உன்னாலே – 01

“கெட்டிமேளம்! கெட்டிமேளம்!” அய்யரின் குரலில் நாதஸ்வரமும், மேளதாளங்களும் ஒலிக்க தன் கையில் பிடித்திருந்த அந்த பொற்தாலியையும் அதற்கு முன்னால் எரிந்து கொண்டிருந்த அக்கினியையும் வெறித்துப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான் கார்த்திக்.

 

அய்யரிடமிருந்து தாலியைப் பெற்றுக் கொண்ட பின்பு அதை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தவனை சுற்றியிருந்த அனைவரும் விசித்திரமாக பார்த்துக் கொண்டிருக்க சிறிது சங்கடத்துடன் அவனருகில் குனிந்து நின்ற அவனது தங்கை துளசி

“அண்ணா! ஏண்ணா இப்படியே இருக்க? எல்லோரும் உன்னைத் தான் பார்க்குறாங்க அண்ணி கழுத்தில் தாலியை கட்டு!” என்றது மட்டுமின்றி அவனது கையை பற்றி இழுத்து அவனருகில் அமர்ந்திருந்தவள் கழுத்தில் ஒரு முடிச்சைப் போடச் செய்து விட்டு மீதி இரண்டு முடிச்சுக்களையும் போட்டு விட்டு சற்று தள்ளி சென்று நின்று கொண்டாள்.

 

பெரியவர்கள் அனைவரும் அந்த திருமணம் நன்றாக நடந்து முடிந்து விட்டது என்ற திருப்தியோடு ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொள்ள மறுபுறம் அவர்கள் எல்லோரையும் சிறு புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்த துளசி ஏதோ ஞாபகம் வந்தவளாக தன் அண்ணனின் புறம் திரும்பிப் பார்க்க அங்கே அவன் அமர்ந்திருந்த நிலையோ அவளை கலக்கம் கொள்ளச் செய்தது.

 

அந்த திருமணத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை யார் வீட்டு விஷேசமோ என்பது போல எங்கோ ஒரு மூலையில் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கை பார்த்து தவித்துப் போனவள் சட்டென்று அவனருகில் அமர்ந்திருந்தவள் புறம் திரும்பி பார்க்க அவளோ கார்த்திக்கின் முகபாவத்திற்கு முற்றிலும் எதிராக புன்னகை ததும்ப கன்னங்கள் இரண்டும் வெட்கத்தில் சிவப்பேற தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலியையே பார்த்து கொண்டிருந்தாள்.

 

மெரூன் நிறத்தில் பொன்நிற அகலமான பட்டி பிடிக்கப்பட்டிருந்த பட்டுப் புடவையில் மணமகளுக்குரிய பூரணமான அலங்காரத்துடன் தன் காதல் கை கூடி விட்ட சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் துளிர்ந்த தன் கண்களை மறைக்க தலை குனிந்து அமர்ந்திருந்தாள் அவள் ராகிணி. 

 

சற்று பூசினாற் போல இருந்த அவள் பொன் நிறத் தேகத்தை அந்த பட்டு சேலை இன்னமும் எடுப்பாக காட்டியது.

 

சுற்றிலும் நின்றவர்களின் சத்தமும், மேள தாள ஒலியும் அந்த இடத்தை முற்றிலும் நிரப்பி இருந்தாலும் அவளது செவிகளோ கார்த்திக்கின் குரல் கேட்கும் தருணத்திற்காகவே ஆவலுடன் காத்திருந்தது.

 

ராகிணி தன்னை மறந்து அமர்ந்திருக்க அவளை தோளில் தட்டி நனவுலகிற்கு வரச் செய்த துளசி

“அண்ணி அக்கினியை வலம் வரணுமாம் எழுந்திருங்க! எல்லா சடங்கும் முடிந்த பிறகு அண்ணா கூட டூயட் பாட போகலாம்” அவளுக்கு மாத்திரம் கேட்கும் வகையில் மெல்லிய குரலில் கூற அவளைத் திரும்பிப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவள் கார்த்திக்கின் கையை பிடித்துக் கொண்டு அந்த அக்கினியை வலம் வந்தாள்.

