உன்னாலே – 11
உன்னாலே – 11
“இப்படி கனவு கண்டு புலம்பும் அளவிற்கு என்னைப் பற்றி அப்படி என்ன நினைத்த ராகினி?” கார்த்திக்கின் கேள்வியில் அவனைப் பார்த்து திருதிருவென விழித்துக் கொண்டு அமர்ந்திருந்தவள்
“அது வந்து…அது வந்து… நான்…நீங்க… இல்லை…அது…” என்று தடுமாறிக் கொண்டிருக்க
“டேய் கார்த்திக்! உள்ளே வராமல் இங்கே என்னடா ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க?” அவர்களின் பின்னால் ஒலித்த குரலில் ராகினி சட்டென்று அவன் பின்னால் எட்டிப் பார்த்தாள்.
முறையாக சவரம் செய்யப்படாத முகம், பல நாட்களாக தூக்கத்தை தொலைத்தது போல கண்களுக்கு கீழ் கருவளையம் சூழ தன் கவலையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்க முயன்று புன்னகை செய்வது போல நின்று கொண்டிருந்தான் கார்த்திக்கால் ஆதி என்று அழைக்கப்படும் ஆதித்யா.
“ஆதி! எப்படிடா இருக்க?” பல நாள் கழித்து தன் நண்பனைப் பார்த்த சந்தோஷத்தில் சுற்றியிருக்கும் எல்லாம் மறந்து போக பாசத்தோடு தன் நண்பனை ஆரத் தழுவிக் கொண்டான் கார்த்திக்.
சில வருடங்களுக்கு முன்பு தான் பார்த்த ஆதித்யா இவன் தானா என்பது போல அவனை அங்கே பார்த்த நொடியில் இருந்து தனக்குள்ளேயே பலமுறை கேள்வி கேட்ட வண்ணம் அமர்ந்திருந்த ராகினி ஆண்கள் இருவரது பார்வையும் தன் புறம் திரும்புவதை உணர்ந்து கொண்டவளாக தனது முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்து புன்னகையுடன் காரில் இருந்து இறங்கி நின்று கொண்டாள்.
“வணக்கம் அண்ணா எப்படி இருக்கீங்க?”
“நான் ரொம்ப நல்லா இருக்கேன்னு சொல்ல முடியாது ஆனா இருக்கேன்! சரி சரி உள்ளே வாங்க! வீட்டுக்கு வந்தவங்களை உள்ளே அழைச்சுட்டு போகாமல் வாசலிலேயே வைத்து பேசி அனுப்ப போறேன்னு நினைச்சுக்கப் போறீங்க!” கார்த்திக்கின் தோளில் தன் கையை போட்டபடி ஆதித்யா நடந்து செல்ல ராகினியும் அந்த இடத்தை சுற்றிப் பார்த்தபடியே அவர்களைப் பின் தொடர்ந்து நடந்து சென்றாள்.
அந்த பகுதியில் இந்த வீடு மட்டும் தான் சற்று புதிதாக அமைக்கப்பட்டிருந்ததைப் போல இருந்தது சுற்றிலும் பல வகையான பூக்கள் பூத்துக் குலுங்க சிறு சிறு தென்னை மரங்களும், மா மரங்களும் புதிதாக அந்த வீட்டைச் சுற்றி நடப்பட்டிருந்தது.
முன்புறமாக ஒரு முற்றமும் அங்கே கயிற்று ஊஞ்சலும் கட்டப்பட்டிருக்க ஒரு சில மனோதத்துவ புத்தகங்கள் அங்கிருந்த முக்காலியின் மீது இறைந்து கிடந்தன.
“என்ன ராகினி வீடு ரொம்ப பிடித்து இருக்கா?” கார்த்திக்கின் கேள்வியில் தன் பார்வையை சட்டென்று அவனது புறம் திருப்பியவள்
“சும்மா சுற்றிப் பார்த்தேன் பா!” என்று விட்டு
ஆதித்யாவின் புறம் திரும்பி
“வீடு ரொம்ப நல்லா இருக்கு அண்ணா! ரொம்ப அழகாக பராமரிக்குறீங்க போல? யாரு உங்க வைஃப் தான் இதெல்லாம் பார்த்துக்குறாங்களா?” என்று கேட்க அவளது கேள்வியில் அவனது முகம் சட்டென்று வாடிப் போனது.
