உன் காதல் என் தேடல்

தேடல் – 16

 

மனம் விரும்பிய காதல் கிளிகள் ரெண்டு இல்லறம் என்னும் இனிய பயணத்தை இனிதே தொடங்க திருமணம் என்ற பந்தத்தில் இணையும் நிகழ்வு அழகாய் நடந்தேறிக் கொண்டிருந்தது.

 

மணமேடையில் துருவ்வின் மொத்தக் குடும்பமும் கூடி இருக்க, இத்தனை நாள் சின்னக் குழந்தை என்று மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்த தன் செல்ல மகள் இன்று ஒருவனுக்கு மனைவியாக, ஒரு காலத்தில் தன்னை வேண்டாம் என்று விரட்டி அடித்த குடும்பத்திற்கு மூத்த மருமகளாகச் செல்லுமளவு வளர்ந்து மணமேடையில் அமர்ந்திருப்பதைப் பார்த்த மதிநிலாக்கு எதையும் நம்ப முடியவில்லை. கண்கள் கரித்துக் கொண்டு வந்தது. மனம் முழுவதும் மகிழ்ச்சி, அதன் உச்சம் தொட்டிருந்தது. மகளையும், மருமகனையும் கண் நிறையப் பார்த்துக் கொண்டிருந்த மதியின் கண்கள் அடிக்கடி மண்டபம் முழுவதையும் சுற்றி சுற்றி வந்து, யாரையோ ஆவலாகத் தேடி அலை பாய்ந்து கொண்டிருந்தது. மதியின் கண்கள் மண்டபத்தைச் சல்லடை போட்டு சலித்து யாரை தேடுகின்றதோ அந்த நபர், அபிநந்தன். தன்னைத் தேடும் தன்னவளின் உள்ளத் தவிப்பையும், தேடித் துடிக்கும் அவள் மீன் விழிகளையும், இதழில் புன்னகையோடு தூர நின்று ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

தன் தவிப்பையும், எதிர்பார்ப்பையும் யாரும் பார்க்கவில்லை என்று மதி இயல்பாக இருக்க, கல்யாணத்திற்கு வந்த விருந்தினர் புது மாப்பிள்ளை, பெண்ணைப் பார்த்திருக்க!… நிலா, துருவ் உட்பட மொத்தக் குடும்பமும் மதி, அபியைப் பார்க்கத் தவிப்பைதை ஓரக் கண்ணால் பார்த்து தங்களுக்குள் ரசித்துச் சிரித்துக் கொண்டனர்.

 

“நேரமாச்சு மாப்புள்ள, பொண்ணோட அப்பா, அம்மா, தாய்மாமா எல்லாரும் வாங்க” என்று ஐயர் அழைக்க, மதியின் கண்கள் சட்டெனத் திரும்பிப் பார்க்க அங்கு பட்டு வேட்டி சட்டையில் காற்றில் அலையும் முடியைக் கைகளால் கோதியபடி கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்த அபிநந்தனை விட்டு இம்மியளவும் கண்களை அகற்ற முடியவில்லை அபியின் மதியால்.

 

சந்தன நிறப் பட்டுப் புடவையில், நீண்ட கூந்தலை அழகாய் வாரிக் கொண்டையிட்டு, நெற்றியில் சின்ன மெருன் நிறப் பொட்டு, கழுத்தில் ஒரு மெல்லிய செயின், கைகளில் இரு தங்க வளையல் அணிந்து சிம்பிளுக்கு உதாரணமாகச் செதுக்கிய சிலை போல் இருந்த தன் மதியை தன்னை மறந்து சைட் அடித்து “ச்சே ச்சே அபச்சாரம் அபச்சாரம். அவர் பெரிய மனுஷன் அப்படி எல்லாம் வெளிப்படையா சைட் அடிக்க மாட்டாரு. டெட்டால் போட்டு தொடச்ச டீசென்ட்டான பார்வை பார்த்துக் கொண்டே மேடைக்கு வந்தவர், பொண்ணுக்கு அப்பா செய்ய வேண்டிய சடங்கை எல்லாம் நா செய்றேன். அதோட மாப்பிள்ளை என் தங்கச்சி அகல்யாவோட பையன், அவனுக்குத் தாய்மாமாவும் நா தான்” என்ற நந்தன் தகப்பன் ஸ்தானத்தில் இருந்து நிலா கையை துருவ் கையில் பிடித்துக் கொடுத்தவர் “இனி நீதான் துருவ், என் பொண்ணை நல்லபடியா பாத்துக்கணும். இனி அவளோட வாழ்க்கையோட முழு சந்தோஷத்துக்கும் நீதான்டா பொறுப்பு… புரிஞ்சுதா”? என்று மிரட்டும் தொனியில் சொல்ல.

