உன் காதல் என் தேடல்

தேடல் – 11

 

அன்று ஒரு ப்ராஜெக்ட் சைட்டைப் பார்க்க அபிநந்தன் நிலாவை தன்னுடன் அழைத்துச் சென்றார். அந்த சைட்டைப் பார்த்த அடுத்த இரண்டு மணிநேரத்தில் நிலா அங்கு கட்டப்போகும் அப்பார்ட்மெண்ட் எப்படி இருக்க வேண்டும், ஒவ்வொரு ப்ளாட்டும் எந்த அளவில் இருக்கவேண்டும், எப்படி இருந்தால் காற்றும், வெளிச்சமும் நன்றாக வீட்டிற்குள் வரும், வாஸ்துப்படி வாசல், கதவு, ஜன்னல் எங்கெங்கு இருக்க வேண்டும் என்பதைத் தன் லேப்டேப்பில் தெளிவாக வடிவமைத்து அதை நந்தனிடம் காட்ட அவர் அசந்தே விட்டார். “நீ தாம்மா எங்க வீட்டுக்குச் சரியான மருமக. துருவ் சாய்ஸ் சூப்பர் மட்டும் இல்ல. அன்பீட்டபிள் மா” என்க, நிலாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

 

“சார் நீ”

 

“…………”

 

“நீங்க…”?

 

“இப்ப என்ன சொன்னீங்க?? என்று திருதிருவென முழித்த படி கேட்க.

 

நந்தன், “இங்க எதுவும் பேசா வேணாம் நிலா. பக்கத்துல ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கு. அங்க போய் பேசுவோம் வா” என்று அவர் முன்னே நடக்க, நிலா வெட்டப் போகும் ஆடுபோல் மிரண்டு போய் முழித்தவள், ‘இருக்கு, இன்னைக்கு ஒரு சம்பவம் இருக்கு’ என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டே அவர் பின்னால் சென்றாள்.

 

காரில் ஏசி ஃபுல்லாக இருந்தும் நிலாவிற்கு வேர்த்துக் கொட்டியது. நந்தன் ஒரு கண்ணால் நிலாவைப் பார்த்து மெதுவாகச் சிரித்தவர் தன் கைக்குட்டையை அவளிடம் நீட்ட அது அவளுக்கு அப்போது தேவைப்பட பட்டென வாங்கி முகத்தை அழுத்தித் துடைத்தாள். வியர்வையோடு அதைத் திருப்பித் தர விரும்பாமல் “நா அப்றமா இது வாஷ் பண்ணி தரேன் சார்” என்று விட்டு, அந்தக் கர்சீப்பை தன் ஹேன்ட்பேக்கில் வைக்கப் போகும் போது தான் அதில் எம் (M) என்று எம்பிராய்டரி செய்யப்படிருப்பதைப் பார்த்தவளுக்கு உள்ளுக்குள் ஏதோ தோன்ற, “சார், இது என்ன உங்க பேர் ஏ (A) தானா ஆரம்பிக்கும். ஆனா, இதுல ஏன் ‘எம்’ ன்னு போட்டிருக்கு?” என்று படபடவெனக் கேட்டுவிட்டு. பிறகு தான் அதிகம் பேசிவிட்டதை உணர்ந்து அமைதியானாலும் அவள் கேட்ட கேள்விக்குப் பதில் தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வம் அதிகம் இருந்தது. உண்மையைச் சொல்லப் போனால் ஆர்வத்தை விட அந்தக் கேள்விக்கான பதில் தெரிந்து கொள்வது அவளுக்கு மிகவும் அவசியமாக இருந்தது.

