வாரத்தின் முதல் நாள் விடியலானது வெண்ணிற பஞ்சுப் பொதிகள் போல அங்குமிங்கும் படர்ந்திருந்த பனியை சூரியக் கதிர்களைக் கொண்டு விலக்கி ஆரம்பிக்க அந்த மனதிற்கு இதமான விடியலை ரசித்த வண்ணம் தன் துயில் கலைந்து எழுந்து அமர்ந்தாள் இழையினி.
நேற்று நடந்த சம்பவங்களின் தாக்கம் இன்னும் அவள் மனதில் இருந்து முழுமையாக நீங்கியிருக்காவிட்டாலும் அவளுக்கென்று காத்திருந்த அவளது கடமைகள் அந்த ஞாபகங்களை எல்லாம் பின்னோக்கி தள்ளி இருந்தது.
எப்போதும் போல தன் காலை அலுவல்களை எல்லாம் முடித்து விட்டு தயாராகி வந்தவள் தன் அன்னையின் புகைப்படத்தின் முன்னால் நின்று அவரது ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டு முத்து தாத்தா செய்து வைத்திருந்த காலை உணவையும் சாப்பிட்டு விட்டு தனது எஸ்டேட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
இழையினி தங்கியிருக்கும் கெஸ்ட் ஹவுஸில் இருந்து அந்த எஸ்டேட் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் தான் அமைந்திருந்தது.
செம்மணல் போடப்பட்டிருக்கும் குறுக்குப்பாதை ஒன்றின் வழியாக நடந்து செல்கையில் அவர்களுக்கு சொந்தமான ஒரு இறப்பர் தோட்டமும் அதிலிருந்து சற்று தள்ளி நிலைக்குத்தான பாதை ஒன்றின் உச்சியில் அவர்களது தேயிலை பேக்டரியும் அமைந்திருக்கும்.
அந்த காலப்பகுதி இறப்பர் மரத்தில் இருந்து பால் எடுக்கும் காலப்பகுதி என்பதால் காலை நேரமே அங்கு பணிபுரியும் வேலையாட்கள் வந்து இறப்பர் மரத்தின் தண்டுகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் இருந்து இறப்பர் பாலை சேகரித்து கொண்டிருந்தனர்.
1876ம் ஆண்டு இலங்கையில் கம்பஹா பிரதேசத்தில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட இந்த இறப்பர் பயிர் செய்கை இப்போது இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இறப்பர் பால் சேகரிக்கும் செயற்பாடு பொதுவாக இரவு அல்லது காலை நேரத்திலேயே நடைபெறும் ஏனெனில் சூரிய வெளிச்சம் வந்து விட்டால் அதன் வெம்மையில் இறப்பர் பால் உலர்ந்து போய் விடும்.
எனவேதான் காலை நேரங்களில் உற்சாகமாக இருக்கும் அந்த வேளையிலேயே இறப்பர் பால் சேகரிக்கும் வேலை துரிதமாக அங்கிருக்கும் பணியாளர்களால் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டே இழையினி நடந்து சென்று கொண்டிருக்கையில்
“முதலாளியம்மா வணக்கம்!” என்று அங்கிருந்தவர்கள் அவளைப் பார்த்து புன்னகைக்க பதிலுக்கு அவளும் அவர்களை பார்த்து புன்னகைத்த படி அவர்கள் இருந்த புறம் நடந்து சென்றாள்.
ஒரு புதிய மரத்தில் இருந்து இறப்பர் பாலை சேகரிப்பதற்காக மிகவும் கூர்மையான கத்தி போன்ற தகடு ஒன்றினால் அந்த மரத்தின் நன்கு முதிர்ந்த அடித் தண்டுப் பகுதி கீறப்பட்டு அதிலிருந்து சொட்டு சொட்டாக வடியும் இறப்பர் பால் ஒரு பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டு கொண்டிருந்தது.