 

“அட நீங்க வேற அபி, அவகிட்ட சொல்ல வேண்டிய டையலாக்க என்கிட்ட சொல்லிட்டு. அன்னைக்கு நா ஒரு அறை, ஒரே ஒரு அறை இவள அறஞ்சதுக்கு இப்ப வரை மேடம் என்கிட்ட பேசவே இல்ல தெரியுமா? நானும் கல்யாண டேட் ஃபிக்ஸ் ஆன நாள்ல இருந்து இவகிட்ட பேச ட்ரை பண்றேன். ஆனா, இவ ம்ஹும்…, நியாயமா அத்தைக்காக என்னை வேணாம்னு சொன்னதுக்கு நா தான் இவ மேல கொல வெறில இருக்கணும். ஆனா, இங்க எல்லாம் உல்டாவா நடக்குது. என்ன செய்ய என்னால இவ மூஞ்சிய பார்த்து ஒழுங்கா கோவம் வந்த மாதிரி நடிக்கக் கூட முடியல. சம் டெக்னிக்கல் டிபெஃக்ட்.”

 

“ம்ம்ம் பின்ன, எம் பொண்ணுனா என்ன சும்மாவா? எவ்வளவு தைரியம் இருந்தா நீ என் பொண்ண அடிப்ப? அன்னைக்கே நா என் பொண்ணுக்கு வேற மாப்புள்ள பார்த்திருப்பேன். ஆனா, நீ என் செல்ல தங்கச்சி புள்ளையா போய்ட்டா. கூடவே எம் பொண்ணு வேற நா அந்தக் கிறுக்கன உயிருக்கு உயிரா லவ் பண்ணித் தொலச்சிட்டேன். எனக்கு அவன் தான் வேணும். என்னை அடிச்ச மேட்டர நா வேற மாதிரி டீல் பண்ணிக்கிறேன்னு சொன்னா. அதான் பெரிய மனசு பண்ணி எம் பொண்ணை உனக்குக் கட்டித் தரேன். இனியாது ஒழுங்கா பாத்து நடந்துக்கோ” என்று நிலா, துருவ்வுக்கு மட்டும் கேட்டும் குரலில் சொல்ல, நிலா துருவ்வைப் பார்த்து “என்ன மாப்ள? அப்பா சொன்னது மண்டையில் நல்லா ஏறுச்சா? இல்ல இன்னும் நல்லா ஸ்ட்ராங்கா சொல்லனுமா”? என்று புருவம் உயர்த்திக் கண்ணடிக்க, அவளைச் செல்லமாக முறைத்தவன் நந்தனை திரும்பிப் பார்த்து “இதெல்லாம் உங்க ரெண்டு பேருக்கே ஓவரா தெரியல?”

 

நந்தனும், நிலாவும் கோரஸாக “இல்லயே” என்று மெதுவாகச் சொல்லி தோளைக் குலுக்க, “துருவ் அவசரப்பட்டு இந்த அப்பா, பொண்ணுகிட்ட மாட்டிக்கிட்டயேடா” என்று புலம்பியவனை அலட்சியமாகப் பார்த்து இதழ் பிதுக்கிய நிலா “இட்ஸ் டூ லேட் மை டியர் புருஷா” என்று சொல்ல.

