உன் காதல் என் தேடல்

ei8VUJK48458-963b3b00

உன் காதல் என் தேடல்

தேடல் – 5

 

கடந்தகாலக் காதல் நிகழ்வுகளில் தன்னைத் தொலைத்த நிலாவின் கண்கள் கண்ணீரை விலக்கி நிம்மதி எனும் நிலை தொட போராட, நிம்மதியோ நிலாவிடம் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி விளையாடி அவளை இம்சித்தது. கட்டிலில் கவிழ்ந்து படுத்திருந்தவள், கண்கள் அவள் காதல்காலக் கனவுகளின் எண்ணிக்கையைக் கண்ணீரில் கோடுகளாக அவளது பிஞ்சுக் கன்னத்தில் வரைந்திருந்தது. வெகுநேரம் அழுதவள் விடியும் தருவாயில் ஒரு முடிவுக்கு வந்தாள். மனதை ஒருநிலைப்படுத்தி இழுத்து மூச்சு விட்டுத் தன்னை அமைதிபடுத்திய நிலா கண்களை அழுத்தித் துடைத்தாள். இனிமேல் தன் காதலை மறந்து, தான் எதற்காக இங்கு வந்தேனோ அந்தக் காரியத்தில் மட்டுமே மனதைச் செலுத்துவேன் என்ற உறுதியை மனதில் அழுத்திப் பதிய வைத்துக் கொண்டு கண்களோடு சேர்ந்து மனதின் கதவையும் இறுக்கி மூடினாள். பாவம் அந்த அப்பாவி பெண்ணிற்கு அப்போது தெரியவில்லை அவள் உறுதி எல்லாம் துருவ்வை பார்த்த அடுத்த நிமிடமே உருகிப் போகுமென்று.

 

காலையில் தன் அறையை விட்டு வெளியே வந்த நிலாவின் முகம் இரவெல்லாம் அழுததால் சிவந்து வீங்கி இருக்க. யாழினி அவளுக்காவே ஹாலில் காத்திருந்தவள் ”சூடான காபியை நிலா கையில் கொடுத்து, “பாத்ரூம்ல ஹீட்டர் போட்டு வச்சிருக்கேன். காபிய குடிச்சிட்டு சீக்கிரம் போய்க் குளிச்சிட்டு வா சாப்பிடலாம். எனக்கு ரொம்ப பசிக்குது” என்றவள் டவலை அவள் தோளில் போட்டு விட்டுப் போக, நிலா எதுவும் பேசாமல் குளிக்கச் சென்றாள். யாழினி கண்களில் தவிப்போடு தோழியைப் பார்த்தவள் ‘இனி என்னென்ன நடக்கப் போகுதோ? எது நடந்தாலும் அது என்னோட நிலாக்கு நல்லதா மட்டும் தான் இருக்கணும் கடவுளே’ என்று வேண்டியபடியே அங்கிருந்து சென்றாள்.

 

