எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 08
எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 08
தான் கனவில் காண்பது போல இன்று தனக்கு உண்மையாகவே இந்தப் புலியினால் தான் ஏதோ ஆபத்து நிகழப் போகிறது என்றெண்ணி சித்தார்த் தன்னை மறந்து அலறப் பார்த்த தருணம் ஒரு மென்மையான கரம் அவனது வாயை இறுக்கிப் பிடித்துக் கொள்ள அந்த நொடி அவனுக்குத் தன் வாழ்க்கை மீண்டும் திரும்பக் கிடைத்து விட்டது என்பது போலத்தான் இருந்தது.
ஒரு சில நிமிடங்கள் அந்த ஸ்பரிசத்தில் மெய்மறந்து நின்றவன் அதன் பின்னர் தான் அந்தக் கரத்தின் உரிமையாளர் யாராக இருக்க கூடும் என்கிற யோசனையுடன் மெல்லத் தன் பின் புறமாகத் திரும்பிப் பார்த்தான்.
அவன் திரும்பி பார்த்த இடத்தில் முகத்தில் அங்கங்கே பூத்திருந்த வியர்வைத்துளிகளை துடைத்து விட்டபடியே சித்தார்த்தின் தோளில் ஒரு கரத்தை வைத்தபடி நின்று கொண்டிருந்த மாயாவைப் பார்த்ததும் அவனுக்கு தன்னைச் சுற்றி ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறப்பது போல ஏதோ ஒரு இனிமையான உணர்வு தோன்றியது.
தான் காண்பது ஒருவேளை கனவாக இருக்கக் கூடுமோ என்கிற யோசனையுடன் தன் கையை ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொண்டவன், ‘ஐயோ! வலிக்குது, அப்போ இது நிஜம்தான். ஆனா மாயாவுக்கு எப்படி நான் இருக்கும் இடம் தெரிய வந்தது?’ என்கிற யோசனையுடன் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டு நிற்க, அதே சமயம் மாயாவும் சித்தார்த்தைத் திரும்பிப் பார்க்க இருவரது பார்வைகளும் ஒன்றோடு ஒன்றாக கலக்க ஆரம்பித்தது.
காலம் காலமாக அவளது பார்வையிலேயே தன்னை மறந்து கட்டுண்டு கிடந்தவன் போல மாயாவின் பார்வை வீச்சில் சித்தார்த் தன் சுயம் மறந்து உருகி நிற்க, மாயாவோ அவனது பார்வையின் வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சட்டென்று அவனை விட்டும் தன்னை விலக்கி நிறுத்திக் கொண்டாள்.
மாயா தள்ளி விட்ட வேகத்தில் சித்தார்த் நிலைதடுமாறி கீழே விழப் பார்க்க, அவசரமாக எட்டி அவனது கையைப் பிடித்துக் கொண்டவள், “சாரி” என்றவாறே அவனை நிலையாக நிற்கச் செய்ய அப்போதும் அவனது பார்வை அவளது முகத்தை விட்டு அசையவே இல்லை.
சித்தார்த்தின் பார்வை தன் மீது இருப்பது ஏதோ அவளுக்கு உறுத்துவது போல இருக்க, அவன் முகத்தின் முன்னால் சொடக்கிட்டு அவனை அவனது மோனநிலையில் இருந்து விடுபடச் செய்தவள், “இந்த இடத்தில் நம்ம ரொம்ப நேரம் இருக்க முடியாது, இந்த இடம் ரொம்ப ஆபத்தானது, வாங்க இங்கே இருந்து கிளம்பலாம்” என்றவாறே மாயா அவனது கையைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து அழைத்துக் கொண்டு செல்லப் பார்க்க, அவனோ அவளது பிடியிலிருந்து தன் கையை விலக்கி எடுத்துக் கொண்டான்.
