சில்லென்ற தீப்பொறி – 18

நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே

மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே

அன்றறிவார் யாரென் றடைக்கலம் வெளவாத

நன்றியின் நன்கினியது இல்.

விளக்கம்

ஒருவர் செய்த உதவியினை நினைத்து வாழ்தல் இனிது. நீதி சபையில் நடுநிலை தவறாமல் இருத்தலின் பெருமை இனிது. யாருக்கும் தெரியாது என்று அடைக்கலமாய் வந்த பொருளை அபகரிக்காமல் இருத்தல் இனிதின் இனிது.

சில்லென்ற தீப்பொறி – 18

மனதிற்குள் வெதும்பித் தவிக்கும் பெண்ணை ஆற்றுபடுத்தவென அந்த நேரமே லக்கீஸ்வரியை வற்புறுத்தி தன்னோடு அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று விட்டார் கமலாம்மா.

அப்பொழுதும் ரெங்கேஸ்வரன் மகளைப் பார்க்காமல் அமைதியாக விழிகளை மூடிக் கொண்டு இருக்க, அதுவே லக்கியின் மனதில் அதிக பாரத்தை ஏற்றி வைத்தது.

வீட்டிற்கு வந்தவள் கமலத்தின் அறிவுரைப்படி ஓய்வெடுத்து, ஏலக்காய் டீ குடித்தவாறே, “டீ சூப்பர் கமலாம்மா!” எனப் பாராட்டி புத்துணர்வு பெற்றாள்.

தோட்டத்தில் நடைபயின்று, சமையலுக்கு உதவி செய்தவள், தந்தை அலுவல் முடித்து வீட்டிற்கு வந்தபோது அமைதியாக தனது அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

அவரின் முன்சென்று அவரையும் கோபப்படுத்தி, தானும் வருந்தி இப்போதுள்ள நல்ல மனநிலையை கெடுத்துக் கொள்ள வேண்டாமே என்று ஒதுங்கிக் கொண்டாள் லக்கி.

ஆனால் அந்த அற்ப நிம்மதிக்கும் வாய்ப்பளிக்காமல் ரெங்கேஸ்வரன், மகளை கீழே அழைத்து விட்டார்.

“சாப்பிட வா லக்கிமா!” என அழைக்க, ‘பசியில்லை’ என வாய் வரை வந்த வார்த்தையை மென்று முழுங்கிக் கொண்டாள்.

‘சொல்பேச்சு கேட்கவில்லை என்று இதற்கும் அதிருப்தி கொள்வாரோ?’ என நினைத்து கீழே வந்த லக்கி, தந்தைக்கு தட்டில் உணவினை பரிமாறி, வேண்டியவற்றை அவருக்கு எடுத்து வைத்த பின்புதான், தானும் உண்ண அமர்ந்தாள்.

மகளின் செயலை அமைதியுடன் பார்த்த ரெங்கனுக்கு பெண்ணின் மாற்றம் கண்கூடாகத் தெரிந்தது. திருமணத்திற்கு முன்பு தன்னுடன் சேர்ந்து சாப்பிட அமர்பவள், கமலாம்மா வந்து பரிமாறிய பின்னர்தான் உண்ணத் தொடங்குவாள்.

அந்த பெண்மணி அருகில் இல்லையென்றால் தட்டில் தாளம் போட்டு, அதற்கு தந்தையையும் உடன் சேர்த்துக் கொள்வாள். அப்படி இல்லையென்றால் ரெங்கன்தான் மகளுக்கு உணவினைத் தட்டில் வைத்துக் கொடுக்க வேண்டும். அவளின் குறும்பும் அடாவடியும் உணவு மேஜையில் அடங்காமல் களை கட்டும்.

இவை அத்தனையையும் அரங்கேற்றுபவள் இப்பொழுது அக்கறையாய் பரிமாறி விட்டு அமர்கிறாள். இன்று மட்டுமல்ல இதற்கு முன்னரும் ஓரிரு முறை ரெங்கன் கவனித்து இருக்கிறார்தான். சமையலில் உதவிகள் செய்து, கமலாம்மாவின் பேச்சினையும் தட்டாமல் கேட்டுக் கொள்கிறாள்.

‘ஆக, என் மகள் தனது பொறுப்பினை உணரத் தொடங்கி விட்டாள். ஆனால் ஏதோ ஒன்றை நினைத்து மருகிக் கொண்டிருக்கிறாள். கணவனிடத்தில் கொண்டிருக்கும் அதிருப்தியைக் கூட வெளியில் சொல்லப் பிடிக்காமல் மௌனமாய் இருப்பதற்கு இந்த பக்குவமும் ஒரு காரணமோ?

