு பார்க்கப் போறேன்னாங்க, பார்த்தாங்க… எதையுமே நான் கண்டுக்கலை, அந்த லோரா கூட அப்பிடித்தான்… பார்ட்டிக்கு கூப்பிட்டா, போனேன்… டான்ஸ் பண்ணலாம்னா, சரின்னேன்…” இப்போது மட்டும் மயூரியின் உடல்மொழியில் லேசான மாற்றம் தெரிந்தது.
 
“கட்டிப்புடிச்சா… அவளோட நோக்கமே வேறேங்கிறது நல்லாவே புரிஞ்சுது, போதையில ப்ரதாயினியை தொடுறப்போ இருந்த தைரியம், அதே போதையில லோராவை தொடுறப்போ இருக்கலை, அதுதான் உண்மை!” வருண் இப்போது கட்டிலில் போய் அமர்ந்து கொண்டான். 
 
“அன்னைக்குப் புரிஞ்சுது… எல்லாமே புரிஞ்சுது, அதையே சொல்லி கேப்டன் என்னைக் கேலி பண்ணினப்போ அடிச்சு நொறுக்கலாம் போல ஆத்திரம் வந்துச்சு… அழககோனோட பொண்ணு மேல நான் ஆசைப்படுறேனான்னு ஆங்காரம் வந்துச்சு, எம்மேலயே எனக்குக் கோபம் வந்திச்சு” பேசியது போதும் என்பது போல வருண் இப்போது தனது முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டான்.
 
“ரெண்டு நாள் பேசாததுக்கே இவ்வளவு பேச்சு, விளக்கம்… அப்போ எனக்கு இந்த ரெண்டு வருஷமும் எவ்வளவு வலிச்சிருக்கும்?!” இப்போது மயூரி நிதானமாகக் கேட்க விலுக்கென்று நிமிர்ந்தான் வருண்!
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!