உன்னாலே – 12

eiAPZYF37537-9d053476

இரவு நேரக் குளிர் காற்று தேகத்தை தழுவிச் செல்ல தன் சேலையை இழுத்து தன்னைச் சுற்றி போர்த்திக் கொண்ட ராகினி பால்கனி தடுப்புச் சுவற்றில் சாய்ந்து நின்ற கொண்டபடியே தன் முன்னால் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டு நின்ற தன் கணவன் கார்த்திக்கின் முகத்தை பார்த்துக் கொண்டு நின்றாள்.

ஆதித்யாவின் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பி வரும் போதும் சரி அதற்கு பின்னரும் சரி கார்த்திக் அவளிடம் சரியாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

ஆதித்யாவைப் பற்றி எண்ணிக் கவலையாக இருக்கிறான் போலும் அவனாக ஏதாவது பேசட்டும் என்று பொறுமையாக இருந்த ராகினி அவனிடம் இருந்து எந்தவொரு பேச்சு வார்த்தையும் இல்லாமல் இருக்கவே இதற்கு மேலும் அவன் ஆதித்யாவைப் பற்றி ஏதாவது பேசுவான் என்று காத்திருப்பதில் பலனில்லை என்ற எண்ணத்தோடு தன் படுக்கையை தூங்குவதற்கு ஏற்றபடி தயார் செய்யப் போக சரியாக அந்த நேரம் பார்த்து அவள் முன்னால் வந்து நின்ற கார்த்திக்
“ராகினி நான் உன் கிட்ட ஆதித்யா பற்றி சொல்வதாக சொல்லி இருந்தேன் இல்லையா? பால்கனியில் இருந்து பேசலாம் வா” என்று விட்டு பால்கனி நோக்கி சென்று விட அவனது திடீர் அழைப்பில் திடுக்கிட்டு அவனைப் பார்த்துக் கொண்டு நின்றவள் அவன் கூறிய விடயங்களை கேட்டு விட்டு தன் தோளை குலுக்கி கொண்டு அவனைப் பின் தொடர்ந்து நடந்து சென்றாள்.

பால்கனியில் வந்து நின்று பத்து, பதினைந்து நிமிடங்கள் கடந்த பின்பும் கார்த்திக் எதுவும் பேசாமல் இருக்கவே தூக்க கலக்கத்தோடு தன் பார்வையை ஒரு முறை அந்த இடத்தை சுற்றிப் படர விட்ட ராகினி
“கார்த்திக் கால் வலிக்குது பா! ஏதோ பேசணும்னு சொன்னீங்களே பேசுங்கபா” என்று கூறவும்

சிறு பெருமூச்சுடன் அவளின் புறம் திரும்பி நின்றவன்
“என் கிட்ட பேச உனக்கு இவ்வளவு நேரம் தேவைப்பட்டதா ராகினி?” என்று கேட்க அவளோ அவனது கேள்வியில் குழப்பமாக அவனைப் பார்த்து கொண்டு நின்றாள்.

“நீங்க என்ன கேட்குறீங்க? எனக்குப் புரியலையே கார்த்திக்!”

“ஆதியோட வீட்டுக்கு போயிட்டு வந்ததுக்கு அப்புறம் இருந்து நீ என் கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல ராகினி! நீயாக என் கிட்ட பேசுவேன்னு நான் எவ்வளவு நேரமாக காத்துட்டு இருக்கேன் தெரியுமா? நானாக வந்து பேசியும் நீ என் கிட்ட அதற்கு பதிலாக கூட எதுவும் பேசாமல் இருக்க என் மேல் உனக்கு ஏதாவது கோபமா ராகினி?”

