காதல் சதிராட்டம் 25a

காதல் சதிராட்டம் 25a

இளங்கதிரின் ஒளிப்பட்டு ஓடி ஒளிந்தது காரிருள்.

மெல்ல மெல்ல கருமை விலகி உள்ளத்தில் உவகை பூக்க வெளியெல்லாம் தன் பொற்கதிர்களை சிந்திய கதிரவனைப் போல் ஆதிராவின் உள்ளத்திலோ ஒரு இனம் புரியாத பிரகாசம் ஒளிர்விடத் தொடங்கியது.

வீசிய தென்றல் அவள் மனதை ருதுப்படுத்திக் கொண்டு இருந்தது.

கண்களால் அந்த இயற்கை செய்யும் மாயாஜாலங்களை  ரசித்துக் கொண்டு இருந்த நேரம் ஆதிராவின் கண்களை திடீரென ஒரு கை மூடியது.

திகைத்துப் போய் யார் என்றுக் கேட்டாள் பதற்றமாக.

“நான் தான் அண்ணி.. பயப்படாதீங்க….” என்ற ப்ரணவ்வின் குரலைக் கேட்கவும் தான் அவளது விரைத்த உடல் தளர்ந்தது.

“என்ன ஆச்சு ப்ரணவ்?  ஏன் என் கண்ணை மூடி இருக்க?”

“அண்ணி ஆதிகாலத்துல இருந்தே, இப்படி கண்ணை மூடுனா சப்ரைஸ் தராத அர்த்தம். ” என்று சொல்ல ” ஓ சப்ரைஸ் தரப் போறீயா ஓகே ஓகே ” என்று புன்னகைத்தபடி அவனுடன் நடந்தாள்.

“அண்ணி இப்போ ஒரு மேடு வருது.. அண்ணி இப்போ நீங்க பெருசா கால் எடுத்து வைக்கணும். ” என்று ப்ரணவ்வின் வழிகாட்டுதலின் படி அவள் கால்கள் அந்த வீட்டின் ஹாலை நோக்கி நிறுத்தியது.

ப்ரணவ் கண்களை திறந்த நொடி டப் என்ற சப்தத்துடன் ஜிகினா துகள்கள் அந்த அறை முழுக்க வெடித்து சிதறியது.

காகிதங்கள் முழுவதும் சிதறி விழுந்ததும் இப்போது கண்களை கசக்கிப் பார்த்தாள்.

தன் முன்னே கண்ட காட்சியைக் கண்டதும் கண்களில் ஒரு சேர கண்ணீரும் புன்னகையும் மின்னியது.

அவள் ஆசை ஆசையாக வளர்த்த ஏஞ்சல் இப்போது மீன் தொட்டியில் இருந்து fish aquarium ற்கு மாறி இருந்தது.

புன்னகையுடன் திரும்பி ப்ரணவ்வைப் பார்த்தாள்.

“நம்ம ஏஞ்சல் பர்த்டேக்கு கிஃப்டா புது வீடு ..  எப்படி இருக்கு அண்ணி?” என்றான் ஆசையாக.

“உங்க எல்லோரோட மனசு மாதிரி ரொம்ப அழகா இருக்கு. ” என்று சொல்லிவிட்டு புன்னகைத்தவளின் முன்பு உத்ரா ஒரு கேக்கை கொண்டு வந்து வைத்தாள்.

“அண்ணி ஏஞ்சல் சார்பா நீங்க கேக் கட் பண்ணுங்க… ” என்று உத்ரா சொல்ல சின்ன முறுவலோடு ஆமோதித்தவள் அந்த கத்தியை வாங்கிக் கேக்கை வெட்ட

“ஹேப்பி பேர்த்டே ஏஞ்சலு “என்ற வார்த்தைகள் அவளது காதை நிறைத்தது.

ஆதிராவின் சந்தோஷமான முகத்தையே வினய் இமைக்க மறந்துப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

முதலில் உத்ராவிற்கும் பின்பு ப்ரணவ்விற்கும் ஊட்டியவளின் கைகள் வினய்யிடம் செல்லும் போது மட்டும் தானாக கீழே இறங்கிவிட்டது..