தனக்குள் ஏதோ ஒன்றை தீர்மானித்தே நிதானமாக காரியமாற்ற நினைக்கிறாள் போலும். எது எப்படியோ இவளது வாழ்க்கையை இவளே சுபிட்சமாக்கிக் கொள்ளத் தயாராய் இருக்கும்போது நாமும் சற்று விட்டுப் பிடிக்க வேண்டும்.’ தன்போக்கில் மகளின் நிலையை அலசி ஆராய்ந்தவரின் மனமும் சற்றே சமன்பட்டது.

ஆனாலும் மதியம் அழுகையில் கரைந்த மகளுக்கு ஆறுதல் அளிக்க முடியவில்லையே என அரற்றிய மனதுடன், உணவை முடித்துக் கொண்டதும் லக்கியை அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டார் ரெங்கன்.

தந்தையின் அழைப்பிற்கு தயக்கத்துடன் அவரின் அருகே வந்து அமர்ந்தாள் லக்கி. மகள் வரவும் அவளின் தலையை அன்பாக வருடிக் கொடுக்க, அவளும் சலுகையோடு தந்தையின் தோள் சாய்ந்து கொண்டதில் தகப்பனுக்கு பரமதிருப்தி.

“அப்பா மேல கோபமாடா? பாப்பா!” ரெங்கன் இறங்கிய குரலில் கேட்க

“அப்படியெல்லாம் இல்ல டாடி!” வேகமாக தலையாட்டி மறுத்தவள், “கொஞ்சமே கொஞ்சம்… லைட்டா இருக்கு ப்பா!” முகம் சிணுங்கி குறும்புடன் கூறி, ‘நான் பழைய நிலைக்கு திரும்பி விட்டேன்.’ என்பதை உணர்த்தி விட்டாள்.

“இந்த பேச்சை எல்லாம் அப்பப்போ ஒளிச்சு வைச்சுக்கிறடா கண்ணா! உன் மனசுக்கு ஏதாவது சங்கடமா இருந்தா என்கிட்டே சொல்லுடாமா!” ரெங்கன் தானாகவே முன்வந்து கேட்க,

“அப்படியெல்லாம் ஒன்னுமில்லப்பா… அலைச்சல்ல டல் ஆயிட்டேன்!” என மழுப்பியவள் அப்பொழுதும் தனது நிலையை விளக்கிக் கூறவே இல்லை.

அங்கே அவள் இருந்த நிலையினைக் கூறினால் கணவனின் மீது கோபமும், அதை தந்தை தட்டிக் கேட்கப் போய் இல்லாத பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகளும் நிரம்பவே இருக்க, மனதிற்குள் உழன்றதை சொல்லாமல் மூடி மறைத்தாள் லக்கி.

அதோடு அவை எல்லாம் அவர்களின் அந்தரங்கம் சம்மந்தபட்டதாகவே இருக்க, எப்படி மனம் விட்டுச் சொல்ல முடியும்? அத்துடன் மற்றவர் முன் கணவனை குறைகூறி தலைகுனிய வைக்கும் எண்ணம் எப்பொழுதும் லக்கிக்கு இருந்ததே இல்லை.

ஆனால் மகளின் பதிலை ஏற்றுக் கொள்ளாத தந்தையின் மனம், முன்னைப் போலவே பெண்ணின் கவலைகளை தீர்க்க முனைந்து களம் இறங்கியது.

“லக்கிமா… அப்பாக்கு உன்னோட வாழ்க்கை, உன் நிம்மதி  மட்டுந்தான் முக்கியம். அதுக்கு தான் நீ ஆபீஸ் கட்டிடம் எடுத்துக் கட்டுற ஐடியா சொன்னப்பவும் தடுத்துட்டேன். கொஞ்சநாள் அமைதியா இருப்போம். அமிர் மனசு மாறி வரட்டும். இல்லன்னா…” என சற்று இடைவெளி விட்டவர்,

தொண்டையை செருமிக் கொண்டு, “பிசினஸுக்கு வேற மாற்று ஏற்பாடு செய்துடலாம். நம்ம தொழிலுக்காக பார்த்து உன் வாழ்க்கையை கேள்விக்குறியாக்க நான் விரும்பலடா!” ஆதங்கமாய் அக்கறையாய் மனம் முழுவதும் பாசத்தை மட்டுமே சுமந்து கொண்டு பேசியவரின் பேச்சில் மொத்தமாய் வீழ்ந்தே போனாள் லக்கி.

தான் பிறக்கும் முன்பே, தொடங்கிய தொழிலில் லாப நஷ்டங்களைச் சுமந்து, ஒரு பிள்ளையாகவே பாவித்து தொழிலை வளர்த்து நடத்தி வருபவரின் உள்ளம், இதை சொல்லும்போது எத்தனை வேதனைப்பட்டிருக்கும் என்பதை அறிந்து மனதிற்குள் முழுவதுமாய் உடைந்து போனாள்.

