உன் காதல் என் தேடல்

உன் காதல் என் தேடல்

தேடல் – 20

 

அபிநந்தன் தன் வாய் திறந்து தன் மனதின் ஆசையை மதியிடம் சொல்லவில்லை. ஆனால், அவரின் ஒவ்வொரு செய்கையிலும் மதி மீது இப்போது சூரிய ஒளிபோல் சூடு குறையாமல் இருக்கும். தன் காதல் கொண்டு மதியின் மனதை சுட்டு எடுத்தார். மதிக்கும் மதி மயங்கி இருந்தாலும் சமுதாயம், மகள், வயது, நந்தனின் குடும்பமும், நிலாவும் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று கண்டதையும் யோசித்தவர், மனதைக் கடிவாளம் போட்டுக் கட்டி வைக்க முயல, அது அவருக்கு அவ்வளவு சுலபமாக இல்லை. அபியைக் கண்டதும் அழுத பிள்ளை தாயைக் கண்டதும் ஆதரவு தேடி ஓடி தன் தாயின் காலைக் கட்டிக் கொள்வது போல் மதியின் மனது நந்தனின் காலடியில் கிடக்கத் தவித்தது.

 

இருவருக்கும் ஒருவரின் ஒருவர் அருகாமை பிடித்திருந்தது. அந்த நிமிடங்களை வெகுவாக ரசித்தனர். வாழாமல் தொலைத்த வருடங்களை, கிடைத்த இந்த நிமிடங்களில் முழுதாய் வாழ்ந்தனர். அங்குத் தீண்டல் இல்லை, சின்னச் சின்னச் சீண்டல் இல்லை தெரியாமல் கூட இருவரின் உடைகளும் உரசிக் கொள்ளவில்லை. ஆனால், மனதும், பார்வையும் ஒரே நேர்கோட்டில் உரசும் போது ஏற்பட்ட காதல் நெருப்பில் இரு இதயமும் இதமாகக் குளிர் காய்ந்தது. இந்த நாட்கள், இந்த நெருக்கம், இந்த வாழ்க்கை இப்படியே தொடரக் கூடாதா என்ற ஏக்கம் இப்போதெல்லாம் மதியை மிகவும் ஆட்டிப் படைத்தது. ஆனால், அபிக்கு இது மட்டும் போதுமானதாக இல்லை. முறைப்படி ஊர் அறிய‌ மதியைத் தன் மனைவியாக்கி, இத்தனை வருடம் அவள் இழந்த மொத்த வாழ்க்கையையும், ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் அவருக்குத் திகட்ட திகட்ட தர விரும்பினார். அதோடு முகில்நிலாவை தன் உரிமையுள்ள மகளாக்கிக் கொள்ளவும் பேராவல் கொண்டார். அதற்கு மதி மனதில் சமூகத்தை விட அபி தான் முக்கியம் என்ற எண்ணம் அவருக்குள் வரவேண்டும். மதியின் மனது அபிநந்தனுக்கு நன்றாகப் புரிந்தது. தைரியமாக எந்த முடிவையும் எடுக்க முடியாமல் அவர் தவிப்பது நந்தனுக்குத் தெரிந்தாலும் அதைப் பற்றி அவர் எதுவும் பேசவில்லை. அவரின் குழப்பத்தை அவரே தெளிவுபடுத்திக் கொண்டு, தெளிவான ஒரு நல்ல முடிவை மதியே எடுக்கட்டும் என்று அபி அமைதி காக்க, மதி நந்தன் வாயைத் திறந்து எதுவும் கேட்க மாட்டாரா? தன் மனதில் இருப்பதை அவிழ்த்து விட்ட மூட்டை போல் அவரிடம் கொட்டிவிட மாட்டோமா? என்று அவர் முகம் பார்த்து அந்தத் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

 

இருவரும் ஆடும் இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் வீட்டில் அனைவருக்கும் தெரிந்தும் யாரும் வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. ரம்யா ஒருமுறை தான் மதியிடம் பேசுவதாகச் சொன்ன போது கூட நந்தன் அதை மறுத்து விட்டார். அவளே அவள் மனதின் குழப்பத்தைக் கடந்து வரட்டும் என்று முடிவாகச் சொல்லி விட ரம்யா உட்பட அனைவரும் வாய் மூடிக் கொண்டனர்.