அவள் தயக்கத்துடன் கேக்கை அவனின் முன்பு நீட்டாமல் அவனைப் பார்த்தாள்.

அதைக் கண்டதும் வினய்யின் முகம் தானாக வாடிவிட்டது.

நேற்று எடுத்த முடிவும் வினய்யின் முகமும் ஆதிராவின் கைகளை தானாக மேல் ஏற்றியது.

அவன் மேல் இருந்த வெறுப்பு அவள் கைகளை கீழே இறக்கியது என்றாலும் அவனை புதியதாக மீண்டும் பார்க்க வேண்டும் என்ற முடிவு அவள் கைகளை அவனை நோக்கி நீள செய்தது.

தன் முன்னால் ஆதிரா நீட்டிய அந்த கேக் துண்டை கண்களில் சிந்திய புன்னகையுடன் வினய் வாங்கிக் கொண்டான்.

அதைப் பார்த்ததும் ப்ரணவ் மற்றும் உத்ராவின் உதடுகள் புன்முறுவல் பூத்தது.

“டேய் ப்ரணவ்.. அண்ணி கொஞ்சம் கொஞ்சமா வினய் அண்ணா பக்கம் சாயுறா மாதிரி இருக்கு இல்லை… ” என்றாள் அவன் காதுகளில் கிசுகிசுப்பாக.

“பின்னே அண்ணியை சாய வைச்சது யாரு.. இந்த ப்ரணவ் தானே.. நான் பேசுன வார்த்தை கல்லையே அசைச்சு இருக்கும்.. நம்ம அண்ணியை அசைச்சுப் பார்த்து இருக்காதா என்ன?”

“டேய் ப்ரணவ் உருப்படியான காரியம் பண்ணி இருக்க டா. சூப்பரு சூப்பரு. இனி என் ரூட் க்ளியர் ஆகிடும்… ஆதிரா அண்ணி   அண்ணாவை லவ் பண்ணிட்டா வைபவ்வை ஈஸியா என்  வழிக்கு கொண்டு வந்துடலாம். ” என்றவளின் வார்த்தை அதுவரை அவன் முகத்தில் மலர்ந்து இருந்த புன்னகையை மறையச் செய்து இருந்தது.

அவளது கைகளைப் பற்றி தனியாக இழுத்துக் கொண்டு போனவன் அவளை சுவற்றில் சாய்த்து அவள் தப்பித்து ஓடாத வண்ணம் அணையைக் கட்டினான்.

அவன் கண்கள் கூர்மையாக அவளைப் பார்த்தது.

“நீ ஏன் வைபவ்வைக் காதலிக்கணும்னு நினைக்கிற உத்ரா? எந்த விஷயம் வைபவ்வை உன் பக்கம் இழுத்தது? நான் சொன்ன வார்த்தையா? இல்லை நீ வைபவ் கிட்டே பேசி அவனோட கேரக்டர் பிடிச்சுப் போயா? அப்படி  என்ன பிடிச்சு இருந்தது அவன் கிட்டே? எனக்குத் தெரிஞ்சே ஆகணும்.. ” என்றான் விடாப்பிடியாக.

“உனக்கு எதுக்கு அவனைப் பிடிச்துக்கான காரணம் தெரியணும்னு நினைக்கிறே ப்ரணவ்?”என்று உத்ராவும் கோபமாகவே திருப்பிக் கேட்டாள்.

“எனக்கு காரணம்லாம் தெரியாது. ஆனால் எனக்கு பதில் தெரிஞ்சாகணும் “

“நீ காரணம் சொன்னா தான் நான் ஏன் வைபவ்வைப் பிடிச்சதுனு சொல்லுவேன் ப்ரணவ்..” என்று சொன்னவள் நிதானமாக அவனைப் பார்த்து தொடர்ந்துக் கேட்டாள்.

” நீ ஏன் வைபவ் பேர் சொன்னாலே கோவப்படுற? அவனை நான் காதலிக்கிறேனு சொன்னா உனக்கு ஏன் வலிக்குது?” என்றவளின் நேரடிக் கேள்வியின் முன்பு சற்றே திணறித் தான் போனான்.