உயிருள்ள மனுஷியாக, தான் பிறந்து விட்ட ஒரே காரணத்தால், தன் வயதை விட அதிக வருடங்களாக ஒட்டி உறவாடி, கையாண்டுக் கொண்டிருக்கும் தொழிலை மகளுக்காக கை விட வைப்பது எந்த விதத்தில் சரியாகும்?

இன்றைய மேம்பட்ட வாழ்க்கைக்கே வித்திட்ட மூலப்பொருளை, தந்தையின் உழைப்பை, அடியோடு முடக்க வைப்பதில் என்ன நியாயம்?

ஏறக்குறைய தந்தையின் முப்பது ஆண்டு கால சாதனை, உழைப்பு, நேர்மை என எல்லாமும் பொருளற்றுப் போகின்ற நிதர்சனத்தை நினைத்துப் பார்க்க கூட அவளால் முடியவில்லை.

ஏற்கனவே அவரது தொழிலை தலையெடுத்து நடத்த வேண்டுமென நினைத்தவளுக்கு தந்தையின் ஆதங்கப்  பேச்சு, தூண்டிலிட்ட நெருப்பாய் பற்றி எரிய ஆரம்பித்தது.

எக்காரணம் கொண்டும் அவரின் நிறுவனத்தை கைமாற்றுவதோ, தொழிலை அடுத்தவரிடம் தாரை வார்ப்பதையோ ஆதரிக்கக் கூடாது. எப்பாடுபட்டாவது தன் முயற்சியில் நின்று இந்தத் தொழிலை முன்னை விட வெற்றிகரமாக நடத்திக் காட்ட வேண்டுமென்று மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டாள்.

ஒரு பெண்ணால் எந்த ஒன்றையும் ஏற்று நடத்த முடியுமென்பதை கணவனுக்கு மட்டுமல்ல, தந்தைக்கும் புரிய வைக்க வேண்டுமென்ற வேகம் அவளின் மனதை சுறுசுறுப்பாக்கியது.

இவளின் இந்த முடிவினை தந்தையிடம் சொல்லப் போனால், அவர் வாழ்த்தி ஊக்குவிக்கப் போவதில்லை. வழக்கம் போல் மாப்பிள்ளை பாட்டு பாடி தன்னையும் ஜால்ரா தட்ட வைப்பார் என்பதையும் கருத்தில் கொண்டவள் தனது உத்வேகத்தை அப்படியே மூடி மறைத்தாள்.

ஆனாலும் தகப்பனின் வேதனையில் அவளின் மனமும் வருத்தம் கொண்டது. ‘அனைத்தும் என்னால் தானே!’ என மூலையில் உறங்கிக் கிடந்த கழிவிரக்கம் மீண்டும் எட்டிப் பார்த்தது.

“நான் ரொம்ப செல்பிஷ் கேர்ள் டாடி! உங்க சகலத்தையும் எனக்கே எனக்காகன்னு மாத்தி வச்சுருக்கேன். என்னால அவர்கிட்ட நம்ம நிலைமையைச் சொல்லி புரியவைக்க முடியல… இந்த விசயத்துல நான் தோத்துப் போயிட்டேன்!” என விசும்பியவளை தோளில் சாய்த்துக் கொண்டார் ரெங்கன்.

“எதுவும் தப்பா போகலடா… எல்லாம் நல்லதா தான் முடியும். கொஞ்சநாள் அமைதியா இரு, நம்ம ஆபீஸ் அட்மாஸ்பியர் ரொம்ப ஓல்டு டைப்பா இருக்கிறதால உனக்கு பிடிக்கல. உனக்கு போர் அடிச்சா ஏதாவது கோர்ஸ் எடுத்து படி… இல்லன்னா, எங்கேயாவது டூர் போயிட்டு வா!” தந்தை கூற,

வேண்டாம் என மறுத்த லக்கி, ”கொஞ்சநாள் வேலைக்குப் போகவாப்பா?” சட்டென்று கேட்க, ரெங்கனின் முகம் சுருங்கிப் போனது.

“நாம நூறு பேருக்கு மேல சம்பளம் கொடுத்து, அவங்க குடும்பத்துக்கே படியளந்துட்டு இருக்கோம் லக்கிமா! மாப்பிள்ளைக்கு கூட உன்னோட இந்த முடிவு கோபத்தை வரவைக்கும். இன்னும் உங்களுக்குள்ள அதிகமான  பிரச்சனையை உண்டு பண்ணும். வேற யோசனை இருந்தா சொல்லு!” என்றவர் மேலும் சில விஷயங்கள் பேசியே அவளை ஆறுதல்படுத்தி அனுப்பி வைத்தார்.

