உள்ளத்தின் காதல் நீங்காதடி-4

காதல் – திருமண பந்தத்தில் இணைவது மட்டுமே காதல் என்றால், தோல்வியைத் தழுவும் காதல் எல்லாம் உண்மைக் காதல் இல்லையா என்ன? காதல் வெற்றியைத் தழுவினாலும் தோல்வியைத் தழுவினாலும் காதலர்களைச் சேர்ந்ததே தவிர காதலைச் சேர்ந்தது கிடையாது! 

காதல்-4

சரியாக ஏழு மணி நேர பயணத்திற்கு பின், மதுரை மாநகரை வந்தடைந்தான், உதய் சரண்.

மதுரையை வந்தடைந்தவனை அழைத்துச் செல்ல ஒரு காவல் அதிகாரி வந்திருந்தார். அவரோடு சென்றவன், தனக்கென ஒதுக்கப்பட்ட உயர்தர ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு, குளித்துவிட்டு கான்பிரன்ஸ் நடக்கும் இடத்தை நோக்கிச் சென்றான்.

***********

“அப்பா…”- மீரா

“அப்பாவே தான் டா மா, என் செல்லம் என்ன பண்றீங்க?”

தந்தையின் தோள் சாய்ந்து மனம்விட்டு பேசும் ஆசையை எல்லாம் மனதோடு அடக்கி கொண்டு, மீரா தனது  உரையாடலை எல்லாம்   வீடியோ கால் மூலமாக அமோகமாக நடத்திக்கொண்டு இருந்தாள்.

 இன்றைய நவீன காலகட்டத்தில் , நம்முடைய அனைத்து படைப்புகளுமே, ஏதோவொரு நல்ல விடயங்களுக்குப் பயன்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. எனினும் நல்லதிற்கு பயன்படுவதை விட நூறு மடங்காகத் தவரான விடயங்களுக்குப் பயன்படுத்தபடுவதுதான் வேதனையான விடயம்! 

ஒவ்வொரு வார ஞாயிற்றுக் கிழமையிலும் நடைபெறும் தந்தையோடான வீடியோ கால், இந்தக் குடும்பத்தின் மிக முக்கியமான அங்கமாக இருக்கிறது. ஏனெனில் மற்ற  நாட்களில் வேலை பளூவின் காரணமாக, அதிக நேர பேச இயலாது. சாதாரண நல விசாரிப்புகள், மற்றும் உணவு எடுத்துக் கொண்டீர்களா என்பதோடு முடித்துக் கொள்வார்கள்.

 

ஆனால், ஞாயிறு அப்படி அல்லவே! வாரம் முழுக்க நடந்த அத்தனை விடயங்களையும் பகிர்ந்து கொள்ளுதல், தாயைப் பற்றி மகள் கூறும் குற்றபத்திரிக்கையையும், மகளைப் பற்றித் தாய் கூறும் அவளது சேட்டைகளையும் கேட்டு அதற்குப் பஞ்சாயத்து  பண்ணுவதிலே பாதி நாள் ஓடிப் போய் விடும் குணசேகருக்கு! 

 

அவரும் அதை ரசிக்கவே செய்வார். அவருக்குமே அடுத்த ஆறு நாட்களும்  இதையே நினைத்து அந்த வாரத்தை ஓட்டிவிடுவார்.

“ம், இந்த அம்மா ஓடச் சண்டை போட்டுட்டு இருக்கேன்!”

“ஏன்டா செல்லம், இன்னைக்கு அம்மா என்ன பண்ணினாங்க?”

“ஏன் பண்ணல அப்படிங்கறதுதான் பிரச்சனை!”

“புரியலடா “

“நான் இன்னைக்கு சப்பாத்தி கேட்டேன் மார்னிங்!”

“சரி”

“அம்மா பூரி பண்ணியிருக்காங்க” என்று வராத கண்ணீரை துடைத்தாள்.

