லவ் ஆர் ஹேட் 06

eiBKU5076937-059ea8da

லவ் ஆர் ஹேட் 06

“பூனை பிடிக்கும் எலி… நீ என்னை கல்யாணம் பண்ணலன்னா நான் உன்னை வாங்குவேன் பழி…” என்று இந்திரன் எப்போதும் போல் வைஷ்ணவியை பார்த்து குறும்பாக சொல்ல,

அவன் பக்கத்திலிருந்த சந்திரனோ, “இப்படியே பேசிட்டு இருந்தேன்னா உன்னை வெட்டி நான் போட போறேன் பொலி… அப்றம் ஜெயில் அ சாப்பிடுவேன் களி…” என்று பதில் வசனத்தை கடுப்பாக சொல்ல, “சோதிக்காதீங்க டா என்னை! சோதிக்காதீங்க!” என்று வைஷ்ணவி தான் புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.

இவர்களின் கூத்தில் வைஷ்ணவியுடன் அமர்ந்திருந்த ரித்விக்கு தான் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவள் வாய்விட்டு சிரித்துக் கொண்டிருக்க, தூர இருந்து அதை பார்த்துக்கொண்டிருந்த சகுந்தலாவுக்கு தான் அத்தனை வயிற்றெரிச்சல்!

அவர்களுக்கருகில் வந்தவர், “ஏய்!” என்று ரித்வியை அழைக்க, ரித்வி உட்பட மற்ற மூவருமே அவரை கேள்வியாக பார்த்தனர்.

“எப்போ பாரு வீட்ல சும்மா இருந்து சாப்பிட வேண்டியது. போ போய் துணிய காய போடு! அவ்வளவு வேலை அங்க கிடக்குது. இங்க கெக்கபெக்கன்னு சிரிப்பு!” என்று சகுந்தலா ரித்வியை திட்டி விரட்ட, வைஷ்ணவியோ “அம்மா…” என்று கடிந்துக் கொண்டாள் என்றால், சகோதரர்கள் இருவரும் அவரை முறைத்துப் பார்த்தனர்.

ஏதோ யோசித்த இந்திரன் அவரை கேலியாக பார்த்து, “ஓஹோ! நம்ம கலெக்டர் சகுந்தலா அம்மாவோட ஆட்டோக்ராஃப் கேட்டு ஆஃபீஸ் வாசல்ல எத்தனை பயலுங்க நிக்கிறானுங்க. அவ்வளவு வேலை கிடக்கு! என்னை சோடாபுட்டி இது, புரிஞ்சி நடந்துக்க மாட்டியா?” என்று தீவிரமாக கேட்க, அவரோ அவனை முறைத்துப் பார்த்தார்.

சரியாக “ரித்வி…” என்றழைத்தவாறு வந்த ஆண்டாள் அங்கு நின்றிருந்த சகுந்தலாவை பார்த்து, “அன்னி, இன்னைக்கு தான் அந்த வேலைக்கார பொண்ணு வரலன்னு உங்கள கொஞ்சம் துணிய காய போடு சொன்னேன். அதை கூட பண்ணாம இங்க நின்னுகிட்டு வெட்டி கதை பேசிக்கிட்டு இருக்கீங்க. வேலை பார்க்குறதே ஆடைக்கு ஒரு காலம் கோடைக்கு ஒரு காலம்னு… அதுலேயும் இத்தனை களவு!” என்று திட்டிவிட, சகுந்தலாவுக்கோ மூக்கு அறுக்கப்பட்ட நிலை தான்.

ஆண்டாள் பேசியதில் இந்திரன், சந்திரன், வைஷ்ணவி மூவருமே சிரித்துவிட, ரித்விக்கு கூட லேசாக சிரிப்பு எட்டிப் பார்த்தது.

சகுந்தலாவோ ஆண்டாள் திட்டியதில் அவரை முறைத்து வாய்விட்டு முணங்க, ஆண்டாளோ அதையெல்லாம் கண்டுக்காது, “ரித்விமா, என்னால மாடிக்கு ஏற முடியல. முட்டி வலி அதிகமா இருக்கு. இந்த கோஃபிய கொண்டு போய் யாதவ்க்கு கொடுத்துடு ம்மா.” என்று சொல்லி தேநீர்குவளையை அவளின் கைகளில் திணிக்க,

“நானா…?” என்று ரித்வி அதிர்ந்து கேட்டாள் என்றால், “இவளா?” என்று பல்லைக்கடித்துக் கொண்டு கேட்டார் சகுந்தலா.

