காதல்போர் 26

eiOOLW357649-d7950995

‘அரே பகவான், என் பொண்ணுங்கள்ல ஒருத்தியவாச்சும் என் அண்ணன் பையனுக்கு கட்டிக் கொடுக்கணும்னு என் நீண்டநாள் ஆசை. ஆனா, இந்த மனுஷன்தான் ஒத்துக்கவே இல்லை. இப்போ என் பொண்ணே காதலிச்சிட்டா. அப்பாடா!’ கடவுளை பாராட்டி நிம்மதி பெருமூச்சுவிட்டவாறு வெளியில் சோகமாக முகத்தை வைத்தாலும் உள்ளுக்குள் துள்ளிக் குதிக்காத குறையாக வைஷாலி நின்றிருக்க, மற்றவர்களின் மனநிலையோ அவர் மனநிலைக்கு எதிராக இருந்தது.

தன் முன் நின்றிருந்த வம்சியை நரேந்திரன் கோபமாக பார்த்தவாறு நின்றிருக்க, உள்ளுக்குள் சற்று குளிரெடுத்தாலும் முகத்தில் பயத்தை காட்டாது வம்சி நின்றிருந்தான் என்றால், கைகளை பிசைந்தவாறு ஒருவித பயத்தோடு நின்றிருந்தாள் தீப்தி.

“மாமா அது…” வம்சி ஏதோ பேச வர, “ஷட் அப்! உன் அப்பா வேதாவை கேட்டப்போவே சொந்தத்துக்குள்ள பொண்ண தர முடியாதுன்னு சொல்லிட்டோம். அப்றம் என்ன? முடியவே முடியாது. இதுக்கு நான் சம்மதிக்கவே மாட்டேன்” நரேந்திரன் விடாப்பிடியாகச் சொல்ல, வம்சியோ பாவமாக தன் அத்தையைப் பார்த்தான்.

‘க்கும்! என் குடும்பத்து மேல என்னதான் பகையோ இந்த மனுஷனுக்கு?’ நொடிந்துக்கொண்டவாறு தன் கணவனின் முன் வந்த வைஷாலி, “அவங்க என்ன பெரிய தப்பு பண்ணிட்டாங்க? காதலிச்சது ஒரு குத்தமா? அதுவும், நம்ம பொண்ணும்தானே காதலிச்சிருக்கா” என்று உதவுகிறேன் பேர்வழியென்று தீப்தியை போட்டுக்கொடுக்க, ‘போட்டுக் கொடுக்குறியா கேடி மம்மி, இரு உன்னை வச்சிக்கிறேன்’ உள்ளுக்குள் பொறுமிக்கொண்டாள் அவள்.

வைஷாலி பேசியதில் அவரை முறைத்த நரேந்திரன், “அவ சின்னப்பொண்ணு, உன் அண்ணன் பையன்தான் அவ மனச கலைச்சிருப்பான், அதுவும் உன் அண்ணன்… அவன எனக்கு சுத்தமா பிடிக்காது” என்று வம்சிக்கு புரியாமலிருக்க தமிழில் திட்ட, திடுக்கிட்டு தன்னைப் பார்த்த தன் அத்தையின் பார்வையிலேயே, ‘மாமா, நமக்கு புரியக் கூடாதுன்னே புரியாத பாஷையில நம்மளதான் ஏதோ கேவலமா திட்டுறாரு போல’ சரியாக நினைத்துக்கொண்டு திருதிருவென விழித்தான் வம்சி.