 

அக்கினியை வலம் வந்த நேரம் கார்த்திக் எவ்வகையான மனநிலையில் இருந்தானோ தெரியாது ஆனால் ராகிணி தன் மனம் முழுவதும் இனி தன் சுக துக்கங்கள் அனைத்தும் அவனோடு தான் பகிர்ந்து கொள்வேன் என்று எண்ணிக் கொண்டது மட்டுமின்றி அவனது சுக துக்கங்கள் அனைத்தும் தன்னோடு தான் என்பதையும் உறுதியாக முடிவெடுத்துக் கொண்டாள்.

 

ராகிணியின் கால் விரலில் மெட்டி அணிவிக்க சொல்லி கார்த்திக்கின் அன்னை பத்மா அவனிடம் மெட்டியை நீட்ட தயங்கி தயங்கி அதை வாங்கி கொண்டவன் சிந்தனை வயப்பட்டவனாக நிற்க வேகமாக அவர்கள் அருகில் வந்து நின்ற துளசி 

“போட்டோகிராபர் அண்ணா! எங்க அண்ணா அண்ணி காலில் மெட்டி போடும் போது நல்லா அழகாக ஒரு ஷாட் எடுங்க சரியா?” என்றவாறே கார்த்திக்கின் கையை பற்றி இழுத்தது மட்டுமின்றி அதைப் புகைப்படம் எடுக்கச் செய்வது போல அவளின் காலில் அணிவிக்கவும் செய்தாள்.

 

திருமண சடங்குகள் எல்லாம் முடியும் வரை அவர்கள் இருவருக்கும் இடையே நின்று கொண்டு துளசி ஒவ்வொன்றாக சமாளித்துக் கொண்டு நிற்க அதை எல்லாம் ராகிணி உணர்ந்து கொண்டாலும் அவள் முகத்தில் இருந்த புன்னகை மாத்திரம் மறையவே இல்லை.

 

இத்தனை வருடங்களாக காத்திருந்து கிடைத்த தன் காதல் இப்போது திருமணத்தில் வந்து நிற்கிறது என்ற ஒரு எண்ணமே கார்த்திக்கின் இயந்திரத் தனமான நடவடிக்கைகளைப் பற்றிய சிந்தனையை எல்லாம் அவள் மனதிற்குள் பின் நோக்கி தள்ளி இருந்தது.

 

தங்கள் பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கி கொள்வதற்காக கார்த்திக் மற்றும் ராகிணி வந்து நிற்க இப்போதும் தன் அண்ணன் அதை செய்ய மாட்டான் என்பதைப் புரிந்து கொண்டது போல மெல்ல அவர்கள் அருகில் சென்ற துளசி யாரும் அறியாத வண்ணம் அவனது காலைத் தட்டி விட அவனை அறியாமலேயே அவன் இப்போது பெரியவர்களின் ஆசிர்வாதத்தை தன் மனைவியோடு இணைந்து நிறைவாகப் பெற்றிருந்தான்.

 

எல்லா விதமான சடங்குகளும் முடிந்த பின்னர் அவர்கள் இருவரையும் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளும் படி கூறி விட்டு எல்லோரும் சென்று விட அந்த விசாலமான திருமண மண்டபத்தின் ஒரு புறமாக அவர்கள் இருவர் மாத்திரம் தனியாக அமர்ந்திருந்தனர்.

 

அங்கே என்ன நடக்கிறது? எதற்காக நடக்கிறது? என்பது பற்றி எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் கதிரையில் தலை சாய்ந்து கண் மூடி கார்த்திக் அமர்ந்திருக்க அவன் எதிரில் அமர்ந்திருந்த ராகிணியின் பார்வை அவனது முகத்தையே காதலுடன் பார்த்து கொண்டிருந்தது.

 

ஒரு வருடம் இரண்டு வருடங்கள் அல்ல மொத்தமாக பத்து வருடங்கள் இந்த ஒரு தருணத்திற்காகத் தான் அவள் ஆவலாக காத்துக் கொண்டிருந்தாள்.

 

கார்த்திக்கின் மனைவியாக அவனது கையால் அந்த தாலியை முழு உரிமையோடும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது தானே அவளது கனவு, ஆசை எல்லாமே!

 

அந்த காதலை தன் முன்னால் உள்ளவனால் சிறிதளவேனும் புரிந்து கொள்ள முடியவில்லையே என்ற கவலை அடிக்கடி அவள் மனதிற்குள் தலை தூக்கும் அப்போதெல்லாம் அவனது அந்த முகத்தைப் பார்த்து தன் கவலையை தூர ஓட்டி விடுவாள் இப்போதும் அப்படித்தான் அவனது பாராமுகத்தில் சலனப்பட்ட தன் மனதை அவன் முகத்தை பார்த்து சரி செய்து கொண்டிருந்தாள் அவள். 

