அத்தியாயம் -16

1653401117018-6805dc96

 

 

Epi16

 

கணவன் மனைவிக்கு இடையே ஏதோ ஓரிரு வார்த்தைகள் பகிர்ந்து சிறு நட்பொன்று இளையோடி இருக்க அதுவும் அன்று ஆலையில் நடந்த பேச்சோடு நின்று போனது.

‘என்னதான் செய்ய?’அவனை தனக்கானவனாய் உரிமைகொண்ட பிறகும் அதன் உரிமை தனக்கு கிடைக்க என்ன செய்ய புரியா நிலை அதிதிக்கு.

 

‘இதுதான் இனி தனக்கான வாழ்க்கை. நான் திடமாக முடிவெடுத்து தானே மணம் முடித்தேன். இப்போதும் இப்படி நடந்துகொள்வதில் எவ்வித நலனும் இல்லை.’

திருமணம் நிகழ முன்னமே அவள் கூறியவை நினைவு கூர்ந்தவன் அன்று ஆலையில் அவள் மனதை நோகடித்தமை எண்ணி மிகவும் நொந்துக் கொண்டான். அவளிடம் எத்தனையோ முறை பேச முயற்ச்சித்தும் அவன் இருக்கும் திசையை பார்ப்பதாயில்லை அவளும்.

 

ஆலையில் இருவருக்குமிடையே உண்டான வார்த்தையாடல் முடிந்து இரண்டு வாரங்கள் கடந்து போயிருந்தன. திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் முடிந்திருந்தது.

 

செல்வநாயகம் பலமுறை அழைத்த போதிலும் தங்கிவிட்டு வரும் அளவில் இருவருக்குமே விடுமுறை இருக்கவில்லை. இந்தவாரம் இருவருக்கும் சேர்ந்தாற்போல மூன்று நாட்கள் கிடைக்க செல்வநாயகம் வந்தே ஆகவேண்டும் என்று விட்டார். நண்பியையும் பார்க்கும் ஆவலில் ரேவதியிடம் கூறி அவளுக்கு பிடித்த உணவுகளையும் செய்து எடுத்துக்கொண்டவள், மூவருமாக கிளம்பினார்கள். ரேவதி மறுத்த போதும் தனியே அவரை விட்டுச் செல்ல மனமின்றி அவளுடன் அழைத்துச் சென்றாள்.

தீபாவுக்கும் சிறுவயது முதலே தாய் பாசம் இல்லாதிருக்க ரேவதியோடு ஒன்றிக்கொண்டாள். அதுவும் ஆதிரையனோடு உரிமையாய் மாமா என பேசவும் செய்தாள். இதில் அதிதிக்கு அவர்களின் உறவு இன்னும் நெருங்கிப்போனது.

 

வண்டியில் ஆதிரையன் அருகே அமர்ந்தவள், அவன் பக்கம் திரும்பினாள் இல்லை. அவ்வப்போது ரேவதியிடம் பேசிக்கொண்டு மட்டுமே வந்தாள்.

 

‘பக்கத்துல ஒருத்தன் இருக்கான்னு மதிக்குறாளா, தூரமா நின்னு முழுங்குற அளவுக்கு பார்க்க வேண்டியது, பக்கத்துல வந்தா மரம் போலவே மாறிப் போறா. இவளை…’

 

மனதுக்குள் மட்டுமே திட்டிக்கொள்ள முடிந்தது கணவனால்.இவர்கள் வந்து சேரந்த நேரமும் மதிய உணவு நேரமும் சரியாக இருந்தது. சுமனும் வீட்டில் இருக்க விருந்து சிறப்பாகவே ஏற்பாடு பண்ணியிருந்தாள் தீபா. தோழியோடு அவள் நலம் கேட்டு அவளுடனே அவள் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தாள்.

 

உண்ட களைப்போடு, பயணித்த களைப்பும் தீர ரேவதிக்கு அறையை ஒதுக்கிக்கொடுத்தவள்

“அதி,மாமாவை ரூம்க்கு கூட்டிட்டு போ. எவ்ளோ நேரந்தான் ஹால்லயே உட்கார்ந்து இருப்பாங்க.”