யாழினிக்கு நிலா சொல்லாமலே அவள் என்ன முடிவெடுத்திருப்பாள் என்று நன்கு தெரியும். அதோடு அவளுக்கு நிலாவினால் துருவ்வை மறக்க முடியாதென்றும் நன்றாகத் தெரியும். அவன் எங்கிருக்கிறான் என்று தெரியாத போதே அவன் நினைவுகளை மனதில் பூட்டி வைத்துப் பொக்கிஷமாகப் பாதுகாத்தவள். இனி அவன் அருகாமையிலேயே இருந்து கொண்டு எப்படிச் சமாளிக்கப் போகிறாள் என்பது தான் யாழினியின் பெரும் கவலையாக இருந்தது. “சரி எதுவும் வேணாம். வாடி இங்கயிருந்து போய்டலாம்னு கூப்ட்டா வந்த காரியம் முடியாம கண்டிப்பா அவ இந்த இடம் விட்டு நகரமாட்டா. அவ நெனச்சது சரியா இருந்தாலும் ப்ராப்ளம் தான், இல்லாட்டியும் ப்ராப்ளம் இவளுக்குத் தான். என்ன செய்றதுன்னு ஒன்னும் புரியலயே? நிலா அம்மாகிட்ட இவ எதுக்காக இங்க வந்திருக்கான்னு சொன்னா… வேற வினையே வேணாம். எதுக்கு இந்த வேலைன்னு நிலாவையும், நீ என்னடி இவளுக்குக் கூட்டான்னு என்னையும் சேர்த்துப் பேய் ஓட்டிடுவாங்க. இவ கூடச் சேர்ந்த பாவத்துக்கு நானும் செருப்படி நாலு வாங்க வேண்டி இருக்கும். சோ?! அம்மாகிட்ட சொல்ல முடியாது. இவளையும் கன்வைன்ஸ் பண்ண முடியல. அய்யோ கடவுளே! இப்ப நா என்ன செய்றது? மண்ட காயுதே. ஊர்ல பத்து பதினஞ்சு ப்ரண்ட்ஸ் வெச்சிருக்கிற வானெல்லாம் சந்தோஷமா இருக்கான். ஒரே ஒரு ப்ரண்ட வெச்சிட்டு நான் படுற அவஸ்த்தை இருக்கே அய்யய்யோ”! என்று சந்தானம் ஸ்டைலில் புலம்பியவள் நிலா வருவதைப் பார்த்து விட்டு அவளுக்குத் தட்டில் டிஃபனை எடுத்து வைத்துவிட்டு தனக்கும் வைத்துக் கொண்டு அமர்ந்தாள். யாழினியும் எதுவும் கேட்கவில்லை. நிலாவும் எதுவும் பேசவில்லை. இருவருக்கும் சொல்லாமலே அடுத்தவர் மனது புரிய அமைதியாக உண்டு விட்டு வேலைக்குக் கிளம்பினர் நிலாவுக்காக அங்கு காத்திருக்கும் அதிர்ச்சியைப் பற்றி அறியாது.

 

காலையில் இருந்து ‘நா ரொம்ப தைரியமான ஆளு’ என்று மார்தட்டிய நிலாவின் மனது ஆஃபீஸ் வாசலை மிதித்தவுடன் ‘ம்யாவ் ம்யாவ்’ என்று பம்மியது. பயத்தில் யாழினியின் கையைக் கெட்டியாக அவள் பிடித்துக் கொள்ள, “ம்க்கும் இதுக்கே இப்டியா? இது ஜஸ்ட் ட்ரைய்லர் தான்டி கண்ணு. மெயின்‌ பிக்சர் இனி தான்டி மகளே இருக்கு உனக்கு. இன்னும் எவ்வளவு பாக்க வேண்டி இருக்கு. இதுக்கே பயந்துட்டா எப்டிடி கொழந்த? பேசாம வாடிம்மா” என்று நிலாவை இழுத்துச் சென்றாள் யாழினி.

 

டார்கெட் முடிக்காத டிரெய்னி டீம் லீடரை பார்த்து பம்முவது போல் மறைந்து பதுங்கிப் பதுங்கி தன் கேபினுக்குள் ஓடிய நிலா லாப்டாப்பை திறந்து, அவசரமாகத் தன் தலையை அதில் மறைத்துக்கொள்ள, யாழினி “தத்…த்தூ” என்று காரித்துப்பி விட்டு, “இதெல்லாம் ஒரு பொழப்பு” என்று தலையில் அடித்துக் கொண்டு “எப்டியோ ஒழிஞ்சு போ” என்று விட்டு அவளது கேபினுக்கு சென்றாள்.

