எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 13

IMG_20221031_134812

தன் பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த மாயாவிற்கு அடுத்த நாள் காலை விடிந்ததைக் கூட உணரமுடியவில்லை, அத்தனை தூரத்திற்கு அவள் மனது அவள் உடலை விட்டு வெகு தூரம் விலகிச் சென்றிருந்தது.

காலையில் எப்போதும் நேரத்திற்கே கண் விழித்து விடும் நாராயணன் வழக்கமாக நேரத்திற்கு தன் அறைக்கு வரும் தன் மகளை அவ்வளவு நேரமாகியும் காணாது போகவே தன்னால் முடிந்த மட்டும் சத்தமாக அவள் பெயர் சொல்லி அழைக்க, எத்தனை வகையான சிந்தனைகளில் இருந்தாலும் தன் தந்தையின் அழைப்பைக் கேட்ட அடுத்த கணமே அவரைத் தேடி ஓடிச் செல்பவள் இப்போதும் அவரது குரல் கேட்ட அடுத்த நொடி அவரருகில் சென்று நின்று கொண்டிருந்தாள்.

“என்னாச்சு ப்பா, ஏதாவது வேணுமா?” மாயாவின் கேள்விக்கு ஆமோதிப்பாக தலையசைத்தவர் தனக்கு பசிக்கிறது என்று சைகை காட்ட, தன் தந்தையின் தேவையைக் கூட உணர முடியாதவாறு தனது சிந்தனைகளில் மூழ்கியிருந்து விட்டோமே என்று தன்னைத்தானே கடிந்து கொண்டவள் அந்தக் கோபத்தையும் சித்தார்த்தின் புறமே வைத்து விட்டு தன் தந்தையின் தேவையைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

அவசர அவசரமாக அவருக்குத் தேவையான உணவை சமைத்து ஊட்டி விட்டவள் மதியத்திற்கு தேவையான உணவையும் சமைத்து வைத்து விட்டு சித்தார்த்தின் குடும்பத்தினர் தங்கியிருந்த வீட்டை நோக்கி நடை போட ஆரம்பித்தாள்.

என்னதான் தான் நேற்று இருந்த மனநிலையில் தான் யார் என்கிற விபரத்தை சித்தார்த்திடம் அவள் சொல்லியிருந்தாலும் அவனை நேர் கொண்டு பார்த்து சகஜமாகப் பேச அவளுக்கு சிறிது கூட மனம் வரவில்லை.

ஏதோ கடமைக்காக இத்தனை நாட்களாக அவன் ஏதாவது பேசினால் பதில் சொல்லுபவள் அவனை ஐந்து வருடங்களுக்கு பின்னர் மறுபடியும் சந்தித்தபோது மொத்தமாக நிலைகுலைந்து தான் போனாள்.

தனது தடுமாற்றத்தை யாரும் கவனித்து விடக்கூடாது முக்கியமாக சித்தார்த் கண்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தவள் அவன் தன்னை அடையாளம் கண்டு விடக்கூடாது என்பதிலும் உறுதியாகத் தான் இருந்தாள்.

அவன் மேல் அவளுக்குத் தீராத கோபம் இருந்தாலும் அவனைப் பழி வாங்கும் எண்ணம் எல்லாம் அந்த சமயத்தில் அவள் மனதிற்குள் இருந்திருக்கவில்லை.

நேற்றைய நாள் அவளுக்கு பழைய சம்பவங்களை மீண்டும் நினைவு படுத்தியிருக்க, அவை கொடுத்த காயங்களே இன்று அவளை அவனுக்கு ஏதாவது ஒரு வகையில் பழி தீர்க்க வேண்டும் என்று தூண்டிக் கொண்டிருந்தது.

பலத்த சிந்தனைகளுக்கு மத்தியில் ஒரு வழியாக மாயா சித்தார்த் தங்கியிருந்த இல்லத்தை வந்து சேர்ந்திருக்க, அவள் எதிர்பார்த்தது போலவே சித்தார்த் அவளது வருகைக்காக பெரும் பதட்டத்துடன் அந்த வீட்டு வாயிலிலேயே காத்துக் கிடந்தான்.

மாயாவைப் பார்த்ததும் முகம் எல்லாம் பிரகாசிக்க அவளெதிரில் வந்து நின்றவன், “குட்மார்னிங் அம்..மாயா, எப்படி இருக்கீங்க?” என்று வினவ,

அவனைப் பார்த்து சிறு தலையசைவைப் பதிலாகக் கொடுத்தவள், “இருக்கேன்” என்று விட்டு அங்கிருந்து விலகிச் செல்லப் பார்க்க, அவனோ மீண்டும் அவளது வழியை மறித்தவாறு வந்து நின்று கொண்டான்.