“ஹையோ கார்த்திக்! அப்படி எல்லாம் எதுவும் இல்லை பா! நீங்களாகவே பேசட்டும்ன்னு தான் நான் பொறுமையாக இருந்தேன்”

“நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் இது நாள் வரை நான் பேசும் வரைக்கும் காத்திருந்து தான் நீ பேசுனியா ராகினி? நான் எவ்வளவு அமைதியாக இருந்தாலும் ஏதாவது பேசி என் கூட வம்பிழுத்து நீ விளையாடிக்கிட்டே இருப்ப! ஆனா இன்னைக்கு நான் மனதளவில் ரொம்ப வருத்தமாக இருக்கேன்னு தெரிந்தும் நீ என் கிட்ட சரியாக பேசல! நீயாக வந்து என் கூட பேசி என் கவலைக்கு ஆறுதலாக இருப்பேன்னு நான் எவ்வளவு நேரமாக காத்துட்டு இருக்கேன் தெரியுமா?” கார்த்திக் தன் பேச்சு வாக்கில் தன் மனதிற்குள் இருந்த விடயங்களை எல்லாம் கூறிக் கொண்டு செல்ல அவன் இறுதியாக சொன்ன வார்த்தைகளை கேட்டு ராகினி சொக்கித் தான் போனாள் என்றால் மிகையாகாது.

தன் காதலை அவன் உணர வேண்டும் தன் குரல் கேட்க அவன் ஏங்க வேண்டும் தன்னைப் பற்றி அவன் நினைக்க வேண்டும் என்பதை தானே அவள் தன் மனதிற்குள் இத்தனை வருடங்களாக சேமித்து வைத்து தவியாகத் தவித்துக் கொண்டிருந்தாள் இப்போது அவளது காதல் கணவன் அவன் வாயாலாயே அவள் ஏங்கித் தவித்த விடயத்தை கூறும் போது அவளுக்குள் ஏற்படும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

அதீத சந்தோஷம், அதீத கவலை, அதீத கோபம் என எந்தவகையான உணர்வும் அதன் எல்லையை தாண்டும் போது பெரும்பாலும் அது நம் கண்ணீராக வெளி வந்து விடும்.

அது போலத்தான் இப்போது ராகினியும் அதீத சந்தோஷத்தில் கலங்கிய தன் கண்களை அவனிற்கு காட்டிக் கொள்ளாமல் இருக்க மறுபுறம் திரும்பி நின்று கொண்டு தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு நிற்க
“நீ என் கூட பேச விரும்பலையா ராகினி?” கார்த்திக் அவளின் அருகில் வந்து நின்று கேட்கவும்

சட்டென்று அவனைப் பார்த்து மறுப்பாக தன் தலையை அசைத்தவள்
“அப்படி இல்லை கார்த்திக்! நீங்க ஏற்கனவே பல யோசனையுடன் இருந்தீங்க இதில் நான் ஏதாவது பேசி நீங்க அப்செட் ஆகக்கூடாதுன்னு தான் நான் எதுவும் உங்க கிட்ட கேட்கல” எனவும்

“நீ பேசாமல் இருந்தால் தான் எனக்கு அப்செட் ஆகுது ராகினி! இத்தனை நாள் நான் இப்படி இருந்தது இல்லை ராகினி! இப்போ நீ கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தாலே எனக்கு ஏதோ ஒரு பெரிய விடயத்தை இழந்தது போல இருக்கு! அது எதனாலன்னு எனக்கு தெரியலை” என்று விட்டு கார்த்திக் தன் தலையை அழுந்தக் கோதிக் கொண்டு நிற்க ராகினி அவனது பேச்சைக் கேட்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்து நின்றாள்.

கார்த்திக்கின் மனதிற்குள் தன் மேல் காதல் வரத் தொடங்கி விட்டது என்பது ராகினிக்கு மெல்ல மெல்ல பிடிபடத் தொடங்க அதன் விளைவாக தனக்குள் ஏற்பட்ட அளவில்லா சந்தோஷத்தில் துள்ளிக்குதித்து ஆட்டம் போட தயாரானவள் தன் நிலை உணர்ந்து அந்த சந்தோஷத்தை முழுமையாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு
“சரி இனி நான் அப்படி பண்ண மாட்டேன் நீங்களாகவே என் வாயை மூடச் சொன்னாலும் நான் இனி பேசிட்டே தான் இருப்பேன் போதுமா? இப்போ முதலில் நீங்க ஆதித்யா அண்ணா பற்றி சொல்ல வந்ததை சொல்லுங்க! எந்தவொரு விடயத்தையும் மனதிற்குள் வைத்துக் கொண்டு கஷ்டப்படுவதால் பலனில்லை என் அனுபவத்தில் தான் சொல்லுறேன்! ஓபனாக பேசிடுங்க சரியா?” என்று விட்டு கார்த்திக்கின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அந்த இடத்தில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து கொள்ள அவனும் அமைதியாக அவளது கூற்றுக்கு கட்டுப்பட்டவன் போலவே சென்று அமர்ந்து கொண்டான்.

