இதயம் – 19

eiHJN6N67051-e2148611

சக்தியின் வீட்டு ஹாலின் நடுவே போடப்பட்டிருந்த ஷோபாவில் களைந்து போன தலைமுடியோடும், அழுதழுது சிவந்து போன கண்களோடும் வளர்மதி அமர்ந்திருக்க, அவளருகில் வராத கண்ணீரைத் துடைத்து விட்டபடியே மலர்விழி அமர்ந்திருந்தாள்.

தன் மனைவி அழுவதைப் போல பாவனை செய்து கொண்டிருப்பதைப் பார்த்து தன் பற்களைக் கடித்துக் கொண்ட வெற்றி, ‘அக்காவும், தங்கச்சியும் என்னம்மா ஆக்ட் கொடுக்குறாங்க. இந்த வாயாடி வனஜாகிட்ட அதற்கிடையில் பூஜா இங்கே வர்ற விடயத்தை என் பொண்டாட்டி பத்த வைச்சுட்டா போல. அதுதான் இவ இப்படி பத்ரகாளி மாதிரி வந்து நிற்கிறா. பாரு செய்யுறதை எல்லாம் செஞ்சுட்டு ஒண்ணுமே தெரியாத அப்பாவி மாதிரி அழுது டிராமா போடுறா.
இதில் நடு நடுவே எனக்கு வேறு திட்டிக்கிட்டே இருக்குறது, ஆனாலும் பரவாயில்லை டிராமாவா இருந்தாலும் அக்காவும், தங்கச்சியும் அழுவுறதைப் பார்க்கும் போது அப்படியே குளுகுளுன்னு இருக்கு’ தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கும் விடயங்களை எல்லாம் வாய் விட்டு வெளியே சொல்ல முடியாதே என்கிற கவலையான உணர்வுடன் அங்கே அமர்ந்திருந்த தன் மனைவியைப் பார்த்துக் கொண்டு நிற்க, மறுபுறம் வளர்மதி யாராவது தன்னிடம் ஏதாவது கேட்பார்கள் என்று எண்ணியபடியே அங்கே நின்று கொண்டிருந்த எல்லோரையும் ஒரு முறை அழுத்தமாக நோட்டம் விட்டாள்.

அவளது அழுகையையும், அழுத்தமான பார்வையையும் அங்கே நின்று கொண்டிருந்த யாரும் பொருட்படுத்தவே இல்லை என்பதைப் புரிந்து கொண்டு இன்னும் சிறிது சத்தமாக அழத் தொடங்கியவள் தன் அக்காவின் தோளில் சாய்ந்து கொள்ள, “மதி அழாதேடா. உனக்கு இந்த அக்கா இருக்கேன்டாம்மா. நீ எதற்குடாம்மா இப்படி அழற? உன்னை மாதிரி ஒரு நல்ல பொண்ணைத் தவற விட்டுட்டோமேன்னு அவங்க தான் டா அழணும்” என்றவாறே அவளை சமாதனப்படுத்துவது போல சக்தியை ஓரக்கண்ணால் பார்த்த படி மலர்விழி கூறவும்,

தன் கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தவள், “நான் என்ன அக்கா பாவம் பண்ணேன்? எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கணும்? உனக்கு கல்யாணம் ஆன நாளிலிருந்து சக்தி உனக்குத் தான், நீ தான் இந்த வீட்டுக்கு இரண்டாவது மருமகள்ன்னு சொல்லி சொல்லி என் மனதில் ஆசையை வளர்த்துட்டு இப்போ இப்படி என்னை ஏமாற்றுனா நான் என்னக்கா பண்ணுவேன்? நீங்க எல்லோரும் தானே என் மனதில் இந்த ஆசையை வளர்த்தீங்க?” என்று கேட்க,

“என்னது?” அத்தனை நேரம் அமைதியாக நின்று கொண்டிருந்த சந்திரா தன் சேலை முந்தானையை உதறிக்கொண்டு அவள் முன்னால் வந்து நிற்க அவரைப் பார்த்ததும் அக்கா, தங்கை இருவரும் சட்டென்று அமைதியாகிப் போயினர்.