“இதுக்கு எதுக்கு இவ? நம்ம வீட்டு பொண்ணு எதுக்கு இருக்கா? என் பொண்ணு என்ன மாட்டேன்னா சொல்ல போறா?” என்று சகுந்தலா வைஷ்ணவியை அனுப்ப திட்டத்தை போட, “ஆத்தீ!” என்று பதறியவள், “அதெல்லாம் கொடுக்க மாட்டா.” என்று பட்டென்று சொல்ல, ‘விவரம் கெட்டவ!’ என்று தன் மகளை உள்ளுக்குள்ளே திட்டத் தான் முடிந்தது சகுந்தலாவால்!

“அத்தை, அது நான்…” என்று ரித்வி தடுமாற, அவரோ அவளின் மறுப்பை கண்டுக்காது கெஞ்சி, கொஞ்சி அவளை மாடிக்கு அனுப்பிவிட்டு அவரின் வேலையை பார்க்க சென்றுவிட, இவளுக்கு தான் கைகால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டது.

அறை வாசலுக்கு சென்றவள் அவளுக்கே கேட்காத குரலில், “ஹெலோ… ஹெலோ…” என்று அழைத்தவாறு மெதுவாக கதவை தட்ட, கதவோ தானாக திறந்துக் கொண்டது. அறைக்குள் எட்டிப்பார்த்து கண்களை சுழலவிட்டு ரித்வி யாதவ்வை தேட, அவன் இருந்தால் தானே!

‘எங்க காணோம்?’ என்று தனக்குள்ளே கேள்வியை கேட்டவாறு அறையை சுற்றி பார்த்துக்கொண்டே மெதுவாக உள்ளே சென்றவளுக்கு குளியலறையில் நீர் சத்தம் கேட்க, ‘ஹப்பாடா!’ என்று நிம்மதி பெருமூச்சுவிட்டவள், ‘அவர் வரதுக்குள்ள போயிரலாம்.’ என்று நினைத்து டீபாயின் மேல் குவளையை வைத்துவிட்டு வெளியேற எத்தனிக்க, சரியாக அவள் கண்ணில் சிக்கியது கட்டிலின் மேலிருந்த புத்தகம்.

அவளுக்கு பிடித்த அந்த ஒரு எழுத்தாளரின் புத்தகம் அது. ‘மீரா கிருஷ்ணனோட நாவல் ஆ?’ என்று உள்ளுக்குள் பரவசமடைந்தவள், ஓடிச்சென்று புத்தகத்தை கையிலெடுத்து, ‘வாவ்! இவருக்கு கூட இவங்களோட கதை பிடிக்குமா?எங்களுக்குள்ள இதுல கூட பொருத்தம் அள்ளுதே…’ என்று குஷியாக நினைத்தவாறு அதை புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த சிலநொடிகளில், “இங்க என்ன பண்ற?” என்று தனக்கு பின்னால் மிக அருகில் கேட்க குரலில் திடுக்கிட்டு திரும்பிய ரித்வி, தன்னை நெருங்கி நின்றிருந்தவனை பார்த்து பயந்து தடுமாறி விழப்போக, அவளின் இடையை வளைத்து விழாது பிடித்தான் அவன்.

காற்சட்டை மட்டும் அணிந்திருந்தவனின் வெற்று மார்பில் அவளின் விரல்கள் படர்ந்திருக்க, அவள் விழிகளோ அவனின் விழிகளை தான் இமையாது பார்த்துக் கொண்டிருந்தன.

அவளை புருவத்தை சுருக்கி ஆழ்ந்து நோக்கியவனுக்கு அவளின் கையிலிருந்த தன் புத்தகத்தை பார்த்ததும் கோபம் தாறுமாறாக எகிற, அடுத்தநொடி அவளை உதறித்தள்ளியவன் அவளை அறையாது விட்டது அவள் செய்த புண்ணியம் என்று தான் சொல்ல வேண்டும்.

அவன் உதறிய வேகத்தில் மீண்டும் தடுமாறி விழப்போனவளிள் மூக்குக் கண்ணாடி வேறு கீழே விழுந்துவிட, பயத்தில் எச்சிலை விழுங்கிக்கொண்டு யாதவ்வை மிரட்சியாக பார்த்தாள் அவள்!