“ராகினி!” கார்த்திக் சிறிது அதட்டலோடு அவளது கையைப் பிடிக்க
அவனது தோளில் கையை வைத்த ஆதித்யா
“என்னைப் பற்றி அவங்க தெரியாமல் கேட்டு இருப்பாங்க அதற்கு போய் எதற்குடா இவ்வளவு கோபம்? நியாயமாக பார்த்தால் என்னைப் பற்றி நீ எதுவுமே சொல்லலன்னு அவங்க தான் கோபப்படணும்” என்று விட்டு
“எனக்கு வைஃப் எல்லாம் இல்லைம்மா நான் இங்கே தனியாகத் தான் இருக்கேன்” ராகினியைப் பார்த்து இயல்பான புன்னகையோடு கூறினான்.
“ஐ யம் ரியலி சாரி அண்ணா! நான் வேணும்னே எதுவும் கேட்கல”
“ஐயோ பரவாயில்லைம்மா! நான் எதுவும் தப்பாக நினைக்கல சரி நீங்க இரண்டு பேரும் உட்காருங்க நான் போய் ஜில்லுன்னு மோர் எடுத்துட்டு வர்றேன் சார் ரொம்ப சூடாக இருக்காரு போல இருக்கு! ” என்று விட்டு ஆதித்யா வீட்டுக்குள் சென்று விட
அவன் வீட்டுக்குள் சென்ற அடுத்த கணமே ராகினியின் முன்னால் கோபமாக வந்து நின்ற கார்த்திக்
“யாரு கிட்ட என்ன பேசணும்னு உனக்குத் தெரியாதா? அவனே இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமாக அவனோட பழைய வாழ்க்கையில் இருந்து வெளியே வந்துட்டு இருக்கான் அவன் கிட்ட போய் வைஃப் அது, இதுன்னு பேசுற? யோசித்து பேசமாட்டியா?” என்று கேட்கவும்
அவனை ஏற இறங்க பார்த்தபடியே தன் கையை கட்டிக் கொண்டவள் அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்துக் கொண்டு
“ஆக்சுவலி உங்க கிட்ட தான் இந்த கேள்வியை நான் கேட்கணும்! நீங்க முதலில் யோசித்து பேசுங்க நீங்க காலையில் நான் ஆபிஸில் வைத்துக் கேட்கும் போது ஆதித்யா அண்ணாவை மீட் பண்ண வர்றோம்ன்னு என் கிட்ட சொன்னீங்களா? இல்லை அவங்க இப்படி தனியாக இருக்காங்கன்னு சரி என் கிட்ட இது நாள் வரைக்கும் சொல்லி இருக்கீங்களா? இப்படி எதுவுமே சொல்லாமல் என் கிட்ட வந்து எகுறுறீங்க! என்ன ஆச்சு?” என்று வினவ இப்போது அமைதியாக நின்று கொண்டிருந்தான் அவளது அன்பு கணவன்.
“சாரி ராகினி! நீ ஆதியோட வைஃப் பற்றி கேட்டதும் அவன் முகமே மாறிடுச்சு அதுதான் கோபத்தில் யோசிக்காமல் பேசிட்டேன் ஐ யம் சாரி! நான் ஆதியைப் பற்றி உன் கிட்ட எதுவுமே சொன்னதும் இல்லை அதுதான் உனக்கு எதுவுமே தெரியலை போல! நான் வீட்டுக்கு போனதும் ஆதித்யா பற்றி உன் கிட்ட பேசுறேன் இங்கே எதுவும் பேச வேண்டாம்” என கார்த்திக் ராகினியிடம் கூறிக் கொண்டிருந்த போதே ஆதித்யா கையில் மோர் நிரம்பிய டம்ளர்களை ஏந்தி வர கணவன் மனைவி இருவரும் தங்கள் பேச்சை தற்காலிகமாக இடை நிறுத்தி விட்டு அவனோடு இணைந்து சகஜமாக பேச தொடங்கினர்.
