உள்ளத்தின் காதல் நீங்காதடி-19
உள்ளத்தின் காதல் நீங்காதடி-19
காதல்-19
பிரிவின் துயரில் கண்களுக்கு வேதனை அதிகமா?இதயத்திற்கா?இது ஒரு வித்தியாசமான கேள்வி, ஆமாம் தானே? இதயத்தின் கணமே கண்களை நினைய செய்வது,எது எப்படியோ காதலுக்கு இதயம் தான் சின்னம், அதில் சந்தேகமும் உண்டா?
ஒரு மாதங்களுக்கு பிறகு,
இன்று மீராவின் வீடு விழா கோலம் பூத்திருந்தது, சமையல் அறையிலிருந்து வந்த நெய் வாசமும், மசாலா வாசமும் வயிற்றை ஏங்கி தவிக்கவிட, இன்னொரு பக்கம் மீரா வீட்டு வாசலில் அழகாக கோலம் வரைந்து ‘வெல்கம் டேடி’ என்று எழுதியவள், கலர் கலர் பளூன்களை கொண்டும் அழகாய் அலங்கரித்துக்கொண்டிருந்தாள்.
ஆம், குணசேகரன் இன்று வருகிறார், இத்தனை வருட கடல் கடந்த தவ வாழ்வு முற்றுபெருகிறது, தன் செல்ல மகளின் திருமணம் வேறென்ன வேண்டும் அவருக்கு?
இத்தனை நாளாக முகத்தை தொங்க போட்டு கொண்டு சுற்றி திரிந்தவள் இன்று எதிர்மறையாய் மாறி போனாள், தந்தை இனி இங்கயே இருக்க போவதும் அவளுக்கு தெரியும் இரட்டிப்பு மகிழ்ச்சி, ஆதலால் துரு துரு பட்டாம்பூச்சியாய் காலை முதல் சுற்றி திரிகிறாள்.
அனைத்தும் ரெடி ஆக, தன் தாயை சமையல் அறையிலிருந்து கடத்தி வந்தவள், அவரை அழகாக ரெடி ஆக சொன்னாள், அவர் மறுக்கவே, உருட்டி, மிரட்டி, கெஞ்சி, கொஞ்சி எப்படியோ அழகாய் தயார் செய்திருந்தாள்.
அனுராதாவிற்கு வெட்கம் வேறு வந்து தொலைத்தது அவரே அவரை கடிந்தும் கொண்டார் ‘இது என்ன பதின்ம வயது பிள்ளை போல் வெட்கம் எல்லாம் வருகிறது’ என்று.
மீரா ஒரு அழகிய வெள்ளை நிற முழு ஸ்லீவில் ரெடி ஆகி முடியை ப்ரீ ஹேராக விட்டிருந்தாள் அதில் அவள் தேவதையாக தெரிந்தாள்தான். ஆனால், இன்று இவர்களது சம்பந்தி குடும்பத்தில் அனைவரும் வருகிறார்கள், இப்படி இருப்பதுக்கு பதில் சேலையிலிருந்தாள் இன்னும் நன்றாக இருக்கும் என்று அவருக்கு தோன்ற, “மீராம்மா, இந்த வருஷம் உன் பர்த் டே க்கு வாங்கின சேரியை கட்டிக்கோ டா”என்றார் அன்பாக.
“ம்மா…ப்ளீஸ், நான் இன்னைக்கு தான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கேன், அதை கெடுத்துடாதீங்க, நீங்க அவங்களை ஏர்போட் வர சொன்னதே எனக்கு பிடிக்கலை, இருந்தாலும் இத்தனை வருடம் கழிச்சு அப்பாவை பாரக்க போறோம் அதை என்னால மிஸ் பண்ண முடியாது, இதுக்கு மேல என்ன ஃபோர்ஸ் பண்ணாதீங்க ப்ளீஸ்” என்றாள் மீரா.
ஏனோ அதற்கு மேல் அவளை கட்டாயபடுத்த அவருக்கு தோன்றவில்லை, இத்தனை நாள் அவளும் எதையோ பறிகொடுத்தது போலவே தான் இருந்தாள், இத்திருமணத்தில் அவளுக்கு விருப்பம் இல்லை என்பது தெரிந்தது தான் ஆனால் அது காலத்தால் மாற்றப்படும் என்ற நம்பிக்கை தான் அவரை கட்டி போட்டிருந்தது. உண்மையில் உதய் மேல் இருந்த நம்பிக்கையும். இவ்வாழ்க்கை ஒன்றே அவளை பழைய படி மாற செய்யும் என்பது தான் உண்மை.