‘மகளுக்காகவே வாழ்கிறேன் என மார்தட்டிக் கொண்டு அவளின் விருப்பத்தைப் பற்றி யோசிக்கவே மறந்து விட்டேன்.’ என மனதிற்குள் தன் தவறை உணர்ந்து கொண்டவராக வருத்தப்பட்டுக் கொண்டார் ரெங்கேஸ்வரன்.

அடுத்து வந்த நாட்களில் லக்கி மேலும் தளர்ந்து போனாள். மிதமிஞ்சிய அயர்ச்சியும் சோர்வும் வாட்டி வதைத்திட என்னவென்றே தெரியாமல் ஒய்ந்து போனாள்.

‘நாள் தள்ளிப் போய் விட்டதா?’ என கமலாம்மா அதட்டி உருட்டி கேட்டே பிறகே, அவளுக்கும் அதைப் பற்றிய நினைவு வந்து தேதியைப் பார்த்ததில் முழுதாய் இரண்டு வாரங்கள் தள்ளிப் போயிருந்தது.

“நீ இவ்வளவு தத்தியா இருக்க வேணாம் பாப்பா?” கமலாம்மாவிடமும் பேச்சு வாங்கிக் கொண்டு, அவருடன் மருத்துவரைச் சென்று சந்தித்து வந்தாள் லக்கி.

குழந்தை உறுதி என்ற சந்தோஷ செய்தியில் அனைவருக்கும் இருந்த மனச் சுணக்கம் மறந்து போய் மீண்டும் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. நடேசன் குடும்பத்துடன் வந்து விசாரித்துச் சென்றார்.

‘சென்றமுறை இந்த விசயத்தில் அஜாக்கிரதையாக இருந்து, அதன் பின்னர் நடந்த பிரச்சனைகள் எல்லாம், மீண்டும் இதே சுபச் செய்தியின் மூலம் நேராக்கட்டும்.’ என கடவுளிடம் பிரார்த்தனையே வைத்து விட்டார் ரெங்கேஸ்வரன்.

இரண்டு அடர் கோடுகள் வந்த கர்ப்ப பரிசோதனை பட்டியையும், ஆய்வக முடிவுகளையும் புகைப்படம் எடுத்து, கருவின் தற்போதைய நிலையையும் அமிர்தசாகருக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி வைத்தாள் லக்கி.

இதனைப் பார்த்தவுடன் தன்னை அழைத்துப் பேசுமாறும்  இவள் செய்தி அனுப்பியிருக்க, முழுதாய் மூன்று நாட்கள் கழிந்தும் அவன் பார்க்கவே இல்லை. உள்ளுக்குள் பொங்கிய மகிழ்வெல்லாம் சட்டென்று இறங்கிய உணர்வில் அவளால் ஆத்திரம் கொள்ளவும் முடியவில்லை.

உணர்ச்சிவசப்பட்டோ, கோபப்பட்டோ எந்த ஒன்றையும் மனதிற்குள் வைத்து அலட்டிக் கொள்ளக் கூடாது, உடல்நிலையை பின்னடைய விடக்கூடாது என்ற மருத்துவரின் அறிவுரையும், முதல் கர்ப்பகால அவஸ்தைகளும் அவளை மிரட்டிவிட, முயன்று தன்னை அமைதிபடுத்திக் கொண்டாள்.

கர்ப்பம் என்று தெரிந்த நாளில் இருந்து லக்கியின் அறை கீழே மாற்றம் செய்யப்பட்டு, மகளுக்கு சிரமம் ஏற்படாதவாறு தகுந்த ஏற்பாடுகளை செய்திருந்தார் ரெங்கேஸ்வரன்.

கமலம்மாவின் முழுப் பொறுப்பில் தன்னை ஒப்படைத்து இருந்தாள் லக்கி. ஆகாரங்கள் பழச்சாறுகள் சூப்பு வகைகள் என ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மசக்கைக்கு போட்டியாக கொடுத்து, அருமையாக கவனித்துக் கொண்டார் கமலாம்மா.

“நூறு மில்லி குடிச்சு வெளியே எடுத்தாலும். அடுத்து ஒரு மணி நேரத்துல அதே அளவு குடிக்கணும் பாப்பா! இப்பவே முகம், ரத்தம் இல்லாம வெளிறிப் போயி கிடக்கு. சின்ன உசுருக்கு சத்து வேணாமா?” அன்புடன் அதட்டியே ஏதாவது ஒரு ஆகாரத்தை எடுத்துக் கொள்ள வைத்து விடுவார் கமலம்.

