என் காதலை பழகி கொள்ளடி

என் காதலை பழகி கொள்ளடி

என் காதலை பழகிகொள்ளடி

 

திருமணம் நிறைவாக முடிந்திருந்தது. ஒரு தந்தையாக தன் கடமைகள் அனைத்தையும் நன்முறையில் நிறைவேற்றியதில் நெடுமாறனுக்கு கர்வமும் கூட.

 

ஒன்றல்ல இரண்டல்ல மூன்று பெண்களை பெற்று, வளர்த்து, சிறு குறையுமின்றி ஆளாக்கி, தன்னால் இயன்ற அளவு அவர்களுக்கான வாழ்வை அமைத்து கொடுத்த நிம்மதி அதிகமாகவே அவரின் மனதில் மையமிட்டு இருந்தது.

 

ஆனால், தன் நிம்மதியான மனநிலைக்கு மாறாக தன் மனைவியின் முக வாட்டம் அவரை நெருட, “எதுக்கு ராசாத்தி இப்படி மெத்துனு முகத்தை வச்சிருக்க?” தன் உணர்வுக்கு தன் பாதியானவளின் உணர்வு ஒட்டாமல் இருக்கிறதே என்ற ஆதங்கத்துடன் கேட்டு விட்டார் மாறன்.

 

“என்னத்த சொல்ல, பெரியவள கட்டி கொடுக்கும்போது சின்னவளும் கடைக்குட்டியும் இருந்துச்சுங்க, சின்னவளை கட்டி கொடுத்தப்போ கடக்குட்டி மட்டும்னாலும் கலகலனு வளவளத்துட்டு இருந்தா, இப்ப கடக்குட்டியும் வேற வீட்டு மருமகளா போயிட்டா, நம்ம வீடே வெறிச்சோனு போச்சு” நிதர்சனம் புரிந்தும் தாயாய் அவர் மனம் தவிக்க தான் செய்தது.

 

திருமணம், மறுவீடு, விருந்து என ஒருவாரம் உறவினர்கள் நிரம்பி இருந்த வீடு இன்று யாருமற்று வெறிச்சோடி கிடப்பதைக் காண ராசாத்தி மனதில் வெறுமை சூழ்ந்து பாரமேற்றியது.

 

“அதுக்காக நம்ம பொண்ணுங்கள கட்டி கொடுக்காம நம்ம கூடவே வச்சிருக்க முடியுமா? நம்ம பொண்ணுங்க சந்தோஷமா வாழறதை நினைச்சு சந்தோசபடுவியா, அதைவிட்டு புலம்பறா”

 

“என் மனசு படற பாட்ட சொல்லி புலம்ப கூட கூடாதா சாமி, உங்களுக்கு என்ன காலங்காத்தால வாக்கிங்னு நாலு தோஸ்துங்க கூட காலாற நடந்து வாயடிச்சிட்டு வருவீங்க, அப்புறம் நியூஸ்‌பேப்பருக்குள்ள தலைய விட்டுகிட்டா ஒரு மணிநேரம் ஓடி போயிடும். குளிச்சு சாப்பிட்டு டிவியில உக்கார்ந்தா நியூஸ் சேனல்ல முழு நாளும் முழுங்காம போயிடும், சாயங்காலமும் உங்க தோஸ்துங்க கூட வாய் வளர்க்க போயிடுவீங்க… நான் தான அடும்பங்கர, ஆக்கி வச்ச சோறுனு காலொடஞ்ச பூனையா இந்த நாலு சுவத்த சுத்தி வரனும்! நான் வாங்கி வந்த சாபம் அப்படி, கட்டி வந்ததுல இருந்து கட்டையில போற வர இதுதானே எனக்கு” உயர்த்திய குரலாய் ஆரம்பித்தவரின் புலம்பல் பேச பேச குரல் தேய்ந்திட பெருமூச்சோடு சமையற்கட்டில் நுழைந்து கொண்டார். 

