அன்புடைய ஆதிக்கமே 15

அன்புடைய ஆதிக்கமே 15

 

அத்தியாயம் 15

 

     தான் இருக்கும் இடத்தில இருந்து எழுந்த ஜெயக்குமார் சுருதியை நோக்கி முன்னேறினான். அவளோ அவன் தன்னை நோக்கி வருவதை கூட உணராமல் அவனை திட்டி கொண்டே இருந்தாள்.

 

           ஜெயக்குமார் மிக அருகில் அவளை இடிப்பது போல் வந்தும்  அவள் உணரவே இல்லை. இந்த பிறவி எடுத்ததே அவனை திட்டுவதற்காக மட்டும் தான் என்பதை போல அப்பொழுதும் திட்டிக்கொண்டே இருந்தாள்.

 

        “இவ்வளவு பக்கத்துல நீ வந்தா அடிச்சிருவேன்னு நாங்க பயந்துருவோமா? நல்ல வீடு பார்க்க தெரிய.”சுருதி இதை கூறி முடிப்பதற்கு முன்னே அவளை நெருங்கியவன் தன் இடக்கரத்தால் சுருதியின் இடையை பிடித்தவன் தேர்ந்த நடன கலைஞனை போல் அவளை ஒரு சுழற்று சுழற்றி தன் வலகரத்துக்கு மாற்றியவன் சுருதியை தன்னோடு சேர்த்து அணைத்தான்.

 

        சுருதியோ ஆமா இவன் இப்போ என்ன பண்ணான்.  என்று எப்போதும் போல் மைண்ட் வாய்ஸ்ல் பேசியவள் முழித்து கொண்டிருந்தாள்.  

 

             அவள் இடையில் வைத்திருந்த கரத்துக்கு அழுத்தம் கொடுத்தவன்,அவள் உயரத்துக்கு குனிந்து இடக்கரத்தின் கட்டைவிரலால் அவளது தாடையை வருடியவாறு “நீ மட்டும் தான் வேலை செய்யணுமா என்ன?மாமாவும் உனக்கு ஹெல்ப் பண்றேன் பேபி மா.”என்று கூறியவன் தன்னை வா வா என்று துடிதுடித்து அழைக்கும் சிவந்த இதழ்களை  தன் இதழ்களோடு  இணைத்து அமைதி படுத்த எண்ணி மேலும் சுருதியை நெருங்கினான் ஜெயக்குமார். .

               இருவர் இதழுக்கும் இடையில் சரியாக அளந்து வைத்த மாதிரி ஒரு நூலிழை இடைவேளை தான்  இன்னும் ஒரு நொடியில் முத்தமிட்டு விடுவான் என்ற பொழுது தன் செப்பு இதழ்களை அசைத்து நடுங்கும் குரலில் பேசினாள் சுருதி….

 

           “ஏன் குமார்?நமக்கு கல்யாணம் ஆன ஒரே காரணத்தால நான் நல்ல பொண்ணு ஆயிட்டேனா என்ன? காலைல இருந்து நீ ரொம்ப weired ஆ நடந்துக்குற அதான் கேட்குறேன்.  இல்லை இவ்வளவு தான் உன் தலை விதின்னு நினைச்சு இப்படி காலைல இருந்து பண்றியா?நீ என்னை கிஸ் பண்ணா நா பிட்ச் ஆகிட மாட்டேன்ல?சந்தேகம் அதான்? தெளிவு படுத்திக்கணும்ல? அப்புறம் என்கூட இன்டிமேட்டா(intimate) இருந்துட்டு.தப்பா பேசுனா என்னால சத்தியமா தாங்க முடியாது…எனக்கு மற்றபடி இதுல எந்த பிரச்னையும் இல்லை.இன்னைக்கே கூட   மத்ததுயெல்லாம்  வைச்சுக்குனாலும் எனக்கு ஓகே தான்…நீயா இருக்க போய் இந்த கேள்விலாம் கேட்க முடியுது…வேற யாரும் என் புருஷனா வந்திருந்தா என்ன பண்ண போறேன்?just  accept  தான் பண்ணிருப்பேன்.”என்று அவன் கண்களை பார்த்து கூறினாள்.

