மென்சாரலில் நின்வண்ணமோ..!? (15.3)

மென்சாரலில் நின்வண்ணமோ..!? (15.3)

“அப்போ பெருசா என்னவோ ஆகிருக்கு…” – சுகா

“இதை நீ என்கிட்ட சொன்னதேயில்ல…” – மனோ

“ஆமா! இப்போ அதான் முக்கியம்… மனுசனே கடுப்புல இருக்கான்…”

“அப்படியென்ன நடந்ததுனு சொல்லுங்களேன்” – சுகா

“ம்ம் சரி” என்றவன் சொல்லத் தொடங்கினான்.

“அப்போ நாங்க அஞ்சாவதுல இருந்தோம்…”

“அப்போவே வா?” – சுகா

“நடுவுல பேசக்கூடாது!”

“சரி சரி” -சுகா

“எங்க க்ளாஸ்க்கு புதுசா ஒரு பொண்ணு ட்ராஸ்ஃபராகி வந்தா… அவ பேரு ஷோபி! பேர மாதிரியே அவளும் பூனைக்குட்டி மாதிரி இருப்பா அந்த இரண்டு குட்டிப்பின்னல்ல… கொஞ்ச நாள் போக போக நாங்களும் நல்ல ஃப்ரெண்ட்ஸா எவால்வ் ஆகிட்டிருந்தப்போதான் அது நடந்துச்சு!! ஒரு நாள் ஷார்ட் ப்ரேக்ல் நான் வாஷ்ரூம் போயிட்டு வந்தா க்ளாஸ்ல வைபாவும் ஷோபியும் சண்டை போட்டுட்டு இருந்தாங்க… நான் எவ்வளவோ தடுக்க ட்ரை பண்ணேன்… ஒருகட்டத்துல ஷோபி இவ தலை முடிய பிடிச்சு வேகமா இழுத்துட்டா…”

“அய்யோ!! அக்கா ஷோபிய அடிச்சிட்டாளா?” என்று தீவிரமாய் கேள்வியெழுப்பிய சுகாவை ஒருகணம் எட்டிப்பார்த்துவிட்டு தலையில் அடித்துக்கொண்டு திரும்பியும் படுத்துவிட்டாள் வைபவி.

“அப்படியாகிருந்தாக்கூட பரவால்லையே…”

“அப்பறம்!?”

“இவ முடிய பிடிச்சு அவ இழுத்த கோவத்துல அவ ஜடைய பிடிச்சு நான் பதிலுக்கு இழுத்துட்டேன்”

“என்ன!!??”

“வாட்!!??” என்று இருவரும் இருவேறு விதமாய் அதிர்ந்தனர்.

“இதெல்லாம் விட கொடுமை என்ன தெரியுமா? இந்த எருமைக்காக என் லவ்வ தியாகம் பண்ணதக்கூட கன்சிடர் பண்ணாம உன்ட்ட நான் ஹெல்ப் கேட்டேனானு என் காதை பிடிச்சு திருகினா பாரு!!! வெறுத்துட்டு!!” என்ற டேவ்வின் தோளை ஆதரவாய் தட்டிக்கொடுத்த மனோ, “உன் வாழ்க்கைல இப்படியொரு சோகமிருக்கும்னு நான் எதிர்ப்பார்க்கவேயில்ல…”

“என்ன நக்கலா??”

“அடேய் சீரியஸாதான் சொல்றேன்…”

“அவ்ளோ சோகமெல்லாம் ஒன்னுமில்ல… எனக்கும் அவள அடுத்து பிடிக்காம போயிடுச்சு…”

“அதுக்கடுத்து?” – சுகா

“அடுத்தா?? நான் என்ன கதையா சொல்றேன்? என்னைக்கு ஸ்கூல்ல முதல் தடவ உங்க அக்கா பக்கத்துல உக்காந்தேனோ… அன்னைல இருந்தே நான் முரட்டு சிங்கிள்டா!! அதெப்படி எனக்கு பிடிச்சவங்களா தேடிப்பாத்து சண்டை போடுவாளோ…” என்று முடித்திருக்கவில்லை அவன் காதை திருகியவளோ,

“நான் அந்த மோனாக்கிட்ட எப்போ சண்டைப்போட்டேன்??”

