காதல்போர் 15

காதல்போர் 15
தன் கன்னத்தில் விழுந்த அறையில் சமநிலையின்றி தடுமாறினாலும் கால்களை தரையில் ஊன்றி நின்றுக்கொண்ட அடியாளோ, “எங்களை மன்னிச்சிருங்க, ராவண் பையாதான் எங்களை அடிச்சி போட்டுட்டு அந்த பொண்ணை காப்பாத்தி கூட்டிட்டு போயிட்டாரு. இதுல வம்சியும் கூட சேர்ந்துக்கிட்டு…” தயக்கமாக இழுக்க,
சுஜீப்பிற்கோ தன் மகனை வெட்டிப்போடும் ஆத்திரம்!
“ராவண் பையாவ எங்களால எதிர்க்க முடியல. நேத்து ராத்திரி அவர்கிட்ட அடி வாங்கியதுல பாதிபேர் இப்போ வரைக்கும் மயக்கத்துலயிருந்தே விழிக்கல” பயந்தபடி அவன் சொல்ல,
“அவங்க மூனு பேரும் உயிரோட இருக்கக் கூடாது” பற்களைக் கடித்துக்கொண்டு சொன்ன சுனிலுக்கோ, தன் மகனின் செயலை ஜீரணிக்கவே முடியவில்லை.
கிராமத்தில் இவ்வாறு களவரமாக இருக்க, சென்னையை நோக்கி சென்றுக்கொண்டிருந்த காரில் மூன்று பேரும் மூன்று விதமான மனநிலையில் அமர்ந்திருந்தனர்.
ஊரை எதிர்த்து வந்த ராவணுக்கு ஏனோ தன் தந்தைக்கும் தன்னுடன் இருந்தவர்களுக்கும் துரோகம் செய்துவிட்டோமோ? என்ற குற்றவுணர்ச்சி!
வேதாவுக்கோ மனம் முழுவதும் விக்ரமின் நினைவுதான். இந்த ஊரிற்கு முதல்தடவை வரும் போது அவன் செய்த சேட்டைகள், மொழி தெரியாது அவன் திணறியது, அவனின் பயந்த முகபாவனை என விக்ரம்தான் அவளின் சிந்தனை முழுவதையும் ஆக்கிரமித்திருந்தான்.
இவர்களிருவரின் மனநிலை ஒருவித வேதனையில் இருந்ததென்றால், பின்சீட்டில் அமர்ந்திருந்த வம்சியின் மனநிலையோ பீதியில் இருந்தது. “வம்சி, திருந்தினதுதான் திருந்தின. இப்படி வம்பை விலை கொடுத்து வாங்கிட்டியே… போச்சு போச்சு!” என்று வாய்விட்டே புலம்பிக்கொண்டு வந்தான் அவன்.
“பையா, கண்டிப்பா சுனிலய்யா நம்மள சும்மா விட மாட்டாரு. உயிரை விட ஊர் கௌரவத்தை முக்கியமா பார்க்குறவங்க அவங்க. சொல்லப்போனா, இதோ இவளை கொல்றதோடு சேர்த்து உங்களையும் போட்டுத் தள்ள ப்ளேன் போட்டிருப்பாங்க” வம்சி உறுதியாக சொல்ல, ராவணோ அமைதியாக காரை செலுத்திக்கொண்டு வந்தான்.
ஏற்கனவே தன் நண்பனின் நினைவில் இருந்தவளுக்கு ராவணை பார்க்கப் பார்க்க கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவனை சிவந்த கண்களுடன் பார்த்தவள், “உன்னாலதான் என் விக்கி இறந்திருக்கான். நீதான் கொன்னுட்ட” என்று கோபத்தோடு சொல்ல, அவள் வார்த்தைகளை கண்டுக்கொள்ளவேயில்லை அவன்.
பக்கவாட்டாக திரும்பி அவளை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு மீண்டும் சாலையில் அவன் பார்வையை பதிக்க, “உன்னாலதான்டா நான் அவன இழந்துட்டேன். உன்னை கொன்னாதான் என் ஆத்திரம் அடங்கும்” தன்னை மீறிய கோபத்தில் அவன் வண்டி செலுத்துவதை கூட உணராது அவனின் சட்டையை பற்றி வேதா இழுக்க, “ஏய், விடுடி என்னை!” என்று கத்தியவனின் கையில் சமநிலையின்றி வண்டி தடுமாறத்தான் செய்தது.