கார்த்திக் மற்றும் ஆதித்யா இருவரும் சிறு வயது முதல் தாங்கள் செய்த சேட்டைகளை வைத்து ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கேலி செய்து கொண்டிருக்க அவர்கள் இருவரது நட்பையும் பார்த்து புன்னகை முகமாக அமர்ந்திருந்த ராகினி தன் கணவனின் முகத்தை பார்த்ததுமே காதல் ததும்ப அவனை மெய் மறந்து நோக்கலானாள்.
கார்த்திக்குடனான திருமணத்தின் பின்னர் அவனது முகத்தில் இப்படியான புன்னகையைப் பார்ப்பது ராகினிக்கு மிகவும் அரிதான ஒரு விடயமாக மாறிப் போய் இருந்தது.
பல நாட்களுக்கு பிறகு மனம் விட்டு சிரித்துப் பேசும் தன் கணவனைப் பார்த்து ராகினி மெய் மறந்து அமர்ந்திருந்த வேளை கார்த்திக்கின் தொலைபேசி ஒலிக்க
“ஆதி ஒரு இம்பார்டண்ட் கால் டா! நான் பேசிட்டு வர்றேன் நீ ராகினி கூட பேசிட்டு இரு!” என்று விட்டு அவன் எழுந்து சென்று விட
சிறிது நேரம் என்ன பேசுவது என்று தெரியாமல் தன் கையையே பார்த்து கொண்டு அமர்ந்திருந்த ராகினி
“ஐ யம் சாரி ஆதி அண்ணா! நான் உங்களை கஷ்டப்படுத்தனும்னு அப்படி எதுவும் கேட்கல” என்று கூற
அவனோ
“அய்யோ! நீங்க இன்னும் அதைப் பற்றி தான் யோசித்துட்டு இருக்கீங்களா? அதை எல்லாம் நான் அப்போவே மறந்துட்டேன் விடும்மா” என்று விட்டு கார்த்திக்கின் புறம் திரும்பி பார்த்தான்.
“கார்த்திக்கை நினைத்து நான் ரொம்ப ரொம்ப கவலைப்பட்டேன் ராகினி! என்னோட வாழ்க்கையில் நடந்த சில தேவையில்லாத விடயங்களை பார்த்து அவன் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு அவ்வளவு பிடிவாதமாக இருந்தான் என்னால அவன் வாழ்க்கை வீணாகிப் போகுதேன்னு நான் கவலைப்படாத நாளே இல்லை! எத்தனையோ தடவை அவனுக்கு இந்த விடயத்தை புரிய வைக்க நான் முயற்சி பண்ணேன் அப்போவும் அவன் என் பேச்சைக் கேட்கல! ஒரு நாள் திடீர்னு வந்து நான் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டேன்னு அவன் சொன்னதும் எனக்கு தலை கால் புரியல! அவனை கட்டிப் பிடித்து அழுதுட்டேன்!”
“அண்ணா!”
“கவலையில் இல்லைம்மா! சந்தோஷம்! சந்தோஷம் அதன் எல்லையைத் தாண்டும் போது கண்ணீராக வெளி வந்துடுச்சு!”
“நீங்க எங்க கல்யாணத்துக்கு ஏண்ணா வரல?”
“வர வேண்டாம்னு நினைத்தேன் அது தான் வரல ராகினி! ஏற்கனவே என்னோட வாழ்க்கையில் நடந்த விடயங்களை எல்லாம் பார்த்து அவன் ரொம்ப மனதளவில் பின் தங்கிப் போய் இருந்தான் அந்த நிலையில் அவன் கல்யாணம் பண்ண சம்மதம் சொன்னதே பெரிசு! அப்படி இருக்கும் போது ஒரு நல்ல காரியம் நடக்க இருக்கும் நேரம் நான் அங்கே வந்து மறுபடியும் அவன் மனம் முருங்கை மரம் ஏறிய வேதாளம் மாதிரி ஆகி விடக்கூடாதுன்னு தான் வரல”
“அதற்கு அப்புறமும் ஏண்ணா வரல? என் மேல ஏதாவது கோபமா?”