தீபா கூற,அதிதி அவளை பார்த்தாள். வந்ததுமே அவளோடு தனியே பேசவேண்டும் என்று கூறியிருந்தாள் அதிதி.

 

“அதி, நாம நைட் ப்ரீயா பேசலாம். இப்போ அவங்களை உள்ள அழைச்சிட்டுப்போ.”

 

“சுமன் இங்க கொஞ்சம் வரீங்களா?”

என தன் கணவனை அழைக்க அவனும் எழுந்துக்கொண்டு,

 

 “உள்ள போய் ரெஸ்ட் பண்ணுங்க ஆதி. டையார்டா இருக்கீங்க.அப்றம் பார்க்கலாம்.” என அவனும் அவனறைக்குச் சென்றான்.

 

ஆதிரையனும் அதிதியின் பின்னே செல்ல அறையிலிருந்து மீண்டும் வெளியே வந்த தீபா,

“அதி, உனக்கு எப்போவும் வர லெட்டர் லாஸ்ட் மந்த் வந்துது. உன் டேபள் ட்ராயர்ல இருக்கு.கால் பண்றப்ப சொல்ல மறந்துட்டேன். “

 

அதிர்ச்சியானவள்,அவளை முறைத்துவிட்டு திரும்ப இவளையே ஆதிரையன் பார்திருப்பதைக் கண்டு கொண்டாள். முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு அதை கணக்கில் எடுக்காதவளாய் அவனை அறைக்கு அழைத்துச் சென்றாள்.

“நீங்க ரெஸ்ட் பண்ணுங்க.” கூறியவள் அறைவிட்டு வெளியே செல்லப்பார்க்க,

 

“அதி,உன்கூட பேசணும். இப்போவாவது கொஞ்ச நேரம் என்கூட இருக்கலாமே.”

 

அவன் முகம் பார்த்தாள் அதிதி.

“அன்னிக்கு அப்படி பேசியிருக்க கூடாது அதி.ஏதோ நான் அப்போ இருந்த மன நிலைக்கு…”

 

“பரவால்ல விடுங்க. அது பற்றி பேச வேணாம். நிம்மதியா உங்க விருப்பப்படி உங்களுக்கு பிடுச்சு பண்ணுன மொத்தம் பிடிக்காமல் போய், பிடிக்காதது மட்டுமே உங்களை சுற்றி நடக்கும் போது மனசு அப்படித்தானே இருக்கும்.”

 

“அப்படியெல்லாம் எதுவும் இல்ல அதி. அப்போ ஏதோ வேற மைண்ட்ல அதான். “

 

“இல்லங்க. நாந்தான் தப்பு பண்ணிட்டேன். எனக்கு புரிது. இன்னிக்கு செல்வாப்பா கூடவும் அது பற்றி பேசலாம்னுதான் இருக்கேன். உங்களுக்கு உங்க வாழ்க்கை நிம்மதியா உங்க விருப்பப்படி அமைச்சுக்க என்னால எந்த இடையூறும் இருக்காது இனிமேல். நீங்க என்ன முடிவெடுத்தாலும் நான் சந்தோஷமா ஏத்துக்குறேன். உங்கம்மாகிட்ட எதுவும் சொல்லிக்காதீங்க. எனக்காக எப்போவும் நீங்க யோசிக்க வேண்டாம். நானே பலவந்தமா உங்க வாழ்க்கைல நுழைஞ்சிட்டேன்னு ரொம்ப கஷ்டமா இருக்கு. உங்கப்பா பண்ணுனதுக்கு உங்களை பழிவாங்கிட்டேன்னு நீங்க நினைச்சுட்டுட்டீங்கலோன்னு இருக்கு.”

