ஆதிரையன்-அத்தியாயம்12

Screenshot_2021-07-27-16-11-56-1-e16a46de

அத்தியாயம் 12

கீழே மெத்தை விரித்து சுவரோடு சாய்ந்து அமர்ந்திருந்தவள் விடிவிளக்கின் ஒளியின் அவளுக்கான மடலை விரித்தாள்.

 

****

அன்பின் தீ …

உன் பதில் வரமுன்னே இன்னும் ஒன்றை எழுதியும் விட்டேன். கடைசியாய் பரிமாறிக் கொள்ளப்பட்ட மடல் பரிமாறப் படாமலேயே இருந்திருக்கலாமோ! எனக்கும் இத்தனை வலித்து உனை வலிக்கச் செய்திருக்க மாட்டேன். நம் உறவில் மனங்களே மிகையாய் பேசிக்கொண்டன. எமை அவையே நன்கு புரிந்தும் வைத்துக்கொண்டுள்ளன. இருந்தும் மனம் தாண்டி நாம் நம்மைத் தேடும் நிலை வந்தோம் என உணர்வேன்.

என்னை அறியாது எனை சூழ உள்ள வலையில் நானே தீனியாய் இடப்பட்டுள்ளேன். இரையாவதைத் தவிர வழியில்லை.மொத்தமாய் என் சுயம் தொலைக்கும் நிலை.

 

உன்னோடு பகிர்வதற்கென்ன, என் தந்தை எனக்கு அள்ளித் தந்த மொத்த நல்லதையும் அவர் கிள்ளித் தந்த இன் செயலில் தலை தாழ்த்தி இருக்கும் நிலை.

 

எரிமலையாயிருக்க எத்தனை கடல் ஆழத்தில் புதைந்து இருந்தும் வெளிவரத்தானே செய்கின்றது. இருந்தும், எப்போதும் அவருக்கோ, அவரால் என் அன்னைக்கோ இழி சொல் வர விரும்பாதவன்.

எனை நன்கறிவாய் தானே?

தீ, உனை பார்க்கமட்டுமேயாயும் வேண்டும் என்று உணரும் பல தருணங்கள் என்னில் உருக் கொண்டு அதை வலியோடு கடந்தும் விட்டேன். இருந்தும் இனி அதற்கான மனம் என்னிடம் இல்லை. பார்வை ஒன்றே போதும் என்று என்னால் இயலுமா தெரியவில்லை.

 

என்னால் மொத்தத்தையும் சரி செய்ய ஒரே வழி என்றால், அது என் திருமணமாகவே என் கண் முன்னே தீர்வாய்.அத்தனை கிட்டிய, என் மனம் நெருங்கிய ஓர் உறவுக்காய் நானும் இந்த முடிவை எடுத்தவனாய் உன் முன்னே குற்றவாளியாய் நிற்கிறேன்.

 

நீயாய் உன் மனம் தெளித்துக் காட்டிய பின்னே, உனக்கு நான் என் மனம் கூறி, இப்போது இத்தனை அவசரமாய் இப்படியாக எழுதிட, எனை நீ புரிவாய் நினைக்கிறேன். நானும் இப்போ குற்றவாளி தானே. உன் மனம் கொன்றேனோ மனம் அத்தனை கனமாய் இங்கே.

 

பகிர்ந்தவை நம் இரு மனங்களையே மொத்தமாய். அதை நன்கே அறிவேன். இருந்தும் இதைத் தொடர நம் வாழ்வில் பாதை அமைக்கப்படவில்லை. இடையே எனை வேறு திக்கில் போகச்செய்கிறது.

 

எத்தனை இலகுவாய் உனை பார்த்துத் தெரிந்திட வழியிருந்தும் நினைத்ததில்லை ஒருபோதும். இருந்தும் நினைக்கும் நேரம் விதி விடுவதாய் இல்லை.

 

எப்போதும் என்னோடு, என் உணர்வோடு, என் தமிழோடும் என் வரிகளில் எழுத்துக்களாய் நீயே இருப்பாய்.

 

உன் மனம் நோகச் செய்து விட்டேன். அதை உணர்கிறேன்.

தீ எனை மன்னிப்பாயா?