மருந்து கசக்கத்தான் செய்யும், அது சில மணித்துளிகள் தான், அதன் பின் அது மாற்றத்தை உண்டு செய்து நோயை குணப்படுத்தும், ஆதே போல் மனவலிக்கும் சில மருந்துகள் உண்டு அது வலியை பெரிதாக்கும், பின் அந்த வலியை சரி செய்யும் அதுவே நிரந்திர தீர்வாகவும் அமையும். மீராவின் வாழ்வில் அது எப்படிபட்ட வலியை தரபோகிறது, அவள் தாய் நினைப்பது போல் இது சரி செய்ய படுமா?
***********
உதய்யின் வீடு,
அனைவரும் மகிழ்வோடு கிளம்பி கொண்டிருந்தனர்.
பல நாட்களுக்கு பின், அந்த வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியுடனும், மன நிம்மதியுடனும் வலம் வந்தனர்.
உதய்யின் மனது தெளிந்த நீரோடையாக இந்த ஒரு மாதமாக உள்ளது. அன்றைய தினத்தை அவன் மனது நினைத்தது.
மீரா செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த உதய்யின் கண்களில் விழுந்தார் அனுராதா.
முகம் எதையோ யோசித்துக்கொண்டிருந்தது, கலை இழந்து, சோர்வாக காணப்பட்டது, அவரை சிறு வயதில் அவனும் பார்த்திருக்கிறானே, மென்மையான முகம் அதில் எப்பொழுதும் குடிக்கொண்டிருக்கும் புன்னகை, வந்தவர்களை மனம் நிறைய அழைத்து அவர் உபசரிப்பதும் எல்லாத்திலும் அவருக்கு நிகர் அவரே ஆவார்.
எத்தனை முறை அவர் கைகளால் உண்டிருப்பான், மீராவிற்கென்று அவர் செய்யும் அனைத்து லன்ச் பாக்ஸ் உணவுகளும் இவனுக்கும் ஒரு பாக்ஸ் வருமே, அத்தனை உரிமையாய் வளர்ந்தவர்கள், வாழ்ந்தவர்கள். ஆம், உதய்யின் எதிர் வீடு தான் நம் மீராவின் பழைய வீடு, அவர்கள் சென்னையிலிருந்து கிளம்புவதற்கு முன் குடியிருந்த வீடு.
காரை விட்டு இறங்கி அவரை நெறுங்கியவன், “அத்தை” என்றான் குரலில் அன்பை தேக்கி.
அவனை சில நிமிடங்கள் உறுத்து நோக்கியவர், அவனை ஏங்கோ சந்தித்தது போலவே இருந்தது.
“அத்தை நான் உதய்” அவனே அவனை அறிமுகம் செய்துக்கொண்டான்.
அவரின் முகத்தில் பல உணர்வுகள், பின் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவராக, “நல்லா இருக்கியா பா” என்றார் அன்பொழுக.
இது தான் அவர், கண்டிக்க தெரிந்தவர் ஆனால் வெறுப்பை உமிழ்பவர் அல்ல, எவர் மீதும் வஞ்சம் கொள்பவர் அல்ல, அனைவரின் மீதும் அன்பு காட்ட தெரிந்தவர் கூட, உதய்யின் குடும்பத்தின் மீது அவருக்கும் பல வருத்தம் உண்டு, ஆனால் அதை இப்பொழுது வெறுப்பாய் அவன் மீது காட்ட அவர் விரும்பவில்லை.
“நல்லா இருக்கேன் அத்தை” என்றான் உதய்.
அதற்கு மேல் என்ன பேச என்று இருவருக்குமே தெரியவில்லை.
சிறிது தூரம் அவரோடு நடந்தவன், “ஐ யம் சாரி அத்தை” என்றான் மனதார.
மௌனமாய் சிரித்தவர், “இந்த சாரி என்ன செய்து விட போகிறது” என்றார் கசந்த புன்னகையுடன்.
“இல்லை அத்தை அன்னைக்கு அப்படி…” என்று அவன் ஆரம்பிக்க.
“இல்லப்பா, அதை மறுபடியும் பேசி என்ன ஆக போகுது, விடு, கடந்தது கடந்ததாகவே இருக்கட்டும்” என்றார் மெல்ல.