 

அடுப்பில் சீட்டி அடித்து ஓய்ந்திருந்த குக்கரும் கொதித்திருந்த அரிசி உலையும் அவரை ஆக்கிரமித்து கொண்டது.

 

‘என்ன வார்த்த சொல்லிபுட்டு போறா? கட்டையில போற வரைக்குமாம்!’ மாறன் உள்ளம் கொதித்தது.

 

அவள் சொன்ன வார்த்தையை மறுபடி அவரின் உள்ளம் மீட்டொலிக்க நிஜமாகவே அவரின் நெஞ்சம் நடுங்கியது.

 

முன்பெப்போதும் ராசாத்தி புலம்பும் வார்த்தைகள் தான் இவை. புதியது இல்லை தான் என்றாலும் ஏனோ இப்போது இவருக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

 

இப்போது அவருக்கு என்றிருக்கும் ஒற்றை உறவு ராசாத்தி மட்டும் தான். மகள்கள், பேரன், பேத்தி, சொந்த பந்தங்கள் என அவரை சுற்றி பலர் இருந்தாலும், அவர்களில் ஒருவர் கூட அவரை தாங்குபவர் இல்லை. ராசாத்தியை தவிர.

 

‘அவளும் போய்விட்டாள்!’ அதை நினைக்கும் போதே நெஞ்சடைத்தது அவருக்கு. ‘பிறகு ஏன் அப்படியொரு வார்த்தையை சொல்லி விட்டாள்?!’

 

‘மகளை பிரிந்த தாய்பாசத்தில் பேசி விட்டாளா? அவ கூடவே இருக்கேனே நானொரு பொருட்டில்லையா அவளுக்கு?! என்கூட வாழ்ந்த வாழ்க்கைய சாபமா பார்க்கிறாளா!?’

 

அவரின் உள்ளம் வெதும்பி தவிக்க, உற்சாகம் முழுவதுமாக வடிந்து போய் முகம் வீழ்ந்து விட்டது மாறனுக்கு. 

 

“ஏன் உங்க முகம் வாடி கிடக்கு, கொஞ்ச நேரம் முன்ன நல்லாதான இருந்தீங்க” என்று அவரிடம் வந்த ராசாத்தி அவரின் நெற்றியில் கைவைத்து பார்த்துவிட்டு, “உடம்பு சூடு எதுவுமில்ல, கல்யாண அலைச்சல்ல சோர்ந்து போயிருக்கீங்க போல, சாப்பாடு எடுத்து வச்சுட்டேன் வந்து சாப்பிட்டு கொஞ்சநேரம் படுத்து எழுங்க சரியாபோயிடும்” மனைவியின் அக்கறையில் இவரின் கண்கள் கரித்தது.

 

“ஏன்டி கட்டையில போறேன்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிபுட்ட? என்கூட நீ சந்தோசமா வாழலயாடி? நீ போயிட்டா எனக்கு யாருமில்லனு பிளாக்மெயில் பண்ணி பாக்குறீயா?” கரகரத்த குரலில் அவர் கேட்க, ராசாத்தி கணவனை திகைப்பாக பார்த்து வைத்தார்.

 

“ஆமா, என் வார்த்த பலிக்கனும்னா நான் இதுவரை லட்சம் தடவ செத்து இருக்கனும். ஏதோ புலம்பினேனா விட்டு தள்ளுவீங்களா, எழுந்து வாங்க சாப்பிட” ராசாத்தி சாதாரணமாக சொல்லி வைக்க, அவர் மனது மேலும் பிசைந்தது.

 

“என்னடி மறுபடி சாவுகீவுனு பேசுற! உனக்கு என்னடி அப்படி குறை வச்சேன். உன்ன கட்டி வந்த நாளுல இருந்து இந்த வீட்டு ராணியாட்டம் உன்ன வச்சு பாத்துக்கிறேன்” அவர் ஆதங்கமாக கேட்க,

 

“என்னை ராணியாட்டம் தான் வாழ வச்சீங்க, இப்ப நேரமாச்சு வந்து சாப்பிடுங்க” ராசாத்தி கணவனின் ஆதங்கத்தை கழித்தலில் விட்டு சாப்பிட அழைக்க, “எனக்கு இப்ப பசியில்ல” என்று கோபமாக வெளியே வந்து விட்டார்.