“இன்னைக்கு நிறைய இறப்பர் பால் சேகரித்துட்டீங்க போல இருக்கே ராஜிம்மா!” இழையினி அந்த மரத்தின் அருகே நின்று கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து கேட்க
அவளைப் பார்த்து புன்னகைத்து கொண்டவர்
“ஓம் இழையினிம்மா! இன்டைக்கு எப்படியும் அஞ்சு லீட்டருக்கு மேல பால் சேர்ந்து இருக்கும் எல்லா மரத்திலிருந்தும் இன்டைக்கு பால் எடுத்திருக்கோம்” முகம் கொள்ளா சிரிப்போடு கூறினார்.
அந்த சிரிப்பின் பிண்ணனியில் இருக்கும் அர்த்தம் இழையினிக்கு நன்றாகவே புரிந்தது.
எவ்வளவு தூரம் அவர்களால் முதலாளிக்கு இலாபம் கிடைக்கிறதோ அதைப் பொறுத்து தானே அவர்களது நாட்கூலியோ, மாதக்கூலியோ அமையும்.
சிறிது நேரம் அவர்கள் எல்லோருடனும் பேசியபடியே அந்த இறப்பர் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்த வேலைகளை எல்லாம் மேற்பார்வை செய்தவள் சில நிமிடங்கள் கழித்து தங்கள் தேயிலை பேக்டரியை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
நடுத்தர வயது பெண்களும், ஆண்களும் கலந்து நின்று மின்னல் வேகத்தில் தேயிலைக் கொழுந்துகளைப் பறித்து கொண்டிருக்க விஜயாவின் தந்தை செல்வம் அவர்களை எல்லாம் மேற்பார்வை செய்து கொண்டு நின்றார்.
அப்போது அந்த தோட்டத்தில் நிலைக்குத்தாக அமைக்கப்பட்டிருந்த படி வழியே இழையினி நடந்து வருவதைப் பார்த்தவர்
“குட்மார்னிங் இழையினி!” புன்னகை முகமாக அவள் முன்னால் வந்து நின்றார்.
“குட்மார்னிங் அங்கிள்! வேலை எல்லாம் எப்படி போகுது?”
“எப்பவும் போல நல்லா தான்ம்மா போகுது ஆமா நேத்து பூஜை எல்லாம் ஒழுங்கா முடிஞ்சதா? விஜி கிட்ட கேட்டேன் அவ பரவாயில்லைன்னு சொன்னா உனக்கு திருப்தியா இருந்துச்சாம்மா?” செல்வத்தின் கேள்வியில் அவள் மனதிற்குள் தற்காலிகமாக பின் தள்ளப்பட்டிருந்த அந்த பெயர் தெரியாத நபரின் ஞாபகம் மேலெழுந்து வர ஆரம்பித்தது.
“ஆஹ்! ப… பரவாயில்லை அங்கிள் எல்லாம் நல்ல படியாக முடிந்தது” சிறு தடுமாற்றத்துடன் அவரைப் பார்த்து பதிலளித்தவள்
“ஓகே அங்கிள் நான் பேக்டரிக்கு போறேன் நீங்க இங்கே இருக்கும் வேலையை எல்லாம் பார்த்து விட்டு வாங்க” என்று விட்டு வேகமாக அங்கிருந்து நடந்து சென்று தன் அலுவலக அறையை வந்து சேர்ந்தாள்.
மேஜை மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த பைல் ஒன்றைக் கையில் எடுத்து அவள் விரிக்க அந்த காகிதத்திலும் அவன் முகமே அவளுக்கு தெரிந்தது.
“ச்சே!” சலிப்புடன் தன் கையில் இருந்த பைலை மேஜை மீது போட்டவள் அங்கிருந்த ஜன்னலின் புறம் சென்று நின்று கொண்டு கீழே தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து கொண்டு நின்றாள்.
‘யாரவன்? எதற்காக என் நினைவில் அவனே மீண்டும் மீண்டும் வருகிறான்? அவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? மீண்டும் சந்திப்பதாக வேறு கூறி விட்டு சென்றானே? அய்யோ!’ தலையை பிடித்து கொண்டு தோட்டத்தை பார்த்து கொண்டு நின்ற இழையினி தற்செயலாக திரும்பிய போது அங்கே செல்வத்துடன் பேசிய படி நின்ற தன் மனக் குழப்பங்களுக்கு காரணமானவனைப் பார்த்து தன் கண்களை மீண்டும் மீண்டும் கசக்கி விட்டு அதிர்ச்சியாகி நின்றாள்.
