உன் காதல் என் தேடல்

உன் காதல் என் தேடல்

தேடல் – 7

 

“என்ன மிஸ்.முகில்நிலா இப்படித் தலையில கை வச்சிட்டு உக்காந்திருக்கீங்க? தலையில எதும் வலியா? இல்ல வேற ஏதும் பிரச்சனையா”? என்று துருவ் வேண்டுமென்றே அவளை வம்பிழுக்க, நிலா நிமிர்ந்து பார்த்து அவனை முறைத்தவள், ‘தலைவலி இல்லடா, தலைவிதி. உன்னை என்னைக்குப் பாத்தேனோ அன்னையில இருந்து பிரச்சனை எனக்குப் பக்கத்துலயே பாய் போட்டு படுத்துடுச்சு. ஏற்கனவே நடந்ததையே இன்னும் மறக்க முடியாம தவிச்சுக் கெடக்கேன். இதுல புதுசு புதுசா, டிசைன் டிசைன்னா பிரச்சனை தரியேடா. மீ பாவம்டா’ என்று உள்ளுக்குள் புலம்பினாலும் வெளியில் கெத்தை விடாது துருவ்வை முறைத்தபடி எழுந்து நின்றவள்.

 

“என்ன பாஸ் இது? நான் உங்களுக்கு பி.ஏவா இருக்கணும்னு சொன்னீங்க. ப்ராஜெக்ட்காக நானும் சரின்னு ஒத்துக்கிட்டேன். இப்ப வந்து இனி உங்க ரூம்ல தான் நானும் இருக்கணும். இனி உன்னோட கேபின் என் ரூம் தான்னு சொன்னா என்ன அர்த்தம்? என்ன நெனச்சிட்டு இருக்கீங்க? இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன் ஆமா…”

 

“ஹலோ மேடம், இது பெரிய ப்ராஜெக்ட். என்னோட முதல் ப்ராஜெக்ட். நம்ம நெறயா டிஸ்கஸ் பண்ண வேண்டி இருக்கும். அதுக்குத் தான் இந்த ஏற்பாடு. எனக்கு டிசைன்ல டவுட் வரும் போதெல்லாம் சும்மா சும்மா உன்னை இன்டர்காம்ல கூப்ட்டு, டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க முடியாது. அதான் இப்படிச் செஞ்சேன்.”

 

“உங்களுக்கு இது சரியா இருக்கலாம். ஆனா, எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது, சரிப்பட்டே வராது” என்று கத்திய நிலாவை இப்போது முறைப்பது துருவ் முறையானது.

 

“ஏய்! என்ன தான்டி உன் பிரச்சனை? நா எது சொன்னாலும் அதுக்கு குதர்க்கமா எதாவது சொல்லனும்னே உன்னோட மூளை யோசிக்குமா? நா என்னமோ உன்ன என் மடியில உக்கார சொன்ன மாதிரி ரொம்பத் தான் சிலுப்பிக்கிற? இவ்ளோ பெரிய ரூம்ல அந்தப் பக்கம் நீ வேலை பாக்கப்போற. இந்தப் பக்கம் நா வேலை பாக்கப் போறேன். இதுல உனக்கென்னடி பிரச்சனை? அதுவும் இதெல்லாம் ஒன்னு புதுசு இல்லையே? இந்தக் கம்பெனியோட சேர்பெர்சன்ஸ், ஜி.எம் இவங்க எல்லாரோட பி.ஏ கேபினும் அவங்க ஆஃபிஸ் ரூம்க்குள்ள தான் இருக்குன்னு உனக்குத் தெரியாதா? என்னமோ காணாதத கண்ட மாதிரி குதிக்கிற” என்று எரிச்சல்பட்ட.