 

நந்தன் நிலாவை ஒரு விரக்தியான பார்வை பார்த்தவர் “அது என் பேரோட முதல் எழுத்து இல்லமா. என் உயிரோட முதல் எழுத்து” என்றவர் விழிகள் லேசாக நனைய, நிலா அதற்குமேல் அவரிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால், அந்தப் பதில் அவளுக்குப் பல கேள்விகளை உண்டாக்கியது. அவர் உயிரோட முதல் எழுத்துன்னா ‘அப்ப இது என்னோட’ என்று குழம்பியவள், ‘ஏன் இவர் ஒய்ஃப் பேரு கூட எம்(M) ல தொடங்குற பேரா இருக்கலாமே’ என்று மாற்றி மாற்றி யோசிக்க ‘அய்யோ தலமுடிய பிச்சிக்கலாம் போல இருக்கே எதுவும் சரியா புரிய மாட்டேங்குது’ என்று தவித்துப் போனாள்.

 

தனக்கு முன் இருந்த ஐஸ்கிரீமையும், நந்தனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா.

 

“என்னமா? ஏன்? என் முகத்தையே பார்த்துட்டிருக்க? உனக்குத் தான் ஐஸ்கிரீம் ரொம்பப் புடிக்குமே, எடுத்து சாப்புடு” என்க,

 

ஐஸ்கிரீமை எடுத்து வாயில் வைத்து ருசித்தவள், “எனக்கு ஐஸ்கிரீம் புடிக்குன்னு உங்களுக்கு எப்டி சார் தெரியும்” என்று குழந்தை போல் கேட்ட நிலாவைப் பார்த்துச் சிரித்த நந்தன். “ம்ம்ம் எல்லாம் உன் வருங்காலப் புருஷன் துருவ் தான் சொன்னான்” என்றது தான் ஐஸ்கிரீமோடு சேர்த்து ஸ்பூனும் அவள் வாயில் சிக்கிக்கொள்ள, “லொக் லொக்” என்று இருமியவள் தலையில் தட்டிக் கொண்டே “சார் என்ன சொல்றீங்க நீங்க? அப்டி எல்லாம் ஒன்னும் இல்ல. எனக்கு அப்டி எந்த எண்ணமும் இல்ல” என்று படபடக்க.

 

“பொய் சொல்லாத நிலா? நீயும், துருவ்வும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறீங்கன்னு எனக்கு நல்லா தெரியும், அதுவும் ரெண்டு வருஷம் முன்னையே. எங்க குடும்பத்தை நெனச்சு நீ தேவை இல்லாம பயப்பட வேணாம். உங்க லவ்வை நாங்க ஏத்துக்குவோம். என் ஃபேமிலில யாருக்கும் இனிமே லவ்வை எதிர்க்குற தைரியம் வராது” என்று ஒருவித வலியோடு சொல்ல.

 

‘மக்கும், இந்த அறிவு உங்க குடும்பத்துக்குப் பல வருஷம் முந்தியே இருந்திருக்கக் கூடாதாயா? அப்டி மட்டும் நடந்திருந்தா, நீங்க யார் தடுத்தாலும் போங்கடா என் பொங்கச் சோறுகளான்னு, இன்னேரம் என் துருவ்வைத் தூக்கிட்டுப் போய் தாலி கட்டி இருப்பனே. ச்சே… அவன் தான எனக்குத் தாலி கட்டணும். டென்ஷன்ல கண்ட மாதிரி யோசிக்குறேன் பாரு… ச்சே’

 

“என்ன நிலா பேச்சையே காணும்”? என்ற நந்தனை நிமிர்ந்து பார்த்த நிலா “ம்க்கும் பேசுறாங்க, போய்யா யோவ். நெலம புரியாம, கடுப்பக் கெளப்பிக்கிட்டு’ என்று சலித்தவள், “ஆமா, சார் நா துருவ்வை காதலிச்சேன் தான். ஏன் காதலை முதல்ல அவன் கிட்ட சொன்னது கூட நா தான். நாங்க ஒருத்தரை ஒருத்தர் உண்மையா தான் நேசிச்சோம். ஆனா,” என்று அவள்‌ இழுக்க.

 

“இப்ப அவன் மேலயும், அவன் காதல் மேலயும் உனக்கு நம்பிக்கை இல்லன்னு பொய் சொல்லப்போற, அதானே”? என்ற நந்தனிடம் நிலா ஏதோ சொல்ல வாயெடுக்க, “ஒரு நிமிஷம்மா, நா உன்கிட்ட சில விஷயங்களைச் சொல்லி தெளிவுப்படுத்த வேண்டி இருக்கு. முதல்ல நா எல்லா உண்மையையும் சொல்லிடுறேன். அதுக்கு அப்றம் நீ உன் முடிவ சொன்னா போதும்.”

