உன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 01

நான்கு புறமும் நீரால் சூழப்பட்ட அழகிய தீவான இலங்கை இந்து சமுத்திரத்தின் முத்து என அழைக்கப்படுவதோடு மட்டுமின்றி சுற்றுலா, வியாபாரம், ஏற்றுமதி, வாசனைத் திரவியங்கள் போன்ற பல்வேறு துறைகளில் பிரசித்தமானது. 

 

அப்படி பிரசித்தமான ஒரு துறை தான் தேயிலை பயிர் செய்கை. 

 

இலங்கையின் தேயிலைக்கு பல்வேறு நாடுகளில் இன்று வரை தேவை இருந்து கொண்டு தான் இருக்கிறது. 

 

அதிலும் தேயிலை பயிர் செய்கைக்கு பிரசித்தி பெற்ற பிரதேசம் தான் மலையகம் அது மத்திய மாகாணத்தில் அமைந்துள்ளது. 

 

இலங்கையில் முதல் முதலாக பிரித்தானியரான ஜேம்ஸ் டைலர் என்பவரால் 1867 இல் தேயிலை பயிர் செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது. 

 

மலையகத்தின் கண்டி மாவட்டத்தில் லுல்கந்துர என்ற பிரதேசத்தில் 19 ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்ட தேயிலை தோட்டம் தான் இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்து தேயிலை பயிர் செய்கைக்கும் ஆணி வேராக காணப்படுகிறது. 

 

வருடத்தில் பெரும்பாலும் இங்கு மழை வீழ்ச்சி அதிகமாகவே இருக்கும். 

 

ஏப்ரல், மே மாதங்களில் தான் ஓரளவு வெயில் அங்குள்ளவர்களை வந்து ஆராதித்து செல்லும். 

 

இப்படியான வரலாற்று சிறப்பு மிக்க அந்த லூல்கந்துர பிரதேசத்தில் இருக்கும் உயரமான மலையான ‘கொன்டகல’ என்று அழைக்கப்படும் மலை ஏறுவதற்கு என்றே பிரசித்தி பெற்ற மலை உச்சியின் மீது நின்று கொண்டிருந்தாள் இழையினி. 

 

இழையினி பெயருக்கு ஏற்றாற் போல் தங்கத்தின் இழையின் நிறத்தை ஒத்தவள். 

 

சற்று பூசினாற் போல தேகம் கொண்டவள் மனமும் அவள் பெயருக்கு ஏற்றாற் போல் தங்கமானது தான். 

 

எப்போதும் எளிமையாக தன்னை அழகு படுத்திக் கொள்ளும் இழையினிக்கு தன் அன்னை என்றால் அத்தனை பிரியம். 

 

மலையேறுவதற்கு ஏற்றாற் போல கறுப்பு நிற டிராக் பேண்ட் மற்றும் கடும் நீல நிற டிசர்ட் அணிந்து இருந்தவள் முடியோ ஒற்றை கிளிப்பில் அடங்கியும் அடங்காமலும் அசைந்தாடிக் கொண்டிருந்தது. 

 

இழையினி பிறந்தது வளர்ந்தது எல்லாம் இந்தியாவில் தமிழ்நாட்டில் சென்னையில் தான். 

 

இலங்கையில் வந்து அவள் வசிக்கத் தொடங்கி இன்னும் ஒரு வாரத்தில் இரண்டு வருடங்கள் பூர்த்தி ஆகப் போகிறது. 

 

சென்னையில் மிகவும் பிரபலமான தொழிலதிபர் அசோகனின் செல்ல பேரப் பிள்ளை தான் இழையினி. 

 

அசோகனின் மனைவி வளர்மதி கணவனின் நிழலே பாதுகாப்பு என்று வாழ்ந்து வருபவர், எதையும் நிதானமாக நிறுத்தி யோசித்து தான் செயல்படுவார்.

 

அவர்களுக்கு கலைச்செல்வி என்று ஒரு மகளும், கதிரரசன் என்று ஒரு மகனும் தான் பிள்ளைகள். 