‘உண்மையாகவே சொன்ன மாதிரி வந்துட்டானா? இல்லை இது என் பிரமையா?’ இங்கே இழையினி அதிர்ச்சியில் சிலையென உறைந்து நிற்க மறுபுறம் ஆதவன், ராஜா மற்றும் செல்வம் பேக்டரியின் உள் பகுதியை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தனர்.
“உங்கட எஸ்டேட்டிலும் இந்தளவுக்கு விளைச்சல் இருக்குமா தம்பி?” செல்வத்தின் கேள்வியில் ராஜா திருதிருவென விழித்து கொண்டே ஆதவனைப் பார்க்க
அவனைப் பார்த்து புன்னகையுடன் கண் சிமிட்டியவன்
“அவங்க எஸ்டேட்டில் இப்போ அவ்வளவு விளைச்சல் இல்லை ஸார் அது தான் நாங்க சுற்று வட்டாரத்தில் இருக்கும் எஸ்டேடிற்கு எல்லாம் போய் எப்படி விளைச்சலை கூட்டலாம், அதற்காக என்ன என்ன பண்ணலாம் என்று தகவல்கள் சேகரித்து கொண்டு இருக்கிறோம்” என்று கூற
ராஜாவோ
‘எப்படித்தான் இந்த பசங்க லவ்ன்னு வந்தா மட்டும் இவ்வளவு பொய்யை அடிச்சு விடுவாங்களோ?’ என்ற யோசனையுடன் அவர்களைப் பின் தொடர்ந்து நடந்து சென்றான்.
ஆண்கள் மூவரும் இயல்பாக பேசியபடியே நடந்து வந்து கொண்டிருக்கையில் இழையினி தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அந்த ஜன்னலின் வழியே மீண்டும் எட்டிப் பார்க்க சற்று நேரத்திற்கு முன்னர் அவர்கள் நின்று கொண்டிருந்த இடம் வெறுமையாக காணப்பட்டது.
‘ஒரு வேளை உண்மையாகவே பிரமையாக இருக்குமோ?’ இழையினி மீண்டும் சிந்தனையில் மூழ்கப் போக அவள் சிந்தனையைக் கலைப்பது போல அந்த அறைக் கதவு தட்டப்பட்டது.
“கம் இன்” அவளின் குரல் ஒலித்த அடுத்த நொடி அந்த அறையின் கதவு திறக்கப்பட புன்னகை முகமாக செல்வமும் அவரைப் பின் தொடர்ந்து ஆதவனும், ராஜாவும் அங்கே உள் நுழைந்தனர்.
செல்வம் தான் வருகிறார் என்று இயல்பான புன்னகையுடன் அவரைப் பார்த்து கொண்டு நின்ற இழையினி அவர் பின்னால் வசீகரிக்கும் சிரிப்போடு வந்தவனைப் பார்த்து ஸ்தம்பித்து போய் நின்றாள்.
“அ…அங்கிள் இ.. இது…இவங்க?”
“இவங்க நுவரெலியாவில் இருந்து வாறாங்கம்மா நம்மட எஸ்டேட், பயிர் பற்றி எல்லாம் கொஞ்சம் பேசணுமாம் இவங்க விஜியோட பிரண்ட்ஸ்க்கு தெரிஞ்சவங்களாம் விஜி தான் இங்க அனுப்பியிருக்கா இப்ப கொஞ்ச நேரத்துக்கு முதல் தான் போன் பண்ணி சொன்னா”
“விஜியா?” குழப்பத்தோடு அவர்கள் மூவரையும் திரும்பித் திரும்பிப் பார்த்தவள் மனமோ
‘விஜி நேற்று என் கூடத் தானே இருந்தா! அப்போ இவர்களைத் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளவே இல்லையே! இப்போ அங்கிள் இப்படி சொல்லுறாங்க’ என்று யோசிக்க
“இழையினி! இழையினி!” செல்வம் அவள் தோளில் தட்டி அழைத்தார்.
