இனிய தென்றலே – 12

இனிய தென்றலே – 12

தென்றல் – 12

கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்

காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே

இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா

நான் விழுந்தாலும் மீண்டும் எழ

இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே

என்னை விட்டாயே எங்கே செல்ல?

ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமைதானடி

அது தெருவில் ஓரம் நிறுத்தி

வைக்கும் பழுதான தேரடி

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி

உனக்கென வாழ்கிறேன் நானடி

 

அசோக்கிருஷ்ணா தனக்குள் வெகுவாய் இறுகிப்போய் அமர்ந்திருந்தான். மூன்று நாட்களாக மருத்துவமனையில் உள்நோயாளியாக இருப்பவன், யாரிடமும் பேசாமல் யாரையும் ஏறெடுத்தும் பார்க்காமல் தன்வருத்தங்களை எல்லாம் தனக்குள் புதைத்துக் கொண்டிருந்தான்.

அவமானத்தில் மனம் குறுகிப் போனவன், வேதனைகளை தனிமையில் கரைத்தான். குழப்பத்தால் கனிந்த மனத்தை தட்டிவிட்டு இயல்பை கொண்டுவர வெகுவாய் முயற்சித்தான். நிர்சலமான அமைதியை தன்னுள் கொண்டுவர திண்டாடிக் கொண்டிருந்தான்.  

அன்றைய இரவில், இவன் மயங்கி விழுந்தவுடன் வைஷாலி, பெருங்குரலெடுத்து ராமகிருஷ்ணனையும் தங்கமணியையும் அழைக்க, விரைந்து வந்தவர்கள், அசோக்கின் முகத்தில் தண்ணீர் அடித்து மயக்கத்தை தெளிய வைக்கப் பார்த்தனர். 

அரைமயக்க நிலையில் முழித்தவன், கிறுகிறுத்து அனைவரையும் உற்றுப்பார்க்க முயற்சிக்க,

“என்னடா நடந்தது? ஏன் கை அடிபட்டு இருக்கு? உனக்கு என்னம்மா ஆச்சு? முகம் எல்லாம் ஒரே ரத்தமா இருக்கு…” மகனின் கன்னத்தில் தட்டி பதபதைப்புடன் ராமகிருஷ்ணன் கேட்டார்.

“மாமா… இவரை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போவோம்… காயத்துக்கு மறந்து போட்ட பிறகு பேசலாம்” என்ற வைஷாலி, அவனை எழுப்புவதற்கான முயற்சியை மேற்கொள்ள,

“எனக்கு ஒன்னுமில்ல… தூங்கினா சரியாகிடுவேன்.” அரைமயக்க நிலையில் புலம்பியவன், எழுந்து நிற்கும்போது முழுதாய் மயங்கி மீண்டும் மனைவியின்மேல் சரிந்தான்.

போதையின் தாக்கம், இரத்தம் வெளியேறிய அயர்ச்சி, காயத்தின்வலி இவையெல்லாம் சேர்ந்து அவனை முடக்கிப் போட்டது.

மூவரும் சேர்ந்து அவனை காரில் ஏற்றும்வரை படாதபாடுபட்டுப் போயினர். தொடர்ந்து வந்த அவனது உளறலில் அனைவருக்கும் விழிபிதுங்கித்தான் போனது.

மகன் இப்படியெல்லாம் புத்திபிறழ்ந்து பேசுபவனா என்கிற உண்மையே, இன்றுதான் அவனைப் பெற்றவர்களுக்கு தெரியவர, அந்த அதிர்ச்சியே மேற்கொண்டு அவர்களை எதையும் யோசிக்க விடாமல் தடைசெய்தது.

தன்னையும்மீறி நடந்த அசம்பாவிதத்திற்கு மனைவியிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டே வந்த அசோக்,

“இப்படியெல்லாம் நடக்கக்கூடாதுன்னுதான், கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன். உன் லைஃப்ல, நான் வந்திருக்ககூடாது” என்ற புலம்பல்கள் குழறியபடியே வெளியேற, அவனை கட்டுப்படுத்துவதே மூவருக்கும் பெரும்பிரயத்தனமாகிப் போனது.

ஒருவழியாய் மருத்துவமனையில் அவனை அனுமதித்து, முழுமயக்க நிலைக்கு கொண்டு சென்ற பிறகுதான் சிகிச்சையை ஆரம்பிக்க முடிந்தது.