 

“ஓகே அபி, அவ அடிச்சாலும் சரி, தூக்கிப் போட்டு மிதிச்சாலும் சரி ஈஈஈன்னு இளிச்சிட்டே இருக்கேன் போதுமா?”

 

“டேய் நீ சிரிக்கிறது முக்கியம் இல்லடா. எம் பொண்ணை எப்பவும் முகத்துல சிரிப்போட வச்சிக்கணும் அது தான் முக்கியம்.”

 

“ஓஓஓ அப்டி சொல்றீங்களா? ஓகே அபி, கிச்சுகிச்சு மூட்டியாது நா எம் பொண்டாட்டிய சிரிக்க வைப்பேன். இது செத்துப் போனா எம் பாட்டி காமாட்சி மேல சத்தியம்” என்று சீரியஸாகச் சொல்ல, நிலா வாய்மூடி குலுங்கி சிரிக்க. 

 

நந்தன் “எப்படியோ எம் பொண்ணு சந்தோஷமா இருந்தா போதும். அவ கண்ணுல ஒரு சொட்டுத் தண்ணி வந்துது, அடுத்த ப்ளைட்ல நா எம் பொண்ணை சிங்கப்பூர் கூட்டிட்டுப் போய்டுவேன் ஜாக்கிரதை.”

 

“அய்யோ அபி! அப்படி எல்லாம் செஞ்சிடாதீங்க. இவ இல்லாட்டி நா யார் கூட குடும்பம் நடத்துறது? எப்டி பத்துப் புள்ள பெத்துக்கிறது”? என்ற துருவ்வை நிலா அதிர்ச்சியாகப் பார்த்தவள். “எது…! பத்துப் புள்ளையா? இதெல்லாம் நீ என்கிட்ட சொல்லவே இல்லயே?”

 

“அதான் இப்ப சொல்றேனே? அப்றம் என்ன? இதெல்லாம் போஸ்டர் அடிச்சா ஒட்டுவாங்க? சில்லி கேர்ள்” என்றவனை பாவமாகப் பார்த்த நிலா, “பத்து பாப்பாவாஆஆஆ… என்ன பாத்தா உனக்குப் பாவமா இல்ல துருவ்”? என்றதற்கு துருவ் “இல்லயே” என்று தோளைக் குலுக்கி இப்போது அவன் கடுப்பாக்கினான்.

 

“ப்பா என்னப்பா இது? இவன் இப்படிச் சொல்றான். இவனா என்னன்னு கேளுங்கப்பா” என்று கொஞ்சும் மொழியில் தந்தையின் சலுகையாக கேட்க.

 

அவளது கொஞ்சும் மொழி எப்போதும் போல் இந்த முறை வேலை செய்யவில்லை. “சாரிடா நிலா, இது உங்க புருஷன், பொண்டாட்டி பிரச்சனை. இதுல எல்லாம் அப்பா தலையிடக் கூடாது. அதோட பத்துப் பேரன், பேத்தி இருந்தா எனக்கும் ஹேப்பி தான். நானும், மதியும் எங்க டைம்மை ஜாலியா அவங்க கூட ஸ்பென்ட் பண்ணுவோம்” என்றவர் நகர்ந்து கொள்ள, துருவ் “எப்புடி”? என்று சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டான்.

 