மசக்கையின் அலப்பரைகள் எல்லாம் கங்கணம் கட்டிக் கொண்டே லக்கியை நன்றாக கவனித்துக் கொண்டிருக்க, அவளால் சகஜமாய் இருப்பதும் அரிதாகிப் போனது. சோர்வு அதிகரித்து மூச்சு முட்டிப் போன நிலைமைதான் அவளுக்கு.

‘கர்ப்பத்தின் ஆரம்ப காலகட்டமே இப்படி போட்டு வதைக்கிறதா இந்தப் பெண்ணிற்கு? இது வழமையான வளர்ச்சியின் அறிகுறி தானா?’ மனதில் எழுந்த சந்தேகத்தை உள்ளுக்குள் மறைத்துக் கொண்டார் கமலாம்மா.

அரிதாக சுறுசுறுப்பாக இருக்கும் பொழுதுகளில் கணவனை கரித்துக் கொட்டியே தன்னை சமன்படுத்திக் கொள்வாள் லக்கீஸ்வரி.

‘சரியான அட்டு பீசுடா நீ! ரொமான்ஸ் பண்ண மட்டுமே நீ லாயக்கு. உன்னை எல்லாம் பொண்டாட்டி புள்ளையோட   வாழுன்னு வரம் குடுத்திருக்காரே அந்தக் கடவுள்… அவரைச் சொல்லணும்!’ கடுப்பான எமொஜியை போட்ட குறுஞ்செய்தியை அமிரின் வாட்ஸ்-அப், கூகுள்சாட் மற்றும் முகநூலின் உள்ளடக்கப் பெட்டியில் அனுப்பி வைத்து, தொடர்ந்து கணக்கில் அடங்காத சிவப்புநிற கோப எமொஜிகளையும் போட்டு தெறிக்க விட்டாள் லக்கி. 

கணவனின் பதிலைக் காண கண்ணும் மனமும் பூரித்து ஏமாற்றமடைந்தவளின் உள்ளமெல்லாம் கொதித்துப் போய் கிடந்தது.

‘இப்படி கோபத்தை காமிச்சா மட்டும் வந்து பேசிடப் போறானா? இல்லை ரிப்ளை பண்ணி கொஞ்சத்தான் போறானா?’ மனதிற்குள் மானாவாரியாக அவனை அர்ச்சித்துக் கொண்டே, அசட்டையாக அலைபேசியை மெத்தை மேல் வீசிவிட்டு கண்களை மூடிக் கொண்டாள் லக்கி.

கணவனுக்கு செய்தி அனுப்பிய பிறகு கமலத்தின் வருகையும் அவருடைய சிருஷைகளும் தொடங்கி விட, அலைபேசி பார்ப்பதை மறந்து போனாள்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு, அலைபேசியை எடுத்து இணையத்தை சொடுக்க, வரிசையாக கணவனின் செய்திகள் வாட்ஸ்-அப்பில் வந்து விழுந்தது.

“எதுக்கு இவ்வளவு ரெட் எமொஜி போட்டுத் தள்ளி இருக்க?”

“உங்கப்பா எதுவும் சாஸ் கம்பெனி டிஸ்ட்ரிபியூசன் எடுத்திருக்காரா… அதுக்கு மார்கெட்டிங் பண்றியா?”

“இந்த அட்டு பீசுக்கு ரொமான்ஸ் கத்து குடுக்க வர்றியா… மை ஃபேரி லேடி? ரெண்டு மாசம் பிரேக் எடுத்துட்டு வா! அவசரமில்ல… யுவர் சாச்சு இஸ் ஆல்வேஸ் வெயிட்டிங் ஃபார் யூ!” நக்கல் நையாண்டி கலந்து காதலும் தாபமும் போட்டி போட, தனது செய்திகளை அடுத்தடுத்து அனுப்பி இருந்தான் அமிர்தசாகர்.

அவனது செய்திகளை படிக்கப்படிக்க கோபம் கொப்பளித்தது லக்கிக்கு. மனைவியின் பதிலுக்காக காத்துக் கொண்டு இருந்திருப்பான் போல… அவனது அலைபேசி ஆன்லைன் காட்டியது.

அதனைத் தெரிந்துகொண்டு, “கொழுப்பெடுத்தவனே! என்னை பத்தி, குழந்தையை பத்தி கேப்பேன்னு எதிர்பார்த்தா… நீ எங்கப்பாவை வம்புக்கு இழுத்து கடுப்பேத்துறியா? திருந்தவே மாட்டீங்களா சாச்சு!” கோபக் குறுஞ்செய்தி அனுப்பி சண்டைக்கு இழுக்க, அவனோ காணொளி அழைப்பில் வந்து அவளின் கோபத்திற்கு நெய் வார்த்தான்.

