சில்லென்ற தீப்பொறி – 25

சில்லென்ற தீப்பொறி – 25

வாழ்வின் நடைமுறைகள் காலத்தின் சூழ்நிலைகளால் புனரமைக்கப்படும் பொழுது, மனிதமனமும் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்ளத் தயாராகின்றன.

அப்படியான மாறுதல்கள் அமிர்தசாகரின் வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில் பரிணமித்து அவனை முற்றிலும் புதியவனாய் உணர வைத்தது. 

இந்தியாவிற்கு வந்திறங்கியவன் முதற்காரியமாக, தான் குடும்பமாக வசிப்பதற்கு வீடு ஒன்றை வாங்கத் தீர்மானித்தான்.

“எங்க அப்பா வீடு, இல்லன்னா உங்க சித்தப்பா வீட்டுக்கு பக்கத்துல இருக்குற மாதிரி வீடு வேணும். அவங்களும் நம்ம வீட்டுல வந்து தங்குறாப்புல வசதியா பெரிய வீடா இருக்கணும். அப்புறம் பார்க்கிங், கார்டன் எல்லாம் உங்க சவுகரியம் தான்.” லக்கியின் உத்தரவான முடிவில் பெரிய வீடு, பெரிய தொகையில் இருபது நாட்களுக்குள் அமைந்து போனது.

‘என்னோடு தங்கிக் கொள்ளலாமே?’ என்ற கோரிக்கையை, ஆசையை மறந்தும் கூட ரெங்கேஸ்வரன், பரிசீலனையாக மருமகனிடத்தில் கூறவில்லை. இனிமேலாவது நிம்மதியான வாழ்வினை கணவனுடன் சேர்ந்து மகள் வாழ்ந்தால் போதுமென்ற எண்ணமே அவரை அமைதியாக இருக்க வைத்தது.

மகளின் வீட்டுக் கிரஹப் பிரவேசத்திற்கு, தனது சீர் மற்றும் செய்முறையாக புதிய வீட்டில் சகலத்தையும் வாங்கி வைத்து, நிறைவாகத் தன் கடமையை செய்தார் பெரியவர். வேண்டாம் என முரண்டு பிடித்தவனை மந்திரிக்கத் தொடங்கினார் நடேசன்.

“பொண்டாட்டி வேணும், அவ வீட்டுச் செய்முறை வேண்டாமா அமிர்? நீ எதுக்கு இதை அன்பளிப்பா பாக்குற… இருபது வருஷம் கழிச்சு உன் ரெண்டு பொண்ணுகளுக்கும் இதை விட அதிகமாச் செய்யப்போற தகப்பனா நின்னு வேடிக்கை பாரு!” என அடக்கி விட, நொந்து கொண்டான் அமிர்.

“இந்த ஒன்னச் சொல்லியே என் வாய அடைக்கிறீங்க!” முகம் சுருக்கி அலுத்துக் கொண்டவனால் நடப்பதை எதையும் தடுக்க முடியவில்லை. காரணம் அவனது மனையாள் காரியமாற்றும் விதம், அவனை ஊமையாக்கி கட்டிப் போட்டு வைத்தது.

பிறந்தவீட்டு சீராக தனது வீட்டிற்கு வாங்கும் பொருட்கள் அனைத்தையும் அவளது விருப்பம் போலவே தேர்ந்தெடுத்தாள் லக்கி. அப்படி வாங்கும் போது கணவனை வம்படியாக தன்னுடன் அழைத்துக் கொண்டாள்.

கணவனது விருப்பத்தையும் கேட்கும் பொருட்டு அவனுடன் கடைகளுக்கு ஏறி இறங்க ஆரம்பிக்க, அமிரின் பாராயணம் ஆரம்பமாகியது.

“வெஜிடேபிள் சாப்பர் கூட என்கிட்ட கேட்டுத்தான் வாங்கணுமா? உனக்கா செலக்ட் பண்ணத் தெரியாதா மின்னி?” கடையில் நின்றுகொண்டே அமிர் கோபத்துடன் கேட்க,

“நீங்க வீட்டுல இருக்குற நேரம் இந்த வேலையெல்லாம் உங்ககிட்ட தான் தள்ளப் போறேன். அதான் எல்லாத்துக்கும் உங்க சாய்சும் கேட்டு வாங்குறேன். கமான் சாச்சு! ஒரேடியா அலுத்துக்காதீங்க… நான் என்ன எனக்காகவா பாக்கறேன்? உங்களுக்காக… உங்க பிள்ளைகளுக்கா…” லக்கி அழுத்திக் சொல்லவும் அதற்கும் பல்லை கடித்தான் அமிர்.

“வரவர இதையே சொல்லி வெறுப்பேத்துற நீ?”

“அதுக்கென்ன இப்ப? நான் கெஞ்சுனப்ப எல்லாம் அசைஞ்சு கொடுக்காத ஆசாமி, இவரோட புள்ளைங்க தேடவும் உடனே கிளம்பிட்டாரு! இதுக்கெல்லாம் ஒன்னும் சொல்லாம, உங்களை உசுரோட நடமாட விட்டுருக்கேனேன்னு சந்தோசம் படுங்க மிஸ்டர்!” அவனுக்குத் தப்பாமல் கடுகடுத்தாள் மனைவி.