 

ஏதோ முக்கியமான வேலை பார்த்துக் கொண்டிருந்த (தவறு, திருத்திக் கொள்கிறேன்) வேலை பார்ப்பது போல் நடித்துக் கொண்டிருந்த நிலாவிடம், ஆஃபிஸ் பியூன் எம்.டி அவளை அழைத்தாகச் சொல்ல நிலாவின் முட்டைக் கண்கள் பிதுங்கி இமைகளைத் தாண்டி வெளியே நீட்டிக்கொண்டு நிற்க இதயம் தாறுமாறாக அடித்துக் கொண்டது.

 

“என்….?!”

 

“என்னையா கூப்டாரு”? என்று அவள் எச்சிலை விழுங்கியபடி கேட்க? “ம்ம்ம் இல்ல வானத்துல இருக்க நிலாவைக் கூப்டாரு. அட ஏம்மா நீ வேற? நீதான இந்த ஆஃபீஸ்ல இருக்க ஒரே நிலா. உன்ன தான் கூப்டாரு. பாத்துமா மனுஷன் செம்ம கடுப்புல இருக்காரு போல. நா இப்ப தா வாங்கிக் கட்டிக்கிட்டு வரேன். நீ கொஞ்சம் சூதானமா பாத்து பேசுமா. உன் மேலயும் விழுந்து வல்லுன்னு புடுங்கப் போறாரு” என்று ஆஃபீஸ் பியூன் அட்வைஸை அள்ளித் தெளித்துவிட்டு செல்ல.

 

‘ம்ம்ம் ம்ம்ம் பாப்போம் பாப்போம். அந்தத் துருப்புடிச்ச தகர டப்பா செஞ்ச வேலைக்கு நா தான் அது மேல விழுந்து நெம்மிய புடிச்சு புடுங்கணும். ஏன்டா என்னை ஏமாத்தி விட்டுட்டு போனன்னு‌? அது என்னைக் கடிச்சு வைக்குதா? இல்ல நா அத கடிக்கிறேனான்னு பொறுத்திருந்து பாருங்க’ என்று மைண்ட் வாய்ஸ் போட்டவள் இல்லாத தைரியத்தை வரவைத்துக் கொண்டு துருவ் அறைக்குச் சென்றாள்.

 

துருவ்வுக்காகப் பார்த்துப் பார்த்து இன்டீரியர் டெக்கரேஷன் செய்யப்பட்டிருந்தது அந்த அறை. இதுவரை நிலா அந்த அறைக்குள் சென்றதில்லை. தயக்கத்தோடு அறைக்குள் நுழைந்த நிலாவின் முகத்தில் சில்லென வந்து மோதியது ஏசிக் காற்று. பயத்தில் நடுங்கும் உடலை ஏசிக்காற்றில் தான் நடுங்குகிறது என்று தன் மனதை ஏமாற்றி நம்ப வைத்தாள் நிலா. சேரில் முதுகுப் பக்கமாக அமர்ந்து ஃபோனில் பேசிக் கொண்டிருந்தவனைப் பார்வையால் உருட்டி உருட்டிப் பார்த்தவள், “மே ஐ கம் இன் சார்” என்று ஹஸ்கி வாய்சில் கேட்கக் கம்பீரமாக “எஸ்” என்ற ஒற்றை வார்த்தை மட்டும் பதிலாக வந்தது. நிலா முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் குழந்தை போல் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டே அவளது கால்கள் அவன் சேர் அருகில் செல்ல அவள் மனமோ அவனை அருகில் பார்க்கும் ஆவலில் அவனை நெருங்கியது.