“ஆ… அவளதான் எனக்கு பிடிக்கவேயில்லையே…”

“அப்போ சண்டை போடலாம்ற…”

“இல்ல இல்ல…” என்று பதறியதில் அனைவரும் அவனை ஒரு மாதிரி பார்க்க வைபவியோ

“என்னை பாத்தா சண்டைக்கோழி மாதிரியா தெரியுது?”

“இல்லையாபின்ன?…ஆ…. காதை விடு பக்கி!!”

அவர்களது அரட்டையும் நீண்டுக்கொண்டே சென்றது. ஒருகட்டத்தில் சுகா பீம்பாகில் படுத்தவாரே உறங்கிவிட மற்றவர்களும் அப்படியப்படியே உறங்கியிருந்தனர். நடுவில் விழித்த மனோதான் சுகாவின் கால்களை தூக்கி கட்டிலில் வைத்துவிட்டு வைபவிக்கு போர்த்திவிட அவனது அசைவில் விழித்த டேவ் “என்ன ஒரு ஓரவஞ்சனை!!” என்றுவிட்டு திரும்பி படுக்க

“டேய்!! இருடா.. ஒவ்வொருத்தருக்காதானே போர்த்த முடியும்” என்றுவிட்டு உள்ளிருந்து இன்னும் இரண்டு போர்வை எடுத்து வந்து சுகாக்கும் டேவ்க்கும் போர்த்திவிட ஏற்கனவே விழித்துவிட்டவன் இவன் போர்த்தியதில் மெல்ல முறுவலித்தான் கண்கள் திறவாமல். இவன் தூங்கிவிட்டான் என்றெண்ணிய மனோவோ லேசாய் இளையவனின் கேசம் கலைந்துவிட்டு வெளியேறினான்.

‘இப்படியிருக்க மனோதான் அன்னைக்கு எல்லா விரல்லையும் உடைச்சுட்டு வரலாம் வா!! என்று ஒற்றைக் காலில் நின்றான்’ என்று நினையவே டேவ்க்கு ஆச்சர்யமாய் இருந்தது.

அது நடந்து சில பல மாதங்கள் இருக்கும். இவர்கள் இண்ட்டர்ன்ஷிப் சேர்ந்த புதிது அது. இவர்களை கவனித்துக்கொள்ள வேண்டிய மனிதரின் பார்வை செயல் என எதுவும் இவனுக்கு சரியாய் படவில்லை! முதலிலேயே வைபாவிடம் சொல்லிவிட்டான் “அந்தாள் பாக்கறதே சரியில்ல வைபா…” என்று அவளோ அதற்கு அப்பொழுதொன்றும் பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை எப்பொழுதும்போல் “ஓ அப்படியா சரி” என்றதோடு சரி… அவனும் அதையே நோண்டாமல் விட்டுவிட்டான்… அவளுக்குத்தெரியுமென…

பிறகொரு நாள் இவன் விடுப்பெடுத்துவிட அன்று பார்த்து அந்த மனிதர் சொல்லித் தருகிறேன் பேர்வழியென வைபாவிடம் கண்ட இடத்தில் கை வைக்க… சற்றும் யோசியாமல் அவளது தோள்மேல் இருந்த அவரது கையை பற்றி அவரைப் பார்த்து புன்னகைத்தவாரே அவரது ஆட்காட்டி விரலை ஒடித்துவிட்டாள். அவர் வலியில் துடிப்பதை கண்டவள் அதற்குமேல் அங்கு ஒரு நொடிக்கூட தாமதியாமல் பையை தூக்கிக்கொண்டு அப்படியே நடந்துவிட்டாள்.

இங்கு டேவ்வின் அறையில்…
ஆழ் உறக்கத்தின் பிடியில் இருந்தவனை மீட்டெடுக்குமாறு ஒலித்த அழைபேசியை கடனேவென்று எடுத்துப் பார்த்தவன் அது வைபா என்று காட்டவும் அழைப்பை ஏற்று காதில் வைத்தான் ஒரு தூங்கிவழிந்த ஹலோவுடன்.