 

“நீ நெனைக்கிற மாதிரி துருவ் உன்னைக் காதலிச்சு ஏமாத்திட்டு ஓடல நிலா. துருவ் உன்னை விரும்புற விஷயத்தை முதல் முதல்ல சொன்னது என்கிட்ட தான். அவன் உன்னைப் பத்தி சொல்லச் சொல்ல எனக்கு, அவன் உன்னை எந்த அளவு விரும்புறான்னு நல்லா புரிஞ்சுது. நீ உன்னோட அம்மாவைப் பார்க்க அவனை வர சொன்னதை அவன் எனக்கு ஃபோன் பண்ணிச் சொன்னான். அன்னைக்குத் தான் நானும் இந்தியா வந்திருந்தேன். துருவ் உங்க அம்மாவைப் பாக்க வரும்போது நானும் கூட இருந்தா நல்லா இருக்கும்னு அவன் ஆசப்பட்டான். எனக்கும் உன்னைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருந்தது. இந்த துருவ் பையன் உன் பேரக் கூட என்கிட்ட சொல்லலம்மா. அவள நேர்ல பாக்கும் போது நம்ம வீட்டு மறுமக வாயாலயே அவ பேரை கேட்டு தெரிஞ்சிக்கோங்கன்னு சொல்லிட்டான்.”

 

“மறுநாள் உன்னைப் பாக்குற ஆசையில நாங்க ரெண்டு பேரும் கார்ல வரும்போது” என்ற நந்தன் குரல் கரகரத்துவிட நிலாவுக்கு உள்ளுக்குள் பயத்தில் உயிரே போய்விட்டது.

 

“என்ன சார்? என்ன ஆச்சு? ஏன் அழுறீங்க? என் துருவ்க்கு எதும் இல்லயே”? என்று பயத்தில் அவள் மனதில் தோன்றியதை அப்படியே வெளியில் கொட்டிவிட நந்தன் அவள் ‘என் துருவ்’ என்றதை மனதில் குறித்துக் கொண்டார்.

 

“அன்னைக்குத் துருவ் ரொம்ப எக்ஸ்சைட்டாட இருந்தான். உன் அம்மாவை பாக்குற ஆவல்ல அவன் வண்டிய வேகமா ஓட்ட, ஒரு ஸ்டேஜ்ல கார் எதிர்ல வந்த லாரில மோதிடுச்சு” என்றது தான் நிலாவுக்குத் தலையில் இடி விழுந்தது போல் ஆகிவிட்டது. ரெண்டு வருஷம் முன்பு நடந்த விபத்தை நினைத்து அவள் கண்கள் இப்போது கண்ணீர் வடித்தது.

 