சித்தார்த்தின் அந்த செயலில் சற்றே குழப்பம் சூழ்ந்தவளாக மாயா அவனைத் திரும்பிப் பார்க்க, அவனைப் பார்த்து இயல்பாக புன்னகை செய்தவன், “இங்கே இருந்து போறதுக்கு முன்னாடி ஒரேயொரு தடவை அந்தப் புலியை ஒரு ஃபோட்டோ எடுத்துட்டு போயிடலாமே மாயா. நான் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு இந்தக் காட்டிற்குள் அலைந்து திரிந்ததற்கு இன்னைக்கு தான் உருப்படியாக ஒரு விஷயம் செய்யப் போறேன், ஷோ இது மட்டும் எடுத்துட்டுப் போயிடலாமே. அதோடு இன்னைக்கு நான் பார்த்த வேளைக்கு இதற்கு அப்புறம் என்னை இந்தக் காட்டிற்குள் அனுமதிக்கவே மாட்டாங்க, அதனாலதான் சொல்றேன், ப்ளீஸ் மாயா” என்று கெஞ்சலாக வினவ, அவன் சொன்னதும் சரிதான் என்று புரிந்து கொண்டவள் அவன் கேட்ட விடயத்தை அனுமதிப்பதா? வேண்டாமா? என்று தனக்குள்ளேயே கேள்வியெழுப்பிக் கொண்டு நின்றாள்.
மாயா வெகு நேரமாக அமைதியாக நிற்பதைப் பார்த்து தன் பொறுமையை இழந்த சித்தார்த் அவளது அனுமதியின்றியே அந்தப் புதரை விட்டு வெளியேறி செல்லப் பார்க்க, மாயா அவனை சட்டென்று தன் புறமாக இழுத்து நிறுத்திக் கொண்டாள்.
“என்ன பண்ணுறீங்க? அங்கே உங்க அம்மா உங்களைக் காணோம்னு எவ்வளவு தவித்துப் போய் இருக்காங்க, நீங்க என்னடான்னா ஏதோ புலியோட விளையாடப் போறது மாதிரி போறீங்க, உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுமையே இல்லையா?” மாயா சற்றே கண்டிப்போடு சித்தார்த்தைப் பார்த்து வினவ, அவனது கண்களோ அந்தப் புதரைத் தாண்டி வெளியே நின்று கொண்டிருந்த அந்தப் புலியின் மீது தான் நிலைகுத்தி நின்றது.
அவனது கண்களில் தெரிந்த அந்த ஆசையையும், ஆர்வத்தையும் பார்த்து அதற்கு மேலும் அவனைக் கண்டிப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று புரிந்து கொண்டவள் சித்தார்த்தின் கையிலிருந்த அவனது புகைப்படக் கருவியை வாங்கிக் கொண்டு அந்தப் புதரிலிருந்து வெளியேறி இன்னொரு மரத்தின் பின்னால் மறைந்து நின்று கொள்ள, ஒரு நொடி அங்கே என்ன நடந்தது என்று கூட அவனுக்குப் புரியவில்லை.
கண்ணிமைக்கும் நொடிக்குள் அங்கிருந்து வெளியேறிச் சென்ற மாயா ஒரு சில நிமிடங்கள் கழித்து மீண்டும் சித்தார்த் நின்று கொண்டிருந்த புதரின் அருகில் வந்து அவனது கையில் அவனது கேமராவைக் கொடுக்க, அவளைத் தன் மனதிற்குள் திட்டிக் கொண்டே அதில் எடுக்கப்பட்டிருந்த புகைப்படங்களைப் பார்த்தவன் ஒரு சில கணங்கள் ஸ்தம்பித்து போய் நின்று கொண்டிருந்தான்.
தான் எவ்வாறு எல்லாம் அந்தப் பாரிய விலங்கைத் தன் புகைப்படக் கருவிக்குள் சிறைப்பிடிக்க வேண்டும் என்று அவன் நினைத்திருந்தானோ அதைப் போலவே மாயா அந்தப் புலியைப் புகைப்படங்கள் எடுத்திருக்க, அவளது திறமையை எண்ணி அவனால் வியப்படையாமல் இருக்கவே முடியவில்லை.
“நீ இவ்வளவு நல்லா ஃபோட்டோ எல்லாம் எடுப்பியா?”
“உங்களுக்குத் தேவையான ஃபோட்டோ கிடைச்சாச்சு இல்லையா? வாங்க இங்கே இருந்து போகலாம்”
“ஆனா நான் என் கையால் தானே ஃபோட்டோ எடுக்க ஆசைப்பட்டேன், நீ எடுத்தது எப்படி நான் எடுத்த ஃபோட்டோ ஆகும்?”