ஏன் எனக்கு வலிக்கிறது என்ற கேள்வி அவனுள் கழுகு போல் வட்டமிட தொடங்கியது. பதில் தெரியாமல் சொல்ல முடியாமல் திணறினான்.

ஆனால் அந்த திணறலை அவளின் முன்பு காட்ட அவனுக்கு பிடிக்கவில்லை.

“ஆதிரா அண்ணி சொன்ன விஷயங்களை எல்லாம் பார்த்து எனக்கு வைபவ் மேலே நல்ல அபிப்ராயம் வரல.. எனக்கு என்னமோ உனக்கும் அவனுக்கும் செட் ஆகாதுனு தோணுது. உனக்கு நல்ல ஒருத்தன் கிடைக்கணும்ன்ற ஒரே காரணத்துக்காக தான் நான் இவ்வளவு பதட்டப்படுறேன்… அவ்வளவு தான்.. ” என்றவன் படபடவென வார்த்தைகளை பேசிவிட்டு மூச்சு வாங்க அவளைப் பார்த்தான்.

“அவ்வளவு தானே?” என்று உத்ரா அழுத்திக் கேட்டாள்..அவனும் அவ்வளவு தான் என்று அழுந்தி சொன்னான்.

“அப்போ சரி நான் சொல்றேன்.. என் மனசுல இருந்த வெறுமையை போக்குனது வைபவ். அதனாலே தான் எனக்கு வைபவ்வைப் பிடிச்சு இருக்கு. இப்போ உனக்கு காரணம் தெரிஞ்சுடுச்சா நான் போகலாமா? என்று அவன் அணைப் போல் கட்டியிருந்த கைகளைப் பார்த்தபடிக் கேட்டாள்.

“நான் உன் கூட இருந்தும் எப்படி உத்ரா உனக்கு வெறுமை வந்தது? நான் உன்னை நல்லா பார்த்துக்கலயா? அதனாலே தான் வைபவ்வை உனக்கு பிடிச்சு இருக்கா?” என்றவனின் எடையற்ற குரலிலோ எடையில் அடங்கா துயரங்கள்.

“உனக்கு என் கூட இருந்தும் எப்படி வெறுமை வந்து வைஷாலியை காதலிச்சியோ அதை மாதிரி தான் எனக்கும் வெறுமை வந்து வைபவ்வைக் காதலிச்சேன் சிம்ப்பிள்.. “

“உத்ரா எனக்கு வெறுமை வந்து ஒன்னும் வைஷாலியைக் காதலிக்கல. அவளும் நானும் நல்ல ப்ரெண்டஸ்.. ஒரு நாள் அவள் வந்து ப்ரொபோஸ் பண்ணா நான் நோ சொல்ல ஒரு காரணமும் இல்லாததாலே எஸ் சொன்னேன்.. இதுக்கும் வெறுமைக்கும் உனக்கும் எந்த சம்மதமும் இல்லை… ” என்றுவிட்டு அவளைப் பார்த்தான்.

“உனக்கு வராம இருக்கலாம் ப்ரணவ்… ஆனால் எனக்கு வெறுமை வந்துச்சு… நீ ஒவ்வொரு தடவை வைஷாலி கிட்டே பேசி என்னை ஒதுக்கும் போது எல்லாம் எனக்கு வெறுமை வந்துச்சு.. எனக்கு  வைபவ்வைப் பிடிக்க ஒரே காரணம் நீ எனக்கு தந்த வெறுமை தான் … ” என்று அவள் சொல்ல அவனது கைகள் பிடிமானம் இழந்து தளர்ந்துப் போய்  கீழே விழுந்தது.

கண்கள் வலியுடன் அவளை நோக்கியது.

அவள் அந்த பார்வையைத் தவிர்த்துவிட்டு அவனைவிட்டு விலகிச் சென்றாள்.

ஏதோ தனக்கு சொந்தமான ஒன்றை இழந்ததைப் போல் வலியுடன் செல்லும் உத்ராவையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

இழந்துவிடுவானோ?

