அதிகாலை நேரம், எதிரே வருபவர் கூட தெரிய விடாமல் கண்ணாமூச்சி காட்டும் டிசம்பர் பனி மும்பை மாநகரையே குளுமையாக வைத்திருக்க, பாந்ரா நகர் அதிகாலையே படு சுறுசுறுப்பாக இயங்கி கொண்டு இருந்தது. தெற்கே இருந்து சரக்குகளை சுமந்து வந்த லாரி சற்று நேரம் டிரைவர் ஓய்வெடுக்க நிறுத்தி வைக்க, “நாம சேர வேண்டிய இடத்துக்கு வந்திட்டோம் போல” என்று லாரியில் இருந்து குதித்தாள் ஒரு பைங்கிளி.
தமிழகத்தின் பாரம்பரிய உடையான தாவணியின் தலைப்பை கொண்டு முகக்தை முடி இருந்தாள். கையில் ஒற்றை துணிப்பை. கண்களில் பதற்றம். குளிரில் நடுங்கும் உடலை கையால் அணைத்தபடி “அடி ஆத்தி!!! சென்னையில வெயில் கொளுத்தும்னு நம்ம ஊர் புள்ளைங்க சொல்லுச்சு…. இது என்ன இப்படி குளுருது” என்ற பைங்கிளியின் பெயர் மேகவதனி. வயதோ பதினெட்டு தான், கருப்பு நிறத்தழகி, கிராமத்து தேவதை, துணிச்சல்காரி, சேட்டைகாரி.
தென்தமிழகம், தேனியின் வடுகபட்டி தான் இவளது சொந்த ஊர். இரு மகனுக்கு பிறகு எதிர்பாராத விதமாக உருவான தேவதை. தந்தை இவளது பத்தாம் வயதில் இறந்து விட, தாய் படுத்த படுக்கையாகி விட்டார். மேகவதனியின் பன்னிரண்டாவது வயதில் மூத்த அண்ணன் திருமணம் முடிந்து வீட்டுக்கு வர, வதனியின் கெட்ட நேரம் ஆரம்பமானது.
பெரிய அண்ணன் முத்துபாண்டி, சொந்தத்திலே குரலழகியை மணந்து கொண்டார். குரலழகி, குரலில் மட்டும் அழகி இல்லை ஆளை அசத்தும் பேரழகி. மேகவதனியை எந்நேரமும் குறை சொல்லிக்கொண்டே இருப்பாள். அவள் படிப்பை முடக்க பார்க்க, எப்படியோ அரும்பாடு பட்டு பள்ளி படிப்பை முடித்து விட்டாள்.
கல்லூரியில் சேர வாய் எடுக்கும் போது தான் அவளது அன்பு மதனி சொந்தத்தில் அவளது பெரியம்மா மகனை இவளுக்கு பேசி முடித்து இவளது கனவை உடைக்க பார்த்தார்.
சின்ன அண்ணன், சவுந்தரபாண்டி இருவருக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்ல, குரலழகி “வயசு வித்தியாசத்தை வைச்சு என்ன பண்ண முடியும் சின்னவரே…. என் அண்ணனுக்கு கட்டி கொடுத்தா நம்ம கண்ணு முன்னாடியே இருக்க போறா”என்று அவனது மனதையும் கலைத்து விட்டார்.
மேகவதனி பெரும் கவலையோடு தன் வாழ்க்கை முடிந்த உணர்வோடு அவர்களுடன் கோவிலுக்கு சென்றாள். ‘பையனுக்கு ரொம்ப தடைக்கு அப்புறம் இப்ப தான் நல்லது நடக்க போகுது. எல்லாரும் ஒருக்கா குலதெய்வ கோவிலுக்கு போய்ட்டு வந்திடலாம். அதான் கலியாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கே’ என்று மாப்பிள்ளையின் தாய் சொல்லவே இதோ கிளம்பி விட்டனர்.
இவர்கள் அவளை அழைத்து வரவில்லை என்றால் நம் நாயகிக்கு ஓடி போகும் என்னமே வந்திருக்காது. இது தான் விதி வலியது போல. கோவில், மணிமாறன், கல்யான மாப்பிள்ளை வயது மூப்பதை தாண்டி சில பல வருடங்கள் இருக்கும்.