 

கலைச்செல்வியும் அவரது கணவர் இளமாறனும் அவரது தந்தையின் உடைகள் ஏற்றுமதி கம்பெனியில் ஒரு பங்காளர்களாக இருந்ததோடு அதை மேற்பார்வை செய்யும் பொறுப்பையும் செய்து வந்தனர். 

 

கதிரரசன் மற்றும் அவரது மனைவி எழிலரசி அசோகனின் வாசனை திரவியம் ஏற்றுமதி செய்யும் கம்பெனியை பொறுப்பெடுத்து நடத்தி வந்தனர். 

 

சென்னையில் இருக்கும் கிளைகள் மட்டுமின்றி நாடெங்கும் இருக்கும் மற்றைய கிளைகளும் அவர்கள் பொறுப்பில் தான் இருந்து வந்தது. 

 

இந்தியாவில் மட்டுமன்றி வேறு ஒரு சில நாடுகளிலும் அவர்கள் தொழில் சாம்ராஜ்யம் இருந்து கொண்டு  இருக்கிறது. 

 

அதை அந்த நாட்டில் இருக்கும் தனக்கு நம்பிக்கையானவர்கள் மூலமாக அவர்கள் மேற்பார்வை செய்து வந்தனர். 

 

இப்படியான ஒரு மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை நாற்பது வருடங்களுக்கு மேலாக கட்டியாளும் அசோகனின் வாரிசுகளின் பிள்ளைகள் தான் இழையினி, மதியழகன், தேன்மொழி மற்றும் நெடுஞ்செழியன். 

 

அசோகனிற்கு தமிழ் மேல் எப்போதும் தீராத காதல் உண்டு அதனாலேயே தன் பிள்ளைகளுக்கும், அவர்களது பிள்ளைகளுக்கும் நல் தமிழ் பெயர்களை தேடி தேடி வைத்து இருந்தார். 

 

அவர்களில் இழையினி மற்றும் மதியழகன் கலைச்செல்வி மற்றும் இளமாறனின் பிள்ளைகள். 

 

இழையினி பி.காம் முடித்து விட்டு தனது பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருக்கும் கம்பெனியில் ஒரு பக்கப் பொறுப்புகளை கவனித்து வந்தவள் இப்போது இலங்கையில் லுல்கந்துரவில் இருக்கும் தனது தாத்தாவின் தேயிலை எஸ்டேட்டை பொறுப்பில் எடுத்து இருக்கிறாள். 

 

அவளது அண்ணன் மதியழகன் பி.இ படித்து விட்டு தன் தாத்தாவின் கீழ் இயங்கும் ஒரு கன்ஸ்ட்ரெக்ஷன் கம்பெனியை பொறுப்பெடுத்து நடத்தி வருகிறான். 

 

மறுபுறம் கலைச்செல்வியின் தம்பியான கதிரரசன் மற்றும் எழிலரசியின் பிள்ளைகளான தேன்மொழி இறுதியாண்டு பி.காம் படித்துக் கொண்டிருக்க அவளது தம்பியான நெடுஞ்செழியன் முதலாம் வருட சட்டக் கல்லூரியில் இணைந்து இருந்தான். 

 

இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த சில கசப்பான சம்பவங்களை மறந்து சில நினைவுகளில் இருந்து தன்னை தூரமாக்கி கொண்டு மன மாற்றத்திற்காக தன் சொந்த ஊரை, நாட்டை விட்டு இங்கு வந்து தங்கி இருந்த இழையினி காலப் போக்கில் இங்கு கிடைத்த நட்பு, பாசம், அரவணைப்பினால் கட்டுண்டு இங்கேயே தங்கி இருக்க ஆரம்பித்தாள். 

 

வாரத்தின் இறுதி நாட்களில் எப்போதும் அவள் இந்த ‘கொன்டகல’ மலைக்கு தனியாக மலையேறி வருவதுண்டு. 

 

அந்த இடத்தில் இருந்து பார்த்தால் முழு லூல்கந்துர பிரதேசமும் வெகு தெளிவாகத் தெரியும். 