💐💐💐💐💐💐💐💐💐💐💐

ஏனோ தெரியவில்லை அந்த அதிகாலை ஆதிராவிற்கு புதியதாக தெரிந்தது.

எப்போதும் ப்ரணவ் உத்ராவின் கலாட்டாக்களாலும் வினய்யின் அதட்டல் மொழிகளாலும் நிறைந்துக் கிடக்கும் வீடு அன்று மயான அமைதியைக் கொண்டு இருந்தது.

சமைலறைக்கு சென்று பார்த்தாள்.

அன்று எதுவும் சமைக்கப்படாமல் காலிப் பாத்திரமாக இருந்தது.

வேக வேகமாக இட்லியையும் சட்னியையும் செய்து  விட்டு வெளியே வந்தாள்.

சுற்றி முற்றித் தேடிப் பார்த்தாள் வீட்டினுள் யாரும் அகப்படவே இல்லை.

தோட்டத்தில் தேடினாள்.

அங்கே பூவாசத்தைத் தவிர மனிதர்களின் வாசம் வீசவே இல்லை.

எங்கெங்கோ தேடிப் பார்த்தவள் சோர்ந்துப் போய் அந்த வீட்டின் பின்னே ஓடும்  ஆற்றை நோக்கி நடந்தாள்.

தூரத்தில் ப்ரணவ்வும் உத்ராவும் கைக்கட்டி நிற்பது மங்கலாக தெரிந்தது.

வினய் வேஷ்டி உடுத்தி அமர்ந்து இருப்பதும் தெரிய அங்கே செல்ல முற்பட்டாள்.

அருகே வர வர அவளது கால்கள் தயங்கி நின்றது.

ப்ரணவ்வின் கண்களும் உத்ராவின் கண்களும் அழுது அழுது வீங்கிப் போய் இருந்தது.

வினய்யின் கண்களோ அழத் திராணியற்று இறுகிப் போய் இருந்தது.

அந்த சூழ்நிலையில் தான் அங்கு நிற்பது சரியாக இருக்காது என்பதை உணர்ந்த ஆதிரா, காலடி சப்தம் கூட கேட்காமல் அங்கிருந்து வெளியேறிவிட்டாள்.

டைனிங் டேபிளில் அமர்ந்துக் கொண்டு அவர்களது வருகைக்காக காத்துக் கொண்டு இருக்க, பத்து நிமிடம் கழித்து மூவரும் சோர்வாக வீட்டிற்குள் நுழைந்தனர்.

அவர்களைக் கண்டதும் ஆதிரா பரபரப்பானாள்.

“எங்கே போனீங்க எல்லோரும்.. வாங்க உட்கார்ந்து உட்காருங்க சாப்பிடலாம்.. ” என்று சொல்லியவள் வேகமாக தட்டெடுத்து வைக்க  மூவரும் ஒரு சேர வேண்டாம் என்று மறுத்தனர்.

“எனக்கு பசிக்குது ப்ளீஸ் ப்ரணவ். வாங்களேன் எல்லாரும் உட்கார்ந்து சாப்பிடலாம்.. ப்ளீஸ் உத்ரா ” என்றாள் கெஞ்சலாக.

“இல்லை அண்ணி எனக்கு பசிக்கல… ” என்று உத்ராவும் ப்ரணவ்வும் மாறி மாறி சொன்னார்கள்.

“சரி நீங்க சாப்பிடலைனா நானும் சாப்பிடல.. ” என்று வேகமாக எழுந்துக் கொண்ட ஆதிராவின் செயலிலோ அவர்களை எப்படியாவது சாப்பிட வைத்துவிட வேண்டும் என்ற உத்வேகம் தெரிந்தது.

உத்ராவும் ப்ரணவ்வும் வேறு வழியில்லாமல் அமர வினய் எதுவும் பேசாமல் அங்கிருந்து கடந்து போக முயன்றான்.

“வினய் உங்களுக்கு மட்டும் தனியா சொல்லணுமா?  வந்து உட்காருங்க… ” என்று ஆதிரா ஒரு அதட்டல் போட மறுக்க முடியாமல் வினய்யும் சாப்பிட அமர்ந்தான்.