அதற்கடுத்து வந்த நாட்களில் அவனது உடல்நலம் தேறுவதற்கான சிக்கிசைகளை மட்டுமே மேற்கொள்ள,  அசோக் பெரும் படபடப்புடனும், குற்றவுணர்விலும் தனது குடும்பத்தாரை தவிர்த்தான். ஆம் இல்லை என்ற பதில் வார்த்தைகளைக்கூட தலையசைப்பில் கொடுத்தான்.

அவனது செயல்களில் பெரிதும் கவனம் சிதறிப்போக, மனநோய் மருத்துவரின் மேற்பார்வையில் சிகிச்சை தொடரப்பட்டது. 

முதலில் மருத்துவர் விசாரித்தது வைஷாலியைத்தான். மனைவி என்கிற முறையிலும், அடிபட்ட சமயத்தில் அவனுடன் இருந்தவள் என்ற நிலையிலும் விவரங்களை கேட்டறிந்தார்.

அவளும் அன்றைய தினம் நடந்த தர்க்கங்களையும், இருவரும் அறிமுகமான நாளிலிருந்தே, நடந்த அனைத்து சம்பவங்களையும் சுருக்கமாக ஒன்று விடாமல் மறைக்காமல் கூறிவிட்டாள்.

அடுத்து அவனை பெற்றவர்களிடம் விவரங்களை கேட்க ஆரம்பிக்க, அவர்களுக்கோ மகனுக்கு இப்படியொரு பின்னடைவு இருப்பதே தெரியாது என்று அறியாமையில் பரிதவித்து நின்றனர்.

பொதுவாக இந்தக்கால பெற்றோர்களின் செயல்பாடுகள் இப்படிதான். மகனோ, மகளோ, அவர்களுக்கான தனியறையை கொடுத்துவிட்டு, உலகை வாங்கிக் கொடுத்த மகிழ்ச்சியில் தங்கள் பொறுப்பினை நிறுத்திக் கொள்கின்றனர். அவர்களது வளர்ச்சியை வெளியில் இருந்தே பார்த்தே திருப்திபட்டும் கொள்கின்றனர்.

பதின்மவயதுக் குழந்தைக்கே தனியறை கொடுக்கும் பொழுது, இவன் தோளுக்குமேல் வளர்ந்தபிள்ளை, அதிலும் இலகரங்களில் சம்பாதிக்கும் கெட்டிக்காரன். இவனிடம் என்ன குறையிருக்க முடியுமென்ற எண்ணத்தில்தான் மகனை ஓரளவிற்குமேல் நெருங்காமல் தூரமாகவே நின்றுவிட்டனர் அசோக்கின் பெற்றோர்கள்.

அவனது ஒழுங்கற்ற பழக்க வழக்கங்களை கண்கொண்டு கண்டாலும், வற்புறுத்தி நிறுத்தியே ஆகவேண்டுமென்று கண்டித்தாலும், கேட்கும் நிலையை தாண்டியவனாய் அவன் மாறியிருக்க, இவனை பற்றிய முழுவிவரங்கள் எதையும் அறியாமல் இருந்தார்கள்.

இவன் மனைவி வைஷாலி, நேற்று வந்தவள். இன்னமும் முழுதாய் இவனை பற்றி தெரிந்து கொள்ளாதவள். மேம்போக்கான பழக்கத்தில், வயதிற்குண்டான மயக்கத்தில், மனதில் ஆசைகளை வளர்த்துக்கொண்டு இப்பொழுது கலக்கத்துடன் நிற்கிறாள்.

ஆகமொத்தம் இவனை முழுவதும் அறிந்தவர் என்று யாரும் இல்லாமல்போக, நோயாளியிடமே தனக்கு வேண்டிய விவரங்களை கேட்டுக்கொண்டு சிகிச்சையை மேற்கொள்ள ஆயத்தமானார் மருத்துவர்.

அதன் பொருட்டு அவர் பலவாறு கேள்விகள் கேட்டும், அசோக், கல்லாய் சமைந்து எந்தவொரு பதிலையும் முழுமையாகத் தராமல் மௌனம் சாதித்தான்.

இன்றும், தன்முன் உயிருள்ள சிலையாக அமர்ந்திருந்தவனை பார்த்த மருத்துவர், சலிப்படையாமல் தன்பணியை மேற்கொண்டிருக்கிறார்.