 

பின் பக்கம் திரும்பியபடியே பேசிக் கொண்டிருந்தவன் ஃபோன் பேசி முடித்து ஒருகாலை தரையில் ஊன்றி அந்தச் சுழல் நாற்காலியை ஸ்டைலாகத் திருப்ப, நேருக்கு நேர் நிலாவின் கண்களில் மோதி நின்றது அவனது பார்வை. இரண்டு வருடத்திற்கு முன் எந்தக் காந்த பார்வையில் தன் மனதைத் தொலைத்தாளோ அதே பார்வை. உயிரை உருகி விழி வழியே ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி ஆளைக் கொல்லும் அவன் ஆழப் பார்வை. எப்போதும் போல் இப்போதும் தன் வேலையைச் செம்மையாக செய்ய, நிலாவின் மன உறுதி கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் கண்டு கொண்டிருந்தது. விழி இமைக்காமல் அவன் விழிகளையே பார்த்துக் கொண்டிருந்தவள் “மிஸ். முகில்நிலா” என்று துருவ் போட்ட சத்தத்தில் நிகழ்வுலகிற்கு வந்தாள்.

 

“ஹலோ மிஸ்.முகில்நிலா” என்று அவள் முகத்திற்கு முன் சொடுக்கியவன் “என்ன? நின்னுக்கிட்டே தூங்குறீங்களா? உங்களுக்குத் தூக்கம் வந்தா வேலையை ரிசைன் பண்ணிட்டு வீட்டுக்குப் போய் தூங்குங்க. இங்க வந்து ஏன் என் உயிரை வாங்குறீங்க? இது ஆஃபிஸ் உங்க வீடில்ல. வேலை கிடைக்கிற வரை அலைய வேண்டியது. வேலை கிடைச்சுட்டா அதுல ஒரு டெடிகேஷன் இருக்கிறதில்ல” என்று அவன் உச்ச ஸ்ருதியில் கர்ஜிக்க நிலா ஒரு நிமிடம் வெலவெலத்துப் போனாள். ‘உன் குரல் கேட்டால் கண்ணன் குழல் ஓசை நினைவு வரும்’ என்று அவள் என்றோ அவன் குரலை வர்ணித்தது இன்று பொய்யோ என்று நினைக்கும் அளவு கடுமையாக இருந்தது அவன் குரல். அந்தக் குரலில் சற்று அவள் கலங்கினாலும் அடுத்த நிமிடம் தன்னைத் தேற்றிக் கொண்டு இவ்வளவு நேரம் தன்னை மறந்து அவனை ரசித்தக் கண்களைப் பழித்தாள்.

 

”வேலைய விட்டுட்டு வீட்டுக்குப் போய்த் தூங்குறதுக்கு நா ஒன்னும் வெத்து வேட்டு இல்ல எம்.டி சார். நா இங்க ஒரு பொறுப்பான பதவில இருக்கேன். அதுக்குச் சம்பளமும் வாங்குறேன். என்னோட தொழிலுக்கு நா எப்பவும் நேர்மையா தான் இருக்கேன். இனியும் இருப்பேன். சோ? உங்க வேலை எதுவும் பாதிக்காது” என்று அவளும் காட்டமாகப் பதில் சொல்ல அவளை அலட்சியமாகப் பார்த்த துருவ் “இஸ் இட்! நீங்க அவ்ளோ நேர்மையான ஆளா”? என்று அவளைக் கிண்டலடிப்பது போல் சொன்னவன் “ம்ம்ம் மாமா கூடச் சொன்னாரு, நிலா ரொம்பத் திறமைசாலி, ஒர்க்ல ரொம்ப டெடிகேட்டட்னு. அதையும் தா பாத்துடுவோமே” என்று தன் ரெண்டு நாள் தாடியை தடவியபடி புருவம் உயர்த்தி அவளைப் பார்த்தவன் ஒரு வெள்ளைக் கவரை அவள் கையில் கொடுத்தான்.

 

நிலா குழப்பாக அவனைப் பார்த்தவள் “என்ன சார் இது”? என்று கேட்க,

”பொறுமையா பிரிச்சு… படிச்சு…” என்று வார்த்தைக்கு வார்த்தை ஒரு பொடி வைத்து பேசியவன் “படிச்சு பாருங்க மிஸ்.முகில்நிலா” என்க நிலா கவரையும் அவனையும் மாற்றி மாற்றிப் பார்த்தபடியே நின்றாள்.