 

அன்று அபிநந்தன் செம்ம ஸ்மார்டாக ரெடியாகிக் கொண்டிருக்க, “என்ன இன்னைக்கு எங்க அப்பாவோட அலங்காரம் எல்லாம் படு பயங்கரமா இருக்கு? காலையில இருந்து கண்ணாடியே தேஞ்சு போய் வாய்விட்டுக் கதறி கத்துற அளவுக்கு முன்னையும் பின்னையும் திரும்பித் திரும்பிப் பார்த்துட்டு இருக்கீங்க என்ன விஷயம் ப்பா? புதுசா எதும் கேர்ள் ப்ரண்ட் ஏதாவது”? என்று கண்ணடித்தபடியே நிலா, ” அப்பா உங்களுக்கு இப்ப என்ன வயசு இருக்கும்பா? என்று கேட்க.. 

 

நந்தன் ஸ்டைலான ஒரு லுக்கு விட்டு‍, ” எனக்கு என்ன வயசு இருக்கும்னு நீ நெனைக்குற நிலா?? 

 

நிலா ரெண்டு நிமிடம் கன்னத்தில் விரால்கொண்டு தட்டி யோசித்தவள், ” என்ன ஒரு 35 இருக்குமப்பா!? என்று கண்ணடிக்க… நந்தன் சத்தம் போட்டு சிரித்தவர். “ஆனாலும் உனக்கு ரொம்ப போங்கு தான் மகளே. எனக்கு இப்ப நாப்பத்தி ஒன்பது வயசு ஆகுது என்றவறை ஏறயிறங்க பார்த்த நிலா, “அப்பா செம்மபா‌. இப்பவும் நீங்க யூத்த தான் இருக்கீங்க. நா கேட்டதுல தப்பே இல்ல… உங்களுக்கு வேற கேர்ள்ப்ரண்ட் யாராவது??” என்று விஷமமாக கேட்டு கண்ணடிக்க மகளை செல்லமாக முறைத்த நந்தன், “நீ வேற ஏன்டா வயித்துல ஃபயர் பத்த வைக்குற? எனக்குன்னு காத்திருக்க ஒருத்தியையே கரெக்ட் பண்ண முடியாம நா இங்க தடவிட்டு இருக்கேன். இதுல அவ என்னோட லவ்வர் வேற வெளிய சொன்னா வெக்கக் கேடு. லவ்வரை கரெக்ட் பண்ணவே எனக்கு வக்கில்ல, இதுல புதுக் கேர்ள் ப்ரண்ட் ஒன்னு தான் கொறச்சல் போடா நிலா” என்று நந்தன் சலித்துக் கொண்டார்.

 

“அடபோங்க மாம்ஸ்! நீங்க எவ்ளோவோ மேல். லவ்வர கரெக்ட் பண்ண முடியாம தான் தவிக்கிறீங்க. ஆனா, இங்க ஒருத்தன்‌ தாலி கட்டுன சொந்த பொண்டாட்டிய கரெக்ட் பண்ண முடியாம லாந்திக்கிட்டு இருக்கேன்” என்று துருவ் ஏக்கமாக நிலாவைப் பார்க்க.

 

நிலா “அச்சோ இவன் வேற? நேரம் காலம் தெரியாம? டேய் எங்க, யார் முன்னாடி நின்னு பேசுறேன்னு புரிஞ்சு பேசுடா. இப்படி எங்கப்பா முன்னாடி என் மானத்த வாங்காதடா” என்று பல்லைக் கடித்துக் கொண்டு மெதுவாகத் துருவ் காலை மிதிக்க.

 

“அப்ப நா கேட்டதுக்கு ஓகே சொல்லு. நா அபிகிட்ட எதுவும் சொல்லல” என்று அவன் டீல் பேசக் கடுப்பான நிலா, மீண்டும் துருவ் காலை மிதிக்க “அச்சோ அபி உன் பொண்ணு கிட்ட இருந்து என்னைக் காப்பாத்து” என்று அவன் கத்த நிலா சட்டென, “டேய் வாயமூடுடா” என்று அவன் வாயைப் பொத்த நந்தன் இருவரையும் முறைத்தபடி நின்றார்.

 

“ஏய் பசங்களா? என்ன பிரச்சனை உங்களுக்குள்ள? டேய் துருவ் என்னடா? என்ன ஆச்சு? எதுக்கு எம் பொண்ணைப் போட்டுக் குடுக்குற? உனக்கும் நிலாக்கும் எதும் சண்டையா” என்று முறைக்க.