“ஆதித்யாவை என்னோட பிரண்ட்ன்னு சொல்லுவதை விட என்னோட தம்பி மாதிரின்னு சொல்லலாம் ராகினி! அவனோட எப்படி இந்தளவிற்கு நான் நெருக்கமாகினேன்னு எனக்குத் தெரியாது ஆனா அவனை என் தங்கச்சி துளசி மாதிரி என் கூடப் பிறந்தவனைப் போலத்தான் நான் பார்க்கிறேன்! ஆதி சின்ன வயதிலேயே தன்னோட அம்மா, அப்பாவை இழந்திருந்தாலும் அவனோட சித்தியும், சித்தப்பாவும் அவனைத் தங்களோட சொந்தப் பையன் மாதிரி தான் பார்த்துட்டு வந்தாங்க அவங்களுக்கு குழந்தை இல்லைங்குற கவலை ஆதித்யாவால் தான் இல்லாமல் போனது! நானும், ஆதியும் சின்ன வயதில் இருந்தே ஒன்றாகத் தான் படித்தோம் காலேஜும் ஒரே காலேஜ்! இப்படி எங்க வாழ்க்கையில் எல்லாமே ஒழுங்காக தான் போயிட்டு இருந்துச்சு அப்படியான ஒரு நேரத்தில் தான் கடவுள் ஆதியோட வாழ்க்கையில் அஞ்சலியை தள்ளி விட்டுட்டாங்க!” கார்த்திக் சிறு பெருமூச்சுடன் தன் பேச்சை இடை நிறுத்த

‘அஞ்சலி ஆதி அண்ணாவோட வைஃப் தானே?’ என்று கேட்க போன ராகினி தனக்கு முன்னரே ஒரு சில விடயங்கள் தெரிந்திருந்தாலும் கார்த்திக் முழுமையாக எல்லாவற்றையும் சொல்லி முடித்து விடட்டும் என்ற எண்ணத்தோடு தான் கேட்க வந்த விடயத்தை தனக்குள்ளேயே மறைத்துக் கொண்டாள்.

“அப்புறம் என்ன ஆச்சு கார்த்திக்?”