“மிஸ்டர் அசோக்… இந்த மாதிரி உணர்ச்சிவசப்படுறது அவ்வளவு சாதாரண விஷயமில்ல… உங்களுக்கு ஏற்பட்டுருக்கிற மனஅழுத்தம் உங்களை மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தையும் அழவைக்கும். நீங்க தனியா, இப்படி கவனத்தை சிதறி விட்டுட்டு இருந்தா, நீங்க, உங்க குடும்பத்த விரும்பல, அவங்கள மதிக்கலங்கிற தப்பான கண்ணோட்டத்துல உங்களை பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க…

அன்னைக்கு உங்ககை அடிபட்டதுகூட தெரியாம, உங்க மனைவிக்குதான் அடிபட்டிருக்குனு புலம்பி இருக்கீங்க… இது அதிக மனஅழுத்தத்துக்கான அறிகுறி…

இப்படி உங்களை, நீங்களே மறக்குற அளவுக்கு, உங்கமனசுல இருக்குற வருத்தம், பயம், அழுத்தம் என்னனு எங்களோட ஷேர் பண்ணிக்கிட்டாதான், மேற்கொண்டு எங்களால் மெடிசன் அண்ட் கவுன்சிலிங் கொடுக்க முடியும். எங்களோட கோவாப்ரெட் பண்ணுங்க மிஸ்டர்..!” என்று மருத்துவர் தொடர்ந்து வலியுறுத்தியும் எதையும் மனம்திறக்க மறுத்து விட்டான் அசோக்.

“ஜஸ்ட் வொர்க் டென்ஷன்தான் டாக்டர். நவ் ஐ யாம் நார்மல்… எனக்கு எந்த அழுத்தமும் இல்ல…” என்று பல்லிடுக்கில் வார்த்தைகளை உதிர்க்க,

“நீங்க நினைக்கிற மாதிரி இது ஈஸி இல்ல அசோக்… மனஅழுத்தம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒருவெறுமையை எப்பவும் உணர வைச்சு, உங்களை ஆபத்தான பாதைக்கு கூட்டிட்டு போயிடும்.

ஒரு ஃப்ரண்டா என்கிட்ட, நீங்க எல்லாமே சொல்லலாம். உங்க ரகசியங்கள் வெளியே போகாம பாதுகாக்குறது எங்க கடமை” என்று வெகுவாக சாதக பாதகங்களை விவரித்தாலும், தன்னிலையில் இருந்து சற்றும் மாறாமல் இருந்தான்.

“சாரி சர்… நீங்க சொல்ற அளவுக்கு என்கிட்டே அவ்வளவு சீரியஸ் விஷயம் எதுவும் இல்ல… நான் எப்பவும் போலதான் இருக்கேன்” சுவாரசியமற்ற பேச்சில் வெறுப்பும் சலிப்பும் மிகுந்து, நழுவிப்போகவே செய்தான்.

“பொய் சொல்ல முயற்சி பண்ணாதீங்க அசோக்.. கிட்டத்தட்ட ஒருவாரம் நீங்க இறுக்கத்தோடதான் இருக்கீங்கன்னு, உங்க பேரன்ட்ஸ் சொல்லிட்டாங்க…

எல்லாரும், எல்லாநாளும் சந்தோஷமா இருக்குறதில்ல…

ஆனால், ஒருத்தர் தொடர்ந்து ஒருவாரமா சோகமா இருந்து, அது அவரோட வாழ்க்கைய பாதிக்க வைக்குதுன்னா, நிச்சயமா அவர் மனஅழுத்தத்தால பாதிக்கப்பட்டு இருக்கிறார்னு அர்த்தம்.

இது அவ்வளவு சீக்கிரத்துல விடாது. ஹார்ட் அட்டாக், சூசைட் அட்டெம்ட் இந்த மாதிரியான ஆபத்துல கொண்டு போய்விடும். உங்களை பத்தி நினைங்க… உங்க குடும்பத்தை பாருங்க…” மருத்துவர் எத்தனையோ விதமாய் சொல்லியும் வாயை திறக்க மறுத்து, சுரத்தில்லாத முகத்தோடு அயர்ச்சியாய் தட்டிக் கழித்து விட்டான்.

அமைதியான சூழலில் ஒருவாரம் மருத்துவமனையில் தங்கட்டும், அதன் பிறகு மேற்கொண்டு யோசிக்கலாமென்று மருத்துவர்கூற சரியென்று ஒத்துக் கொண்டார் ராமகிருஷ்ணன்.