எல்லாரும் சாமி கும்பிட்டு கோவிலின் பிரகாரத்தில் வலம் வர, மேகவதனி மட்டும் குளக்கரையில் அமர்ந்து வானத்தையும் நீரோட்டத்தையும் அமைதியாக பார்த்து கொண்டு இருந்தாள். அவள் அருகே வந்த மணிமாறன் “ஒய் கருப்பி… என்னை கட்டிக்க கடைசியா சம்மதம் சொல்லிட்ட போல… உன் மேல ஆசைப்பட்டு எல்லாம் கட்டிக்கல… வயசு ஆகுதுல எனக்கு எவ்வளவு ஆசை இருக்கும்…. வீட்டு வேலைக்கு ஆள் வைக்க வேண்டாம்…. எல்லாத்துக்கும் உன்னை கலியாணம் பண்ணால் வேற ஆளை பார்க்க வேண்டாம்ல” என்று கோணல் சிரிப்புடன் சொல்ல,
அதுவரை தன்னை வளர்த்த அண்ணனுக்காக கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைத்தவள், இன்று இவனது பேச்சில் முடிவு செய்து விட்டாள். என்ன நடந்தாலும் இந்த கலியாணம் மட்டும் நடக்க கூடாது என்று. இதோ சென்னை வந்துவிட்டதாக நினைத்து தொலை தூரம் அவளை விதி அழைத்து வந்திருக்க காரணம் யாதோ??
மும்பை பாலி ஹில்ஸ், ரத்தோர் மேன்சன், ஹேமந்த் ரத்தோர் தடம் பதிக்காத துறையே இல்லை. துவங்கிய அனைத்தும் வெற்றியே. உலகிலேயே பணக்கார பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர். அமைதியாக தனக்கு வேண்டியதை சாதிக்க வல்லவர். பணம் பின்னே மட்டும் ஓடாமல் பாசத்திற்காவும் மதிப்பளிக்கும் உன்னதமான மனிதர். இவரது தர்மபத்தினி சாருமதி. சாந்தமான தமிழ் பெண். தன் மனைவி மேல் எல்லையில்லா காதல்.
இவர்களின் தவப்புதல்வன் தான் ரேவந்த் ரத்தோர். இளம் இயக்குநர். சொந்தமாக ஆர்.ஆர் ப்ரோடக்சன் வைத்திருக்கிறான். சினிமா துறையில் கால் பதித்த நான்கு வருடங்களிலேயே நான்கு வெற்றி படங்களை தந்துவிட்டான்.
இவனே நாயகனாக நடிக்கலாம். அவ்வளவு அழகு. கூட படித்த பெண்கள் தொடங்கி இப்பொழுது கூட நடிக்கும் பெண்கள் வரை இவன் மேல் பைத்தியமாக சுற்ற, இவனுக்கோ யாரையும் பிடிக்கவில்லை. காதலை தன் படத்தில் தெறிக்கும் விடும் ரேவந்த் தற்போது வரை காதலில் விழவில்லை.
தற்போது,
ரத்தோர் மேன்சன், சாருமதி “இவன் ஏன் இப்படி இருக்கான். வயசு தான் ஆகிறதே தவிர மூளை கொஞ்சம் கூட இல்லை. நேற்று இவனை நம்பி என் ப்ரெண்ட் பெண்ணை மீட் பண்ண வைச்சா சார் பெரிய துரை மாதிரி கேள்வி மேல கேள்வி கேட்டு அந்த பெண்ணை ஓட விட்டு இருக்கான். காலையே என் ப்ரெண்ட் கால் பண்ணி ஒரே திட்டு. உங்க மகன் கிட்ட பேசுவீங்களா இல்லையா?” என்று கோபமாக கேட்க,
ஹேமந்த் “அவன் என் மகன். யார் சொல்வதையும் கேட்க மாட்டான். விடுமா அவனுக்கு இன்னும் யாரையும் பிடிக்கலை போல. பிடிச்சி வாழனும் மா. அப்ப தான் வாழ்க்கை நல்லா இருக்கும். நம்மை மாதிரி அவனும் ஒரு நாள் மாறுவான்” என்று மனைவியை சமாதானம் செய்ய,