“இப்போ என்ன உங்க கையால் எடுக்கணும் அவ்வளவு தானே? சரி, வாங்க” என்றவாறே சித்தார்த்தின் கையைப் பிடித்துக் கொண்டு தான் சிறிது நேரத்திற்கு முன் மறைந்திருந்த மரத்தின் பின்னால் சென்று நின்று கொண்டவள் சுற்றிலும் நோட்டம் விட்டபடியே,
“இப்போ அந்தப் புலி தண்ணீரைக் குடித்து விட்டு ஓடைக்கு அந்தப் புறமாக போயிடும், அதற்கு முன்னாடி சீக்கிரமாக ஃபோட்டோ எடுங்க” என்று கூற, அவளை வியப்பாக பார்த்துக் கொண்டே தன் புகைப்படக் கருவியில் அந்தப் புலியை படம் பிடித்துக் கொண்டவன் தான் எடுத்த புகைப்படங்களைப் பார்க்க, அவை கிட்டத்தட்ட மாயா எடுத்தது போல இருந்தாலும் அவள் எடுத்த புகைப்படத்தில் இருந்த ஏதோ ஒன்று தான் எடுத்த புகைப்படத்தில் குறைவது போலவே அவனுக்குத் தோன்றியது.
எது எப்படியாயினும் தான் நினைத்தது நடந்து விட்ட திருப்தியோடு மாயாவுக்கு நன்றி சொல்ல எண்ணி சித்தார்த் அவளைப் பார்க்க, அவளோ அவனை அவசரமாக தன்னைப் பின் தொடர்ந்து வரும் படி சொல்லி விட்டு வேக வேகமாக அங்கிருந்து நடக்கத் தொடங்கினாள்.
மாயாவின் நடையின் வேகத்திற்கு ஈடு கொடுத்தபடி அவளைப் பின் தொடர்ந்து நடந்து சென்றவன் அவளிடம் பேசுவதற்கு பலமுறை முயற்சி செய்திருந்த போதும், அவளோ அவனைக் கண்டு கொள்ளாதது போல வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தாள்.
மாயாவிடம் எப்படியாவது பேசி விட வேண்டும் என்கிற யோசனையுடன் அவளை எப்படி தன்னிடம் பேசச் செய்வது என்று தான் நின்று கொண்டிருந்த சுற்றிலும் திரும்பிப் பார்த்தவன் சட்டென்று ஏதோ நினைவு வந்தவனாக, “ஐயோ! அம்மா!” என்று அலறிக் கொண்டே தான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து அப்படியே கீழே விழுந்து கொள்ள,
சித்தார்த்தின் அலறல் கேட்டு அவசர அவசரமாக அவனை நோக்கி ஓடி வந்தவள், “ஐயையோ! என்னாச்சு? என்னாச்சு?” என்றவாறே அவனை ஆராய்ச்சியாக நோக்க, அவனோ சட்டென்று அவளது கையை எட்டிப் பிடித்துக் கொண்டான்.
“இப்போ என் கிட்ட இருந்து நீ விலகி ஓட முடியாது மாயா” சித்தார்த் அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே அவளது கையை விடாமல் பிடித்துக் கொண்டு எழுந்து நிற்க, அவளும் மறுத்து எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.