 

அவள் பேசப் பேச மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு மேசையில் சாய்ந்து நின்றிருந்தவன் அவளையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். அவள் பேச்சுக்கும் முகம் கொண்டிருந்த வருத்தத்திற்கும் சம்பந்தமே இருக்கவில்லை.அவன் எதுவோ பேசப்போக தடுத்தவள்,

 

அவன் மார் சாய்ந்து’ என்னை விட்டு போறேன் சொல்லாதீங்க கவிஞரே…’

என கதற துடித்த மனதை கடினப்பட்டு அடக்க அதுவோ எத்தனை முயன்றும் இமைப்பீலி வழியே வழிந்தது. கண்ணீரை துடைத்துக்கொண்டு அறைவிட்டு வெளியேறிவிட யோசனையோடு கட்டிலில் சாய்ந்துக்கொண்டான் இவன்.

 

வெளியில் வந்தவள் மெல்லமாய் மாடியேறி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து மழைக்கு திரண்டு வரும் மேகங்களை பார்த்து தன் மனவலியை அமைதிப் படுத்திக் கொண்டிருந்தாள்.

 

திடீரென ஞாபகம் வந்தவளாய், ‘கடிதம் வந்ததாக சொன்னாளே. இதுக்கப்புறம் அனுப்பமாட்டேன்னு அன்னைக்கு சொன்னாங்களே. எப்போ அனுப்பினாங்க?’

 

கண்ணோடு கன்னத்தையும் சேர்த்து அழுந்த துடைத்துக்கொண்டு எழுந்தவள்,கீழிறங்கி அறையை எட்டிப்பார்த்தாள். ஆதிரையன் கையொன்றை நெற்றிக்கு மறைத்து சாய்ந்து படுத்திருந்தான்.மெதுவாக உள்ளே வந்தவள், மேசை ட்ராயரில் திறந்து பார்க்க அதில் அவன் எப்போதும் அனுப்பும் வண்ணக்கடித உறை இருந்தது. அதிலிருந்த புத்தகமொன்றினுள் அதை வைத்தவள் புத்தகத்தை எடுப்பது போலவே வெளியில் எடுத்தாள். அதை மூடும் பொழுது எழுந்த சத்தத்தில் ஆதிரையன் என்னவென்று பார்க்க விழித்த இவளோ,

“இல்ல புக் எடுக்கலாம்னு. சாரி சத்தம் போட்டு எழுப்பிட்டேன்.” எனக் கூறினாள்.

 

“நான் தூங்கல சும்மாதான் சாஞ்சிருக்கேன். நீ இங்க இருந்தே படி வெளில போகவேணாம். “

 

‘ஐயோ! இங்க இருந்து எப்படி படிப்பேன்?’

 

“இல்ல மாடில இருக்கேன். எதுவும் வேணும்னா கால் பண்ணுங்க வரேன்.” எனக் கூறியவள் கடிதம் படிக்க வேண்டிய தேவையில் அவன் பதிலும் எதிர்பார்க்காது சென்றுவிட்டாள்.

 

மாடியேறி வந்தவளுக்கோ அதில் என்ன இருக்கும் என்று மனதில் ஓடிய பதற்றத்தை போக்க மெதுவாக பிரித்தாள்.

அறையில் சாய்ந்து அமர்ந்திருந்தவனோ, ‘என்ன முடிவு வேணும்னாலும் எடுக்க சொல்றா. உன்னை விட்டு போக முடிவெடுக்கணும்னு நினைக்குறியா அதி?’ மனதில் கடந்த இருவாரங்களுக்கு முன் அவன் தீக்கு அனுப்பிய மடலை நினைவு கூர்ந்தான்.

 

அன்பின் தீக்கு…

நலம் அறிய ஆவலாய் இருந்தும் இம்மடலுக்கு பதில் எதிர் பார்க்காதவனாய்…

இறுதியாய் உனை சேர்ந்த மடல் என் நிலை உனக்கு உணர்த்தியிருக்கும் உணர்கிறேன் நானும்.

உன் மனம் அறிந்த என் மனதை நீயும் மிகை அறிந்திருப்பாய். எதிர்பார்ப்புகள் மிகை ஏமாற்றத்தையே எமக்கு கொண்டு சேர்க்கும். முகம் பாரா அகம் நிறைய நிறைவாய் படித்தோம்.