“ஏம்மா வளர்மதி, இப்போ நீ என்ன சொன்ன? கொஞ்சம் மறுபடியும் சொல்லுறியா?”

“அது…அத்தை…அது… அக்கா அப்படி சொன்னாங்கன்னு சொல்ல வந்தேன்”

“ஆஹ், அப்படி ஒழுங்காக சொல்லணும். இதோ பாரு வளர்மதி, அன்னைக்கு ஏதோ உன் அம்மா, அப்பா திடீர்னு வந்து உனக்கும், சக்திக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாமான்னு கேட்டதும் உடனே எதுவும் மறுத்து சொல்லிடக்கூடாது, தானாக வர்ற சம்பந்தத்தை தட்டி விடக்கூடாதுன்னு தான் சக்திக்கிட்ட ஒரு தடவை பேசிட்டு சொல்லுறேன்னு சொன்னேன். எப்போ அவனுக்கு இந்த சம்பந்தத்தில் விருப்பம் இல்லைன்னு தெரிந்ததோ அப்போவே உங்க அம்மா, அப்பா கிட்ட இது சரி வராதுன்னு சொல்லிட்டோம். இப்படி எல்லாம் முடிந்த பிறகு ஒரு நல்ல விடயம் நடக்கப் போகும் நேரத்தில் நீ இப்படி அபசகுனம் மாதிரி ஆராத்தி தட்டை தள்ளி விட்டது எல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை. நீ இப்படி ஒரு வேலை பார்த்த நேரமே உன்னை வெளியே அனுப்பி இருப்பேன். ஏதோ என் மகன் வெற்றியோட முகத்திற்காக பொறுமையாக இருக்கேன். இனிமேல் இப்படியான வேலைகளை எல்லாம் செய்யும் பழக்கத்தை மாற்றிக்கோ.
அப்புறம் சக்திக்கும், பூஜாவுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. நான் சொல்றது புரியுதா? கல்யாணம் ஆகிடுச்சு. இனி பூஜா தான் இந்த வீட்டு மருமகள். இந்த விடயத்தை எப்போதும் நீ ஞாபகத்தில் வைத்துக் கொள்ளணும். சும்மா இப்படி தலைவிரி கோலத்தோடு காலங்காத்தால வந்து எல்லோரையும் நீ பயமுறுத்த தேவையில்லை. உன் அக்காவோடு ஏதாவது பேசணும்னா வந்து பேசிட்டு போ. உனக்குத் தேவையில்லாத விடயங்களில் எல்லாம் இனி மூக்கை நுழைக்குற வேலை வைச்சுக்காதே” வளர்மதியைப் பார்த்து எச்சரிப்பது போல கூறி விட்டு சந்திரா தன் முகத்தை திருப்பிக் கொள்ள, அத்தனை பேரின் முன்னிலையில் அதுவும் புதிதாக அந்த வீட்டிற்கு வந்திருக்கும் பூஜாவின் முன்னிலையில் தன்னை அவர் அப்படி பேசிவிட்டாரே என்கிற கோபத்துடன் அவரை முறைத்துப் பார்த்தவள் சக்தியையும், பூஜாவையும் பார்வையாலேயே எரித்து விடுவது போல பார்த்துக்கொண்டு அங்கிருந்து வேகமாக வெளியேறிச் சென்றாள்.

ஏதோ புயல் அடித்து ஓய்ந்ததைப் போல அந்த இடம் சிறிது நேரத்தில் அமைதியாக விட, அந்த அமைதியான சூழ்நிலையைக் கலைப்பது போல தன் அண்ணி பூஜாவின் அருகில் வந்த மீரா, “அண்ணி, நீங்க வாங்க. நான் உங்களுக்கு உங்க ரூமைக் காட்டுறேன். அம்மா நான் அண்ணிக்கு நம்ம வீட்டை சுற்றிக் காட்டுறேன். நீங்க சூப்பராக எல்லோருக்கும் லஞ்ச் ரெடி பண்ணுங்க. கம் ஆன் மா, பாஸ்ட், பாஸ்ட். எதற்கு எல்லோரும் புடிச்சு வைச்ச சிலை மாதிரி இருக்குறீங்க. போய் அடுத்த அடுத்த வேலையைப் பாருங்கபா” என்றவாறே அந்த இடத்தின் நிலையை தன்னால் முடிந்த மட்டும் இயல்பாக மாற்றுவது போல பேசி விட்டு அங்கிருந்து புறப்படப் போனவள்,