சிறிது தூரம் அதே மௌனம்.
“நான் மீராவை, கல்யாணம் பண்ணிக்கனும் அத்தை” என்றான் உதய்.
நின்றார், அவனை நேராய் பார்த்தார் “அது எப்படி நடக்க முடியும்?” என்றார் அவனை நேராய் பார்த்து.
“நடக்கும், என் மனது முழுக்க அவள் மட்டுமே இருக்கிறாள், அவள் இல்லைன்னா எனக்கு வாழ்க்கையே கிடையாது”
“இதை நீ அவ கிட்ட சொல்லியிருக்கியா”
“சொன்னது இல்லைதான், சொன்னாலும் அதை அவள் ஏற்க போவது கிடையாது”
‘உண்மைதான், இவன் அவளை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறான்’ மனதோடு நினைத்தார்.
அவரின் அமைதியை பார்த்தவன் “எங்கள நம்புறது உங்களுக்கு கஸ்டம் தான் எனக்கு புரியுது, ஆனால் எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே”
“வாய்ப்பு கொடுக்க என் மகள் வாழ்க்கை ஒன்னும் பந்தயம் கிடையாது, நீ விளையாடி பார்க்க” என்றார் கூர்மையாக.
அதை அவர் ஏன் கூறுகிறார் என்று புரியாதவன் இல்லையே அவன். இப்பொழுது அவன் பேசாமல் இருந்தால் தப்பாகிவிடும்.
“உண்மைதான், ஆனால் விளையாட்டில் கூட இது தான் வாழ்க்கை என்று சிலருக்கு உண்டு, வெற்றிக்கு இதுவே கடைசி படி, இதை தவறவிட்டால் இனி வாழ்க்கையே கிடையாது என்றும் உண்டு அதில் நான் அந்த வகை என் வாழ்க்கை மீராவில் தொடங்கி மீராவில் முடிவது. மீரா இல்லையென்றால் எனக்கு வாழக்கையே இல்லை” என்றான் உதய்.
“நல்லா தான் பேசுற, இந்த விசயத்துல என்னால என்ன பண்ண முடியும்னு எனக்கு தெரியல, மீராக்கு நீன்னா பிடிக்கும் சின்ன வயசுல இருந்தே பிடிக்கும் அதுல எந்த சந்தேகமும் இல்ல, நடுவுல அவ லைஃப்ல என்ன நடந்ததுனு நீ தெரிஞ்சுகணும் அது எனக்கே இன்னும் முழுசா தெரியலை” என்றார்.
“அது எதுவா இருந்தாலும் நான் அவளை விட்டு போக மாட்டேன், அவ என் லைஃப்ல எப்பவும் முக்கியமான ஆளா இருப்பா” என்றான் உதய். (இதற்கு மேல் உதய்யிற்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என்றே தெரியவில்லை.)
அவனை அவர் ஆழந்து நோக்க அதன் அர்த்தம் புரிந்தவன் அவரின் உள்ளங்கையை திருப்பி அதில் தன் கையை சத்தியம் செய்வது போல் வைத்தவன்.
“என்னாலையோ, என் குடும்பத்தாலையோ, மீராவிற்கு எந்த சங்கடமும், கஷ்டமும் வராது, எந்த சூழ்நிலையிலும், எக்காரணத்தை கொண்டும் நான் அவளை விட்டுட்டு போக மாட்டேன் இது சத்தியம்” என்றான் அவருக்கு நம்பிக்கை கொடுக்கும் பொருட்டு.
“சரி” என்று ஒரு மனதாய் அவரும் ஒப்புக்கொண்டார்.
அன்றைய நாளின் நினைவிலிருந்து வெளி வந்தவன், தன்னவளை ஒரு மாதத்திற்கு பின் சந்திக்க போகும் நிமிடத்தின் தித்திப்பை எண்ணி மனம் மயங்கினான்.
அவனின் மகிழ்விற்கு சற்றும் குறைவில்லாத மகிழ்வில் அவனது குடும்பமும் சந்தோஷத்தில் திலைத்திருந்தது.