அவளோ கண்ணை மறைக்கும் கோபத்தில் அவனை விடாது சட்டையை பற்றி கத்திக்கொண்டிருக்க, பின்சீட்டிலிருந்த வம்சிக்குதான் தூக்கி வாரிப்போட்டது.
பின்னாலிருந்து, “ஏய்! உயிரை பணையம் வச்சி உன்னை காப்பாத்தி கூட்டிட்டு வந்தா, நீ என்னடான்னா எங்க உயிரை காவு வாங்கிருவ போல இருக்கே!” என்று கத்தியவாறு ராவணிடமிருந்து அவளை பிரித்து உட்கார வைத்தான் வம்சி.
ராவணோ வண்டியை ஓரமாக நிறுத்தி வேதாவை மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க உக்கிரமாகப் பார்த்து, “நான் உன்னை ரொம்ப வெறுக்குறேன் மயூரி” என்று பற்களை கடித்துக்கொண்டுச் சொல்ல, கேலியாக இதழை வளைத்தவள், “பெயரை மறந்திருப்பேன்னு நினைச்சேன். எப்படி கண்டுபிடிச்ச என்னை?” சற்று ஆர்வமாகவே கேட்டாள்.
வண்டியை மீண்டும் செலுத்திக்கொண்டே, “இதுவரைக்கும் எந்த பொண்ணுங்களும் என் முன்னாடி எதிர்த்து பேசினது கிடையாது, இரண்டு பேரை தவிர. ஒன்னு இதே ஊரை சேர்ந்த மயூரி, அந்த சின்னப்பொண்ணு முகத்தை என்னால மறக்கவே முடியாது. இன்னொன்னு நீ, வேதஷ்வினி. இரண்டுபேருக்கிட்ட இருந்து வந்த ஒரே வார்த்தை… ஜோக்கர்” அழுத்தமாகச் சொன்னவாறு வேதாவை ராவண் முறைக்க,
அவனுடன் சேர்ந்து அவளுடைய நினைவுகளும் முதன்முறை இருவரும் சந்தித்துக்கொண்ட தருணத்தை நினைவுப்படுத்தியது.
வேதாவிற்கு அப்போது எட்டு வயது, அதாவது மயூரிக்கு.
தன் நண்பி திஷியின் கையை இறுகப் பற்றிக்கொண்ட மயூரி, “திஷி, கையில காசு வச்சிருக்கதானே! வா, அந்த ஸ்கூல் பசங்க வர்றதுக்குள்ள நாம போய் குல்ஃபி வாங்கிரலாம்” என்று சொன்னவாறு இழுக்க, திஷிக்கோ அத்தனை பயம்!
“மாயூ, வேணாம். யாராச்சும் பார்த்து அப்பாகிட்ட சொன்னா என்னைதான் அடிப்பாங்க. எனக்கு அன்னைக்கு வாங்கின அறையில உண்டான வலியே இன்னும் போகல” திஷி பயந்தபடி தான் வாங்கிய அறையை நினைத்து கன்னத்தை தடவி விட்டுக்கொள்ள, நெற்றியில் வெளிப்படையாக அடித்துக்கொண்டாள் அவள்.
“சரி நீ இங்கேயே இரு, உனக்கு குல்ஃபி இல்லை” என்றுவிட்டு திஷியின் கையிலிருந்த நாணயங்களை பிடுங்கிக்கொண்டு மயூரி, அந்த பள்ளிக்கூடத்திற்கு பக்கத்திலிருந்த வண்டியருகே ஓட, “அது என் காசு” என்று கத்தியவாறு தன் தோழியின் பின்னால் ஓடினாள் மற்ற குட்டிச்சிறுமி.
எப்படியோ பேரம் பேசி கையிலிருந்த காசில் இரண்டு குல்ஃபி ஐஸ்கிரீம்களை வாங்கிய மயூரி, ஒன்றை சப்பியவாறு துள்ளிக்குதித்து வந்துக்கொண்டிருக்க, அவளெதிரே வந்துக்கொண்டிருந்தவனை துரதிஷ்டவசமாக கவனிக்காது போனாள்.
அவனும் அவளை கவனிக்காது போனது அவளுடைய கெட்ட நேரமாகவே மாறிவிட, அவன் மீது மோதியதில் தன் கையிலிருந்த ஐஸ்கிரீமை அவனுடைய ஜோக்கர் வேடம் போன்ற ஆடையிலேயே தேய்த்துவிட்டாள் அவள்.
