இரவும் நானும்

இரவும் நானும்

விசித்திரமான இரவில் நீண்ட பாதையொன்றில் நான் நடந்திருந்தேன்…

எங்கும் நிசப்தம்! நான் மட்டுமே தனியே நடந்துக் கொண்டிருந்தேன்!

மேகம் துறந்திருந்த வானம்!

நட்சத்திர கண்சிமிட்டல் இல்லாத இரவு!

துடைத்து வைத்தாற் போலிருந்த வான் வெளியில் முழுநிலவின் ஒளி மட்டும்!

அந்த வெள்ளை நிற இரவில் நான் நடந்து கொண்டே இருந்தேன்!

என் பார்வைக்கு எட்டும் மட்டும் நீளமான மண் பாதை! இந்த பாதையின் முடிவே என் இலக்கு! நான் நடந்தேன்…

எப்போதிருந்து நடக்கிறேன்? நினைவில்லை!

எங்கிருந்து தொடங்கி நடக்கிறேன்? நினைவில்லை!

எங்கே இந்த பாதை முடியும்? தெரியாது!

இதுவரை எத்தனை தூரம் கடந்து வந்திருக்கிறேன்…?

சற்று நின்று திரும்பி பார்த்தேன். நான் வந்த பாதையை வெண்பனி மூட்டம் மறைத்திருந்தது!

‘இவ்வளவு பனி பெய்கிறது, எனக்கு குளிர வேண்டுமே!’ நான் எண்ணமிடும் போதே என் உள்ளங்காலில் இருந்து மெல்ல மெல்ல உச்சக்கட்ட குளிர் என் உடலில் ஏறியது! என் பற்கள் தத்தியடித்தன! திரும்பி வேகமாக நடந்தேன்!

ஏனோ பின்னே திரும்பி செல்ல எனக்கு விருப்பமில்லை. இந்த பாதையை நான் கடந்தே ஆக வேண்டும் எனக்குள் ஏதோ ஒன்று என்னை உந்தியது! நடந்தேன்…

இத்தனை நீளமான விசித்திர பாதையின் முடிவில் என்ன தான் இருக்கும்? அதை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம்! நிச்சயம் அது விலைமதிப்பற்ற ஒன்றாக தான் இருக்க வேண்டும்! அதை அடைந்தே தீர வேண்டும் என்ற வேட்கை! நடந்தேன்…

மெதுவாகவும் இல்லாமல் வேகமாகவும் இல்லாமல் மிதமான வேகத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறேன். என்ன மாயமோ? என் கால்களில் வலியோ, சோர்வோ தோன்றவில்லை! இனி தோன்றுமோ?

எனக்கு களைப்பாகவும் இல்லை! அதுவரை நிம்மதி. நான் நடக்கலாம்…

பாதையின் இருபக்கங்களையும் கவனித்தேன். ஏதும் தெளிவாக தெரியவில்லை.

அதிசயம் தான்! நீளும் இந்த பாதையில் மட்டும் வெண்ணிலவின் வெள்ளொளி பாய்கிறது! மற்ற இடங்களில் இருள் மட்டுமே சூழ்ந்திருந்தது!

நெஞ்சுக்குள் மெல்ல பயம் பரவியது!

இந்த விசித்திர பாதையில், வெகுநேரமாய் நான் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறேன்!

பய சலனத்துடன் பார்வையை கூர்மையாக்கி சாலையோரங்களை கவனிக்க முயன்றேன். இருள் வெளியில் அடர்ந்த‌ கருப்பு நிழல்களாய் மரங்கள் தெரிந்தன. வரிசைப்படி இன்றி அங்கங்கே தெரிந்தன. அந்த நிழலை கொண்டு தீர்மானித்து விட்டேன் அவை நிச்சயம் மரங்கள் தான்!

துணிவை திரட்டியபடி, என் நடையை பாதையோரம் நொக்கி திருப்பினேன். சற்று அருகே தெரிந்த மரநிழலை தொட்டு பார்க்க கை நீட்டினேன். என் கையில் எதுவும் தட்டுபடவில்லை. இன்னும் அருகே செல்ல முயன்றேன். அரண்டு பின்வாங்கி நின்று விட்டேன்.

என் கால்களுக்கு கீழே அதல பாதாளம்!

