சில்லென்ற தீப்பொறி – 23

பிச்சை குண்பான் பிளிறாமை முன்இனிதே

துச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே

உற்றபே ராசை கருதி அறனொரூஉம்

ஒற்கம் இலாமை இனிது.

விளக்கம்

பிச்சையெடுத்து உண்பவன் கோபம் கொள்ளாதிருத்தல் இனிது. துன்பத்தில் இருந்தாலும் துன்பம் கூறாது இருப்பவனின் பெருமை இனிது. மிக்க பேராசையைக் கொண்டு அறவழியில் இருந்து நீங்காதிருக்கும் உறுதி இனிது.

 

சில்லென்ற தீப்பொறி – 23

கணவனிடம் பேசாது, அவனைப் பாராது வாரம் ஒன்று கழிந்த நிலையில், நிலை கொள்ளாமல் தவித்து ஒய்ந்தாள் லக்கீஸ்வரி. ஒருவேளை இங்கே வருவதற்கென தனிமையில் இருக்கின்றானோ என நடேசனிடம் கேட்க, அவ்வாறு இல்லையென்று அவரும் கையை விரித்தார்.

‘சென்றமுறை அப்படி இருந்த போது குறுஞ்செய்தியில் பேசிக் கொண்டிருந்தான் தானே? ஆனால் இம்முறை அதுவும் கூட நின்று போய்விட்டதே! ஏன் இப்படி?’ யோசிக்கத் தொடங்கியவளின் மனம் பதட்டத்தில் படபடத்துக் கொண்டது..

இறுதியில் பெருமுயற்சி செய்து அமிர்தசாகரின் ஜெர்மன் அலுவலகத்தை தொடர்பு கொண்ட லக்கி, அவனைப் பற்றி விசாரித்துக் கேட்டதில் கிடைத்த பதில் என்னவோ அத்தனை நிம்மதியை கொடுப்பதாக இல்லை. ஆனால் மனம் ஓரளவிற்கு பதட்டத்தைக் கைவிட்டு ஆசுவாசப்பட்டது.

‘கடந்த எட்டு நாட்களாக உடல் சுகவீனப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளியாக உள்ளான். உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் நோயின் தீவிரத்தில் மிகவும் பலவீனமாக இருக்கிறான்.’ என்கிற தகவல் கிடைக்கப் பெற, வெகுவாக தவிக்கத் தொடங்கி விட்டாள்.

‘கடவுளே இதென்ன சோதனை? ஸ்ட்ரெஸ், பசியில்லை என அவன் அடிக்கடி சொல்லும் போதே என்னவென்று அழுத்திக் கேட்டு கவனித்திருக்க வேண்டுமோ? கணவனின் மீதான அக்கறையும் பொறுப்பும் தனக்கு இல்லையென்று அவன் கூறுவதும் உண்மைதானோ!’ மனதிற்குள் பதைபதைத்துக் கொண்டு தன்னையே குற்றம் சாட்டிக் கொண்டாள் லக்கி.

அமிரின் அலுவலக நண்பர் ஒருவரைப் பிடித்து அவனைப் பேச வைக்குமாறு கோரிக்கை வைக்க, அடுத்தநாள் பெரும் சோர்வுடன் காணொளியில் வந்து பேசினான் அமிர்தசாகர்.

எண்ணெய் படியாத தலை, இரத்தம் வற்றி வெளுத்துப் போன, சவரம் செய்யாத முகம், மிதமிஞ்சிய சோர்வினைத் தாங்கிய கண்களும் குரலும் சேர்ந்து அமிரை தலைகீழாய் மாற்றி வைத்திருந்தது.

அவனைத திரையில் பார்த்ததுமே லக்கியின் கண்களில் தன்னால் நீர் கோர்த்துக் கொண்டது.

“ஏன் இப்படி இருக்கீங்க சாச்சு? என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் எனக்கு ஒரு தகவலும் சொல்லல…” கரகரத்த குரலில் வரிசையாக இவள் கேட்க, சோர்வுடன் சலித்துக் கொண்டான் அமிர்.