“தூங்கறியா?” என்றவளின் குரலில் அவனது மொத்த தூக்கமும் பறந்துவிட எழுந்து அமர்ந்தவன், “எங்க இருக்க நீ??” என்று கேட்டானே தவிர வேறெதுவும் கேட்கவில்லை.

“தர்ட் க்ராஸ்” அவ்வளவுதான்.. அவனுக்கு தேவையானது.

“இதோ வரேன்” என்று வைத்தவன் அப்படியே எழுந்து வாசலில் கிடந்த செருப்பை மாட்டிக்கொண்டு சைக்கிளில் பறந்தான் தர்ட் க்ராஸிற்கு.

பத்தடி தூரத்திலேயே அவளை அடையாளம் கண்டுவிட சைக்கிளை அப்படியே விட்டுவிட்டு அவளிடம் ஓடினான்.

“லூசு! இவ்வளவு தூரம் நடந்தேவா வர?” என்றவாரே

அவளோ இதழில் லேசாய் மலர்ந்தும் மலராத கலக்கப் புன்னகையை தேக்கியபடி, “விரல ஒடைச்சிட்டேன்” என்றாள்.

அவளையே ஒரு கணம் பார்த்தவன் பிறகு இறுக்கி அணைத்துக்கொண்டு “என்னாச்சு?? அந்த ராஸ்கல் எதாவது பண்ணானா?” என்க அவள் தலையசைப்பது புரிந்தது.

“எத்தனை விரல ஒடச்ச?”

“ஒன்னு”

“இரண்டா ஒடச்சிருக்கனும்!!”

“கேஸாகுமா ?”

“தி க்ரேட் பிரஸ்டன் எதுக்கு இருக்காரு?? அந்த ராஸ்கல் கம்ப்ளைண்ட் குடுப்பான்னா நினைக்கற?”

“குடுத்தா நாமதான் குடுக்கனும்…”

“எத்தனை தடவ சொல்றது என்னை விட்டுட்டு தனியா எதையும் செய்யாதேன்னு!!”

அவளிடம் பதிலே இல்லை…

“ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா?”

“எது?”

“பட்டர்ஸ்காட்ச்?” என்றதும் பட்டென விலகி அவன் கைபிடித்தவள் “எந்த பக்கம்? இங்கையா?? இல்லை இங்கையா?” என்க அவளை தடுத்தவனோ, “இரு என் சைக்கிள எடுத்துட்டு வரேன்… ஐஸ்கிரீம்ன ஒடனே ஐம்புலன்களும் அலர்ட்டாயிடுமே…” என்று போக அப்பொழுதே அவன் வந்திருந்த கோலத்தை கண்டவள்

“இப்படியேவா வந்த??” என்று அதிர அப்பொழுதுதான் அவனும் கவனித்தான். கருப்பு நிற ஷார்ட்ஸும் சிவப்பு நிற டீஷர்ட்டும் தூங்கியெழுந்த முகமும் கலைந்த கேசமுமாய் வந்திருந்தான். அவ்வளவு நேரம் ஒன்று உணராது நின்றவன் தனது கோலத்தை கண்ட பிறகு ஏனோ எல்லோரும் அவனையே பார்ப்பது போலிருக்க அதிலும் அவர்கள் வயதையொத்த பெண்கள் இருவர் அப்பக்கமாய் வரவே வேகமாய் வைபாவுக்கு இந்தப் பக்கம் வந்து நின்றுக்கொண்டான்.

“அவ நம்ம ஜூனியர் வைபா…” என்க அவளோ சிரிப்பை அடக்கிய குரலில்

“அதனாலென்ன?” என்றாள்

“கொஞ்சம் கோவாப்ரேட் பண்ணு பக்கி!! என்ர சீனியர் கெத்தெல்லாம் சொத்துனு போயிரும்…” என்க சிரிப்பை அடக்கியபடி அவளிடம் கையசைத்து சென்றவர்களுக்கு புன்னகைத்து “ஹாய்” என்று கையசைத்தாள். அவள் பின்னால் நின்றிருந்தவனோ, “அவங்களே சும்மா போனாலும் நீ விடமாட்ட போல!!” என்று அலுத்துக்கொள்ள அவளோ, “சும்மா இரு எரும… பதிலுக்கு கையாட்டின அத்தோட முடிஞ்சது…”

“இவங்க ஏன் இப்போ அனிமல் ப்ளானெட்ட பாக்கறாப்ள பாத்துட்டு போறாங்க…”

“யாருகண்டா… அவங்க கண்ணுக்கு நீ சூப்பர் மாடலா தெரியறீயோ என்னவோ…”

“ஓ…. ஓய்!!!!”

“அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம் சீக்கிரம் வா டேவ்… பார்லர மூடிரப்போறாங்க!!”

இன்றும் நினைவிலிருக்கிறது… அன்று வீடு சென்று விஷயமறிந்த பின் மனோவும் அதியும் எப்படி குதித்தார்களென… மனோதான் “வா இப்போவே போய் அவன் எல்லா விரலையும் ஒடச்சிட்டு வரலாம்” என்று நின்றதெல்லாம் இப்பொழுது நினைத்தாலும் அவனுக்கு சிரிப்பு வந்தது. இவர்கள் ஒரு புறமென்றால் பிரஸ்டனும் மெர்ஸியும் இன்னொருபுறம்!!

நினைவில் மூழ்கியவன் சற்று நேரத்திலெல்லாம் நித்திரையிலும் மூழ்கினான்.

இங்கு ஏர்போட்டில் தென்னலுக்காக காத்திருந்தான் மனோ. இவனை முதலில் கவனித்துவிட்டவள் வேக எட்டுக்களுடன் அவனை நெருங்கி ஒரு கையால் அவனை அணைத்து விடுவித்தாள்.

“எப்படி இருக்க மனோ?? வினி இசைலாம் எப்படியிருக்காங்க??”

“ஆல் ஃபைன் தென்னல்!! அங்க எல்லாரும் எப்படியிருக்காங்க?… அதுசரி போன வாரம்தானே வீடியோ கால் வந்த… அதுக்குட்டி வளர்ந்துட்டாள…”

என்று பேசியவாறே கிளம்பியவர்கள் இங்கு வீடு வந்தடைய அதிகாலையானது. இருள் பிரியா நேரத்தில் வீடு வந்து சேர கைகளை குளிருக்கு இதமாய் தேய்த்துக்கொண்டவள் மனோ கதவை திறக்க காத்திருந்தாள். மனோவிடமும் ஒரு சாவியிருந்தது காலையில் அவன் வெளியே செல்ல வேண்டும் என்பதை அறிந்து மேகாதான் அவனிடம் ஒன்றை கொடுத்து வைத்திருந்தாள். சத்தமெழாதவாறு கதவை திறந்தவன் இதழ் மேல் விரல் வைத்து அமைதி என்று சைகை செய்தவாறே உள்நுழைய அவனை பின் தொடர்ந்தாள் தென்னல்.

“எல்லாரும் எங்க?” – தென்னல்

“எல்லாரும் செல்லம்மா ரூம்லதான் இருக்காங்க தென்னல்… நீயும் வந்து ஃப்ரெஷாகு… நான் எல்லாருக்கும் காபி கலக்கறேன்…” என்றவன் வைபவியின் அறை கதவை திறக்க உள்ளே அனைவரும் இருந்த கோலத்தை கண்டு தென்னலுக்கு சிரிப்புதான் வந்தது.

சுகா பீம் பாகிலிருந்து கீழ்பக்கமாய் சரிந்து அதற்குமேல் கையையும் காலையும் போட்டு அதை கட்டிக்கொண்டு படுத்திருக்க வைபவி மனோ போர்த்திவிட்டு சென்றிருந்த போர்வையை கீழே தள்ளிவிட்டு பெட்ஷீட்டை இழுத்து போர்த்தியிருந்தாள் என்றால் டேவ்வோ ஒரு காலை மட்டும் தூக்கி மனோ முன்பு அமர்ந்திருந்த சேரில் வைத்து கைகளை தலைக்கு மேல் தூக்கியபடி படுத்திருந்தான்.
“என்ன மனோ இது?” என்று சிரிப்பை அடக்கிய குரலில் கேட்டவளிடம்