“ஏன் என்னைப் பார்த்தாலே இப்படி விலகி விலகி ஓடுற மாயா? என் அம்மா, தம்பி, தங்கச்சின்னு எல்லார் கூடவும் சகஜமாக பேசிப் பழகுற இந்த மாயா இந்த சித்தார்த்தைப் பார்த்தால் மட்டும் விலகிப் போவதற்கான காரணம் என்ன? இதற்கு முன்னாடி நம்ம சந்திச்சு அப்போ ஏதாவது பிரச்சினை நடந்திருந்தாலும் பரவாயில்லை, ஆனா நான் உன்னை இப்போதான் பார்க்கிறேன், அப்படியிருக்கும் போது எதற்காக இப்படி என்னை அவாய்ட் பண்ணுற மாயா? ஒவ்வொரு நாளும் என் அம்மாவும், தங்கச்சியும் ‘மாயா கூட நாங்க அப்படி பேசினோம், மாயா அப்படி பேசுனா, அப்படி சிரிக்க வைத்தா, மாயா, மாயா…’ன்னு உன்னைப் பற்றி பேசும் போதெல்லாம் அப்போ ஏன் அவ என்னை மட்டும் விலக்கி வைக்கணும்னு தான் எனக்கு குழப்பமாக இருக்கு,
அது மட்டுமில்லாமல் இப்போ உன் உயிரைப் பணயம் வைத்து என்னை நீ காப்பாற்றியிருக்க, அதற்கு ஒரு தாங்க்ஸ் சொல்லலாம்ன்னு தான் இவ்வளவு நேரமாக உன் கிட்ட பேச முயற்சி பண்ணேன், ஆனா நீ அதைக் கூட கேட்க விருப்பமில்லாதது போல சும்மா ஜெட் மாதிரி பறந்து போயிட்டே இருக்க, ஆக்சுவலி உனக்கு என் கூட என்ன பிரச்சினை? நான் பர்ஸ்ட் டே உன்னைப் பார்த்த போது உன்னை கஷ்டப்படுத்துற மாதிரி பேசிட்டேன்னு தான் உனக்கு என் மேலே கோபம்னா ஐ யம் ரியலி ரியலி சாரி, நான் அப்படி பேசுனது தப்புதான். அதற்காக இத்தனை நாள் என் கூட நீ பேசாமல் இருந்ததே போதும், இதற்கு மேலேயும் அப்படி இருக்காமல் இனிமேலாவது என் கூட சகஜமாக பேசுவியா மாயா?” சித்தார்த் மிகுந்த எதிர்பார்ப்புடன் மாயாவின் முகத்தையே பார்த்துக் கொண்டு நிற்க,
சில நொடிகள் தன் கண்களை மூடி அமைதியாக நின்று கொண்டிருந்தவள் பின்னர் ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டு விட்டு தன் கண்களைத் திறந்து கொண்டு, “நீங்க பேச வேண்டியதை எல்லாம் பேசிட்டீங்கன்னா நம்ம இங்கே இருந்து கிளம்பலாமா? அங்கே எல்லோரும் உங்களுக்காக காத்துட்டு இருக்காங்க” என்று கூற, அவனோ சிறு சலிப்புடன் தன் கையிலிருந்த அவளது கையை உதறி விட்டுக் கொண்டான்.
“சத்தியமாக உன்னோடு முடியல மாயா, நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்னு நீ இப்படி என்னை கஷ்டப்படுத்துற? நான் இதுவரைக்கும் என் மனதால் கூட யாருக்கும் கெடுதல் நினைத்தது இல்லை தெரியுமா? நீ இப்படி பண்ணுவது போல இதுவரைக்கும் யாரும் என்னை விலக்கி வைத்தது இல்லை, அப்படி விலக்கி வைத்தாலும் நான் அவங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவும் மாட்டேன், ஆனா உன் விஷயத்தில் என்னால அப்படி இருக்க முடியல, நீ என்னை அவாய்ட் பண்ணுறன்னு தெரிஞ்சும் உன்னைத் தேடி வந்து பேசப் சொல்லி இந்தப் பாழாப் போன மனசு என்னை டார்ச்சர் பண்ணுது, இதற்கெல்லாம் என்ன காரணம்ன்னு கூட என்னால புரிஞ்சுக்க முடியல” என்றவாறே சித்தார்த் தன் தலையைக் கோதி விட்டுக் கொண்டு நிற்க, மாயாவோ தன் தொலைபேசியை எடுத்து ஏதோ ஒரு எண்ணிற்கு அழைப்பு மேற்கோண்டபடி அங்கிருந்து விலகிச் செல்ல, சித்தார்த்தினால் அவளைத் துளி கூட புரிந்து கொள்ள முடியவில்லை.
எல்லோரிடமும் சகஜமாக பழகுபவள் தன்னைப் பார்த்தாலே முகத்தை திருப்பிக் கொள்வதும், தான் பேசச் சென்றால் தன்னை மொத்தமாக விலக்கி நிறுத்துவதும் எதனால் என்று கூட அவனுக்குப் புரியவில்லை.