“எங்க காலேஜில் ஒவ்வொரு வருடமும் கிரிக்கெட் டூர்ணமெண்ட் நடத்துவோம் அப்படி நடத்திய டூர்ணமெண்டில் நாங்க ஃபைனல் இயர் படித்துக் கொண்டிருக்கும் போது நடந்த டூர்ணமெண்ட் பொறுப்பு என் கீழே வந்தது அந்த நேரத்தில் எல்லா வேலையையும் நானும், ஆதியும் தான் செய்தோம் நான் பொதுவாக ரொம்ப அமைதியான டைப் யார் கூடவும் சட்டுன்னு பேசிட மாட்டேன் ஆனா ஆதி எனக்கு நேர் எதிர்! அதனால என்னவோ பல பொண்ணுங்க அவனை சுற்றி சுற்றி வந்துட்டே இருப்பாங்க அதுவும் இந்த டூர்ணமெண்ட் தொடங்கிய நேரம் ரொம்ப ரொம்ப தொல்லை! இருந்தாலும் எல்லாவற்றையும் சமாளித்து ஒருவழியாக ஃபைனல் வரைக்கும் வந்துட்டோம்! ஒரு பக்கம் ஃபைனல் மேட்ச் ரொம்ப மும்முரமாக நடந்துட்டு இருக்க மறுபக்கம் அன்னையோட எல்லாப் பிரச்சினைகளையும் முடிந்து விடும் என்று நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருந்துச்சு! ஆனா என்ன சந்தோஷப்பட்டு என்ன செய்ய? நாம ஒன்று நினைத்தால் கடவுள் வேறொன்று தானே நினைப்பாங்க! அப்படி ஒரு எதிர்பாராத திருப்பமாக தான் அந்த நாளில் அஞ்சலி வந்தா!
அவ அதற்கு முன்னாடி யார் கூடவும் பெரிதாக நெருக்கமாக பழகியோ, பேசியோ நான் பார்த்தது இல்லை அன்னைக்கு தான் அவ முதன்முதலாக என் கூட வந்து பேசுனா! அப்போவே அவ ஆதித்யாவை விரும்புவதாக ஓபனாக சொல்லிட்டா! எனக்கு முதலில் அது ஷாக்காக இருந்தாலும் அதற்கு அப்புறம் நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளல ஏன்னா அந்த நேரத்தில் அடிக்கடி இப்படி பல பொண்ணுங்க வந்து பேசிட்டு போவாங்க அதனால அப்படி ஒரு விடயம் தான் இதுவும் என்று நினைத்து நான் அப்படியே விட்டுவிட்டேன்! இருந்தாலும் அஞ்சலி வந்து என் கிட்ட உன்னைக் காதலிப்பதாக சொன்னான்னு சொல்லும் போது ஆதித்யா முகத்தில் ஒரு சந்தோஷம் வந்து போனது அதை நான் கவனித்தேன் வேறு பல பொண்ணுங்க வந்து பேசிட்டு போனதை சொல்லும் போதெல்லாம் அவன் முகம் இப்படி எந்தவொரு மாற்றத்தையும் நான் பார்க்கவே இல்லை! அஞ்சலி பெயரை சொல்லும் போது தான் இந்த மாற்றத்தை நான் முதன்முதலாக அவன் கிட்ட பார்த்தேன் அதற்கு அப்புறம் பல தடவை அவனைப் பார்த்தேன் அப்போ எல்லாம் அவன் முகத்தில் அஞ்சலியை பார்க்கும் போது ஒரு சந்தோஷம் இருந்துட்டே இருக்கும் அது எல்லாம் தெரிந்தும் நான் அமைதியாக இருந்தேன் ஏதோ ஒரு சின்ன தடுமாற்றம் போலன்னு நினைத்து விட்டுட்டேன்
அதற்கு அப்புறமாக நாட்கள் எல்லாம் இறக்கை கட்டி பறந்தது போல சட்டுன்னு போயிடுச்சு அதோடு ஒருவழியாக எங்களுக்கு ஃபைனல் எக்ஸாமும் முடிந்தது! அடுத்து லைஃபில் என்ன செய்யலாம்ன்னு பேசிட்டு இருந்த நேரத்தில் தான் ஆதி என் கிட்ட அஞ்சலியை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுவதாக சொன்னான் அதை நான் முன்னாடியே எதிர்பார்த்தேன் தான் இல்லைன்னு முழுமையாக மறுத்து சொல்ல முடியாது! அவன் அந்த நாள் வரைக்கும் எந்த பொண்ணு கூடவும் தன்னோட எல்லையை மீறிப் பழகியது இல்லைன்னு எனக்குத் தெரியும் அப்படி இருக்கும் போது அவன் ஒரு பெண்ணை விரும்புவதாக சொல்லும் போது எனக்கு ஒரு பிரண்டாக அவன் ஆசையை நிறைவேற்றி வைக்கணும்னு தான் தோணுச்சு அதனால அடுத்த நாளே ஆதி வீட்டில் இதைப் பற்றி சொன்னோம் அஞ்சலி அம்மா,அப்பா இல்லாத பொண்ணுன்னு ஆதியோட சித்தி, சித்தப்பா அந்த நேரமே கொஞ்சம் தயங்கி நின்னாங்க! அப்போவே நான் அந்த பேச்சை விட்டு இருக்கலாம் ஆனா நான் பண்ண தப்பு இப்போ வரைக்கும் அவனைக் கஷ்டப்பட வைத்துட்டு இருக்கு”

“ஏன் கார்த்திக் அப்படி சொல்லுறீங்க? நீங்க உங்க பிரண்ட்டோட ஆசையைத் தானே நிறைவேற்றி வைத்து இருக்கீங்க!”