 

“சாப்பிட்டு முடிச்சா என் வேலை ஆகுமில்ல, அது புரியுதா இந்த மனுசனுக்கு, இப்ப தான் புது மாப்பிள்ளனு நினப்பு, முறுக்கிட்டு போறாரு” கோபமாக செல்லும் கணவனை பார்த்து ராசாத்தி சலித்து கொண்டார்.

 

கனுகால் தெரிய ஏற்றி சொறுகிய பூப்போட்ட பாவாடையும் காற்றில் படபடக்கும் பச்சைநிற தாவணியை ஒருகையால் இழுத்து இடையில் சொறுகியபடி, தலையில் புள்ளு கட்டை சுமந்து எதிரே நடந்து வந்தவளை முதல் பார்வையிலேயே பிடித்து விட்டது இளைஞனான நெடுமாறனுக்கு. உடனே அவள் யார், என்னவென்று விசாரித்து அடுத்த மாதத்தில் ராசாத்தியை பெண் கேட்டு குடும்பத்துடன் சென்று விட்டிருந்தார்.

 

அவர் வேலையில் சேர்ந்து ஒரு வருடமாகி இருந்த காலமது. கவர்மெண்ட் உத்தியோக மாப்பிள்ளை என்றதும் பெண் வீட்டாரும் சம்மதிக்க, மூன்று மாதங்களில் அவரின் மனம் கவர்ந்தவள் அவருக்கு உரிமையாகி இருந்தாள்.

 

ராசாத்தியை பொறுத்தவரை இவர்களுடையது பெற்றோர் பார்த்து வைத்த கல்யாணம் தான் என்றாலும் இவருக்கு மட்டுமே தெரியும் இவர்களுடையது காதல் திருமணம் என்று.

 

பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்று பார்க்க போன போது தான் ராசாத்தியை முதல்முறை அங்கே பார்த்திருந்தார். பிறகு ஒவ்வொரு முறையும் அவளை பார்ப்பதற்கென்றே பாட்டி ஊருக்கு பயணப்பட்டிருந்தார். ‘உனக்கு பாட்டி மேல இம்புட்டு பாசம்னு நான் நெனச்சே பாக்கல மாறா’ அன்று இவன் அம்மா உணர்ச்சி பொங்க சொன்னதற்கு தான் வழிச்சல் சிரிப்போடு விலகி நடந்தது இப்போதும் அவருக்கு பசுமையாய் நினைவிருக்கிறது.

 

புள்ளறுக்கும் கொல்லையில் ராசாத்தியின் வளவள வம்பு பேச்சுக்களும், பூப்பறிக்கும் சோலையில் அவளின் கிங்கிணி சிரிப்புக்களும் அவளின் துறுதுறு நடையும், குறுகுறு பார்வையும், அழகு கொஞ்சும் மஞ்சள் முகமும் அவரை மொத்தமாக கட்டி போட்டிருந்தது. 

 

அப்படி இருந்தவள், எப்போது மொத்தமாக மாறி போனாள்? இவருக்கு தெரியாது. தன் சுயத்தை எப்போது முழுமையாக தொலைத்து போனாள்? அதுவும் தெரியாது.

 

பார்த்து பார்த்து ரசித்து ரசித்து மணந்து வந்த காதல் மனைவியை எங்கோ எப்போதோ தொலைத்து விட்டிருந்தார் அவர், இப்போது தான் தான் தொலைத்தையே புரிந்து கொண்டது அவரின் மந்த புத்தி.