அடுத்தநொடி அவள் தரையில் விழுந்திருக்க, தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து மயூரியை முறைத்துப் பார்த்தவாறு நின்றிருந்தான் பத்து வயது ராவண்.
அவள் தன் மீது மோதியதில் உண்டான கோபத்தில் ராவண் அவளைப் பிடித்து கீழே தள்ளி விட்டிருக்க, விழுந்த வேகத்தில் தரையிலிருந்த கூராங்கல்லில் விழுந்த அடியில் அவளுக்கோ நெற்றியின் ஓரத்தில் இரத்தம் கசிந்தது.
திஷிக்கோ நடந்ததைப் பார்த்து கைகால்களே நடுங்க ஆரம்பித்துவிட்டது. மயூரிக்கு உதவி கூட செய்யாது பயந்தபடி அவள் உறைந்துப்போய் நின்றிருக்க, சடாரென தன்னை தள்ளிவிட்டவனை கோபமாக திரும்பிப் பார்த்தவளுக்கு, தன் காயத்தை பார்த்ததும் அவன் சிரித்ததில் ஆத்திரம் பன்மடங்காக பெருகியது.
கோபத்தில் இரு கைகளிலும் மண்ணை அள்ளி எடுத்தவள், அவன் சற்றும் எதிர்பார்க்காதவாறு அவன் முகத்தில் மண்ணை விசிறியடித்திருக்க, ராவணோ கண்களை இறுக மூடிக்கொண்டான்.
அந்த சந்தர்ப்பைத்தை பயன்படுத்திக்கொண்டவள், திஷியின் கையைப் பற்றி, “ஜோக்கர்” என்று கத்தி பழிப்புகாட்டிவிட்டு அங்கிருந்து ஓடியே இருக்க, அந்த நொடியே அவளுடைய முகம் அவன் மனதில் ஆழமான பதிந்துத்தான் போனது.
அந்த நினைவில் ராவணின் இதழ்கள் அவளை முறைக்க, அவளுடைய இதழ்களோ ஏளனமாக வளைந்தன.
“அன்னைக்கு ஏன் ஊரிலிருந்து தப்பிச்சு போன?” தன்னுள் எழுந்த கேள்வியை ராவண் வாய்விட்டு கேட்டுவிட, அதில் முகம் இறுகியவள் ஜன்னல் வழியே வெளியே வேடிக்கைப் பார்த்தவாறு, “இதே சடங்கைதான் எனக்கும் பண்ண ஏற்பாடு பண்ணாங்க. எனக்கு அப்போ எதுவுமே சரியா தோனல. ஊரை விட்டு ஓடிட்டேன்” என்றாள் ஒரு மாதிரிக்குரலில்.
ராவணும் அதற்கு மேல் எதுவும் கேட்காது அமைதியாகிவிட, இருவரின் உரையாடல்களை பார்த்துக்கொண்டிருந்த வம்சிதான், “ஓஹோ! உங்க இரண்டுபேருக்கும் சின்னவயசுலயிருந்து பழக்கமா? நான் அப்போவே நினைச்சேன், இந்த ஜான்சி ராணி நம்ம ஊரைச் சேர்ந்த பொண்ணாதான் இருக்கும்னு. அம்மணியோட முகஅமைப்பு அப்படி!” சற்று கேலியாகச் சொல்ல, அதில் உதட்டை சுழித்துக்கொண்டாள் வேதா.
அதன்பிறகு மூவரும் எதுவும் பேசவில்லை. பேசும் மனநிலையில் அவர்களும் இல்லை. உணவுக்காக வண்டியை நிறுத்த, இருக்கும் மனநிலையில் வேதாவால் உணவு உண்ண முடியுமா என்ன?
‘வீட்டிற்குச் சென்றால் விக்ரமை பற்றி கேட்பார்களே, அவர்களுக்கு என்ன பதில் சொல்வது? அவனுக்காக காத்திருக்கும் அவன் தந்தைக்கு என்ன பதில் சொல்வது?’ என்ற வேதனை அவளுக்கு!
ராவணோ அவளுக்கான உணவை நீட்ட, அவனை நிமிர்ந்துப் பார்த்தவள், அவனின் சாதாரணமான முகபாவனையில் கடுப்பாகி, “ஒரு மண்ணும் தேவையில்லை. ஒரு அப்பாவிய கொன்னுட்டு எப்படி உன்னால இப்படி இருக்க முடியுது? ச்சீ…” என்று கத்திவிட, அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை ராவண்.