 

           சுருதி பேச ஆரம்பித்தவுடனே பதறி அவள் இடையில் இருந்த கரத்தை உடனே எடுத்தான் ஜெயக்குமார்.அவளோ பேசிக்கொண்டே மீண்டும் அவன் கரத்தை எடுத்து முன்னர் எப்படி அவன் வைத்திருந்தானோ அதை போல் தன் இடையை சுற்றி வைத்தவள் மீண்டும் அவன் எடுக்க முயன்றபோது விடவே இல்லை.அ வன் கரத்தை பிடித்தவாறே பேசினாள்.

 

  அவனும் இவளை முத்தமிடனும் என்னும் எண்ணத்தில் எல்லாம் வரவே இல்லை. அவள் அருகில் வந்ததும் காலம் காலமாக சொல்லப்படும்  ஈர்ப்பு சக்தி வேலை செய்து இப்படி ஆகிவிட்டது…

 

  ஜெயக்குமாருக்கோ திகுதிகுவென்று கோவம் பத்திக்கொண்டு வந்தது.ஜெயக்குமாரின் கோவம் கொப்பளிக்கும் கண்களை காட்டினாலே போதும் soldering இல்லாமலே  அவனது  மாணவர்கள் மின் சுற்று செய்து விடுவார்கள்…ஒரு ஓரத்தில் வருத்தமாகவும் இருந்தது தான்…தன் வார்த்தைகள் தான் அவளை இவ்வளவு தூரம் பேச வைக்கிறது என்றும்  புரிந்தது.

 

      “அப்ப கேவலம் அதுக்காக தான் நான் உன் பின்னாடி வரேன்னு சொல்றியா?”

 

       “நோ நோ…குமார்…நான் அப்படி சொல்ல வரல. எப்படியும் நாம ரெண்டு பேரும் வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ணித்தானே ஆகணும். இல்லை இந்த ஹிந்தி நாடகத்துலலாம் வர மாதிரி ஒரு வருஷம் கழிச்சு விவாகரத்து வாங்கிக்கலாம்னு ஏதாவது மொக்கையா பிளான் போட்டு வைச்சுருக்கியா?அப்படி எல்லாம் எண்ணம் இருந்தா குழி தோண்டி புதைச்சுரு…கொன்றுவேன் சொல்லிட்டேன்…சாகுற வரைக்கும் என் கூட தான் இருக்கனும்.”என்று முட்டை கண்ணை உருட்டிவிட்டு அவளது மாணவ குழந்தைகளை மிரட்டுவது போல் மிரட்டினாள்…

 

   சாகுற வரைக்கும் என்கூட தான் இருக்கனும் என்ற வார்த்தை அவனுக்குள் ஒரு மகிழ்ச்சி பேரூற்றை உருவாக்கியது. மேலும் மேலும் பேசினால் பிரச்னை தான் வரும் …அவளுக்கு சொல்லின் மூலம் அல்ல செயலின் மூலம் தான் தன் காதலை உணர வைக்க முடியும் என்று உணர்ந்தவன் போல் முதன் முதலாக விட்டு கொடுக்க ஆரம்பித்தான்…

 

       “அப்படி கேவலமா பிளான் போட உனக்கு தான் டி தெரியும்.”என்று சிரிப்புடன் கூறியவன், குனிந்து அவள் பிறை நெற்றியில் முத்தமிட்டு “ஏதாவது லூசு மாதிரி யோசிக்காம போய் தூங்கு…நான் பின் பக்கம் கதவு பூட்டி இருக்கானு பார்த்துட்டு வரேன்…”என்றவன் அவளை படுகையில் அமர்த்திவிட்டு சென்றான்…

 

பாதி தூரம் சென்று திரும்பி வந்த ஜெயக்குமார் “பேபி இன்னும் ஒரே ஒரு கிஸ்…என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது.”என்று அவசரமாக கூறியவன் ஐந்து வருடங்கள் கழித்து பார்த்ததும் தன்னை கவர்ந்து ஒவ்வொரு முறையும் மின்னி மின்னி கர்வமாக புன்னைகைத்து தன் உயிர் ஏங்க செய்யும்  சிவப்பு நிற மூக்குத்திக்கு ஒரு இச் வைத்தான்…

 

           சுருதிக்கு ஏனோ அழுகை வரும் போல் இருந்தது. அவன் முத்தமிட நெருங்கையில் அவளது இதயம் நின்று துடிக்க ஆரம்பித்து இருந்தது.