பின்னர் சட்டென்று ஏதோ நினைவு வந்தவளாக தன் அண்ணன்கள் இருவரும் நின்று கொண்டிருந்த புறம் திரும்பி, “வெற்றிண்ணா, சக்திண்ணா, அண்ணியோட லக்கேஜ் எல்லாம் வெளியே காரிலேயே இருக்கு. நீங்க இரண்டு பேரும் அதை எல்லாம் எடுத்துட்டு வந்துடுங்க. சரியா?” சிறு புன்னகையுடன் அவர்களைப் பார்த்து தலையசைத்து விட்டு பூஜாவுடன் இணைந்து படியேறிச் சென்று விட, வெற்றியும், சக்தியும் ஒருவரை ஒருவர் பாவமாகப் பார்த்துக் கொண்டு நின்றனர்.

“பார்த்தியா வெற்றிண்ணா, அந்த இறாவுக்கு எவ்வளவு கொழுப்பு? நம்ம இரண்டு பேரையும் லக்கேஜ் தூக்கிட்டு வர சொல்லிட்டு அவ ஏதோ மகாராணி மாதிரி போறா. இப்போ எதுவும் நம்ம பேச மாட்டோம்னு தானே இப்படி எல்லாம் அவ பண்ணுறா? அந்த இறாவுக்கு இருக்கு கச்சேரி”

“அட விடு சக்தி. நமக்கு இதெல்லாம் பழகிப் போன விடயம் தானே? அதோடு நாம தூக்காத லக்கேஜா, என்ன? என் ஆர்ம்ஸை பார்த்தியா? எல்லாம் என் ஆசை மனைவியோட லக்கேஜ் தூக்கி வந்த ஆர்ம்ஸ்” தன் கைகள் இரண்டையும் தூக்கி பயில்வான் போல் வைத்துக் கொண்டு நின்ற தன் அண்ணனைப் பார்த்து தன் தலையில் அடித்துக் கொண்ட சக்தி,

“அண்ணா, நீ ஒரு டாக்டர். பாடி பில்டர் இல்லை” என்று கூற,

அவனோ, “அட ஆமா. நான் சர்ஜன் இல்லை?” என்று கேட்டு விட்டு தன் தலையில் தட்டிக் கொண்டான்.

“அட பாவி. உன் கிட்ட வர்ற நோயாளிங்க எல்லாம் ரொம்ப பாவம்டா. உன்னையும் ஒரு டாக்டர்ன்னு நம்பி வர்றாங்களே. அந்த ஆளுங்களை எல்லாம் நினைத்தால் எனக்கு ரொம்ப பாவமாக இருக்கு”

“அதெல்லாம் அவங்க விதிடா கண்ணா. ஆனாலும் எங்க ஹாஸ்பிடலில் நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட், தெரியுமா?”

“ஆமா, எங்கே கண்டிப்பாக நடந்துக்கணுமோ அங்கே அப்படி நடக்கிறதை விட்டுட்டு யாரோ ஒரு அப்பாவியைப் பிடித்து உங்க கோபத்தை எல்லாம் காட்ட வேண்டியது. மேய்க்கிறது எருமை அதில் என்ன பெருமை?”