 

காலையில் இருந்து அவனது ஒவ்வொரு அசைவுகளையும் அவள் கவனிக்காமல் இல்லை ஆனாலும் அதை எல்லாம் அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவும் இல்லை ஏனென்றால் அவளுக்கு அவள் காதல் மீது பரிபூரணமான நம்பிக்கை இருக்கிறது பத்து வருடங்கள் காத்திருப்பிற்கு இன்று கிடைத்த விலைமதிப்பற்ற பரிசைப் போல நிச்சயம் ஒரு நாள் அவன் காதலும் தனக்கு கிடைக்கும் என்பதில் அவள் நூற்றுக்கு இருநூறு வீதம் உறுதியாக இருந்தாள்.

 

ராகிணி இருபத்தேழு வயது மங்கை, பி.காம் படித்து முடித்து விட்டு அவர்கள் வீட்டை ஆட்சி செய்யும் வீட்டின் செல்லப்பெண், மூன்று அண்ணன்களுக்கு பிறகு கிடைத்த ஒற்றைப் பெண் குழந்தை.

 

ராகிணியின் தந்தை பரசுராமன் ஒரு ஓய்வு பெற்ற வழக்கறிஞர் அவரது மனைவி தனலட்சுமியும் ஓய்வு பெற்ற வழக்கறிஞர் தான்.

 

ஒரு வழக்கு விடயமாக எதிரெதிராக வாதாடச் சென்று கடைசியில் திருமணத்தில் வந்து முடிந்தது அவர்கள் வாதம்.

 

அவர்கள் காதலின் அடையாளச் சின்னங்கள் தான் மூன்று ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும்.

 

ராகிணியின் முதல் அண்ணன் தர்மன் குழந்தைகள் நல வைத்தியர் மற்றும் அவனது மனைவி வைஷாலி பல் சிகிச்சை அளிக்கும் வைத்தியர்.

 

அவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் மூத்தவன் ரமேஷ் மற்றும் இளையவன் ராஜா.

 

ராகிணியின் இரண்டாவது அண்ணன் பிரபு சிவில் எஞ்சினியர் அவனது மனைவி ருக்மணி கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.

 

அவர்கள் இருவருக்கும் கூட இரண்டு குழந்தைகள் தான் மூத்தவள் கிருத்திகா, இளையவன் தேவா.

 

அவர்கள் வீட்டின் இறுதி ஆண் வாரிசு ராகிணியின் மூன்றாவது அண்ணன் மட்டுமின்றி அவளது பாசத்துக்கு மிகவும் நெருக்கமானவன் தான் சிவா சொந்தமாக ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனி வைத்து நடத்தி வருகிறான் அவனது மனைவி மீனா அவனோடு இணைந்து அந்த கம்பெனியை மேற்பார்வை செய்து வருகிறாள்.

 

அவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை பெயர் யமுனா.

 

மூன்று ஆண் குழந்தைகளுக்கு அடுத்து கிடைத்த ஒரே பெண் பிள்ளை ராகிணி என்பதால் அவர்கள் வீட்டில் அவளது விருப்பப்படி தான் பெரும்பாலான விடயங்கள் நடக்கும் அதற்காக தன் விருப்பத்திற்கு தன் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பணிந்து போகும் படி செய்பவள் அல்ல அவள் தன் விருப்பத்தை மறைக்காமல் ஒப்புவித்து விடுவாள் அவ்வளவு தான்.

 

அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டால் அதற்கேற்ப செயற்படுவாள் இல்லை என்றால் தன் விருப்பத்தை மாற்றிக் கொள்ளுவாள் அதுதான் அவளது இயல்பு.

 

ஆனால் இந்த இயல்புக்கு எல்லாம் மாற்றமாக அவள் பிடிவாதமாக இருந்து நடத்திய ஒரு விடயம் தான் இந்த திருமணம்.

 

தன் வாழ்க்கையில் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தவள் வீட்டில் இருந்த எல்லோரது வற்புறுத்தலின் பெயரிலேயே கார்த்திக்கை தவிர வேறு யாரையும் தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்ற விடயத்தை வெளிப்படுத்தி இருந்தாள்.