“ஆனா, காதலிக்கிறவங்கள பிரிக்குறது தப்பில்லையாங்க? இதே கோபம்தானே என் வீட்டாளுங்களுக்கும் நீங்க என்னை இழுத்துட்டு ஓடினப்போ இருந்திருக்கும்! நீங்க அவங்க வீட்டு பொண்ண கல்யாணம் பண்ணீங்க, நாம நம்ம வீட்டுப் பொண்ண அவங்களுக்கு கொடுக்க போறோம். இன்னும் சொல்லப்போனா, அவங்களாச்சும் பொண்ணை முறையா கேட்டாங்க, நீங்க இழுத்துட்டுல்ல ஓடினீங்க” தன் கணவனின் உஷ்ணப் பார்வையை உணர்ந்து சற்றும் அவர் புறம் பார்வையை திருப்பாது எங்கோ பார்த்தவாறு வைஷாலி சொல்லி முடிக்க,

வம்சியும் தீப்தியும் சிரிப்பை அடக்க பெரும் பாடுபட்டார்கள் என்றால், ‘அய்யோ!’ என்றிருந்தது நரேந்திரனிற்கு.

அடுத்து வைஷாலி எவ்வளவு பேசியும் நரேந்திரனின் மனம் மற்றும் மாறவில்லை. தன் தந்தையின் முறைப்பைப் பார்த்தே தீப்திக்கு பேச்சு வரவில்லை. தன்னவனை அவள் ஏக்கமாகப் பார்க்க, விழிகளை அழுந்த மூடித் திறந்து தன்னவளை ஆறுதல்படுத்திய வம்சி, “என்னை கொஞ்சம் பேச விடுங்க அங்கிள், அப்றம் உங்க இஷ்டம்” விடாப்பிடியாகச் சொல்ல, கேள்வியாக நோக்கினார் அவர்.

“அங்கிள், எனக்கு தீப்திய ரொம்ப பிடிச்சிருக்கு. அவளுக்கும்தான். கண்டிப்பா என்னோட காதல் அவளோட படிப்புக்கு தடையா இருக்காது. கல்யாணமானாலும் அவ படிப்பு முடியிற வரைக்கும் இங்கேயே இருக்கட்டும். இல்லைன்னா, அவ படிச்சி முடிச்சதுக்கு அப்றம் கல்யாணத்தை வச்சிக்கலாம். நோ ப்ரோப்ளம். ஏன்னா, எங்க கிராமத்துக்கு ஒரு டாக்டர் தேவை. அது என் மனைவியா இருக்குறது எனக்குதானே பெருமை. என்ட், இது ரொம்ப முக்கியமான மேட்டர் அங்கிள்” வம்சி பொடி வைத்து கடைசி வசனத்தைச் சொல்ல, நரேந்திரனோ புரியாது புருவத்தை நெறித்தார்.

“நீங்க ஒரு அரசியல்வாதி. உங்களுக்கு அப்றம் உங்க இடத்துலயிருந்து சேவை செய்ய உங்களுக்கு ஒரு அரசியல் வாரிசு வேணாமா அங்கிள்? வேதா, தீப்தி இரண்டு பேருமே உங்க தொழில் பக்கம் திரும்பியும் பார்க்க மாட்டாங்க. இஃப் யூ டோன்ட் மைன்ட், உங்க அரசியல் சேவையில என் பங்கும் இருக்கணும்னு என் உள்மனசு பிராண்டுது” தன் மனதிலுள்ள அரசியல் ஆசையை மறைமுகமாகச் சொல்லி, அந்த அரசியல்வாதியையே மிஞ்சும் அரசியல்வாதியாக இவன் பேச, அவனின் பேச்சில் உள்ளுக்குள் அவனை மெச்சிக் கொண்டார் நரேந்திரன்.

இருந்தும் வெளியில் யோசிப்பது போல் பாவனை செய்தவர், தீப்தியைப் பார்க்க, அவளோ தன் தந்தையையே பாவமாக பார்த்துக்கொண்டிருந்தாள்.

“இன்னும் இரண்டு நாள்ல உன் மொத்த குடும்பமும் என் வீட்டுல இருக்கணும்” வைஷாலியிடம் தமிழில் சொல்லிவிட்டு அங்கிருந்து அவர் நகர்ந்துவிட, தன் கணவனை பற்றி வைஷாலி அறியாததா? முகம் முழுக்க புன்னகையுடன் வம்சியிடம் ஓடியவர், அத்தனை சந்தோஷத்தோடு அவனை நெட்டி முறிக்க, அவனுக்குதான் ஒன்றும் புரியவில்லை.