“அவன் எப்ப மாறி… நான் எப்ப என் மருமகளை பார்க்கிறது” என்று கவலையாக சொல்ல, ஹேமந்த் “அதுக்கு அவசியமே இல்லை போல அங்க பாரு” என்று கணவன் காட்டிய திசையை பார்க்க,
அங்கே ரேவந்த் மயங்கிய நிலையில் இருக்கும் பெண்ணை தூக்கி வந்தான். பதறிய சாரு “யாருடா என்ன ஆச்சு” என்று கேள்வி தொடுக்க,
“மாம் ஜஸ்ட் மயக்கம் தான். காருக்கு முன்னாடி வந்துட்டா. டாக்டரை வர சொல்லுங்க எதுக்கும் செக் பண்ணிடலாம்” என்று கையில் ஏந்திய தேவதையை தன் அறைக்கு கொண்டு செல்ல,
சாருமதி பதற்றத்துடன் போனை எடுக்க ஹேமந்த் “பொறுமைடா அந்த பெண்ணுக்கு ஒன்றுமில்லை. சின்ன மயக்கம் தான். உன் மகனோட நடவடிக்கையை பார்த்தியா யாரையும் அவனோட அறைக்குள் கூப்பிட்டு போக மாட்டான். யாருனே தெரியாத பெண்ணை கூப்பிட்டு போய் இருக்கான். நீ இவ்வளவு நேரம் கேட்டியே மருமகள் அது இவளா கூட இருக்கலாம்” என்று இருவரும் உள்ளே நுழைந்த சில நிமிடத்திலே டாக்டர் வந்து சாதாரண மயக்கம் தான் என்று ஒரு ஊசியை போட்டார்.
கீழே வரும் மகனிடம் “யாருடா அந்த பெண்” என்ற தாயிடம், “மாம் மார்னிங் ஸூட்டிங் முடிச்சிட்டு வரும் போது இந்த பொண்ணு சடனா கார் முன்னாடி வந்தீட்டா.. பிரேக் போட்டு காரை ஸ்டாப் பண்ணிட்டேன். பட் அவ பயத்தில் மயங்கிட்டா அதான் இங்க கூப்பிட்டு வந்துட்டேன்” என்று தாயிடம் சொல்ல,
தந்தை “இந்த மூவி எப்ப முடிக்கிறடா… நெக்ஸ்ட் என்ன பிளான்” என “இன்னும் டென் டேஸ் இந்த ப்ராஜெக்ட் கம்பிளிட் பண்ணிடுவேன். நெக்ஸ்ட் ஒரு பெரிய பிளான் இருக்கு சீக்கிரம் சொல்றேன். தென் இன்றைக்கு கொஞ்சம் டப்பிங் வோர்க் இருக்கு அது வரை அந்த பெண்ணை பார்த்துக்கோ மாம்” என்று அவனது வேலையை பார்க்க சென்றுவிட்டான்.
ஆர்த்தி இளம் நடிகை தன் மேக்கப் மேன் உடன் “நான் நல்லா தானே நடிச்சேன். தென் வொய் ரேவந்த் அவனோட அடுத்த படத்தில் என்னை கஸ்ட் பண்ணலை” என அவனோ “தெரியலை மேடம். புதுமுகத்தை தேடிறதா பேச்சு வந்துச்சு” என்றான்.
“எடுத்த நான்கு படத்திலுமே பொண்ணுங்க வேறும் சப்ஜெக்ட் தான். இப்ப என்னமோ சரித்திர கதை அதுவும் பெண் நம்பமுடியாத நிலை. பார்க்கலாம் யாரை கஸ்ட் பண்றாருனு” என்று தன் கடைசி கட்ட படப்பிடிப்பு இன்றுடன் முடிவடையும் நிலையில் உள்ளது.
படப்பிடிப்பு வந்த ரேவந்த் தன் உதவி இயக்குநருடன் “நம்ம நெக்ஸ்ட் ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்ண ஏற்பாடு பண்ணுங்க. நான் ஹீரோயின் யாருனு டிசைட் பண்ணிடேன்” என்று சொல்லி விட்டு அன்றைய பணியை முடித்து விட்டு வீட்டுக்கு சென்றான்.