 

எல்லா விடயங்களையும் தங்களிடம் பகிர்ந்து கொள்ளும் தங்கள் தங்கை ஒருவரை காதலித்தாள் என்பதே அவளது அண்ணன்மாருக்கு பாரிய அதிர்ச்சியாக இருக்க அவளது காதல் பத்து வருடங்களாக இருக்கிறன்றது என்பது இன்னமும் அவர்களுக்கு அதிர்ச்சியை தான் ஏற்படுத்தியது.

 

ஒருவழியாக கார்த்திக்கின் வீட்டில் பேசி அவனை ஒரு வழிக்கு கொண்டு வந்து இந்த திருமணத்தை நடத்தி விட்டோம் என்ற திருப்தியில் எல்லோரும் இருக்க ராகிணியின் காதலைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவனோ அதைப் பற்றி எந்த ஒரு சிந்தனையும் இன்றி தன் கண்களை மூடி அமர்ந்திருந்தான்.

 

தன் பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த ராகிணி தூரத்தில் கேட்ட சத்தத்தில் தன் இயல்பு நிலைக்கு திரும்பி கார்த்திக்கை நிமிர்ந்து பார்க்க அவனோ ஆரம்பத்தில் எந்த நிலையில் இருந்தானோ அதே நிலையில் தான் இப்போதும் அமர்ந்திருந்தான்.

 

சிறிது நேரத்தில் துளசி அவர்கள் இருவரையும் சாப்பிடுவதற்காக அழைத்துச் செல்ல காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் இருந்தால் என்னவோ ராகிணி வேகமாக முன்னே நடந்து சென்று விட அதுதான் தக்க சமயம் என்பதை உணர்ந்து கொண்ட துளசி கார்த்திக்கின் வழியை மறித்தவாறு வந்து நின்று கொண்டாள்.

 

“ப்ச்! பசிக்குது துளசி வழியை விடு!” கார்த்திக் அவளைத் தாண்டிச் செல்ல போக 

 

அவனது கையை இறுக்கமாக பிடித்து கொண்ட அவனது தங்கை

“காலையில் இருந்து நீ எழுந்து கொண்ட பிறகு பேசிய வார்த்தைகள் இது தான் கார்த்தி! அது உனக்கு தெரியுமா?” என்று கேட்க அவனது தலை தானாக கவிழ்ந்து கொண்டது.

 

“இப்படி எதற்கு எடுத்தாலும் பலி கொடுக்க கொண்டு போகும் ஆடு மாதிரி தலையை குனிந்து கொள்ளாதே! சகிக்கல!” என்றவாறே அவனது முகத்தை வலுக்கட்டாயமாக நிமிர்த்தியவள் 

 

“பாவம் அண்ணி! காலையில் இருந்து நீ அவங்களை ஒரு தடவை கூட சரியாக கவனிக்கவே இல்லைன்னு தெரிந்தும் அவங்க அதற்காக ஒரு தடவை கூட தன்னோட முகத்தை சோகமாக வைச்சுக்கல! இப்போ கூட இவ்வளவு நேரம் நீ கண்ணை மூடிட்டு அவங்களைப் பார்க்காமலேயே இருந்தும் அதைக் கூட வெளியே யாருக்கும் காட்டிக் கொள்ளாமல் சந்தோஷமாக இருப்பது போலவே இருக்காங்க! ஆனா நீ என்ன கார்த்தி பண்ணுற?” என்று கேட்க அவனின் புறம் அமைதியே நிலவியது.

 

“எங்க அண்ணன் இப்படி இருந்ததே இல்லையே! திடீர்னு உனக்கு என்ன ஆச்சு? இந்த கல்யாணத்தில் உனக்கு சம்மதமான்னு பலதடவை கேட்டுத் தான் எல்லாம் பண்ணுணோம் ஆனா நீ நாங்க எல்லாம் ஏதோ உன்னை வலுக்கட்டாயமாக இந்த கல்யாணம் பண்ணிக்க வைத்த மாதிரி தான் நடந்துக்குற! உனக்கு என்ன தான்ணா ஆச்சு?” 

