ஆதிரையன் -அத்தியாயம் 04

Screenshot_2021-07-27-16-11-56-1-0d1187f1

அத்தியாயம் -04

 

மகேஷ் யோசனையோடு செல்லும் அதிதியின் வண்டியை பார்த்தவண்ணம் இருக்க, அவன் அலைபேசி ஒலித்தது.

 

“ஹலோ சொல்லுங்க பாஸ்.”

 

“போய்ட்டாங்களா மகி?” “ஆமாண்ணா.”

“அவங்க கேட்ட டீடெயில்ஸ் எல்லாம் நான் வர்றப்ப ரெடியா இருக்கணும். அந்த தோப்போடா பத்திரமெல்லாம் அப்பாகிட்டதான் இருக்கும். நான் வர்றப்ப எடுத்துட்டு வரேன்.”

 

“ஹ்ம்ம் சரிங்க பாஸ்.”

“அதோட கலெக்டர் அப்ரோவ் பண்ணுவாங்கன்னு தோணல. சோ அப்பா ஏதாச்சும் பண்ணித்தான் அப்ரோவ் பண்ணிப்பாங்க. எப்படியும் ரெண்டு நாள் ஆகும். இந்தப்பா எதுக்கு இவ்ளோ அவசப்படுறாங்கன்னு பார்க்கணும்.”

 

“சரிண்ணா.”

 

“டேய் அண்ணானு, இல்ல பாஸ்னு ஏதாச்சும் ஒன்னு சொல்லு.”

 

“சரிங்க பாஸ்… “

 

“சரி வச்சுட்டு போய் வேலைய கவனி.” சிரித்துக்கொண்டே அழைப்பை தூண்டித்தான்.

 

வீட்டுக்கு வந்த அதிதி அன்றும் நாளையும் விடுமுறை என்பதால், அவளுக்கு அந்நிலம் பற்றிய இன்னும் சில தகவல்கள் சேகரிக்க வேண்டி இருந்தது.

 

இனி எப்போது வேண்டுமானலும் அமைச்சர் அழகன் அவளை சந்திக்க வரலாம். அதன் முன் அவள் சரிவர அனைத்து தரவுகளையும் தன்னிடம் வைத்திருக்க வேண்டும். அதனோடு அதை தகர்க்க எந்த இடைவெளியும் விடக்கூடாது என்பதில் தெளிவாய் இருந்தாள்.

 

அவள் முன்னமே சேர்த்து வைத்திருந்த தகவல் மொத்தமும் எடுத்துக்கொண்டு தான் முன்னர் தங்கியிருந்த விடுதிக்கு  கிளம்பிச் சென்றாள்.

 

அதன் உரிமையலாளர் ஓய்வுபெற்ற நீதிபதியாக இருக்க இவளுக்கு மிகவும் உதவியாக இருந்தார். அத்தோடு அவரது மகளும் இவளோடு ஒன்றாக படித்திருக்க நல்ல நட்பு இருவருக்கும் இடையே இருந்தது. சமீபமகத்தான் அவள் திருமணம் முடித்திருந்தாள், தந்தை தனித்திருக்க வீட்டோடு இருக்கிறாள். எனவேதான் அங்கே வரும் கடிதங்களை இவளுக்கு இங்கே அனுப்பிவைக்க உதவியாக இருந்தாள்.

 

அதிதி இவர்கள் வீடு வந்து சேர மாலையாகி இருந்தது.தன் இருச்சக்கர வண்டியில் பேருந்து நிறுத்தம் வந்து அங்கிருந்து பேருந்தில் இங்கே நான்கு மணிநேரத்தில் வந்திருந்தாள்.

 

“என்னம்மா, உன் வண்டிலேயே வந்திருக்கலாமே? “

தன்னை அழைத்துச்செல்ல வந்த ஓய்வு பெற்ற நீதிபதியுமான செல்வநாயகம்  கேட்க, சிரித்துக்கொண்டே வண்டியில் முன்னிருக்கையில் அமர்ந்துக்கொண்டாள்.