“அடியேய், உன்னை! என்ன போட்டுக் கொடுக்கிறயா?” -ராதா

“ஆமா, அப்படிதான்”

“ஏன் ராதா பாப்பா கேட்டத செய்து கொடுக்க வேண்டியதுதானே?”-குணசேகரன்

“நீங்கச் சும்மா இருங்க சொல்லிட்டேன்.எல்லாம் நீங்கக் கொடுக்கிற செல்லம்தான்!”

“ஏன்மா அவளுக்குப் பிடிச்சத செஞ்சு கொடுக்கத்தானே சொன்னேன்”

“அது இல்ல, இவளுக்குக் கொழுப்பு கூடி போச்சு. வாரத்துல ஆறு நாள் இவ சொல்லுற சமையல்தான் வீட்டுல பண்றேன். ஞாயிற்றுகிழமை ஒரு நாள்தான் மித்ரனுக்காகச் சமைக்கிறேன். அதுக்கும் மாட்டேங்குறா”

“நீ சமைமா வேணாங்கல.அவனுக்குப் பூரி, இவளுக்குச் சப்பாத்திய போட்டுக் கொடுத்திட வேண்டியதுதானே?”

“ம்க்கும், ஏன் சொல்ல மாட்டீங்க? இருக்குறது மூணு பேரு. இதுல அவனுக்கொன்னு, இவளுக்கொன்னு சமைக்கிறேன். அவன் விட்டு கொடுத்து போறான். இவளுக்கு மட்டும் ஏன், அது இல்ல?”

“சின்னப் பிள்ளைதானே”

“யாரு? உங்க மகளா? இருபத்தி மூணு முடிஞ்சு  இருபத்தி நாலு ஆரம்பிக்கப் போகுது. சின்னப் பிள்ளையாம்?”

“இப்போதான் அவ பிறந்த மாதிரி  இருக்கு!”

“நாளைக்கு போற வீட்டுல இருக்குறததான் திங்கனும், இல்லாட்டி பட்டினிதான் கடக்கணும். அப்போ தெரியும் என் அருமை இவளுக்கு!”

“அப்போ ஒன்னு பண்ணும்மா?”

“என்னடி பண்ணனும். என்னையும் உன் கூட வர சொல்றியா?”

“சே… சே… அது ஓல்டு ஐடியா”.

“அப்புறம்?”

“மாமியார் இல்லாத வீடா பாத்துரு, அப்டியே இருந்தாளும் அந்த அம்மாவ க்ளோஸ் பண்ணிறேன். ப்ராப்ளம் சால்வ்டு” என்று கூறியவளோ அந்த இடத்தில் இருப்பாளா என்ன? பறந்துவிட்டாள்.

ராதாவும் பின்னாடியே பறந்து விட்டார் பூரி கட்டையோடு.இதனைக் கண்டு வெடித்து சிரித்தார் குணசேகரன். இப்பொழுதுதான், மகனுக்குத் தொலைப்பேசி வழங்கப்பட்டது. சாதரண நலவிசாரிப்புகளுக்கு பின்,

“அப்பா”

“சொல்லு கண்ணா!”

“வந்து…இந்த முறை எனக்கு டிரான்ஸ்பர் சென்னைக்கு கிடைக்கதான் வாய்ப்பிருக்கு”

அங்கே ஒரு அசாத்திய அமைதி இருவருக்கும் என்ன பேசுவது என்றே தெரியல!

“என்னப்பா பண்ணலாம்”

“தெரியலப்பா.”

“எனக்குமே அங்க போறதுல விருப்பம் இல்லப்பா, ஆனா போய்தான் ஆகனும்னு கட்டாயம் !”

“புரியுதுப்பா, ஆனா என்ன செய்ய முடியும்?அங்க நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் மறக்க முடியலையே!”

“…………”

“சரிபா பாப்பா கிட்ட கேட்டுட்டு முடிவு பண்ணுப்பா”

“சரிங்கப்பா.”

“நீங்க உங்க உடம்ப பாத்துக்கோங்க, நல்லா சாப்டுங்க, நேரத்திக்கு சாப்பிட்டு தூங்குங்க அப்பா”

“சரிப்பா இன்னைக்கு வேண்டாம். நாள பின்னப் பாப்பா கிட்ட அத பத்தி பேசு, எல்லாரையும் பாத்துக்கோபா, நா வைக்குறேன் அவங்க ரெண்டு பேர் கிட்டையும் சொல்லிடு!”