தீப்தியோ நரேந்திரன் சம்மதித்த அதிர்ச்சியில் உறைந்துப்போய் நிற்க, வைஷாலி விளக்கியதைக் கேட்ட வம்சியின் கால்கள் தரையிலேயே இல்லை. ‘இன்ஸ்டன்ட் காஃபி மாதிரி இன்னைக்கே காதலிக்க ஆரம்பிச்சி, இன்னைக்கே மாட்டிக்கிட்டு, இன்னைக்கே அங்கிளும் சம்மதிச்சு அப்பாவ வர சொல்லிட்டாரு’ உள்ளுக்குள் நினைத்தவாறு தன்னவளை அவன் நோக்க,

வம்சியின் அருகில் வந்த தீப்தி, “இனி எவ பக்கமாச்சும் பார்வை போச்சு… விஷ ஊசி போட்டுருவேன்” அமைதியாக போலி முறைப்புடன் மிரட்டியதில், விழி விரித்தவன் “ஹிஹிஹி…” என்று அசடுவழிந்து வைத்தான்.

அடுத்த இரண்டு நாட்களில் சுஜீப்பும் சீதாவும் அங்கு வந்து சேர, பல வருடங்கள் கழித்து தன் அண்ணனை நேரில் பார்த்த சந்தோஷத்தில் வைஷாலி அழுதே விட, சுஜீப்பிற்கு கூட லேசாக விழியோரத்திர் நீர் கசியத்தான் செய்தது.

“அம்மா வரல்லையா பையா?” ஒருவித ஏக்கத்தோடு வைஷாலி கேட்க, “அவங்களால ரொம்ப தூரம் பயணம் பண்ண முடியலம்மா. அதான்…” என்ற சுஜீப், நரேந்திரனை நலம் விசாரித்தவாறு அவரெதிரே அமர, “ஆமா, உங்க பொண்ணு எங்க? வரல்லையா இல்லைன்னா, இன்னும் விதவைப் பொண்ணுன்னு ரூமுக்குள்ள முடக்கி வச்சிருக்கீங்களா?” கேலியாக கேட்டார் நரேந்திரன்.

அந்த கேள்வியில் இருவருக்கும் அத்தனை சங்கடமாகிப் போய் விட்டது. “அது அண்ணா… அம்ரி இப்போ மும்பையில இருக்கா. ஏதோ பெயின்ட்டிங் காம்படீஷனாமே! வேதாதான் சொல்லியிருக்கா போல, அவளுக்கும் ரொம்ப ஆர்வம். ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் கிளம்பினா. அப்றம் இன்னொரு முக்கியமான விஷயம், அம்ரிக்கு ஒரு வரன் வந்திருக்கு. அவளுக்கும் இஷ்டம்தான்” தயக்கமாக ஆரம்பித்து சந்தோஷமான செய்தியோடு சீதா முடிக்க, நரேந்திரனுக்கோ ஆச்சரியம்!

“நிஜமாவா அன்னி? என்னால இதெல்லாம் நம்பவே முடியல. மாப்பிள்ளை நம்ம ஊரு தானா?” வைஷாலி கேட்க, சற்று கர்வமாக சிரித்தவாறு, “மாப்பிள்ளை நம்ம ஸ்டேட் கலெக்டர் ஆதேஷ். அன்னைக்கு ஊருக்கு வந்தப்போ அம்ரிய பார்த்ததுமே அவருக்கு பிடிச்சி போயிருச்சி. அதுவும், நம்ம பொண்ண பத்தி எல்லாம் தெரிஞ்சும் கல்யாணம் பண்றேன்னு சொல்றாரு. இதை விட நல்ல பையன் எங்க போய் தேட?” சுஜீப் சொல்ல, தன் மகளை நினைத்து பெருமைப்பட்டார் நரேந்திரன்.

இத்தனை மாற்றத்திற்கும் அடிதளம் போட்டதே அவள் தானே!