 

சூரியன் மெல்ல மெல்ல தன் உறைவிடத்தில் இருந்து எழுந்து சோம்பல் முறித்தவாறே தன் கதிர்களை பரப்பும் காட்சி தங்கத் தண்ணீரை கொட்டியது போல் வானமெங்கும் பரவி இருக்க அந்த காட்சியை பார்த்தால் இழையினிக்கு அந்த ஒரு வாரமும் இருந்த வேலை அலுப்பும், களைப்பும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். 

 

ஆரம்பத்தில் தன் வீட்டை சுற்றி இருந்தவர்களின் வர்ணனையைக் கேட்டு அந்த இடத்தை பார்க்க வந்தவள் நாளடைவில் அந்த இடத்தின் அழகில் தன்னை மறந்து எப்போதும் வார இறுதியில் வருவதை வழக்கமாக்கி இருந்தாள். 

 

எப்போதும் போல அன்றைய காலை விடியல் அவள் களைப்பு மனச் சோர்வு எல்லாவற்றையும் தூசாக மாற்றி அவளைப் புத்துணர்ச்சியாக்க அதே புத்துணர்வோடு மலையில் இருந்து இறங்கி தன் வீட்டை நோக்கி நடக்க தொடங்கியிருந்தாள் இழையினி. 

 

அவள் தங்கி இருக்கும் இல்லத்தில் இருந்து அந்த மலை உச்சி ஒரு கிலோமீட்டர் தொலைவில் தான் அமைந்திருந்தது. 

 

அரை மணி நேரத்திலேயே தன் வீட்டை வந்து சேர்ந்தவள் அங்கே தோட்டத்தில் வேலை செய்து கொண்டு நின்ற ஒரு பெரியவரைப் பார்த்து விட்டு புன்னகையுடன் அவரை நோக்கி நடந்து சென்றாள். 

 

வெள்ளை மற்றும் இள நீல நிறத்தில் பூச்சு பூசப்பட்டிருந்த அந்த வீடு ஒரு குட்டி அரண்மனையின் தோற்றத்தை ஒத்திருந்தது. 

 

வீட்டை சுற்றிலும் பல வண்ணங்களில் அந்தூரியம், ரோஜா செடிகள் அணி வகுத்து நிற்க அவற்றை காவல் காப்பது போல் கற்றாழை வரிசையாக நடப்பட்டிருந்தது. 

 

அந்த பிரதேசத்தின் கால நிலைக்கு ஏற்றாற் போல உயரமாக வளரக்கூடிய அலிப்பேர (வெண்ணைப் பழம்), கொய்யா மற்றும் சவுக்கு மரங்கள் வீட்டை சுற்றிலும் வளர்ந்து அந்த இடத்தையே குளிர்மையாக்க அங்கங்கே ஒன்றிரண்டு தேயிலை கன்றுகளும் வளர்ந்து தங்கள் இருப்பையும் அவர்களுக்கு நினைவூட்டி கொண்டிருந்தது. 

 

“குட் மார்னிங் முத்து தாத்தா? எப்படி இருக்கீங்க? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு!” 

 

“என்ன பாப்பா விளையாடுறியா? நேத்து தானே நான் வந்துட்டு போனேன்? உனக்கும் இஞ்ச இருக்குற பிள்ளையளோட சேர்ந்து நக்கல் கூடிடுச்சு என?” புன்னகையுடன் தன் கையில் இருந்த சிறு மண்வெட்டியை ஒரு ஓரமாக வைத்த படியே இழையினியைப் பார்த்து வினவ 

 

அவரைப் பார்த்து சிரித்த படியே அங்கிருந்த சிறு குன்று போன்ற கல் ஒன்றில் அமர்ந்து கொண்டவள் 

“இஞ்ச இருக்குற பிள்ளையள் என்ன அவ்வளவு வாயாடிகளா?” அவரைப் போன்றே பேசிக் காட்டிக் கேட்க அவரோ மண் ஒட்டி இருந்த தன் கையையும் கவனிக்காமல் ஆச்சரியமாக தன் கன்னத்தில் வைத்துக் கொண்டு நின்றார். 