“எங்களை விட்டுத் தள்ளு! உன்னை நம்பி வாழ வந்திருக்கிற பொண்ணப் பாருடா… அவளுக்காக, நீ, உன்னை சரிபடுத்திகிட்டே ஆகணும் அசோக்!” வருத்தம் தோய்ந்த குரலில் ராமகிருஷ்ணன் வலியுறுத்த,

“அப்படி எங்ககிட்ட சொல்ல முடியாத அளவுக்கு எதை மூடி மறைக்க பாக்குற… உன்னை, நான் சரியா கவனிக்கலயா தம்பி?” என தங்கமணியும் ஆற்றாமையில் அழ, வைஷாலி திக்பிரமை பிடித்தவளாய் நின்றிருந்தாள். இவையெல்லாம் இவளுக்கு அதிர்ச்சி கலந்த புதிய விடயங்கள்தான்.  

உடலின் ஒவ்வொரு அணுவும் இனி வாழ்க்கை முழுவதும் இப்படிதான் போராட வேண்டுமா என்று நடுங்கத் தொடங்கியிருந்தது. தன்னிடம் ஒவ்வொரு முறையும் காட்டிய பாவனைகளும் அதன் வெளிப்பாடுதானா என்றென்னும்போது அவளையும் மீறி, அவனிடம் இரக்கம் கொண்டது பெண்மனம்.

சேதாரங்கள் அதிகமாக இருந்தாலும் வாழ்க்கையின் ஆதாரமே மீள்தலும் நீள்தலும்தானே… அவையெல்லாம்தான் இங்கே கேள்விகுறியாகி நிற்கின்றதே என்று உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தாள்.

மொட்டு விடும்போதே, உதிர்ந்து இல்லாமல் போகும் வாழ்வைதான் இத்தனை நாட்களாய் மனசுக்குள் கனவாய் வளர்த்துக் கொண்டேனா என்று பேதைமனம் ஓலமிட்டுக் கொண்டிருந்தது.

கோபத்தில் குழப்பிக் கொள்பவன், போதையில் உளறிக் கொட்டுபவன் என்றிவனை சாதாரணமாய் எண்ணிக் கொண்டிருக்க, அதற்கு நேர்மாறாக மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளான் என்று மருத்துவர் கூறும்பொழுது இவளால் மிரளாமல் இருக்க முடியவில்லை.

அதீத பயம், நம்பிக்கையின்மை, சொல்ல முடியாத ஏதோ ஒன்றை ஆழ்மனதிற்குள் புதைத்துக் கொண்டு, அதை ஜீரணிக்க முடியாமல் திண்டாடுவதின் வெளிப்பாடு, தீர்வே இல்லையென்று நினைக்கும்படியான கவலை என இவையெல்லாம்தான் அசோக்கின் மனஅழுத்தத்திற்கு காரணம் என்று தெளிவாக விளக்கி விட்டார் மருத்துவர்.

அவனது உள்மனது காயத்தை அறிந்து, அதை சரிசெய்தால் மட்டுமே இதிலிருந்து மீளமுடியும் என்றும், அதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது என்ற நம்பிக்கை மருந்தை அனைவருக்கும் அளித்து, அவனது வலியின் காரணத்தை  வெளிக்கொண்டு வர முயற்சியும் மேற்கொண்டார்.

சிக்கிச்சை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இவனுக்கு உணரவைக்க, எல்லோரும் பலவாறு விளக்கம் கூறிக் கெஞ்சினாலும் அசோக் அசையவில்லை. வேலைக்கான அழுத்தங்கள் மட்டுமே என்ற ஒற்றை காரணத்தைகூறி அவனை முற்றிலும் தனிமைப்படுத்திக் கொண்டான்.

மனைவியை அன்பாய் பார்ப்பவன் அன்றைய அசம்பாவிதத்தை நினைத்தே, அவமானத்தில் பேசாமல் தலைகுனிந்து கொள்வான். தயக்கமும் பதட்டமும் முன்னைவிட கூடுதலாக தாக்கத் தொடங்கியிருந்தது அவனுக்கு.

என்னை விட்டுப் போய் விடுவாளோ! விவாகரத்து கேட்டு என்னுடனான உறவை முறித்துக் கொள்வாளோ என்று  மனமும், என்னைப் போன்ற மனநோய் உள்ளவனுடன் வாழ்ந்து துன்பப்பட வேண்டாமென அவனது மூளையும் அவள் சார்பாகவே நினைத்து அதை சொல்லவும் செய்தான்.