இங்கு கார்த்திக் கண்கள் யாழினியையே வட்டமடிக்க அவளுக்கு அது புரிந்தும், வேண்டுமென்றே கார்த்திக்கை கண்டும் காணாமல் தவிக்க விட்டு நிலாவுடனே சுற்றிக் கொண்டிருந்தாள். ‘அடியேய் நீ எல்லாம் நல்லா வருவடி. மூஞ்சப்பாரு ஒரு லாரி நெறயா கிரீம் எடுத்து பூசிட்டு, என்னமோ பண்ணி கண்ணு, மூக்கு, வாயெல்லாம் எடுப்பா செதுக்கி வச்ச மாதிரி மேக்-கப் பண்ணிட்டு நச்சுன்னு இருக்க. அய்யோ பார்த்ததும் அப்படியே அள்ளிக்கலாம் போல இருக்கே. சண்டாளி வேணும்னே என் கண்ணு முன்னாடியே குறுக்க மறுக்க திரியுறா பாரு. ஆனா, என்னை கண்டுக்கமாட்டேங்குறாளே. சரி அன்னைக்குக் கோவத்துல ரெண்டு வார்த்த பேசிட்டேன். அதுக்குத் தான் காதுல கெங்குன்னு சத்தம் கேக்குற அளவுக்குக் கன்னத்துல ஒன்னு தந்துட்டாளே. அப்றம் என்னவாம்? இன்னும் முறிக்கிகிட்டு சுத்துறா’ என்றவன் அவளைப் பார்க்கும் போது கண்ணாலேயே வயலின் வாசிக்க, யாழினி வந்த சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு அவனை முறைத்து விட்டுச் சென்றாள்.

 

மூகூர்த்த நேரம் நெருங்க, தாய்மாமா என்ற முறையில் அகல்யா தாலியை தன் அண்ணன் நந்தனை எடுத்துக் கொடுக்கச் சொல்ல, “இல்ல அகல்யா, இந்தத் தாலிய எடுத்து தர அளவு தகுதியும், உரிமையும் நிலாவோட அம்மாக்குத் தான் இருக்கு. அவங்க எடுத்துக் கொடுத்த தான் இவங்க வாழ்க்கை சீறும், சிறப்புமா இருக்கும்” என்று சொல்ல மதிக்கு ஒரு நிமிடம் உடல் பதறிவிட்டது.

 

“அச்சோ அதெல்லாம் வேணாம். நீங்க தான் குடும்பத்துக்குப் பெரியவரு. நீங்க தாலி எடுத்துக் கொடுத்தா தான் சரியா இருக்கும்” என்று மதி மறுக்க, இருவருக்கும் இடையே நீயா நானா என்று இழுபறி நடக்க ஐயர் “டைம் ஆச்சு சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க. எனக்கு வேற அப்பாய்ண்ட்மெண்ட் இருக்கு” என்று அவர் ஒரு பக்கம் குதிக்க, அகல்யா, ‘என்னடி இது ரம்யா’ என்று பார்க்க ரம்யா “யூ டோண்ட் வொரியக்கா” என்று கண்ணடித்தவள்.

 

“ஓகே ஓகே அண்ணா நீ, நிலா அம்மா தாலி எடுத்துக் கொடுக்கணும்னு ஆசப்படுற. நீங்க எங்க அண்ணா தாலி எடுத்துத் தந்த நல்லா இருக்கும்னு நெனக்குறீங்க அப்படித் தான? அப்ப இதுக்கு ஒரே வழிதான் இருக்கு. நீங்க ரெண்டு பேருமே சேர்த்து உங்க ரெண்டு பேர் கையால தாலிய எடுத்துக் கொடுங்க” என்று நாட்டாமையாக இருந்து தீர்ப்புச் சொல்ல நந்தன் தங்கையைப் பெருமையாகப் பார்த்தவர் “கலக்கிட்ட ரம்யா” என்று கண்களால் மெச்சினார். “நாங்க எல்லாம் யாரு” என்று கட்டைவிரலைத் தூக்கிக் காட்டிய ரம்யா, “ம்ம்ம் டைம் ஆச்சு சீக்கிரம் சீக்கிரம்” என்று அவசரப்படுத்த ரம்யா சொன்னதின் அர்த்தம் புரியாத மதி, அபிநந்தனோடு ஜோடியாக நின்று தாலியை எடுத்துக் கொடுக்க அந்தக் காட்சியைப் பார்த்த நிலா கண்களில் அவள் ஆனந்தம் கடலாய் பொங்கி கரைபுரண்டு ஓடிவர துருவ் அவள் கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டான். “கூடிய சீக்கிரம் நீ ஆசப்பட்டது நடக்கும் முகில். நீ இப்ப பாக்குறது இன்னும் கொஞ்ச நாள்ல நெஜமாகும். நம்ம முழுக் குடும்பத்தோட ஒரே கனவு இது. நீ அழாத முகில்” என்க அவள் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