“சொன்னா மட்டும் அங்கே இருந்து உன்னால என்ன கிழிக்க முடியும்?” சுள்ளென்று எரிந்து விழுந்து மூச்சு வாங்கினான் அமிர்.

‘இவனிடம் இந்த பேச்செல்லாம் எதிர்பார்த்த ஒன்றுதான்.’ என மனதை திடப்படுத்திக் கொண்டு கண்ணீரை மறைத்துக் கொண்டாள் லக்கி.

“அப்புறமா கோபப்படலாம், என்ன ஆச்சுன்னு சொல்லுங்க?” கண்டிப்பான குரலில் கேட்க, அதற்குமே காய்ந்தான் அமிர்.

“சொல்லிட்டா மட்டும் வேகமா வந்து, அக்கறையா என்னை பார்த்துக்கப் போறியா? எப்பவும் போல டேக் கேர், குட்நைட் சொல்லிட்டு உன் பிள்ளைகளோட சுகமா நீ தூங்கப் போயிடுவ… இந்தக் கருமத்துக்கு நான் சொல்லித் தொலைக்கணுமா?” நோயின் வேதனையை கோபமாக மாற்றி வார்த்தைகளால் குத்திக் கிழித்தான்.

அவனது ஆதங்கமும் நோயின் தீவிரமுமே அவனை நிலையில்லாமல் பேச வைக்கிறது என்பது லக்கிக்கு தெளிவாகப் புரிந்தாலும் கணவனின் பேச்சு அவளை உயிரோடு புதைத்தே போட்டது.

“ஐசியூ-ல அட்மிட் ஆகுற அளவுக்கு என்ன ஆச்சு? இதைக்கூட நான் தெரிஞ்சுக்க கூடாதா? கொஞ்சம் நிதானமா சொல்லுங்க…. ப்ளீஸ்!” லக்கி கெஞ்சலாகக் கேட்டாலும் தன் நிலையில் இருந்து சிறிதும் மாறாமல் சினமேறிய குரலில் கனன்றான். 

“ஒஹ்… இப்ப எல்லாம் நான் எப்படி பேசணும்னு சொல்லிக் காட்டுற அளவுக்கு நீ மாறிட்டியா? நான் செத்துப் போகணும்ன்னா கூட உன்கிட்ட பெர்மிசன் வாங்கிட்டு தான் போகணும்னு ஆர்டர் போடுவ போல?” தணலாய் வார்த்தைகளைக் கொட்ட காதுகளை பொத்திக் கொண்டாள் லக்கி.

“ரொம்ப உளர்றீங்க… பேசவும் மூச்சு வாங்குது உங்களுக்கு… உங்க ஃபிரெண்டு கிட்ட ஃபோனை குடுங்க நான் டீடெயில்ஸ் கேட்டுக்கறேன்.” சமாதானமாகச் சொன்னாலும் அவன் விடவே இல்லை.

“இப்ப என்ன புதுசா, என்னை பத்தி அடுத்தவன் கிட்ட கேட்டு அலப்பறை காமிக்கிற…. என்னைப் பார்த்துக்க எனக்கு தெரியும். எப்பவும் நான் தனியாதானே இருக்கேன்… அப்படியே இருந்து தேறி வந்துடுவேன். இப்ப ஃபோனை வை… பொழைச்சு வந்தா உன்னை வந்து பார்த்து தொலைக்கிறேன்.” சினமேறிப் பேச்சில், சோர்வு, ஆற்றாமை எல்லாம் ஆட்டிப் படைக்க மனைவியிடம் அனைத்தையும் கொட்டி அழைப்பினை துண்டித்தான் அமிர்.

கணவனிடம் பேசிவிட்டோம் என லக்கியின் உள்ளம் அமைதி கொள்வதற்குப் பதிலாக சகலமும் பதறிப் போனது அவளுக்கு. தான் எங்கே தவறிப் போகின்றோம் என அவளுக்கே புரியவில்லை.

இன்னமும் கணவனின் தனிமை உணர்வை தீர்க்க முடியாத தனது கவனக்குறைவை எவ்வாறு சரிசெய்வது என்றும் புரியாத சூழ்நிலையில் ஏனோதானோ என்று சித்தம் கலங்கி நடமாடத் தொடங்கினாள்.