 

சிறப்பாய் வாழ்வாய், உன் துயர் துடைத்து, தோழமையாய், துணையென உன் ஒளியில் நிழலாய், உன் இருளுக்கு ஒளியாய்,நீ எதிர்பாரா நிகழ்வு உன்னில் சேர்ந்து முழுவடிவாய் உன் மொத்த சந்தோஷத்தையும் திருப்பி உனை சேர்க்கும். மகிழ்ந்திரு. என் மனம் இங்கே உனக்கு நலனே நாடும் எனக் கூறிக்கொண்டே இருக்கிறது.

அப்படியே ஆகட்டும்.

தீ,பணிகளை மேற்கொள்ளச் சிக்கல் தவிர்த்து எப்போதும் உன்னோடு இருக்கும் உன் நிதானத்தை கடைப்பிடித்திடு. இன்னும் உயர் நிலை அடைய வாழ்த்துக்கள் எப்போதும். இத்தனை சீக்கிரம் முடிந்து போகும் பயணம் என்றே என்றேனும் நினைத்தேனில்லை.

 

மகிழ்ந்திரு.

மன்னித்திடு.

 

இப்படிக்கு,

என்றும் அன்பின்,

உன் கவிஞன்.

(உனக்கு மட்டுமேயான இனி எவருக்கும் இல்லா )

*****

‘நன்கே அறிந்து தெளிந்தேன் கவிஞரே.நமை பார்த்து தேவர்கள் கிண்டல் செய்வார்களோ!’

உன்னவளாய் ஆக வரம் பெற்று உனக்கு அதைத் தெரியப்படுத்த விடாத விளையாட்டு என்னதிது?’

 

‘மகிழவா, உனை எண்ணி அழவா? என் செய்ய நானும்?’

 

கண்ணீர் நிறைத்து கன்னம் வழிய நெஞ்சோடு கடிதத்தை அணைத்துக்கொண்டவள்,’உன் இன்பமாயும் உன் துன்பமாயும் நானே ஆவேன் என்றே, நானும் நினைக்கவில்லை கவிஞரே.’

‘மனம் இணைந்தாயிற்று. மணம் கொள்வோம். இருந்தும் உன் தீயாய் இல்லை.உன் மடி அமர்ந்த மழலை தோழியாய்.’

 

அதிதி, ஆதிரையனை மணம் முடிக்க தன் மனதோடு முடிவெடுத்துக்கொண்டாள். இருந்தும், அவள் தான் அவன் தீ என்பதை இப்போதைக்குத் தெரியப்படுத்தப் போவதில்லை என்றும் உறுதிக் கொண்டாள். அவள் தீயென்று கூற, அவனால் எப்போதும் காதல் கொள்ள முடியாது போகும். அவர்கிடையே உருவாகியுள்ள பிணக்கே முன்னின்று அவனை வதைக்கும் என்பதை உணர்ந்தாள்.மனைவியாய் ஆகி அவன் மனம் மொத்தம் நுழைந்து, அதன் பின் தன்னை தெரியப்படுத்த முடிவெடுத்துக்கொண்டாள்.

 

//அதிதி அவன் மனம் நுழைவாளா?

ஆதிரையன் மனம்,தீயிருக்கும் இடத்தில் அதிதியை அனுமதிக்குமா? //

 

அதிதியின் மனம் இப்படியிருக்க, அங்கே ஆதிரையனோ கட்டிலில் தலையணைக் கட்டிக்கொண்டு எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். யோசனை மொத்தம் இன்று அதிதியோடு பேசி முடித்த உரையாடலையே சுற்றி வந்துகொண்டிருந்தது. ‘அவளை எப்போதும் எதற்காயும் இனி வருந்தவோ ஏங்கவோ விடக்கூடாது என்றுதானே இந்த முடிவு எடுத்துக்கொண்டேன்.தன்னால் முடியுமா? ‘ தன் மனக் குழப்பங்களூடே இரவைக் கடத்தினான்.

 

காலை எழுந்ததும் அதிதி சற்றே முகம் மலர்ந்து வளம் வருவதாய் உணர்ந்தாள் தீபா. அதே வேலை செல்வ நாயகமும் அதையே உணர்ந்திருந்தார். இருந்தும் கேட்கவில்லை.ஆனால் தீபாவோ,

“என்ன அதி, நைட் எதாவது முகத்துக்கு பூசினியா என்ன? “

“ஏன் என்னாச்சு?” என தன் கன்னம் நெற்றி தொட்டுப்பார்த்தவள்,கண்ணாடியில் சென்று பார்க்க,

“கையாள தொட்டு உணர முடியாது அதி. கண்ணால பார்க்கவும் உணர முடிது. அதச் சொன்னேன்.”