“வெளியே வந்தும் சண்டை போடணுமா?”

“நானா ஆரம்பிக்கல… உங்க கேள்விக்கு பதில் மட்டுமே சொன்னேன். அவ்ளோதான்!”

“அடியே… உன்னை!”

“என் கேள்விக்கு எஸ் ஆர் நோ ஆன்சர் மட்டுமே சொல்லிப் பழகிக்கோங்க சாச்சு! நீங்களும் மிஸ்டர்.கூல் ஆகிடலாம் நானும் உங்க சில் மின்னி ஆகிடுவேன். இதை எப்போதான் நீங்க புரிஞ்சிப்பீங்களோ?” அலட்டிக் கொள்ளாமல் கூறியவளின் வார்த்தைகளை அவஸ்தையுடன் ரசித்தான் அமிர்.

‘இந்த அனுபவத்துக்கு தான் குடும்பஸ்தன்னு பட்டம் கொடுக்கிறாங்களா? என்னமோ போடா அமிரு… நீ ரொம்ப மாறிட்டே! உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் மில்லி மீட்டர் அளவுக்கு கூட வித்தியாசம் பார்க்காம ஒரே மாதிரி நடத்துறா உன் பொண்டாட்டி.’ முதன்முறையாக அவனது மனசாட்சி கிண்டலடிக்க,

“என் பொண்டாட்டி என்னைப் பேசுறா… உனக்கு என்ன வந்தது சைத்தானே?” அவசரகதியில் அதனை துரத்திவிட்டு வெற்றிச் சிரிப்பு சிரித்தான் அமிர்.

இவனது அன்றாடங்கள் எல்லாம் முற்றிலும் தலைகீழாய் மாற்றம் பெற, மழலையின் சிரிப்பினில் மனையாளின் கனிவான கவனிப்பில் மகிழ்வுடன் அனைத்தையும் அங்கீகரித்துக் கொள்ளப் பழகிக் கொண்டான்.

சித்தப்பா நடேசனின் அறிவுரையின் பேரில் ரெங்கேஸ்வரனின் வீட்டிற்கு அருகிலேயே தனிவீடு எடுத்து குடித்தனத்தை ஆரம்பித்தனர். பத்து நாட்களுக்கு ஒருமுறை, இரண்டு நாட்கள் விடுப்பில் இருப்பது போன்று தனது வேலை நிமித்தத்தை அமைத்துக் கொண்டான் அமிர்.

அந்த நாட்களில் சொந்த வீட்டில் வந்து தங்கிக் கொள்ளும் லக்கி, மற்ற நாட்களில் அப்பா வீட்டில் குழந்தைகளுடன் இருக்கப் பழகிக் கொண்டாள். அவள் வரவில்லை என்றால் தந்தை, மகளின் வீட்டிற்கு வந்து தங்கிக் கொள்வது வாடிக்கையாகிப் போனது.

ஹரிணியின் திருமண வேலைகளும் நெருங்கி வர, பொறுப்பான அண்ணனாக மனைவியின் துணையோடு முன்னின்று நடத்தி முடித்தான். கோமதியிடம் கூறியதைப் போன்றே அவர்களுக்கு மகனாக நின்று, திருமணச் செலவுகள் அனைத்தையும் ஏற்றுச் செய்தான்.

“நகை, சீர்வரிசை எல்லாம் உங்க செய்முறையா இருக்கட்டும். கல்யாணச் செலவு முழுக்க என் முறையா நான் செய்றேன்.” நடேசனின் மறுப்பினையும் மறுத்தே சாதித்து நடத்தினான்.

“இத்தனை சிரமம் உனக்கு எதுக்குப்பா?” கோமதியும் கேட்க,

“மகன்னு சொல்லிட்டு சிரமம்னு சொன்னா எப்படி சித்தி? என் பாசத்தை கடமையா செஞ்சு சரி கட்டுறேன்னு நினைங்க!” அலட்டிக் கொள்ளாமல் கூறி, தன் நிலையில் நின்றவனை மனைவியும் கொண்டாடிக் கொண்டாள்.

“வீடு வாங்கிப் போட்டாச்சு… கல்யாணத்தையும் பண்ணிப் பார்த்தாச்சு, என் கஜானாவுல பாதி காலியா போச்சு! இனி இன்னும் பொறுப்பா உழைக்க ஆரம்பிக்கணும் மின்னி!” அடுத்த கட்ட யோசனையுடன் அமர்ந்திருந்தவனின் முகத்தை கனிவுடன் பார்த்தாள் லக்கி.

“இதென்ன உங்க கடமையெல்லாம் முடிச்ச மாதிரி பெருமூச்சு விடுறீங்க? இன்னும் எதுவுமே ஆரம்பிக்கலையே… நம்ம இடத்துல கன்ஸ்ட்ரக்ஷன் வொர்க் நடந்துட்டு இருக்கு. அங்கே பிசினெஸ் ஸ்டார்ட் பண்ணினா, அதுல வரப்போற இன்கம் எல்லாம் உங்களுக்கு தானே?” மனைவி ஆதரவாகக் கூற, இல்லையென்று மறுத்தான்.