 

திருமாங்கல்யத்தைக் கையில் வாங்கிய துருவ் நிலாவைத் திரும்பிப் பார்த்து ‘இதுல உனக்கு முழுச் சம்மதம் தான’? என்று கண்களால் கேட்க, நிலா மெலிதாகப் புன்னகைத்தவள் அழுத்தமாகத் தன் இமைகளை மூடித் திறக்க வார்த்தைகள் சொல்லாத, அவள் சம்மதத்தை அந்த ஒரு விழி அசைவு அவனுக்கு உணர்த்தியது. மனநிறைவோடு நிலா கழுத்தில் மாங்கல்யத்தைக் கட்டி தன் முகில்நிலாவை தன் வாழ்க்கை வானத்தில் ஒளிவீசும் முழுநிலாவாக ஏற்றுக்கொண்டான்.

 

எல்லாம் நினைத்ததைவிட அழகாக, சிறப்பாக முடிந்தது. இதுவரை முகில்நிலா சேதுராமனாக இருந்தவள், இன்று முகில்நிலா துருவ்நந்தனாக அவள் புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைக்கப் போகிறாள். மதி நிறைந்த மனதுடன் அவளை அவள் கணவன் வீட்டிற்கு அனுப்பக் காத்திருக்க, நிலா ரம்யாவை நோக்கிக் கண்ணடித்தாள்.

 

‘எல்லாம் ரெடி! நீ ஆரம்பி’ என்று அவர் செய்கை செய்ய நிலா மதியை கட்டிக் கொண்டு “அம்மா நா உன்ன விட்டு போக மாட்டேன்ம்மா. உன்ன விட்டுப் போகமாட்டேன்’ என்று மதியை இறுக்கிக் கட்டிக் கொண்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்ய மதி தவித்துப் போனார். “நிலா என்ன இது சின்னப் புள்ளையாட்டம். இது எல்லாப் பொண்ணுங்க வாழ்க்கையிலும் நடக்குறது தான். எல்லாம் போகப் போகச் சரியாகிடும். கல்யாண நாளும் அதுவுமா நீ அழுது வடியுறது நல்லா இல்ல. பாரு எல்லாரும் உன்னத் தான் வேடிக்கைப் பாக்குறாங்க கண்ண தொட” என்று அதட்ட.

 

“யார் பார்த்தா எனக்கென்ன? எனக்கு என் அம்மா வேணும். நீ ஏன் எனக்குக் கல்யாணம் பண்ணி வச்ச? அதனால தான நா உன்னவிட்டு போக வேண்டி இருக்கு” என்று மீண்டும் தேம்பி தேம்பி அழுதாள் நிலா.

 

‘ஆத்தாடி இது உலக நடிப்பா இல்ல இருக்கு. எம் மருமகளுக்குள்ள இப்படி ஒரு நடிகையர் திலகம் சாவித்திரி ஒளிஞ்சிருக்காங்களா?!’ என்று ரம்யாவும், அகல்யாவும் வாயடைத்துப் போயினர்.

 

“எப்டி மம்மிஸ்? என் பொண்டாட்டியோட ஆக்டிங்? அப்படியே அள்ளுறா இல்ல”?

 

“டேய்! நீ உன் பொண்டாட்டி ஆக்டிங் தான பாத்த. இந்த உன் அம்மாவோட ஆக்டிங் ஸ்கில்ல நீ பாத்ததில்லயே? இப்ப பாரு” என்ற அகல்யா.