“உனக்கு அதெல்லாம் இப்போ புரியாது சக்தி சார். இப்போ தானே உங்களுக்கு கல்யாணம் ஆகி இருக்கு. போகப் போக நீங்களும் இந்த சங்கத்தில் இணைந்து கொள்ளத்தான் போறீங்க. அப்போ இந்த அண்ணணோட கஷ்டம் உனக்குப் புரியும். அப்புறம் முக்கியமான விடயம். வாழ்த்துக்கள்” என்றவாறே வெற்றி சக்தியின் கையைப் பிடித்து வாழ்த்துத் தெரிவிக்க,

அவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவன், “இப்போவாச்சும் உனக்கு வாழ்த்து சொல்லணும்னு தோணுச்சே, அதுவரைக்கும் சந்தோஷம்” என்று கூற,

பதிலுக்கு அவனைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவன், “இது நீ கல்யாணம் பண்ணிக்கிட்டதற்கு சொல்லும் வாழ்த்து இல்லை தம்பி. தனியாக புலம்பும் கணவன்மார் சங்கத்திற்கு வரவேற்கும் வாழ்த்து” என்று கூற, அவனோ சிரித்துக் கொண்டே தன் அண்ணனின் தோளில் அடித்து விட்டு பூஜாவின் உடைமைகள் நிறைந்த பெட்டியை எடுத்துக் கொண்டு தன் அறையை நோக்கி நடந்து சென்றான்.

அங்கே அவனது அறையில் மீரா சொன்ன விடயம் ஏதோ ஒன்றைக் கேட்டு பூஜா வாய் விட்டு சிரித்தபடி அமர்ந்திருக்க, அவளது புன்னகை நிறைந்த முகத்தைப் பார்த்ததுமே சக்தியின் கையிலிருந்த பெட்டி சட்டென்று நழுவி விழுந்து அவனருகில் நின்று கொண்டிருந்த வெற்றியின் காலைப் பதம் பார்த்தது.

“ஐயோ அம்மா! என் காலை உடைச்சுட்டியேடா பாவி. உனக்கு நான் என்ன டா பாவம் பண்ணேன்? என் கால் போச்சே” தன் காலில் பெட்டி விழுந்த வேகத்தில், அடிபட்ட காலை ஒற்றைக் கையால் பிடித்துக் கொண்டு துள்ளிக்குதித்த வண்ணம் வெற்றி சத்தமிட, மறுபுறம் அவனருகில் நின்று கொண்டிருந்த சக்தியின் செவிகளுக்கு அந்த சத்தம் எதுவுமே கேட்கவில்லை.

மாறாக அவனது கவனம் முழுவதும் பூஜாவின் முகத்திலேயே நிலைகுத்தி நின்றது.

வெற்றியின் சத்தம் கேட்டு மீராவும், பூஜாவும் தங்கள் பேச்சை அப்படியே நிறுத்தி விட்டு பதட்டத்துடன் அவர்களை நோக்கி நடந்து வர, தன் காலில் ஏற்பட்ட வலி தாளாமல் அங்கிருந்த சுவற்றைப் பிடித்துக் கொண்டு தன் தம்பியைத் திரும்பிப் பார்த்தவன் அவனது பார்வை நிலைகுத்தி நின்ற புறத்தைப் பார்த்து விட்டு சட்டென்று அவனது தோளில் வேகமாக அடித்து வைத்தான்.

வெற்றியின் அடியின் பலத்தினால் தன் தோளை நீவி விட்டபடியே அவனைக் கோபமாகத் திரும்பிப் பார்த்த சக்தி, “நீயெல்லாம் ஒரு அண்ணனா? கூடப் பிறந்த தம்பிக்கு இப்படி அடிக்கிற?” என்று கேட்கவும்,

அவனது கழுத்தை நெறித்து விடுவது போல தன் கையைக் கொண்டு சென்று விட்டு பின்பு தன் கையை இறக்கிக் கொண்டவன், “அதை நான் உன் கிட்ட கேட்கணும் டா கிராதகா. நான் உனக்கு என்னடா பாவம் பண்ணேன்? இம்மாம் பெரிய பெட்டியைத் தூக்கி என் பிஞ்சுக் காலில் போட்டுட்டியேடா” என்று கூற, அவனோ, “என்னது அது உன் காலா? நான் ஏதோ மேட் புதுசு போல ரொம்ப சாஃப்டா இருக்குன்னு இல்லையா நினைத்து வைத்தேன்” எனவும், இப்போது வெற்றியின் பார்வை அவனை இன்னமும் கோபமாக நோக்கியது.