“எனக்குப் பெருசா அடி எதும் இல்ல. ஆனா, துருவ்வுக்குத் தலையில நல்லா அடி. கோமா ஸ்டேஜ்க்கு போய்ட்டான். கொஞ்ச நாள் இங்க இருக்க ஹாஸ்பிடல்ல வச்சு ட்ரீட்மென்ட் பாத்தோம். அப்றம் நா அவனைச் சிங்கப்பூர் கூட்டிட்டுப் போய் ட்ரீட்மென்ட் பாத்தேன். முழுசா ஒன்றரை வருஷம் ஆச்சும்மா, அவனைப் பழைய மாதிரி திரும்பிப் பார்க்க. அவனுக்கு நெனவு வந்த பிறகு அவன் பேசுன முதல் வார்த்தை ‘என்னோட முகில் எங்க’ன்னு தாம்மா. அவன் உன்னை எந்த அளவு விரும்பி இருக்கான்னு எனக்கு அப்ப தாம்மா புரிஞ்சிது. அப்றம் இந்தியா வந்து நானும் உன்னைப் பத்தி விசாரிச்சேன். ஆனா, உன்னோட பேர் தெரியாதனால என்னால உன்னைக் கண்டு பிடிக்க முடியல. துருவ்வுக்கு முழுசா நெனவு திரும்பி நடக்க ஆரம்பிச்ச உடனே உன்னைத் தேடி இந்தியா வந்தோம். ஆனா, நீயும், உன் அம்மாவும் எங்க இருக்கீங்கன்னு எங்களால கண்டு புடிக்க முடியல. அப்றம் தான் அவன் காலேஜ் படிக்கும் போது தங்கி இருந்த வீட்டுக்குப் போனோம். அப்ப தான் நீயும் உன் ப்ரண்டும் அடிக்கடி அங்க வந்து துருவ் வந்துட்டானான்னு விசாரிச்சிட்டுப் போனது எங்களுக்குத் தெரிஞ்சுது. அன்னைக்கு நீ துருவ் முகத்தைப் பாத்திருக்கணுமே? அவனுக்கு அப்படி ஒரு சந்தோஷம். எப்படியும் நீ மறுபடி அந்த வீட்டுக்கு வருவன்னு எங்க அட்ரஸ், ஃபோன் நம்பரை நீ வந்தா தரச்சொல்லி சொல்லிட்டு வந்தோம். அப்றம் தான் துருவ் நம்ம கம்பெனில எம்.டியா ஜாய்ன் பண்ணவே ஒத்துக்கிட்டான். நீ திரும்பி வருவன்னு அவன் மனப்பூர்வமா நம்புனான். அந்த நம்பிக்கை பொய்யாகமா நீ இப்ப வந்துட்ட” என்ற நந்தனை உணர்ச்சி துடைத்த பார்வை பார்த்தாள் நிலா. ‘எங்க ரெண்டு பேரோட நம்பிக்கை ஜெயிச்சிடுச்சு தான்ய்யா. ஆனா, எங்க காதல் தோத்துப் போச்சே. அதுவும் நீ செஞ்ச தப்புக்குக் காலம் தண்டனைய எங்க ரெண்டு பேருக்கும் தந்துடுச்சுய்யா. எல்லாம் உன்னால தான். பாவி பாவி’ என்று நந்தனை மனதில் வறுத்தெடுத்தவள்.

 

“நீங்க சொல்றதெல்லாம் சரிதான் சார். ஆனா, இப்ப என் மனசுல துருவ் இல்ல சார். நா அவனை மறந்துட்டேன்” என்று பல்லைக் கடித்துக் கொண்டு வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள்.

 

“திரும்பத் திரும்பப் பொய் சொல்லாதடி” என்று தன் பின்னால் கேட்ட குரலில் திரும்பிப் பார்க்க துருவ், நிலாவைக் கோபமாக முறைத்தபடியே அங்கு வந்து கொண்டிருந்தான்.

 

வேகமாக நிலா அருகில் வந்தவன் அவள் கையை எடுத்துத் தன் தலைமீது வைத்து, “சொல்லுடி, என் தலையில அடிச்சு சத்தியம் பண்ணிச் சொல்லுடி. இப்ப நீ என்னைக் காதலிக்கலன்னு தைரியம் இருந்தா என் தலையில அடிச்சுப் பொய் சத்தியம் பண்ணுடி பாப்போம்” என்று கத்த நிலா வெடுக்கெனத் தன் கையை இழுத்துக் கொண்டாள்.

 

“நா ஒன்னு பொய் சொல்லல. நா உன்ன மறந்துட்டேன்னா மறந்துட்டேன் தான். சும்மா சும்மா என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டு, போங்கய்யா போய் புள்ள குட்டிய படிக்க வைக்குற வழியப் பாருங்க” என்றவள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடி விட்ட.

 

“சரியான ப்ராடு அபி இவ. சத்தியம் பண்ண சொன்னா,  வெறிநாய் தொறத்துற மாதிரி எப்டி தப்பிச்சு ஓடுறா பாரு” என்றவன் முகம் சிரிப்பில் நிறைந்தது.