 

         அனைத்தையும் மீறி அவன் பேசிய வார்த்தைகள் தான் ஞாபகம் வந்து தொலைத்தது. யோசித்து திருமணத்திற்கு பின்பு எதையும் ஞாபகம் வைத்து கொண்டு சண்டை பிடிக்க கூடாது. வாழ்வை ஒரு ஓட்டத்தில் எதிர் கொள்ள வேண்டும் என்று தான் நினைத்தாள். ஆனால் இங்கு அனைத்தும் தலை கீழாக நடக்கிறது. இந்த குமார் அவளுக்கு பிடிக்க வில்லை; நடிக்கிறான் என்றே நினைத்துக்கொண்டாள். அவள் அறியாதது ஜெயக்குமார் இவளை விரும்பிகிறான் என்பதை.

 

   ஜெயக்குமார் வரும் சத்தம் கேட்டவுடன் படுக்கையின் ஒரு ஓரத்தில் படுத்துகொண்டாள். அவனும் விளக்குளை அணைத்துவிட்டு படுக்கையின் மறுஓரத்தில் படுத்தான்…

 

    சுருதிக்கு படபடப்பாக இருந்தாலும் போர்வையை இழுத்து முகம் வரை மூடிக்கொண்டு படுத்தாள். காலையில் இருந்து அலைந்த அலைச்சல், நின்றது என்று எல்லாம் சேர்ந்து இருவரையும் ஆழ்ந்த தூக்கத்திற்கு இழுத்து சென்று விட்டது.

 

  நடுசாமம் கூட ஆகியிருக்காது ஜெயக்குமாரின் தூக்கம் அவனுக்கு  டாடா காட்டிவிட்டு சென்றுவிட்டது. பின்னே அந்த நித்திராதேவியும் பாவம் என்ன செய்வாள்….

 

   ஜெயக்குமார்  கண் அசந்து அப்பொழுது தான் ஒரு அரை மணி நேரம்  ஆகியிருக்கும். முதலில் சுருதியின் ஒரு கால் வந்து பட்டென்று அவன் மேலே விழுந்தது. அதிலே அடித்து பிடித்து எழுந்தவன் அதை ஒதுக்கிவிட்டான். சிறிது நேரத்தில் அவளது கை, அதையும் ஒதுக்கிவிட்டான். மீண்டும் நித்திராதேவி அவனை ஆட்சி செய்ய தொடங்கிய சிறிது நேரத்தில் கையையும் காலையும் மொத்தமாக அவன் மேல் போட்டாள் நொந்தேவிட்டான். மீண்டும் முதல்முறை செய்ததை போல் ஒதுக்கி போட்டுவிட்டு நடுவில் தலையணையை வைத்த பொழுது தான் அந்த சம்பவம் நடந்தது…

 

       பாதி தூக்கத்தில் இருந்து எழுந்து உட்கார்ந்தவள் திடிரென்று முட்டிகால் போட்டாள். இதை அனைத்தையும் ஜெயக்குமார் ஒரு கிலியுடனே பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு கையை ஏந்துவது போல் வைத்துக்கொண்டு இன்னொரு கையால் அதிலிருந்து எதையோ எடுப்பது மாதிரி எடுத்து ஏதோ வாய்க்குள் வராத வார்த்தைகளை உளறி நாலாபக்கமும் தெளிப்பது மாதிரி செய்தாள். ஜெயக்குமார் பயந்து போய் சுருதி சுருதி என்று அவளை உலுக்கிய போது தன் கண்ணான கணவனுக்கு ஒரு உதை குடுத்து விட்டு  படுத்து முதல் மாதிரியே தூங்கி விட்டாள்.ஹா ஹா ஹா…

 

      இதற்கு பிறகும் அவனுக்கு தூக்கம் வருமா என்ன….நமது கதாநாயகன் முதலிரவில் விடிய விடிய முழித்திருந்தான் எதுவுமே செய்யாமலே.