 

“என்ன இது? சீக்கிரம் பிரிச்சு பாருங்க மிஸ்.முகில்நிலா. அப்பத்தான் தெரியும் நீங்க ஒர்க்ல மட்டும் தான் சின்ஸியராஆஆஆ? இல்லை வேற ஏதாவது” என்று ஒரு மாதிரி குரலில் சொல்ல நிலாவுக்குப் பகீர் என்றது. ‘அய்யோ கடவுளே! நான் எதுக்காக இந்த ஆஃபிஸ்க்கு வேலைக்கு வந்தேன்னு ஒரு வேளை இவனுக்குத் தெரிஞ்சிருக்குமோ? அதுக்காக நம்மள வேலைய விட்டு தூக்கப் போறானோ? இல்லயே என்னையும், யாழியையும் தவிர நாங்க இங்க வந்த காரணம் வேற யாருக்கும் தெரிய வாய்ப்பே இல்லயே’ என்று குழம்பித் தவித்தவள் மெதுவாக அந்தக் கவரைப் பிரித்து, அதில் இருந்த பேப்பரை வெளியே எடுத்துப் படிக்க ஆரம்பிக்க அந்தப் பேப்பரில் இருந்ததைப் படித்தவளுக்கு உலகம் இருண்டு கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. “நோ…நோ.. இதெல்லாம் என்னால ஒத்துக்க முடியாது. என்னால முடியவே முடியாது” என்று வாய்விட்டே கத்திவிட்டாள் நிலா.

 

“என்ன மிஸ்.முகில்நிலா இப்ப தான் நா வேலையில் ரொம்ப சின்சியர், என்னோட வேலையில கரெக்டா இருப்பேன்னு சொன்னீங்க? இப்ப இப்டி மாத்திப் பேசுறீங்க”? என்றவனை முறைத்த நிலா “ஆமா நா சொன்னேன் தான். நா என்னோட வேலையில சின்சியர் தான். ஆனா, அதுக்கும் நா உங்களுக்கு பெர்சனல் செக்ரட்ரியா வரதுக்கும் என்ன சம்பந்தம்? நா இந்தக் கன்ஸ்டிரக்ஷன்ல ஒரு ஆர்க்கிடெக்ட். நா எதுக்கு உங்களுக்கு பெர்சனல் செக்ரட்ரியா இருக்கணும்… இல்ல இது என்னன்னு எனக்குப் புரியல”? என்று கோபமாகவே கேட்டாள்.

 

துருவ் தன் சேரில் இருந்து எழுந்து நிலா அருகில் சென்றவன். அவள் காதருகில் குனிந்து “த ஆன்சர் இஸ் வெரி சிம்பிள் மிஸ்‌.முகில். நீ எப்பவும் என் கூடவே இருக்கணும் அதுக்குத் தான்” என்று சொல்ல ஏற்கனவே அவன் அருகில் வந்ததில் அவன் மூச்சுக்காற்று அவள் கன்னத்தில் உரச அவன் தாடியின் குட்டி குட்டி மூடிகள் அவள் கழுத்தில் கிச்சு கிச்சு மூட்டத் தடுமாறிப் போனவள், அவன் சொன்ன வார்த்தையில் விழிபிதுங்கி மறு வார்த்தை பேச முடியாமல் தன் தாய்மொழியாம் தமிழை மறந்து நின்றாள்.

 

‘ஏன்டி நிலா? நீதான் காதலை? மறந்து துருவ்வை மறந்து? உன்னோட லட்சியத்தை அடையப்போகும் சிங்கப்பொண்ணுனு நான் நெனச்சா, நீ அவன் முடி ஒரசுனதுக்கே உருகிட்டியேடி’ என்று அவள் மனசாட்சி மண்டையில் அடித்துக்கொண்டது.

 

” காதல்ல இதெல்லாம் சகஜமப்பா…”

 

 

Leave a Reply

error: Content is protected !!