 

‘ம்ம்க்கும் அந்தப் பி.ஏ எல்லாம் என்ன என்னை மாதிரி அவங்க பாஸ்ஸை ஃப்ளாஷபேக்ல லவ்வா பண்ணாங்க? நா தான் கூறு கெட்டதனமா உன்னை லவ் பண்ணிட்டேன். ஏற்கனவே உன்னை மறக்க இங்க நான் பகீரதன் கங்கையைப் பூமிக்கு கொண்டுவர பிரயத்தனம் பண்ண மாதிரி போராடிட்டு இருக்கேன். இதுல நாள் முழுக்க உன் பக்கத்துலயே உக்காந்துட்டு உன் மொகரக்கட்டையையே பாத்துட்டு இருந்தா வெளங்கிடும் தான்… என்னோட பிஞ்சு நெஞ்சு பொக்குன்னு போய்டும்டா. புரிஞ்சுக்க” என்று மனதிற்குள் கதறியவள் “இங்க பாருங்க பாஸ், மத்த பி.ஏ எப்டியோ அதெல்லாம் எனக்குத் தேவை இல்லை. என்னால இந்த ரூம்ல இருக்க முடியாது. உங்களுக்கு வேணும்னா வேற யாரயாது பி.ஏவா வேலைக்கு வச்சுக்கோங்க” என்று உறுதியாகச் சொல்ல.

 

துருவ் அலட்சியமாக அவளைப் பார்த்தவன் நேற்று அவள் கையெழுத்துப் போட்டுத் தந்த பேப்பரை அவள் முன் நீட்டி, “நேத்து தான் நீங்க இதைப் படிக்கல.! மேடம்க்கு டைம் இருந்தால் இப்ப கொஞ்சம் நிறுத்தி நிதானமா ஒரு வரி விடாம படிச்சிட்டு, அப்றம் பேசுங்க” என்க நிலா பட்டென அவன் கையில் இருந்த பேப்பரை பிடுங்கி படிக்கத் தொடங்கியவள் கண்கள், நெருப்புக் கோழி போட்ட முட்டை அளவுக்குப் பெரிதாக விரிந்தது.

 

‘அடப்பாவி! என்னென்ன எழுதி இருக்கடா? நன்னாரிப்பயலே கோவத்துல அவசரப்பட்டுக் கையெழுத்துப் போட்டு இப்படி சிக்கிட்டியே நிலா’ என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

 

“என்ன மேடம் ஃபுல்லா படிச்சுட்டீங்ளா? இந்த ப்ராஜெக்ட் முடியுற வரை எக்காரணம் கொண்டும் நீங்க என்னோட பர்மிஷன் இல்லாம லீவ் எடுக்கவோ, வேலையை ரிசைன் பண்ணவோ முடியாது. ஆஃபிஸ் அவர் முழுக்க நீங்க எப்பவும் என் கூடத் தான் இருக்கணும். ப்ராஜெக்ட் நடக்கும் போது, ஏதாவது எமர்ஜென்சி தேவை இருந்து, நா எந்த நேரம் ஃபோன் பண்ணாலும் நீங்க ஃபோனை எடுக்கணும். வந்து வேலையை முடிக்கணும். தென் லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட், இந்த ப்ராஜெக்ட்காக நா வெளியூரோ இல்ல வெளிநாட்டுக்கோ போக வேண்டி வந்தால் கட்டாயம் நீங்க என் கூட வந்தே ஆகணும்” என்று தோள்களைக் குலுக்கி சாதாரணமாகச் சொல்ல நிலாக்கு அந்தக் கடைசிக் கண்டிஷனைப் படிக்கும் போது இருந்த பயம் இப்போது அதைத் துருவ் சொன்ன மாடுலேஷனைக் கேட்டபோது பல மடங்காகப் பெருகியது. ” இது என்ன பாஸ் ஒலகத்துல இல்லாத புது கண்டிஷனா இருக்கு?… ப்ராஜெக்ட் இங்க நடக்கும்போது, நா ஏன் உங்க கூட வெளியூர், வெளிநாட்டுக்கெல்லாம் வரணும். அப்டி எந்த அவசியமும் இல்லயே” என்று நிலா கேட்க… துருவ் அலட்சியமாக அவளை பார்த்தவன். நீ சொல்றதெல்லாம் சரிதான்டா கண்ணு, ஆனா, இதெல்லாம் நீ அக்ரிமென்டில் சைன் பண்றதுக்கு முன்னாடி இல்ல யோச்சி இருக்கணும். நவ் இட்ஸ் டூ லேட் டா கண்ணு” என்று கண்ணடிக்க, நிலா புசு, புசுவென்று மூச்செடுத்தவள்… சட்டென தன் கையில் இருந்த பேப்பரை சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டுவிட்டு தெனாவட்டாக துருவ்வைப் பார்த்து “இப்ப என்ன செய்வ?” என்று இடுப்பில் கைவைத்து ஆட்டியபடி புருவம் உயர்த்தி திமிராகக் கேட்ட. 