 

“இஞ்ச வந்த இந்த இரண்டு வருஷத்துல நல்லா எங்கள மாதிரி பேசப் பழகிட்டீங்களே பாப்பா?” இன்னும் தன் ஆச்சரியம் மறையாத குரலில் அவர் கேட்கவும் 

 

“இரண்டு வருடங்களாக உங்க எல்லோர் கூடவும் பேசி பழகி இதைக் கூட கற்றுக் கொள்ளாமல் இருந்தால் எப்படி மை டியர் தாத்தா?” அவரது கன்னத்தை பிடித்து ஆட்டிய படியே கூறியவள் 

 

“சரி தாத்தா இன்னைக்கு ஒரு பூஜைக்காக நுவரெலியாவில் ஒரு கோவிலுக்கு போக வேண்டும் இன்னும் கொஞ்ச நேரத்தில் விஜயா வந்து விடுவாள் அவ வந்தா உள்ளே வந்து உட்கார சொல்லுங்க நான் ரெடி ஆகிட்டு வர்றேன்” என்று விட்டு வீட்டிற்குள் செல்லப் போக 

 

“பாப்பா கொஞ்சம் நில்லும்மா” என்ற முத்துவின் குரலில் கேள்வியாக அவரை நோக்கினாள். 

 

“இஞ்ச பக்கத்தில் நிறைய கோவில் இருக்கே! நீ ஏன் பாப்பா நுவரெலியாவுக்கு போகணும்? அங்க போக ரெண்டு, மூணு மணித்தியாலம் எடுக்குமே?” 

 

“இன்னைக்கு அம்மாவோட இரண்டாவது வருட நினைவு நாள் தாத்தா போன வருடம் அங்கே தானே நான் போனேன் ஏனோ தெரியவில்லை இந்த வருடமும் அங்கேயே போக வேண்டும் போல இருக்கு!” சுரத்தின்றி ஒலித்த அவள் குரலில் மானசீகமாக தன் தலையில் தட்டிக் கொண்டவர் 

 

“அய்யோ! பாப்பா எனக்கு மறந்தே போயிட்டு மன்னிச்சிக்கம்மா நீ போய் குளிச்சிட்டு வாம்மா நான் உனக்கு காலைச் சாப்பாடு செஞ்சி தாறேன்” என்று கூற அவரைப் பார்த்து முயன்று வரவழைத்து கொண்ட புன்னகையுடன் தலையசைத்தவள் தன் அறைக்குள் வந்து அடைந்து கொண்டாள். 

 

இழையினி தன்னை எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும் அவள் கண்கள் அவளது கட்டுப்பாட்டை மீறிக் கண்ணீரை சிந்தவே செய்தது. 

 

சிறு வயது முதலே தனக்கு தாயாக மட்டுமின்றி ஒரு தோழியாக, சகோதரியாக, ஆசானாக என சகலமுமாக இருந்த தன் அன்னையின் இழப்பை இன்று வரை அவளால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

 

தன் ஒட்டுமொத்த குடும்பமும் அவன் ஒருவனது செயலால் அன்று பட்ட அவமானங்களும், வேதனைகளும் இப்போதும் அவள் நெஞ்சில் ஆறாத வடுவாக பதிந்து போய் இருந்தது. 

 

அந்த சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதம்  கடந்து இருந்த நிலையில் அவர்கள் எல்லோரும் மெல்ல மெல்ல தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருக்க மீண்டும் அவர்கள் எல்லோரையும் முற்றாக நிலை குலையச் செய்தது கலைச்செல்வியின் மரணம். 

 

அவரது குடும்பத்தினரில் அந்த மரணம் யாரைப் பாதித்ததோ இல்லையோ இழையினியை முற்றாக நொறுங்கி போகச் செய்தது. 

 

தன் அன்னையின் இறப்பின் பின்னர் ஒரு உயிரற்ற உடலாக வலம் வந்தவள் தன் மனமாற்றத்திற்காக தான் இங்கே வந்து தங்கி இருக்க ஆரம்பித்தாள். 

 

அவ்வப்போது தன் அன்னையின் ஞாபகம் வரும் போதெல்லாம் இந்த தனிமை தான் அவளுக்கு துணை. 