 

  விடிய விடிய கைபேசியை நோண்டிக்கொண்டிருந்த ஜெயக்குமார்… ஐந்து மணி ஆனவுடன் எழுந்து வெளியே சென்றான்  வாசற்கதவை திறந்து வெளியே சிறிதுநேரம் நின்றவன், பின்பக்கம் சென்று முகம் கழுவி வந்து துடைப்பத்தை எடுத்து வாசலை கூட்ட ஆரம்பித்தான்…

 

       அவர்கள் தற்பொழுது இருக்கும் வீடு  வரிசையாக நான்கு அறைகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கியது போல் இருக்கும். முன்வாசல் விஸ்தாரமாக நன்றாக இருக்கும். நான்கு அறைகளை தாண்டினால் இவர்களின் தாத்தா பாட்டி மாடு வளர்த்து வந்தனர் அதற்கான தொழுவம் மரங்கள் சிறுதோட்டம் குளியலறை என்று அமைந்து பெரிதாக இருக்கும். இப்பொழுது மாடுகள் இல்லாததால் தொழுவம் இருந்த இடம் வெறுமனாக புழங்கும் இடமாக தற்போது இருந்தது. சுருதி கோவப்பட்டதற்கு இதுவும் காரணம்…தினமும் உதிரும் இலைகள் குப்பை என்று அதுவே நிறைய இருக்கும். எப்பொழுதுமே குடும்ப பெண்கள் அனைவரும் வந்து நல்ல நாள் பெரிய நாட்களுக்கு சுத்தம்செய்து விட்டு செல்வர். அதை ஒரு தனி ஆளாக செய்வது கஷ்டம் இல்லையா?அவர்கள் குடும்பத்தில் வேலைக்கு ஆட்கள் வைத்துக்கொள்வதெல்லாம் வழக்கத்தில் இல்லை.தங்கள் வேலைகளை தாங்களே செய்துகொள்வர்.

 

  ஜெயக்குமார் பெருக்கி முடித்து தண்ணீர் கொண்டு வந்து வாசல் தெளிக்க ஆரம்பித்தான்.அவன் வேலை செய்யும் விதத்திலே தெரிந்தது இது முதல் முறை இல்லை என்று. அவர்கள் வீட்டில் இருவருமே ஆண்கள் என்பதால் அவர்களது தாய்க்கு முடியாத பொழுது ஜெயக்குமார் அல்லது செல்வகுமார்  தங்களது அன்னைக்கு தொல்லை தராமல் அனைத்து வேலைகளையும் இருவருமே  பார்த்துக்கொள்வார்கள்..

 

      “நிஜமாவே கஷ்டமா தான் இருக்கு. முன்வாசலுக்கே நமக்கு முக்குதே…பின்வாசலாம் செத்தோம் போலயே. நிஜமாவே  என்  பொண்டாட்டி என்னை  திட்டுறதுல தப்பே இல்லை.”என்று சுருதியின் வேலையான புலம்பலை இவன் செய்துகொண்டு வாசல் தெளித்தான்.பிறகு கோலம் போட தயாராகி குனிந்த பொழுது தான் எதிர் வீடு குழாய்கார மாமி சரியாக கதவை திறந்து வெளியே வந்தார்…

 

         இவர்கள் வீடு இடையில் தார்சாலை அடுத்து அந்த மாமியின் வீடு.  60 வயதை எட்ட போகும் மாமி.பிள்ளைகள் என்று யாரும் இல்லை.அவரது கணவர் சமீபத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் தவறியிருந்தார்.இப்பொழுது போல் வீட்டுக்கு வீடு போர் இல்லாத அந்த காலத்திலே 30  வருடங்களுக்கு முன்பே அந்த வட்டாரத்திலே முதன் முதலாக நல்லதண்ணீர் குழாய் வீட்டில் இழுத்தவர்கள்..அதனால் தான் அவர் குழாய் கார மாமி.இவருக்கும் சுருதிக்கும் எப்பொழுதுமே மாமியார் மருமகள் சண்டை தான்.

 

அதனால் நல்ல பழக்கமும் கூட…சிறு வயதில் ஜெயக்குமார்,செல்வா,அவந்திகா என்று அனைவரும் அவர்கள் வீட்டில் தான் போய் விளையாடுவர்…ஆனால் சுருதி மட்டும் வரவே மாட்டாள். ஒரு நாள் என்ன எது என்று விசாரித்த போது தான் அவங்க கெட்டவங்க அவங்க வீட்டுக்கெல்லாம் போக கூடாது என்று சொன்னாள்.அனைவரும் பதறி என்ன செய்தார்கள் என்று கேட்ட போது தான் மகராசி சொன்னாள் பாருங்கள் ஒரு விளக்கம் “நீங்க தானே எல்லாரும் கொலைகார மாமி கொலைகார மாமி வீடுனு சொல்லறீங்க.யாராச்சும் கொலைகார வீட்டுக்கு போவாங்களா.”என்றாள் ஆறு வயதான சுருதி…இப்படி பலவிதமான அக்கப்போர்களை நிகழ்த்திருக்கிறாள்.