 

“அவ உன்ன இன்னும் விரும்புறாடா. நீ ரெண்டு வருஷம் காணாம போனதுல கூட அவளுக்கு உன்மேல சந்தேகம் இல்ல. அது அவ கண்ணுலயே தெரியுது. ஆனா, ஏன்? அதை ஒத்துக்க மாட்டேங்குறான்னு தான் எனக்குப் புரியல. ஒருவேள நம்ம ஸ்டேட்டஸ் பாத்து பயந்துட்டாளா? நீ அவகிட்ட நம்ம ஃபேமிலி பத்தி எதும் சொல்லல, அதனால இருக்குமோ?”

 

“அட போங்கப்பா, அவளாது இதுக்கெல்லாம் பயப்படுறதாவது. அவ மட்டும் நா வேணும்னு நெனச்சா எதப் பத்தியும் யோசிக்க மாட்டா. ஏன்? என்கிட்ட கூட சம்மதம் கேக்காம ஆள் வச்சு, இல்ல இல்ல அவளே என்ன குண்டுக்கட்டா தூக்கிட்டுப் போய், என் கழுத்துல அவ தாலி கட்டிடுவா. அவளப் போய் நம்ம ஸ்டேட்டஸ் பாத்துப் பயந்து ஒதுங்குறான்னு சொல்றீங்களே? அவளுக்கு நா வேணாம். அதான் இப்படிப் பண்றா. ஆனா, அதுக்கு என்ன காரணம்னு தான் கண்டு புடிக்கணும்.”

 

“சரி டா கடைசியா நாளைக்கு அவள நம்ம வீட்டுக்குக் கூப்டு பேசுவோம். அவ என்ன சொல்றான்னு பாப்போம். அப்பவும் நாய் இல்ல நரி இல்ல, நா துருவ்வ விரும்பலன்னு அடுக்கு மொழி பேசிட்டு திரிஞ்சா பேசாம இப்ப அவ உன்னைத் தூக்கிட்டுப் போய்த் தாலி கட்டவான்னு சொன்ன இல்ல, பேசாம அத நீ செஞ்சிடு. அப்றம் நடக்குறத பாத்துப்போம்… நீயும் என்னை மாதிரி காதலை இழந்து வெறுமையான வாழ்க்கை வாழ வேணாம்டா அத உன்னால மட்டும் இல்ல, அந்தப் பொண்ணாலயும் தாங்கிக்க‌ முடியாது” என்று நினைத்தவர். “வா டா கெளம்புவோம். நாளைக்கு இருக்கு உன் முகிலுக்கு ஷாக்கு.”

 

(நாளைக்கு ஷாக்கு முகிலுக்கு இல்ல மிஸ்டர்.அபிநந்தன். ஹை வோல்டேஜ் கரண்ட் உங்களுக்குத் தான் அடிக்கப் போகுது. நீங்க மட்டும் இல்ல, உங்க மொத்தக் குடும்பமும் அந்தக் கரண்ட்ல தீஞ்சு, காஞ்சு போகப் போறீங்க. அந்த அளவுக்கு ஷாக் காத்திருக்கு. நீங்க ஃப்ளாஷ் பேக்ல செஞ்சது, நிலா மூலம் திரும்பி வந்திருக்கு மிஸ்டர்.அபிநந்தன். கெட் ரெடி” by விதி.)

 