“நீ நேத்து பாத்துருக்கனும்…” என்றவாரே குளியலறையினுள் நுழைந்தான் கீஸர் போடவென…

இங்கோ வைபவியின் ஃபோன் “மொத்தத்தில் எல்லாம் கண்ணுலதான் தம்பி… பூலோகம் முங்கும் அன்புலதான் பொங்கி…” என்று பாடத் துவங்கியது. அது அவள் வைத்திருந்த அலாரம்தான். ஆனால் அதையே மறந்தவளாக கைகளை காற்றில் அசைத்தபடி “சுகா… அதை ஆஃப் பண்ணு…” என்றுவிட்டு அவள் திரும்பி படுக்க அது ஒரு ரௌண்ட் முடிந்து மறுபடியும் இரண்டாவது ரௌண்ட் பாடத் துவங்க அவள் கண்களை திறக்காமல் படுத்திருந்தபடியே தேட கீழே இருந்த டேவ் அவள் கைகளுக்கு தட்டுப்பட அவனைப் பிடித்து உலுக்காத குறையாக “அதை ஆஃப் பண்ணு…” என்க

இவள் பிடித்து உலுக்கிய உலுக்கலில் பதறியடித்துக்கொண்டு எழுந்தமர்ந்தான் டேவ். ஒரு கணம் ஒன்றுமே புரியாமல் போக தலையை உலுக்கிக்கொண்டு மணியை பார்க்க அது ஐந்து என்றதுதான் தாமதம் வைபவியை பிடித்து உலுக்கியவன், “ஏ… எழுந்துரு!! மணியாச்சு!!” என்று கத்த அவனது கத்தலில் பதறியெழுந்தவள் அப்பொழுதுதான் அங்கு நின்று அவர்களையே வேடிக்கைப் பார்த்திருந்த தென்னலைப் பார்த்தாள். மறுகணமே, “ஹே!! தேன்ஸ்” என்றோடி அவளை கட்டிக்கொள்ள அப்பொழுதே அவளை கவனித்த டேவ்வும் வைபவியைபோலவே ஓடி வந்து கட்டிக்கொண்டான்,

“எப்போ வந்த தேன்ஸ்??” என்றவாறே.

தன்னை கட்டிக்கொண்டு நிற்கும் இளையவர்களைக் கண்டவள் அவர்கள் இருவரையும் சேர்த்தே அணைத்துக்கொண்டாள்.

“இப்போதான்… அதுசரி என்னடா பண்றீங்க ரெண்டு பேரும்??”

“ஹா ஹா நேத்து அசதி தேன்ஸ் அதான்…” என்று பேசிக்கொண்டிருக்க குளியலறையினுள் இருந்து வெளியில் வந்த மனோ “ஹப்பாடா!! எழுந்தாச்சா?? சுகாவையும் எழுப்பு நான் போய் காபி கொண்டு வரேன்…” அவன் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே கையில் பெரிய ட்ரேயுடன் உள்ளே நுழைந்தாள் மேகராகா.

“ஷ்ஷ்ஷ்!! ஏண்டா இப்படி சத்தம் போடறீங்க?? அப்பறம் அதி இப்போவே முழிச்சிக்கப் போறான்” என்று எச்சரித்தவாரே உள்ளே நுழைந்தவள் வைபவியை தவிர மற்ற அனைவருக்கும் காபியை கொடுத்துவிட்டு அவளுக்கு மட்டும் பால் தம்ளரை நீட்ட

“நீ இப்பவும் காபி டீ குடிக்கறதில்லையா?” – தென்னல்

“எப்பவாவது குடிப்பேன் தேன்ஸ்…” -வைபா

“பவிக்கு அந்த டேஸ்ட் அவ்வளவா பிடிக்கறதில்ல தென்னல்” இது மேகா

“ஆமா… குடிச்சா அன்னைக்கு முழுக்க ஒரு மாதிரி இருக்கு ஒரு மாதிரி இருக்குனு சொல்லிட்டே இருப்பா…” இது டேவ்

சற்று நேரத்திலெல்லாம் பிரஸ்டனும் மெர்ஸியும் லூனாவுடன் வந்துவிட வேலையனைத்தும் வேக வேகமாய் நடந்தது.