 

“அச்சோ! அதெல்லாம் ஒன்னு இல்ல அபி. நா சும்மா இவள வம்பிழுக்கத் தான் அப்படிச் சொன்னேன். எங்களுக்குள்ள ஒரு சண்டையும் இல்லை. நீங்க ஃப்ரீயா விடுங்க” என்ற துருவ்வை இப்போது அதிகமாக முறைத்த நந்தன், “நா உன்னைச் சின்ன வயசுல இருந்து பாக்குறேன் துருவ் என் கிட்ட நடிக்காத. நீ இப்ப நிலா கிட்ட வெளையாடுறனு எனக்குப் புரியுது. பட், இந்த வெளையாட்டுல ஒரு மறைமுக ஏக்கம் தெரியுது. இப்ப உண்மைய சொல்றீங்களா இல்லையா?”

 

“அது… அது வந்து அபி” என்று துருவ் இழுக்க,

 

“டேய், என்கிட்ட என்னடா தயங்கம்… சொல்லுடா?”

 

“அது ஒன்னு பெரிய விஷயம் இல்ல அபி. உங்களுக்குத் தான் தெரியுமே எனக்குக் கொழந்தைங்கன்னா ரொம்பப் புடிக்கும்னு. கல்யாணம் முடிஞ்சதுல இருந்து உடனே ஒரு குட்டி துருவ் இல்ல குட்டி முகில் பெத்துக் குடுடின்னு கெஞ்சுறேன். இவ மாட்டேங்கிற” என்று இயல்பாகச் சொல்ல, நிலா தலையை குனிந்து கொண்டாள். 

 

நந்தன் ஒன்றும் புரியாமல், “ஏய் நிலா? என்ன இது? இதுக்கு ஏன் நீ மொகத்த தொங்கப் போட்டுக்கிட்ட? என்ன ஆச்சு உனக்கு?”

 

துருவ்,”எங்களுக்குக் கல்யாணம் முடிஞ்சு நாலஞ்சு மாசம் ஆகிடுச்சு அபி. எனக்கு சீக்கிரம் ஒரு பாப்பா பெத்துக்கணும்னு ஆசையா இருக்கு. ஆனா, ஏன்னு தெரியல அது பத்தி பேசுனாலே, அதுவரை நல்லா சிரிச்சு பேசுறவ அதுக்கு அப்புறம் என் மேல எரிஞ்சு எரிஞ்சு விழுறா. இவளுக்கும் குழந்தைங்கன்னா ரொம்பப் பிடிக்கும். நாங்க லவ் பண்ண டைம்லயே, கல்யாணம் முடிஞ்ச பத்து மாசத்துல எனக்கு ஒரு குட்டிப்பாப்பா வேணும். ஒரு வருஷம் ரெண்டு வருஷம் லைஃப்ப என்ஜாய் பண்ணனும், குழந்தைய தள்ளிப் போடுற கதையே வேணாம்னு சொல்லுவா. ஆனா,? இப்ப ஏன் இப்படிப் பண்றானே புரியல. அதைத் தான் இப்ப சும்மா விளையாட்டா, அத வச்சு இவளை வெறுப்பேத்த அப்டி சொன்னேன்?”

 

“டேய் இது நல்லா விஷயம் தான? இதுக்கு எதுக்கு உங்களுக்குள்ள சண்ட? நீ ஏன்”? என்று நிறுத்தியவர், ஏதோ தோன்ற நிலாவைப் பார்த்தவர், “நானும், மதியும் சேருற வரை குழந்தை வேணாம்னு கேணத்தனமா எதும் யோச்சிருக்கயா என்ன”? என்று அழுத்தமாகக் கேட்க நிலா நிமிர்ந்து தந்தை முகத்தைப் பார்க்க தைரியம் இல்லாமல் தலையை மட்டும் “ஆமாம்” என்று ஆட்ட நந்தனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. 

 

“ஏன்டா? ஏன் இப்படிச் சின்னப் புள்ள மாதிரி நடந்துக்குற நீ? எங்களுக்காக எதுக்கு நீ”? என்றவருக்கு அதற்கு மேல் வார்த்தை வராமல் போனது…

 

நிலாவை பார்த்த, துருவ்விற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. “சாரி டி, நா தான் தப்புப் பண்ணிட்டேன். உனக்கு அப்பா, அம்மான்னா எனக்கும் மாமா, அத்தை தான?. நா ஏன் அவங்களைப் பத்தி யோசிக்காமயே இருந்துட்டேன். நா எப்ப இவ்ளோ சுயநலக்காரனா மாறுனேன்” என்றவன் நிலாவைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொள்ள, நந்தனுக்குத் தன் பிள்ளைகளை நினைத்துக் கண்கள் கலங்கிவிட்டது.