ஹாலில் பதுமையாக அவள் அமர்ந்திருக்க, அவள் அருகே அமர்ந்தவன் “யாரு நீ எதுக்கு அப்படி ஓடி வந்த” என்று விசாரிக்க, தயங்கிய மேகவதனி பின் ஒருவாறாக தன் நிலை படுத்தி கொண்டு “நான் மேகவதனி. என் ஊரு தேனி. வீட்டில கல்யாணத்திற்கு மாப்பிள்ளை பார்த்தாங்க. எனக்கு பிடிக்கலை. அதான் சென்னையில் என் தோழி இருக்கா அவளை பார்க்க யாருக்கும் தெரியாமல் நான் சரக்கு லாரியில் ஏறினேன். ஆனால் அது இங்க கொண்டு வந்திடுச்சு.
எனக்கு நான் எங்க இருக்கேனே தெரியலை. அப்ப இரண்டு பேர் என் கிட்ட வந்து இந்த பையை பிடுங்க பார்த்தாங்க அவங்களுக்கு பயந்து ஓடி வந்தேன். உங்க காரை பார்க்கலை. சாரி” என்று சோர்வாக சொல்ல,
“எதுக்கு கல்யாணம் பிடிக்கலை… இந்த பையில் என்ன இருக்கு” தனக்கு தேவையானதை கேட்க, “அதுவா… நான் படிக்கனும் ஆனால் என் மதனி அவங்க சொந்தத்தில் எனக்கு கட்டி கொடுக்க பார்த்தாங்க. எனக்கு நிறைய படிச்சி பெருசா என் ஊரே வியக்கிற அளவு சாதிக்கனும். இந்த பையில் தான் என்னோட ஸ்கூல் சர்டிபிகேட் இருக்கு அதான்” என்று இழுக்க,
அவளது தாமரை விழியின் நடனத்தில் தன்னை தொலைத்து அவளையே ரசித்து கொண்டு இருக்க, அவளோ அவனின் பதிலை எதிர் நோக்கி அவனது முகத்தை பார்க்க,
சில நிமிடத்தில் “உன் பெயர் என்ன” என்றதும் “மேகவதனி உங்க பெயர்” என்று எதிர் கேள்வி கேட்க, “நானா ரேவந்த்… உனக்கு எப்படி கூப்பிட தோன்றுகிறதோ எப்படி கூப்பிடு” என்று ஆசையாக அவளை பார்க்க, “உங்க ஊரில் அண்ணாவை எப்படி கூப்பிடிவீங்க” என்று அவனின் தலையில் கல்லை போட,
‘அட சண்டாளி’ என்று கடுப்பாக “என்னை ரேவந்த்னே கூப்பிடு தென் காலையில் ரெடியா இரு ஒரு இடத்திற்கு போகனும்” என்று உள்ளே சென்றுவிட்டான்.
‘இவங்க என்ன யாருனே தெரியாதா என்னை அவங்க வீட்டில் இருக்க சொல்றாங்க. ரொம்ப நல்ல மனசு தான்’ என்று யோசிக்கும் போதே சாருமதி அங்கே வந்து “என்னமா இன்னும் தூங்காமல் என்ன பண்ற போய் தூங்கு நாளைக்கு பார்த்துக்கலாம்” என்று அவளை ஒரு அறைக்குள் அனுப்பி தூங்க சொன்னார்.
இவளது மனமோ ‘இங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்க தான். ஆனால் என்னை எப்படி நம்பறாங்கனு புரியலையே.. நாளைக்கு அந்த சார் கிட்ட கேட்கலாம்’ என்று தூங்கியவளுக்கு எங்கே தெரிய போகிறது இவளை பார்த்த அரை மணி நேரத்திலேயே இவளது பிறப்பு முதல் தற்போது வரை அனைத்தையும் கண்டுகொண்டான் என்பது.