சரியாய் ஆறு மணிக்கு அதிரூபனின் தலைமாட்டிலிருந்த அலாரமடிக்க அதை அப்படியே அணைத்துவிட்டு இரு கைகளையும் தேய்த்துக்கொண்டு கண்களில் ஒரு முழு நிமிடம் வைத்துவிட்டு கண் திறந்தவனின் முன் அவன் படுக்கையை சுற்றி… மேகா, வைபா, சுகா, டேவ், பிரஸ்டன், லூனா, மெர்ஸி, மனோ, தென்னல் மட்டுமின்றி வீடியோ காலின் மூலம் பார்ஸிலோனாவில் விஜி வீட்டில் கடந்த ஆறு மாதங்களாய் இருக்கும் அகிலனும் அனுவும்கூட சேர்ந்து “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அதி!!!!” என்று கத்த அதிக்கோ அதீத ஆனந்தத்தில் அகம் நெகிழ்ந்து கண்கள் கலங்கிவிட்டதென்றால் அதற்கு நேர்மாறாய் முகம் கொள்ளா புன்னகையுடன் “லவ் யூ கைஸ்!!!!” என்றான் உள்ளார்ந்து. அதற்குமேல் அவனுக்கு வாரத்தையே வராததுபோல…

“நீ அப்படிலாம் எஸ்கேப்பாக முடியாது!! இன்னைக்கு ஃபுல்லா இந்த பர்த்டே பேபிதான் எங்க எண்டர்டெயின்மெண்ட்!!” – பிரஸ்டன்

“இதை நான் வழிமொழிகிறேன்!!” – வைபா

“நானும்!!” என்று வரிசையாய் சுகா மனோ டேவ் லூனாவென அனைவரும் ஒரே குரலில் சொல்ல அதற்கு பின் அங்கு சிரிப்பிற்கோ கொண்டாட்டத்திற்கோ குறைவில்லை!!

அன்றைய நாள் முழுதும் அவர்கள் அனைவரும் அங்குதானிருந்தனர். அன்று முழுக்க அரட்டை விளையாட்டென துளி துளியாய் அனுபவித்துக்கொண்டிருந்தனர். மாலை நேரத்தில் அதியை மொட்டைமாடிக்கு அழைத்துச்செல்ல அங்கு அழகாய் மேசையமைத்து சுற்றிலும் ஆங்காங்கே பலூன்கள் சிதறியிருக்க குட்டிகுட்டி சீரியல் விளக்குகளுடன் அந்த இடம் பார்க்கவே அத்தனை ரம்மியமாய் இருந்தது. நடுவில் உதய்யும் அமுதனும் அதுக்குட்டியும் வீடியோ காலில் வந்து இவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மெர்ஸியும் மேகாவும் பார்த்துப் பார்த்து தயார் செய்த கேக் அழகாய் இவனைப் பார்த்து புன்னகைத்தது.

அன்பெனும் முடிவிலியில் அவன் மனம் முடிச்சிட்டுக்கொண்டது..!!

கொண்டாட்டங்கள் முடிந்து ஒவ்வொன்றாய் ஒதுங்க வைத்தனர். முதலில் தென்னலும் மனோவும் அவளது ஃப்ளைட்டிற்காக கிளம்பிவிட பிறகு பிரஸ்டன் மெர்ஸி லூனாவுடன் டேவ்வும் சேர்ந்து கிளம்பிவிட்டான்.

எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு அறையினுள் நுழைந்த வைபவியின் கண்ணில் அசந்து உறங்கும் சுகாவே பட… அவளும் அமைதியாய் சென்று அவனருகில் படுத்துக்கொண்டாள்.

அப்படியும் இப்படியுமாய் புரண்டுபடுத்தவளுக்கு அப்பொழுதுதான் லூனா காலையில் இவளை பார்த்தவுடன் “ஏன் நேத்துல இருந்து ஆன்லைனே வரல??” என்று கேட்டது நினைவிலாடியது. சரியென ஃபோனை எடுத்து வாட்ஸாப்பை திறந்தவளின் முன் இப்பொழுதுமட்டும் டேவ் இருந்திருந்தால்….