“என்னாச்சு மாயா? என் கூடப் பேச மாட்டியா?”

“என்ன பேசணும்?”

“சரி, நீ ஏதோ டென்ஷனில் இருக்க போல இருக்கு. நான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லிடுறேன். நேற்று நீ என்னை ‘சீனியர் சித்தார்த் அண்ணா’ன்னு சொன்னதும் ஒரு நிமிஷம் எனக்கு எதுவுமே புரியல. இத்தனை வருஷம் கழிச்சு மறுபடியும் உன்னை சந்திப்பேன்னு நான் கனவில் கூட நினைத்து இருக்கல தெரியுமா?”

“நானும் தான்” மாயாவின் குரல் சுரத்தே இன்றி ஒலிப்பதைப் பார்த்து சிறு தயக்கத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டு நின்றவன்,

ஒரு சில நொடிகளில் மீண்டும் தன்னை சுதாரித்துக் கொண்டு, “ஆக்சுவலா நான் ஐந்து வருஷத்துக்கு முன்னாடி உன்னைப் பார்க்கும் போது நீ ரொம்ப சின்னப் பொண்ணா இருந்தா, அதுதான் உன்னை இப்போ பார்த்ததும் எனக்கு அடையாளமே தெரியல” என்று கூற, அவளோ அவன் பேசுவதைக் கேட்டும் கேட்காதது போல நின்று கொண்டிருந்தாள்.

“ஆனா எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை, நான் அன்னைக்கு பார்த்த போது நிறைய நிறைய லட்சியங்களை வைத்திருந்த மாயா இப்போ இந்த நிலைமைக்கு வரக் காரணம் என்ன?” சித்தார்த்தின் கேள்வியில் அத்தனை நேரமாக இழுத்துப் பிடித்து வைத்திருந்த தன் பொறுமையைக் கை விட்டவள்,

கோபம் சூழ அவனது சட்டைக் காலரைப் பற்றி, “ஏன் உங்களுக்குத் தெரியாதா? அன்னைக்கு நான் எதுவும் சொல்ல வேண்டாம்னு சொல்ல சொல்ல கேட்காமல் எங்க அப்பா கிட்ட என்ன எல்லாம் சொன்னீங்க, நீங்க அன்னைக்கு சொன்ன வார்த்தைகள் தான் இன்னைக்கு என்னை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கு” என்று கூற, அப்போதும் அவனுக்கு அவள் சொன்ன எந்தவொரு விடயமும் புரியவே இல்லை.

“நீ என்ன சொல்லுற மாயா? சத்தியமாக எனக்கு எதுவுமே புரியல”

“ஆமா சார், உங்களுக்கு எப்பவுமே எதுவுமே புரியாது. அன்னைக்கு நீங்க அங்கே இருந்து போன பிறகு என்ன ஆச்சு தெரியுமா? தெரியுமா?” என்றவாறே தன் கையிலிருந்த அவனது சட்டைக் காலரை உதறி விட்டவள் அன்றைய நாளின் பின்னர் தன் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் கண்ணீரோடு சொல்லி முடிக்க, சித்தார்த்திற்கோ தான் நல்லது என்று செய்ய நினைத்த செயல் இப்படி ஆகி விட்டதே என்று குற்றவுணர்வு தோன்ற ஆரம்பித்தது.

“நான் உனக்கு நல்லது பண்ணலாம்ன்னு தான் மாயா அப்படி பண்ணேன், ஆனா சத்தியமாக இப்படி எல்லாம் நடக்கும்னு எனக்குத் தெரியல. என்னை மன்னிச்சிடு”

“மன்னிப்பா? நீங்க இப்போ கேட்கும் இந்த மன்னிப்பு என்கிற ஒரு வார்த்தையால் நான் என் வாழ்க்கையில் இழந்த விஷயங்கள் எல்லாம் திரும்பக் கிடைத்துடுமா சார்? இல்லை இறந்த போன என் அம்மா திரும்பி வந்துடுவாங்களா? அடுத்தவங்க சொல்ல வர்றதைப் புரிந்து கொள்ளாமல் ஏதேதோ பண்ணிட்டு கடைசியில் மன்னிச்சிடுங்கன்னு ஈஸியாக சொல்லிடுறது”

“அப்படி இல்லை மாயா…”