“நான், உனக்கு வேண்டாம் ஷாலி! எல்லார்கிட்டயும் நான் மன்னிப்பு கேட்குறேன். உனக்கான புதுவாழ்க்கைய, நீ தேர்ந்தெடுத்துக்கலாம். அதுக்கு நான் பொறுப்பெடுக்குறேன்… நீ, இங்கே என்கூட இருக்க வேணாம், உனக்கு சேஃப் இல்ல…” அவனது இறங்கிய குரலில் ஏமாற்றமும் வேதனையுமாய் வந்து விழுந்தன வார்த்தைகள்.

ராமகிருஷ்ணன் மற்றும் தங்கமணியும்கூட, மகனின் நிலையை பார்த்து, அவளை கிராமத்திற்கு சிறிது நாட்கள் சென்றுவா என்றும் அவளது பாட்டியிடம் விவரங்களை கூறுவதாகவும் சொல்ல, வைஷாலி மறுத்து விட்டாள்.

“இந்த விவரத்த அவசரபட்டு ஊர்ல சொல்லி நெலமைய  சிக்கலாக்க வேண்டாம் மாமா! என் ஒருத்திக்கு பார்த்து, நம்ம ரெண்டு குடும்பமும் மனஸ்தாபத்துல நிக்கிற நிலைம வரவேண்டாம். எனக்கு, என் பாட்டியோட நிம்மதி முக்கியம்.

இந்த விசயத்த சொல்லப்போய், அவங்க மொத்தமா உடைஞ்சு போயிட்டா, என்னால தாங்கிக்க முடியாது. என்னோட வாழ்க்கை, என் புருசங்ன்கிற சுயநலத்தைவிட, ரெண்டு குடும்பத்தோட உறவும் நிம்மதியும் இதனால முறிஞ்சு போறத நான் விரும்பல…” என்று உறுதியாய் நின்று விட்டாள்.

உணர்வுகள் மரத்துப் போனநிலையில் வைஷாலி, கணவன் மீதான நேசம் பொங்கியதா இல்லையா என்ற ஆராய்ச்சியை மேற்கொள்ளவில்லை. அவனிடம் கரிசனத்தை தாண்டிய வேறெந்த பார்வையையும் அவள் படரவிடவில்லை.

பிரச்சனை பெரிதாகாமல் இருக்க என்ன செய்து எப்படி சமாளிக்க வேண்டுமோ என்ற சிந்தனைதான் மனம் முழுவதும் ஓடிக் கொண்டிருந்தது. நிச்சயமாய் இது, இன்னொரு கோணம்; வேறொரு பார்வைதான். கணவனை தவிர்க்க நினைக்கிறாளோ என்ற இரக்கமற்ற சுபாவமாய்கூட எண்ணத் தோன்றும்.

கணவனுடன் தான்இருந்த திக்திக் நிமிடங்களை நினைத்துப் பார்ப்பவளுக்கு இவனுடனான எதிர்கால வாழ்வு சாத்தியம்தானா என்ற பெருத்த சந்தேகம் வேர்விட்டு மரமாய் வளர்ந்திருந்தது. அதனால் அந்த உறவை வெட்டிவிட்டு செல்லவும் நினைக்கவில்லை. உணர்ச்சிகளை கொன்று போட்ட காதல் நினைவுகள் எல்லாம் உறைந்து கிடந்தது அவளுக்குள்…

மனதில் ஏதோ ஒரு உந்துசக்தி ஊக்குவிக்க,  நிமிர்வுடன்தான் அனைத்தையும் எதிர்கொண்டாள். கணவனின் முரண்பட்டநிலை, மருத்துவரின் ஆலோசனை, மாமனார் மாமியாரின் வாஞ்சைப் பேச்சுக்கள் என அனைத்தையும் ஒரேமாதிரியான மனோபாவத்துடன் ஏற்றுக்கொள்ளப் பழகிக் கொண்டாள்.

தன்னை மறந்து அசோக் கூறியவை யாவும் அழியாமல் மனதினில் பதியம் போடப்பட்டிருக்க, உணர்வுகள் செல்லரித்த நிலைக்கு வந்திருந்தாள் வைஷாலி.

முதலில் சிக்கல்களை களைய ஏதுவாக, பாட்டியிடம் இங்கிருக்கும் நிலையை மறைத்தாள். மற்றவர்களுக்கும் அதையே செய்யச் சொல்லி வற்புறுத்தினாள்.

கணவனிடம் தானாக நின்று பேசாவிட்டாலும் அவனது தேவைகளை முன்னிட்டு பேசத் தொடங்கினாள்.