சரியாக வெளியில் செல்வதற்காக தயாராகி வேதா மாடிப்படிகளிலிருந்து இறங்கி வர, அவளைப் பார்த்த சுஜீப்பிற்கு அவளை முகத்துக்கு நேராக காணவே அத்தனை வெட்கமாக இருந்தது. வேதாவை கொல்லத் திட்டமிட்ட போது சொத்துக்காக சுனிலுடன் துணைப் போனவர் அவர், அந்த குற்றவுணர்ச்சி இருக்கத்தானே செய்யும்!

ஆனால், வேதாவோ ஊரிலிருக்கும் போது அவர்கள் தனக்கு செய்ததையெல்லாம் கிட்டதட்ட மறந்தே போயிருந்தாள். எண்ணம் முழுக்க அவளவன் இருக்க, எங்கே வேறு சிந்தனைகள் இருக்க போகிறது?

அவர்களை பார்த்ததும் “வாங்க” என்று மட்டும் சொன்னவள், அங்கிருந்து வெளியேறத் தயாராக, “லக்கி, கொஞ்சநேரம் கழிச்சி போம்மா. முக்கியமான விஷயம் பேச போறோம். நீ இருந்தே ஆகணும்” என்றார் நரேந்திரன். அவரின் வார்த்தைகளில் ஒரு அழுத்தம்! அதை உணர்ந்தவளும் தன் தந்தையை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு தீப்தியின் அருகே அமர்ந்துக்கொண்டாள்.

“சரி இப்போ விஷயத்துக்கு வரலாம். உங்ககிட்ட வம்சி சொல்லியிருப்பான்னு நினைக்கிறேன். எங்களுக்கு இதுல…” நரேந்திரன் பேசிக்கொண்டிருக்கும் போதே இடைவெட்டிய சுஜீப், “எங்களை மன்னிச்சிருங்க, அவன் இப்படி ஒரு காரியத்தை பண்ணுவான்னு நாங்க நினைச்சும் பார்க்கல. இருந்தாலும், எங்களுக்கு இதுல சம்மதம்தான். இன்னும் சொல்லப்போனா, என் தங்கச்சி பொண்ணை என் மகனுக்கு கட்டி வைக்கணும்னு நாங்க ஆசைப்பட்டோம்னு கூட சொல்லலாம்”  என்று சொன்னார் ஒருவித தயக்கத்துடன்.

“பையா, இதுக்கெதுக்கு தயங்குறீங்க? வம்சி என்ன எவனோ ஒருத்தனா? என் அண்ணன் பையன். அவனுக்கு என் பொண்ண கல்யாணம் பண்ண முழு உரிமையும் இருக்கு. இதுக்காக எல்லாம் நீங்க மன்னிப்பு கேக்க அவசியம் இல்லை. எங்க பொண்ணும்தானே காலிச்சிருக்கா. அவங்கள சேர்த்து வைக்கிறதுதானே முறை! எங்களுக்கு முழு சம்மதம்” வைஷாலி முகம் கொள்ளா புன்னகையுடன் பேசிக்கொண்டேப் போக, ‘ஆஹான்!’ என்ற ரீதியில் சட்டென திரும்பி தன் காதல்மனைவியை பார்த்த நரேந்திரன், இருபக்கமும் சலிப்பாக தலையாட்டிக்கொண்டார்.

“அப்போ சீக்கிரமா கல்யாணத்தை வச்சிரலாம். கிராமத்துல கல்யாணத்தை நடத்துறதுல உங்களுக்கு எதுவும் ஆட்சேபனை இல்லையே! அதுமட்டுமில்லாம வம்சியோட ஜாதகப்படி இரண்டு மாசத்துக்குள்ள கல்யாணத்தை நடத்தியாகணும்” தங்களுடைய கோரிக்கைகளை சீதா மெதுவாக தயக்கத்துடன் நரேந்திரனிடம் சொல்ல, “அம்மா என்ன இது?” நரேந்திரனின் முகத்தில் தெரிந்த அதிருப்தியை உணர்ந்து சீதாவை கடிந்துக்கொண்டான் வம்சி.