 

“என்ன தெரிது? “

 

“உன் முகத்துல எப்போவும் நா பார்த்தே இல்லாத பிரைட்னஸ் தெரிது. எதுனால தெரிஞ்சுக்கலாமா? “

 

“அப்டில்லாம் இல்லையே.” இன்னுமாய் அவள் கன்னம் சிவப்பேறியதைக் கண்டவள்,

” ஹேய் பாரு பாரு இப்போ கூட.”

 

தீபா சும்மாதான் இரேன்.” அவளை விட்டு நகரப்பார்க்க,

 

“நோ நோ பொய்னா அப்பாவைக் கேளு’

‘அப்பா நீயே சொல்லேன், இஸ் தேர் எனிதிங்? “

“யெஸ் மா.தேர் இஸ் சம்திங்.” செல்வ நாயகமும் சிரித்துக்கொண்டே சொல்ல, “செல்வாப்பா யூ டூ” எனக் கேட்டவளுக்கு மனதில்,

‘அதி இப்படியா காட்டிக்கொடுப்ப?’தன்னையே குட்டிக்கொண்டாள்.

 

அதிம்மா. நாம கிளம்பனும், இப்போவே கிளம்பி பேனாதான் சரியா இருக்கும்.”

 

 

“சாப்பிட்டே கிளம்பலாம்ப்பா. தீபாவுக்கு வழில சாப்பிட்டா ஒத்துக்கொள்ளாது.” அவள் பேசிக்கொண்டிருக்கவுமே, அவள் அலைபேசி ஒலித்தது. ரேவதி தான் அழைத்திருந்தார்.

“ஹலோ அத்தை. “

“அதி, பகல் சாப்பாடு சமைக்காத, நான் தீபாக்கு சமச்சிருக்கேன். திரும்ப எப்போ வருவாங்களோ அதான்.ஆதிகிட்ட கொடுத்து அனுப்புறேன். “

 

“அத்தை, உங்களுக்கு எதுக்கு சிரமம்.நான் சமைச்சுப்பேன்.”

 

“அதி எதுக்கு எப்போவும் என்னை பிரிச்சே பார்க்குற?’அவர் வருந்திப் பேசவுமே அந்தப்பக்கமாக,

“எதற்கு எப்போப்பாரு அவகிட்ட இப்டில்லாம் பேசிட்டு இருக்க? அவங்களுக்கு சலித்துப் போகாதா?”

ஆதிரையன் கூறுவது இவளுக்கு நன்றாகக் கேட்க முடிந்தது.

 

“என் மனசை புரிஞ்சிக்கிறியா நீ, இங்க கொண்டு வந்து விட்ட, அத்தோட உன் வேலை முடிஞ்சதுன்னு என்னை விட்டுட்ட. நானும் தனியா சுவரையே எவ்வளவுன்னுதான் பார்த்துட்டு இருப்பேன். உங்கப்பா எவ்வளவு வேலை இருந்தாலும் ஒரு வேளை சாப்பாடாவது என்கூட உட்கார்ந்து ஒன்னா சாப்பிட்டு, எனக்காக ஒரு பத்து நிமிஷமாவது கொடுப்பாங்க. ஆனா நீ? என்னைக் கொண்டுபோய் அங்க வீட்ல விற்று. நான் இருந்துப்பேன்.”

 

ரேவதி மனதிலிருந்த வருத்தத்தை, அதிதியும் அழைப்பிலிருந்ததை மறந்து பேசிவிட்டார்.

“அம்மா!” ஆதிரையன் ஏதோ கூற வர,

“ஒன்னும் பேச பக்கத்துல வராத போய்டு.” கண்ணைத் துடைத்துக்கொண்டு அவனோடு முகம் திருப்பியவர் அப்போதுதான் தன் செவியோடு அலைபேசியை உணர்ந்தார்.