“உனக்கு பாவம் பண்ணிட்டேன் வைஷாலி! இவன் எப்போ சரியாவான்னே தெரியலயே? இப்படி பிடிவாதம் பிடிச்சுட்டு ஒன்னும் சொல்லாம உட்கார்ந்திருக்கானே!” புலம்பிய தங்கமணிக்கு கண்ணீர் அருவியாய் கொட்டியது.

தனது கவனக்குறைவு மட்டுமே மகனின் இந்த நிலைமைக்கு காரணமென்று மருகிக் கொண்டிருந்தவர், இத்தனை அருமையான பெண்ணுடன் தன்மகன் வாழமாட்டேன் என்கிறானே என்ற ஆதங்கமும் ஒருசேர தாக்க, ஒரு பெண்ணின் நிர்கதியான நிலைமைக்கு காரணமான தனது முயற்சிகளை நினைத்து தன்னையே வெறுத்து கொண்டார்.

“நான், அன்னைக்கு வாய மூடிட்டு இருந்திருக்கலாம் எல்லாம் என் அவசரபுத்தி. ஒருபொண்ணோட வாழ்க்கைய கேள்விக்குறியாக்கி நிக்க வைச்சுடுச்சு” என்று மீண்டும் மீண்டும் அவரது புலம்பலை ஆற்றியும் தேற்றியும் பலனில்லாமல்போக, அவரின் கதறல்கள் நீண்டுகொண்டே போனது.

மருத்துவர்கள் குடும்பத்தார்களின் வலியுறுத்தல்களுக்கு எல்லாம் அசோக் அசைந்து கொடுக்கவில்லை. மருந்துகளை தொடர்ந்து உட்கொள்கிறேன் என்றும், ஆலோசனை(கவுன்சிலிங்) எல்லாம் தனக்கு தேவையில்லை, நான் மீண்டு விடுவேன் என்றும் பிடிவாதம் பிடித்தவன், வீட்டிற்கு செல்ல வேண்டுமென்று கத்த ஆரம்பித்து விட்டான்.

மாத்திரை மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்ளாமல் தட்டிக் கழித்தும், அனைவரையும் அனாவசியமாக பேசியும் தன்னை வெளியே அனுப்புமாறு நிர்பந்திக்க தொடங்கினான். புகையும் போதையும் கிடைக்காமல்போன அவஸ்தைகளும் சேர்ந்து, அவனை அமைதியிழக்க செய்தன.

வீட்டினருடன் ஏற்கனவே முகம் கொடுத்துப் பேசாத காரணத்தால் அவர்களின் அறிவுரைகள் எல்லாம், இவனுக்கு செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போனது.

வைஷாலியும் எந்தவொரு பிடிப்புமில்லாமல், அவன் போக்கிலேயே சென்று, ஒற்றை பதிலை சொல்லிக்கொண்டு வந்ததால், அவளாலும் கணவனை கட்டுப்படுத்த முடியவில்லை.

இவனது அடாவடிச் செயல்கள் பூதாகரமாக மாறி வருவதைப் பார்த்து, பொங்கிய அழுகையை அடக்கி நகம் கடித்து தன்னை மீட்டுக்கொள்ள, திண்டாடிப் போனாள். கணவனின் அருகில் செல்வதற்கே பயமும் நடுக்கமும் வந்து அவளை தடுமாறச் செய்தது.

இதற்கிடையில் அன்னபூரணிபாட்டி, மறுவீட்டு அழைப்பு என்று நச்சரிக்க தொடங்கிவிட, அனைவரும் கலங்கித்தான் போயினர்.

தற்பொழுது வேலை அதிகம் இருப்பதாககூறி ஒருவாறு தள்ளி வைத்தும், பலநண்பர்களின் வீட்டில் விருந்திற்கு செல்லவேண்டும் என்ற அதிகப்படியான காரணங்களை கூறியும் முடிந்தளவு ஒத்திப் போட்டனர்.

“மாப்பிள்ளை தம்பி சங்கடப்படுறார்னு நினைக்கிறேன் கண்ணு! நான் ஒருஎட்டு வந்து முறையா கூப்பிடுறேன். அவரும் சமாதானமாக வாய்ப்பிருக்கு. நான் கிளம்பி வர்றேன்…” பாட்டி தன்நிலையில் இருந்து மாறாமல்கூற, வீட்டு மனுஷியாய் வாவென்று அழைக்க முடியாமல் திணறிப் போனாள் பேத்தி.