“என்ன கேக்கணும்னு சொல்ற மின்னி? திருந்துற அளவுக்கு என்கிட்டே என்ன கெட்ட பழக்கம் இருக்கு?” புருவம் உயர்த்திய கேள்வியுடன், அழகான புன்னகையில் திரையில் கணவன் தோன்ற, விழி அகலவில்லை லக்கிக்கு.

கண்களைத்தான் முதலில் உற்றுப் பார்த்தாள். ‘சிவப்பு கூடியிருக்கிறதா? இன்னும் குடியை விடவில்லையா?’ என்ற பதட்டம் அவளை முழுதாய் தொற்றிக் கொண்டது. ஏனோ அது எப்போதும் போல் சிவந்தே இருக்கவே, ‘இவன் மாறவில்லை.’ என அலுத்துக் கொண்டாள்.

பின் அவனது முகத்தை ஆராய்ச்சியாக நோக்க, அதற்குள் கணவனும் தனது பார்வை மேய்ச்சலை மனைவியின் மீது தொடங்கி விட்டிருந்தான்.

“சாப்பிடுறதே இல்லையாடி… முகமெல்லாம் ரத்தம் சுண்டிப் போய் இருக்கு? எதுக்கு இப்படி இளைச்சு போயிருக்க? இந்த நிலையிலயும் உன்னை கவனிக்காம, பிசினசை பாக்கிறதுதான் உங்கப்பாவுக்கு முக்கியமா போச்சா?” அக்கறையோடு ஆரம்பித்து குற்றம் குறையோடு மனைவியை கடிந்து கொண்டான் அமிர்.

அவளைப் பார்த்தாலே இளகிப் போகும் மனதை கடிவாளம் போட்டு அடக்கத் தெரியவில்லை அவனுக்கு. ஆனாலும் மனைவியிடத்தில் இறங்கிப் போகவும் மனம் வரவில்லை.

இந்த தொல்லைக்கு தான், அவள் செல்கிறேன் என்று சொன்னபோது, ‘எப்படியோ போ!’ என விடை கொடுத்து அனுப்பியது.

மனைவியிடம் தகவல் தொடர்பிலும் தலைகாட்டாமல் கண்ணாமூச்சி ஆடியதும் இதற்காகதான். ஆனால் இதையெல்லாம் அறிந்து கொள்ளாமல் தன் மீது டன் கணக்கில் கோபத்தை ஏற்றி வைத்திருப்பவளை என்ன சொல்லிப் புரிய வைப்பது?

எந்த நிலையிலும் தனது ஆளுமை மாறாமல் அதட்டலுடன் அமிர் பேச, வெகுண்டு விட்டாள் லக்கி. தன்னைக் கடிந்து கொண்டதை விட தன் தகப்பனை நிந்தித்து கணவன் பேசியதில் சுறுசுறுவென்று மகளுக்கு கோபம் கூடிப் போனது.

“எங்கப்பாவை எதுக்கு இழுக்கிறீங்க? உங்க குழந்தைய பத்தி கேக்க, உங்களுக்கே அக்கறை இல்லை. இதுல நீங்க அடுத்தவரை பத்தி பேச வந்துட்டீங்களா? கேள்வி கேக்கறதுக்கு முன்னாடி நீங்க எந்த லட்சணத்துல என்னை கவனிக்கிறீங்கன்னு நினைச்சுப் பாருங்க!” வாய் வார்த்தை சற்று அதிகப்படியாகவே போய்விட, சட்டென்று பேச்சை நிறுத்தி நாக்கை கடித்துக் கொண்டாள் லக்கி.

கணவனிடம் மன்னிப்பு கேட்டு விடலாமென நினைத்து, அவள் பேச ஆரம்பிக்கும் முன்பே, தனது பிரசங்கத்தை தொடங்கி விட்டான் அமிர்.

“புருஷன் மேல அக்கறை இல்லாம, தனியா இருக்கணும் நிம்மதி வேணும்னு ஓடி ஒளிஞ்ச நீ, என் லட்சணத்தைப் பத்தி பேசுறியா?

நீ எப்ப வந்தாலும் உன்னை அவாய்ட் பண்ண மாட்டேன்னு நான் எப்பவோ சொல்லிட்டேன்! என்னை வேணாம்னு சொல்லிட்டுப் போனவளோட, நான் எப்படி டி கொஞ்சிக் குலாவ முடியும்?