“சேச்சே! நான் உன் மேல கோபப்படுவேனாம்மா? நீ என் நண்பனோட வாழ்க்கையில் ஒரு புதிய வெளிச்சத்தையே கொண்டு வந்தவ! உனக்கு நான் ரொம்ப நன்றி சொல்லணும்மா!”
“ஐயோ! எதுக்குண்ணா இவ்வளவு பெரிய வார்த்தை எல்லாம்?”
“இல்லைம்மா உனக்கு தெரியாது கார்த்திக்கை நினைத்து ஒவ்வொரு நாளும் நான் கவலைப்படாத நாளே இல்லை! கல்யாணம் பண்ணிக் கொண்ட அப்புறமாக அவன் சரியாகி விட்டான்னு ரொம்ப சந்தோஷமா இருந்தேன் வழக்கமாக வாரத்துக்கு ஒரு தடவை எங்கே இருந்தாலும் சரி என்னைப் பார்க்க ஓடி வந்துடுவான் ஆனா கிட்டத்தட்ட மூணு மாதமாக அவன் என்னைப் பார்க்க வரல! அவன் அவனோட கல்யாண வாழ்க்கையில் ரொம்ப சந்தோஷமா இருக்கான்னு நினைத்து தான் ஒரு தடவை அவனுக்கு போன் பண்ணேன் அப்போ அவன் போனில் சொன்ன விஷயம் என்னோட சந்தோஷத்தை எல்லாம் ஒட்டுமொத்தமாக தூள் தூளாக்கி விட்டது” அன்றைய நாளின் தாக்கத்தில் ஆதித்யா தன் கண்களை மூடிக்கொண்டு தன் நெற்றியை நீவி விட்டு கொள்ள அவன் எதைப்பற்றி பேசுகிறான் என்பதைப் புரிந்து கொண்ட ராகினியும் அன்றைய நாளின் வலியில் தனது நிதானத்தை இழந்து விடக் கூடாது என்று தனக்குத்தானே தைரியம் அளித்து கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“கார்த்திக் இந்த கல்யாணத்தை தன்னோட வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன்னு சொன்னதும் எனக்கு உலகமே நின்னு போயிடுச்சு ம்மா! அதோடு அவன் நிறுத்தி இருந்தாலும் பரவாயில்லை இந்த விடயத்தை பற்றி எல்லாம் உன் கிட்ட சொல்லி இப்போவே இந்த விடயத்தை முடித்து வைக்கப் போறேன்னு சொன்னதும் போனில் அவனை தடுத்து நிறுத்த முயற்சி செய்வதை தவிர என்னால் எதுவும் பண்ண முடியல! ஏன்னா இந்த வெளி உலகத்தைப் பொறுத்த வரைக்கும் நான் வாழ்க்கையில் தோற்றுப் போன ஒருவன்! சொந்த வாழ்க்கையை கட்டிக் காக்கத் தெரியாதவன்!”
“ஏண்ணா இப்படி எல்லாம் பேசுறீங்க?” ராகினியின் கேள்வியில் தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவன்
“சாரிம்மா! கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்! அன்னைக்கு… அன்னைக்கு கார்த்திக் எதுவும் கோபமாக பேசிட்டானா ராகினி?” என்று கேட்க
அவனது கேள்வியில் கலங்கிய தன் கண்களை இறுக மூடி தன் கண்ணீரை உள்ளிழுத்து கொண்டவள்
“அவங்க பேசியதை எல்லாம் நினைத்து அவங்களை வெறுத்தாலோ, அவங்களை விட்டு விலகிப் போனாலோ அப்புறம் பத்து வருஷமாக அவரை நான் காதலித்தது எல்லாம் ஒண்ணுமே இல்லாமல் போய் விடுமே அண்ணா!” என்று கூறவும்
அவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவன் பின்னர் ஏதோ நினைவு வந்தவனாக
“ராகினி நீ என்ன சொன்ன? பத்து வருடங்களாக நீ கார்த்திக்கை லவ் பண்ணுறியா? இது..இது எப்போ?” அதிர்ச்சியாக அவளைப் பார்த்து கொண்டு அமர்ந்திருந்தான்.