“அது உனக்காக கொடுத்தது… நீதான் கட்டிட வேலைக்கும் ஸ்பான்சர் பண்ணி, சூப்பர் மார்கெட்டும் ஆரம்பிக்கப் போற! அதோட வரவும் செலவும் உன்னைச் சேர்ந்தது.” முடிவாகக் கூறி முடித்தான் அமிர்.

“ஷப்பா… இந்த பேச்சை விட மாட்டீங்களா? இத்தனை வருஷ எக்ஸ்பீரியன்ஸ்ல உங்களுக்கு டெக்ஸ்டைல்ஸ் ஸ்டார்ட் பண்ற ஐடியா கொஞ்சம் கூடவா வந்திருக்காது?” கணவனை அறிந்து கொண்டவளாக லக்கி கேட்க, அவனும் ஆமோதிப்பாய் தலையசைத்தான்.

 

“ரெண்டு மூனு கன்சர்ன்ல பேசி வைச்சுருக்கேன். ஆனா, எல்லார் மாதிரியும் மொத்தமா குமிச்சு போட்டு வியாபாரம் பண்ணப் பிடிக்கல… யோசிச்சு சொல்றேன்!” என்றவன் அடுத்த ஒரு மாதத்தில் குளிர்கால ஆடை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றுடன், ஒப்பந்த அடிப்படையில் ஒன்றிணைந்த பிரத்யேக விற்பனையகத்தை ஆரம்பிக்க முடிவு செய்தான்.

லக்கீஸ்வரியின் ஏற்பாட்டில் சூப்பர் மார்க்கெட் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருக்க, வங்கிக்கடன் மூலம் இரண்டாம் தளத்தில் தனி விற்பனையகத்தின் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.

அதற்கும் மேல் மூன்றாம் தளத்தில் பெரியவர்களின் யோசனையின் பெயரில் தினம், வாரம் மற்றும் மாத வாடகைக்குத் தங்கிச் செல்லும் விடுதி அறைகளும் கட்டப்பட, அடுத்தடுத்த வேலைகள் ஜோராக நடைபெற ஆரம்பித்தன.

கட்டிட வேலைகள் முடிந்து தொழில்முறை வணிகத்தை தொடங்கும் போது ஒரு வருடம் முழுதாக முடிந்திருந்தது. வங்கிக் கடனை தொய்வின்றி முழுதாக அடைத்து முடிக்க ஓய்வில்லாத உழைப்பும், சிக்கன நடவடிக்கைகளும் மேற்கொண்டே ஆகவேண்டிய அவசியமிருக்க, லக்கீஸ்வரி அனைத்து பொறுப்புகளையும் தனதாக்கிக் கொண்டாள்.

அதன் காரணமே அலைச்சல்களும் வேலைப்பளுவும் வெகுவாக கூடிப்போக, நிற்க நேரமில்லாமல் கட்டிடவேலை, தந்தையின் அலுவலக நிர்வாகம், வீடு, குழந்தை வளர்ப்பு என அனைத்திலும் கவனம் செலுத்தி வந்தாள்.

கமலாம்மாவின் ஆதரவும், பிள்ளைகள் வளர்ப்பினில் கோமதி, நடேசனின் பங்கும் அவளுக்கு உறுதுணையாகி நிற்க, எதிலும் அவள் பின்தங்கிப் போகவில்லை. லக்கி மனம் சுணங்கி, சிணுங்கிப் போவதெல்லாம் கணவனிடம் மட்டுமே!

“என்னை குடும்பத்தோட ஒருநாள் இருக்க சொன்னவ, இப்ப என்ன பண்ணிட்டு இருக்க? என்கூட உக்காந்து ஒருமணி நேரம் சேர்ந்தாப்புல பேசுறியா நீ? எப்ப பாரு அங்கே இருந்து பேசுறாங்க… இங்கே இது கேக்குறாங்கன்னு சுத்திட்டு இருக்க…” முரட்டுக் கணவனாக எப்பொழுதும் போல் கடிந்து கொள்ள ஆரம்பித்தான் அமிர்.

“பத்து நாளுக்கு ஒரு தடவை வீட்டுக்கு வர்றவனுக்குன்னு நேரம் ஒதுக்கி வைச்சு கவனிக்கத் தெரியுதா? என்னை பத்தின யோசனை எல்லாம் உனக்கெங்கே இருக்கப் போகுது?” கடித்து குதறாத குறையாக கதகளி ஆட ஆரம்பித்தவனை கழுத்தை நெறிக்கும் ஆத்திரம்தான் வந்தது லக்கிக்கு.

இரண்டு வயதில் வீட்டையே புரட்டிப் போட்டு அதகளமாக்கிக் கொண்டிருக்கும் மூன்று பிள்ளைகளை வைத்துக் கொண்டு, அவனுடன் பதிலுக்கு பதில் வாய் பேசவும் முடியாமல் திணறிப் போனாள்.