“போதும், இதற்கு மேலேயும் எதுவும் பேச வேண்டாம். நீங்க தான் என்னை ஹயர் பண்ண ஃபேமிலின்னு தெரிந்திருந்தால் ஆரம்பத்திலேயே நான் என்னால முடியாதுன்னு சொல்லி விலகி இருப்பேன், ஆனா நீங்க இந்த டிரிப்பில் வரலேன்னு தெரிஞ்சதும் தான் நான் எதுவும் பேசாமல் இருந்தேன். இப்போ நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லி எனக்கு உங்க கூட வர முடியாதுன்னு சொல்ல ஒரு நிமிஷம் ஆகாது, ஆனா நீங்க பண்ண தப்புக்கு உங்க குடும்பத்தை நான் நோகடிக்க மாட்டேன், அப்புறம் உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும் சொல்லுங்க?

நீங்களும், உங்க குடும்பமும் இங்கே இருக்கப் போறது இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்கு தான், அதுவரைக்கும் நான் என் வேலையைப் பார்த்துட்டுப் போறேன், அதே மாதிரி நீங்களும் உங்க வேலையைப் பார்த்துட்டுப் போங்க. மறுபடியும் என் வழியில் குறுக்க வர வேண்டாம்” என்றவாறே சித்தார்த்தைக் கடந்து சென்றவள் ஏற்கனவே திட்டமிட்டபடி சாவித்திரி, கௌசல்யா மற்றும் கௌசிக்குடன் இணைந்து அந்தப் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியை நோக்கிச் செல்ல அவர்களை விரைந்து வரும் படி அறிவுறுத்திக் கொண்டு நின்றாள்.

மாயா தான் ஊட்டி வந்த முதல் நாளிலிருந்து இப்போது வரை எதற்காக தன் மீது இவ்வளவு கோபமாக இருக்க வேண்டும் என்கிற காரணம் தெரியாமல் இத்தனை நாட்களாக குழப்பத்தில் சுற்றிக் கொண்டிருந்த சித்தார்த் இப்போது அவளது கோபத்திற்கான காரணம் தான் தான் என்று தெரிந்ததும் அந்த தவற்றை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் வெகுவாக தடுமாறிப் போனான்.

வார்த்தைகளால் பேசி அல்லது ஏதாவது ஒரு செயலினால் நடந்த விடயங்களை மாற்றி சரி செய்யக் கூடிய அளவுக்கு அந்தப் பிரச்சனை இருக்கவில்லை, மாறாக என்ன செய்தாலும் மாயாவின் மனது மாறாத வரை எதுவும் மாறப்போவதில்லை.

தான் இன்னும் ஊட்டியில் இருக்கப் போகிற இந்த இரண்டு, மூன்று நாட்களுக்குள் எப்படியாவது தன் மேல் எந்த தவறும் இல்லை என்று மாயாவிற்குப் புரிய வைத்து அவள் தன் மீது கொண்டுள்ள கோபத்தை நீக்கி விட வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்துக் கொண்ட சித்தார்த் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து அவர்களது பயணத்தில் தானும் வரப்போவதாக அறிவித்திருந்தான்.

சித்தார்த்தும் தங்களுடன் வருகிறான் என்று தெரிந்து கொண்டதும் சாவித்திரி வெகு சந்தோஷமாக அவனுக்குத் தேவையான பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டு நிற்க, மறுபுறம் மாயா தனது மனதிற்குள் அவனை சாரமாரியாக திட்டிக் கொண்டு நின்றாள்.

‘இப்போ என்ன அவசியம்ன்னு நம்ம கூட வர்றதுக்கு இப்படி அவசரப்படணும்? இவங்க வரலேன்னு இங்கே யாரு அழுதா? இவரு வரலேன்னா நம்மால் போக முடியாதா என்ன? வரட்டும், வரட்டும் அந்த மலையில் வைத்து அப்படியே கீழே தள்ளி விட்டுடுறேன். பார்க்கிறதைப் பாரு, ஆந்தை மாதிரி’ சித்தார்த் தன்னையே பார்த்துக் கொண்டு நிற்பதைப் பார்த்து தனது மனதிற்குள் அவனை வெகுவாக திட்டிக் கொண்டு நின்ற மாயா, அவர்கள் வந்து சேர வேண்டிய இடத்தை வந்து சேரும் வரை அவனைத் திட்டும் தன் பணியை விடவே இல்லை.