அவர்கள் இருவரும் தங்கள் பிரச்சினையைப் பற்றி பேசிக் கொண்டு நிற்கும் அந்த நேரத்திற்குள் அவர்கள் முன்னால் வந்து நின்ற மீரா மற்றும் பூஜா அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நிற்க, மறுபுறம் தங்கள் முன்னால் இரண்டு நபர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதை கண்டும் காணாதது போல வெற்றியும், சக்தியும் தங்கள் பேச்சை வளர்த்துக் கொண்டே சென்றனர்.

இவர்கள் இருவரையும் இப்படியே விட்டால் எதுவும் நடக்காது என்று தனக்குள் முடிவெடுத்துக் கொண்டவளாக, தன் அண்ணன்கள் இருவரையும் சமாதானம் செய்வது போல அவர்கள் இருவருக்கும் இடையே வந்து நின்று கொண்ட மீரா, “சரி, சரி, சரி. அது தான் ஏதோ தெரியாத்தனமாக எல்லாம் நடந்துடுச்சு, அதற்காக சின்னப் பசங்க மாதிரி இப்படி இரண்டு பேரும் அடிச்சுக்குவீங்களா? ஆளுங்க தான் பார்க்க பனைமரம் மாதிரி வளர்ந்து இருக்கீங்க, ஆனா மேல் மாடி சுத்தமாக காலி. ஒரு பெட்டியைத் தூக்கிட்டு வரச் சொன்னா அதற்கு இவ்வளவு அக்கப்போரா?” என்று கேட்க, வெற்றியும், சக்தியும் ஒருவரை ஒருவர் பார்த்து ஜாடை காட்டி விட்டு மீராவின் காதை இருபுறமும் பிடித்துக் கொண்டனர்.

தன் அண்ணன்கள் இருவரையும் சமாதானம் செய்து விட எண்ணி வந்து இப்போது அவர்களுக்கு நடுவில் வீணாக தான் மாட்டிக் கொண்டு விட்டோமே என்று தன் தலையில் கை வைத்துக் கொண்டு மீரா நிற்க, அந்த அண்ணன் தங்கை விளையாட்டைப் பார்த்து பூஜா தன் மனதிற்குள் வெகுவாக ஏங்கிப் போனாள்.

தன் வீட்டில் தான் ஒற்றைப் பிள்ளையாக இருந்தாலும் அவளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பரசுராமனும், செல்வியும் தனிமையாக உணர விட்டதே இல்லை.

ஒரு அண்ணனாக, தம்பியாக, நண்பனாக ஒரு சில சமயங்களில் மாத்திரம் அப்பாவாக நடந்து கொள்ளும் பரசுராமனும், எப்போதுமே ஒரு உற்ற நண்பியாக நடந்து கொள்ளும் செல்வியுமே அவளது சொந்தம், நட்பு எல்லாமே.

அப்படியான ஒரு பாசத்தை தன் மீது காட்டியவர்களை எதிர்த்து அவள் செய்து கொண்ட திருமணத்தினால் இன்று சொந்தங்கள் இருந்தும் தனிமரமாக நிற்க வேண்டிய தன் நிலையை எண்ணிக் கவலை கொண்டவள் தன் கலங்கிய கண்களை மறைக்க எண்ணி சட்டென்று அங்கிருந்து விலகிச் சென்று விட, பூஜாவின் மாற்றத்தை பார்த்துக் கொண்டு நின்ற சக்தி தன் விளையாட்டைக் கை விட்டு விட்டு அவளைப் பின் தொடர்ந்து சென்றான்.

சக்தியும், பூஜாவும் உள்ளே சென்ற பின்னர் தாங்கள் அங்கே நிற்பது சரியில்லை என்பதைப் புரிந்து கொண்டு மீராவும், வெற்றியும் தங்கள் அறையை நோக்கி சென்று விட, மறுபுறம் ஹாலில் நின்று கொண்டிருந்த மலர்விழியின் பார்வை அங்கே நடந்தவற்றை எல்லாம் நன்றாகவே கவனித்துக் கொண்டது.