 

துருவ் நமுட்டு சிரிப்போடு அவளை பார்த்தவன். ஒரு கட்டு பேப்பரை அவள் கையில் கொடுத்து “நீ கிழிச்சது டுப்ளிகேட் காபி தான். இதுல அதுமாதிரி இன்னும் நூறு காபி இருக்கு. பொறுமையா அப்டிக்க போய் ஒரு ஓரமா உக்கார்ந்து எல்லாத்தையும் கிழிச்சு போட்டுட்டு என் கூடவே வா” என்றபோது நிலாவுக்கு “அய்யோ”! என்றிருந்தது. ‘வேற வழியே இல்ல, சாத்தானுக்கு வாக்கப்பட்டா சூன்யம் வச்சு ஆகணும். நா இந்த வேலைய விட்டுப் போக முடியாது. சோ, இந்த பேயோட, பிசாசா ஜாயின்ட் அடிச்சி சுடுகாட்ட சுத்தத் தான் வேணும்’ என்று தன் இயலாமையைப் பெரு மூச்சாக வெளியிட்டவள் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

 

“என்ன மேடம்? எங்க போறீங்க”? என்ற துருவ் கேள்விக்கு எரிச்சலோடு திரும்பி பார்த்தவள், “இருங்க பாஸ்சுசுசு, இனி நா உங்க ரூம்ல தான் இருக்கணும்னு ஆகிடுச்சு. போய் என்னோட பழைய கேபின்ல இருக்க திங்ஸ்சை எடுத்திட்டு, நம்ம சிவாஜி சார் படையப்பா படத்துல கடைசியா தூணைக் கட்டிப்புடிச்சு அழுத மாதிரி நானும் என் கேபின் சேர்ல உக்காந்துட்டு, நாலு சொட்டுத் தண்ணீர் ச்சே கண்ணீர் விட்டுட்டு வந்திடுறேன்”

 

“ம்ம்ம் பாத்துக்கோங்க மிஸ்.ஸ்கைமூன் அந்த சீன் கடைசியில சிவாஜி சார் செத்திடுவாரு” என்று நக்கலாகச் சொல்ல.

 

‘அவ்ளோ எல்லாம் சந்தோஷப்படாதடா மகனே. உனக்கு சங்கு ஊதாம நா போகமாட்டேன். அப்படியே போனாலும் எமன் கிட்ட கெஞ்சிக் கெதறி ஒன் பிளஸ் ஒன் ஆஃபர் போட்டு உன்னையும் மேல தூக்கிடுவேன்’.

 

துருவ், “என்ன ஸ்கைமூன் எதுவும் மைண்ட் வாய்சா?”

 

“ச்ச ச்ச! அப்படி எல்லாம் ஒன்னு இல்லிங்க பாஸ். நீங்க திடீர்னு ஸ்கைமூன்னு கூப்டிங்க இல்ல. அதுல உங்க ஆங்கில அறிவை நெனச்சு நா அப்படியே ஷாக் ஆகிட்டேன்” என்று ஆச்சர்யப்படுவது போல் பொய்யாக நடித்தவள் வெளியே செல்ல.