அவர்கள் வர வேண்டிய இடத்தை வந்து சேர்ந்ததுமே மற்றைய எல்லா சிந்தனைகளும் பின்தள்ளிப் போக தனது வேலையில் தனது கவனத்தை திருப்பியவள் அவர்கள் வந்திருந்த இடத்தை சுற்றிக் காட்டியபடியே அந்த நீர்வீழ்ச்சியைப் பற்றி விளக்கி சொல்லிக் கொண்டு நின்ற தருணம், “இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீ எப்போதும் வற்றவே வற்றாதுங்களா?” என சித்தார்த் அதி புத்திசாலித்தனமான தனது சந்தேகத்தை வினவ,

அவனை முறைத்துப் பார்த்தபடியே மறுப்பாக தலையசைத்தவள், “இல்லை” என்று விட்டு மேலும் அந்த இடத்தைப் பற்றி விளக்கி சொல்ல ஆரம்பித்தாள்.

மாயாவை சிறிது நேரம் பேசவிட்டு விட்டு பார்த்துக் கொண்டு நின்றவன் சிறிது நேரம் கழித்து, “அப்போ வெயில் காலத்திலும் இங்கே தண்ணீர் நிற்காமல் வந்துட்டே இருக்குங்களா?” என்று வினவ,

சாவித்திரி சிறு அதட்டலுடன், “டேய்! சித்தார்த் பையா, இப்போ எதுக்கு இவ்வளவு அதிமேதாவித்தனமான கேள்வி எல்லாம் கேட்குற? உனக்கு வம்பு வளர்க்க இன்னைக்கு மாயாதான் கிடைச்சாளா?” என்று வினவ,

அவரைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவன், “அப்படி இல்லைம்மா, இவங்க தான் டூரிஸ்ட் கைட் ஆச்சே, அப்போ டூரிஸ்ட்க்கு வர்ற டவுட்டை அவங்க தானே தீர்த்து வைக்கணும், இல்லையா மேடம்?” என்று கேட்க, அவளோ தன் பல்லைக் கடித்துக் கொண்டு ஆமோதிப்பாக தலையசைத்தாள்.

“என்னவோ போ, நானும் கௌசியும் அப்படியே கொஞ்ச நேரம் நடந்து போயிட்டு வரோம், நீ என் கூட வர்றீயா சித்தார்த்?” சாவித்திரியின் கேள்விக்கு மறுப்பாக தலையசைத்தவன்,

“இல்லைம்மா, ஊருக்குப் போவதற்கு முன்னாடி முடிக்க வேண்டிய ஒரு சின்ன வேலை இருக்கு, நான் அதைப் பார்க்கிறேன் நீங்க கௌசிக்கை கூட்டிட்டுப் போங்க” என்று விட்டு அவர்களை அனுப்பி வைத்து விட்டு சற்றுத் தள்ளி தனிமையில் நின்று கொண்டிருந்த மாயாவை நோக்கி நடந்து சென்றான்.

சித்தார்த் வேண்டுமென்றே தன்னிடம் ஏதாவது பேசக் கூடும் என்று புரிந்து கொண்ட மாயா அவனை விட்டு விலகி வந்து நின்று கொண்டிருக்க அவளை விடாமல் பின் தொடர்ந்து வந்தவன், “இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி என்னைப் பார்த்து விலகி ஓட முடியும் மாயா?” என்று வினவ,

அவளோ, “இன்னும் இரண்டு, மூன்று நாட்கள் தான் சார், அதற்கு அப்புறம் எந்தத் தொல்லையும் இல்லை” என்று கூற, சித்தார்த் அவளைப் பார்த்து வாய் விட்டுச் சிரித்துக் கொண்டான்.

“ஆனாலும் மாயா நீ இன்னமும் அப்பாவியாகத் தான் இருக்க பாரேன், இத்தனை நாள் நீ யாரு, என்னன்னு தெரியாமலே உன்கூட விடாமல் பேசிட்டு இருந்தவன் இந்த சித்தார்த், இப்போ நீ, யாரு, என்னன்னு எல்லாம் தெரிஞ்ச பிறகு உன்னை விட்டுட்டுப் போவேனா சொல்லு. உன்னைத் தேடி தேடி வந்துட்டே இருப்பேன்.