 

“நிலா” என்று மகளை அழைத்தவர், “நா என்ன சொன்னாலும் நீ கேட்ப தான”? என்று கேட்டதும் நிலா அழுது வடிந்த முகத்தைத் துடைத்தவள், “ம்ம்ம்” என்று சத்தம் மட்டும் கொடுக்க, “இன்னும் ஒரு வருஷத்தில் என்னையும் என் மதியையும் தாத்தா, பாட்டின்னு கூப்புட ஒரு அழகான குட்டி ஏஞ்சல் வேணும். இது அப்பா மேல சத்தியம்” என்று அவள் கையை எடுத்துத் தன் தலையில் வைத்துக் கொள்ள, நிலா அவர் கையை எடுத்துத் தன் தலைமீது வைத்தவள், “நீங்க கேட்டதுக்கு ஓகே. அதே மாதிரி நீங்களும் சீக்கிரம் அம்மாவை சம்மதிக்க வச்சு உங்க கல்யாணத்தை நடத்தணும். இது என் மேல சத்தியம்” என்க, “டபுள் ஓகே மை டியர் மகளே. அப்பா இன்னையில் இருந்து ரொமாண்டிக் ஹீரோவா மாறுறேன். உங்கம்மாவை தட்டித் தூக்குறேன். உங்க அம்மாவ வந்து அபி ஐ லவ் யூன்னு சொல்ல வைக்குறேன்” என்று சபதம் எடுக்க.

 

“எது ரொமாண்டிக் ஹீரோவா? யாரு நீங்களா? என்ன மாமா காலையிலயே காமெடி பண்ணிட்டு இருக்கீங்களா”? என்று நக்கலாகக் கேட்டுக் கொண்டே அறைக்குள் வந்த கார்த்திக்கின் தலையில் கொட்டிய யாழினி, “ஏன்டா எங்கப்பாக்கு என்ன டா கொறச்சல். உன்னோட கம்பேர் பண்ணும் போது நந்துப்பா ரொமாண்டிக் ஹீரோ தான்டா. ஆமா தானாப்பா” என்று யாழி கையைத் தூக்க, “அப்படிச் சொல்லு டா யாழி” என்று நந்தன் அவள் கையில் hi-fi அடித்தவர், “எம் பொண்ணுங்க எப்பவும் இந்த அப்பாக்கு தான் சப்போட் பண்ணுவாங்க. அது ஒன்னு இல்லம்மா. இவனுக்குப் பொறாமை. இவன விட நா ஸ்மார்டா இருக்கேன்னு அடி வயிறு அடுப்புல வேகுற மாதிரி எரியுது?”

 

“ஆமா ஆமா, எங்களுக்கு வயிறு எரியுது. அட போங்க மாம்ஸ், அத்தைய கரெக்ட் பண்ண முடியல. இதுல இவரு ரொமாண்…டிக் ஹீரோ… வாம்‌” என்று கலாய்க்க, “டேய் ரொம்ப ஓவரா பேசாத. இன்னைக்கு நானும் என் டார்லிங் மதியும் வெளிய போறோம். இன்னைக்கு நா அவளை அசத்துற அசத்துல, மாமா என்னைக் கல்யாணம் கட்டிக்குங்கன்னு அவ வாயலயே சொல்லுவா பாரு” என்று காலரைத் தூக்கிவிட்டார்.

 

“நெஜமாவாப்பா, நீங்க அம்மா கூட டேட்டிங் போறீங்களா” என்று நிலா ஆர்வமாகக் கேட்க, “அட நீ வேற நிலா, இவரு அவ்ளோ எல்லாம் ஒர்த் இல்ல. ப்ராஜெக்ட் விஷயமாக அத்த கூட ஒரு மீட்டிங்க்கு போறாரு. அதுக்குத் தா இவ்ளோ அலப்பறை” என்றதும் எல்லோருக்கும் சப்பென்று ஆகிவிட, “ப்ச் அவ்ளோ தானா” என்று சலிப்பாகக் கேட்டனர்.