உதய் அவர்களிடம் வந்து தான் மீராவை பார்த்தேன் என்று சொன்னதுமே அவர்களுக்கு தலை, கால் புரியவில்லை, அவர்களும் அந்த குற்ற உணர்விலிருந்து வெளி வர ஒரு வாய்ப்பு கிட்டியதே என்று மகிழ்ந்தனர். கூடவே, உதய் தான் அவளை திருமணம் செய்ய போவதாக சொன்னதும் இரட்டிப்பு மகிழ்ச்சி அவர்கள் அவளுக்கு செய்ததிற்கு பதிலாக அவளை தன் மருமகளாக்கி அவளை நன்றாக பார்த்துக்கொள்ள நினைத்தனர்.
இத்தனை நாள் திருமணம் வேண்டாம் என்று தடாலடியாக மறுத்தவனும் திருமணத்திற்கு சம்மதிக்கவே, வேறென்ன வேண்டும் அவர்களுக்கு.
*******
சென்னை விமான நிலையம்.
முதலில் வந்தது உதய்யின் குடும்பத்தினரே, உதய் மீராவிற்காக காத்துக்கொண்டிருந்தான்.
மித்ரன் பைக்கில் வர, மீராவும், அனுராதாவும் டாக்ஸியில் வந்து சேர்ந்தனர்.
மீரா இறங்கியது முதல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் உதய், ஆனால் மீரா அவனை கண்டுக்கொள்ளவேயில்லை.
அனுராதாவை பார்த்ததும் உதய்யின் தாய் மீனாட்சி அவரிடம் விரைந்தவராக அவரை அணைத்துக்கொண்டவர் “ஏன் அனு, சொல்லாம கொல்லாம போய்ட்ட இல்ல, அவளோ வேண்டாதவளா ஆகிட்டேனா?” என்றார் கண்ணீருடன்.
“சொல்லிட்டு போகிற நிலைமையா அன்னைக்கு இருந்தது, அதை விடுங்க பழசை விட்டிடுவோம்” என்றார் மெல்ல புன்னகைத்து.
“அதுவும் சரி, ஆனாலும் நான் உன்கிட்ட மனசார மன்னிப்பு கேட்டுக்குறேன் அனு, எங்களை மன்னிச்சிடு” என்றார் உளமாற.
“இருக்கட்டும் ஏதோ நடத்தது நடந்து போச்சு விடுங்க” என்றார் அனுராதா.
“உனக்கு இன்னும் அந்த வருத்தம் இருக்கும் போல” என்றார் மீனாட்சி.
“இல்லாம எங்க போகும், அதுக்காக உங்க மேல எந்த கோபமோ, வெறுப்போ இல்லை, அதான் என் பொண்ணையே உங்க வீட்டு மருமகளா அனுப்புறேனே” என்றார்.
“மருமக இல்ல அனு அவ என் மகள் இனி” என்று இவ்வளவு நேரம் இவர்கள் உரையாடலை கேட்டிக்கொண்டிருந்த மீராவை அணைத்துக்கொண்டார்.
மீராவிற்கு எரிச்சலாய் இருந்தது, ஏனோ தெரியவில்லை அவள் மனம் எதிலும் நாட்டம் இல்லாமல் இருந்தது, அவர்கள் இங்கு வந்ததே அவளுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை, அவர்கள் வருகிறார்கள் ‘அவர்களிடம் வெறுப்பை காட்டாதே’ என்று தாய் அறிவுருத்தி தான் அழைத்து வந்தார், அதனால் அவளும் வாயை திறக்காமல் இருந்தாள்.
மீராவிடம் மீனாட்சி கை எடுத்து கும்பிட்டு மன்னிப்பு வேண்டி நிற்க ஏனோ அவளுக்கு அவரை நோகடிக்க மனசில்லை.”இதுக்கு அவசியம் இல்லை” என்று பொதுப்பட ஏதோ கூறி சென்றுவிட்டாள்.
அவர்கள் ஒருவரை ஒருவர் சமாதானம் செய்துக்கொள்ள கடைசியாக குணசேகர் வரும் விமானம் வந்துவிட்டதாக அறிவிப்பு வர, மீராவின் குடும்பம் பரபரப்பானது.
மூவரும் உள்ளயே பார்த்தபடி நிற்க ஐம்பது வயதை தொட்டுக்கொண்டிருக்கும் மதிக்கதக்க மனிதராய் உடல் மெலிந்து, கண்களில் சோர்வு கூடி, பாதி மனிதராய் ஆகி திரும்ப வந்த தந்தையை காண மனம் வலித்தது மீராவிற்கும், மித்ரனுக்கும்.