நிறைவான பந்தமாய் தொடரட்டும் என்று நினைக்க இடையே எனக்கும் என் தந்தை விட்டுச்சென்ற பந்தம் ஒன்றை தொடர வேண்டிய நிலை.

பொய் கூற விரும்பவில்லை. சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொண்டேன். ஆனாலும் பிடிக்காது இணையவில்லை. இப்போது முழு மனதாய் என்னால் பிணைந்திடவும் முடியவில்லை.

ஆனாலும் இதுவே என் வாழ்க்கை. விரும்பி வாழவேண்டும் என நினைக்கிறேன். பலநேரங்களில் உன் விம்பம் எனை ஆள அவள் மனதினை மிகையாய் காயப்படுத்தியும் விட்டேன்.

 

அவளை சிறு மழலை முதல் கை ஏந்தி பார்த்துக்கொண்டவனாம். ஞாபகங்கள் கொஞ்சமாய் உண்டு அவள் நினைவாய் அவள் கால் சலங்கை கூட என்னிடம் உண்டு. ஆனாலும் சொல்லத் தெரியவில்லை தீ. அதுவெல்லாம் காலத்தோடு மறந்தே போயிருந்தேன்.

ஆனால் சில நிகழ்வுகள் மேகமாய் வந்து போகிறன்றது.

மிகையாய் இழந்திருப்பாள் போல. அதை மீட்டுக்குடுக்க முடியுமா தெரியாது. ஆனால் அதை நினைவு வராது வாழவேண்டும் என்று நினைக்கிறேன்.

 

கண்டிப்பாக நம் சந்திப்பு நிகழ்ந்திருக்குமேயானால் என்னால் இந்த முடிவு எடுத்திருக்க முடிந்திருக்காது. உன் மனம் காயப்பபட்டிருக்கும் நன்கு நானும் அறிவேன். ஆனாலும் கடந்து வரலாம். எனக்காய் அவளுக்காய் நமக்காய் வாழ நினைக்கிறேன்…

 

எனை பொறுத்துகொள்வாயா?

 

என் தமிழ் தீண்டி அதில் எனை தீட்டி ஒளிரவைத்த தீ நீ..

 

விளக்காய் எப்போதும் என் இருளுக்கு துணையிருப்பாய்…

 

நானும் உனக்காய் அதுவாகவே…

நேசங்களுடன்,

உன் கவிஞன்…

****

கடிதத்தை படித்து முடிக்க அணையுடைத்து வந்தது அழுகை அதிதிக்கு. நெஞ்சோடு அணைத்துக்கொண்டு பெருங்கேவலோடு அழுது தீர்த்தாள்.

 

‘கவிஞரே…கவிஞரே… என வாய் ஓயாது ஓத,

‘எனக்கு நீங்கதான் வேணும். எனக்கு என் பக்கத்து வீட்டு பையன் வேணாம், என்னை சின்ன பிள்ளையாய் இருக்க பார்த்துக்கொண்ட தோழனாய் வேண்டாம், அப்பா மரியாதையை காப்பாற்ற எனை கரம் பிடித்தவனாய் வேண்டாம், எனை கருணைக்காய் திருமணம் பண்ணினவன் வேண்டாம்,

எனக்கு… எனக்கு…என்னையாருன்னே தெரியாம என் மனசை நேசிச்சவங்க தான் வேணும்.

எனக்கு… எனக்கு… என் கவிஞர் தான் வேணும்… ‘

 

அப்படியொரு அழுகை அதிதிக்கு. தீயை ஏமாற்றிவிட்டோமோ என்ற குற்ற உணர்வில் அவன் மனம் தன்னை ஏற்க முடியாமலும், தன்னிடம் பகிர முடியாமலும் உள்ளுக்குள் அவன் கொள்ளும் அவஸ்தையை உணர முடிந்தது.

 

‘கடிதம் அனுப்ப மாட்டேன்.’என்றவன் மீண்டும் அனுப்பியிருக்கிறான் என்றால் எத்தனை ஆறுதல் தேடியிருப்பான். தன் மனதை யாரிடமாவது பகிர நினைத்துதானே இப்படி எழுதி வைத்திருக்கிறான்.’