 

ஆறுதல் சொல்வது என்ற பெயரில் இன்னும் இன்னும் அவள் மனக் கவலையை தூண்டும் பேச்சுக்களை கேட்பதை விட இந்த அமைதியான தனிமை அவளுக்கு சிறந்ததாக தென்பட்டது. 

 

தன் பழைய சிந்தனைகளில் அவள் லயித்து நிற்கையில் வெளியே கார் வந்து நிற்கும் ஓசை கேட்க அவசரமாக கடிகாரத்தின் புறம் திரும்பி பார்த்தவள் 

“விஜி வந்துட்டா போல! அச்சோ!” என்றவாறே வேகமாக குளியலறைக்குள் ஓடிச் சென்று நுழைந்து கொண்டாள். 

 

“முத்தா!” தன் கையில் இருந்த சாவியை சுழற்றிய படியே வந்த பெண்ணை பார்த்து புன்னகை செய்த முத்து தாத்தா 

 

“ஏன் புள்ள! என்ட பேரு முத்து தானே! அத ஒழுங்கா கூப்பிடலாம் தானே! நீ அதை விட்டுட்டு முத்தா, சொத்தான்னு கூப்புடுற” என்று கேட்கவும் 

 

அங்கிருந்த ஷோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டவள் 

” சின்ன வயசுல இருந்து உங்களை முத்தான்னு கூப்பிட்டு பழகிட்டே முத்தா! நான் என்ன செய்ய முத்தா? முத்து பிளஸ் தாத்தா சேர்ந்து முத்தா ஆயிட்டு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க முத்தா!” என்று கூற 

 

அவரோ 

“போதும் புள்ள!” தன் தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டு விட்டு மீண்டும் சமையலறைக்குள் நுழைந்து கொள்ள அவரைப் பார்த்து சிரித்த படியே அமர்ந்திருந்தாள் விஜயா. 

 

விஜயா செல்வம் மற்றும் மணிமேகலையின் ஒரே மகள். 

 

செல்வம் இத்தனை காலமாக இலங்கையில் இருந்த அசோகனின் சொத்தான இந்த தேயிலை எஸ்டேட்டை பராமரித்து வந்தவர் மிகவும் நம்பிக்கைக்குரிய மனிதரும் கூட. 

 

இழையினி இங்கே வந்து அந்த எஸ்டேட் பொறுப்பை தன் கையில் எடுத்துக் கொண்டாலும் செல்வத்தின் வழிகாட்டுதலிலேயே இத்தனை காலமாக இங்கு பணி புரிந்து வருகிறாள். 

 

அவரது மகள் விஜயா கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தில் பி‌‌.காம் முடித்து விட்டு கணக்காளராக அந்த எஸ்டேட்டில் பணி புரிந்து வர நாளடைவில் இழையினி அவளை தன் உற்ற தோழியாக மாற்றிக் கொண்டாள். 

 

செல்வம் மற்றும் மணிமேகலை விஜயாவைப் போன்றே இழையினியையும் தங்கள் மகளாகவே பார்த்து வர அவர்களது அந்த பாசம் அவளுக்கு எப்போதும் விலை மதிப்பற்ற ஒரு பொக்கிஷமே. 

 

வேகமாக குளித்து முடித்து விட்டு தன் அன்னைக்கு பிடித்த நிறமான சந்தன நிறத்திலான சுடிதார் ஒன்றை அணிந்து கொண்ட இழையினி தன் அறையில் மாட்டப்பட்டிருந்த கலைச்செல்வியின் படத்தை ஆதரவாக ஒரு முறை வருடிக் கொடுத்து விட்டு அங்கிருந்து வெளியேறி ஹாலை நோக்கி சென்றாள்.

 

“குட் மார்னிங் விஜி! வந்து ரொம்ப நேரம் ஆச்சா?”

 

“இல்ல இழை இப்ப கொஞ்ச நேரத்துக்கு முதல் தான் வந்தேன் நீ ரெடியா? போவோமா?” 

 

“யாஹ்! நான் ரெடி முத்து தாத்தா சமைத்து வைத்து இருக்காரு வா சாப்பிட்டு போகலாம்”

 

“ஓஹ்! தாராளமா! சாப்பாடு விஷயத்தில் நான் எப்பவும் பின் வாங்க மாட்டேனே!”