“இந்த ஜாதகம்ல எல்லாம் எனக்கு சுத்தமா நம்பிக்கையில்ல. மினிஸ்டர் வீட்டு கல்யாணம் ஏதோ ஒரு கிராமத்துல நடக்குறதை என்னால ஏத்துக்க முடியாது. நிறைய பெரிய ஆளுங்க வருவாங்க. அப்படி இருக்குறப்போ இப்படி பண்ணா என் கௌரவம் என்னாகும்? அதுவும், தீப்திக்கு முன்னாடி லக்கி இருக்கா. அவளுக்கு கல்யாணம் பண்ணாம எப்படி?” நரேந்திரன் மனதிலுள்ளதை வெளிப்படையாகச் சொல்ல, சங்கடத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர் சீதாவும் சுஜீப்பும்.

“இல்லை மச்சான், மருமக ஏதோ டாக்டருக்கு படிக்குதாமே! அது முடியுற வரைக்கும் இங்கதான் இருக்க போறாங்க. ஊருல கல்யாணத்தை நடத்தி, ஒரு வாரம் பொண்ணையும் மாப்பிள்ளையையும் எங்க கூட வச்சிட்டு அனுப்பலாம்னு இருக்கோம். சொல்லப்போனா, அதானே முறையும்! எங்களுக்கும் எங்க மகன், மருமகன் எங்க கூட இருக்கணும்னு ஆசை இருக்காதா?” சுஜீப் தன் விருப்பத்தையும் விட்டுக்கொடுக்காதுக் கேட்க, “இல்லை, என்னால இதை…” என்று பேச வந்த நரேந்திரனை இடைவெட்டி ஒலித்தது வேதாவின் குரல்.

“நான் என் தங்கச்சி கல்யாணத்தை பத்தி பேசலாமா?” வேதா கேட்க, தலையசைத்துவிட்டு தன் மகளை கேள்வியாக நோக்கினார் நரேந்திரன்.

“அப்பா, அவங்க கேக்குறதுல என்ன தப்பு இருக்கு? அதுதானே முறையும்! வேணும்னா இப்படி பண்ணலாம், கல்யாணத்தை கிராமத்துல வச்சிட்டு ஒருவாரம் கழிச்சி அவங்க வந்ததும் இங்க க்ரேன்டா ரிசெப்ஷன் வச்சி உங்களுக்கு வேண்டப்பட்டவங்கள கூப்பிட்டுக்கலாம். என்ட், இதுக்கும் என் கல்யாணத்துக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. தேவையில்லாத முடிச்சி போடாதீங்க” கடைசி வசனத்தை அழுத்தமாக சொல்லிவிட்டு வேதா எழப் போக,

“வெயிட் லக்கி” என்ற நரேந்திரன், “முதல்ல சொன்னதுக்கு நான் சம்மதிக்கிறேன். நல்ல யோசனைதான். ஆனா, நீ அடுத்து சொன்னதை என்னால ஏத்துக்க முடியாது. உன் கல்யாணத்துக்கு அப்றம்தான் தீப்தியோட கல்யாணம். இது எப்போவும் மாறாது” அழுத்தமாகச் சொல்ல, அவரை முறைத்துப் பார்த்தாள் வேதா.

“அதான் முடியாதுன்னு சொல்றேன்ல, எனக்கு கல்யாணம் பண்ண இஷ்டம் இல்லை. தட்ஸ் இட்” பதிலுக்கு கத்தியவள் விறுவிறுவென தனதறைக்குச் செல்லப் போக, “லுக், மினிஸ்டர் ரவீந்திரன உனக்கு நல்லாவே தெரியும். அவரோட பையனுக்கு உன்னை கேக்குறாங்க. சீக்கிரம் உன் முடிவை சொல்லு!” அவளுக்கு வந்த வரன் பற்றிச் சொன்னாலாவது அவள் மனதிலிருப்பதை வெளிப்படையாகச் சொல்வாள் என்ற நப்பாசையில் அவர் முயற்சிக்க, அதுவோ தோல்விதான்.