 

“நீங்க எப்போவாவது போயிருக்கீங்களா? “

 

சிரித்துக்கொண்டவர், “எப்டி இருக்க அதிம்மா? ஊரெல்லாம் பிடிச்சிருக்கா?”

 

“ஹ்ம்ம் நல்லா இருக்கேன். ஊர் நல்லாவே டெவலப் ஆகியிருக்கு செல்வாப்பா.”

 

“பழைய ஆளுங்க ரொம்ப கம்மிப்பா. அதோட என்கூட ஒருத்தங்க வேலை பார்க்குறாங்க. அப்பாவை நல்லா தெரிஞ்சிருக்கும், நான் இன்னும் அவங்க கூட ஒன்னும் பேசிக்கல. முதல் அடி எடுத்து வச்சதும் அவங்க கூட பேசணும். “

 

“சரிடாம்மா. இப்போ என்ன பண்ணலாம்? “

இருவரும் வீடு வரும் வரை அவள் செய்ய நினைத்த செயலையும் அதற்கு அவரது ஆலோசனையும் கூறிக்கொண்டு வந்து  சேர்ந்தனர்.

 

“இவ்ளோ தெளிவா இருக்க, இனி எதுக்கும் யோசிக்காத அதி. எதுன்னாலும் பார்த்துக்கலாம். “

 

“தெரில, தனியா என்னால… அதான் கொஞ்சம்,”

 

“அதிம்மா உன் நோக்கமே அதானே, நம்மளுக்கு சொத்துல என்ன ஆசை இருக்கு, ஏமாற்றம், உறவுகள் தந்த வலிக்கான நிவாரணம் அவ்ளோதான்.”

 

“இப்போவும் உனக்கு நேரடியா மோத பிடிக்கலைன்னா சொல்லு நான் இதை என்ன பண்ணனும்னு பார்த்து பண்ணுறேன்.”

 

“இல்லப்பா, எங்கப்பா முதுகுல குத்துன வலி  எனக்கு இன்னும் வலிச்சுட்டே தான் இருக்கு. எனக்கு அப்போ ஒன்னுமே புரிற வயசு இல்லேன்னாலும் அம்மா, அப்பா இல்லாம எவ்ளோ கஷ்டப்பட்டாங்கன்னு அஞ்சு வருஷமா நான் பார்த்திருக்கேன். அதுக்கப்புறம் நான் தனியா ப்ச்…”

 

“சரிடாம்மா, கடவுள் எப்போவும் கஷ்டத்தை  கொடுத்துட்டே இருக்க மாட்டான். இனி உனக்கு எப்போவும் நல்லதே நடக்கும்.”

 

வண்டி வந்து நின்ற பிறகும் இருவரும் இறங்காது பேசிக்கொண்டிருக்க அதிதியின் பக்கக் கண்ணாடியை தட்டினாள் தீபா.

இன்முகமாய் சிரித்துக்கொண்டே கண்ணாடியை இறக்கியவள்,

“நீ இப்படி நின்னுட்டு இருந்தா எப்டி கதவை  திறக்க, நானும் எவ்வளவு நேரம்தான் இறங்காம வண்டிக்குள்ளேயே இருக்கது? “

 

“ஏது நானு? சரிதான். இறங்கு முதல்ல.” அவளே கதவைத் திறக்க இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து நலம் விசாரித்துக்கொண்டே உள்ளே செல்ல, செல்வநாயகமும் அவர்கள் பின்னே நடந்தார்.

 

“அண்ணா இல்லையா? “

 

“வேலை விஷயமா வெளியூர் போயிருக்காங்க மன்டே தான் ரிட்டர்ன். போறிங்கா இருக்கேன்னு யோசிச்சிட்டே இருந்தேன் நீ காலைல கால் பண்ணவும் செம ஹாப்பி.”