                                                                                                            

  “என்ன டா?கல்யாணம் ஆன முதல் நாளே உன் பொண்டாட்டி ராட்சஷி உன்னை பெருக்க விட்டுட்டாளா?”என்று கேட்டவாறே அவரும் அவர் வீட்டு வாசலை பெருக்கினார்…

 

    “என்ன மாமி பண்றது?குரங்குக்கு வாக்கபட்டா மரத்துக்கு மரம் தாவி தானே ஆகணும்.”என்று அவனும் சுருதி வருகிறாளா என்று வீட்டினுள் ஒரு பார்வை வைத்துக்கொண்டே கோலம் போட்டவாறே பேசினான்…

 

       “அது என்னமோ வாஸ்தவம் தான் டா அம்பி…சரி வா பில்டர் போட்டுட்டு வந்துருக்கேன் காபி குடிச்சுட்டு போவ.”என்று அவர் ஜெயக்குமாரை கூப்பிட்டு கொண்டிருக்கும் போதே அங்கே கண்ணை கசக்கிகொண்டே ஆஜரானாள் ஜெயக்குமாரின் தர்மபத்தினி…

 

            “ஏன் என் புருசனுக்கு எனக்கு காபி போட்டு தர தெரியாதா?நீங்க தான் போட்டு தரணுமோ?எங்களுக்கு ஒன்னும் உங்க வீட்டு காபி வேண்டாம்.”என்று கண்ணை கசக்கி கொண்டே அவருடன் சண்டை இழுத்தாள்…

 

       “விவஸ்தை கெட்டவன்றது சரியாய் தான் இருக்கு டி மா.போய் முதல் குளிச்சுட்டு வா. உனக்கு ஜோதி என்ன தான் சொல்லி கொடுத்தாலோ?நேக்கும் தெரில…நீ வாடா காபி குடிச்சுட்டு போலாம் அம்பி.”என்று அவளை முறைத்துக்கொண்டு வீட்டினுள் சென்றார்…

 

      சுருதியும் அவரை பார்த்து முறைத்துவிட்டு வீட்டினுள் சென்றாள். ஜெயக்குமாரோ எதையும் கண்டு கொள்ளாமல்   அமைதியாக கோலம் போட்டுக்கொண்டிருந்தான்…(நல்ல புருஷன்.)

 

      அடுத்து குளித்து கிளம்பி  இருவருமே மாமி வீட்டுக்கு சென்று காபி குடித்து விட்டு காலை சாப்பாட்டையும் முடித்து விட்டு மதிய சாப்பாட்டுக்கு கேகே வீட்டுக்கு விருந்துக்கு சென்றனர்.முதல் நாளே அனைத்தும் பக்காவாக திட்டம் போட்டு excute  பண்ணிக்கொண்டிருந்தனர்.அனைத்தும் முடித்து மாலை போல தான் ஜெயக்குமாரின் வீட்டுக்கு சென்றனர்.

 

வீட்டின் நுழைவு வாயிலே இருவரையும் எதிர்பார்த்து ஜெயக்குமாரின் தந்தை நாகராஜ் ஏதோ ஒரு புத்தகத்தை படித்தவாறு அமர்ந்திருந்தார்…

 

       “பச்சை மிளகாய் அது காரம் இல்லை…

         என் மாமனாருக்கு நெஞ்சில் ஈரமே இல்லை.”

 

என்று பாட்டு பாடியவரே உள்நுழைந்தாள் சுருதி.ஜெயக்குமார் என்ன கருமம் பாட்டு இது என்று  காலில் மாட்டிய செருப்பை வாசலில் நின்று கழட்டியவாறு சுருதியை முறைத்து கொண்டிருந்தான்…

 

           “என்ன சுருதி எனக்கு எப்போதுல இருந்து இந்த கேவலமான பாட்டை  மாத்துன…”என்று ஜெர்க் ஆகி இருமி கொண்டே கேட்டார் நாகராஜ்…

 

            “நீங்க எனக்கு மாமனாரா ப்ரொமோட் ஆன உடனே தான் மாமா.சாங் செமயா இருக்குல்ல”என்று அவருக்கு தண்ணீர் எடுத்து கொடுத்தவாறு கேட்டாள் சுருதி…

 