“அவனோட ஆசை தான் ராகினி இருந்தாலும் ஆதி அஞ்சலியை கல்யாணம் பண்ணியே ஆகணும்ன்னு ரொம்ப பிடிவாதமாக இருந்தான் அதனால் நான் தான் அவங்க வீட்டில் பேசி எல்லோரையும் சம்மதிக்க வைத்து அவங்க கல்யாணத்துக்கு முழு ஏற்பாடும் பண்ணிக் கொடுத்தேன் ஒருவேளை நான் அவனை கட்டாயப்படுத்தி தடுத்து இருந்தால் இப்படி அவன் தனியாக இருக்க வேண்டிய அவசியமே வந்து இருக்காது!” என்று விட்டு கார்த்திக் தன் கண்களை மூடிக் கொள்ள ராகினி அவனது கையை ஆதரவாக பற்றிக் கொண்டு மெல்லமாக அழுத்திக் கொடுத்தாள்.

“கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்புறம் கொஞ்ச நாள் ஆதித்யா ரொம்ப சந்தோஷமாக இருந்தான் சொந்தமாக பிசினஸ், காதல் கல்யாணம்ன்னு அவன் நிம்மதியாக இருக்கான்னு நினைத்து நான் என் பிசினஸ் வேலையில் ரொம்ப மூழ்கிப் போய் விட்டேன் எவ்வளவு தூரம் நான் மூழ்கிப் போனேன்னா ஆதித்யா கூட கிட்டத்தட்ட ஆறு மாதமாக நேரில் என்ன போனில் பேசுவதை கூட மறந்து போய் விட்டேன் அந்தளவுக்கு பிசினஸ் என் மூளையை நிரப்பி இருந்தது!
ஆதித்யாவோட கல்யாணம் முடிந்து ஒரு வருடம் ஆக கொஞ்ச நாளே இருந்த நேரம் ஒரு நாள் நடுராத்திரி பன்னிரண்டு மணிக்கு எனக்கு அவன் கிட்ட இருந்து கால் வந்தது அந்த நேரத்தில் அவன் போன் பண்ணவும் நான் ரொம்ப பயந்துட்டேன் அவசர அவசரமாக அவன் வீட்டுக்கு போய் பார்த்தால் ஒரு கையில் தூக்க மாத்திரை பாட்டிலையும் மறு கையில் ஒரு காகிதத்தையும் வைத்துட்டு எங்கேயோ வெறித்துப் பார்த்துட்டு இருந்தான் அவனோட சித்தியும், சித்தப்பாவும் ரொம்ப உடைந்து போய் அழுதுட்டு இருந்தாங்க அவனை எவ்வளவோ கேள்வி கேட்டுப் பார்த்தேன் அவன் பேசவே இல்லை இரண்டு, மூணு நாள் கழித்தும் அவன் கிட்ட இருந்து எந்தவொரு பேச்சும் வரல தன்னோட கையில் இருக்கும் காகிதத்தை யாருக்கும் காட்டாமல், கொடுக்காமல் தன் கையோடு வைத்துக் கொண்டு பார்த்துட்டே இருப்பான்
இப்படியே இருந்தால் அவன் நிலைமை மோசமாகி விடும்ன்னு பயத்தில் அவசர அவசரமாக அவனை ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணோம் அவனை செக் பண்ணிப் பார்த்த டாக்டர் அவனுக்கு சைக்காட்ரிக் ட்ரீட்மெண்ட் கொடுக்கணும் ரொம்ப டிப்ரெஸ்ட்டா இருக்கான்னு சொன்னாங்க அதற்கு அப்புறம் அவனோட பொறுப்பை நானே எடுத்துக்கிட்டேன் ஊரை விட்டு தள்ளி இருக்கும் ஒரு ஹாஸ்பிடலில் அவனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ண ஏற்பாடு பண்ணோம்”

“ஏன் ஊரை விட்டு தள்ளி இருக்கும் இடத்திற்கு போனீங்க?”

“அவனோட இந்த நிலைமை அடுத்தவங்க வெட்டிப் பேச்சுக்கு தீனியாகி விடக்கூடாதுன்னு தான்”

“அஞ்சலி எங்கே போனாங்க?”