மறுநாள் மேகவதனியை அழைத்து சென்ற இடம் அவனது ஸ்டுடியோ. மேதவதனி “நாம எதுக்கு இங்க வந்தீருக்கோம்” என்று புரியாமல் கேட்க, “இங்க பாரு வதனி…. நீ படிக்க தான் ஆசைப்படுற எனக்கு புரியுது பட் நான் நினைச்ச கதாபாத்திரத்தை பல மாதமா தேடினேன். எனக்கு யாரையும் பிடிக்கலை. நீ அந்த பாத்திரத்திற்கு கரெக்டா இருப்பனு தோன்றுகிறது” என்றதும் பயத்தில் உடல் நடுங்க, “நடிப்பா.. எனக்கு தெரியாதே … பயமா இருக்கே” என்றவளின் பயத்தை உணர்ந்து,
“இங்க பாரு கண்ணம்மா… இந்த கதை என்னோட கணவு. நான் ரொம்ப விரும்பி இந்க பாத்திரத்தை வரைந்தேன். அந்த முக வடிவம் யார் கிட்டவும் நான் பார்க்கலை. இப்ப நான் ஆசைப்பட்ட முகம் என் முன்ன இருக்கு. நான் இருக்கேன் நீ எதுக்கு பயப்படற” என்று அவளை அனைக்க துடிக்கும் கரத்தை முடிந்த மட்டு கட்டுப்படுத்தி சொல்ல,
“ஆனால் நான் கருப்பா இருக்கேனே. என் மதனி சொல்லுவாங்க நான் அழகே கிடையாதுனு” என்று கலங்க சொல்ல, “அடியே என் மக்கு கண்ணம்மா நீ அழகா இருந்தாலும் சரி இல்லனாலும் சரி நீ தான் என் ஹீரோயின்” என்று பல எதிர்ப்புக்கு மத்தியில் இவளை நடிக்க வைத்தான்.
சில நாட்கள் பின் முதல் நாள் படப்பிடிப்பில், பயத்தாலும் கூச்சத்தாலும் நிறைய டேக் வாங்க, அத்தனை முறையும் நிதானமாக சொல்லி கொடுக்கும் ரேவந்த்தை அதிசயமாக பார்த்தனர்.
பின்ன இருக்காதா ஒரு டேக் மேல வாங்கினால் அது யாராக இருந்தாலும் கடுமையாக நடந்துக் கொள்வான். முத்த காட்சியாக இருந்தாலும் சரி படுக்கை காட்சியாக இருந்தாலும் சரி ஒரே முறை தான் எடுப்பான். சரியாக வரவில்லை என்றால் ஸ்கிப்ட் பேப்பர் பறக்கும். இன்றோ அதிசயமாக இருந்தது.
ஒரு முறை சில நடிகை தங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்காத கடுப்பில் தனியாக மேகவதனி இருக்க “ஏய் என்ன பண்ணி ரேவந்தை மயக்கின… இல்லனா உனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க தான் வாய்ப்பே இல்லை” என்று ஒருத்தி சொல்ல, மற்றொருத்தி “சின்ன பொண்ணா இருக்கா ஆனால் கில்லாடி தான் என்ன பண்ணால் எது கிடைக்கும்னு தெரிந்து இருக்கே” என்பவர்களின் மொழில் கலங்கி போனாள்.
“ஒரு நாள் மட்டும் தானா இல்லை அவர் கூப்பிடும் போது எல்லாம் போவியா” என்று அவளை அவமானப்படுத்தி கூற, அதே நேரம் “போதும் நிறுத்தறிய….. அவளை பற்றி கேட்க உனக்கு என்ன உரிமை இருக்கு… இதோ இவ கருப்பா இருந்தால் நடிக்கமுடியாதா…. யார் சொன்னால் நிறத்தை பார்த்து தான் படம் பார்ப்பாங்கனு….. இவ கிட்ட இருக்கிற திறமை உங்க யார் கிட்டவும் கிடையாது சும்மா இவளை கஷ்டப்படுத்த பேசனீங்க இதோட எங்கவும் நடிக்க முடியாதபடி பண்ணிடுவேன்” என்று மேகவதனியை தன் அறைக்கு அழைத்து சென்று “உனக்கு அறிவே இல்லையா.. அப்படி பேசறா நான்கு அறை போடுறதை விட்டு கண்ணை கசக்கிட்டி இருக்க. உன்னால முடியும்னு நீ தான் முதலில் நம்பிக்கை வைக்கனும். உன்னுடைய வெற்றி தான் உன்னை தப்பா பேசறவங்க எல்லாருக்கும் நீ கொடுக்க போற பெரிய பதிலடி. என்ன நடந்தாலும் நான் உன் கூடவே தான் இருப்பேன் ” என்று அவனும் சென்றுவிட்டான் இவளது மனதில் சலனத்தை ஏற்படுத்தி விட்டு.
ஒரு வருடம் கழித்து, இவள் நடித்த படம் அந்த ஆண்டின் சிறந்த படமாகவும் இவளுக்கு சிறந்த நடிகைக்கு தேசிய விருதும், சிறந்த இயக்குனராக ரேவந்த் தேர்வாகி இருந்தனர். ரத்தோர் குடும்பமே அங்க செல்ல தயாராகி கொண்டு இருந்தனர்.