ஒருநொடி மட்டுமே பொறுமையை இழுத்துப் பிடித்து நின்றவள் குழந்தைகள் மூவரையும் ஒன்றாக அழைத்து, கணவனின் இரு தோள்களிலும் அவனது கழுத்திலும் என மூன்று பேரையும் ஏற்றி விட்டு சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.

“உன்னை பத்தி சொன்னா மட்டும் ஊமையாகிடுவியே? பதில் சொல்லிட்டு போடி!” அமிர் மீண்டும் உரத்த குரலில் கேட்க,

“நான் என்ன பதில் சொல்வேன்னு உங்க பிள்ளை குட்டிகளை வச்சுட்டு யோசிங்க… உங்களை எப்படி கவனிக்கிறதுன்னு நான் தனியா நின்னு யோசிக்கிறேன்.” பதறாமல் பதில் கூறிவிட்டு அமைதியாகி விட, அதற்கடுத்த நிமிடங்களில் அமரின் சிந்தை முழுவதும் பிள்ளைகளின் வசமானது.

உணவருந்தும் வேளையில் சீண்டலுடன். “யோசனை பண்ணீங்களா சாச்சு?” திடுதிப்பென்று லக்கி கேட்க, புரியாது முழித்தான் அமிர்.

“தாச்சுபா… தோச தாப்தியானு மினிமா கேகுதா? (சாச்சுப்பா தோசை சாப்பிட்டியானு மின்னிமா கேக்குறா)” மழலையில் பெரிய பெண் அஸ்விகா அப்பாவிடம் கூற,

“தாச்சுபா ல்ல அமிப்பா!” மாறாத மழலையில் திருத்தினான் மகன் ஆத்ரேஷ்.

இவர்கள் இருவர் கூறியதையும் மறுத்துவிட்டு, “நோ… நோ… தாகர் தாடி அப்தி தானே லத்ஸ்மா? (சாகர் டாடி அப்படிதானே லக்ஸ் மா)” இருவருக்கும் தனக்கு பிடித்தமான முறையில் அழைத்து, கேள்வி கேட்டாள் கடைக்குட்டி ஆர்விகா.

“இதுக்கு தான்டி என்னை சாச்சுன்னு கூப்பிடாதேன்னு சொல்றேன்… கேக்குறியா நீ?” அடுத்த சண்டைக்கு தயாரானான் அமிர்.

“நீங்க மட்டும் எதுல குறைச்சலாம்? மின்னியில ஆரம்பிச்சு லக்ஸுக்கு இழுத்து, பியர்ஸ் சோப்ல வந்து நிக்கிறீங்க! பத்தாகுறைக்கு அந்த விளம்பரத்தை வேற இதுகளுக்கு டவுன்லாட் பண்ணி குடுத்துட்டு, மின்னி ஆட்-ன்னு ஆடித் தொலையுதுங்க! எல்லாம் உங்களை சொல்லணும்.” மூக்கால் அழுது நொடித்துக் கொண்டாள் லக்கி.

“போதும் நிறுத்துடி… என் பிள்ளைங்க சத்தத்தை விட, உன் சவுண்டுதான் ஜாஸ்தியா இருக்கு. என்னத்த கேட்டுத் தொலைச்ச? தெளிவா கேளு!” சுள்ளென்று கேட்க, அவளுக்கு, தான் கேட்ட கேள்வியே மறந்து போயிருந்தது.

“ஆமா… நான் என்ன கேட்டேன்?” அவனையே பார்த்து கேட்டு வைக்க, தலையிலடித்துக் கொண்டு பிள்ளைகளுக்கு தோசையை ஊட்டத் தொடங்கினான் அமிர்.

மகள்கள் இருவரும் சமத்தாக தந்தையிடம் வாங்கிக் கொள்ள, மகன் மாட்டேன் என மறுத்து அன்னையை கைகாட்டினான்.

“எக்கு லத்ஸ் ஊத்தி விதணும்.(எனக்கு லக்ஸ் ஊட்டி விடணும்)” மகன் கூறியதும், ஆர்வி கிளுக்கிச் சிரித்தாள்.

“மினிமா பெய்ய பீஸ் குதுது அதிப்பாங்க… ல்லயா அத்வி? (மின்னிமா பெரிய பீஸ் குடுத்து அடிப்பாங்க இல்லையா அஸ்வி)” கடைக்குட்டி கேட்டதும் அமிர், லக்கியை முறைக்க, ஆத்ரேஷ், “ல்ல.” எனக் கூறி அம்மாவை கட்டிக் கொண்டான்.

“அடிப்பாவி! முனியம்மாவ சார்ட் கட்ல கூப்பிடற மாதிரியே கூப்பிட்டு தொலைக்கிற… என் பேரை பஞ்சராக்க நீ ஒருத்தி போதும்டி!” மகளுக்கு செல்லக் கொட்டு வைத்து உணவைக் கொடுக்க ஆரம்பிக்க,

அஸ்வியோ, “ஷ்… பேதாம தாப்பிதணும். (பேசாம சாப்பிடணும்.)” அமிரைப் போலவே கண்டித்தாள்.