“சரிப்பா”

 

சாதாரண வேலை மாற்றலிற்கு கூட சென்னைக்கு செல்ல முடியாத அளவிற்கு அப்படி என்ன சென்னையில் நடந்திருக்கும்? அப்படி பட்ட கசப்பான நிகழ்வு யாருக்கு நடந்திருக்கும்?

மீராவிற்கா? இல்லை மித்ரனிற்கா? இல்லை மொத்த குடும்பத்திற்குமா? தன்னை நாடி வருபவர்களிற்கு, வாரி வழங்கும் சிங்கார சென்னையிற்கு வரவே இவர்கள் தயங்கும் அளவிற்கு, அப்படி என்ன சம்பவங்கள் இவர்கள் வாழ்வில் நடந்திருக்கும்? 

வாழ்க்கையின் முடிச்சுகள் எப்பொழுது அவிழுமோ? இல்லை இன்னும் இறுகுமோ? கடவுளிற்கே வெளிச்சம்!

*************

ஒய்வு என்பதை முற்றிலுமாக தவிர்த்தவனோ,கான்பிரன்ஸ் ஹாலில் எதிலும் மனது கனமாக இருக்கவே,’இன்று எனக்கு என்ன நேர்ந்தது,என் மனம் ஒரு நிலையில் இல்லாது ஏன் தவிக்குது? ஏதோ நடக்குப்போகுதுனு என் மனசு ஏன் அடிச்சு சொல்லிட்டே இருக்கு?’

சிறிது நேரம் ஹாலில் அமர்ந்திருந்தவன்,தன் மனதின் அமைதிக்காக வெளியே சென்றான். நேராக,கேன்டீன் சென்று ஒரு காப்பியை வாங்கிக் கொண்டான்.பின்,ஒரு டேபிலை தேடிப்பிடித்து அமர்ந்தவனோ,அவனது மனதை சமன் செய்ய முயன்றான்,அந்தோ பரிதாபம் அது மட்டும் அவனால் முடியவே இல்லை.கண்களை மூடிக்கொண்டு சாய்ந்து அமர்ந்துக்கொண்டான். 

அவனின் மனக்கண்ணில் பல நிகழ்வுகளின் பிரதிபளிப்பு. முதலில் ஒரு சிறுமி,ஒரு சிறுவன் ஆனந்தமாக விளையாடுவது போல்,பின் அந்த கோர விபத்து,பின் ஒரு பிரபல கல்லாரி அங்கு ஒரு நங்கையும் இவனும்,இவர்களின் முதல் சந்திப்பு,இவனின் உதாசினம்,அவளின் உதாசினம்,நட்பு,காதல்,பிரிவு என பல்வேறு காட்சிகள் தோன்றி மறைய,பிரிவு வரும்போது மட்டும் கண்களை சட்டென திறந்திருந்தான். இப்போது அவன் கண்கள் சிவந்து போயிருந்தது,கை முஷ்டிகளை இருக்கினான்.

 

பின் ‘இல்லை எதுவும் என்னை பாதிக்க நான் அனுமதிக்கக்கூடாது, என்னை நான் மீட்டெடுப்பேன்! எவளோ செய்த பாவத்திற்கும்,துரோகத்திற்கும் நான் ஏன் வருந்தனும் மாட்டேன்,நான் எந்த தப்பும் செய்யல, அதுனால நான் யாருக்காவும் வருந்த மாட்டேன்’ என மனதோடு பேசி ஒரு முடிவிற்கு வந்தான். மனம் சாந்தியடைய,  இயல்பு நிலைக்கு திரும்பி விட்டான்.

மறுபடியும் கான்பிரன்ஸ் ஹாலுக்கு சென்றவன், முடிந்த மட்டும் தன் கவனத்தை அதில் வைத்தவனோ,மதியத்திற்கு மேல் கிளம்பி,தனதறைக்கு வந்தவனோ, எப்பொழுதெல்லாம் சோர்வாகவும்,கடினமாகவும் உணர்வானோ அப்பொழுதெல்லாம் செய்வது போல தன் பட்டுவிற்கு  கடிதம்  எழுத துவங்கினான். 