லக்கியின் மனமெல்லாம், தான் உடல்நிலை சரியில்லாத நேரங்களில் எல்லாம் அக்கறையாக தன்னை தாங்கிக் கொண்ட கணவனையே சுற்றிச்சுற்றி வந்தது. மூன்று கைக் குழந்தைகளை வைத்துக் கொண்டு எவ்வாறு அவனைச் சென்று பார்க்க இயலும்?

‘அவன் சொல்வது போல, நான் சரியான சுயநலவாதிதான். இப்போதும் நான், என் பிள்ளைகள் வரை மட்டுமே நினைத்து, அவனைத் தள்ளியே நிறுத்துகிறேன்.’ குற்ற உணர்வில் லக்கியின் மனம் அவளைக் குத்திக் கிழித்தது.

அமிர்தசாகரின் நிலையை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு லக்கி தெரிவிக்க, எல்லோரும் அவரவருக்கு தெரிந்த வகையில் ஆறுதலும் சமாதானங்களும் அவளுக்கு கூறிச் சென்றனர்.

கமலம்மாவின் பார்வையும் லக்கியின் உயிர்ப்பில்லாத நடமாட்டத்தை கண்கொண்டு பார்த்தே தவித்துப் போனது. ஆறுதலாக அவளை அருகில் அமர்த்திக் கொண்டு மடி சாய்த்துக் கொள்ள, உள்ளத்தில் உள்ளதை கொட்டி விட்டாள் லக்கி.

“அவருக்கு ரொம்ப முடியல போல கமலாம்மா… என்ன ஏதுன்னும் விவரம் சொல்லாம என்னைத் தட்டிக் கழிக்கிறாரு… அவரோட பேச்சும் கூட நிதனாமில்லாம வருது.” எனக் கதறி அழுதவளை எவ்வாறு ஆற்றுப் படுத்துவதென்று அவருக்குமே தெரியவில்லை. 

“நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே பாப்பா?” கனிவாகக் கேட்க, கேள்வியுடன் பார்த்தாள் லக்கி.

“அவர் சுபாவத்தை மாத்த நீ முயற்சி பண்ணவும் வேணாம்… நீயும் உன்னை விட்டுக் கொடுத்து, அவருக்காக தளர்ந்து போகவும் வேணாம். ஆனா… ஆனா உன் குழந்தைகளை பார்க்கிற பார்வையோட அவரை பார்க்க முயற்சி செய்யலாமே டா?” ஆதுரமாகக் கேட்க, துணுக்குற்றாள் லக்கி

“தானா, சுயமா வளர்ந்த பையனுக்கு நல்லது கெட்டது மட்டும்தான் தெரியும். அதுவே பெரியவங்களோட அரவணைப்புல அறிவுரையோட வளர்ந்த குழந்தைகளுக்கு நிதர்சனம், நிதானம் எல்லாம் புரிஞ்சு நடந்துக்க தெரியும்.

அதுதான் அழிக்க முடியாத அன்பை அள்ளிக் கொட்டும். சமயத்துல மனசுக்குள்ளயே பூட்டி வைச்சு அழவும் செய்யும்.” சற்றே நிதானித்தவர், “உன்னை போல…” எனச் சுட்டிக் காட்ட, லக்கியின் கண்களில் கண்ணீர் திரையிட்டு நின்றது.

“நீ வீம்பு பிடிக்கிற… புருஷனை புரிஞ்சுக்கலன்னு எல்லாம் சொல்ல மாட்டேன் டா! அவரோட எண்ணத்துக்கு மரியாதை கொடுத்து, இது போதும்னு விலகி நிக்கிற உன்னை விட யாரும் அவரைப் புரிஞ்சு குடும்ப நடத்த முடியாது தங்கம்.

இவ்வளவு பெரிய விசயத்த ரொம்ப ஈசியா செய்ற உன்கிட்ட தான், புருசனையும் புள்ளையா பாக்கச் சொல்றேன். அவனுக்கே அவனுக்காகன்னு நீ செய்யுற ஒவ்வொரு செயலுக்கும் தம்பி கண்டிப்பா மதிப்பு கொடுக்கும்.