 

“அதெப்படி? இந்தக் கார்த்திக் இருக்கும் போது அப்டி எல்லாம் நடக்க விடுவேனா என்ன? நா நேத்தே அந்த ப்ராஜெக்ட் மீட்டிங்கை ஸ்கைப்ல முடிச்சுட்டேன்” என்க அபிநந்தன் அதிர்ந்தே விட்டார். “டேய் ஏன்டா? நானும் மதியும் அவ்ளோ தூரம் ஒன்னா போகப் போறோம்னு எவ்ளோ எக்ஸ்சைட்டடா இருந்தேன் தெரியுமா? இப்படி என் ப்ளான்ல ஒரு லாரி மண்ணை அள்ளி போட்டுட்டியேடா என்று புலம்ப, அச்சோ சொல்றத முழுசா கேளுங்க மாம்ஸ். நீங்க இப்ப அத்த கூட மீட்டிங் கெளம்பிப் போறீங்க. நீங்க போகும் போது பாதி வழியில நா மீட்டிங் கேன்சல்னு உங்களுக்கு ஃபோன் பண்றேன். உடனே அத்த வீட்டுக்கு போலான்னு சொல்வாங்க. அப்ப நீங்க, எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. பக்கத்துல இருக்க ரெஸ்டாரன்ட் போய்ட்டு ரெஃப்ரஷ் பண்ணிட்டு போலாம்னு சொல்லி அத்தைய தள்ளிட்டு போய்…” எனவும், “டேய்” என்று நந்தன் அதட்ட, துருவ் கார்த்திக் காதைப் பிடித்துத் திருக, “ஏய் ஏய்! நா எதும் தப்பா சொல்லலப்பா. அத்தைய தள்ளிட்டு போய் உங்க மனசுல இருக்குறத அப்படியே கொட்டிடுங்கன்னு தா சொல்ல வந்தேன்” என்ற கார்த்திக் தோளில் தட்டிய துருவ் “பரவாயில்ல டா, செம்ம ப்ளான் தான் போட்டிருக்க. அத்த எப்ப பார்த்தாலும் ப்ராஜெக்ட் பத்தி மட்டும் தான் பேசுறாங்க. இப்படிக் கொஞ்சம் வெளிய போனா தான் அவங்க மனசும் தெளியும். மாமா பத்தி கொஞ்சமாச்சும் யோசிப்பாங்க. நீ செஞ்சது தான் கரெக்ட்” என்று துருவ் அவனைப் பாராட்ட, சட்டைக் காலரைத் தூக்கிவிட கார்த்திக் “பாத்தியாடி. என் வருங்காலப் பொண்டாட்டி. ஐய்யாவோட திறமைய? ஒரு சாதாரண மீட்டிங்கை எப்டி டேடிங்கா மாத்தி இருக்கேன்” என்று கார்த்திக் பீத்திக் கொள்ள, யாழினி அவனை மேலிருந்து கீழ் வரை கேவலமான ஒரு லுக் விட்டாள். “இப்ப நீ என்ன வேலை பார்த்துட்டு இருக்கனு உனக்குப் புரியுதாடா”? என்று கேட்க, மற்ற அனைவரும் வாய்விட்டுச் சிரித்துவிடக் கார்த்திக் நிலையோ ‘இவள லவ் பண்ண ஒரு குத்தத்துக்கு எவ்வளவு அசிங்கப்படுத்துறா. ம்ம்ம் சரி சரி, என்ன இருந்தாலும் தாங்கித் தான் ஆகணும். ஏதாவது பேசுனா அப்றம் கன்னம் பழுத்துடும். எதுக்கு வம்பு?” என்று வாய்மூடிக்கொண்டான்… 

 

“மாமா இந்தாங்க, அங்க இருக்க ரெஸ்டாரன்ட்ல உங்களுக்கு டேபிள் புக் பண்ணி இருக்கேன். டைம் ஆச்சு கெளம்புங்க” என்றவன் “அடியேய் பேயி! இங்கயே நிக்காத. உனக்கு ஒரு வேலை இருக்கு கீழ வா” என்றவன் “ஹலோ பிரதர், நீயும் தான். நிலா அண்ணி டார்லிங், உனக்கு மட்டும் கீழ சப் டைட்டில் போடணுமா என்ன? உன் வூட்டுக்காரனா தள்ளிட்டு கீழ வாம்மா” என்றவன் அனைவரையும் அழைத்துச் செல்ல அபிநந்தன் மதியுடன் கிளம்பினார்.

 

அவர்கள் கிளம்பிய அடுத்த நொடி இளசுகளும் அவர்கள் பின்னாலேயே போக, அகல்யா “நீங்க எல்லாம் எங்க போறீங்க” என்று கேட்க, “அதுவாம்மா நாங்க இதுவரை 90’s, 2k kid லவ் தான் பாத்திருக்கோம். இந்த 70’s, 80’s லவ் பார்த்ததே இல்ல இல்ல. அதான் இப்ப லைவ்வா பாக்கப் போறோம்” என்ற கார்த்திக் யாழி, துருவ், நிலாவுடன் அந்த ரெஸ்டாரன்ட்க்கு ஓடினான்.