 

மனதில் உள்ள அனைத்தையுமே எழுதி முடித்தவன் ஒரு திருப்தியோடு அதை மூடி வைத்துவிட்டான். இது போல ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட கடிதம் வைத்திருக்கிறான். அதை அனுப்ப முகவரி வேண்டுமே? அந்த முகவரி அவனிடம் இல்லாமல்தானே அல்லாடிக் கொண்டிருக்கிறான். 

அவனுக்கு தெரிந்ததெல்லாம் அந்த பால் முகம்தான். அதனை தவிர்த்து வேறு எதுவும் அவனுக்கு தெரியாதே. 

ஒவ்வொரு முறை அவன் கடிதம் எழுதும்போதும் அவளின் முகம் அதில் அவனுக்கு தெரியும். அத்தோடு அவள் சொல்லும் “நீ சிதித்தா தொம்ப அதகா இருக்க தரண்” என்பாள் அவனின் பட்டு. அது ஒன்றை வைத்துக்கொண்டு தானே இத்துனை வருடம் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனின் மனதை கொட்டிய பிறகுதான் அவனுக்கு நிம்மதியானது,அது தந்த சுகத்தில் உறங்கியும் போனான்.

யார் அந்த சிறுமி?இவனுக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்? இவன் தவறு செய்யலனா, தப்பு பண்ணினது யாரு? அந்த சிறுமிதான் இவன் பின் நாளில் கல்லாரியிலும் சந்தித்த பெண்ணா? எனில் அவள் ஏன் இவனுக்கு துரோகம் செய்ய வேண்டும்?

அன்றைய நாள் மீராவிற்கு சந்தோஷத்துடனும், அவளின் வழக்கமான சேட்டைகளோடும்  கழிந்தது. 

************

அடுத்த நாள் காலை!

பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த காவல் அதிகாரிகளில் ஸ்டார் பேட்ச் வாங்கியவர்களை மட்டும் கூப்பிட்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை கொடுத்தனர். ஸ்டார் பேட்ச் வாங்கி உள்ளவர்கள் மட்டும் மேற்பார்வையாளறாக இருந்தால் மட்டும் போதும் என்றிந்தனர். அந்த வகையில் ஸ்டார் பேட்ச் வாங்கியிருந்த உதய்க்கு, நீங்க எல்லாம் சரியா பண்றாங்களானு செக் பண்ணினா போதும் என்றிருந்தனர். எனினும் அவன்தான், இல்லை நான் முழுவதுமே பார்த்துக் கொள்கிறேன் என்றிருந்தான்.

அவனுக்கு ஒதுக்கப்பட்டது, டிராபிக் ரூல்ஸ்,பொது மக்கள் எந்த அளவு டிராபிக் ரூல்ஸை மதிக்கின்றனர் என்பதை ஆராய்ந்து கூறுதல்.

அதற்க்காக,உதய் பீல்டு விசிட் சென்றிருந்தான். அவனுடன் மூன்று டிராபிக் அதிகாரிகளை தேர்வு செய்து க்கொண்டிருந்தான். அந்த நான்கு வழி சாலையில் ஆளுக்கு ஒரு சாலையில் நின்றுக் கொண்டார்கள்.

ஒவ்வொரு வண்டியையும் செக் செய்து, எல்லாம் சரியாக உள்ளதா, தலை கவசம் அணிந்துள்ளனரா என்று பார்த்து ,இல்லை என்றால் வார்னிங் கொடுத்து, அதன் தேவையை உணர்த்துவார்கள். 

அதில் தான் உதய்யும் தன்னை  ஈடுப்பட்டிருந்தான்.

***********

அதே நேரம், நம் கதாநாயகியோ, காலை ஒன்பது மணிவரை இழுத்து போர்த்தி தூங்கி கொண்டிருந்தாள். அப்போது அவளது அழைப்பேசியிற்கு  மீனா அழைத்தாள். 