அவள் முன் கண்சிமிட்டியபடி இருந்த அந்த வாட்ஸாப் க்ரூப்பையே வெறித்தவளுக்கு “டேவ்வ்வ்!!!!!” என்று அடிக்குரலில் அலறுவதை தவிர வேறெதுவும் தோணவில்லை…

காரணம் யாதெனில் “ R.I.P Crush” என்றப் பெயரில் க்ரூப் ஆரம்பித்திருந்தான் டேவ். உடனே அதன் மெம்பர்ஸ்களை பார்க்க அதில் அவர்களது மொத்த பட்டாளமும் இருந்தது. நேற்று அவனின் அதீத அன்பின் காரணம் புரிந்துவிட மறு நொடி அவனுக்கு அழைத்தாள்.

அப்பொழுதே படுக்கையில் டைவ் அடித்தவன் இவள் அழைக்கவும் அதை எடுக்க இவளோ சரம்சரமாய் தொங்கவிட அதை எதிர்ப்பார்த்திருந்தவனோ ஃபோனை ம்யூட்டில் போட்டுவிட்டு உறங்கிட கொஞ்ச நேரம் கழித்தே அந்தப் பக்கத்தின் அதீத அமைதியை உணர்ந்தவளுக்கு புரிந்துப்போனது… அவன் ம்யூட்டில் போட்டுவிட்டான் என…

“ம்யூட்லயா போடற!!!” என்று கறுவியவள் சற்று நேரத்தில் அவனுக்கொரு வாய்ஸ் நோட் அனுப்பினாள். திடீரென விழித்தவன் ஃபோனை பார்க்க கால் கட்டாகியிருந்தது… வாய்ஸ் நோட் என்று காட்ட அதை திறந்துப் பார்த்தவனுக்கு நெஞ்சுவெடிக்காதகுறைதான்!!

ஒருமணி நேரத்திற்கு அனுப்பியிருந்தாள்.. “மனுஷிய நீ!!” என்றவன் உள்ளம் அலற ஹெட்ஃபோனை போட்டு ஆன் செய்ய… காதுகளில் இருந்து ரத்தம் வராதக்குறை!! நாலே வார்த்தையை நாற்பது விதமாய் திருப்பிப்போட்டு திட்டியிருந்தாள். தூக்கம் மொத்தமும் கலைந்துவிட எழுந்து அமர்ந்தவன்… இவள!! இரு வரேன்…. என்று அவனும் டைப்ப தொடங்கினான்.

அதே சமயம் அதியின் அறையில்….
மேகா அறையினுள் நுழையும்பொழுது அதி சன்னல் அருகில் நின்று வானையே வெறித்திருந்தான்.

மெத்தையை சரி செய்தவாரே இவள், “என்ன அதி பண்ற?” என்றாள்

மேகாவை கையசைத்து அருகில் வருமாறு அழைத்தான் அவன், “மேக்ஸ் இங்க வாயேன்…” என்க கையிலிருந்த தலையணையை அப்படியே போட்டுவிட்டு அவனருகில் சென்றாளவள்.

“வானத்தை பாரேன்… இன்னைக்கு அதிகமும் இல்லாம… கம்மியாவும் இல்லாம… அங்கங்க நட்ச்சத்திரத்தோட… செமையா இருக்குல…” என்று ரசித்துரைக்க அவனருகே நின்றவள் அவன் தோள்மேல் கைவைத்து எக்கி நின்றுப் பார்க்க அவள் வதனத்திலும் அவ்வானின் சாயல்..!!

“ஆமா… அதி” என்று ஆர்வமாய் பார்த்திருந்தவளையே அதி பார்த்திருந்தான்.

“மாடிக்கு போலாமா மேக்ஸ்?” என்றவனின் திடீர் கேள்வியில் விலகியவள் சாதாரணமாய் நின்று “ம்ம் போலாமே…” என்றுவிட வெளியேற எத்தனித்தவனை கைபிடித்து நிறுத்தினாள்.

“ஆனா அதுக்கு முன்ன இத போட்டுக்கோ…” என்றொரு ஸ்கார்ஃபை எடுத்து அவன் கழுத்தில் சுற்றியவள் தானும் ஒரு ஷாலை எடுத்துக்கொண்டு “இப்போ போலாம்” என்க இருவரும் மாடியேறினர்.

அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் வானை வெறித்தபடி அமர்ந்தனர்.