அந்தப் பெரிய ஹாலில் குடும்பம் மொத்தமும் சுற்றி வட்டம் போட்டு உட்கார்ந்திருக்க, நிலா திருட்டு முழி முழித்துக் கொண்டு அமர்ந்திருக்க, யாழினியோ, ‘ஆமா இவனுங்கு பெரிய நாட்டாமை பரம்பரை. எங்கள விசாரிச்சு பதினெட்டு வருஷம் ஊர விட்டு ஒதுக்கி வைக்கப் போற மாதிரி கெத்தா தான் உக்காந்திருக்கானுங்க. மகனே, நிலா மட்டும் அவ ஃப்ளாஷ் பேக் சொல்லி முடிக்கட்டும். அப்றம் பாருங்க, உங்க இந்த மிஸ்டர்.அபிநந்தன் வால்ல தீ வச்ச அனுமார் மாதிரி எப்டி தாவி குதிச்சுத் தாவி ஓடுறார்னு’ என்று நினைத்தவள் கால் மேல் கால் போட்டுத் திமிராக உக்காந்திருக்க, கார்த்திக் மனது தான் கிடந்து அடித்துக் கொண்டது ‘அடியேய் சீம சித்ராங்கி, இது… பின்னாடி நீ வந்து வாழப்போற வீடுடி. கொஞ்சம் அடக்க ஒடுக்கமா நடிக்கவாது செய்டி’ என்று கண்ணாலேயே கெஞ்ச ‘நீ போடா வெண்ண, நா உன்னையே மதிச்சது இல்ல. அப்றம் உன் குடும்பம் என்ன டா பெரிய வெங்காயம்’ என்று அவளும் பார்வையாலேயே பதில் தந்தாள்.

 

இங்கு நிலாவை ஆளாளுக்குக் கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடிக்க நிலா கலங்கித் தான் போனாள். ஒரு மணிநேரப் போராட்டதிற்குப் பிறகு, பொறுமை இழந்த அபிநந்தன் “அப்டி என்ன தாம்மா உன் பிரச்சனை? நாங்க எல்லாரும் இவ்ளோ சொல்றோம். நீ புடிச்ச புடியிலேயே இருக்கீயே. துருவ்வை நீ மனசாரக் காதலிச்சும் ஏன்? அவன கல்யாணம் பண்ண முடியாதுனு சொல்ற? நீ இன்னைக்குக் காரணத்த சொல்லியே ஆகணும். சொல்லு”? என்று கோபமாகக் கேட்க…

 

நிலா இதுவரை இழுத்துக் கட்டி வைத்திருந்த தன் மௌனத்தைக் கலைத்தவள், இதுதான் உண்மையைச் சொல்ல சரியான நேரம் என்று நினைத்து, “காரணம் தானா, உங்க எல்லோருக்கும் காரணம் தெரியனும். அவ்ளோ தானா? நா துருவ்வை வேணாம்னு சொல்ல காரணம் நீங்க தான் மிஸ்டர்.அபிநந்தன். நீங்க ஒருத்தர் தான்… நீங்க மட்டும் தான்” என்று கத்தியவள் கண்களில் குரோதம் அக்னியாக ஜொலிக்க அவள் சொன்னதைக் கேட்டு மொத்தக் குடும்பமும் குழப்பத்தில் நின்றது.

 

நந்தன், “நா காரணமா? நீ என்ன சொல்ற? நா என்ன செஞ்சேன்? நீ ஏன் இப்படிச் சொல்ற நிலா”? என்ற நந்தனை வஞ்சனை இல்லாமல் முறைத்தவள்.

 

“ஏன்னா?! துருநந்தன் சன் ஆஃப் அபிநந்தனா இருக்கனால. நா மதிநிலா ஓட பொண்ணு முகில்நிலாவா இருக்கனால” என்று கத்திச் சொன்னவள் தன் கட்டுப்பாட்டை இழந்து கதறி அழ யாழினி அவளை அணைத்துக் கொண்டாள்.

 

மதிநிலா என்ற பெயரைக் கேட்ட அடுத்த நொடி துருவ், கார்த்திக்கை தவிர அபிநந்தனது மொத்தக் குடும்பமும் ஸ்தம்பித்து நின்று விட்டது.

 

அபிநந்தன் மெதுவாக நிலா அருகில் வந்தவர், “நீ… நீ……… என் மதியோட பொண்ணா?” என்று கேட்க…

 

 நிலா ஆமாம் என்று தலையாட்ட, “என் மதி என்னோட மதி” என்றவர் நெஞ்சில் கை வைத்தபடி அப்படியே அமர்ந்து விட, அவர் எண்ணங்கள் மதிநிலாவை முதல் முதலில் பார்த்த அந்த நாளை நோக்கிப் பயணமானது.