‘யார் அழைப்பது?யார் அழைப்பது ?யார் குரலிது’என்ற பாடல் ஒலித்தது.

“என்ன டி இன்னும் காணோம் “

“எங்கடி ? நேத்து எதுவும் மால் பிளான் போட்டோமா? எதுக்கு போட்டோம்?”

“மாடே மணி ஒன்பது, காலேஜ்ல ஆள காணோம்னு கேட்டா”

“எதேய்!காலேஜ் ஆ?

“என்னடி இப்படி கேக்குற?”

“மாடே, கொறங்கோ, பிசாசே, காட்சிலா, டாங்கி”

“போதும் போதும் லிஸ்ட்டு ரொம்ப பெருசா போகுது”

“அடசேய், காலேஜ்க்கு போறதுக்கு முன்னாடி என்னையும் பிக் அப் பண்ணியிருக்கலாம்ல?”

“ஆஹ்! ஏன் சொல்லமாட்ட? நாளைக்கு யாரு மொதல்ல காலேஜ் வராங்கனு பாப்போம்னு நீதானடி பெட் வச்ச?”

“அப்படி வேற சொல்லிவச்சுருக்கேனா? கிழிஞ்சது”

“சீக்கிரம் வந்து தொல,வை போன”

“பர்ஸ்ட் ஹவர் யாரோடதுடி”

“ஹெச் ஓ டி ஓடது”

“விளங்கிடும், சரி வந்துறேன் பாய்”

அறக்க பறக்க எழுந்தவளோ படபட வென்று காலைக் கடன்களை முடித்து, காக்கா குளியல் ஒன்றை போட்டுவிட்டு, வெளியே வந்து ‘அம்மா’ என்று கத்தினாள். அவரோ, சாதரணமாக ‘என்னடி வேணும்’ என்க, கடுப்பானவளோ,

“என்னைய ஏன் எழுப்பி விடல”

“எழுப்பிவிட நீ என்ன ஸ்கூல்  குழந்தையா? விட்டா ஏன் பல்லு விளக்கி விடல? குளிக்க வைக்கலனு கேப்ப போலையே?”

“மம்மி என்னைய டம்மி பண்ணினது போதும். ஏன் எழுப்பல?”

“படிக்கப் போற எருமை நீதானடி உசாரா இருக்கனும், என்னைய கேக்குற?”

“அப்போ வேணும்னே பண்ணியிருக்க?”

“அப்படியும் வச்சுக்கலாம்”

“நீயெல்லாம் ஒரு தாயா?”

“எடு செறுப்ப, ஏன்டி என்ன லொள்ளா, மரியாதையா போய்டு”

“ஏன்மா இப்போ டென்ஷன் ஆகுறீங்க?  பாருங்க நான்தானே எழுந்திருக்கனும். அதவிட்டுட்டு நான்ஸென்ஸ் மாறிப் பேசிட்டு. போங்கமா, நீங்க உங்க வேலைய கவனிங்க”

“அந்தப் பயம் இருக்கனும் டி”

“நடந்து போய்ப் பஸ் பிடிச்சு போனா லேட் ஆகிடும், அண்ணண் கிட்ட கொண்டு போய் விடச் சொன்னா? கண்டிப்பா கூட்டிட்டு போகமாட்டான், சோ வண்டிய சுட்டுட வேண்டியதுதான், எஸ்கேப்”

“மம்மி நான் கிளம்பிட்டேன்!”

“சாப்ட்டு போடி, லண்ச் வைக்கனும் இரு”

‘ஒரு நாளு நல்ல சோறு சாப்பிடலாம்னு நினைச்சா விடுறாங்கலா பாரு, அப்படியே எஸ்கேப் ஆகிடவேண்டியது தான் விடு ஜூட்’

பணிக்குச் செல்லத் தயாராகி வந்த மித்ரனோ, கீ செயின் ரேக்கில் வண்டி சாவி இல்லாததை கண்டு,

“அம்மா வண்டி சாவி பாத்தீங்களா?”