 

நந்தனும் மதியும் ஒருவரை ஒருவர் ஆழமாக பார்த்திருக்கு, வார்த்தைகள் இல்லாத வாக்குவாதம் அங்கு நடந்துகொண்டிருந்தது… “எனக்கு நீ வேணும்னு என் மனசு தவிக்குது அபி… ஆனா, அதை வாய்விட்டு சொல்லவே, இல்ல இந்த சமுகம் போட்டிருக்க வட்டத்தை விட்டு வெளியவந்து உன்னை கைபிடிக்கவோ எனக்கு துணிச்சல் இல்ல அபி” என்றவர் கண்களில் கண்ணீர் கசிய, அவர் கையை தன் கைகொண்டு இறுக்கிப்பிடித்த நந்தன். “இது உன் வாழ்க்கை உன் முடிவு. நீ எத செய்ணும்னு நெனைக்கிறீயோ அத செய். என் மூச்சுயிருக்க வரை உன்னோட எந்த முடிவுக்கும் துணையா நா இருப்பேன். அது உன்னோட புருஷன இருந்தா? இல்ல நல்ல நண்பன இருந்தான்றது உன் கையில தான் இருக்கு” என்று மதியின் கையை தன் கையில் இருந்து விடுவித்தவர் “வா மதி போலாம்” என்க மதி மறுபேச்சின்றி அவர் பின் சென்றார்.

 

நான் பார்க்கும்…

அனைத்தும் அழகு!

 

உன் விழியில் பார்க்கையில்…!

 

கேட்கும் வார்த்தையெல்லாம் இசை…!

 

உன் குரலில் கேட்கையில்…!

 

உன் விழியில் எனக்கான தேடலையும்…

 

உன் மொழியில் எனக்கான காதலையும் கானும் வரை காத்திருப்பேன்…!

 

உனக்காக காத்திருப்பேன்.. உயிர் உருகி பார்த்திருப்பேன்…!

 

 

நிலா அமைதியாக வர, “என்ன முகில்? ஏன் ஒரு மாதிரி இருக்க? என்ன ஆச்சு?” என்று அக்கறையாகக் கேட்ட துருவ்வைப் பார்த்தவள், “ஒன்னு இல்லடா. அம்மா பத்தி தான் யோசிச்சுட்டு இருக்கேன்.”

 

“ஏன்? அத்தைக்கு என்ன? முன்ன விட அத்த இப்ப அபி கூட நல்லா ஃப்ரீயா பேசுறாங்க. இயல்பா இருக்காங்க. நீ தான் ரெஸ்டாரன்ட்ல பாத்த இல்ல, ரெண்டு பேரும் நல்லா சிரிச்சுத் தான பேசிட்டு இருந்தாங்க. நீ வேணும்னா பாரு கூடிய சீக்கிரமே அவங்க நமக்கு குட் நியூஸ் சொல்வாங்க” என்று துருவ்வைப் பார்த்துச் சிரித்த நிலா, “நீ அவங்க பேசுனதப் பார்த்த. ஆனா, நான் அம்மா பேசுனதப் புரிஞ்சுகிட்டேன். ஷீ ஸ்டில் லவ் அப்பா. அது எப்பவும் மாறாது. அதே மாதிரி அவங்க மனசும் மாறாது துருவ், ஐ நோ ஹேர் வெரி மச்”

 

“நீயா எதும் இமஜின் பண்ணாத முகில். அத்தையும் படிச்சவங்க தான். ஷீ இஸ் ஏ ஆர்க்கிடெக்ட். அவங்க நம்ம விட வாழ்க்கையை அதிகம் பாத்தவங்க. கண்டிப்பா மெச்சூயூடா தான் முடிவெடுப்பாங்க.”