ஏற்கனவே தன் தங்கை இருக்க வேண்டிய இடத்தில் பூஜா வந்து விட்டாள் என்கிற கோப உணர்வுடன் இருந்தவளுக்கு, அவளது கணவனின் குடும்பத்தினர் பூஜாவுக்கு அளிக்கும் மரியாதை மற்றும் பாசத்தைப் பார்த்து இன்னமும் கோபம் அதிகரிக்கவே செய்தது.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல பூஜாவைப் பார்த்த நொடி முதல் அவளின் மேல் மலர்விழிக்கு இனம் தெரியாத கோப உணர்வு கொந்தளித்துக் கொண்டிருக்க, மறுபுறம் பூஜா தன்னை சுற்றி நடக்கும் எதைப்பற்றியும் யோசிக்க மனமின்றி தூரத்தில் தெரிந்த வானை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

பூஜாவின் ஓய்ந்து போன தோற்றம் சக்தியின் மனதை ஏதோ செய்ய, சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றவன் பின்னர் அவளை அழைக்க எண்ணி அவளது தோளில் கை வைக்கப் பார்த்து விட்டு பின்னர் தன் கையை இறக்கிக் கொண்டான்.

ஏற்கனவே தங்கள் இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தையே சரியில்லை என்னும் நேரத்தில் தான் செய்யும் சின்ன சின்ன செயல்கள் கூட அவள் கோபத்தை தூண்டி விடலாம் என்று எண்ணிக் கொண்டவன் தன் தொண்டையை சரி செய்வது போல இரும, பூஜா அவன் தன் அருகில் இருக்கிறான் என்று தெரிந்தும் அவனின் புறம் வேண்டுமென்றே திரும்பாமல் நின்று கொண்டிருந்தாள்.

அவளது ஓரக்கண் பார்வை தன் மேல் பட்டுத் திரும்பியதைப் பார்த்துக் கொண்டு நின்ற சக்தி அவளது கோபத்தை உணர்ந்தவனாக அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணியபடி அவளை அங்கேயே விட்டு விட்டு தங்கள் அறைக்குள் சென்று விட, பூஜாவிற்கு தான் அவனைப் பார்த்ததும் என்னவோ போல் ஆனது.

காலையில் தன்னைக் காணவில்லை என்று தெரிந்ததும் அவன் அடைந்த பதட்டமும், இப்போது தன் கோபத்தை உணர்ந்து தனக்கு தனிமை அளித்து விட்டு செல்லும் அவன் கண்ணியமும் அவள் மனதிற்குள் ஏதேதோ மாற்றங்களை செய்வது போல இருக்க, தன் தலையை உலுக்கிக் கொண்டு அந்த எண்ணத்தை தற்காலிகமாக தன் மனதில் இருந்து தள்ளி வைத்தவள் தன் வேடிக்கை பார்க்கும் பணியை மீண்டும் ஆரம்பித்தாள்.

சக்தியின் குடும்பத்தினருடன் பூஜாவுக்கு ஏற்கனவே சிறு நல்லுறவு காணப்பட்டிருந்தாலும் இப்போது இந்த திடீர் திருமணத்தின் பின் அவர்களுடன் முன்பு போல் அவளால் முழுமையாக ஒன்றிப் போய் விடமுடியவில்லை.

அதிலும் வளர்மதி காலையில் வந்து செய்து விட்டுச் சென்ற களேபரத்தின் பின் அவர்கள் எல்லோரையும் நேர் கொண்டு பார்க்கவே அவளுக்கு வெகு தயக்கமாக இருந்தது.

பூஜா என்னதான் தயக்கத்துடன் ஒன்றியும் ஒன்றாமலும் அவர்கள் எல்லோருடனும் பழகினாலும், சந்திரா மற்றும் மீரா அவளை ஒரு நிமிடம் கூட தனியாக அமர்ந்திருக்க விடவில்லை.