 

“இங்க பாருங்க மதி, நிலா இப்படி நல்ல நாளும் அதுவுமா அழுதுட்டே எங்க வீட்டுக்கு வரது எங்களுக்கு அவ்வளவு சரியப்படல. பாவம் நிலா அவளையும் ஒன்னும் சொல்ல முடியாது. உங்கள விட்டு வர அவளுக்கு மனசு வரல” என்றவர், “வேணும்னா நம்ம இப்படிச் செய்லாமே, நிலாக்கும் கல்யாணம் முடிஞ்சிடுச்சு. இனி அந்த வீட்ல நீங்க தனியா தானா இருக்கணும். பேசாம நீங்களும் நிலா கூட எங்க வீட்டுக்கு வந்துடுங்க மதி. அவளுக்கும் அவ அம்மா கூட இருந்தா நல்லா இருக்கும் இல்ல, என்ன நிலா?” என்று கேட்க.

 

“ஆமாம்மா நீயும் ஏ கூட வாம்மா. ப்ளீஸ்ம்மா ப்ளீஸ்” என்று நிலா, மதியின் கையைப் பிடித்துக் கொஞ்ச, “நீ சும்மா இரு நிலா, அதெல்லாம் சரியா வராது. நா அங்க எல்லாம் வந்து தங்க முடியாது. தங்கவும் கூடாது” என்று அழுத்திச் சொன்னவர், “நீ ஒழுங்கா கெளம்பு” என்று சொல்ல.

 

“ஏன் அத்த நீங்க எங்க வீட்டுக்கு வரக் கூடாது? ஏன் நாங்க எல்லாம் மனுஷங்க இல்லையா? இல்ல நீங்க வந்து தங்குற அளவுக்கு எங்க வீட்டுக்கு தகுதி இல்லயா”? என்று துருவ் தன் மாப்பிள்ளை பவரை கரெக்டாக யூஸ் செய்ய மதி பதறியே விட்டார். “அய்யோ! அப்டி எல்லாம் ஒன்னும் இல்லப்பா. பொண்ணைக் கட்டி குடுத்த வீட்ல நா எப்டி”? என்று மதி இழுக்க, “அதெல்லாம் ஒன்னு இல்ல அத்த, உங்களுக்கு ஒரு மகன் இருந்த, அவன் வீட்டுல நீங்க தங்க மாட்டீங்களா? அப்டி நெனச்சிக்கோங்க. இனி நா தான் உங்களுக்கு மகன், மருமகன் ரெண்டுமே. ப்ளீஸ் அத்த வாங்க. பாவம் நிலா அவள அழ வைக்காதீங்க. அட்லீஸ்ட் கொஞ்ச நாளாச்சும் நீங்க அவ கூட இருங்க அத்த., ப்ளீஸ்” என்று துருவ் கெஞ்ச மறு பேச்சின்றி மதி அபிநந்தன் வீட்டிற்கு வந்து விட்டார்.

 

அன்று திருமணம் நடந்தது முகில்நிலா, துருவ்நந்தனுக்கா இல்லை அபிநந்தன், மதிநிலாவுக்கா என்று குழம்பும் அளவிற்கு நிலாவை விட மதிநிலாவுக்கு அந்த வீட்டில் வரவேற்பு செம்மயாக இருந்தது.

 

தன் வீட்டில் மதி இருக்கப் போகிறார் என்று யோசித்த அபிநந்தன் மனதின் மகிழ்ச்சியை வார்த்தையில் சொல்ல முடியாது. அவர் அப்படியே வானத்தில் பறந்து கொண்டிருந்தார். தன் மனம் நிறைந்தவள் இனி தன் வாழ்க்கையில் இருக்கும் வெறுமையை அகற்றி சந்தோஷத்தை நிறைக்க வந்திருக்கிறாள். இத்தனை வருஷம் கழித்துத் தன்னவள் தன் வீட்டில் அடியெடுத்து வைப்பதைப் பார்த்து நந்தன் உள்ளம் காலில் சலங்கை கட்டி ஆடியது.

 

இன்று இந்த வீட்டிற்குள் நுழையும் மதிநிலா இனி எங்கும் செல்ல முடியாதபடி அந்த வீட்டின் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாய் மாறப் போகிறார். இனி நடக்கப் போவது எதையும் அறியாத மதிநிலா அந்த வீட்டில் தனது வலது காலெடுத்து வைத்தார்…