“ம்ம்ம்ம்ம்! ஆமாண்ணா! எனக்கு கார்த்திக்கை பத்து வருடங்களுக்கு முன்னாடி இருந்தே தெரியும் அவங்களுக்கு ஆக்சிடென்ட் ஆனது உங்களுக்கு தெரியுமா?”
“ஆமா ராகினி! காலேஜ் படிச்சுட்டு இருக்கும் போது ஒரு பெரிய ஆக்சிடென்ட் ஆச்சு! யாரோ ஒரு ஸ்கூல் பொண்ணு மாதிரி சின்ன பொண்ணு தான் அவனைக் காப்பாற்றி ஹாஸ்பிடல் வரை கொண்டு வந்திருந்தான்னு சகுந்தலா அம்மா சொன்னாங்க! ஹேய்! வெயிட்! வெயிட்! அந்த ஸ்கூல் பொண்ணு நீ தானா?” ஆதித்யாவின் கேள்வியில் ராகினியின் தலை ஆமோதிப்பாக அசைந்தது.
“அன்னைக்கு ஹாஸ்பிடல் வாசலில் வைத்து என்னோட கையைப் பிடிச்சுட்டு அவங்க என்னை விட்டுட்டு போயிடாதேன்னு சொன்ன போது எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? வாழ்க்கை பூராவும் நான் உங்களோடு இருப்பேன்னு கத்தி சொல்லணும் போல இருந்தது ஆனா என்னால அப்படி பண்ண முடியல! அதற்கு அப்புறம் அவங்களை மறுபடியும் மறுபடியும் பார்க்கும் போது அவ்வளவு சந்தோஷமா இருக்கும் அந்த நேரத்தில் ஏதோ வயதுக் கோளாறுன்னு நினைத்து விட்டுட்டேன் ஆனா அவங்களை மறந்தாச்சுன்னு நினைத்து இருந்த நேரம் மறுபடியும் அவங்களை பார்த்து எனக்குள்ள அவ்வளவு சந்தோஷம், ஏக்கம், தவிப்பு, கண்ணீர் எல்லாம் வந்த போது தான் என் மனதிற்குள் கார்த்திக் எந்தளவிற்கு ஆழமாக பதிந்து போய் இருக்காங்கன்னு புரிந்தது அதற்கு அப்புறம் மறுபடியும் அவங்களைப் பின் தொடர ஆரம்பித்தேன்”
“வாட்? ஆர் யூ கிரேஸி ராகினி?”
“தெரியலைண்ணா! கார்த்திக்னா எனக்கு அவ்வளவு இஷ்டம்! அவங்க கிட்ட என் காதலை சொல்லலாம்னு ஒரு நாள் தைரியமாக வந்த போது தான் நீங்களும் அவரும் அஞ்சலி பற்றி ஒரு மனநல காப்பகத்தில் வைத்து பேசிட்டு இருந்ததைக் கேட்டு தப்புத் தப்பாக யோசித்து அவங்களை தப்பாக நினைச்சுட்டேன்” அஞ்சலி என்ற பெயரைக் கேட்டதும் ஆதித்யாவின் முகம் வெளிப்படையாக வருத்தத்தைக் காட்ட ராகினி தயக்கத்துடன் அவன் முன்னால் அமர்ந்திருந்தாள்.
“அஞ்சலி பற்றி பேசுனது தப்புன்னா சாரிண்ணா!”