இதே மாதிரி உன்னை நான் வேணாம்னு சொன்னப்ப, உனக்காகப் பேச உங்கப்பா, என் சித்தப்பான்னு ஒரு பட்டாளமே என்னை சுத்தி நின்னு பஞ்சாயத்து பேசினாங்க… ஆனா, எனக்காக பேச இன்னைக்கு வரைக்கும் யார் இருக்கா?” கொதிப்புடன் அமிர் கேட்க, வாயடைத்துப் போனாள் லக்கீஸ்வரி.

‘கடவுளே… இவனது பக்கத்தில் இருந்து பார்க்காமல் மறந்து போனது என் தவறுதான். ஆனால் ஒவ்வொரு முறையும் இதையே சொல்லி என்னைப் பழி வாங்குகிறானே? என் நிலையைக் கூட இவன் சிந்திக்கமாட்டானா?’ கணவன் மீது பாவப்பட்டவளின் சிந்தனை முழுவதும் இவன் ஒரேடியாக தன்னை தவிர்த்து விடுவானோ என தவித்துக் கொண்டிருந்தது.

“நான் அமிர்! சுயம்புவா வளர்ந்து இந்த நிலையில உயர்ந்து நிக்கிறேன். என்னை பார்த்துக்க நான் ஒருத்தனே போதும். ஓயாம உன்கிட்ட என்னைப் பத்திச் சொல்லி, உன்னை மாதிரி சிம்பதி கிரியேட் பண்ணிக்க எனக்குப் பிடிக்காது.

நம்ம குழந்தைன்னு சொல்ல உனக்கு வாய் வரல… என் பிள்ளைன்னு இப்பவே பேசுற! என் குழந்தை மேல எனக்கு அக்கறை இருக்கப் போயித்தான், உன்னை அங்கேயே விட்டு வச்சுருக்கேன். இல்லன்னா உன்னை தூக்கிட்டு வந்து இங்கே அடைச்சு வைக்க எனக்கு எவ்வளவு நேரமாகப் போகுது?

மொத தடவ மாதிரி உன் பயத்துல குழந்தைக்கு எதுவும் ஆகிடக் கூடாதேன்னு நான் எந்த பதிலும் பேசாம இருக்கேன். வீணா என்னை பேச வைச்சு, உன்னை நீயே அசிங்கப்படுத்திக்காதே!” மழை அடித்து ஓய்ந்தது போல் வசைமாறிப் பொழிந்து விட்டு அழைப்பினை துண்டித்தான் அமிர்தசாகர்.

மனைவியை நொடிநேரம் கூட பேச அனுமதிக்கவில்லை. அவனுக்கு அவனது எண்ணங்கள், செயல்கள் மட்டுமே நியாயமாகத் தோன்ற, அதை மட்டுமே இன்று வரையில் செய்து வருகிறான்.

பிரிவின் வலிகளும் வேதனைகளும் இவனை நன்றாகவே புடம்போட்டுப் பார்க்கின்றன. வேண்டாமென்று தலைமுழுகி விட்டு வந்தவனின் ஆசையை மீண்டும் சுரண்டி தூண்டிவிட்ட கணக்காக மனைவியின் வருகை அவனை மாற்றி வைத்திருந்தது.

இந்த ஒரு மாதத்தில் அவளில்லாத தனிமை அவனுக்கு கடுமையான தண்டனையாகத் தோன்றியது. குளிர் பிரதேசத்தில் இருந்தும் சுடும் பாலைவனத்தில் செருப்பின்றி நடப்பதைப் போல அனலாகி நின்றான்.

வேலையின் களைப்பில் நிம்மதியாக உறங்கி விடலாம் என்று நினைத்து அதிகப்படியான வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டதும் பெரும் தவறாகிப் போனது. இரண்டே இரண்டு நாட்கள் மட்டுமே மனம், அவனது கணிப்பிற்கு ஜால்ரா அடித்து விட்டு, தனது புத்தியை காட்டியது.

தகிக்கும் இரவாக ஒவ்வொருநாளும் கடக்க ஆரம்பித்ததில் மூளை சூடேறி கபாலம் வெளியே வந்துவிடுமோ என்றெல்லாம் இல்லாத அச்சம் கொண்டான் அமிர். அதிகமாய் குடித்து சுயத்தை மறக்கும் ஜாதியில்லை அவன்.

‘வொய் டோன்ட் யூ அண்டர்ஸ்டாண்ட் மீ?’ நித்திரை பிடிக்காமல் புதிதாக சிகரெட் புகைமண்டலத்தின் நடுவே அவன் இரவினைக் கழிக்க ஆரம்பிக்கையில், அவன் மீதே அவனுக்கு பச்சாதாபம் வந்திருந்தது.