 

“எனக்கு தெரியலையே துளசி! நான் ஏன் இப்படி இருக்கேன்னு தான் நான் யோசிச்சுட்டு இருக்கேன் அதற்கு பதில் தான் இன்னும் கிடைக்கல! நான் இப்படி அமைதியாக இருக்குற ஆளே இல்லை ஆனா இப்போ பேசாமலேயே இருக்கேன் ஏன்? இந்த கல்யாணம் பண்ணிக்கிட்டதாலா? இல்லை வேறு எதுவும் காரணமா எனக்கு தெரியலை!”

 

“உங்க கல்யாணம் பிக்ஸ் ஆன பிறகு நீங்க ஆதித்யா அண்ணாவைப் பார்க்கப் போனீங்களா?” துளசியின் கேள்வியில் சிறிது சங்கடத்துடன் அவளை நிமிர்ந்து பார்த்தவன் ஆமோதிப்பாக தலையசைக்க 

 

சலிப்போடு தன் முகத்தை திருப்பிக் கொண்டவள்

“ஏண்ணா இப்படி பண்ணுறீங்க? உங்களுக்கு எத்தனை தடவை சொல்லுறது? நீங்க அவரைப் போய் பார்க்கிறது தப்பில்லை அங்கே போயிட்டு வந்து தேவையில்லாமல் யோசிப்பது தான் தப்பு! எத்தனை தடவை சொன்னாலும் நீங்க கேட்க மாட்டீங்க! ஆனா ஒண்ணு எங்க அண்ணி கண்ணுல ஒரு சொட்டு தண்ணீ வந்தாலும் உங்களை அண்ணான்னு கூட பார்க்க மாட்டேன் இப்போ ஒழுங்காக வந்து சாப்பிடுங்க!” சிறிது கோபம், கண்டிப்பு, பாசம் என எல்லா வகையான உணர்வுகளும் ஒன்று சேர அவனைப் பார்த்து மிரட்டுவது போல கூறி விட்டு செல்ல தன் தங்கையின் பேச்சில் சிறிது இயல்பு நிலைக்கு திரும்பியவன் சிறு புன்னகையுடன் சாப்பிடும் இடத்தை நோக்கி நகர்ந்து சென்றான்.

 

காலையில் இருந்து எந்த ஒரு உணர்வையும் பிரதிபலிக்காமல் ஒரு கைப்பாவை போல நடமாடிக் கொண்டிருந்தவன் இப்போது புன்னகையுடன் நடந்து வருவதைப் பார்த்து மும்முரமாக சாப்பிட்டு கொண்டிருந்த ராகிணியின் கரம் அப்படியே அந்தரத்தில் நின்றது.

 

‘என்னயா இது? இன்னைக்கு மழை எதுவும் வந்துடுமோ? காலையில் இருந்து இப்படி ஒரு ஆள் இருக்கான்னு யோசிக்குற அளவிற்கு இருந்த ஆளு இப்போ இப்படி சிரிச்சுக்கிட்டே நடந்து வர்றாங்க ஒரு வேளை வர்ற வழியில் தலையில் எதுவும் அடிபட்டு இருக்குமோ? இருக்கும் இருக்கும் எதுவாக இருந்தாலும் முதலில் சாப்பிட்டு விட்டு அப்புறம் பார்க்கலாம்’ வாய்க்கும் இலைக்கும் இடையே நடுவில் அந்தரத்தில் இருந்த கரத்தில் இருந்த உணவுக் கவளத்தை தன் வாயில் வைத்து கொண்டவள் மீண்டும் தன் சாப்பிடும் பணியை ஆர்வத்துடன் தொடர்ந்தாள்.

 

சாப்பிடும் ஆர்வத்தில் கார்த்திக் அவளருகில் வந்து அமர்ந்து அவளைத் திரும்பி பார்த்துக் கொண்டிருந்ததையோ அவளிடம் பேச முயற்சி செய்ததையோ அவள் கண்டு கொள்ளவே இல்லை.

 

தான் வந்த வேலை முடிந்து விட்டது என்பது போல சாப்பிட்டு முடிந்ததும் அங்கிருந்து எழுந்து கொண்டவள் தனது அறையை நோக்கி சென்று விட அவளிடம் பேச வேண்டும் என்ற எண்ணத்தோடு அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு அவளிடம் பேச எண்ணி அவளைப் பின் தொடர்ந்து வந்த கார்த்திக் அவளிடம் பேச முடியாது போன கவலையில் சோகமாக தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையை நோக்கி நகர்ந்து சென்றான்.