ஒருவேளை தான் தன்னையும் அறியாமல் ஏதாவது தவறு இழைத்து விட்டோமா என்கிற யோசனையுடன் சித்தார்த் நின்று கொண்டிருந்த தருணம் அந்த வனப்பகுதியின் எல்லைப் புறமாக இருக்கும் காவல் அதிகாரிகள் இருவர் அங்கு வந்து சேர்ந்திருக்க, அவர்களைப் பார்த்த பின்னர் சித்தார்த்தின் மனதில் மாயாவைப் பற்றிய ஓடிக் கொண்டிருந்த சிந்தனை தற்காலிகமாக பின்னோக்கி நகர்ந்திருந்தது.
சித்தார்த் அந்த வனத்துறை அதிகாரிகள் சொன்ன அறிவுறுத்தலை மீறி நடந்து கொண்டமைக்காக அவன் மீது தண்டப்பணம் கட்டும்படி சொல்லியிருக்க, அந்த வேலைகளை எல்லாம் செய்து முடித்தவன் இறுதியாக தன் குடும்பத்தினர் வெகு நேரமாக அவனை எதிர்பார்த்துக் காத்திருந்த இடத்தை வந்து சேர்ந்திருந்தான்.
சித்தார்த்தைப் பார்த்த அடுத்த கணமே சாவித்திரி ஓடி வந்து அவனை அணைத்துக் கொள்ள, “அம்மா! என்ன இது சின்னக் குழந்தை மாதிரி? அதுதான் நான் வந்துட்டேன் இல்லையா? இன்னும் எதற்காக கண்ணை கசக்கிட்டு நிற்குறீங்க? முதல்ல அழுவதை நிறுத்துங்க” என்றவாறே சித்தார்த் அவரது கண்களைத் துடைத்து விட,
சட்டென்று அவனது கையில் அடித்து வைத்தவர், “இனிமேல் காட்டுக்குள்ளே போறேன், புதருக்குள்ளே போறேன்னு கேமராவை எடுத்துட்டு கிளம்பிப் பாரு, உன் காலை உடைத்து விறகுக்கட்டையாக பாவிப்பேன்” என்று கூற, அவனோ அதிர்ச்சியானது போல தன் வாயில் கையை வைத்துக் கொண்டு நின்றான்.
“அம்மா, உங்களுக்குள்ள இப்படி ஒரு முகம் இருக்கா? இத்தனை நாள் உங்களை அமைதியின் மறு உருவம்ன்னு இல்லையா நான் நினைத்தேன்?” சித்தார்த் தன் அன்னையைப் பார்த்து தன் நெஞ்சில் கை வைத்துக்கொண்டு சோகமாக பேசுவது போல கூற,
அவனது தோளில் மெல்லத் தட்டியவர், “போதும் டா உன் நாடகம், வீட்டுக்கு வா, உனக்கு இருக்கு கச்சேரி” என்றவர்,
அவர்களை விட்டு சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த மாயாவைப் பார்த்ததும், “மாயா, நீ ஏன்ம்மா அங்கே நிற்குற? நீ மட்டும் சரியான நேரத்திற்கு இங்கே எங்களை அழைச்சுட்டு வரலேன்னா இந்தப் பாவிப் பையனை எங்கேன்னு போய் நான் தேடி இருப்பேன்? நீ பண்ண இந்த உதவிக்கு ரொம்ப ரொம்ப நன்றி மாயா” என்றவாறே அவளது கையைப் பிடித்துக் கொள்ள, அவளும் சிறு புன்னகையுடன் அவரது கையை மெல்ல அழுத்திக் கொடுத்தாள்.
“சரி ஆன்ட்டி, ரொம்ப நேரம் ஆகிடுச்சு நம்ம கிளம்பலாமா?” மாயாவின் கேள்விக்கு சரியென்று தலையசைத்தவர் தன் பிள்ளைகளுடன் அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல, அவர்கள் வீடு வந்து சேரும் வரை மாயா ஒரு தடவை கூட சித்தார்த்தின் புறம் திரும்பிப் பார்க்கவில்லை.
அவளது பாராமுகமும், தன்னை விலக்கி வைக்கும் விதமும் அவனுக்கு புரியாத புதிராக இருந்தாலும் ஏனோ அவனது உள்மனது அவன் மீது ஏதோ ஒரு தவறு இருக்கிறது என்று அவனுக்கு உணர்த்திக் கொண்டே தான் இருந்தது.