“தெரியலை! இன்னைக்கு வரைக்கும் எங்கே இருக்கா? இன்னும் உயிரோடு இருக்காளான்னு கூட தெரியலை”

“அப்படி என்னதான் பிரச்சினை அவங்களுக்குள்ள?”

“காதல்!”

“வாட்?” கார்த்திக்கின் பதிலில் ராகினி அதிர்ச்சியாக அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“ஆமா காதல் தான் பிரச்சினை அதுவும் எதிர்பார்ப்புகள் நிறைந்த காதல்”

“எனக்கு புரியல கார்த்திக்! காதல் எப்படி பிரச்சினை ஆகும்?”

“சொல்லுறேன் கேளு! ஆதித்யாவிற்கு ட்ரீட்மெண்ட் ஆரம்பித்து இரண்டு, மூணு நாளிலேயே அவன் கிட்ட நல்ல முன்னேற்றம் தெரிந்தது அதற்கு அப்புறம் தான் என்ன பிரச்சினை ஆச்சுன்னு அவன் சொன்னான் ஆரம்பத்தில் அஞ்சலி அவனோட ரொம்ப அன்பாக தான் இருந்து இருக்கா நாளாக நாளாக சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் அவனோட சண்டை போட ஆரம்பித்து இருக்கா! நிறைய சந்தேகம், சண்டைன்னு அடிக்கடி பிரச்சினை நடந்து இருக்கு இருந்தும் ஆதி எல்லாவற்றையும் அமைதியாக கடந்து போய் இருக்கான் அந்த நாள் வரைக்கும் அஞ்சலி வீட்டை விட்டு போவான்னு அவன் கனவில் கூட நினைத்து இருக்கலை
வழக்கம் போல ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு வந்தவன் அஞ்சலியை தேடிப் பார்த்து இருக்கான் அவளை எங்கேயும் காணல அவ எழுதி வைத்துட்டு போன ஒரு காகிதம் தான் கிடைத்து இருக்கு அதில் அவ எழுதி இருந்தது இது தான் ‘நான் எதிர்பார்த்த காதல் உங்க கிட்ட இல்லை ஐ யம் சாரி ஆதி நான் போறேன் என்னைத் தேட வேண்டாம்’ இவ்வளவு தான் அதில் இருந்தது! எதனால் அவ அவனை விட்டுட்டு போனா? என்ன பிரச்சினை? இன்னைக்கு வரைக்கும் யாருக்கும் புரியல!
அதற்கு அப்புறம் மெல்ல மெல்ல அவனை அந்த நிலையில் இருந்து வெளியே கொண்டு வந்து இப்போ இந்த நிலையில் கொண்டு வந்து இருக்கோம் மறுபடியும் அவன் சித்தி, சித்தப்பாவோட தங்க விரும்பல அந்த வீட்டில் அவ ஞாபகம் தான் அதிகமாக வருதுன்னு சொன்னான் அதனால தான் இப்படி ஒரு இடத்தில் அவன் தங்கி இருக்கான் வாரத்துக்கு ஒரு தடவை அவனோட சித்தியும், சித்தப்பாவும் அவன் கூடப் போய் தங்கி இருந்துட்டு வருவாங்க அவன் குணமாகி வரும் வரைக்கும் அவனோட எல்லா பொறுப்புக்களையும் அவன் சித்தப்பா தான் கவனிச்சுட்டு இருந்தாங்க இப்போ மறுபடியும் அவன் அந்த பொறுப்பை எல்லாம் எடுத்துட்டான் இருந்தாலும் பழையபடி அவனோட சந்தோஷம் இன்னும் அவனுக்கு கிடைக்கல! அந்த குற்றவுணர்ச்சி இன்னும் எனக்கு இருக்கு ராகினி!
ஒருவேளை நான் இந்த கல்யாணத்தை நடத்த ஆர்வம் காட்டாமல் இருந்து இருந்தால் இந்தளவிற்கு எல்லாம் பிரச்சினை வந்தே இருக்காது இல்லையா ராகினி? அஞ்சலியால் ஆதித்யா பட்ட கஷ்டத்தைப் பார்த்தே எனக்கு கல்யாணம், காதல் இந்த இரண்டு விடயத்திலும் நம்பிக்கை இல்லாமல் போயிடுச்சு அதனால் தான் என்னோட வாழ்க்கையில் இந்த இரண்டு விடயங்களும் எப்போதும் வரவே கூடாதுன்னு இருந்தேன் ஆனா ஏனோ ஒரு கட்டத்தில் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டேன் அதற்கு அப்புறமும் எனக்கு குழப்பம் இருந்து கொண்டே தான் இருந்துச்சு ஒருவேளை எனக்கும் இப்படி ஒரு நிலை வந்தால்?”