“அதி “

“அத்தை, ரொம்ப சாரி. உங்களை கஷ்டப்படுத்திட்டேன் “

 

“அப்டில்லாம் இல்லடா. நான்தான் அதிக உரிமை எடுத்துட்டேன் போல. சரிம்மா வச்சுர்றேன் “

என அலைபேசியைத் துண்டித்தார். அதிதியின் முகம் சட்டென்று மாறிட,

“என்னாச்சுமா?” என செல்வ நாயகம் கேட்டார்.

“ஒன்னில்லப்பா. மதியத்துக்கு அத்தை சமைச்சு அனுப்புறாங்களாம், உங்களை எல்லாம் சாப்பிட்டே கிளம்ச் சொல்ராங்க. “

“அச்சோ எதற்குமா அவங்களுக்கு வீண் சிரமம்.”

“அதைத்தான் நானும் சொன்னேன் கோவிச்சிட்டாங்க போல.”

 

“சரி போறப்ப அவங்களை பார்த்து சொல்லிட்டு போகலாம்.”

 

மணி பன்னிரண்டு தாண்டும் போதே ஆதிரையன் உணவு எடுத்துக்கொண்டு வந்து விட்டான். அதிதி உள்ளறையில் இருக்க அவன் வரவுமே கண்ட சுமன் அவனை உள்ளே அழைத்துச் சென்றான்.

“கிளம்பிட்டிங்களா சுமன்,இன்னும் இரண்டு நாள் இருந்துட்டே போலாமே.”

 

“நாளைக்கு காலையிலேயே மீட்டிங் இருக்கு, சோ, இப்போ பேனாதான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிட்டு போலாம். அதோட தீபாக்கும் ஒரேதா ட்ராவலிங் ஒத்துக்குமா தெரில.மெதுவாகத்தான் போகணும். “

 

“ஓஹ்! இன்னொரு நாள் கண்டிப்பா வந்து ஒருவாரம் இருந்து என்ஜோய் பண்ணிட்டு போக வரனும்.

” கண்டிப்பா.நீங்களும் வீட்டுக்கு வரவேண்டும். “

 

உள்ளே அதிதிக்கு இவன் குரல் கேட்டதும் உடலில் ஏதோ இனம் புரியா படபடப்பு.

“ஹேய்! ஹண்ட்ஸம் வந்திருக்காரு. வீட்டுக்கு வந்தவங்க கூட பேசாம இங்க நின்னு எதுக்கு முழிக்கிற? “

 

‘இன்று அவனுக்குப் பதில் கூறச் சொன்னானே. என்னவென்று பேச?’

யோசித்துக்கொண்டே முன்னறைக்குச் செல்ல தாமதிக்க,

“அதி,நீ இன்றைக்குச் சரியில்லை, ஆமா சொல்லிவிட்டேன். ஏதோ இருக்கு. திருட்டுத்தனம் ஏதோ பண்ற. மறைக்க தெரியாம முழிக்கிற.”

 

“அச்சோ அப்டில்லாம் ஒன்னில்ல.”அதி கூற,

 

“அதி, ஆதி தம்பி வந்திருக்கு. குடிக்க எதாவது கொண்டுவாம்மா. “

 

“அதி, அப்பா உன்னை வரவாம்.” தீபா கூற,

“ஹான்? என்னடி “

 

“என்ன நொன்னடி, அப்பா வர சொல்ராங்க.”

 

“இதோ வரேன் ப்பா.” கூறிக்கொண்டு முன்னறைக்குச் சென்றாள்.

 

அவனை, பார்த்துப் புன்னகைக்க, அவனும் பதிலுக்குப் புன்னகைத்தவன்,

“நான் கிளம்புறேன் சார்.” என எழுந்தவன்,

 

“மில்ல கொஞ்சம் வேலை இருக்கு, நாளைக்கு என்னால இருக்க முடியுமா தெரியல,இன்னிக்கே முடிக்கணும்.”

கூறிக்கொண்டே அதிதியைப் பார்க்க இவளோ அவனை முறைக்க,

 

“சரிப்பா.ஒரு காபி குடிச்சிட்டு போலாம் இரு.”

 

கண்டிப்பா சார்.அடுத்த வாட்டி நீங்க வர்றப்ப விருந்தே சாப்பிடலாம். எனக் கூறி அதிதியை ஓர் பார்வை பார்த்து விடைப்பெற்றான்.