பிரிவின் ஆற்றாமையை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு வெளியே வீம்பு எதற்கு என்று மனம் கேள்வி கேட்டதில், மனைவியிடம் சாவல் விட்ட கணக்கு நினைவிற்கு வந்து அவனை திடபடுத்தி மனதைக் கல்லாக்கியது.  

மனைவியாக ஏற்படுத்திக் கொண்ட தனிமையின் சுமையை, இப்போது அவனாக அவளுக்கு தரும் தண்டனையாக மாற்றம் செய்தான் அமிர்.

அவள் இதை தண்டனை என்று நினைப்பாளா? தன்னோடு இருப்பதைக் காட்டிலும் தந்தையுடன் இருப்பதைத் தானே பெரிதும் விரும்புவாள். நிச்சயமாக குழந்தை உண்டாகி இருக்கும் இந்த நிலையில் சந்தோசமாக இருப்பாள் என்றே தனக்குள் ஊகித்துக் கொண்டான் அமிர்.

மனைவியை நினைத்து சங்கடப்பட்ட மனதை சரிசெய்ய முனைத்து கொண்டிருக்கும் வேளையில் தானாகவே அழைத்து வக்கணையாக வாங்கிக் கட்டிக் கொண்டு விட்டாள். பாவம் அவள்!

காதலில்லை என்று சொல்லியே அவனை, அவள் மீது பித்தனாக்கி வைத்திருக்கிறாள். கணவன் மனைவிக்குள் நடந்த குட்டிகுட்டி சில்மிஷங்கள் மனோகரமான பேச்சுக்கள் எல்லாமே முடிவுக்கு வந்து விட்டதான நிலை. ஏதோவொரு இறுக்கம் இருவரையும் ஆட்டிப் படைக்கின்றது

‘எப்போது தான் நீ என்னை புரிந்து கொள்வாய்? உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்டி!’ மனதிற்குள் உருகினான் அமிர். உயிர்ப்பே இல்லாத வாழ்க்கையை வாழ்வது தான் தனக்கு விதிக்கப்பட்ட வரமா என்றெல்லாம் அவனுக்கு மனம் கவலை கொள்ளத் தொடங்கிவிட்டது. ஆனாலும் அதை அவன் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. 

லக்கிக்கு, தானாக விலகி வந்ததின் தாக்கமே குறையாமல் இன்னும் புகையைக் கக்கிக் கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் இருவருக்கும் உண்டான இடைவெளியாக அலைபேசியின் அன்றைய பேச்சு அமைந்து போனது.

எதில் எங்கே தோற்றுப் போகிறோம் என்றே லக்கிக்கு சுத்தமாக விளங்கவில்லை. அவ்வளவு ஏன் அதை பற்றி சிந்திக்கவும் கூட மூளை வேலை செய்யவில்லை அதுதான் உண்மை.

இவள் தேடிவந்த தனிமை நிம்மதி எல்லாம் அவளுக்கு என்றுமே கிடைக்கப் போவதில்லை என்பது நன்றாகவே விளங்கியது. தானாக அமைந்த வாழ்க்கையில் திருப்தியுற்று, அதற்கு ஏற்றாற்போல் வளைந்து கொடுப்பதில் மட்டுமே நிம்மதியும் மகிழ்வும் பரிபூரணமாய் கிடைக்கும் என்பது தெள்ளத் தெளிவாக விளங்கியது.

இத்தகைய தெளிவான மனநிலையை அவளது கர்ப்பகாலமும் அதன் மூலம் தொடங்கப் போகும் எதிர்காலமும் அவளுக்கு கொடுத்தன என்பதே மிகச்சரி.

ஆயூட்கால பந்தமாய் வரப்போகும் வரவுகளின் உறவுகளை நினைத்தே நாளும் பொழுதும் பல அனுபவங்களைச் சொல்லி சென்றன. லக்கீஸ்வரிக்கு மட்டுமல்ல அமிர்தசாகருக்கும், தன்னலம் மறந்து பிறர் நலத்தை பேணிக் காக்கும் வித்தையை கற்றுத் தர கடவுள் அளித்த வரங்கள் தான் எத்தனை எத்தனையோ?

அடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே

கடன்கொண்டுஞ் செய்வன செய்தல் இனிதே

சிறந்தமைந்த கேள்விய ராயினும் ஆராய்ந்து

அறிந்துரைத்தல் ஆற்ற இனிது.

விளக்கம்

தம்மை அடைக்கலமாக வந்தவன் துன்பத்தை நீக்குவது இனிது. கடன் வாங்கியாவது செய்ய வேண்டியவற்றைச் செய்வது இனிது. மிகச் சிறந்த நுட்பமான அறிவுடையவர்களாக இருந்தாலும் ஒரு பொருளை ஆராய்ந்து உரைப்பது இனிது ஆகும்.