பெரியவளின் சுபாவமும் முகமும் அமிரையே பிரதிபலிக்க, அடுத்தவன் லக்கியை மறு உருவமாகக் கொண்டிருந்தான். ஆனால் லக்கியின் குறும்பையும், அமிரின் பேச்சையும் சேர்த்து வைத்தது போல் சின்னகுட்டியின் ஒவ்வொரு செயலும் இருக்க, வீட்டில் அவளைச் சமாளிப்பதே பெரியவர்களுககு திண்டாட்டமாகி விடும்.

“சின்னகுட்டியை மட்டும் நீ பார்த்துக்கோ, லக்கிமா! நான் இவங்க ரெண்டு பேரையும் கவனிச்சுக்கறேன்.” கோரிக்கையாக ரெங்கேஸ்வரன் சொல்லுமளவிற்கு, அவரை கேள்விகள் கேட்டே கதிகலங்க வைத்து விடுவாள் சின்னக்குட்டி.

வெவ்வேறு குணாதிசயங்களோடு மூன்று பிள்ளைகளை கவனித்து வளர்க்கும் அமிர் மற்றும் லக்கியின் ஒவ்வொரு நாளின் விடியலும், நித்தமும் புத்தம் புது காலையாகவே விடிகின்றன.

இவர்களின் குடும்ப பஞ்சாயத்துகளை எல்லாம் வீட்டின் வரவேற்பறை மற்றும் உணவு மேசையோடு நிறுத்திக் கொள்வான் அமிர். புதுக்குடித்தனத்தின் தனிமைகள் வெகு சொற்பமாக கிடைத்தாலும் அதை சிதறவிடாமல் தனதாக்கிக் கொள்வதை அவன் தவறுவதில்லை.

வயோதிகத்தின் காரணமாக ரெங்கேஸ்வரன் வியாபார நிமித்தங்களில் பின்தங்க ஆரம்பிக்க, அவரது நிர்வாகம் முழுக்க லக்கியின் வசம் என்றாகிப் போனது. அந்த சமயத்தில் மனைவிக்கு ஆதரவாக நின்று அவளது வேலைப்பளுவினை வெகுவாக குறைத்தான் அமிர்தசாகர்.

இக்கால நடைமுறைகளாக நிறுவனத்தின் அனைத்து வேலைகளும், பணப் பரிவர்ததனைகளும் இணையத்தின் மூலம் நடப்பதற்கான ஏற்பாடுகளை மாற்றி அமைத்துக் கொடுத்தான்.

அதற்கும் மீறிய வெளியூர் பயணங்கள் கூட்டங்கள் போன்றவற்றில், ரெங்கேஸ்வரன் சார்பாக இவனே கலந்து கொள்ளத் தொடங்கினான்.

மனைவியை செல்லப் பணித்தால், அவள் பல வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, குழந்தைகளின் பாரமரிப்பையும் இழுபறியோடு கவனித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும் என்கிற நிதர்சனம் புரிய, மெதுமெதுவாக தன்போக்கில் மாமனாரின் நிர்வாகத்தில் பங்கு கொள்ள ஆரம்பித்தான்.

இருபக்கத்து தொழிலும் நிர்வாகமும் ஒரே நேர்கோடாக அமிர் மற்றும் லக்கியின் வசத்தில் மாறி வரும்போது முழுதாக ஐந்து ஆண்டுகளை கடந்து வந்திருந்தனர்.

மாதச் சம்பளத்தில் பார்த்து வந்த பணியை மனமின்றியே விட்டுவிட்டு முழுமனதுடன் தொழிலில் இறங்கி இருந்தான் அமிர்தசாகர். சூப்பர் மார்க்கெட், துணி விற்பனையகம் மற்றும் வாடகை விடுதியின் முழு நிர்வாகத்தையும் இவன் மேற்கொள்ள, லக்கியின் பணிகள் அனைத்தும் தந்தையின் அலுவலகத்தில் தொடர ஆரம்பித்தது.

கோவையில் நிலையாக நின்று கொண்டவனுக்கு எப்பொழுதும் போல் நடேசன் வழிகாட்டுதலாக இருக்க, குழப்பங்கள் இன்றி நிம்மதியுடனே நாட்கள் செல்லத் தொடங்கியது.

ரெங்கேஸ்வரனுக்கு எப்போதும் அவரது பேரப் பிள்ளைகள் அருகில் இருந்தால் போதும். அவருக்கு வேறெதுவும் தேவையில்லை. மகள், மருமகன் தொழிலில் முழுமூச்சாக நின்று கொண்ட பிறகு, பிள்ளைகளின் வளர்ப்பினை தன் வசமாக்கிக் கொண்டார்.

காலத்தோடு பயணித்து அலைகழிப்பில்லாமல் தானாகவே மாற்றம் கொள்ளும் மாறுதல்களை, முன்னரே தக்க வைத்துக் கொள்வதற்காக இவர் எடுத்த முயற்சிகள், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல்கள் தான் எத்தனை எத்தனை?