பகலுணவை முடித்து விட்டு வீட்டை சுற்றிக் காட்டுகிறேன் என்று விட்டு மீரா அவளுடன் நேரத்தை செலவழிக்க, மாலை நேரம் முழுவதும் சந்திரா தங்கள் குடும்ப விடயங்களைப் பற்றி பேசியே அவளை ஒரு வழி செய்து விட்டார்.

அவர்கள் எல்லோரும் நடந்து கொள்ளும் முறையைப் பார்த்து சில சமயங்களில் இவர்களால் எப்படி ஒரேநாளில் என்னை இந்தளவிற்கு ஏற்றுக்கொள்ள முடிந்தது என்று பூஜாவிற்கு தோன்றினாலும் தான் ஒரு தடவை வேலை விடயமாக இங்கே வந்த போது அவர்கள் நடந்து கொண்ட விதம் அவள் குழப்பத்திற்கு இலகுவாக விடையை வழங்கியிருந்தது.

‘தன் மகனின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணாக தான் இருந்த போதே தன்னுடன் அந்தளவிற்கு அன்பாக நடந்து கொண்டவர்கள் இப்போது தான் அவர்கள் மகனின் மனைவியாக உள்ளபோது இந்தளவிற்கு அன்பாக நடந்து கொள்ள மாட்டார்களா என்ன?’ என்று நினைத்துக் கொண்டவள் அவர்கள் தன் மீது காட்டும் பாசத்திற்காகவாவது சிறிது இயல்பாக தன்னைக் காட்டிக் கொள்ளலாம் என்று எண்ணி விட்டு அவருடன் இணைந்து பேசத் தொடங்க, அவள் இயல்பு நிலையை குலைப்பது போலவே அடுத்த நிகழ்வு அரங்கேறியது.

சக்தியின் வீட்டினர் எல்லோரும் அவர்கள் வீட்டு ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த நேரம் சக்தியின் தந்தை சண்முக பிரகாஷ், “கல்யாணம் தான் அவசரமாக நடந்துடுச்சு, அதனால ரிசப்ஷனை சரி கிராண்டாக வைக்கணும்னு நான் நினைக்கிறேன். நீங்க எல்லோரும் என்ன நினைக்குறீங்க?” பொதுவாக எல்லோரையும் ஒரு முறை நோட்டம் விட்டபடியே கேட்க, சக்தி சட்டென்று பூஜாவைத் திரும்பிப் பார்த்தான்.

அதேநேரம் பூஜாவும் சக்தியையே தான் பார்த்துக் கொண்டு நின்றாள், பாசமாக அல்ல, கோபமாக.

‘ஏற்கனவே எனக்கும், அவளுக்கும் வாய்க்கால் தகராறு, இதில் இந்த பிரச்சினை வேறா? ஏன் டாடி இப்படி பண்ணுறீங்க?’ தனது நிலையை எண்ணிக் கவலையுடன் தன் தந்தையின் புறம் திரும்பிய சக்தி,

“அதெல்லாம் இப்போ எதற்கு ப்பா? கொஞ்ச நாள் போகட்டுமே” என்று கூற,

“ஏன்? கல்யாணம் தான் எங்க கிட்ட கேட்காமல் பண்ணிக்கிட்ட. மற்ற விடயங்களையாவது எங்க ஆசைப்படி செய்யக்கூடாதா? நாளைக்கு எல்லோரும் இந்த அவசர கல்யாணத்தைப் பற்றி அவங்க இஷ்டத்துக்கு பேச முதல் நாமாகவே ரிசப்ஷனை வைத்து அவங்க வாயை அடைச்சுடணும்” என்றவாறே சண்முக பிரகாஷ் தன் மனைவியைப் பார்க்க, அவரோ சக்தியின் முகத்தை தயக்கமாகப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

“ஊரில் இருக்குறவங்களுக்கு பேச ஆயிரம் விடயம் கிடைக்கும் பா. அவங்களுக்காக எல்லாம் நம்மால் வாழ முடியாது. இங்கே ஏற்கனவே என்ன என்ன நடந்து இருக்குன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும், அப்படி இருக்கும் போது இப்போ இந்த ரிசப்ஷன் எல்லாம் வேண்டாமே”

“நீ எங்க பேச்சைக் கேட்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியா சக்தி? சின்ன வயதிலிருந்து உன் இஷ்டப்படி நடந்துக்க விட்டது ரொம்ப தப்பாக போயிடுச்சு. எல்லாம் உன் இஷ்டப்படி தான் நடக்கணும்னா பெற்றவங்க நாங்க எதற்கு இருக்கோம்?”