இன்பாக்ட் நான் உன்கிட்ட இன்னொரு உண்மை சொல்லணுமே, அதாவது நான் இந்த ஃபோட்டோ சூட்டை ஊட்டியில் பண்ணணும்னு ஏன் பிளான் பண்ணேன் தெரியுமா? உன்னைப் பார்க்கத்தான்” சித்தார்த் இறுதியாக சொன்ன விடயத்தை நம்ப முடியாமல் நின்று கொண்டிருந்த மாயாவின் முகத்தின் முன்னால் சொடக்கிட்டவன்,

“இந்த விஷயத்தை நீ நம்புவதும், நம்பாததும் உன் இஷ்டம், ஆனா நான் மறுபடியும் ஊட்டி வரக்காரணம் நீதான். நீ சொன்ன மாதிரி அன்னைக்கு நான் உங்க அப்பா கிட்ட சொன்ன விஷயங்கள் சரியா, தவறான்னு எனக்குத் தெரியாது, ஆனா உன்னோட கலங்கிய முகம் மட்டும் அடிக்கடி எனக்கு நினைவு வரும், அப்போதெல்லாம் நீ நல்லா படிச்சு ஒரு நல்ல நிலைமையில் இருப்பேன்னு என்னை நானே தேத்திக்குவேன். இருந்தாலும் மனதில் ஒரு ஓரத்தில் உன்னைப் பார்க்கணும்னு அப்பப்போ தோணும், நீ நான் சொன்ன மாதிரியே ஒரு சிறப்பான வாழ்க்கைக்குள்ளே போய் இருப்ப, அதை நான் கண்குளிரப் பார்க்கணும்னு நினைச்சேன், அதனாலதான் ஊட்டி வந்ததும் நான் உன்னை சந்தித்த இடங்களை எல்லாம் தேடித் தேடிப் போனேன், ஆனா நீ கிடைக்கல, கடைசியில் என் கண்ணு முன்னாடி இருந்தவ தான் நான் தேடி வந்தவன்னு தெரிஞ்சதும் ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தது, ஆனா அதேநேரம் உன்னை இந்த நிலையில் பார்த்ததும் அந்த சந்தோஷம் எல்லாம் மொத்தமாக காணாமல் போயிடுச்சு.

யாருமே தெரிந்து எந்தவொரு தப்பையும் பண்ணுறது இல்லை மாயா, நம்ம பண்ணுறது தப்புன்னு தெரியாமல் தப்பு பண்ணுறவங்க தான் இங்கே அதிகம், நானும் அதேமாதிரி தான், நல்லது பண்ணுறோம்னு நினைச்சு இப்படி சே.. அதற்காக நான் பண்ண விஷயத்தை நியாயப்படுத்த மாட்டேன், உன்னால என்னை மன்னிக்க முடிந்தால் மன்னிச்சிடு, இல்லை எனக்கு ஏதாவது தண்டனை கொடுக்கணும் போல இருந்தாலும் கொடுத்துடு. எதுவாக இருந்தாலும் நான் மனதார ஏற்றுக் கொள்ளுவேன், உனக்காக! உனக்காக மட்டும்” என்று கூற, ஒரு சில நொடிகள் அவனையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றவள் தன் மனம் அவனைப் பற்றி என்ன நினைக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் அவசர அவசரமாக அந்த இடத்தை விட்டு விலகிச் செல்ல முயல, விதியின் விளையாட்டோ அந்த சந்தர்ப்பத்தை வேறு விதமாக அவளுக்கு மாற்றிக் கொடுக்க நினைத்திருந்தது.

மாயா சித்தார்த் மீது தனக்கு இன்னும் எஞ்சியிருப்பது வெறுப்பும், கோபமும் மாத்திரமே என்றெண்ணியபடி அந்த இடத்தை விட்டு விலகிச் செல்லப் பார்த்த தருணம், அந்தக் கண்டு முரடான பாதையில் கிடந்த கற்கள் அவளை நிலை தடுமாற செய்திருக்க, அவளது கைகளோ ஏதாவது ஒரு ஆதாரத்தைப் பிடித்து விட வேண்டும் என்கிற நோக்கில் சித்தார்த்தின் கழுத்தை இறுக்கி வளைத்து பிடித்துக் கொள்ள, சித்தார்த்தின் கரங்களோ அவளது இடையை வளைத்துப் பிடித்து அவளை விழ விடாமல் தாங்கிக் கொண்டது.

சித்தார்த்தை விட்டு வெகு தூரம் விலகிச் செல்ல நினைத்திருந்த மாயா கண்ணிமைக்கும் நொடிக்குள் அவனது கைச்சிறைக்குள் அகப்பட்டு நிற்க, மறுபுறம் சித்தார்த் மெல்ல மெல்ல தன் மனதை மாயாவின் வசம் இழந்து கொண்டு நின்றான்……..