 

தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது பற்றி தெரியாமலேயே மாலை நேரம் நடக்கவிருந்த ரிஷப்சனுக்காக தயாராகி வந்தவன் மேடையில் அவனுக்கு முன்னரே தயாராகி வந்து நின்ற ராகிணியைப் பார்த்ததும் இப்போதாவது இவளிடம் பேசி விட வேண்டும் என்ற எண்ணத்தோடு அவளை நோக்கி நடந்து சென்றான்.

 

கார்த்திக் மேடையேறி வந்து ராகிணி அருகில் நின்று அவளைப் பார்த்து சிறிது புன்னகைக்க அவனது புன்னகை முகத்தை பார்த்து தன் விழி விரித்தவள் மெல்ல தன் கையில் கிள்ளிப் பார்த்து கொண்டாள்.

 

‘அய்யோ வலிக்குது! அப்போ நிஜம் தான்! கார்த்திக் என்னைப் பார்த்து சிரிச்சாங்களா? அய்யோ இதை நான் எல்லாருக்கும் சொல்லியே ஆகணுமே! கார்த்திக் என்னைப் பார்த்து சிரிச்சுட்டாரு! என்னைப் பார்த்து சிரிச்சுட்டாரு!’ தன் மனதிற்குள் குத்தாட்டம் போடாத குறையாக துள்ளிக்குதித்து கொண்டவள் சிறிது தயக்கத்துடன் அவனின் புறம் திரும்பி பார்க்க இந்த தடவை அவன் அவனது நண்பர்களுடன் பேசிக் கொண்டு நின்றான்.

 

அவனது ஒரு புன்னகைக்கே இந்த உலகை ஒட்டுமொத்தமாக வென்று விட்டது போல பெருமிதம் கொண்டவள் அந்த ஒரு சந்தோஷமான தருணத்தை நினைத்தே அந்த பொழுதை சந்தோஷமாக கழிக்கத் தொடங்கினாள்.

 

சிறிது நேரம் கழித்து உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் கிளம்பி சென்று விட ராகிணி அவளது பெற்றோரிடம் விடைபெற்று கொண்டு கார்த்திக்குடன் அவனது காரில் அவன் வீட்டை நோக்கி புறப்பட்டு சென்றாள்.

 

ராகிணி அவளது பெற்றோரிடம் விடைபெற்று கொண்டு வரும் நேரம் வழக்கமாக திருமணம் முடிந்து செல்லும் போது எல்லா பெண்களும் கண்ணீர் விட்டு அழுவது போல எதுவுமே இல்லாமல் புன்னகை முகமாக அவர்களிடம் பேசி விட்டு வருவதைப் பார்த்து கார்த்திக் சற்று குழம்பித் தான் போனான்.

 

‘என்ன இவ கல்யாணம் முடிந்து வேறு ஒரு வீட்டுக்கு அம்மா, அப்பாவை பிரிந்து போறோம்னு கொஞ்சம் கூட கவலை இல்லாத மாதிரியே வர்றா! சரி நமக்கு எதற்கு அதெல்லாம்? அவளுக்கு என்ன பிரச்சினையோ?’ தங்கள் வீட்டுக்கு செல்லும் வழி முழுவதும் அதைப் பற்றியே யோசித்து கொண்டு வந்தவன் இறுதியாக தன் கேள்விக்கு தானே பதிலளித்து கொண்டு தங்கள் வீட்டின் முன் காரை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் நுழைந்து கொள்ள அவனைப் பின் தொடர்ந்து ராகிணியும் நடந்து சென்றாள்.

 

வழக்கமான சடங்குகளை எல்லாம் முடித்து விட்டு தங்கள் அறைக்குள் நுழைந்து கொண்டவன் தன் அறைக் கதவை சாத்தப் போக அவசரமாக அவன் முன்னால் ஓடி வந்து நின்ற ராகிணி

“ஹலோ பாஸ்! என்ன இது? என்னை வெளியே நிற்க வைக்க ஐடியா போடுறீங்களா?” கேள்வியாக அவனை நோக்க

 

சங்கடத்துடன் தன் தலையில் தட்டிக் கொண்டவன்

“ஐ யம் சாரி! வழக்கமாக செய்யும் ஞாபகத்தில் பண்ணிட்டேன் சாரி!” என்று விட்டு சற்று விலகி நின்று கொள்ள சிரித்துக் கொண்டே அவனைத் தாண்டி சென்றவள் தன் மாற்றுடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