இப்போது ஏதோ புரிந்தது எனக்கு, இந்த பாதை மட்டும் தனித்து இருக்கிறது. இல்லை மற்றவற்றில் இருந்து விலகி இருக்கிறது.

‘இந்த பாதையில் நடப்பது மட்டுமே உனக்கு விதிக்கப்பட்டது நட’ என் அறிவு சொன்னது. இப்போது நிமிர்வோடு பாதையின் இலக்கை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்! வேறு வாய்ப்புகள் இல்லை. முதலில் இலக்கை அடைய வேண்டும்! மனதில் உறுதியோடு முன்னேறினேன்.

இலக்கு அல்லது பாதையின் முடிவு! அது எங்கு இருக்கிறது? பார்வை மட்டும் முடிவற்ற வளைந்து நெளிந்த பாதை மட்டுமே தெரிந்தது!

கால்களில் வலி இல்லை, உடலில் களைப்பில்லை, ஆனால் சீக்கிரம் சலிப்பு தட்டிவிடும் என்று தோன்றியது.

நடந்து கொண்டே தான் இருக்கிறேன்…

ஒரு வளைவில் திரும்பினேன். நிலவும் இரவும் மட்டுமே எனக்கு துணையாய் வந்தன.

என் பாதையில் நீரோட்டம் குறுக்கிட்டது. அப்படியும் இப்படியும் பார்த்தேன். வேறு வழி இல்லை என்று புரிந்தது. சற்று தயங்கி நீரோடையில் இறங்கினேன். கால்கள் சில்லிட, எனக்குள் குழந்தைதனமான குதூகலம் தொற்றிக் கொண்டது.

கண்ணாடி போன்ற தெள்ளத்தெளிவான நீருக்கடியில் என் பாதங்கள் அழகாய் தெரிந்தன. சந்தோசமாய் நடந்தேன்.

சலங்கை அணியாத என் பாதங்கள் எட்டு வைத்த ஒவ்வொரு அடிக்கும் ஓடும் நீர் சலசலத்து ஜல்ஜலென்றது! நான் கொண்டாட்டமாக நடந்தேன்.

போக போக நீரின் ஆழம் கூடியது! முழங்கால் வரை ஏறியது! அடுத்து முட்டிவரை! இடுப்பு வரை! மார்பு வரை! கழுத்து வரை! கழுத்து தாண்டியும் நீர் ஏற எனக்கு மூச்சு முட்டியது.

இனி அவ்வளவு தானா? உயிர் பயத்தில் எனக்குள் கலவரம் கூடியது. தண்ணீரில் மூச்சு முட்ட தத்தளித்த வேளை, எனக்குள் பொறி தட்டியது.

என்னால் நீந்த முடியுமா? எனக்கு நீச்சல் தெரியுமா? மேலும் யோசிக்க முடியவில்லை. கைகால்களை லாவகமாக நீரில் துளாவி முன்னேறினேன்…

‘அய்யோடா நான் நீந்துகிறேன்!’

நீந்தி வந்து தொப்பலாய் நனைந்து கரை ஏறினேன். மீண்டும் நடக்கிறேன்…

இப்போது பாதை கரடு முரடாக முள்ளும் கல்லுமாக இருந்தது. பார்த்து பார்த்து நடந்தேன். இருந்தும் என் பாதங்கள் காயப்பட்டன. இரத்தமும் வழிந்தது. ஆனாலும் வலியில்லை! நடந்தேன்…

இப்போது எனக்கு ஆர்வம் குறைந்து விட்டது. இந்த பாதை எப்போது‌ முடியும் என்றிருந்தது.

தூர பாதையை கவனித்தேன். என் கண்கள் ஒளிர்ந்தன!

அதோ அங்கே பாதையின் முடிவு தென்பட்டது!

என் நடையின் வேகம் கூடியது!

அதே நேரம், வானில் விடியலுக்கான சமிக்ஞைகள் தெரிந்தன.

‘முழுதாய் விடியும் முன் இலக்கை அடைய வேண்டும்’ என் உள்ளுணர்வு எச்சரிக்க, இப்போது ஓடிக்கொண்டிருக்கிறேன் நான்! கண்மண் தெரியாத ஓட்டம்…

கிழக்கு வானில் எழும் கதிரின் கைகள் என்னை துரத்துவது போன்ற பிரமை தோன்ற முழு வேகமெடுத்து ஓடினேன்…

பாதை முடிய நின்றேன்!