அவளிடம் உண்ணச் சொல்லி கெஞ்சவும் இல்லை. அந்த பழக்கமும் அவனுக்கு இல்லை. அவள் மறுத்ததுமே அவன் பாட்டிற்கு உணவை ஓரமாக வைத்துவிட்டு சிகரெட்டை பற்ற வைத்தவாறு நகர்ந்துவிட்டான்.
“திமிரு திமிரு! உடம்பு பூரா திமிரு! லுக், ஊருக்கு போய் சேரவே இரண்டு நாள் ஆகிடும். நீ உன் பாட்டுக்கு சாப்பிடாம மயங்கினா, யாரு உன்னை தூக்கிட்டு ஆஸ்பத்திரி கையுமா அலையுறது? அதுக்கெல்லாம் இப்போ நேரமில்லை” என்று திட்டிய வம்சி உணவை நீட்ட, வேறுவழியில்லாமல் தூரமாக புகைப்பிடித்தவாறு நின்றிருந்த ராவணை முறைத்துப் பார்த்தவாறு சாப்பிட்டாள் வேதா.
இரண்டுநாட்கள் கழித்து, சென்னையில் வேதாவின் வீட்டில்,
“இன்னும் வீடு வந்து சேரல்ல. எங்கதான் போய் தொலைஞ்சா உங்க மகள்? இதுல என் மருமகனை வேற கூட்டு சேர்த்திருக்கா. இந்த பக்கம் பையா எனக்கு நிமிஷத்துக்கு நிமிஷம் கோல் பண்ணி வம்சிய பத்தி கேட்டு பதறிக்கிட்டு இருக்காரு” வைஷாலி கத்திக்கொண்டிருக்க, தலையில் கை வைத்து அமர்ந்திருந்தார் நரேந்திரன்.
சுனில் மூவரையும் கொல்லச் சொல்லி அடியாற்களை சென்னைக்கு அனுப்பியதும் அதில் பதறிப்போனது என்னவோ சுஜீப்தான். ஏற்கனவே கணவனை இழந்து மகள் விதவையாக வீட்டில் இருக்க, இருக்கும் ஒரு மகனையும் இழந்துவிடுவோமோ? என்ற பயம் வந்துவிட்டது அவருக்கு!
என்னதான் இருந்தாலும் தந்தையல்லவா! சுனில் ஆட்களை அனுப்பியதிலிருந்து வைஷாலிக்கு அழைத்து வேதாவை திட்டி அவர் புலம்பாத புலம்பல்கள் இல்லை. இலை மறை காய் போல் விடயத்தை சொல்லி வம்சியை பாதுகாப்பாக வைக்குமாறு தன் தங்கையிடமே கேட்டுவிட்டார் சுஜீப்.
ஆனா, அம்மூவரையும்தான் தொடர்புகொள்ளவே முடியவில்லையே! வம்சி பயத்தில் அலைப்பேசியை அணைத்தே வைத்திருக்க, ராவண் கிராமத்திலேயே அலைப்பேசியை விட்டு வந்துவிட்டான் என்றால், வேதாவின் அலைப்பேசி தானாகவே அணைந்திருந்தது. அதை கவனிக்கும் நிலையிலும் வேதா இருக்கவில்லை.
“லக்கிய ஏன் திட்டுற வைஷூ? அவ தப்பு பண்றவ கிடையாது. அது உனக்கும் தெரியும். என்ட், அவ எனக்கு மட்டுமா பொண்ணு, உனக்கில்லையா?” நரேந்திரன் அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்க, “தீப்திதான் நான் பெத்த பொண்ணு. வேதா பொண்ணு மாதிரியே தவிர பெத்த பொண்ணாகிறாது” அலட்சியமாக வந்தன வைஷாலியின் வார்த்தைகள்.
அதைக் கேட்டதுமே நரேந்திரனுக்கு சுற்றி இருப்பதை தூக்கிப் போட்டு நொறுக்கும் ஆத்திரம்!
“இதோ இந்த வாழ்க்கை, என் லக்கி எனக்கு கிடைச்சதுக்கு அப்றம்தான் கிடைச்சது. என்னை மொதல்ல அப்பான்னு கூப்பிட்டதும் அவதான். நீ பெத்தது தீப்தியா இருக்கலாம். ஆனா, லக்கிதான் என்னோட மூத்தப்பொண்ணு.” கர்வமாகவே நரேந்திரன் சொல்ல, வைஷாலி மேலும் ஏதோ பேச வரவும், போர்டிகாவில் ஒரு கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
நரேந்திரனும் வைஷாலியும் யாரென கேள்வியாக நோக்க, காரிலிருந்து இறங்கிய வேதாவை பார்த்ததுமே நரேந்திரனுக்கு அத்தனை சந்தோஷம்!