எதுவும் பேசாது இறுகிய முகமாக அவரை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு வேகமாக தனதறைக்குச் சென்று வேதா கதவடைத்துக்கொள்ள, நரேந்திரனும் எதுவும் பேசாது அங்கிருந்து நகர்ந்திருந்தார். ஆனால், சுற்றியிருந்தவர்கள்தான் நடப்பதைப் பார்த்து தலையை சொரிந்துக்கொண்டனர்.

அறைக்கு வந்தவளுக்கோ தன் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவனை விட்டு வந்தும் அவனுடனான நினைவுகள் அவளை விட்டால்தானே! அவளுடைய முதல் காதல் அந்த ராவண்! மறக்க முடியுமா என்ன?

அளவுக்கடந்த கோபம் அவளுக்கு அழுகையைதான் பரிசாகக் கொடுத்தது. அவனை மறக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அவனை மேலும் மேலும் நியாபகப்படுத்தி மனதின் ரணத்தை அதிகப்படுத்தியல்லவா விடுகின்றன!

‘ச்சே! ஏன்டா ஏன் இப்படி பண்ற? உனக்கு என் காதல் புரியவே இல்லல்ல? எல்லாமே காமம்தானா! இதுவரைக்குக் எதுக்காகவும் என் இயல்பை நான் மாத்திக்கிட்டது இல்லை. ஆனா, உன் விஷயத்துல நான் தோத்துப் போயிட்டேன். நீ சொன்னது சரிதான், காதல் எங்களை ரொம்பவே பலவீனப்படுத்தும். ஆனா, நீ ஈஸியா எல்லாத்தையும் தூக்கி போட்ட மாதிரி என்னால உன் மேல வச்சிருக்குற காதல உதறித் தள்ள முடியலடா. இட்ஸ் ஹர்டிங். ஐ ஹேட் திஸ் ஃபீலிங். ஐ ஹேட் யூ ராவண்’

விழிநீர் அருவியாக ஓட, இடதுபக்க நெஞ்சில் உருவாகும் ஒருவித வலியில் நெஞ்சை பிடித்துக்கொண்டு தரையில் மண்டியிட்டு அழுதுக்கொண்டிருந்த வேதா, கதவு தட்டும் சத்தத்தில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

கண்ணீரை அழுந்தத் துடைத்தவள், வேகமாகச் சென்று கதவைத் திறக்க, வாசலில் நின்றிருந்தார் சுஜீப்.

வேதா எதுவும் பேசாது அவரை கேள்வியாக நோக்க, அவளை தயக்கமாக ஏறிட்டவர், “என்னை மன்னிச்சிரும்மா, உன் முகத்தை நேருக்கு நேரா பார்க்குறதுக்கே வெட்கமா இருக்கு. உன்னை அவங்க கொல்ல திட்டம் போட்டதுக்கு நானும் துணையா இருந்தேன்னு தெரிஞ்சும் இதைப் பத்தி நீ வெளியில சொல்லல்ல. ரொம்ப நன்றி” தழுதழுத்த குரலில் சொல்ல, உணர்ச்சி துடைக்கப்பட்ட முகத்துடனே அவரை சற்று நேரம் பார்த்திருந்தாள் அவள்.

ஒரு பெருமூச்சுவிட்டு, “நீங்க மாறினதே போதும். மிக்க மகிழ்ச்சி”  என்ற வேதா, “இந்த சின்னவயசுல உன்கிட்ட இருக்குற தைரியத்தை பார்த்து நான் ரொம்ப வியக்குறேன் வேதா” என்ற சுஜீப்பின் வார்த்தைகளைக் கேட்டு, “நரேந்திரனோட பொண்ணாச்சே! இருக்கத்தானே செய்யும்” என்று சொல்ல, இரத்த உறவை சம்மந்தப்படுத்தி தான் சுட்டிக்காட்டி பேசியதுதான் சுஜீப்பிற்கு நியாபகம் வந்தது.

அவளும் அதை உணர்த்தவே அந்த வார்த்தைகளை அழுத்தமாகச் சொன்னாள்.