அந்த நேரத்தில், தான் எடுத்த அவசரகால முடிவினாலும், அதிமேதாவித் தனத்தினாலும் விளைந்த மனக் கசப்புகளை நினைத்துப் பார்க்கும்போது இன்றும் அவரின் மனம் சுருக்கென தைத்து விடும்.

இவரது கொள்கைப் பிடிப்பால் மகளின் மணவாழ்க்கை ஒரு கட்டத்தில் கேள்விக்குறியாகிப் போனதல்லவா? அந்த குற்ற உணர்ச்சி இன்றும் அவரை குத்திக் குடைந்து கொண்டே இருக்கின்றது.

அந்த நினைவே அவருக்கு வராமல் இருக்க, அவர்களின் செல்லபேரப் பிள்ளைகள் அவரின் அருபெரு மருந்தாக மாறிப் போனார்கள். இவர்களின் நலமும் வளமும் ஒன்றையே தனது கருத்தில் பதித்துக் கொண்டு இப்போதெல்லாம் நாட்களை கடந்து வருகிறார் ரெங்கன்.

மருமகன் என்ன சொல்வானோ, மீண்டும் மறுப்பு கூறி, வீராப்பு மலையேறி முறுக்கி கொள்வானோ என்று அஞ்சியே, தனது தொழில் மற்றும் சொத்து பரிவாரங்களை மகளின் பெயருக்கு மாற்றியமைக்கும் வேலையை கையில் எடுக்காமல் இருந்தார் ரெங்கேஸ்வரன்.

வயதின் நகர்வுகள் கடமைகளை நினைவுபடுத்தி உறக்கத்தை மறக்கடிக்க வைத்து விடுகின்றன. அத்துடன் அவர்களுக்காக காரியமாற்றும் விசுவாசமான நலம் விரும்பிகளும் சொத்து மாற்றத்தை விரைந்து முடிக்க சொல்லி முடுக்கி விட்டு, ஆலோசனை கொடுக்கத் தொடங்கினர்.

ரெங்கேஸ்வரனின் வழக்கறிஞரும், ‘மகளின் பெயரில் அனைத்தையும் மாற்றி வைத்துவிடு’ என ஒரு கட்டத்தில் அவரை விடாமல் நச்சரிக்கத் தொடங்க, மருமகனைத் தேடி வந்து விட்டார் மாமனார்.

தொழில் முறைகளை கையில் எடுத்த பொழுது மாமனார் மருமகனுக்கு இடையே ஆரம்பித்த உரையாடல்கள், பிள்ளை வளர்ப்பில் சரளமாக பேசத் தொடங்கி, தற்போது சகஜமாக மாறியிருக்கிறது.

வாரயிறுதி நாளில் குடும்பத்துடன் அமிர் இருக்கும் பொழுதில் ரெங்கேஸ்வரன், அமிரைத் தேடி வர முகம் மலர்ந்து வரவேற்றான்.

“வாங்க அங்கிள்… உங்க பொண்ணு இப்போதைக்கு நம்ம பக்கம் திரும்பிப்  பார்க்க மாட்டா!” சிரிப்புடன் கூறியவன், சமையலைறையின் பக்கம் கை காட்டினான்.

அங்கே பாஸ்தா, பீட்சா, சிக்கன் நூடுல்ஸ் என வரிசையாகக் கேட்ட மூன்று குழந்தைகளுக்கு நடுவில் தலையில் கை வைத்துக் கொண்டு பாவமாக அமர்ந்திருந்தாள் லக்கி. 

அவர்களின் பக்கம் பார்வையை பதித்துக் கொண்டே, “என்ன விசயம் சொல்லுங்க அங்கிள்?” அமிர் அமைதியாக கேட்க அதிலேயே மனம் நிறைந்து போனார் மாமனார்.

மருமகனின் கைகளில் கோப்பினை கொடுத்து படித்துப் பார்க்கச் சொல்ல, கேள்வியாக அவரைப் பார்த்தான் அமிர்.

“எல்லாம் என் வக்கீலோட வேலைதான் அமிர். நான் ஆரோக்கியமா நல்லா இருந்தாலும் இவன் வேலையை முடிக்கிறதுக்காக, என்னை சீனியர் சிட்டிசன் ஆக்கி வைக்கிறான்.” கேலி பேசியவர், கோப்பில் உள்ள சாராம்சத்தை சுருக்கமாக விளக்கினார்.

“என் சொத்துக்களோட விவரம் அந்த ஃபைல்ல இருக்கு. சொத்தை மூனு பாகமா பிரிச்சு எழுதச் சொல்லி இருக்கேன். நிலபுலன் தோப்புகள் எல்லாம் என் பேருலயும், மத்த அசையா சொத்துகள் நகைகள் எல்லாம் லக்கிக்கும், இப்ப இருக்கிற வீடும் அதை சுத்தி இருக்கிற தோட்டமும் என் பேரப் பிள்ளைகளுக்கும் சேரும்னு எழுதி இருக்கு.