“கீழ விட இங்க இன்னும் அழகா இருக்கு அதி…” என்றவன் கை பற்றிக்கொள்ள அவனும் “ரொம்பவே…” என்றான் அதே ரசனையுடன் அவள் கரம் கோர்த்து.

“நினைச்சுக்கூட பார்க்கல மேக்ஸ் இன்னைக்கு இப்படியிருக்கும்னு…”

வானிலிருந்த பார்வையை அருகிலிருந்தவனிடம் திருப்பினாள்…

“இந்த உறவு இப்படிதான் இருக்கனும்னு எந்த விதியும் கிடையாது அதி… அது அவங்கவங்க தன்மைய பொருத்தது… உன்னோடான எங்ளோட உறவுல நீ அன்பைதான் அதிகம் உணர்த்தின… அதைதான் அந்தந்த உறவ இத்தனை காலாமாகியும் பிடிச்சு வச்சுருக்கு…” என்று எப்பொழுதும்போல் இப்பொழுதும் அவனுக்கொரு வினோத உணர்வை கொடுத்துவிட்டு வானத்தை வெறிக்கத் தொடங்கியவள் மறுபடியும்…

“நான் உன்ன முதல் தடவ பார்க்கும்போது இப்படிதான் ஃபீல் பண்ணேன்” என்றாள் வானை சுட்டிக்காட்டி

அவன் புரியாமல் விழிக்க “இதோ… இந்த வானத்தை பாக்கும்போது எப்படி ஃபீலாகுது…. கொஞ்சம் சில்லுனு… ஃப்ரெஷ்ஷா… ஸ்வீட்டா மெலடி மாதிரி… ஹா ஹா…” மெல்லிய சிரிப்பொன்றுடன் “யூ நோ? அன்னைக்கு நீ என்ன ட்ரெஸ் போட்றுந்தன்றவரை எனக்கு ஞாபகம் இருக்கு… வைட் ஷர்ட் பீஜ் பேண்ட்…”

“என்னைக்கு??”

“ஃபர்ஸ்ட் டே… அதாவது க்ளாஸெல்லாம் பிரிக்கறதுக்கு முன்ன ஒரு நாள் எல்லாரும் சேர்ந்திருந்தோமே… அன்னைக்கு… அன்னைக்கு நீ பாட்டுக்கூட பாடின… ஞாபகமில்லையா?”

அவனுக்கு சத்தியமாய் நினைவில் இல்லை…

“இல்லையே… என்ன பாடினேன்?” அவனும் ஆர்வமானான் இப்பொழுது.

“இது ஒரு பொன்மாலைப் பொழுது…”

“மேக்ஸ்??”

“சில பாட்டு நிறைய தடவை கடந்துருப்போம் இருந்தும் அவ்ளோவா கவனிச்சிருக்கமாட்டோம்… ஆனா அதே பாட்ட யாராவது பாடியோ… அதை பத்தி பேசியோ… அதுக்கடுத்து அதை கவனிப்போம்ல… எனக்கு அது அப்படிதான்! அன்னைக்கு நீ ரெண்டு லைன்தான் பாடினே… அதுக்குள்ள எல்லாரும் புது பாட்டு பாட சொல்லவும் வேற பாடின…”

“இப்போ பாடவா?”

“பாடறீயா?”

“ம்ம்”

“வானம் எனக்கொரு போதி மரம்…
நாளும் எனக்கது சேதி தரும்…
ஒரு நாள் உலகம் நீதி பெறும்…
திருநாள் நிகழும் தேதி வரும்…
கேள்விகளால், வேள்விகளை… நான் செய்தேன்…”

அவனது குரலொன்றும் அத்தனை வசீகரமானதோ இனிமையானதோ இல்லைதான்… இருந்தும் அது மட்டுமே அவளுள்ளம் தொட்டது..!!

அப்படியே அதியின் தோள்களில் சாய்ந்துக்கொண்டாள்… அவளுடனே அவளது மனமும்..!!

அவனிதழ்களில் காதலின் முறுவல்…
அது அவள் அவனவள் என்று நினைத்ததில் உதித்தது
அவள் அதியின் மேகமானவள்…

 

★★★ சுபம் ★★★

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!