“ஏய்! உன்னை யாரு உள்ள வர சொன்னா? மொதல்ல யாரு நீ? என் பொருள யாரு தொட்டாலும் எனக்கு பிடிக்காது. கண்ட கண்டவங்களுக்கு வீட்ல இடம் கொடுத்தா இப்படி தான். கெட் அவுட்!” என்று யாதவ் காட்டு கத்து கத்த, அவளுக்கோ பதட்டத்தில் கால்கள் கூட நகரவில்லை.

“சோ… சோரி…” என்று தடுமாறியபடி சொன்னவள் அவசரமாக தன் மூக்குக்கண்ணாடியை எடுத்துக்கொண்டு முட்டிக்கொண்டு நின்ற கண்ணீரை வெளிவர விடாது அடக்கிக்கொண்டு அறையிலிருந்து வெளியே ஓடிவிட, அவனோ போகும் அவளை பார்த்துவிட்டு கீழே விழுந்து கிடந்த தன் நாவலை எடுத்து யோசனையாக பார்த்தான்.

இங்கு அறைக்கதவை தாழிட்டு கதவில் சாய்ந்து நின்றவளின் கண்களில் அருவி போல் கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது.

‘எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால தானே அந்த புத்தகத்தை எடுத்தேன். அதுக்கு ஏன் இம்புட்டு கோபப்படுறாரு. நான் என்ன தப்பு பண்ணேன்? மாமா கூட என்னை இப்படி திட்டினது இல்லை.’ என்று அழுதவாறு மூக்குக்கண்ணாடியை கழட்டி கண்ணீரை அழுந்த துடைத்துக் கொண்டாள் ரித்வி.

அன்று மாலை பால்கெனியில் சிகரெட்டை புகைத்தவாறு யாதவ் நின்றிருக்க, கதவு தட்டப்படும் சத்தத்தில் திரும்பியவன் சிகரெட்டை பால்கனி வழியாக தூக்கி போட்டுவிட்டு சுவிங்கத்தை சப்பியவாறு வந்து கதவை திறக்க, எதிரே நின்றிருந்தான் அதிபன்.

“நீயா…” என்று சலித்தவாறு யாதவ் உள்ளே செல்ல, அவன் பின்னால் வந்த அதிபனுக்கோ சிகரெட்டின் புகையை நன்றாக உணர முடிந்தது.

“யாதவ், நீ சிகரெட் பிடிக்கிறது மட்டும் அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்.” என்று சிரிப்புடன் அவன் சொல்ல, “பிடிக்கலன்னா கீழே விழுந்திடுமே அதிபா!” என்று சொல்லி சிரித்துக்கொண்டு அறையிலிருந்த சோஃபாவில் யாதவ் அமர, “மொக்கை ஜோக்!” என்று சொல்லி சிரித்தவாறு அவனெதிரே அமர்ந்தான் அதிபன்.

சரியாக டீபாயின் மேலிருந்த மீரா கிருஷ்ணனின் நாவல் புத்தகத்தை புருவத்தை சுருக்கி பார்த்தவாறு எடுத்த அதிபன் புன்னகையுடன், “யாதவ், நீ கூட இவங்களோட நாவல் வாசிப்பியா என்ன? ரித்விக்கு கூட இவங்களோட நாவல் ரொம்ப பிடிக்கும்.” என்று சொல்ல, நெற்றியை ஒரு விரலால் நீவியவாறு, “ஆமா, அந்த ரித்விகா யாரு?” என்று இறுகிய குரலில் கேட்டான் யாதவ்.

“யாதவ், என்ன இப்படி கேக்குற? அதான் சொன்னேனே… நீ இங்கிருந்து  போன கொஞ்சநாள்ல அப்பா…” என்று ஆரம்பித்த அதிபனின் பேச்சை இடைவெட்டியவன், “ச்சே! நான் அதை கேக்கல. அந்த பொண்ணு யாருன்னு கேட்டேன். எங்கிருந்து அப்பா கூட்டிட்டு வந்தாரு? அவ ஏன் இத்தனை வருஷமா இங்க இருக்க?” என்று கேட்டான்.