“நான் ஏதாவது தவறு செய்திருந்தால் தான் மாயா இப்படி எல்லாம் என் கூட நடந்து கொள்ள வேண்டும், ஆனா நான் அப்படி என்ன செய்திருப்பேன்? இதற்கு முன்னாடி வேறு எங்கேயும் மாயாவைப் பார்த்த மாதிரியும் நினைவு இல்லையே” சித்தார்த் தங்கள் வீட்டை வந்து சேர்ந்ததை கூட அறியாதவனாக வெகு நேரமாக காரின் உள்ளேயே அமர்ந்த வண்ணம் தான் மனதில் நினைத்த விடயத்தை தன்னை மறந்து சத்தமாக பேசிக் கொண்டிருக்க, அவனது தோளில் தட்டி அவனை நிதானத்திற்கு கொண்டு வந்திருந்த சாவித்திரி அவனை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டே உள்ளே சென்று விட, அவனுக்குத் தான் அவரை இனி எப்படி எதிர்கொள்வது என்று பெரும் சங்கடமாக இருந்தது.
‘ஐயையோ! இனி மதர் சாவித்திரி என்னைக் கேள்வியாக கேட்டு குடைவாங்களே, எப்படி அவங்க கிட்ட இருந்து தப்பிக்கிறது? ஐயோ! ஒண்ணு முடிய ஒண்ணுன்னு ஒவ்வொரு பூதமாக கிளம்புதே! கடவுளே!’ சித்தார்த் தன் மனதிற்குள் புலம்பிக் கொண்டே வீட்டிற்குள் உள் நுழையப் போன தருணம், சரியாக மாயாவும் வீட்டிற்குள் இருந்து வெளியேறி வர சித்தார்த் சிறு கோபத்துடன் அவளது வழியை மறித்தவாறு நின்று கொண்டான்.
“இன்னைக்கு என் கேள்விக்கு பதில் சொல்லாமல் உன்னை இந்த இடத்தை விட்டு நகர விடமாட்டேன் மாயா, ஒழுங்காக என் மேலே என்ன கோபம்ன்னு சொல்லிட்டு போ” என்றவாறே சித்தார்த் வாயிற் கதவின் குறுக்கே தன் இரு கைகளையும் விரித்துக் கொண்டு நிற்க,
அதற்கு மேலும் அவனது கேள்விக்கு பதில் சொல்லாமல் அங்கிருந்து நகர முடியாது என்று புரிந்து கொண்ட மாயா, “என்ன சொல்லச் சொல்லுறீங்க சித்தார்த்? ஐந்து வருஷத்துக்கு முன்னாடி நீங்க என் வாழ்க்கையில் கிளப்பி விட்ட பூகம்பத்தைப் பற்றி சொல்லச் சொல்லுறீங்களா? இல்லை அந்த பூகம்பத்தினால் நான் எல்லாவற்றையும் இழந்து தனி மரமாக நிற்கிறேனே அதை சொல்லச் சொல்லுறீங்களா? சொல்லுங்க எதைச் சொல்லணும்?” என்று வினவ, அவளது கேள்வியில் சித்தார்த்தின் கைகள் தானாக கீழிறங்கிக் கொண்டது.
“நீ…நீ என்ன சொல்லுற மாயா? நான் என்ன பண்ணேன்?”
“ஓஹ்! இப்போ கூட உங்களுக்கு எதுவும் நினைவு வரலயா? இப்போ நான் சொல்லப் போகும் வார்த்தை உங்களுக்கு எல்லாவற்றையும் நினைவு படுத்தும் மிஸ்டர். சித்தார்த்” என்றவாறே அவனைக் கடந்து வந்த மாயா,
“பழைய விஷயங்களை மறுபடியும் நினைச்சுப் பாருங்க சீனியர் சித்தார்த் அண்ணா” என்று விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட, அவளது ‘சீனியர் சித்தார்த் அண்ணா ‘ என்கிற அழைப்பில் சித்தார்த் திகைத்துப்போனவனாக மாயா சென்ற வழியையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றான்….