 

பழைய யோசனையில் நடந்தவர், தோட்டத்து கல்திட்டில் அப்படியே சாய்ந்து அமர்ந்து கொண்டார். மதிய வெயிலின் வெப்பத்தை அதே வெயிலில் காய்ந்தும் நிழல் தந்த மரம் தணித்துக் கொண்டிருந்தது. தன்னை காய்த்து குடும்பத்தை தாங்கும் பெண்ணவளைப் போல. 

 

மனதில் தோன்றிய உவமையில் இவரின் மனம் மறுபடி துணுக்குற்றது.

 

ராசாத்தியை மணந்த பிறகு இவரின் வாழ்க்கை சொர்க்கமாக தான் கழிந்தது. இனிமையான இன்பமான நாட்கள் அவை. பிறகு என்ன நேர்ந்தது?

 

தங்கள் வாழ்க்கையை முதல்முறை பின்னோக்கி சென்று யோசித்து பார்த்தார்.

 

தங்களை விட வசதி குறைவான பெண்ணென்று அப்பாவும் அம்மாவும் ராசாத்தியிடம் அத்தனை இணக்கம் காட்டாதது நினைவில் வந்து போனது. 

 

ஒருநாள் படுக்கை அறைக்கு தாமதமாக வந்ததற்காக, தான் கோபித்து கொண்டதும், அவள் வீட்டு வேலை அதிகம் என்று சொன்னதும், ‘ஆக்கி போட கூட அலுத்துக்குவியா நீ’ என்று தான் திட்டியதும் கூட நினைவலையில் அடித்து போனது.

 

அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறக்க சொந்த பந்தங்கள் முதற்கொண்டு அவளை ஏசி பேசிய பேச்சுக்களும், ஆண் பிள்ளைக்காக தனக்கு இரண்டாம் திருமணம் வரை பெற்றவர்கள் பேச்சு எடுத்ததும், இவரின் மறுப்பும், அவள் அழுது கரைந்த இரவுகளும், அதனை தொடர்ந்த நச்சரிப்புகள் அனைத்தும் எப்போது ஓய்ந்தது என்று இவருக்கு நினைவிலில்லை. ராசாத்திக்கு நினைவு இருக்கும் என்று நினைத்து கொண்டார்.

 

வேலை, சம்பாத்தியம், பதவி உயர்வு, குடும்பம் என்று இடைக்காலத்தின் பெரும்பகுதியை கழித்துவிட்டிருந்தார். உற்று தேடி பார்த்தும் தன்னவள் மீதான நேசத்தை அதில் எதிலுமே காட்டியிருக்கவில்லை. எல்லாமே கடமை என்று செய்தது மட்டுமே.

 

புடவை, நகைநட்டு என்று வாங்கி தந்து ராசாத்தியை நான் குறையின்றி தான் பார்த்துக் கொண்டேன் அவர் தன்னை நியாயப்படுத்திக் கொள்ள முயன்றாலும், ‘இதுவரை அவளுக்கு பிடித்த நிறம் என்ன என்று கூட தெரியாது உனக்கு’ என்று மனசாட்சி அந்நியபடுத்தி குத்தியது.

 

“உச்சி வெயில்ல மண்ட காய இங்கயா உக்கார்ந்து கிடக்கீங்க?” கணவனை தேடி வந்து பதறி கேட்டார் ராசாத்தி.

 

அவர் அமைதியாகவே இருக்க, “நான் புத்திகெட்டு பேசிபுட்டேன் என்னை மன்னிச்சுருங்க சாமி, உள்ள வந்து சாப்பிடுங்க, இனி இப்படி பேசி வைக்க மாட்டேன் போதுமா” என்று அவரின் கைப்பிடித்து எழுப்பி அழைத்து வந்தார்.

 

செய்யாத தவறுக்கு மன்னிப்பு வேண்டி, உணவு பரிமாறும் மனைவியை விந்தையாக பார்த்திருந்தார் மாறன். இதுவரை இதுபோல எத்தனை மன்னிப்புகளை விரையமாக்கி இருக்கிறாளோ? என்றிருந்தது அவருக்கு.