“அப்பா, ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? நான் உங்க பேச்சைக் கேட்க மாட்டேன்னு சொல்லலையே. இப்போதைக்கு இந்த ரிசப்ஷன் வேண்டாம், கொஞ்ச நாள் போகட்டும்னு தான் சொல்லுறேன்”

“சரி டா, சரி. உன் இஷ்டப்படி என்னவோ பண்ணு. உன் விருப்பத்துக்கு எல்லோரும் சம்மதம் சொல்லுறோம்ன்னு தானே இந்தளவிற்கு எங்களை வைத்து ஆட்டிப் படைக்குற? உன் அம்மா, அப்பா என்ன ஆசைப்பட்டா உனக்கு என்ன? உனக்கு உன் பிடிவாதம் மட்டும் தான் முக்கியம், நாங்க எல்லாம் உனக்கு வேண்டாதவங்களாக போயிட்டோம். இப்போ எல்லோரும் இருக்கும் போது அந்த அருமை உனக்குப் புரியாது,ஒரு நாள் நாங்க இல்லாமல் போனால் எங்க அருமை உனக்குப் புரியும்”

“அப்பா!”

“என்னங்க!” சண்முக பிரகாஷின் கோபமான பேச்சைக் கேட்டு சக்தி, வெற்றி மீரா மற்றும் சந்திரா சிறிது கண்டிப்போடு அவரைப் பார்க்க, அவரோ கோபமாகத் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றார்.

சண்முக பிரகாஷ் பேசிய விடயங்களை எல்லாம் கேட்டு சக்தி மனம் நிறைந்த கவலையுடன் அங்கிருந்த நாற்காலியில் சோர்வாக அமர்ந்து கொள்ள, அத்தனை நேரம் அங்கே நடந்தவற்றை எல்லாம் முகம் இறுகப் பார்த்துக் கொண்டு நின்ற பூஜா இறுதியாக அவர் சொன்ன, ‘இப்போ எல்லோரும் இருக்கும் போது அந்த அருமை உனக்குப் புரியாது,ஒரு நாள் நாங்க இல்லாமல் போனால் எங்க அருமை உனக்குப் புரியும்’ என்ற வார்த்தைகளை மீண்டும் மீண்டும் தனக்குள் நினைத்துப் பார்த்து விட்டு, பின்னர் ஏதோ முடிவுக்கு வந்தவளாக அவரின் முன்னால் சென்று நின்று கொண்டாள்.

தன் முன்னால் யாரோ வந்து நிற்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டவராக நிமிர்ந்து பார்த்த சண்முக பிரகாஷ் தன் முன்னால் நின்று கொண்டிருந்த பூஜாவைக் கேள்வியாக நோக்க, அவரைப் பார்த்து முயன்று புன்னகைத்துக் கொண்டவள், “அங்.. க்கும்…மாமா, நீங்க ரிசப்ஷன் வைப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் பண்ணுங்க. எனக்கு இந்த ரிசப்ஷன் வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. எனக்கு இதில் முழு சம்…மத..ம்” தட்டுத்தடுமாறி வார்த்தைகளைக் கோர்வையாக கோர்த்துக் கூறி விட்டு வேகமாக படியேறி சென்று அவளுக்கென கொடுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்து கொள்ள, சக்தியின் குடும்பத்தினர் மட்டுமின்றி சக்தி கூட அவள் சொன்னதை நம்பமுடியாதவனாக அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்……
**********
நெருங்கவும் இல்லை
விலகவும் இல்லை
நெஞ்சம் செய்யும் தொல்லை காதல்
தொடக்கமும் இல்லை
முடிவுகள் இல்லை
கடவுளை போலே காதல்
**********