எனக்கு பிறகு என்னோட சொத்துகள் லக்கிக்கு வந்து சேரும். அந்த சொத்துல இருந்து வர்ற லாபம் எங்கம்மா பேருல இருக்கிற டிரஸ்ட்டுக்கு போய் சேரும். அவளுக்கு யாருக்கு எப்படி செய்யப் பிரியமோ அப்படி செஞ்சுக்க அவளுக்கு உரிமை இருக்கு. தொழிலும் அதோட பங்குகளும் லக்கிக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் எழுதச் சொல்லியாச்சு!” என விளக்கம் கூறிக் கொண்டே வர, பக்கங்களையும் புரட்டி படிக்க ஆரம்பித்தான் அமிர்.

படித்து முடித்த பின், ”இந்த விசயத்துல நான் எப்பவும் ஆர்வம் காட்டினது இல்ல அங்கிள். ஆனாலும் நீங்க உங்க கடமையை முடிக்கணும்னு சொல்றதும் வாஸ்தவம் தான். இப்ப நான் என்ன செய்யணும்னு எதிர்பார்க்கிறீங்க?” நேரடியாகக் கேட்டான் அமிர்.

“இந்த அத்தனைக்கும் உன்னைத்தான் கார்டியனா போடப்போறேன் அமிர். உன் பார்வைக்கு தப்பாம சொத்துலயும் நிர்வாகத்திலயும், எந்தவொரு மாற்றத்தையும் கொண்டுவர முடியாதபடிக்கு எழுதி வைக்கப் போறேன்.

இதெல்லாம் நீ சரின்னு ஒத்துக்கிட்டா மட்டுமே செய்ய முடிவு பண்ணி இருக்கேன். இதுல உனக்கு ஆட்சேபணை இருந்தா, நீ சொல்றபடி மாத்தி எழுதி வைக்கவும் நான் தயாரா இருக்கேன்.” முழுபொறுப்பையும் அவனது தலையில் ஏற்றிவைத்து விட்டு பேசினார் ரெங்கேஸ்வரன்.

“லக்கிக்கு தெரியுமா? அவ படிச்சு பார்த்துட்டாளா?” அமிர் கேட்க,

“அவ படிச்சு பார்த்துட்டு தான் மூனுநாளா என்கூட பேசாம மொகத்தை தூக்கி வச்சுட்டு இருக்கா! நீயே கூப்பிட்டு என்ன ஏதுன்னு கேளுப்பா!” வருத்தத்துடன் ரெங்கன் முடிக்க, லக்கியை அழைத்து கேட்டான் அமிர்.

“மொத்தமா குழந்தைகள் பேருலயே சொத்துகளை எழுதலாமே? எதுக்கு என் பேருக்கு எழுதி, அப்புறம் அவங்களுக்கு போகணும்னு நினைக்கிறீங்க? அதுவுமில்லாம உங்க பேருல எந்தச் பிராபர்டியும் இல்லாம, என் பேருல எல்லாமே இருக்கிறது எனக்கே கஷ்டமா இருக்கு.” லக்கி சங்கடத்துடன் கூற, அமிர் வழக்கம்போல் முறைத்தான்.  

“நான், என் மனைவி, குழந்தைகளுக்கு சொத்து சுகத்தை சேர்க்கிற மாதிரி, உங்கப்பாவும் சேர்த்து வைச்சு மகளுக்கு கொடுக்கிறாரு… அதை எதுக்கு வேணாம்னு சொல்ற?

எல்லாமே உங்க பேருல இருந்தாலும் என்னோட மேற்பார்வையில பாதுகாப்புல எல்லாமே நடக்கிற மாதிரி இருக்கும் போது, நான் எப்படி எதுவும் இல்லாதவனா இருப்பேன். அப்பப்போ அறிவை எங்கேயோ கடன் கொடுக்கிறடி நீ!” அவனது பாணியில் கூறி முடிக்க,

“சொத்து வேணாம், தொழில் வேணாம்னு ஆரம்பத்துல இருந்து நீங்க சொல்லிச் சொல்லியே, என் மனசுல அதை பத்தின ஆசையே இல்லாமப் போயிடுச்சு!” முகம் சுருக்கி கூறினாள் லக்கி.

“இந்த பேச்சு எல்லாம் இப்ப தேவையா?” ரெங்கன் கடிந்து கொள்ள,

“அப்ப உள்ள நெலமைதான் இப்பவும் இருக்கா?” கண்டனக் குரலில் கேட்டான் அமிர்.

“பெரியவங்களோட நியாயமான ஆசைகள், நம்ம சுயமரியாதையை பாதிக்காத அளவுக்கு இருக்கும் போது அதை மறுக்க காரணத்தை தேட வேண்டிய அவசியமே இல்ல… இனி உன்னிஷ்டம்!” கணவன் முடிவாக கூறிவிட, லக்கி கையை பிசைந்து கொண்டு நின்றாள்.