         அப்பொழுது தான் உள்ளிருந்து வந்த லட்சுமி “எனக்கு எதுவும் பாட்டு மாத்தலைல.”என்று  கையிலிருந்த டீயை ஜெயக்குமார்க்கு கொடுத்தவாறு கேட்டார்…

 

      “நோ நோ அத்தை…உனக்கு ஒரே பாட்டு தான்…மாமா ஏன் இப்படி இரும்புறாரு?”என்று அவளும் ஒரு டீயை எடுத்துக்கொண்டு அவரின் அருகில் அமர்ந்தாள்…   “ஆமாம்.ஹாஸ்பிடல் போனீங்களா அப்பா…செல்வாவை எங்கே மா?”என்று தன் தந்தையிடம் ஆரம்பித்து தாயிடம் முடித்தான் ஜெயக்குமார்…

 

        “இன்னும் போலை டா…நானும் காலைல இருந்து ஹாஸ்பிடல் போயிட்டு வாங்கனு சொல்லிட்டு இருக்கேன். மனுஷன் காதுல வாங்காம அந்த ஏதோ இத்து போன புத்தகத்தை வைச்சுட்டு உக்காந்துருக்காருறேன். செல்வா அவன் கூட்டாளிக கூட கொடைக்கானல் போயிருக்கான் “என்று தனது கணவனை முறைத்து கொண்டு கூறினார்…

 

         தன்னிடம் செல்வா கொடைக்கானல் செல்வதாக சொல்லவேயில்லையே என்று கணவன் மனைவி இருவரும் தங்களுக்குள் நினைத்துக்கொண்டனர்…

 

       “சரி வாங்க பா. நம்ம ஹாஸ்பிடல் போயிட்டு வருவோம்.”என்று  தனது தந்தையை அழைத்தான் ஜெயக்குமார். சுருதியும் ஆமா மாமா போயிட்டு வாங்க என்று கூறினாள்.

 

         “சும்மா லேசா சளி தான் பிடிச்சுருக்கு. அதுக்கு போயிட்டு குடும்பமே ஹாஸ்பிடல் போக சொல்றிங்க.”என்று அவர் பேசும் போதே அறைக்கு சென்று அவரது சட்டையை எடுத்துவந்து கொடுத்த லட்சுமி வாயில் கைவைத்து மூடிக்கிட்டு போயிட்டு வாங்க என்பது போல் சைகை செய்தார்…

 

       அதற்கு மேல் நாகம் எங்கு படம் எடுக்கப்போகிறது? அமைதியாக சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினார்…

 

      அதை பார்த்துக்கொண்டிருந்த குமாருக்கும் சுருதிக்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை.சிரித்துக்கொண்டே தன் தந்தையின் காதருகே குனிந்தவன்”அப்பா இவங்க குடும்பத்து பொண்ணுங்க எல்லாம் இப்படி தான் கட்டுன புருஷனே ஓடஓட விரட்டுவாங்க போலயே….அம்மாவை கட்டுறதுக்கு முன்னே நீங்க கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம்…”என்று கூறினான்…

 

       “மகனே நீயும் கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம். பரவாயில்லை விடு டா.நம்மள மாதிரி மருமகன் கிடைக்க அவங்க குடும்பமே கொடுத்து வைச்சுருக்கணும். செல்வாவையாது அந்த குடும்பத்துல இருந்து காப்பாத்தணும் டா.”என்று இருவரும் விளையாட்டாக பேசி சிரித்தவாறு வீட்டிலிருந்து கிளம்பினர்…(மிஸ்டர் ஸ்நேக் ராஜ் அவனுக்கு தான் அவன் பொண்டாட்டிய பத்தி இன்னும் சரியாய் தெரில.உங்களுக்குமா.)

 

        “ஹா ஹா ஹா.அத்தை செம அத்தை…மாமா உன்னை பாத்தாலே இப்படி பயந்து நடுக்குறாரே அத்தை….”என்று சிரிப்புடன் கூறினாள் சுருதி…

 

        “ஒரு நாளுலே என் மகனை வாசல் தெளிச்சு கோலம் போட வைச்ச பார்த்தியா?அந்த அளவுக்கு இன்னும் அத்தை விவரமா இல்லை டா. “என்று அவரும் சிரிப்புடன் கூறினார்.