மனுசங்களை எடை போட்டுப் பார்த்தே பழகுறவங்க மனசு அவ்வளவு சீக்கிரமா யாருக்கும் வளைஞ்சு கொடுக்காது. தம்பியும் அப்படிதான் போல… வயசும் அனுபவமும் உனக்கு எடுத்து சொல்லச் சொல்லுது கண்ணு! உங்களுக்கு இடையில வந்து பேசுறேன்னு என்னை தப்பா நினைக்காதே!” எனக் கூறியவரின் வாயை அவசரமாக அடைத்தாள் லக்கி.

“பெரிய பேச்செல்லாம் எதுக்கு கமலாம்மா? அம்மா இல்லாத குறை தெரியாம ஆறுவயசுல இருந்து உங்க கையில தான் வளர்ந்திருக்கேன். இப்ப மூனு பிள்ளையை பெத்து நடமாடிட்டு இருக்கேன்னா அதுவும் உங்க கவனிப்புல தான். இதுக்கெல்லாம் நான் நன்றி விசுவாசம் சாயம் பூச மாட்டேன்.

இந்த அம்மாவுக்கு பதிலுக்கு பதில் அன்பு, பாசத்தை மட்டும்தான் குடுக்க நினைக்கிறேன். அதையே நீங்க மத்தவங்களுக்கும் கொடுன்னு சொல்றீங்க.

நானும் அவர் விசயத்துல பிரதிபலன் பார்க்காமதான் எல்லாமே செய்றேன். இனிமேலும் அப்படிதான்… எங்கே நான் தடுமாறிப் போறேன்னு நீங்க சரியா சொல்லிட்டீங்க. அன்பான பார்வையில பாசத்துல, உறவு இன்னும் பலப்படுதுன்னா நிச்சயம் அதைச் செய்றேன் கமலாம்மா. ஆனா அவர் மாறுவாரான்னு தான் தெரியல?” உணர்ச்சி வசப்பட்டு கூறி, சோர்வுடன் முடித்தாள் லக்கி.

உலகத்தில் இந்த ‘ஆனால்’ என்னும் வார்த்தையைக் கொண்டு பெரிய அரசியலையே செய்து விடலாம். வேண்டாம் என்பதை தனக்குள் அடக்கிக் கொள்ளவும் வேண்டுவதை நிராகரிக்கவும் இந்த ‘ஆனால்’ அழகாக உதவுகிறது.

கமலாம்மா சொன்ன ஆனாலும் லக்கி கூறிய ஆனாலும் அதே போன்றதே! என்ன ஒன்று? அது ஒரு மனிதனைச் சார்ந்து அவனது நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு கூறப்பட்டது.

அந்த ‘ஆனால்’ தன் பணியைச் சரியாகச் செய்தால் அமிர்தசாகர் என்னும் மனிதன் இன்னும் மெருகேறுவான் என்பதே இங்கு அடித்துச் சொல்லப்படும் உண்மை.

மூன்று குழந்தைகளையும் கமலாம்மாவின் வசம் விட்டு விட்டு, ஹரிணியையும் அவர்களுக்கு துணையாக இருக்க வைத்து விட்டு, சற்றும் நாட்களை கடத்தாமல் ஜெர்மனிக்கு கிளம்பினாள் லக்கி.

முன்னர் தனியாக வந்திறங்கிய அனுபவப் பாடங்களே அழியாமல் இருக்க, அதன்படியே டாக்சியில் அமிர் இருக்கும் மருத்துவமனைக்கு வந்தடைந்தாள்.

இவளின் வருகையை அமிருக்கு தெரிவித்திருக்கவில்லை. அவன் அலைபேசியில் மேற்கொண்டு பேசினால் தானே என்ன எது என்று விவரங்கள் கேட்டுச் சொல்வதற்கு?

அவனது அலைபேசி அணைத்தே வைக்கப்பட்டிருக்க, உதவி செய்த நண்பரை ஓயாமல் அழைத்து தொந்தரவு செய்யவும் லக்கி விரும்பவில்லை.

தனக்கு எந்தவித தொற்றும் இல்லை என்ற சான்றிதழையும், தான் சென்றே ஆக வேண்டியதன் அவசியத்தையும் எழுதி, மருத்துவரின் ஒப்புதலோடு ஜெர்மன் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள்.