 

அவனை இப்போதே கீழே சென்று அள்ளி அணைத்து அவள் தான் அதிதி என கூறவேண்டும் என மனம் தவித்தது.

ஆனால்…?

 

‘அவன் என்ன சொல்வான்?’அவன் மனதை இத்தனை வருத்தியதற்கு என்னை வேண்டாம் என்று சொல்லிடுவானா?

நாந்தான் தீயென்றால் இன்னுமே குற்ற உணர்ச்சியில் தவிப்பானா? கடவுளே என்ன பண்ணட்டும்?’ வாய்விட்டே புலம்ப இவளைக் காணவில்லை என தன் வயிற்றை தூக்கிக்கொண்டு மாடியேறிய தீபா கண்டது அழுதுகொண்டிருக்கும் அதிதியைத்தான்.

 

“அதி என்னாச்சு?” கேட்டுக்கொண்டே அவள் அருகே அமர,

“என்னால முடில தீபா.” அவளைக் கட்டிக்கொண்டு கேவினாள்.

சிறிதுநேரம் அப்படியே அவளை விட்டு முதுகை மட்டும் வருடிக்கொடுத்தாள் தீபா.

 

“இப்போவாவது என்னனு சொல்லு அதி. “

 

தீபாவின் கையில் திணித்தாள் தன் கையில் இருந்த கடிதத்தினை. அதை படித்த தீபா ஓரளவு புரிந்தும் கொண்டாள்.

 

“அதி,ரெண்டு பேரும் ஏதோ தமிழ் சம்பந்தமா நட்பா இருக்கீங்கன்னு தான் நினச்சேன். எத்தனை வருட நட்பு. காலேஜ் ஆரம்பிக்குறப்ப இருந்தேல்ல.ஆனா ரெண்டு பேருமே இப்படி மனசுக்குள்ள வச்சுட்டு சொல்லிக்காமலே ரெண்டுபேரும் ரெண்டு வாழ்க்கைக்கு வாக்கப்பட்டாச்சு. இப்போ என்னதான் பண்றது.”

 

“நீ இன்னும் அவங்களையே நினைச்சுட்டு இருக்கியா? அது தப்பில்லையா?”

 

“தீபா, இந்த கடிதம் போடறவங்களும், ஆதியும் ஒருத்தங்கதான்.”

 

“ஹேய்! என்ன சொல்ற நீ. அப்போ எவ்ளோ சந்தோஷமா ரெண்டு பேரும் இருக்கணும். நீங்க ரெண்டு பேரும் என்னன்னா, இப்படி ஏன் யாரோ போலவே இருக்கீங்க.”

 

“அவங்களுக்கு தெரியாது எனக்கு மட்டும் தான் தெரியும். “

 

“எப்போல இருந்து உனக்குத் தெரியும் ?”

 

“அங்க ஊருக்கு போய் கொஞ்ச நாலையிலேயே. அது…”என இவள் மனதில் இருந்த மொத்தத்தையும் கூற அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

“சரி அதி. நீ சொல்றது எல்லாம் சரிதான். ஆனாலும் இனி எதுவும் மாற்ற முடியாதே. அவங்கதானே இனி என்னைக்கும் உன் புருஷன். இனி இதுதானே உன் வாழ்க்கை. அவங்க கூட முதல்ல மனசு விட்டு பேசு. அவங்களும் தவிச்சிட்டு தானே இருக்காங்க.பொண்ணு நீ இப்போ என்கிட்ட சொல்லிட்ட. அவங்க யார்கிட்ட சொல்ல முடியும் சொல்லு. “

 

“இப்போ நான்தான் தீன்னு சொல்லி அவங்க என் மேல கோவப்பட்டா? “

 

“அதி அந்த கோவமெல்லாம் எத்தனை நாளைக்கு? அவங்க உன்னை ஏத்துக்க மாட்டாங்கன்னு தானே நீ மறைச்ச. வேற காரணம் எதுவும் இல்லையே. என்ன இவ்ளோ நாள் அவங்க மனசு பட்ட கஷ்டதுக்காக கொஞ்சம் கோவிச்சுப்பாங்க. அதை எல்லாம் சமாளிக்க தெரிலைன்னா என்ன கலெக்டர் நீ.சும்மா அழுதுட்டே இருக்காம கண்ணை துடை முதல்ல.”