 

“உனக்குத் திமிர் இன்னும் அடங்கலடி. இப்ப தான உன்னை என்னோட ரூம்க்கு வர வச்சிருக்கேன். இனி பாரு என்னோட வேலைய? சும்மாவா உன் கிட்ட இப்படி ஒரு கையெழுத்து வாங்கி வைச்சேன். இனிதான்டி இருக்கு அசல் வேடிக்கையே” என்றவன் அந்தப் பேப்பரைப் பார்த்துக் கோணலாகச் சிரிக்க, காலமோ இனிமேல் இவர்கள் இருவரும் படப்போகும் அவஸ்தை, கஷ்டம், கண்ணீரை நினைத்துச் சிரித்தது.

 

தன் கேபினுக்குச் சென்ற நிலா தன் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டே யாழினியிடம் உள்ளே நடந்ததைச் சொல்லி துருவ்வைக் கரித்துக் கொட்ட, யாழினி ஏதோ சொல்ல வாயெடுக்க நிலா கையைக் காட்டி “ஸ்டாப்” என்றவள், “இன்னைக்கு நைட் டின்னர்க்கு இட்லியா? தோசையான்னு? தானே கேக்கப்போற? இட்லியே போதும். அதையும் நானே செஞ்சு தொலைக்கிறேன் போதுமா? இல்ல சட்னி, சாம்பார் எதைப் பத்தியும் கேக்கணுமா”?

 

“சமத்துஉஉஉ.. இதுதான்டி நட்பின் சிறப்பு. நா சொல்லாமலே என் மனச கேட்ச் பண்ணிட்ட பாரு. குட், கீப் இட் அப்” என்று நிலா கன்னத்தில் தட்டிவிட்டு யாழினி நகர நிலா தன் புது கேபின்னுக்குள் (புதுப் பிரச்சனைக்குள்) அடியெடுத்து வைத்தாள்.

 

ஈவினிங் துருவ் ஃபோன் பேசிக்கொண்டே வெளியே வந்தவன் தெரியாமல் யாழினி மீது மோதிவிட “ஏய் யாழினி! சாரிமா… நா கவனிக்கல” என்றவன் கீழே அவள் சிதற விட்ட ஃபைல்களை எடுத்து அவள் கையில் கொடுக்க “இட்ஸ் ஓகே சார். நோ ப்ராப்ளம், தப்பு என்னுதுதான்” என்று அவள் நகர்ந்து போக.

 

“ஏய் யாழினி? என்ன ஏதோ தெரியாத ஆளப் பார்த்த மாதிரி கண்டுக்காம போற”? என்ற துருவ் வார்த்தையில் திரும்பிய யாழினி “ஏன் சார் தெரியாம நீங்க தான் இந்தக் கம்பெனி எம்.டின்னு எனக்கு நல்லா தெரியும். அதான் நீங்க இடிச்சதுக்கு, சாரியை நா கேட்டுட்டு பொறுமையாப் போறேன்.”

 

“நா உனக்குப் பாஸ் மட்டும் இல்ல யாழி. நம்ம ஒரே காலேஜில் தான் படிச்சோம். வீ ஆர் ப்ரண்ட்ஸ். அத மறந்துட்ட போல?”

 

“நா எதையும் மறக்கல பாஸ். இது ஆஃபிஸ் இங்க எதுவும் பேச வேண்டாம்னு பாக்குறேன்.”

 

“இட்ஸ் ஓகே யாழி. நீ என்னோட ப்ரண்ட். இன்ஃபேக்ட் நீ எனக்குச் சிஸ்டர் மாதிரி. சோ! நீ என்னை எம்.டியா பார்க்கனும்னு எந்த அவசியமும் இல்ல” என்று அவனுக்கு அவனே ஆப்பை வைத்துக் கொண்டான்.