மூவருக்கும் உணவு தொண்டையில் சிக்கிக் கொண்டு உள்ளே முழுங்க முடியாமல் அவஸ்தப்படுவதை ஆதிராவும் உணர்ந்தே இருந்தாள்.

ஆனாலும் அவர்களை அப்படியே பட்டினியாக விட அவளுக்கு விருப்பம் இல்லை ஆதலால் கட்டாயப்படுத்தி மூவரையும் உணவருந்த வைத்தாள்.

சாப்பிட்டு முடித்தப் பின்பு மூவரும் தங்களது அறைக்குள் சென்று முடங்கிப் போயினர்.

ஆதிராவோ அவர்கள் முகத்தில் எப்படி சந்தோஷத்தை வர வைப்பது என்ற யோசனையுடன் தோட்டத்தில் போடப்பட்டு இருந்த மேஜையில் அமர்ந்தபடி வானத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவள் பக்கத்தில் ஒரு உருவம் வந்து அமர திரும்பிப் பார்த்தாள். ப்ரணவ் தான்.

அவன் கண்களில் ஒரு வலி இருந்தது.

ஆனால் அதையும் மீறி வலுக்கட்டாயமாக ஒரு சிரிப்பை ஒரு இதழில் கஷ்டப்பட்டு பொருத்தி இருந்தான்.

“அண்ணி இன்னைக்கு நாங்க உங்க கிட்டே சரியா பேசலனா தப்பா எடுத்துக்காதீங்க… ” என்றான் கரகரப்பான குரலில்.

“எனக்கு புரியது ப்ரணவ்.. நான் வீட்டு பின்னாடி இருக்க ஆத்துக்கு காலையிலே வந்தேன்.. உங்களோட சோகத்துக்கான காரணம் என்னனு என்னாலே புரிஞ்சுக்க முடியுது.. நான் எதுவும் தப்பா எடுத்துக்கல…” என்றவளோ தயங்கி தயங்கி ” யாருக்காக திதி கொடுத்தீங்க?” என்றுக் கேட்டாள்.

“என் தங்கச்சிக்கும் அப்பாவுக்கும்…
ஒரே நேரத்துல ரெண்டு பேரும் ஆக்ஸிடென்டல இறுந்துட்டாங்க.. வினய் அண்ணா மேலே நீங்க கோவப்பட்டீங்களே அதே நாளிலே தான் எங்களை விட்டு இவங்களும் போயிட்டாங்க… ” என்றவனின் கண்களிலோ கண்ணீர் சுரந்தது.

“எனக்கும் சரி வினய் அண்ணாவுக்கும் சரி என் தங்கச்சி ஷிவாணியை ரொம்பப் பிடிக்கும்… அவள் இப்படி சீக்கிரமாவே எங்களை விட்டுட்டு போயிடுவானு நினைக்கல.” என்று கரகரத்த குரலில் சொன்னவன் தன் தொண்டையை சரி செய்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்தான்.

“அப்பா போனது, குடும்பத்துலேயும் சரி தொழிலிலேயும் சரி பெரிய பாதிப்பை உண்டு பண்ணிடுச்சு.  வினய் அண்ணா தான் மூழ்கத் தொடங்கி இருந்த vps textiles ஐ மறுபடியும்  தூக்கி நிறுத்துனாங்க. மாடாட்டம் உழைச்சாங்க. எங்களுக்கு அப்பாவா மாறி எங்களை நல்லா கவனிச்சுக்கிட்டாங்களே தவிர அவங்களை கொஞ்சமும் கவனிச்சுக்கிறது இல்லை. என் அண்ணா சிரிக்கிறதையே நிறுத்திட்டாங்க அண்ணி… கல்லா மாறிட்டாங்க.. ஷிவாணியோட சின்ன போட்டாவைப் பார்த்தாக் கூட ரொம்ப கஷ்டப்படுவாங்க..  நான் அதனாலே எல்லா போட்டாவையும் ஒளிச்சு வைச்சுடுவேன் அண்ணி.” என்று ப்ரணவ் சொல்ல அவளுக்கு அன்று குடும்ப ஆல்பத்தில் வந்த புகைப்படத்தைப் பார்த்து உடைந்துப் போய் நின்ற வினய்யின் முகம் நினைவிற்கு வந்தது.