 

அவள் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வர மூவருமாக சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து எழவும் தீபாவுக்கு அவள் கணவனிமிடம் இருந்து அழைப்பு வர அவள் பேசிவிட்டு வருவதாக அவள் அறைக்கு சென்றாள். இவள் எப்போதும் தங்கும் அறைக்குள் இவளும் நுழைந்தாள். அங்கு இருந்த இருக்கையில் அமரகடந்த நினைவுகள், தனிமைகள் சூழ்ந்தன.கடந்த ஐந்து வருடங்களாக எப்போதும் தன் தனிமை போக்கியது அவள் கவிஞனின் கடிதங்களே. அன்று வந்த கடிதத்திற்கு  இன்னும் பதில் அனுப்பாததால் இங்கிருந்தே பதில் அனுப்பிடலாம் என்று எண்ணியவள் அவனுக்கான மடலை எழுதலானாள்.

 

‘அன்பின் நேசனே,

நலம் இங்கு நானும். உம் நலம் கேட்டு எழுதும் மடலிது. என் வேலை மாற்றலோடு நானும் கொஞ்சம் எந்நிலை மாற்றிக்கொண்டேன். கவியே! நீண்ட நாள் ஆசை, என் மனதோடு கொண்டிருந்த தேவை நிறைவேற்றிக்கொள்ள சந்தர்ப்பம் அமையக் காத்திருக்க தானாய் அமைந்திருக்கிறது.

தனியென்று தனித்து துணிய கொஞ்சம் மனம் யோசித்தாலும் ஏதோ மனதில் யாரோ உடனிருப்பதாய் உள்ளுணர்வு சொன்ன தைரியத்தில் இருக்கிறேன்…’

 

இதை எழுதிட அவள் மனம் முழுதும் அந்த கவிஞனே முற்றும் முழுதாய் நிறைந்திருப்பதை உணர்ந்தாள் அதிதி. ஏதோ ‘எனக்கென்னவாகினும் அவன் பார்த்துக்கொள்வான்’ எனும் உள்ளுணர்வின் வெளிப்பாடே அப்படி எழுதத் தூண்டியது.

 

‘வரும் வாரங்கள் சிலநேரம் தாமதாய் கடிதம் அனுப்ப நேரிடலாம். நேசனே,நேரமிருக்க தாமதமும் இருக்காது.

 

“நேசனே!

ஏந்திழை எனக்கும் நீ ஆகிடக் கேட்க… தமிழுக்கு நீ ஏந்திழை ஆனதென்ன…?”

 

(பெண் அலங்கரிக்கும் அலங்கார  அபாரணங்களாய் நீயாய் வேண்டும் என்றேன்…

நீயோ தமிழுக்கு அணிகலன் என்றே ஆனாய் நேசனே…)

 

நான் நன்றே  கற்றவையெல்லாம் நின் வழி மட்டுமன்றி வேறில்லை நேசனே.

 

“பீதாம்பரம் போர்த்தி உனை பாடி வாழ்த்திட பேராசை இவளுக்கும் நேசனே!”

 

எந்த மொழியும் கொண்டிரா அடிப்படை நாம் வாழும் தமிழுக்கு.கற்றிட முடிவில்லை கற்றதும் இங்கே இமயம் என்னளவில்.

 

“தமிழின் தாத்பரியம் நீ கூறிட

என் மதி நீயாய் அதை உருவகிக்க கண்டேன்…”

 

நலம் சூழ, மனம் இதமாய் இருந்திட வேண்டி முடிக்கிறேன்.

அன்புடன்,

தீ…

 

கடைசி வரிகள் எப்போதும் கொஞ்சம் அவள் மனம் வெளிப்பட அதை எழுதி பின்னே அழித்தும் விடுவாள். இன்று ஏனோ அதையும் சேர்த்தே அனுப்பிட மனம் கூற அப்படியே செய்தாள்.

***

 

“அமைச்சரே அந்த பொண்ணு அப்ரோவ் பண்ணுவான்னு தோணலை.”

 

“நானும் அதைதாண்டா யோசிச்சிட்டு இருக்கேன். நீ நாளைக்கு போய் அந்த பொண்ணை ஒருவாட்டி பார்த்து பேசு. அதுக்கப்றம் என்னனு பார்த்துக்கலாம். ஆதி வேற வந்திருக்கான்.”

 

“சரிங்க அமைச்சரே.”