 

காலையில் இருந்து அவளிடம் பேச எண்ணி அது முடியாமல் போனதை நினைத்து பார்த்துக் கொண்டவன் இப்போது சரி அவளிடம் பேச வேண்டும் என்ற எண்ணத்தோடு அவளது வருகைக்காக காத்து நிற்க அவன் பொறுமையை சோதிக்காமல் சிறிது நேரத்திலேயே குளியலறையில் இருந்து வெளியேறி வந்தவள் சற்றே தடுமாற்றத்துடன் நின்று கொண்டிருந்த கார்த்திக்கை பார்த்து என்ன என்பது போல சைகையில் கேட்க அவனுக்கோ பேச வார்த்தைகளே வெளி வரவில்லை.

 

தன்னுடைய அறைக்குள் முழு உரிமையோடு ஒரு பெண் வந்து நிற்பதைப் பார்த்து அவனுக்கு முத்து முத்தாக வேர்த்துக் கொட்டத் தொடங்கியது.

 

அவனது தடுமாற்றத்தை பார்த்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்ட ராகிணி அவனுக்கு மிகவும் நெருக்கமாக வந்து நின்று

“என்னாச்சு உங்களுக்கு?” என்று கேட்க 

 

அவளது அந்த நெருக்கத்தில் அவனுக்கு மயக்கம் வருவதைப் போல இருக்கவே சட்டென்று தன் அருகில் இருந்த மேஜையை பிடித்து கொண்டு

“ஒ… ஒண்ணும் இல்லையே! நா… நான் நல்லா தா… தான் இருக்கேன்” என்று கூற அவனைப் பார்த்து தன் சிரிப்பை அடக்கிக் கொண்டவள் அவனிடம் இருந்து சற்று விலகி நின்று கொண்டாள்.

 

“இதோ பாருங்க நீங்க பயப்படுவது போல நான் உங்களை கொடுமை எல்லாம் படுத்த மாட்டேன் நீங்க பயப்படவே தேவையில்லை! இப்போ தான் நமக்கு கல்யாணம் ஆகி இருக்கு முதல்ல ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்ளுவோம் அப்புறம் மீதி விடயங்களை பேசலாம் காலையில் இருந்து சடங்கு, அது இதுன்னு ரொம்ப வேலை வாங்கிட்டாங்க ரொம்ப டயர்டா இருக்கு வேறு ஏதாவது இருந்தால் காலையில் பேசலாம்!” இயல்பாக புன்னகைத்த படியே அவனைப் பார்த்து கூறி விட்டு ராகிணி நடந்து செல்ல 

 

மறுபுறம் கார்த்திக்

‘எனக்கு என்ன ஆச்சு? எதற்கு இவ்வளவு பதட்டப்படுறேன்? அவ கிட்ட பேசணும்னு நினைத்து பேசாமலேயே இருக்கேனே! ஏன்டா கார்த்திக் இப்படி பண்ணுற? எல்லாவற்றையும் ஓபனாக பேசி விடேன்டா! இப்போ பேசலேன்னா வேறு எப்போ பேசுவ? தைரியமாக பேசுடா!’ தன் மனதிற்குள் தன்னைத் தானே கண்டித்து கொண்டு நின்றான்.

 

தூங்குவதற்கு ஏதுவாக படுக்கையை ஒழுங்கு படுத்திய ராகிணி கார்த்திக்கை நிமிர்ந்து பார்க்க அப்போதும் அவன் தான் நின்று கொண்டிருந்த நிலையில் தான் நின்று கொண்டிருந்தான்.

 

அவனைப் பார்த்ததுமே தன் இயல்பான குறும்பு தனம் தலை தூக்க தன் சிரிப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கார்த்திக்கின் முன்னால் வந்து நின்றவள்

“ஹலோ! மிஸ்டர். ஹஸ்பண்ட் கார்த்திக்! ஹேப்பி மேரீட் லைஃப் அன்ட் குட்நைட்!” சிரித்துக் கொண்டே கண்ணடித்து அவனது கன்னத்திலும் தட்டி விட்டு உறங்குவதற்காக சென்று விட மறுபுறம் நின்று கொண்டிருந்தவனுக்கோ அவளது செய்கைகளைப் பார்த்து விழிகள் இரண்டும் தெறித்து விடுவது போல அதிர்ச்சியில் விரிந்து போனது…….

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!