 

“கலெக்டருக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? “

“ஹ்ம் படிச்ச முட்டாளா இருக்கியே அத சொன்னேன். சரி நா வேணும்னா மாமா கூட பேசவா?”

 

“அச்சோ! வேண்டாம். நானே நேரம் பார்த்து பேசிக்கிறேன்.”

 

“நீ நேரம் பார்த்து சொல்ல, என் பாப்பா வெளில வந்துரும் போல. இந்த ஹண்ட்ஸம் பக்கத்துல வச்சுட்டு எப்படித்தான் தள்ளி நின்னு ரசிக்க முடிதோ. மண்டு மண்டு. “

 

சிறிதாய் இதழில் எட்டிப்பார்த்த சிரிப்பைக் கண்ட தீபா,

 

“அதி, இனியாவது நீ சந்தோஷமா இருக்கணும் டா. அப்பாவும் சரி, சுமனும் எப்போவும் உன்னை பத்திதான் பேசிட்டே இருப்பாங்க.”

 

அவள் கையை தன் கைக்குள் பொத்திகொண்டவள்,

 

“எவ்ளோ காதல் இருந்தா வருஷக்கணக்கா அம்மா அப்பாக்காக பண்ணனும்னும் நினச்ச மொத்தத்தையும் அவங்க ஒருத்தருக்காக விட்டுக் கொடுத்திருப்ப. கண்டிப்பா அவங்க இடத்துல வேற யாரு இருந்தாலுமே உன் முடிவு எப்போவும் மாறி இருக்காது தானே? கண்டிப்பா உன்னை புரிஜிப்பாங்க.முதல்ல நீ அவங்க கூட பேசு “

 

“என்னை விட்டு தள்ளி போயிருவாங்களோன்னு இருக்கு. “

 

“உன் அன்பை உன் மனசை அவங்களுக்கு நல்லாவே தெரியும் அதிம்மா. நடக்காததையும் சேர்த்தே யோசிச்சு எதுக்கு உன்னை கஷ்டப்படுத்திக்குற?”

 

கடைசியாய் பேசிய வார்த்தைகள் மட்டும் அதிதியை தேடி மாடியேறியே ஆதிரையன் காதுகளில் விழுந்தது.

 

“என்னை புரிஜிப்பாங்களா? “குரல் கம்ம கேட்க,கேட்டிருந்த ஆதிரையனுக்குமே மனம் பிசைந்தது.

இவன் மாடி ஏறி செல்லாது அப்படியே இருப்பதைக்கண்ட சுமன்,

 

” என்ன ஆதி போகலையா? கீழிருந்தே சற்று சத்தமாக கேட்டுவிட்டான். அங்கே மேலிருந்த இருவருக்கும் சுமனின் குரல் கேட்டது.

 

“இல்ல அவங்க பேசிட்டிருப்பாங்க போல, அதான்.” அதிரையன் திரும்பி கிழிறங்கி வர,

 

“தீபா…என்ன பண்றீங்க ரெண்டுபேரும். நமக்கு டீ தர ஐடியா இருக்கா இல்லையா? “

 

“இதோ வரேன்.”

“ஹேய் வா நாம போலாம். இதோ வரேன்னு சொல்லிட்டு வந்தேன். ரொம்ப நேரமாச்சு.இனி இதை நினைச்சு யோசிச்சிட்டு உன் வாழ்க்கையை வாழாம தள்ளி போட்டுட்டே இரு, நானே மாமா கூட பேசிருவேன் புரிதா?”

 

“பேஸ் வோஷ் பண்ணிக்கோ கீழ போகலாம்.”

அங்கிருந்த குழாயில் முகத்தை கழுவிகொண்டவள் தீபாவுடன் கிழிறங்கினாள்.