 

முதல் முறையாக தன் மனைவியின் உணர்வுகளை அவதானிக்க முயன்றார்.

 

“இன்னும் என்ன யோசனை சாப்பிடுங்க” ராசாத்தி சொல்ல,

 

“நீயும் சாப்பிடுமா” என்று தட்டை எடுத்து வைத்து பரிமாறும் கணவனை வியந்து பார்த்து விட்டு ராசாத்தியும் சாப்பிட தொடங்கினார்.

 

“உனக்கு பேச்சு துணைக்கு நான் தான் குத்து கல்லாட்டம் இருக்கேன் இல்ல, இனிமே நீயும் நானும் மட்டுந்தானே ஊருமட்டும் பேசலாம்” அவர் இதமாக சொல்ல,

 

“உங்களமாதிரி அறிவா எல்லாம் எனக்கு பேச வராது சாமி, நான் பேசுற பேச்சு உங்களுக்கு கிறுக்குதனமா தான் தோனும், வேணா விடுங்க பொண்ணுங்க ஃபோன் பேசுவாங்கல்ல அது போதும். போக போக எனக்கு பழகிடும்”

 

அவள் வாழ்ந்த வாழ்க்கையை விட பழகி போனவை அதிகம் என்று புரிந்தது அவருக்கு.

 

“உன் கிறுக்கு பேச்சை கேட்டுதானடி கிறுக்கேறி உன்ன கட்டிக்கிட்டேன். இப்ப மட்டும் உன் பேச்சு கசக்குமா என்ன பேசுடி” 

 

கணவனின் உரிமையுடன் கூடிய குழைந்த பேச்சு இவருக்கு சங்கடமாக இருந்தது. “க்கும் பேரன் பேத்தி எடுத்த அப்புறம் பேச்ச பாரு உங்களுக்கு” என்று கடிந்து கொண்டார்.

 

“இல்ல ராசாத்தி நான் முடிவு பண்ணிட்டேன். ஒரே வீட்டுல நீ அடுப்பங்கரையும் நான் டிவியையும் பார்த்துட்டு வேறவேறயா இருக்க வேணா, என்ன செஞ்சாலும் ஒன்னா செய்வோம், ஒன்னா இருப்போம்”

 

“ஆமா நான் பாத்திரம் விளக்கும்போது நீங்களும் விளக்குவீங்களாக்கும், ஆகற வேலைய பாருங்க போங்க” என்று எழுந்தவர் சாப்பிட்டு முடித்து ஒதுக்கிய பாத்திரங்களை தேய்க்க தொடங்க,

 

“ஏன் நீ பாத்திரம் விளக்கினா நான் கழுவி போட மாட்டேனா என்ன?” என்றவர் மனைவி தேய்த்த பாத்திரங்களை கழுவியும் வைத்தார்.

 

கணவனின் செயலை அதிசயமாக பார்த்திருந்தவர், “உங்களுக்கு தேவையா இதெல்லாம்” என்று தலையில் அடித்து கொள்ள,

 

“நமக்கு தேவைதான், இனிமே காலையில சாயந்திரம் நீயும் என்கூட காலாற நடந்து வர, சேர்ந்தே டிவி பார்க்கலாம், எல்லாத்தையும் சேர்ந்து செய்யலாம்” அவர் அடுக்கி கொண்டே போனார். 

 

“ம்ம் இந்த கூத்து இன்னும் எத்தனை நாளைக்குனு நானும் பார்க்கிறேனே” என்று ராசாத்தி தலையசைத்து நம்பாமல் சொல்ல,

 

‘நான் காட்ட மறந்த காதலை தாமதமானாலும் இனி காட்டுகிறேன் உன்னிடம், என் நேசத்தையும் பழகி கொள்ளடி’ என்று எண்ணி கொண்டு நெடுமாறன் இதமாய் சிரித்து வைத்தார்.

 

***

(முற்றும்)

 

Leave a Reply

error: Content is protected !!