அங்கும் அத்தனை எளிதில் அவளை உள்ளே சேர்க்கவில்லை. அத்தனை ஆவணங்களையும் கொடுத்தாலும் அவர்களின் விதிப்படி அனைத்து பரிசோதனைகளையும் நடத்தியே அவளை உள்ளே அனுமதித்தனர். அதற்கே கிட்டத்தட்ட மூன்று மணிநேரங்கள் கழிந்திருந்தது.

அந்த நேரத்தில் எல்லாம் கணவனை நினைத்து கவலை கொள்ளும் மனது, அவனது சுபாவத்தை எண்ணியே உலைகலனாய் கொதித்துப் போனது.

‘இவனாக இவனது நிலையை தெரிவிக்க மாட்டானாமா? எப்பொழுதும் போல் என்னைத் திட்டித் தீர்த்தாவது தனது நிலைமையைச் சொல்லி ஆறுதல் தேடிக் கொள்ளவும் இவனது கௌரவம் இவனைத் தடுக்கின்றதா? இவனது வீம்பினால் குழந்தைகளையும் அல்லவா தவிக்க விட்டு வர வேண்டியதாயிற்று?’

இப்படியாக ஒவ்வொன்றையும் நினைத்து அலசிக் கொண்டே இருக்க மனமெல்லாம் கனத்துப் போனது.

‘பெற்றோரின் குணநலன்கள் தானே பிள்ளைகளிடம் பிரதிபலிக்கின்றது. இவனது இந்த வீம்புக் குணத்தை அவர்களும் பின்பற்றத் தொடங்கினால் பிள்ளைகளின் எதிர்காலம் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகிப் போகுமோ?’ லக்கியின் மனம் அரற்றிக் கொண்ட நேரத்தில், அமிரை சென்று பார்க்கலாம் என ஒப்புதல் கிடைக்க பெற, பெரும் படபடப்புடன் விரைந்து சென்றாள் லக்கி.

காணொளியில் பார்த்த முகம் இன்னமும் கொஞ்சம் சுருங்கிப் போய் வெகுவாக சோர்ந்து காணப்பட, சீரான சுவாசத்துடன் தன்னை மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் அமிர்.

தீவிர சிகிச்சைப் பிரிவுதான் என்றாலும் பதற்றம் கொள்ளுபடியாக அவனது நிலைமை மோசமாக இல்லை என்பது அவனைப் பார்க்கையிலேயே புரிந்து போனது. இடது கையில் டிரிப்ஸ் ஏறும் வென்ஃபிளானும், பல்ஸாக்சி மீட்டரும் இணைக்கப்பட்டு, பீபீ மானிட்டரும் ஓடிக் கொண்டிருந்தது.

இத்தனை நாள் பரிதவிப்பு நீங்கிய அசதியில் பொத்தென அங்குள்ள ஒற்றை பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தாள் லக்கி. மனதிற்குள் எத்தனை தெய்வத்திற்கு எப்படியெல்லாம் நன்றி சொன்னாளோ அது அவளுக்கே வெளிச்சம்.

பார்வையால் அவனைக் கபளீகரம் செய்து, உற்று நோக்கியவளின் விழிகளும் சொட்டுக் கண்ணீரைச் சிந்தி அவளின் சுவாசத்தை எளிதாக்கியது.

உடலை முழுதாக மூடிய கவச உடையுடன் அருகில் சென்று கணவனின் கன்னம் தடவி நெற்றி வருடிக் கொடுக்க, சில்லென்ற ஸ்பரிசத்தில் கண் விழித்தான் அமிர்.

கண்களைப் பார்த்தே மனைவியைக் கண்டு கொண்டவன் கனவென நினைத்து, சிரித்து விழி மூடினான். மீண்டும் அவனது கன்னத்தை தட்டி எழுப்ப, “ஸ்வீட் மின்னி!” எனக் குழறிக் கொட்டி உறங்கிப் போக, மீண்டும் உணர்ந்த அழுத்தமான ஸ்பரிசத்தில் அதிர்ந்து விழித்தான் அமிர்.