அவனது கேள்வியில் உதட்டை பிதுக்கிய அதிபன், “தெரியாது.” என்று சொல்ல, “தெரியாதா?” என்று புருவத்தை நெறித்து கேட்ட யாதவ், “யாரு எவன்னே தெரியாத பொண்ண இத்தனை வருஷம் வீட்டுல வச்சிருக்கீங்களா? நீ என்ன முட்டாளா அதிபா? அப்பாக்கிட்ட அவ யாருன்னு கேக்கனும்னு கூட அறிவில்லையா? கூட இருக்குறவங்களையே இப்போ எல்லாம் நம்ப முடியாது. இதுல இந்த பொண்ண…” என்று நிறுத்தி,

“ஆமா, அந்த பொண்ணுக்கு உறவு எதுவும் இல்லைன்னா ஏதாச்சும் ஆசிரமத்துல சேர்க்க வேண்டியது தானே! எதுக்கு நம்ம வீட்டுக்கெல்லாம்? அப்பா தான் எமோஷனல் ஃபூல் மாதிரி நடந்துக்குறாங்கன்னா நீங்களும்…” என்று பேசிக்கொண்டே சென்றவனது வார்த்தை, “போதும் யாதவ்!” என்று அதிபனின் கத்தலில் அப்படியே நின்றது.

“உனக்கு ரித்விய பத்தி என்ன தெரியும்? அவ எனக்கு அம்மா மாதிரி. எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து அம்மாவ பார்த்த நியாபகமே இல்லை. அவ எப்போ நம்ம வீட்டுக்கு வந்தாளோ எனக்கு ஒரு அம்மாவாகிப் போனா யாதவ். ஆரம்பத்துல அப்பா அவ மேல பாசமா இருக்கும் போது அவ்வளவு ஜெலஸியா ஃபீல் பண்ணியிருக்கேன். ரித்வியோட பேச கூட மாட்டேன்.

ஆனா, இந்து சந்துக்கு அத்தை ஊட்டி விடுறதை பார்த்து நான் ஏங்குறதை கவனிச்சி எனக்கு ஊட்டி விட வருவா. என்னை விட இரண்டு வயசு சின்னவ. அத்தை, சித்தி அவங்க மூனு பேருக்கும் பண்றதை பார்த்து எனக்கும் பண்ணி விடுவா. என்னை ஒரு அம்மா மாதிரி பார்த்துக்கிட்டா அவள்!

ஒருத்தர பத்தி தெரியாம அவங்கள பத்தி தப்பா பேசுறது ரொம்ப தப்பு. அதுவும், என் அண்ணாவாவே இருந்தாலும் ரித்விய பத்தி தப்பா பேசுறதை என்னால ஏத்துக்க முடியாது.” என்று அதிபன் சொல்லி முடிக்க, அவன் சொன்னத்தை கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு சற்று பொறாமை கலந்த கோபம் வரத்தான் செய்தது.

கூடவே அவன் நினைத்தது போன்று ரித்விக்கும் அதிபனுக்குமான உறவானது இல்லை என்பதும் புரிந்து போக, “ஓ…” என்று மட்டும் சொல்லிவிட்டு அவன் அமைதியாகி விட,

“சோரி யாதவ், ரித்விய பத்தி அப்படி சொன்னதும் கோபம் வந்திருச்சி. அத்தை தான் எப்போ பாரு அவள திட்டிட்டே இருப்பாங்க. பாவம் அவள்! அப்பா, அம்மா இல்லை. அவளுக்கு எல்லாமே நாங்க தான். அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சி கொடுக்கனும்னு தான் அப்பாவோட ஆசையே…” என்ற அதிபன் ஏதோ யோசித்து, “ஆனா, அந்த ஆரனோட பார்வை கொஞ்சநாளா ரித்வி மேல இருக்கு. நானும் பல தடவை கவனிச்சிட்டேன். அவனுக்கு இருக்கு! நம்ம வீட்ட பொண்ணுங்ககிட்ட வாலாட்ட விட கூடாது.” என்று தீவிரமாக சொன்னான்.

புருவத்தை நெறித்த யாதவ், “வட் டிட் யூ சே? அவன் இவள லவ் பண்றானா என்ன?” என்று சந்தேகமாக கேட்க, “இருக்கலாம்.” என்று தோளை குலுக்கிய அதிபன், “அவனோட பார்வை அப்படி தான் இருக்கு. காதலோ? ஈர்ப்போ? வட்எவர், ரித்விய அவன் நெருங்காம பார்த்துக்கனும்.” என்றுவிட்டு வெளியேற, இங்கு யாதவ்வின் இதழ்களோ கேலியாக வளைந்தன.

அதேசமயம்,

யாதவ் திட்டியதை நினைத்து அழுது கரைந்தவள், தோட்டத்திற்கு சென்று பூக்களை சோகமாக பார்த்தவாறு நின்றிருக்க, “ரித்வி…” என்ற மஹாதேவனின் குரலில் அதிர்ந்தவள் முயன்று தன் முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு திரும்பி, “மாமா…” என்று புன்னகைக்க, அவளின் சிவந்த முகமும், வீங்கிய கண்களுமே அவள் அழுததை அப்பட்டமாக காட்டிக் கொடுத்தது.