“இல்லையேப்பா”

‘கொஞ்ச நேரத்துக்கு முன்ன பாத்தேனே! இங்கதானே இருந்துச்சு? ஒரு வேலை அவ வேலையோ?’ குடுகுடுனு ஓடிப் போய்ப் பால்கெனியிலிருந்து கீழே பார்க்க அவனின் உடன்பிறப்போ சத்தமே இல்லாமல் சைலண்ட்டாக வண்டியை ஸ்டார்ட் பண்ணியிருந்தாள்.

“அடியேய், வேணாம்டி வண்டிய கொடுத்திடு. எனக்கு லேட் ஆகிட்டுச்சு” என்று கெஞ்சுவதை, பொருட்படுதாது, “போட என் சிப்ஸூ” என்று பறந்துவிட்டாள்.

“போடி போ இன்னைக்கு செம்மயா எவன் கிட்டையாவது மாட்டுவ இது இந்தச் சிங்கில் சிங்கத்தோட சாபம்”

வண்டியை ஹைய் ஸ்பீடில் செலுத்தி கொண்டிருந்தவளோ, சரியாக டிராபிக் போலிஸிடம் சிக்கினாள்.

“நிறுத்துங்க நிறுத்துங்க!”

“சார் நான் சீக்கிரமா போகனும்?”

“போகலாம், கேக்குறதுலாம் காட்டிவிட்டு போங்க!”

“லைசென்ஸ்?”

தன்னுடைய கைப்பையில் கையை விட்டுத் துளாவியவளுக்கோ, தேடியது கிடைக்காமல் சதி செய்ய, ‘ஐயயோ செத்தேன், வீட்டுல வெச்சிட்டு வந்துட்டேன் போல, சோலி முடிஞ்சது. மண்ட மேல உள்ள கொன்டைய மறந்துட்டேனே. இப்போ என்ன பண்ணுவேன், சமாளிப்போம்’

“Actually sir I’m an medical student i am going for an important surgery, it is very important practical class, i have to attend that! can you plss send me or else i will miss that class, my future dream to become doctor is also diminished. plsss sir shall I make a move?”

“ஆஹா! நீ பேசுறதுலையே தெரியுதுமா நல்லா படிக்குற புள்ளனு, நல்லா படிச்சு இந்த நாட்டுக்கு நீ நல்லது பண்ணனும் நீ போமா”

“ரொம்ப நன்றிங்க சார்” என்று கூறி மறுபடியும் பறக்கத் தயா ரானவளை வண்டியை மறித்துத் அவளைத் தடுத்து நிறுத்தியது ஒரு வலிய கரம்.

இப்போ யாரு என்று சலித்தவளோ, நிமிர்ந்து பார்க்க உடலில் பல மின்சாரம் தாக்கிய உணர்வு. ஒரு நொடிக்கும் சிறியே அளவே ஆயினும் அவனைத் தன் கண்களால் படம் எடுத்துக்கொண்டாள்.

அவளின் இத்தனை வருட தேடல் அவன். கனவு அவன். காதல் அவன். ரசனை அவன். ஆம், எல்லாமே அவளுக்கு அவன்தான். ஆனால் அதைவிடப் பன்மடங்கு அவன்மேல் இவளுக்குக் கோபம் இருந்தது. 

இமைகளைச் சேர விடாது அவனை உருத்து பார்த்தவளுகோ, அடுத்த நொடி உண்மை உரைக்கத் துவண்டு போனாள். அந்த உணண்மையை அவளால் ஜீரணிக்கவும் முடியவில்லை.

அவனைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் இவளைப் பார்த்தான்தான். ஆனால் அந்தப் பார்வையில் என்ன இருந்தது? வெறுப்பா, காதலா, ரசனையா, நட்பா இல்லை தேடலா ?எதுவுமே இல்லை! மாறாக யாரு நீ என்பதாக மட்டுமே இருந்தது.

அந்தப் பார்வையே அவளைக் கொன்றது. உண்மைதானே? இப்போ உனக்கு நான் யாரோ தானே? என்று மனதை தேத்த முயன்றவளை அடுத்து அவன் கேட்ட பொருளால் அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

என்ன கேட்டான்?

ரகளைகள் ஆரம்பம்

காதல் தொடரும்

**********