அங்கே பிரமாண்டமான உயர்ந்த கதவு மூடியிருந்தது!

பின்னே திரும்பி பார்த்தேன். இதோ விடிய போகிறேன் என்பதை போல கீழ் வானில் மஞ்சள் ஒளி திரண்டிருந்தது.

அத்தனை வேகமாக ஓடிவந்தும் எனக்கு மூச்சுவாங்கவில்லை என்பதை திகைப்பாக எண்ணிக் கொண்டே பலம் கொண்ட மட்டும் கதவை உக்கி திறந்தேன்…

கதவு திறந்தது!

மறுபுறம் அசாத்திய ஒளி வெள்ளம் பரவ, என் கண்கள் கூசின!

எப்படியும் அங்கிருப்பதை கண்டுவிட வேண்டும் என்ற ஆவலில் பேராசையில் கண்களை அழுத்தி துடைத்து கொண்டு விழித்தேன்!

நன்றாக வெளிச்சம் பரவி இருக்க, விடிந்து நேரமாகி விட்டிருப்பது எனக்கு உறைத்தது!

“வெளிச்சம் ஏறும்முன்ன எழுந்து வாசல்ல கோலம் போட என்ன? விடிய விடிய அப்படியென்ன கனவு கண்டுட்டு உறங்கி கிடப்பியோ?” என் மாமியார் கடிந்து கொண்டு நகர்ந்தார்.

அவசரமாய் படுக்கையில் இருந்து எழுந்து வாசல் தெளிக்க விரைந்தேன்…

கண்ட கனவு நினைவு வர, தலையை குலுக்கிக் கொண்டு காலை தேநீரை தயாரிக்க ஓடினேன். காலை தேநீர் குடிக்க தாமதமானால் மாமனார் முறைப்பை பெற வேண்டி இருக்கும்.

அனைவருக்கும் தேநீர் பரிமாறிவிட்டு, காலை உணவை ஆரம்பிக்கவும் என்னவர் குரல் கொடுத்தார்.

“இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு சீக்கிரம் கிளம்பனும்னு சொல்லி இருந்தேன் இல்ல, நீ எப்ப டிஃபன் செஞ்சு முடிச்சு நான் சாப்பிட்டு கிளம்பறது?” கண்ணாடி பார்த்து ஷேவ் செய்தபடி என் வேகத்தை நொந்து கொண்டார்.

இததனை புகழ்ச்சியும் தினமும் நான் பெற்று கொள்வது என்பதால், சமையலில் கவனம் செலுத்தினேன்.

அடுத்த ஒரு மணிநேரத்தில் காலை உணவு தயாராகி, பிள்ளைகளுக்கு மதிய உணவு தயாராகிக் கொண்டிருந்தது.

இதற்கிடையே,

“அம்மா என்னோட வைலட் சுடி காணோம், வந்து எடுத்து கொடு” என் மகள் அலற,

“என்னோட ஷாக்ஸ எங்கே வச்சு தொலைச்ச” என்னவர் படபடக்க,

“ம்மா… என்னோட ஸ்கூல் ஐடிய காணோம்” என் மகனின் கத்தலும் ஓங்கி ஒலித்தது.

அவர்களுக்கு தேவையானதை எடுத்து வைத்து, உணவு அளித்து, விடைப்பெறும் வரை வீட்டுக்குள் பம்பரமாக சுழன்றேன்.

அன்றைய வேலைகளின் பட்டியல் இன்னும் நீண்டிருந்தது.

நான் கண்ட கனவை போலவே, என் வாழ்க்கையிலும் நீண்ட நெடும்பாதையில் தூர இலக்கைக் கொண்டு ஓடிக்கொண்டிப்பது போன்ற விசித்திர எண்ணம் எனக்குள்!

இரவு முழுதும் அத்தனை தூரம் நடந்தும் சிறிதும் அலுப்பின்றி மற்ற வேலைகளையும் தொடர்ந்தேன்…

இன்று இரவு சீக்கிரம் உறங்கி, கனவில் வேகமாக நடந்து அந்த கதவின் மறுபக்கம் என்ன இருக்கிறது என்பதை பார்த்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தோடு.

# # #