 

“அது தான் தெரியுமே வா போகலாம்!” பெண்கள் இருவரும் இயல்பாக பேசி சிரித்த வண்ணம் டைனிங் டேபிளின் அருகில் வந்து சேர முத்து தாத்தா சமைத்த உணவுகளை மேஜை மீது எடுத்து வைத்துக் கொண்டு நின்றார்.

 

“முத்தா இன்டைக்கு என்ன ஸ்பெஷல்?” 

 

“பாரு பாப்பா இந்த புள்ள என்ன எப்ப பாரு முத்தா, முத்தான்னு செல்லுது நீ என்னன்னு கேளு பாப்பா” இழையினியைப் பார்த்து முத்து தாத்தா குற்றம் சாட்டும் குரலில் கூறவும்

 

அவர்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்துக் கொண்டவள்

“அய்யோ! நீங்க இரண்டு பேரும் மறுபடியும் ஆரம்பித்து விட்டீங்களா? உங்க விளையாட்டுக்கு நடுவில் நான் வரல உங்க புள்ள விஜி ஆச்சு உன் தாத்தா  முத்தா ஆச்சு ஆளை விடுங்க எனக்கு பசிக்குது” என்றவாறே தன் உணவை எடுத்து வைக்கத் தொடங்கினாள்.

 

“வாவ்! முத்து தாத்தா எனக்கு பிடித்த பிட்டு அன்ட் பால் சொதியா? அட! அட! இன்னைக்கு நல்லா ஒரு ரவுண்டு கட்டி சாப்பிட போறேன்” தட்டிலிருந்த உணவைப் பார்த்து ருசித்த படியே கூறிய இழையினியை கண்கள் கலங்க பார்த்து கொண்டிருந்த முத்து தாத்தா அவள் பார்ப்பதற்கு முன்னர் தன் கண்களை துடைத்து விட்டபடியே அங்கிருந்து சென்று தன் பிற வேலைகளை கவனிக்க சென்றார்.

 

ஆரம்பத்தில் இழையினி இங்கே வந்த போது யாரிடமும் பேசாமல் எதிலும் ஒன்றாமல் எப்போதும் வேலை வேலை என்று தன்னை மூழ்கடித்து கொண்டதும் இப்போது அந்த நிலையில் இருந்து முற்றிலும் மாறி எப்போதும் சிரித்த முகத்துடன் வலம் வருவதையும் பார்த்து நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டவர் அவள் எப்போதும் இப்படியே சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று மனதார வேண்டிய படியே தன் வேலைகளை செய்யத் தொடங்கினார்.

 

சிறிது நேரத்தில் விஜயாவும், இழையினியும் சாப்பிட்டு விட்டு முத்து தாத்தாவிடம் சொல்லி விட்டு தங்கள் காரில் அமர்ந்து கொண்டு நுவரெலியா நோக்கி தங்கள் பிரயாணத்தை ஆரம்பித்தனர்.

 

மலைப் பாங்கான பாதையில் இதற்கு முன்னர் வாகனம் ஓட்டும் பழக்கம் இழையினிக்கு இல்லை என்பதனால் விஜயாவே காரை ஓட்ட சுற்றிலும் இருந்த மலைச்சரிவு, விதவிதமான மரங்கள் என எல்லாவற்றையும் முதன் முறையாக பார்ப்பது போல வேடிக்கை பார்த்தபடியே அவள் அமர்ந்திருந்தாள்.

 

அந்த பிரயாணம் தான் தன் வாழ்க்கையில் இன்னொரு பக்கத்தை தனக்கு காட்டப் போகிறது என்பதை அறியாமல் தன் தோழியோடு பேசியபடியே இழையினி சுற்றுப் புறத்தினை வேடிக்கை பார்த்தபடியே பிரயாணம் செய்து கொண்டிருக்க அவள் செல்லும் இடத்தில் அவளுக்கான வாழ்வின் அர்த்தம் காத்துக் கொண்டிருந்தது……