அந்த வார்த்தைகளில் சங்கடத்துடன் கூடிய குற்றவுணர்ச்சியை உணர்ந்தவர், “நான் வர்றேன்ம்மா” என்றுவிட்டு நகர, அவருக்குப் பின்னால் பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டவாறு நின்றிருந்த வம்சியோ வேதாவைதான் கேலிச் சிரிப்புடன் பார்த்திருந்தான்.

“என்ன வேதா, தக்காளிபழம் மாதிரி கண்ணு இரண்டும் சிவந்து போயிருக்கு. சரக்கடிச்சியா என்ன?” கேலியாக அவன் கேட்க, அவனை பற்களைக் கடித்துக்கொண்டு முறைத்தவள் எதுவும் பேசவில்லை.

அன்றிரவு அனைவரும் உணவு மேசையில் அமர்ந்திருக்க, தன்னெதிரே அமர்ந்திருந்த மாஹியை புன்னகையுடன் பார்த்த சீதா, “மாஹியோட விஷயத்தை வம்சி சொல்லும் போது எங்களால நம்பவே முடியல. அன்னைக்கு இவ கல்யாணம் நின்னதும் எல்லோருக்குமே வருத்தம்தான். ஆனா, அந்த கல்யாணம் நிக்க காரணமே இவ பையாதான்னு கேட்கும் போது தலை சுத்தாத குறைதான்” என்று ஆச்சரியக்குரலில் சொல்ல, வேதாவும் மாஹியும் சட்டென நிமிர்ந்து வம்சியைப் பார்த்தனர்.

இருவருக்குமே இந்த விடயம் புதிது அல்லவா!

மாஹியோ புன்னகையுடன் கண்கலங்க, வேதாவின் கேள்விப்பார்வையை உணர்ந்து, “ஆமா, மாப்பிள்ளைய பையா மிரட்டின மிரட்டல் அப்படி! என்னதான் வெளியில இப்படி இருந்தாலும், அவருக்கு நெருக்கமானவங்களுக்கு ஒன்னுன்னா அவங்க சந்தோஷத்துக்காக என்ன வேணா பண்ண தயாரா இருப்பாரு” ராவணின் அருமை பெருமைகளை பேசிக்கொண்டேச் சென்றான் வம்சி.

ஆனால், இங்கு வேதாவிற்குதான் பொறுக்க முடியவில்லை. ‘கிழிப்பாரு’ என்று முணுமுணுத்தவள், “அப்பா, எனக்கு கல்யாணத்துக்கு சம்மந்தம்” பட்டென்றுச் சொல்ல, திடுக்கிட்டு நிமிர்ந்துப் பார்த்தார் நரேந்திரன்.

அவள் காதலைப் பற்றி அறிந்திருக்கின்றவருக்கு சட்டென்று இவள் வேறொருவனை திருமணம் செய்ய சம்மதித்ததில் அதிர்ச்சி இருக்கத்தானே செய்யும்!

தன் மகளையே அவர் கூர்ந்து நோக்க, “சம்மதம் சொல்லிட்டேன், இதுக்கப்றம் இதைப்பத்தி உங்களுக்குள்ள பேசி முடிவு பண்ணிக்கோங்க. பட், கல்யாணம் ஃபிக்ஸ் பண்ண டேட் மட்டும் சொல்லிருங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு” ‘யார் வீட்டு விருந்தோ’ என்ற ரீதியில் தன் திருமணத்தைப் பற்றி அவள் பேசிவிட்டு எழப் போக, “உறுதியாதான் சொல்றியா?” அவளை நிறுத்தியது நரேந்திரன் குரல்.

அவரை உறுத்து விழித்தவள், ஒரு தலையசைப்புடன் அங்கிருந்து நகர,  மற்றவர்களிடம் தீப்தி இந்த தமிழ் சம்பாஷனைகளை விளக்கிய அடுத்தநொடி, வம்சியும் மாஹியும்தான் ஒருவரையொருவர் அதிர்ந்துப் பார்த்துக்கொண்டனர்.