“அன்னைக்கு ஃபேமிலி ஆல்பம் பார்த்துட்டு இருந்த அப்போ வினய் இதனாலே தான் சோகம் ஆனாங்களா?” என்று தன் சந்தேகத்தைக் கேட்டாள்.

அவளது சரியான யூகத்தைக் கண்டு மெச்சுதலாக தலையசைத்த ப்ரணவ் மீண்டும் தொடர்ந்தான்.

“ஆமாம் அண்ணி அதனாலே தான் அண்ணா அன்னைக்கு கல்லா இறுகிப் போனாங்க.. அப்படி மாறுன என் அண்ணாவை அவ்வளவு சுலபமா யாராலும் சரி பண்ண முடியாது, ஆனால் நீங்க சரி பண்ணீங்க.” என்று சொன்னவன் அவளைக் கெஞ்சலாகப் பார்த்தான் வார்த்தைகளும் கூட கெஞ்சலாகவே வந்தது.

“ப்ளீஸ் அண்ணி எனக்கு ஒரே ஒரு உதவி. இன்னைக்கு என் அண்ணா கூட உங்களாலே இருக்க முடியுமா? அவங்களை சரி பண்ண உங்க ஒருத்தராலே மட்டும் தான் முடியும் அண்ணி… ” என்று ப்ரணவ் கேட்க ஆதிராவின் விழிகளிலோ கண்ணீர் இமையை முட்டியது.

அன்று அவன் அப்படி அந்த கடிதத்தைக் கொடுத்ததற்கு தான் கோபப்பட்டு சண்டை போட்டதும், பின்னாலேயே வந்து சமாதானம் செய்வான் என்று எதிர்பார்த்தாள்.

அவன் மேல் எந்த தவறும் இல்லை என்று நிரூபிக்க முயற்சி செய்வான் என்று எதிர்பார்த்தாள்.

நடந்ததற்கு ஏதாவது விளக்கம் சொல்லி அவன் அந்த கேவலமான செயலை தான் செய்யவில்லை என்று அவள் மனசஞ்சலத்தை களைவான்  என்று எதிர்பார்த்தாள்.

ஆனால் அவன் அப்படி அவளைத் தேடி வரவில்லை.  எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

தன்னுடைய சுயரூபம் வெளியே வந்துவிட்டதை எண்ணி அவன் அசிங்கப்பட்டு ஓடி ஒளிந்துக் கொண்டான் என்று இவள் நினைத்துவிட்டாள்.

ஆனால் இப்போது தான் அவன் ஏன் வரவில்லை என்ற காரணம் புரிந்தது.

அன்று அவனுடைய தகப்பனையும் உயிருக்கு உயிராய் நேசித்த தங்கையையும் ஒரே நேரத்தில் இழந்து இருப்பவனால் எப்படி வர முடியும்?

அவன் தன்னைத் தேற்றிக் கொண்டு என்னைத் தேடி விளக்க  வரும் போது நான் அவனை விட்டு அவனுக்கு தெரியாத ஊரில் வந்து தஞ்சமடைந்து விட்டேன்.

அவன் என்னைக் கண்டுபிடித்த போது நிலைமை கைமீறிப் போய் இருக்கிறது. அதனால் தான் எதுவும் சொல்ல முடியாமல் தவிக்கின்றானா?

ஒரு வேளை வினய் நல்லவனோ? என்ற கேள்வி அவள் மனதுனுள் பெரியதாய் விஸ்தாரம் எடுத்து நின்றது.

ஆதிராவின் முகமாற்றங்களையே பார்த்துக் கொண்டு இருந்த ப்ரணவ் ” என் அண்ணாவுக்கு ஆதரவா ஒரு துணையா இன்னைக்கு இருக்க முடியுமா அண்ணி?” என்று அவளிடம் மறுபடியும் அந்த கேள்வியைக் கேட்க ஆதிராவின் தலையோ அழுத்தமாக தலையசைத்து தன் சம்மதத்தை தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!