“இல்லை ராகினி அப்படி எல்லாம் எதுவும் இல்லை! அவளைப் பற்றி பேசுனதைக் கேட்டு கார்த்திக்கை ஏன் தப்பாக நினைக்கணும்? ஒரு வேளை கார்த்திக்கும், அஞ்சலியும்..?” ஆதித்யா கேள்வியாக அவளைப் பார்க்க ராகினி தன் கை விரல்களை பிரிப்பதும், கோர்ப்பதுமாக அமர்ந்திருந்தாள்.
“ஆனாலும் உன் கற்பனை இந்தளவிற்கு போய் இருக்கக் கூடாது ராகினி! கார்த்திக் ஒரு பொண்ணை லவ் பண்ணி இருந்தான்னு சொன்னாலே நம்பி இருக்க மாட்டாங்க அதுவும் அஞ்சலியை!”
“அவங்க அந்தளவுக்கு என்ன தப்புண்ணா பண்ணாங்க?”
“அவ எந்த தப்பும் பண்ணலம்மா! நான் தான் தப்பு பண்ணேன்! அதைப் புரிய வைக்க தான் நான் பலதடவை அவனுக்கு முயற்சி பண்ணேன் ஆனா அவன் புரிஞ்சுக்கல! சரி அதற்கு அப்புறம் எப்படி உனக்கு இந்த உண்மை எல்லாம் தெரிய வந்தது?
“அதற்கு அப்புறம் அவங்க என்னோட காதலை ஏற்றுக் கொள்ளவே மாட்டாங்கன்னு நினைத்து துளசியை மீட் பண்ணுவதையும் தவிர்த்துட்டேன் ஒரு நாள் துளசி என்னைத் தேடி என் வீட்டுக்கே வந்தா அவ தான் உங்க மனைவி தான் அஞ்சலின்னு என் கிட்ட சொன்னா! அப்போ தான் எனக்கு நான் அவசரப்பட்டு பண்ண தப்பு புரிஞ்சுது! நான் கார்த்திக்கை அளவுக்கு அதிகமாக காதல் பண்ணியும் அவரைப் பற்றி தப்பாக நினைத்துட்டேனேன்னு இன்னைக்கு வரைக்கும் கவலைப்பட்டுட்டு தான் இருக்கேன்!” என்று வருத்தம் தோய்ந்த குரலில் ராகினி கூற
அவளது தலையில் கையை வைத்த ஆதித்யா
“காதலில் சில சில மனஸ்தாபம் வரும் தான் ம்மா! அதை எல்லாம் கடந்து நம்ம காதலில் நாம உறுதியாக இருக்கணும் அந்த வகையில் நீ எவ்வளவோ பெரிய இடத்தில் இருக்கம்மா! உன் நல்ல மனதுக்கு கண்டிப்பாக நல்லதே நடக்கும்! கார்த்திக் ரொம்ப ரொம்ப லக்கி! அவனை நினைத்து எனக்கு இனி எந்த கவலையும் இல்லை!” என்று விட்டு கண்களை மூடி சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
சிறிது நேரம் இருவருக்கும் இடையே அமைதி நிலவ அந்த அமைதியைக் கலைப்பது போல தன் தொண்டையை செருமிக் கொண்ட ராகினி
“உங்க மனதில் இன்னும் அஞ்சலி இருக்காங்க தானே ஆதிண்ணா?” என்று கேட்க
அவளது கேள்வியில் சட்டென்று நிமிர்ந்து பார்த்தவன்
“சேச்சே! அப்படி எல்லாம் யாரும் இல்லை” என்று விட்டு தன் பார்வையை திருப்பிக் கொள்ள
சிறு புன்னகையுடன் அவனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவள்