 

  “ஹி ஹி ஹி…அத்தை…அந்த கொலைகார மாமி தானே உன்கிட்ட சொன்னாங்க. வீட்டுக்கு போய் வைச்சுகிறேன்.”என்று அசட்டு சிரிப்புடன் கூறியவள் “நீ கோவப்படுவேன்னு நினைச்சேன் அத்தை.”என்று சிறிது குழப்பத்துடன் கேட்டாள்…

 

         “நம்ம தான் எல்லாம் வேலையும் செய்யணும்னு இருக்கா என்ன?அவங்களும் கொஞ்சம் செஞ்சு தான் பார்க்கட்டுமே…ஒரு வீட்டுக்கு போறோம் இதெல்லாம் பாக்கணும்னு அறிவில்லாம நாங்க சொல்ல சொல்ல அங்கே தான் இருப்பேன்னு சொல்லி உன்னை கூப்பிட்டு போறான். எல்லாம் பொம்பளைங்க வேலை தானே நமக்கு என்னன்ற ஒரு அசால்ட் தனம். இனிமே சரியாய் பார்ப்பான்ல. “என்று தொலைக்காட்சியை இயக்கியவாறு கூறினார் லட்சுமி…

 

     “அப்டிலாம் நினைக்குறவன் கிடையாது அத்தை.அவனுக்கு அந்த வீடு ரொம்ப பிடிக்கும்ல அதான் அங்கே போய் இருக்கனும்னு சொல்லிருப்பான். காலைல அவனே எந்திரிச்சு எல்லாம் பண்ணான் அத்தை…பாவம் குமாரு…”என்று குமாருக்கு சாதகமாக பேசினாள்.

 

       லக்ஷ்மியோ நீயா பேசியது என்பது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு “உங்க புருஷன் மேல வைச்சுருக்க பாசத்தை கொஞ்சம் குறைச்சுக்கோ…எனக்கு புல்லரிக்குது.”என்று சிரித்தவாறு கூறிவிட்டு சமையலறை நோக்கி சென்றார்.

 

 

 

 

    மதுரையின் புகழ்பெற்ற மல்டி ஸ்பெசாலிட்டி  மருத்துவமனைக்கு சென்றனர். மருத்துவரும் நாகராஜ் சொன்னதை போல் சாதாரண சளி தான் என்று கூறினார்.மருத்துவரிடம் விடை பெற்றவர்கள் மருத்துவர் அறையிலிருந்து வெளி வந்தனர்…

 

       “அப்பா நீங்க இங்கே வெயிட் பண்ணுங்க…நான் போய் மாத்திரை வாங்கிட்டு வரேன்…”என்று அவரை அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்துவிட்டு மருத்துவமனைக்குள்ளவே இருக்கும் மெடிக்கல் நோக்கி சென்றான்.அங்கு  என்னமோ கூட்டம் அலை மோதி கொண்டு இருந்தது. இன்றைய நிலவர படி மருத்துவமனை,பள்ளி, உணவகம் வைத்திருப்பர்வர்கள் தான் ஓஹோ வென்று வாழ்கின்றனர்…

 

        ஜெயக்குமார் வரிசையில் நின்று சுற்றி பார்த்துக்கொண்டிருந்தான். அப்பொழுது அவன் பார்வை வட்டத்தில் ஒரு குடும்பம் பட்டது…

 

       “அப்பா இப்படி உக்காருங்க பா. நான் போய் வெளியே எதுவும் ஆட்டோ வருதான்னு பார்த்துட்டு வரேன்.அந்த ஆட்டோ காரன் வரேன்னு  சொல்லிட்டு ஆளவே காணோம். கால் பண்ணாலும் எடுக்கல. அம்மா நீங்களும் உட்காருங்க…வரேன்…”என்று தன் தாய் தந்தையை அங்கே அமர வைத்துவிட்டு நிமிர்ந்தாள் பாரதி…

 

        நிமிர்ந்தவுடன் அவளும் ஜெயக்குமாரை பார்த்துவிட்டாள். அப்பொழுது ஜெயக்குமாரும் அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான்…

 

      பாரதிக்கு இப்பொழுது என்ன பண்ணவேண்டும் என்று தெரியவில்லை…சிரிப்பதா இல்லை விஷ் பண்ண வேண்டுமா என்ற குழப்பத்தில் அவனை பார்த்தவாறு நின்றுவிட்டாள்…

 