 

அடுத்தப் பத்து நிமிடத்தில் துருவ் காதில் ரத்தம் வராத குறை தான். வாஷிங் மெஷின் துணியை ஒரு சொட்டு தண்ணி இல்லாமல் சக்கையாகப் பிழிவது போல் துருவ்வை பிழி பிழியென்று பிழிந்து விட்டாள் யாழினி. பின்ன இருக்காத ரெண்டு வருஷமா அவனைப் பிரிந்து நிலா பட்ட வேதனைகளை அருகில் இருந்து பார்த்தவள் ஆயிற்றே. அந்த மொத்தக் கோபத்தோடு, இப்போதும் அவனைப் படுத்தியெடுக்கும் காண்டையும் மொத்தமாய் துருவ் காதில் இறக்கி விட்டாள் யாழினி.

 

துருவ் தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டவன் “அம்மா தாயே! போதும்மா போதும். ஒரு வார்த்தைக்கு தங்கச்சின்னு சொன்னதுக்கு, இப்படி நார் நாரா என்னைக் கிழிச்சு தொங்கவிடுறியேம்மா? இனிமே நீ ஆஃபிஸ்ல மட்டும் இல்ல வெளிய கூட என்னை உன்னோட எம்.டியாவே பாரு. அதுதான் என்னோட மரியாதைக்கு நல்லது?”

 

“ஐ அம் சாரி பாஸ். ஆபீஸ்ல மட்டும் தான் நீங்க எனக்கு எம்.டி. ஆபிஸ் டைம் தாண்டிட்டா நீங்க எனக்கு எம்ட்டி தான். வெளியே எங்கயாது நீங்க என் கண்ணுல பட்டீங்க, அப்ப இருக்கு சார் உங்களுக்கு மெயின் கச்சேரி.”

 

‘ஆஃபிஸ் டைம்க்கு அப்றம் நா உன் கண்ணுல பட்ட தானா’? என்று அவன் மனதில் நினைக்க, அதை கரெக்ட்டாக கேட்ச் செய்த யாழினி, “அப்படி எல்லாம் நெனைக்காதீங்க பாஸ். அப்படி ஒன்னு நடந்த? நா என் வேலையை ரிசைன் பண்ணிட்டு வந்து உங்களுக்குப் பூச போடுவேன். ஆக மொத்தம் உங்களுக்கு ஆப்பு கன்ஃபார்ம் பாஸ்” என்று மிகுந்த மரியாதையோடு சொன்னவள் அங்கிருந்து சென்றாள்.

 

“கர்மா இஸ் எ பூமராங்னு… சொல்றது உண்மைதான். நிலாவுக்கு நா ஆப்பு வச்ச! யாழினி எனக்கு ஆப்பு ஃபேக்டரியே வைச்சிருக்கா போல. கடவுளே என்னைக் காப்பாத்து”.

 

அடுத்து வந்த நாட்கள் துருவ் ஆட்டம் அதிகமானது. எவ்வளவு தூரம் நிலா அவனை விட்டு விலக நினைத்தாளோ அதற்கு இரு மடங்காக துருவ் அவளைத் தன்னை நெருங்க வைத்தான். துருவ்வுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் அனலில் இட்ட புழுவாகத் துடித்தாள் நிலா. யாழினி ஒருத்தி தான் நிலாவின் ஒரே ஆறுதல். நிலாவின் எந்த ஒரு பிரச்சனைக்கும் யாழினி ஒருத்தியிடம் மட்டும் தான் தீர்வு இருக்கும். ஆனால் இந்த விஷயத்தில் யாழினியால் கூட நிலாவிற்கு உதவ இயலவில்லை.

 

அன்று துருவ்வோடு நிலா ப்ராஜெக்ட் விஷயமாக வெளியே சென்றிருக்க யாழினி தன் வேலைகளை முடித்து லிஃப்ட்டில் கீழ் தளத்திற்கு வந்தவள் மீது யாரோ மோதிவிட, நிலாவின் நினைவாகவே இருந்த யாழினி அது யாரென்று கூட கவனிக்காது “சாரி” என்று விட்டு நகரப் போனாள்.