அவர் குரலில் திடுக்கிட்டு அவரைப் பார்த்தவள்
“உ….உட்காருங்க” தன் முன்னால் இருந்த இருக்கையை காட்டி விட்டு தடுமாறிய தன் மனதையும் அடக்கிய படி தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.
பொன்ஆதவன் பயிர்களை பற்றியும், அவற்றின் விளைச்சலை அதிகரிக்க என்ன செய்வது என்பது பற்றியும் இழையினிடம் கேட்டு அந்த தகவல்களை தான் கொண்டு வந்திருந்த டைரியில் குறித்து கொண்டிருக்க அவளோ அவனது கேள்வியில் முற்றாக ஒன்றிப் போகவும் முடியாமல் தன் மனதில் உள்ள குழப்பத்தை நேரடியாக அவனிடம் கேட்கவும் முடியாமல் தடுமாற்றத்துடன் அமர்ந்திருந்தாள்.
அவளது தடுமாற்றம், தயக்கம் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ஆதவன் ராஜாவின் கையை சுரண்டி ஜாடையாக செல்வத்தின் புறம் காட்ட அவனைப் பார்த்து சரியென்று தலையசைத்தவன் செல்வத்தின் புறம் திரும்பி
“ஸார் ஆதவன் இந்த டீடெயில்ஸ் எல்லாம் எடுக்கட்டும் எனக்கு உங்க தோட்டத்தை, பயிரை எல்லாம் கொஞ்சம் காட்டுறீங்களா? விளைச்சல் பற்றியும் கொஞ்ச நேரம் பேசிட்டே பார்க்கலாமா?” என்று கேட்கவும் அவர் தயக்கத்துடன் இழையினியை திரும்பிப் பார்த்தார்.
“நீங்க போய் காட்டுங்க அங்கிள்!” ஆதவனுடனான அந்த தனிமை அவளுக்கும் அந்நேரம் அவசியமாகப்படவே ராஜாவின் கேள்விக்கு ஆமோதிப்பாக பதிலளித்திருந்தாள் இழையினி.
செல்வமும், ராஜாவும் பேசிக் கொண்டே அங்கிருந்து வெளியேறி செல்ல அவர்கள் இருவரதும் தலை மறைந்த அடுத்த நொடி
“மிஸ்டர் யாரு நீங்க? எதற்காக தேவையில்லாமல் என்னையே சுற்றி சுற்றி வர்றீங்க? நான் இதற்கு முன்னாடி உங்களைப் பார்த்ததோ, பேசியதோ இல்லை அதோடு நீங்க விஜிக்கு பிரண்டும் இல்லை அப்படி இருக்கும்போது எதற்காக தேவையில்லாமல் இந்த நாடகம்?” இழையினி சீற்றத்துடன் அவன் முன்னால் வந்து நிற்க
அவளைப் பார்த்து புன்னகையோடு எழுந்து நின்றவன்
“நீங்க சொன்னது கரெக்ட் தான் இழையினி மேடம் நாம இரண்டு பேரும் இதற்கு முதல் பேசியது இல்லை தான் ஆனால் பார்த்தது இல்லைன்னு சொல்ல முடியாது உங்களுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்கு முன்பு இருந்தே பந்தம் இருக்கு” என்று கூறவும்
அவளோ
“என்ன?” அவனது கூற்றில் அதிர்ச்சியாக அவனை நோக்கினாள்.
“இ.. இல்லை மிஸ்டர் நீங்க சும்மா சொல்லுறீங்க நான் இங்கே வந்தே இன்னும் முழுமையாக இரண்டு வருடம் முடியல அப்படி இருக்கும்போது இது எப்படி சாத்தியம்? மிஸ்டர் நீங்க என்னை குழப்புவதற்காக தான் இதெல்லாம் சொல்லுறீங்க”
“நீங்க அப்படி நினைத்தால் அதற்கு நான் எதுவும் பண்ண முடியாது இழையினி மேடம் அதோடு என்னுடைய பெயர் ஒண்ணும் வெறும் மிஸ்டர் இல்லை மிஸ்டர். பொன்ஆதவன்”
“பொன்ஆதவன்!” தன் பெயரை மீண்டும் ஒருமுறை தனக்குள் கூறிப் பார்த்துக்கொண்டவளின் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான் பொன்ஆதவன்.