 

அழகன் வரும் வரை உணவு மேசையில் ஆதிரையன் அமர்ந்திருக்க, தன் பிஏ உடன் பேசிக்கொண்டு வந்தவர் அவனுக்கு எதிரே அமர்ந்தார். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் இருக்க, ரேவதியே பேச்சை ஆரம்பித்தார்.

 

“டேய் ஆதி, உனக்கு நம்ம அதி ஞாபகம் இருக்கா? “

 

“யாரும்மா? “

 

“என்னடா யாருன்னு கேக்குற? முன்ன நாம இருந்த வீட்டு பக்கத்துல இருந்தாங்களே? நீ கூட அங்கேயே தான இருப்ப?”

 

“ஓஹ் அவங்களா? “

 

அழகன் எதுவுமே பேசவில்லை அவர் உணவில் கவனமாய் இருந்தார்.

 

“இப்போ எங்க இருக்காங்களோ தெரியாதில்ல. அங்க விட்டு வந்தத்தோட சரி.பார்க்கவோ, பேசினதோ இல்லடா.”

 

“சரி என்ன திடீர்னு அவங்க நெனப்பு?”

 

அதுவா நேத்திக்கு தில்லைய கனவுல கண்டேன் டா இரவெல்லாம் தூக்கமே இல்ல. ஏதோ பெரிய மரம் சரிஞ்சு விழுதா,சட்டுனு விலகி தப்பிர்ரா.”

 

“எப்டி இருக்காங்களோ என்னவோ. அப்போவே ரொம்ப சொத்து நிலம் எல்லாம் இருந்தது, எப்படியும் நல்லா இருப்பாங்க.”

 

“அப்றம் என்னம்மா, விடு நல்லா இருப்பாங்க.”

 

“சாப்பிடறப்ப என்ன வீண் பேச்சு? நீயும் உட்கார்ந்து சாப்பிடு.”

 

கூறிவிட்டு அழகன் எழுத்துக்கொள்ள,

 

என்னடா வீண் பேச்சுனு சொல்றாரு, நகமும் சதையுமால்ல இருந்தாங்க அருள் அண்ணாக்கூட. “

 

“விடும்மா அங்கேயும் எதாவது அரசியல்  பண்ணிருப்பாங்க.”

 அவன் தோள்களில் அடித்தவர், “அப்பாவ ஒன்னும் சொல்லாம உன்னால இருக்க முடியாதில்ல. “

 

“ரெடியாகு கோயில் போய்ட்டு வரலாம். மதியதுக்கு மேல எனக்கு மீட்டிங் இருக்கு.”

அழகன் மீண்டும் வந்து கூற,முகம் மலர ரேவதியும், “சரிங்க ‘என்றவர்  ‘கிளம்புடா உனக்கும் தான்.”

 

“அங்கேயும்…” ஆதிரையன் எதுவோ கூற  வர,அவனை பேசவிடாது வாய் மூடி “கிளம்பு” என்றிட, சிரித்துக்கொண்டே அவனறை சென்றான்.

 

அழகன் மனதில் உணவு மேசையில் பேசியவர்களின் நினைவு வர, அதைப் புறம் தள்ளியவர் மனைவி மகனோடு கோயில் சென்று வந்தார்.

 

இவர்கள் வண்டியை பின்தொடர்ந்து ஒரு வண்டி கோயில் வரை வரவும், அதிலிருந்த நபர் அலைபேசியூடே,

 

“ஐயா குடும்பமா போய்டு இருக்காங்க.”

 

“ஓஹ்! பையன் இருக்கான்னா திரும்பிருங்க, நாம இன்னொரு நாள் பார்த்துக்கலாம் மாட்டிக்காமலா இருக்கப்போறான்.”

 

“நாளைக்கு வெளியூர் போறதா இருக்கு. “

 

அப்படின்னா நல்லதுடா. வெளி இடம்னா  நம்மளுக்கும் வேலை சுலபமா முடிஞ்சிரும். இப்போ திரும்புங்க பார்த்துக்கலாம்.

ஆதிரையன் இருப்பதால் தப்பித்த  அமைச்சர் தனியே அகப்படுவாரா?

 

அகப்பட அங்கே நிலை என்னவாகும்?

வரும் பதிவுகளில்…