 

நிலா அலட்சியமாகச் சிரித்தவள், “ஆமாடா அவங்க மெச்சூயூடா தான் முடிவெடுப்பாங்க. அதுதான் ப்ராப்ளமே. அவங்க அப்பா மாதிரி இல்ல துருவ், அப்பா ரொம்பப் பிராக்டிகல். அவர் மனசு சொல்றது தான் அவருக்கு முக்கியம். ஆனா, அம்மாவைப் பொறுத்த வரை இந்த சொசைட்டி தான் அவங்களுக்கு முக்கியம். இந்த சொசைட்டி ஒரு பொண்ணு இப்படித் தான் இருக்கணும்னு ஒரு வட்டத்தைப் போட்டு வச்சிருக்கு பாரு, அதுக்குள்ள தான் அம்மா இப்பவும் இருக்காங்க. அவங்க அவங்களோட அந்த சொசைட்டி அவங்களுக்குள்ள புகுத்துன மெச்சூயூரிட்டி லெவல் வச்சு தான் முடிவெடுப்பாங்க. அதுதான் எனக்கு பயமா இருக்கு” என்ற நிலாவின் வார்த்தையில் இருந்த உண்மை மூவருக்கும் புரிய “இப்ப என்ன பண்றது நிலா? அம்மா மனச எப்டி மாத்துறது” என்ற யாழினியைப் பார்த்து இதழ் பிதுங்கிய நிலா “தெரியல யாழி” என்க அதன் பின் அனைவரும் மௌனமாக வீடு வந்து சேர்ந்தனர்.

 

அமைதியாக மேலும் இரண்டு மாதங்கள் ஓடியது.

 

மதி வானில் வலம் வந்த முழு மதியைப் பார்த்தபடி, அபியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார். அன்று ரெஸ்டாரன்டில் அபியுடன் பேசியதையே நினைத்துக் கொண்டிருந்தார்.

 

“நீ எப்பவும் என்னோட மதி. அது இந்த ஜென்மத்தில் மாறாது. என்னைப் பொறுத்த வர, என்னைக்கு நா உன்னை விரும்ப ஆரம்பிச்சேனோ, அப்பவே நீ எனக்குப் பொண்டாட்டி ஆகிட்ட. இந்தக் கல்யாணம், தாலி இதெல்லாம் நம்ம புருஷன், பொண்டாட்டினு ஊருக்கு சொல்ற வெறும் ஒரு சடங்கு தான். நா உன்னைக் கட்டாயப்படுத்தல. உன் விருப்பம் இல்லாம இங்க எதுவும் நடக்காது” என்று நந்தன் சொன்னதையே ரிவைன்ட் மோடில் திரும்பித் திரும்பி நினைத்துப் பார்த்த மதியின் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது. ‘எனக்கும் விருப்பம் தான் அபி. என் மனசுல இப்பவும் நீ தான் இருக்க. எப்பவும் நீ தான் இருப்ப. ஆனா, கல்யாணம்’ என்று யோசிக்கும் போதே மதியின் உடல் நடுங்கியது.

 

தன் தோள் மீது யாரோ கை வைக்கவும், மதி திரும்பிப் பார்க்க, சிரித்த முகமாக நின்றிருந்தாள் நிலா.

 

“என்னம்மா இங்க நிக்குற? தூக்கம் வரலயா?” என்ற மகளின் தலையைத் தடவிய மதி, “இல்லடா, ஏதோ ஒரு மாதிரி இருந்தது. அதான் மாடிக்கு வந்தேன்.”

 

நிலாவுக்கு மதியின் மனநிலை நன்றாகப் புரிந்தும், “ஏம்மா உடம்பு எதுவும் சரியில்லயா” என்று கேட்க.

 