“நீ வந்தாலும், உன் மாப்பிள்ளை தம்பிய பார்க்க முடியாது, அன்னம்மா… அவர் வேலை விசயமா மும்பை வரைக்கும் போயிருக்காரு…” முயன்று தன்இயல்பை மீட்டுக்கொண்டு பேச,

“சென்னையிலதானே வேலைன்னு சொன்னாங்க… இப்போ என்ன வெளியூருக்கு போயிருக்காருன்னு சொல்ற? கல்யாணத்துக்கு நிறையநாள் லீவெடுத்ததா தங்கமணி சொல்லிச்சே…” என்று அவர் விடாமல் நீட்டி முழக்க, ராமகிருஷ்ணன் அலைபேசியை வாங்கிக் கொண்டார்.

“அவரசவேலை அப்பப்போ வரும் பெரியம்மா… அந்த சமயம் லீவ்ல இருந்தாலும் போயாகவேண்டிய கட்டாயம் வரும். அப்படிதான் போயிருக்கான். நீங்க நினைக்கிற மாதிரி அவன் மனம் சங்கடப்பட்டு எல்லாம் ஊருக்கு வராம இல்ல…” என்று பலவிளக்கங்களை அளித்து பெரியவரை சமாதானப்படுத்தினார்.

“புது இடத்துல அவ்வளவு சீக்கிரம் என்பேத்தி ஒட்டிக்கமாட்ட தம்பி… மனசெல்லாம் அவ எப்படி உங்க வீட்டுல நடமாடுறான்னு பார்க்க தவிச்சு கெடக்கு… உங்ககிட்ட எப்படி நடந்துக்குறான்னு எனக்கும் தெரியனுமேயா… இவளும் ஒருநாளுக்கு ஒருதடவ சுருக்கமாவே பேசி முடிக்கிறாளா… இல்லாத நினைப்பெல்லாம் வந்து மிரட்டுது தம்பி..!” பாசத்துடன் பாட்டி உருக,  

“உங்க பேத்தி… இல்ல, இல்ல… என் பொண்ணு அருமையா இருக்கா. பெத்தவங்க இடத்துல எங்கள வச்சு பாருங்க பெரியம்மா. உங்க மனசு சஞ்சலம் எல்லாம் காணாம போயிடும்” நெகிழ்ச்சியாய்கூறி பாட்டியை அமைதிப்படுத்தினார்.  மாமனாரின் வார்த்தைகளை விழியகன்று கேட்ட வைஷாலியின் மனமெங்கும் அத்தனை பூரிப்பு…

விவரம் தெரிந்த நாளிலிருந்து தாய்தந்தையின் அன்பைக் கண்டு அனுபவித்திராத பெண், அரவணைப்பை தாங்கிய அன்பு வார்த்தைகளில் நெக்குருகிப் போனாள்.

எத்திக்கில் பாய்ந்தாலும், கடலில் கலந்து, தன்வாழ்நாளை நீட்டிக்கொள்ளும் நதியைப்போல அவளும் ஏதோ ஒருமுனையில் அந்த வீட்டு மனிதர்களோடு கலந்து விடவேண்டுமென்று அந்த நிமிடமே மனதிற்குள் பேராவல் கொண்டாள்.

ஆனால் இதற்கெல்லாம் உறுதுணையாய் தோள்கொடுக்க வேண்டியவனோ, தன்னை விட்டு விலகிவிடு என்று பார்க்கும் பொழுதெல்லாம் கோரிக்கை வைக்க, தன்ஆசைகளை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டாள்.

                                                     ******************************************************

அசோக், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் முடிந்த நிலையில் மருத்துவர், ராமகிருஷ்ணன் தங்கமணி வைஷாலி மூவரையும் பேச அழைத்தார்.

“பொதுவா நோயாளிக்கு மட்டுமே அதிக கவுன்சிலிங் தேவைப்படும். ஏதாவது ஒரு கேசுலதான், நோயாளியை சேர்ந்தவங்களுக்கும் ஆலோசனை கொடுக்க வேண்டியிருக்கும். தப்பா நினைக்க வேண்டாம் சார்… உங்களுக்கும் சின்ன ஆலோசனை சொல்றேன். ட்ரை பண்ணுங்க…

பொதுவா, சின்ன காய்ச்சலுக்கே சீக்கிரம் குறைஞ்சிடும்னு மனசுல வைக்கிற நம்பிக்கை அண்ட் வீட்டுல இருக்குறவங்களோட கவனிப்பும், இதெல்லாம் ஒண்ணுமில்லடா… நீ, உன் வேலைய பாருன்னு ஆறுதலும் தைரியமும் சொல்றதுலதான் காய்ச்சல்ல இருந்து சீக்கிரமா மீண்டுவர முடியுது.