 

“ஏய்! நீ பாட்டுக்கு இடிச்சிட்டு பேருக்கு ஒரு சாரி சொல்லிட்டு எனக்கென்னன்னு போற?” என்று திமிராக வந்த குரலில் யாழினி ஒரு நிமிடம் நிலாவை மறந்தவள் திரும்பி அவனைப் பார்த்து “இடிச்சதுக்கு சாரி தான் சொல்லுவாங்க. பின்ன உன்னைக் காஞ்சிபுரம் கூட்டி போய் சில்க்சாரியா வாங்கித் தருவாங்க. அப்படி வாங்கி தரணும்னா சொல்லு. ஒரு நல்லா புடவையா வாங்கித் தரேன், கட்டிக்கோ.”

 

“ஏய் என்னடி திமிரா?”

 

“ஆமா டா திமிர் தான். இப்ப என்னங்குற? ஏன்டா குருட்டு முண்டம் கண்ணு தெரியாம வந்து என்னை இடிச்சதில்லாம என்னையே திட்டுறியா நீ? மூஞ்சப்பாரு, தெரியாத கண்ணுக்கு அலங்காரமா ஒரு கூலர்ஸ் வேற, நல்லா குருட்டுப் பிச்சக்காரன் மாதிரி. உன் நல்லநேரம், நா வேற மூட்ல இருக்கதுனால உன்ன இத்தோட விட்றேன். மரியாதையா தப்பிச்சு ஓடிடு. இல்ல மகனே மண்டைய பொலந்து கபால மோட்சம் தந்துடுவேன் பாத்துக்க”.

 

“ஏய்! நா யார்னு தெரியாம நீ பேசிட்டு இருக்க? நா யார்னு தெரியுமாடி உனக்கு?”

 

“ஏன் டா தெரியாம? நீ இந்தக் கம்பெனியோட ஒன் ஆஃப் த சேர்பர்சன்ஸ் தானா? உன் பேர் கூட…? ஆஆ! கார்த்திக், கரெக்ட்டா”? என்றவளை கார்த்திக் வியப்பாகப் பார்க்க அவளோ கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல், “என் பேரு யாழினி உன்னோட கன்ஸ்ட்ரக்ஷன்ல தான் ஆர்க்கிடெக்டா ஒர்க் பண்றேன். உன்னால முடிச்சதை நாளைக்குக் கிழிச்சுக்கோ. ஏன்னா எனக்கு இப்ப டைம் இல்ல. வேற முக்கியமான வேலை இருக்கு” என்றவள் கார்த்திக்கை துளி கூட லட்சியம் செய்யாமல் மிடுக்காக அங்கிருந்து செல்ல கார்த்திக் போகும் அவளையே ஒரு மிரட்சியோடு இமைக்காமல் பார்த்திருந்தான்.

 

வீட்டிற்கு வந்த கார்த்திக், துருவ்விடம் யாழினி பற்றிச் சொல்ல துருவ் விழுந்து விழுந்து சிரித்தவன் “உனக்கு நல்லநேரம்டா. யாழி இன்னைக்கு நல்ல மூட்ல இருந்திருக்கா. இல்லன்னு வை உன்ன நல்லா வச்சு செஞ்சிருப்பா” என்ற துருவ் மீண்டும் சிரித்தான்.