“இல்ல நிலா. மனசு தான் சரியில்ல” என்று கைகட்டி நின்றவர், “சில நேரத்துல ஏன் நமக்கு வயசாகுது. அப்படியே சின்னக் கொழந்தையாவே இருந்துட்டா எவ்வளவு நல்லா இருக்கும்னு ஏக்கமா இருக்கு நிலா. வயசும், மெச்சூரிட்டியும் வளர வளர தான், இங்க கஷ்டம், மன வலி, குழப்பமும் அதிகமாகுது” என்று மதி தன்னை மறந்து பேசிக் கொண்டிருக்க, நிலா அன்னையை ஆழ்ந்து பார்த்தவள், “உன்ன பொறுத்த வரை மெச்சூரிட்டின்னா என்னம்மா? இதுக்கு முன்ன இருந்தவங்க, எப்டி, எந்த வழில போனாங்ளோ அதே வழியில, அது தப்போ, சரியோ, புடிக்குதோ, புடிக்கலையோ, அச்சு பெசகாம அந்த வழியில நம்ம நடக்குறது தான் மெச்சூரிட்டியா”? என்று மதியைப் பார்த்து கேட்டவள், தலையை இடவலமாக ஆட்டி, “இல்லம்மா, என்னைப் பொறுத்தவரை, அது இல்ல மெச்சூரிட்டி. நமக்குப் புடிச்ச விஷயத்தை நல்லதா, கெட்டதான்னு அலசி ஆராய்ந்து, அதை நம்ம சேர்ந்தவங்களுக்கு புரிய வச்சு, யாருக்கும் பாதிப்பு இல்லாம அதை அடையுறது தாம்மா என்னைப் பொறுத்த வரை மெச்சூரிட்டி. புடிச்சதை தொலைச்சிட்டு வாழ்க்கை முழுசும் தொலைச்சதையே நெனச்சுட்டு வாழ்றது தான் உன்னோட மெச்சூரிட்டின்னா அந்தப் பழப்போன ஒரு கர்மமே நமக்கு வேணாம்மா. நீ இந்த சொசைட்டியோட சொல் பேச்சு கேட்டு நடந்தேன்னு இங்க என்ன உனக்கு வெங்கல செலயா வைக்கப் போறாங்க? ஒரு மண்ணும் கெடயாது. என்ன நீ உனக்குப் புடிச்சத செஞ்சா ஒரு ஒரு வாரம் அதைப் பத்தி பேசுவாங்களா? அடுத்த வாரம் பிக்பாஸ் வீட்டில் புதுப் பிரச்சனைன்னு ஒரு புரோமோ வந்தா போதும், அத பத்தி டிஸ்கஸ் பண்ண ஓடிடுவாங்க. இதுதாம்மா நம்ம சொசைட்டி. அப்டி பாத்தா உனக்கு முந்தின ஜெனரேஷன்ம்மா பாட்டி, அது சாகும் போது என் கிட்ட என்ன சொல்லுச்சு தெரியுமா? எம் பொண்ணு வாழ்க்கை முழுக்கத் தனிமரமாவே நிக்கக் கூடாது. அவளுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வைடி நிலான்னு சொல்லுச்சே! அது தான்ம்மா மெச்சூரிட்டி. நீ நெனைக்கலாம், இப்ப நம்ம சொன்னதுக்கும் இவ இப்படி, இதையெல்லாம் பேசுறதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையேன்னு. ஆனா, நம்ம கேள்விக்குப் பதில் எப்ப யார் கிட்ட இருந்து கெடைக்கும்னு சொல்ல முடியாதும்மா. நீ நல்லா யோசிச்சு பாத்தீன்னா, நீ இப்ப இங்க நிக்குறது எதுக்கோ அந்தக் கேள்விக்கான பதில், நா இப்ப பேசுனதுல கூட இருக்கலாம். நல்லா யோசி, தேடி பாரும்மா” என்றவள் அங்கிருந்து நகர்ந்து போக.

 

“நீ எப்ப இவ்ளோ பெரிய பொண்ணா வளர்ந்த நிலா?” என்று மதி பெருமையாகக் கேட்க, நிலா அன்னையைப் பார்த்து அழகாய் சிரித்தவள், “எப்ப காதலோட சுகத்தையும், அதோட வலியையும் முழுசா உணர்ந்தேனோ அப்பதாம்மா. காதல் தர்ற சுகம் சொர்க்கம்னா, அது தர்ர வலி பிஞ்சு வயசுல அம்மாவை இழக்கும் வலிய விடக் கொடுமைம்மா. நா அந்தத் தப்ப துருக்வுக்கு செய்யப் பார்த்தேன். நல்ல வேள சாமி தடுத்துடுச்சு. ஆனா, நீ, தப்பி தவறிக் கூட ஒரு நாளும் அந்தத் தப்ப பண்ணிடாதம்மா” என்றவள் வேகமாக அங்கிருந்து சென்று விட்டாள்.

 

‘நிலா ஏன் இப்படிப் பேசினாள்? அவளுக்குத் தன்னை, அபியைப் பற்றி ஏதாவது தெரிந்திருக்குமோ’ என்று கூட மதிக்கு யோசிக்கத் தோன்றவில்லை. மதிக்கு நிலா சொன்ன கடைசி வார்த்தைகள் தான் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது. அந்த வார்த்தைகள் நெஞ்சில் ஊசி குத்தியது போல் வலித்தது. அவள் மனக்கண்ணில் ‘அந்த மரண வலியை மறுபடியும் எனக்குத் தந்துடாத மதி’ என்று அபி கெஞ்சுவது போல் இருந்தது. கொஞ்ச நேரம் கண்ணை மூடி அங்கேயே அமர்ந்திருந்தவள், மனதின் அனைத்து குழப்பமும் நீங்க, இரவென்றும் பாராது அவர் கால்கள் அபியின் அறை நோக்கி ஓடியது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!