அதுபோலதான் மனநோய்க்கும்… இதுக்கு கொஞ்சம் அதிகப்படியான நம்பிக்கை தேவை. பாதிக்கபட்டவருக்கு தன்னால, மனநோய்ல இருந்து மீண்டு வரமுடியுங்கிற நம்பிக்கை வரணும். தன்னை சேர்ந்தவங்க தனக்காக இருக்காங்கன்னு அசையாத பிடிப்பு இருந்தால் மட்டுமே, அவங்களுக்கு அந்த நம்பிக்கை வரும். 

அந்த பிடிப்பை நீங்க, உங்க பையனுக்கு கொடுக்கணும். மேம்போக்கான அக்கறைகள் மட்டுமே, இந்த நோய்க்கு மருந்தாகாது. அதிகப்படியான ஆறுதலும் அரவணைப்பும்தான், அவரை தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்க வலியுறுத்தும். 

அம்மா, அப்பா, மனைவி, அண்ணன், அண்ணி இப்படி ஒருத்தர் மாத்தி ஒருத்தர், குடும்பத்துல அவருக்கு இருக்குற முக்கியத்துவத்த சொல்லிக்கிட்டே இருங்க… என்ன நடந்திருந்தாலும் அவரை ஏத்துக்க எல்லாரும் தயாரா இருக்காங்கனு புரிய வைங்க… அவரால் தலைநிமிர்ந்து, சந்தோசமான வாழ்க்கையை வாழமுடியும்னு நம்பிக்கை கொடுங்க… அதுலயே பாதி மனஅழுத்தம் கரைஞ்சு போயிடும்.

உங்க அன்பும், கவனிப்பும்தான் அவங்களுக்கு, குணமாகிடுவோம் என்கிற தன்னம்பிக்கையை கொடுக்கணும். அதுக்கு மொதல்ல நீங்க, அவரை நம்பிக்கையோட பார்க்கணும்.

எல்லார் மாதிரியும் பரிபூரணமான மகிழ்ச்சியான வாழ்க்கை அவருக்காக காத்துகிட்டு இருக்குன்னு, அவர் மனசுல பதிய வைங்க… அவர் குணமாகி வருவார்னு இருநூறு சதவிகிதம் நீங்க நம்பிக்கை வைச்சாதான், நூறு சதவிகிதமா அவருக்குப் போய்சேரும். அவருடைய சிகிச்சையும், முன்னேற்றமும் உங்க கையிலதான் இருக்கு.

பேஷண்ட் மனசு வைக்காம, அவருடைய முழு ஒத்துழைப்பு இல்லாம, எந்தவொரு கவுன்சிலிங்கோ அல்லது மருந்தோ பலனை கொடுக்காது” என்று உறுதிபடக் கூறியவர், அசோக்கின் எதிர்காலத்தை அவர்களிடம் ஒப்படைத்தார்.

“உங்கள நினைச்சு, உங்ககூட பேசாமா இருந்ததுலதான் அவர் ரொம்ப டிஸ்டர்ப் ஆகியிருக்கார்னுன்னு நீங்களே சொல்லும்போது, அவரோட மாற்றத்துக்கான முதல்படிய நீங்களேகூட எடுத்து வைக்கலாம் மிசஸ்.அசோக்… உங்க அன்பும் அருகாமையும்கூட அவர்கிட்ட மாற்றத்த ஏற்படுத்தலாம். ட்ரை பண்ணுங்க…” என்று மருத்துவர், தன்கணிப்பை கூற, கண்ணைகட்டி காட்டில்விட்ட கதையானது வைஷாலிக்கு…

தன்னை பார்த்து வினையாற்றாமல் கல்லாய் இருப்பவனிடம் என்ன சொல்லி, என்ன செய்து அவனை மாற்றுவது என்று நினைக்கையிலேயே, உலகம் அவளுக்கு தட்டாமலையாய் சுழன்றது.

 

உள்ளிருக்கும் இதயத்துக்கு எனை புரியும்

யாருக்குத்தான் நம்காதல் விடை தெரியும்

காதல் சிறகானது இன்று சருகானது

என் உள்நெஞ்சு உடைகின்றது…

உன்பாதை எது என்பயணம் அது

பனிதிரை ஒன்று மறைக்கின்றது

ஏன் இந்த சாபங்கள்?

நான் பாவம் இல்லையா?

விதி கண்ணாமூச்சி விளையாட

நான் காதல் பொம்மையா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!