வேதா ஒருவித சங்கடத்தோடு வீட்டுக்குள் நுழைய, “லக்கி…” என்றழைத்தவாறு அவளருகே சென்றவர், “என்னாச்சும்மா? சுஜீப் கோல் பண்ணி ஏதேதோ சொல்றாரு. எனக்குன்னா எதுவுமே புரியல. ஆமா… விக்கி எங்க? காருக்குள்ள இருக்கானா?” என்று அவர் பாட்டிற்கு பேசிக்கொண்டே போக, அவளிடமோ பதிலே இல்லை.
அதேநேரம் ராவணும் அவர்களுக்கு பின்னால் வந்து நிற்க, அவனைப் புரியாது பார்த்தவர், “இந்த பையன் யாரு? அந்த ஊர் பையனாட்டம் இருக்கான். என்ட், இது…” என்று ராவணிடம் ஆரம்பித்து பக்கத்தில் வந்து நின்ற வம்சியை கூர்மையாகப் பார்க்க, தன் மருமகனை கண்டுகொண்டார் வைஷாலி.
“வம்சி…” என்று உற்சாகமாக அழைத்தவாறு அவனை நோக்கிச் சென்றவர், “எப்படிப்பா இருக்க? ஊர்ல இவளோட சேர்ந்து ஏன்ப்பா பிரச்சினைய இழுத்துட்டு வந்திருக்க? பையா உன்னை நினைச்சி ரொம்ப வருத்தத்துல இருக்காரு” என்று புலம்ப ஆரம்பிக்க, சலிப்பாக தலையாட்டினார் நரேந்திரன்.
ஆனால், இங்கு வேதாதான் தன் தந்தையை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. ராவணும் அவளையேதான் பார்த்தவாறு நின்றிருந்தான்.
தன் மகளின் அமைதியை கவனித்த நரேந்திரன், “லக்கி, என்ன பிரச்சினைன்னு சொல்லு! மொதல்ல அந்த படவா எங்க? அப்பாவ பார்க்க உடனே வர முடியாதா அவனால?” சற்று கண்டிப்புடனே கேட்க, ராவணை திரும்பி பார்த்த பாவையாளின் பார்வை ‘இப்போது என் நிலைக்கு காரணமே நீதான்’ என்ற குற்றச்சாட்டைத்தான் தாங்கி நின்றது.
அதை ராவணும் உணரத்தான் செய்தான். நரேந்திரன் வேதாவுடன் பேசும் மொழி அவனுக்கு தெரியவில்லை என்றாலும், வேதாவின் கண்ணசைவுகளை புரிந்துக்கொள்ள முடியாதவனா அவன்!
நரேந்திரனின் கேள்வியின் அர்த்தத்தை விளங்கிக்கொண்டவன், வேதாவின் குற்றச்சாட்டை தாங்க முடியாது தானாக முன்வந்து நடந்ததை சொல்ல வர, “விக்ரம், எங்க இருக்காருன்னு கேக்குறாங்க ராவண். உனக்குதான் தெரியுமே, அவன் இப்போ அவனோட ஃப்ரென்ட் வீட்டுல இருக்கான்னு” என்று அவனிடம் சொல்லிவிட்டு, “அப்பா, அந்த சார் ஆடின ஆட்டத்துக்கு ஆக்சிடன்ட் ஆகிருச்சி. அடியெல்லாம் பலமா இல்லை. அங்கிளுக்கு தெரிஞ்சா பயப்படுவாருன்னு இப்போ அவன் ஃப்ரென்ட் வீட்டுல ரெஸ்ட் எடுக்குறான். கூடிய சீக்கிரம் வந்துருவான்” என்று வேதா படபடவென பேசிக்கொண்டே போனாள்.
நரேந்திரனோ “அவனையெல்லாம் திருத்தவே முடியாது” என்று சலித்துக்கொள்ள, ஓரக்கண்ணால் தன்னை முறைத்துப் பார்ப்பவளை புருவத்தை நெறித்து ஆழ்ந்துப் பார்த்துக்கொண்டிருந்தான் ராவண்.