“எனக்கு இந்த பெயரில் யாரையுமே தெரியாதே!”
“சரி நான் கேட்கப் போற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க நீங்க இங்கே வந்து எவ்வளவு நாள் ஆகியது என்று சொன்னீங்க இரண்டு வருடம் தானே? அனால் நான் சொன்னது நமக்கு இரண்டரை வருடங்களுக்கு முன்பு இருந்தே பந்தம் இருக்குன்னு அப்படி என்றால் என்ன அர்த்தம்?”
“அப்.. அப்படின்னா நீங்க சென்னையில் இருந்தீங்களா?”
“ஹப்பாடா! ஃபைனலி விடயத்திற்கு வந்தாச்சு என்னோட சொந்த இடம் சென்னை தான்”
“அப்படியா? அங்கே எங்..” இழையினி அவளது கேள்வியை முற்றாக முடிப்பதற்குள் ஆதவனின் தொலைபேசி சிணுங்கி அவனது கவனத்தை தன் புறம் திருப்பி கொண்டது.
“ஒரு நிமிஷம்!” அவளைப் பார்த்து சைகையில் கூறியவன் தன் தொலைபேசியை எடுத்து காதில் பொருத்திக் கொள்ள
மறுமுனையில்
“டேய் ஆதவா! இன்னுமாடா கதைச்சிட்டு இருக்க? இந்த ஸாரு கேட்குற கேள்வியில் என்னோட மூளை சாறாக கரைஞ்சு ஓடுதுடா ப்ளீஸ்டா தயவுசெஞ்சு என்னைக் காப்பாற்று உன் லவ்வுக்கு ஹெல்ப் பண்ண வந்து கடைசியில் என்னை கேள்வி கேட்டு காதல் பரத் ரேஞ்சுக்கு இவர் ஆக்கி விட்டுடுவாரு போல இருக்கு” ராஜா அழாத குறையாக கெஞ்ச ஆரம்பித்தான்.
“சரி சரி நீ அங்கேயே நில்லு நான் வர்றேன்”
“டேய்! ஆதவ..” ராஜா அடுத்த வார்த்தையை கூறுவதற்குள் ஆதவன் தன் தொலைபேசியை அணைத்து விட்டு தன் சட்டைப் பாக்கெட்டில் போட்டிருந்தான்.
“ஸாரி இழையினி மேடம் இப்போ நான் அவசரமாக போய் ஆகணும் நாம இரண்டு பேரும் இன்னொரு நாள் எங்கேயாவது வெளியே மீட் பண்ணுவோம் அப்போ உங்க குழப்பத்திற்கு எல்லாம் கண்டிப்பாக என் கிட்ட இருந்து பதில் கிடைக்கும் இந்த வீக் என்ட் நீங்க ஃப்ரீயா?”
“இல்லை அது… எனக்கு… அது” இழையினி தயக்கத்துடன் இழுக்க
அவளைப் பார்த்து புன்னகைத்தவன்
“இன்னும் உங்களுக்கு என் மேல் முழுமையாக நம்பிக்கை வரல போல பரவாயில்லை இது என்னோட நம்பர்” ஒரு சிறு துண்டு காகிதத்தில் தனது தொலைபேசி எண்களை எழுதி அவளது கையில் கொடுக்கப் போய் விட்டு பின் என்ன நினைத்தானோ அவளது மேஜையின் மீது வைத்தான்.
“உங்களுக்கு எப்போ என் மீது நம்பிக்கை வருகிறதோ அப்போ இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க அது வரைக்கும் என் நிழல் கூட உங்களை விட்டு பிரியாது அப்புறம் ஊரில் மதியை அதாவது உங்க அண்ணன் மதியழகனையும், மற்ற எல்லோரையும் விசாரித்ததாக சொல்லி விடுங்க” தன் வசீகரிக்கும் புன்னகையோடு அவளைப் பார்த்து தலையசைத்தவன் அங்கிருந்து வெளியேறி சென்று விட இழையினியோ பிரமை பிடித்தவள் போல் நின்று கொண்டிருந்தாள்.
தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கூட ஊகித்துக் கொள்ள முடியாத நிலையில் அவள் நின்று கொண்டிருக்க மறுபுறம் கீழே தோட்டப் பகுதியில் ராஜா தன்னை யாராவது காப்பாற்ற மாட்டார்களா? என்ற எண்ணத்தோடு பரிதாபகரமான நிலையில் நின்று கொண்டிருந்தான்.
சுற்றிலும் பார்வையை சுழல விட்டபடியே நின்ற ராஜாவின் முகம் ஆதவன் தங்களை நோக்கி வருவதை பார்த்ததுமே ஆயிரம் வாட்ஸ் பல்ப் போல பிரகாசமாகியது.
“அதோ ஆதவன் வந்துட்டான்!” செல்வத்திடமிருந்து தப்பித்தால் போதும் என்ற நிலையில் ராஜா ஆதவனை நோக்கி வேகமாக நகர்ந்து சென்று நின்று கொண்டு அவனது காதில் மெதுவாக
“டேய் ஆதவா! என்னால சத்தியமா முடியலடா நியாயமா பார்த்தால் நான் தானே இந்த பயிர், இடத்தை பற்றி எல்லாம் கேள்வி கேட்கணும் ஆனா இங்க இவரு கேள்வியா கேட்டு என்னை ஒரு வழி ஆக்கிட்டாருடா அவரோட கேள்விக்கு பதில் சொல்லுறதுக்குள்ள நாக்கு தள்ளிடுச்சு நல்ல வேளை இப்போவாச்சும் நீ வந்தா இல்லை இங்க ஒரு பச்சப்புள்ள பைத்தியம் புடிச்சு அலைஞ்சு இருப்பான்” என்று முணுமுணுக்க சிரித்து கொண்டே அவனது தோளில் தட்டியவன் அவர்களையே குறுகுறுவென பார்த்து கொண்டிருந்த செல்வத்தின் முன்னால் வந்து நின்றான்.
“ரொம்ப ரொம்ப நன்றி ஸார்! உங்க கிட்ட பேசிட்டு இருந்ததில் நேரமே போனது தெரியலையாம் என்று ராஜா சொல்லுறான்”
‘அடப்பாவி!’ ராஜாவின் அதிர்ந்த தோற்றத்தை பார்த்தும் பார்க்காதது போல ஆதவன் மேலும் தன் பேச்சை தொடர்ந்தான்.
“ரொம்ப நன்றி ஸார்! நீங்க எங்களுக்காக ரொம்ப டைம் எடுத்து இவ்வளவு செய்து இருக்கீங்க உங்க உதவியை நாங்க எப்போவும் மறக்க மாட்டோம் ஸார்”
“பரவாயில்லை தம்பி மனுஷனுக்கு மனுஷன் உதவி செய்யுறதுல என்ன இருக்கு? உங்களுக்கு எப்ப உதவி தேவைப்பட்டாலும் நீங்க இங்க வரலாம்”
“ரொம்ப நன்றி ஸார்! சரி ஸார் நாங்க அப்போ கிளம்புறோம்” ஆதவனும், ராஜாவும் செல்வத்திடம் விடைபெற்று விட்டு அங்கிருந்து செல்கையில் மேலே தனது அலுவலக அறைக்குள் நின்று கொண்டிருந்த இழையினி ஜன்னலினூடு அவர்களையே பார்த்து கொண்டு நின்றாள்.
ராஜாவுடன் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்த பொன்ஆதவன் தற்செயலாக இழையினியின் அலுவலக அறையின் புறம் திரும்பி பார்க்க அங்கே அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள் அவனது எண்ணங்களின் ராணி.
புன்னகையுடன் அவளைப் பார்த்து பொன்ஆதவன் கையசைக்க பதிலுக்கு அவளும் கையசைப்பதற்காக தன் கையைத் தூக்கி விட்டு சட்டென்று மற்றைய புறம் திரும்பி நிற்க அவனோ தன் முகம் கொள்ளாப் புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்து சென்றான் தன் மனம் நிறைந்த காதலுடன்……