அனுராதாவின் நிலையோ, ‘எங்கே கண்ணை மூடிவிட்டாள் தன் கணவர் தன் கண்ணை விட்டு மறைந்துவிடுவாரோ’ என்று அவரையே இமைக்க மறந்து பார்த்தார் அந்த மனைவி.
அவருக்கும் அப்படியே ‘நீயே கதி’ என்று நம்பி வந்த தன் சரிபாதியையும், அவர்கள் வாழ்ந்த காதல் வாழ்வின் சாட்சியாய் வந்த குழந்தை செல்வங்களையும் கண்டவருக்கு கண்கள் கலங்கியது. மூவருக்கும் அதே நிலை தான், தந்தையின் பாசத்தை பத்து வயது வரை பார்த்தவள் மீரா, அதன் பின் எத்தனையோ முறை தந்தைக்காக அவள் ஏங்கியது உண்டு, தன் தாய் கலங்குவதை பார்த்து வளர்ந்தவள் ஆதலால் அவரிடம் அவள் எதையும் காட்டிக்கொண்டது கிடையாது.
அதோடு இவளுக்கு நடந்த அந்த சம்பவத்துக்கு பின், மொத்த குடும்பமும் கலங்குவது அவளுக்கு பிடிக்கவில்லை, முடிந்த மட்டும் தன்னை குறும்பாய் மாற்றிக்கொண்டவள், தாயை எப்பொழுதும் தந்தையின் நினைவில் வாடும்படி விட்டது கிடையாது.
குணசேகரன் குணத்திலும் குணாலன், மனைவியை மதிக்க தெரிந்தவர், மனைவிக்கு சம உரிமை வழங்கியவர், அவரின் மேல் காதல் கொண்டவர், மனைவியை கடிந்து பேசி பழகிராதவர், தன் கோபத்தை அவர் என்றுமே தன் மனைவியிடம் காட்டிக்கொண்டது கிடையாது.
ஒரு கணவன் எப்படி இருக்க வேண்டுமோ அதற்கு உதாரணம் குணசேகரன், அப்படி அவரோட காதலோடு வாழ்ந்த மனைவிக்கு அவரின் ஞாபகம் வராமல் இருக்குமா?
பகலில் மீராவின் தயவில் சமாளித்து கொண்டாலும் இரவில், கணவனின் மார்பு சூட்டில்உறங்கி பழகியவருக்கு, அவரின் அன்பில் நெகிழ்ந்த தருணமும் மறக்குமா?
இரவின் கொடுமையில் அவர் கணவனை நினைக்காத நாள் இல்லையே, கணவனை வெளிநாட்டிற்கு சிரித்த முகமாய் அனுப்பி வைக்கும் ஒவ்வொரு மனைவியின் பின்னும் கண்ணீரால் எழுத்தப்பட்ட ஒரு பக்கம் கண்டிப்பாக இருக்கும்.
இளம் வயதில், கணவனோடு வண்டியில் அவரின் தோலில் கை போட்டு செல்லும் உரிமை கிட்டாது, பூங்காவில் தோலில் தலை சாய்க்கும் பாக்கியம் கிட்டாது, பண்டிகை நாளில் துணி எடுக்கையில் கணவன் பார்த்து பாரத்து வாங்கி தரும் ஆடைகள் இல்லாது, குழந்தையை கண்டிக்க தந்தை இல்லாத பொழுதில், சமைத்த உணவை சுவைத்து அருமை என்று கூற கணவன் இல்லாத கொடுமையிலும், இருவரின் கதாப்பாத்திரத்தையும் ஒரே ஆள் செய்வது தான் அத்தனை எளிதான விஷயமா?
இதற்கு மத்தியில் உறவினர்களிடமிருந்து வரும் விஷவார்த்தைகளையும் தாங்கி, சில வேட்டை நாய்களிடமிருந்தும் தன்னை பாதுக்காத்து வாழ ஒவ்வொரு நாளும் தீகுளிக்கும் மங்கையர் என்றும் போற்றிபாதுகாக்க பட வேண்டியவர்கள்.
அனுராதா கணவனின் உடல் நலத்தில் சுய மதீப்பீடில் இருந்தார்.
இவர்களை நெருங்கியிருந்தார் குணசேகரன், நால்வரின் கண்களின் கண்ணீர் பல்லாயிரம் கதை பேச, நால்வரும் அணைத்துக்கொண்டனர்.
இவர்களின் பாசபிணைப்பு சுற்றி இருந்தோரையும் கண் கலங்க செய்தது.
_தொடரும்_