“காதல் பண்ணுற ஒவ்வொருத்தரும் தன்னோட மனதில் இருக்குற உண்மையை ஒத்துக் கொள்ளாமல் இப்படி தான் உடனடியாக மறுப்பு சொல்லுவாங்க ஏன்னா நான் இந்த விஷயத்தில் உங்களை விட ரொம்ப சீனியர் அண்ணா! கார்த்திக்கை நான் லவ் பண்ணவே இல்லைன்னு எத்தனை வருஷம் நான் என்னை நானே ஏமாற்றிட்டு இருந்தேன் தெரியுமா? இப்போ அதை நினைத்து ஃபீல் பண்ணுறேன் மனதில் வந்த காதலை உடனே சொல்லாமல் மறைத்து மறைத்து வைத்து இப்போ சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அந்த வலி எவ்வளவு கொடுமையானதுன்னு எனக்கு புரியும் அண்ணா! உங்க கண்ணில் அந்த வலியை நான் இந்த வீட்டுக்குள்ள வந்த நிமிஷத்தில் இருந்து பார்த்துட்டே இருக்கேன் உங்களுக்கும், அஞ்சலிக்கும் இடையே என்ன நடந்நதுன்னு எனக்குத் தெரியாது ஆனால் உங்க இரண்டு பேருக்கும் இடையே அளவுக்கதிகமான காதல் இருந்து இருக்கும் அது எனக்கு தெரியுது அவங்க பெயரை நான் ஒவ்வொரு தடவை உச்சரிக்கும் போதும் உங்க முகத்தில் அத்தனை வலி, அந்த வலியையும் மீறி காதல் உங்க முகத்தில் கொட்டிக் கிடக்கு!
கார்த்திக்கிற்கு காதலைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் இல்லை அதனால அவரோட பார்வைக்கு உங்க வலி, வேதனை இது மட்டும் தான் தெரிந்து இருக்கும் ஆனா மனதில் ஒருத்தர் மேல காதலை சுமந்துகொண்டு அவங்களையே நினைத்து வாழுறவங்களால் தான் அந்த வலியையும் தாண்டிய காதலை உணர முடியும் நான் அதை உணர்றேன்! நான் உங்களுக்கு இப்போ ஒரு வாக்கு தர்றேன் அண்ணா என்ன நடந்தாலும் சரி யாரு எதிர்த்தாலும் சரி உங்க அஞ்சலியை உங்க கிட்ட மறுபடியும் கொண்டு வந்து சேர்க்கப் போறது என்னோட பொறுப்பு இதற்கு துணையாக கார்த்திக்கும் இருப்பாங்க! இது நான் உங்களுக்கு பண்ணுற சத்தியம்!” என்றவாறே அவனது கையின் மேல் தன் கையை வைக்க
“என்ன சத்தியம் எல்லாம் பண்ணுறீங்க? ஒரு போன் கால் பேசிட்டு வர்றதுக்குள்ள என்ன ராணுவ ரகசியம் பேசிட்டு இருக்கீங்க?” என்றவாறே கார்த்திக் அவர்கள் இருவரின் முன்னாலும் வந்து நின்றான்.
“அது தான் இராணுவ ரகசியம்னு சொல்லிட்டீங்களே! அப்புறம் எப்படி சொல்லுறது? அதோடு அண்ணன், தங்கச்சிக்குள்ள ஆயிரம் இருக்கும் அதெல்லாம் சொல்ல முடியாது” கார்த்திக்கை பார்த்து சிரித்துக் கொண்டே ராகினி கூற அவள் வழமை போல தன்னுடன் கேலியாக பேசுகிறாள் என்று நினைத்து சிரித்துக் கொண்டே அவனும் அவளோடு இணைந்து பேசத் தொடங்கினான்.
சிறிது நேரம் அவர்கள் இருவரும் ஆதித்யாவுடன் மனம் திறந்து சிரித்துப் பேசி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல தயாராகி காரில் ஏறி அமர்ந்து கொள்ளும் வேளை ஆதித்யாவை திரும்பி பார்த்த ராகினி
“நான் பண்ண சத்தியத்தை நிறைவேற்றுவேன்” என்று அவனுக்கு ஜாடை காட்டி விட்டு காரினுள் ஏறி அமர்ந்து கொண்டு புறப்பட்டு சென்று விட ஆதித்யாவோ அவளை கலக்கத்தோடு பார்த்து கொண்டு நின்றான்…….