“கார்த்திக்! என்ன பேச்சு இது? உங்களை அப்படி கஷ்டப்படுத்தி பார்க்க நான் நினைப்பேனா?” ராகினி சிறு கண்டிப்புடன் கார்த்திக்கைப் பார்த்து வினவ

புன்னகையுடன் அவளது கையைப் பிடித்துக் கொண்டவன்
“கல்யாணம் ஆன புதிதில் அதை நினைத்து தான் நான் உன்னை விட்டு விலகி விலகிப் போனேன் இப்போதும் அந்த பயம் எனக்கு இருக்கு தான் இல்லைன்னு சொல்ல முடியாது ஏன்னா மனதில் பட்ட காயம் மாறவே இல்லை! எந்தவொரு விடயமும் அதன் எல்லையை தாண்டும்போது பிரச்சினை கண்டிப்பாக வரும் அதில் எந்த மாற்றமும் இல்லை! ஆதித்யா பற்றி இவ்வளவு நாளாக நான் உன் கிட்ட சொல்லவே இல்லை ஏன்னா அவனோட வாழ்க்கை இப்படி ஆக நானும் ஒரு வகையில் காரணம் என்கிற குற்றவுணர்ச்சி தான் மற்றபடி எதுவும் இல்லை!” என்றவாறே எழுந்து நின்று கொண்டு

“நான் இப்படித்தான் இருப்பேன் ராகினி! என்னோட எல்லையை மீறி நான் எதையும் செய்ய மாட்டேன் நான் உன் கிட்ட போட்ட சவால் ஞாபகம் இருக்கு இல்லையா? அதில் நான் சொன்னது தான் நடக்கும்! அதனால நீயும் உன் மனதில் வீணாக எதையும் போட்டு குழம்பிக் கொள்ளாதே!” என்று விட்டு தங்கள் அறைக்குள் சென்று விட

“ஹையோ! மை டியர் ஹஸ்பண்ட் கார்த்திக்! கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி என் பேச்சைக் கேட்காமல் இருக்க முடியாதுன்னு ஃபீல் பண்ணிங்களே அது தான் உங்க உண்மை இப்போ நீங்க கடைசியாக சொல்லிட்டு போறது உங்களுக்கு நீங்களாகவே போட்டுக் கொண்டு இருக்கும் வேலி! அதை உடைக்க ஒரே வழி ஆதித்யா அண்ணா அன்ட் அஞ்சலியை சேர்த்து வைப்பது தான் எந்தவொரு உண்மையான காதலும் கஷ்டத்தில் முடிவடையாது அவங்க இரண்டு பேருக்கும் நடுவில் இருக்கும் பிரச்சினை என்னன்னு நான் கண்டுபிடிக்கிறேன் அப்போதுதான் காதல் மீது இருக்கும் உங்க அபிப்பிராயம் தப்புன்னு நீங்க புரிஞ்சு கொள்ளுவீங்க! சோ மை டியர் ஹஸ்பண்ட் கார்த்திக் கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க இன்னைக்கு எப்படி என் பேச்சைக் கேட்க அவ்வளவு தூரம் ஏங்கிப் போய் இருந்தீங்களோ அதே மாதிரி ஒரு நாள் நீங்க என்னைக் காதலிப்பதையும் மனம் திறந்து சொல்லத் தான் போறீங்க! அதை நான் என் இரண்டு காது குளிரக் கேட்கத் தான் போறேன்” என்று தனக்குள்ளேயே பேசிக் கொண்ட ராகினி மனம் நிறைந்த சந்தோஷத்துடன் அந்த நொடிப் பொழுதை ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டபடியே அடுத்து என்ன செய்வது என்று திட்டம் தீட்டத் தொடங்கினாள்…….