 

“டேய்…! மரியாதையா சிரிக்கிறத நிறுத்து இல்ல தூக்கிப் போட்டு மிதிச்சுடுவேன். நானே கடுப்புல இருக்கேன். நீ வேற எரியிற ஃபயர்ல ஆயில்லை உத்திட்டு. அவ திமிர் பாத்தியாடா. நான் யாருன்னு நல்லா தெரிஞ்சும் கொஞ்சம் கூட பயமில்லாம என்னென்ன பேசிட்டா? இத்தினுன்டு இருந்துட்டு என்ன வாய்டா அவளுக்கு…”

 

“ஆமா ஆமா வேற விஷயத்தில் எப்படியோ பதிலுக்குப் பதில் வாய் பேசுறதுல ப்ரண்ட்ஸ் ரெண்டு பேரும் நல்லா ஒத்துப் போறாங்க. நல்லா ஜாடிக்கு ஏத்த மூடி மாதிரி”

 

“ஓஓஓ இவளுக்கு ப்ரண்டு ஒருத்தி வேற இருக்காளா, ப்ரண்டு.யார்ரா அது? உனக்குத் தெரியுமா?”

 

“ம்ம்ம் தெரியும். நம்ம ஆஃபிஸ்ல இருக்காளே ஆர்க்கிடெக்ட் முகில்நிலா அவதான்”

 

“ஏய்! நம்ம நிலா டார்லிங் ப்ரண்டா இவ”! என்று கார்த்திக் ஆச்சரியமாகக் கேட்க, நிலாவை கார்த்திக் டார்லிங் என்று சொல்லியது துருவ் நெஞ்சில் முள்ளாகத் தைக்க. “டேய் கார்த்திக்! நீ ஏன் முகிலை டார்லிங்னு கூப்புடுற? முன்னப்பின்ன தெரியாத பொண்ணை இப்படித் தான் கூப்டுவியா”? என்று கத்த.

 

“முன்னப்பின்ன தெரியாத பொண்ணைக் கூப்பிட்டா தான தப்பு எனக்குத் தான் நிலாவை நல்லா தெரியுமே துருவ்”.

 

“முகிலை உனக்குத் தெரியுமா? எப்டி? எப்டி அவள உனக்குத் தெரியும்?” என்ற துருவ்வின் பதற்றம் கார்த்திக்குக்குப் புதிதாக இருந்தது.

 

“டேய்! இப்ப நீ பண்ற ப்ராஜெக்ட்கான டிசைன் சப்மிட் பண்ண நானும், நிலாவும் தான் போயிருந்தோம். அப்ப தான் நிலாவை எனக்குத் தெரியும். அவளை ரெண்டு, மூனு தடவை மீட் பண்ணி இருக்கேன். ப்ராஜெக்ட் பத்திப் பேச ஒரு முறை வீட்டுக்குக் கூட வந்திருக்கா. நானும் அவளும் நல்ல ப்ரண்ட்ஸ். அம்மா, அத்தைக்குக் கூட அவளைத் தெரியும். ரொம்ப நல்ல பொண்ணுடா” என்ற பிறகு தான் துருவ்விற்குப் போன உயிர் திரும்பி வந்தது.

 

நாட்கள் அதன் போக்கில் நகர துருவ் ஒரு பக்கம் நிலாவை டிசைன் டிசைனாகச் சீண்டி விளையாட, கார்த்திக் யாழினியைக் கடுப்பாக்கி வேடிக்கைப் பார்க்க நினைத்து சில முயற்சி எடுக்க, யாழினியிடம் அது எதுவும் எடுபடாமல் போனது. கடைசியில் அவளைக் கடுப்பாக்க நினைத்தவன் அவள் அழகு முகத்திலும், அன்பான குணத்திலும் முழுதாகக் கவிழ்ந்து மொத்தமாக அவளிடம் விழுந்து விட்டான்.

 

இதற்கிடையில் நிலா எதற்காக, யாருக்காக, யாரைச் சந்திக்க இங்கு வந்தாளோ அந்த நபர் நிலா இருக்கும் இடம் தேடி வரவேண்டிய காலமும் வந்தது.

 

இனியாவது நிலாவின் கேள்விகளுக்குப் பதில் கிடைக்குமா? அவள் லட்சியம், காதல்… இரண்டில் எது வெற்றி பெறும் உண்மையான காதலா? இல்லை அதைவிட ஆத்மார்த்தமான நிலாவின் லட்சியமா? பதில் காலத்தின் கையில்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!