‘ஒரு கட்டத்தில் இதே சொத்து சுகத்தை வேண்டாமென மறுத்து இவன் ஆடிய ஆட்டமென்ன? இப்பொழுது நியாயஸ்தனாக நின்று, ஏற்றுக் கொள் எனக் கூறுவதென்ன?’ இப்படி எண்ணற்ற என்ன என்ன கேள்விகள் லக்கியின் மனதில் படையெடுக்க, இதனால் மீண்டும் ஓர் தர்க்கப்போரினை வளர்த்துக் கொள்ள விரும்பாமல் அப்படியே தூக்கி தூர எறிந்தாள்.

தந்தையின் முடிவிற்கு கணவனின் ஆதரவு முழுக்கவே இருப்பதைக் கண்டு அவளின் மனம் நிம்மதி அடைந்தது. அவனது உத்தரவின்றி எந்த ஒன்றையும் அசைக்க முடியாதவாறு மேற்கொண்ட ஏற்பாடுகளும் மனதை நிறைக்க வைக்க, முழுமனதோடு தந்தையின் ஏற்பாட்டிற்கு ஒத்துக் கொண்டாள் லக்கீஸ்வரி.

அனைத்தும் சீராக நடந்து முடிய, ரெங்கேஸ்வரனின் தொழிலின் மூலம் வரும் லாபங்கள் அனைத்தையும் சேமிப்புகளாக மாற்றி வைத்தான் அமிர்தசாகர். எப்பொழுதும் தனது தொழிலின் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டே, வாழ்வாதாரத்தை தொடர்ந்து நடக்குமாறு மாற்றிக் கொண்டான்.

“அப்பா பேச்சுக்கு நீங்க உடனே சரின்னு சொல்லும்போதே நான் இதை யோசிச்சு இருக்கணும். இந்த கிராண்ட் மாஸ்டர் இப்படியெல்லாம் முடிவெடுத்து பிடிவாதமா நிப்பாருன்னு நான் ஒரு பர்சன்ட் கூட எதிர்பார்க்கல!” அதிருப்தியுடன் முணுமுணுத்தவளை தன்னருகில் இழுத்து கொண்டான் அமிர்.

“இப்ப என்னடி குறைச்சல் உனக்கு? எனக்கும் ஒரு உத்வேகம் வேணாமா? இருக்கிற எல்லாத்தையும் எடுத்து செலவு பண்ண ஆரம்பிச்சா… மூளை முடங்கிப் போயி, ரத்தம் சுண்டிப் போயிடும் மின்னி டார்லிங்!

நீயும் நானும் எப்பவும் ப்ரெஷ்ஷா இருந்து சண்டை போட்டு கொஞ்சிகிட்டதான் ஃபுல் எனர்ஜியோட நம்ம ஜூனியர்சை கொஞ்சமே கொஞ்சம் நல்ல பிள்ளைகளா வளர்க்க முடியும். எல்லாம் உனக்காக தான்டி தங்கம்…

நீ சண்டை போட்டு சுறுசுறுப்பா இருக்க மட்டுமே நான் இந்த ஏற்பாட்டை பண்ணினது.” சிரிக்காமல் சீண்டினான் அமிர்.

அவன் கூறிய பாவனையில் மனைவியின் மூளை சூடாகி, ரத்தம் கொதிப்படைய, “அடங்கவே மாட்டீங்களா சாச்சு? உங்களுக்கு உங்க பசங்க தான் சரி!” கோபத்தில் கனன்று மூச்சு வாங்கியவள்,

குழந்தைகளை அழைத்து, “குட்டீஸ்… அப்பா உங்களை விட்டுட்டு வெளியே போகப் போறாராம்.” சீண்டலுடன் கொளுத்திப் போட்டு ஒதுங்கிக் கொண்டாள்.

அம்மாவின் குரலில் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று குட்டிகளும் அப்பாவை வளைத்துக் கொண்டன.

“டாடி இந்த வீக் நான் சொல்ற இடத்துக்கு கூட்டிட்டி போகணும்.” ஐந்து அஸ்விகா ஆரம்பிக்க,

“நோ என்னோட சாய்ஸ் தான்!” ஆத்ரேஷ் கோபமாய் நிற்க,

“என் சாச்சுப்பா நான் சொல்றத மட்டுமே கேப்பாரு… அப்படிதானே ப்பா?” கொஞ்சி முத்தமிட்ட ஆர்விகாவின் பேச்சில் மயங்கி, தந்தையின் தலை தன்னால் ஆமென்று ஆமோதிக்க, மற்ற இரு குழந்தைகளும் தந்தையின் மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.

லக்கீஸ்வரி விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு, படபட பட்டாசாக வெடித்து தீப்பொறியை கிளப்பி விட, இடையில் இவள் புகுந்துதான் கணவனை காப்பாற்றி வேண்டி வந்தது.

சமாதானத்தை முடிவெடுத்துக் கொண்டே ஆரம்பிக்கும் சண்டைகள், சச்சரவுகளை களைந்தெடுத்த சந்தோச சீண்டல்களுடன் வாழ்க்கையும் தொழிலும் தொய்வின்றி ஒரே சீராக செல்ல, இவர்களை வாழ்த்தி விடைபெறுவோம் நண்பர்களே!!!

சுபம்