மேகவதனி, தேவதையாக வெள்ளை நிற டிசைனர் சாரியில் தாயாராகி இருக்க, ரேவந்த் அதே வெள்ளை கோட்டில் கலக்கலாக வந்தான்.
அரங்கமே கைத்தட்டலில் அதிர, விருதை சந்தோசமாக வாங்கிய மேகவதனி மைக் முன் “தாங்ஸ் பார் திஸ். முக்கியமாக ஒருத்தருக்கு நான் தாங்ஸ் சொல்லனும் என் மேல் எனக்கே நம்பிக்கை இல்லாத போது என்னை நம்பி நடிக்க வைத்த ரேவந்த். ஆனால் நான் நன்றி சொல்ல மாட்டேன். ரேவ் தாங்ஸ பார் கம்மிங் இன் டூ மை லைப். லைப் லாங் என் கூடவே வரியா” என அரங்கத்தின் பெருத்த அமைதி. ரேவந்த் பதிலை கேட்க எல்லாரும் ஆர்வமாக,
அவனோ மெதுவாக எழுந்து மேடையை நோக்கிி வந்தான். எதோ ஒரு தைரியத்தில் கேட்டு விட்டாள். ஆனால் மனம் படபடப்பாக இருக்க தன்னை நெருங்கும் ரேவந்தை கண் சிமிட்டாமல் ரசிக்க,
அவளிடம் இருந்து மைக்கை வாங்கி “இந்த பொண்ணு என்னோட மொத்த ப்ளானையும் கெடுத்துட்டா” என அரங்கமே புரியாமல் அவனை பார்க்க, வதனி பேந்த பேந்த முழித்தாள்.
“இப்படி புரியாமல் முழிக்கிற விழி தான் என்னை அவளிடம் விழ வைத்தது. காதலை திரையில் மட்டுமே காட்ட தெரிந்த எனக்கு, காதலிக்க தெரியும்னு தெரிய வைத்தது என் கண்ணம்மா தான். பார்த்த நொடியே அவ தான் என் வாழ்க்கை என்று முடிவு பண்ணிட்டேன். ஆனால் இவளுக்கு சாதிக்கனும்…. அவளை மூலையில் முடக்க நினைச்ச அத்தனை பேர் முன்னாடியும் என்னால் முடியும் என்று சாதிக்க வெறி.
இப்ப மேடம் அவங்களை ப்ரூ பண்ணிடாங்க. சரி நம்ம கொஞ்சம் ரொமான்ஸா பேசி ப்ரபோஸ் பண்ண நினைச்சா இவளே அதையும் சொல்லிட்டா” என்று சிரிப்புடன் சொல்ல, ‘ப்ரபோஸ் ஹர்’ என்று கூட்டமே கத்த,
புன்னகையுடன் அவளை நெருங்கி
“நான் கிறுக்கிய அழக்கோவியம் நீ!!!
என் வாழ்வின் உயிரோட்டம் நீ!!!
என் வெற்றியின் குவியிடம் நீ!!!
என் தோல்வியின் மறைவிடம் நீ!!!
என் சிரிப்பின் பிறப்பிடம் நீ!!!
என் உயிரின் உறைவிடம் நீ!!!
இந்த கண்ணம்மா எனக்குள் வந்து ரொம்ப…. நாள் ஆகுது. இது வரை தனியாக பயணித்த நாம் இனி வாழ்நாள் முழுவதும் ஒன்றாக பயணிக்கலாம் ” என்று அவளுக்காக தேடி வாங்கிய மோதிரத்தை போட்டு அவளை தன் சரிபாதியாக அனைவருக்கும் தெரிவித்தான்.
மேகவதனி அண்ணன் இருவரும் முதலில் கோபமாக இருந்தாலும் இப்போது அவளது வெற்றியை எண்ணி மகிழ்ந்தனர். அண்ணனிடம் பேசினாலும் இன்னும் சொந்த ஊருக்கு செல்லவில்லை. கண்டிப்பாக போவாள் மேகவதனியாக அல்ல மேகவதனி ரேவந்த் ஆக…
எந்நாளும் அவளை கொண்டாடும் மன்னவனை கொண்ட இந்த கண்ணம்மா வாழ்வில் என்றும் வெற்றி தானே….