      அவள் தன்னை பார்த்தவாறு நிற்பதை பார்த்தவன் வெடுக்கென்று திரும்பி கொண்டான். அவளிடம் எதுவுமே விசாரிக்கவும் இல்லை. பேசவும் இல்லை…

 

         பாரதிக்கோ மிகுந்த அவமானமாக போய் விட்டது…அப்பொழுது தான் அவனை விஷ் செய்வதற்காக கையை தோள்பட்டை வரை உயர்த்திருந்தாள்…

 

          ஜெயக்குமாரை முறைத்து விட்டு வெளியிறினாள்…

      சிறிது நேரத்தில் ஜெயக்குமாரும் மருந்து வாங்கிவிட்டு தனது தந்தையை அழைத்துகொண்டு வெளியேறினான். அதுவரையும் ஆட்டோ கிடைக்காமல் பாரதி நின்று கொண்டிருந்தாள். ஏதாவது உதவி செய்வோமோ என்று ஒரு மனது கூறியது. மறு மனது யார் அவள்?அவளுக்கு எதுக்கு உதவி செய்யவேண்டும்?இன்று உதவி செய்தால் நாளைக்கு அது வேறு மாதிரி பிரச்சனையாக கூட வரலாம். பெண் மாணவிகள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பான்.அடுத்து சரியான சுயநலவாதி அலட்சியம் நிறைந்தவன் ஜெயக்குமார்…அவன் குடும்பத்துக்கு மட்டும் தான் அனைத்தையும் இழுத்து போட்டு செய்பவன்…உதவுபவன் எல்லாம்..

 

    ஜெயக்குமார் தனது தந்தையை வீட்டில் விட்டு விட்டு சிறிது நேரம் பேசிவிட்டு தன் பெற்றோர்களையும் அழைத்துக்கொண்டு முத்துவேல் வீட்டிற்கு சென்றனர்… அங்கு ஏற்கனவே குடும்ப நபர்கள் ஆஜராகிருந்தனர். மகிழ்ச்சியாக பொழுதை கடத்திவிட்டு பிரியா விடை பெற்று தங்கள் வசந்த மாளிகைக்கு வந்தனர் சுருதியும் ஜெயக்குமாரும்…

 

         சுருதி வீட்டுக்குள் நுழைந்தவுடன் கட்டிலில் போய் விழுந்தாள்…ஜெயக்குமார் குளித்து உடை மாற்றி வந்தவன் கீழே படுக்கையை விரித்தான்…

 

       ஜெயக்குமார் கீழே படுக்கை விரிப்பதை பார்த்தவள் செம கோவமாகி ஜெயக்குமாரை திட்ட ஆரம்பித்தாள்…

 

      “ரொம்ப ஓவரா பண்ற நீ?பொம்பளை பிள்ளை நானே சும்மா தான் இருக்கேன்…என் பக்கத்துல படுத்தா என்ன உன் கற்பு என்ன களைச்சு போயிருமா?அப்படி என்கிட்டே இருந்து யாருக்கு அந்த கற்பை காப்பாத்தி வைச்சுருக்க…”என்று சண்டையிட ஆரம்பித்தாள் சுருதி…

 

     “என்னை பேச வைக்குரிய நீ?அறைச்சேன் பல்லு எல்லாம் கொட்டி போயிரும்…நிம்மதியா ஒரு மனுஷனை தூங்க விடுறியா டி?மேலே கை கால் தூக்கி போட்டுட்டு…சரி நாமளும் அப்டியே கட்டி பிடிச்சுட்டு படுத்துக்குவோம்னு நினைச்சா…அதுவும் முடியாது…உன்மேல என் கை போட்டதுக்கு உதைச்சு கீழே தள்ளி விடுற…அதையும் மீறி நீ மட்டும் என் மேல கை போட்டு படுத்துக்கொன்னு விட்டா காலைல எந்திரிச்சு என் மானம் போச்சு மரியாதை போச்சுன்னு சீன் போடுவ…போடி…அப்புறம் லூசு மாதிரி என்ன என்னமோ பண்ற?”என்று பொரிந்து கொட்டி தள்ளினான்…

 

      “பொய் சொல்லாதே டா…நான் அப்டிலாம் கிடையாது…நான் பக்கத்துல படுக்குறவங்க மேல கால் எல்லாம் போடமாட்டேன்.”என்று அவளுக்கு உண்மை புரிந்தாலும் கெத்தோடு பேசினாள்…

     

 

 

 

 

ஆதிக்கம் தொடரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!