அதில் பதறியவர், “என்னாச்சு ம்மா? ஏன் முகம் சிவந்திருக்கு?” என்று பதட்டமாக கேட்க, “அச்சோ மாமா! அம்மா அப்பா நியாபகம் அதான்… வேறெதும் இல்லை.” என்று சமாளித்தவளுக்கு ஏனோ நடந்ததை சொல்ல தோணவில்லை.

அவளின் தலையை வாஞ்சையுடன் வருடி, “இப்போ மட்டும் உன் அப்பா இருந்திருந்தா தினமும் என்கிட்ட உன் கல்யாணத்தை பத்தி தான் புலம்பி தள்ளியிருப்பான்.” என்று சொன்னவருக்கு தன் நண்பனின் நினைவில் குரல் தானாக தழுதழுத்தது.

அவளுக்கு கூட கண்கள் கலங்கிப்போக, “அதை விடுமா, உன் மனசு மாதிரியே ஒரு நல்ல பையன் உன் துணையா அமைவான்.” என்றவரின் மனதில் எப்போதும் போல் தன் மகன் தோன்ற, “என் பையன் வந்ததும் தான் மனசே நிறைஞ்சி போயிருக்கு ரித்விமா, உனக்கொன்னு தெரியுமா? வெளிநாட்டுல பெரிய கம்பனில வேலை பார்த்துக்கிட்டு இருந்தான். கொஞ்சம் கோபக்காரன் தான் ஆனா, ரொம்ப நல்லவன். அம்புட்டு திறமையும் கூட…” என்று பேசிக்கொண்டே போனார்.

அவளுக்கோ அவர் யாதவ்வை பற்றி பேசியதும் மீண்டும் சற்று நேரத்திற்கு முன் நடந்தது நியாபகத்திற்கு வர, எதுவும் பேசாது முகத்தை தொங்க போட்டவாறு அமைதியாக நின்றிருந்தாள்.

தன் மகனுடனான ரித்வியின் திருமணத்தை பற்றிய யோசனையில் மூழ்கியவருக்கு தன் மனதின் எண்ணத்தை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. அவளை ஆழ்ந்து நோக்கியவர், “என்ன மா அமைதியாகிட்ட?” என்று கேட்க, “அதெல்லாம் ஒன்னுஇல்ல மாமா, அது வந்து… நாளைக்கு ரவி மாமா மகள் கவிதாவுக்கு நிச்சயதார்த்தம். நான் போகவா?” என்று கேட்டாள் ரித்வி.

“என்கிட்ட எதுக்கு டா கேட்டுகிட்டு? உன் விருப்பம்.” என்ற மஹாதேவன் ஏதோ யோசித்து, “ரித்விமா, தேவகி வீட்டு பையன் உன்கிட்ட ஏதாச்சும் வம்பிழுக்குறானா?” என்று கேட்க, அதிர்ந்து விழித்தவள், “அப்படி எல்லாம் இல்லையே மாமா.” என்று பதறியபடி சொன்னாள்.

“அது… நீ அந்த பையன் கூட அவங்க தோப்புல பேசிக்கிட்டு இருந்ததா முருகேசன் என்கிட்ட சொன்னான். அதான் ஏதாச்சும் பிரச்சினை பண்றானான்னு கேட்டேன்.” என்று அவர் சொல்ல,

‘அவன் தான் அந்த ப்ளக் ஷீப் ஆ? இருடா உன்னை வச்சிக்கிறேன்.’ என்று தன் மாமாவிடம் போட்டுக் கொடுத்த அந்த ஆளை மனதில் வறுத்தெடுத்தவள், “அப்படி எதுவும் இல்லை. நான் உங்க வீட்டு பொண்ணு மாமா. என்கிட்ட வம்பிழுக்க முடியுமா? வம்பிழுத்தாலும் நம்ம வீட்டு பசங்க சும்மா விட்டுடுவாங்களா என்ன?” என்று பேசி சமாளித்தாள்.

அவரும் தலையசைப்புடன் அங்கிருந்து நகர, ‘ஸப்பாஹ்…’ என்று பெருமூச்சுவிட்டவாறு சலித்துக் கொண்டாள் ரித்வி.

-ஷேஹா ஸகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!