கனவிற்கும் நனவிற்குமான போராட்டத்தில் இவன் தத்தளிக்க, சத்தான நெற்றி முத்தத்தை தந்து சுயம் உணர வைத்தாள் லக்கி.

“உங்க மின்னிதான் சாச்சு!” மென்மையான குரலில் கூற, கண்களை கசக்கிப் பார்த்தான் அமிர்.

“கனவெல்லாம் இல்ல… இது நிஜம்தான். நான் வந்துட்டேன் சாச்சு!” அழுத்தமாகக் கூற, எதுவும் புரியாதவனாய் மனைவியை நோக்கினான் அமிர்.

“தனக்கு யாருமே இல்லன்னு அமிர்னு ஒரு வளர்ந்த பையன் அழுதுட்டு இருக்கானாம்… அவனைப் பார்க்க வந்திருக்கேன். அவன் கூட பேசணும், இல்ல இல்ல அவனை ரெண்டு தட்டு தட்டி, நிஜத்தை புரிய வைக்கணும்.” லக்கி விளையாட்டாகப் பேசியது புரியவே, அமிருக்கு சில நொடிகள் தேவைப்பட்டன.

அவனது அமைதியை தனதாக்கிக் கொண்டு பேச்சினைத் தொடர்ந்தாள் லக்கி. “எதிர்ல நின்னு தாங்கிப் பிடிச்சா மட்டுமே அக்கறை இருக்கிறதா அர்த்தம் இல்ல… விலகி இருந்தாலும் அவங்களையே நினைச்சு அழறவங்களுக்கும் அக்கறை சக்கரை எல்லாம் அன்லிமிடெட்ல இருக்குன்னு அவனுக்கு வலிக்கிற மாதிரி சொல்லணும். அந்த வீம்பு பிடிச்சவனை கொஞ்சம் பேசச் சொல்றீங்களா?” புன்சிரிப்புடன் கணவனை வம்பிற்கு இழுக்க, அமிர் முழித்துக் கொண்டான்.

“என்னடி இது? அவதாரம் எடுத்த மாதிரி முழுசா போர்த்திட்டு வந்திருக்க… யாரு உன்னை இங்கே வரச் சொன்னா… அறிவிருக்கா உனக்கு?” குழறிய வார்த்தைகள் நடுங்கிய குரலில் வெளிவர, படபடவென்று பேசிக்கொண்டே எழுந்து அமர்ந்தான் அமிர்.

அவன் அமர்வதற்கு தோதாக பின்னால் தலையணை வைத்த லக்கி, “மை அமிர் இஸ் பேக்!” என சிரித்து மகிழ்ந்தவள், தனது முகக் கவசத்தை எடுத்து விட்டு அவன் முகம் முழுவதும் முத்த மழை பொழிந்தாள்.

“ஏய்… என்ன பண்றே நீ? பக்கத்துல வராதே… இன்ஃபெக்ஷன் ஆகிடும். மருந்து வாடை தள்ளிப் போ மின்னி!” ஒவ்வொன்றாய் கூறி தள்ளி நிறுத்தினாலும் அவள் விலகவே இல்லை.

“மிஸ் யூ சாச்சு! உங்க குரலை கேக்காம, உங்ககிட்ட திட்டு வாங்காம… உங்க நிலைமை என்னனு தெரியாம செத்துப் போயிட்டேன் டா! என்னால குட்டீஸ் கிட்ட கூட கேர் எடுத்துக்க முடியல.” தன் வேதனையை கூறத் தொடங்கியவள், தாள முடியாமல் கணவனின் தோளில் சாய்ந்து கொண்டு அழ ஆரம்பிக்க, திகைப்புடன் மனைவியை ஒரு கையால் அணைத்துக் கொண்டான் அமிர்.

“நான் என்ன செத்தா போயிட்டேன்? எதுக்கு இவ்வளவு அவசரமா என்னைப் பார்க்க வந்தே?” வெகுண்டவன் தன் பாணியில் நியாயம் பேச, பொறுமை உடைப்பெடுத்து கணவனின் மார்பில் சராமாரியாக அடிக்கத் தொடங்கினாள் லக்கி.