சில்லென்ற தீப்பொறி – 3

யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே

ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்இனிதே

கான்யாற் றடைகரை யூர்இனி தாங்கினிதே

மான முடையார் மதிப்பு.

 

சில்லென்ற தீப்பொறி – 3

அமிர்தசாகர் கிளம்பிச் சென்று ஒருவாரம் முடிந்திருந்தது. அன்று சென்றவன் சென்றவனாகவே இருக்க, லக்கீஸ்வரியும் வீடு, அலுவலகம் என்று தன்னை மூழ்கடித்துக் கொண்டாள்.

எக்காரணம் கொண்டும் கணவனை அழைத்துப் பேச வேண்டுமென்று எண்ணவில்லை. அவனாகத் தானே சென்றான், அவனாகவே வரட்டும் என்று தன்போக்கில் இருந்து விட்டாள்.

ஆனாலும் இரவின் தனிமையில், கணவன் தன்னை தவிர்த்து விட்டுச் சென்றதை எண்ணி மனம் குமைவதை தடுக்க முடியவில்லை.

இருவருக்குள் மட்டுமே புகைந்து கொண்டிருந்த நெருப்பின் சாம்பல், கருமையான முகக்கவசமாய் படிந்து போன தோற்றப்பிழை.

நடப்பதெல்லாம் தனக்கு அப்பாற்பட்ட நிலையில் இருக்க, சுயத்தை மறந்து அந்தந்த நேரத்திற்கேற்ப வேலைகளைச் செய்யும் இயந்திரமாக மட்டுமே செயல்பட்டாள்.

தனது பெரிய வீட்டில் மகாராணியாக அதிகாரம் செய்யும் செல்வமகள் அமைதியாக, கடமைக்கென நடமாடுவதைப் பார்த்த ரெங்கேஸ்வரனுக்கு மனமெல்லாம் கொதித்துக் கொண்டிருந்தது.

எத்தனையோ கனவுகளோடும் மனநிறைவோடும் மகளுக்கு அமைத்துக் கொடுத்த வாழ்க்கை, கானல்நீராய் மாறிப் போனதில் முற்றிலும் தளர்ந்து போயிருந்தார்.

‘படுபாவி! இவனை நம்பி பெண்ணைக் கொடுத்து, என் மகளை நானே ஊமையாக்கி விட்டேனே! ஊரில் இல்லாத அழகனாய் இந்த ராட்சசனுக்கு தாரை வார்த்து, என் மகளை பலி கொடுத்து விட்டேனே!’ மனதின் பொருமலை அடக்கும் வழி தெரியாமல் தவித்தார் பெரியவர்.  

மகளிடம் பிரிவின் ஆற்றாமை தேங்க விடாமல் செய்ய அவளை தொழிலில் ஈடுபடுத்த முனைந்தவர், முழுதாய் ஒதுங்கி அவளைத் தனியாக செயல்பட வைத்துக் கொண்டிருந்தார்.

உதவியாளர்கள் மூலம் மகளின் தனி ஆவர்த்தனத்தை கேட்டு அகம் மகிழ்ந்தாலும், தனது செல்லச் சீமாட்டி ஓய்வில்லாமல் சுற்றுவதில் மனம் கனத்துப் போனார்.

இதற்கெல்லாம் காரணமான அமிர்தசாகரை ஒரு கை பார்த்துவிடும் ஆவேசம் அவர் மனமெங்கும் விரவி இருக்க, அவன் எங்கே எப்படி இருக்கிறான் என்று அறிந்து கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தார். 

கிட்டத்தட்ட அவரது ஆர்வம் பழிக்குபழி வாங்குபவரின் மனநிலையை கொண்டிருந்தது. அவனது அலுவலகம், நண்பர்களிடத்தில் விசாரிக்கத் தொடங்குவதற்கு முன், மகளிடத்தில், மருமகன் இருக்குமிடத்தை கேட்க முடிவு செய்தார்.

ஒரு வாரத்திற்கு பிறகு இரவு உணவின் போது, மகளிடம் அன்பான வார்த்தைகளை வளர்த்துக் கொண்டே,

“லக்கிமா, வேலையெல்லாம் எப்படி போகுது?” கனிவாக ஆரம்பிக்க,

“ம்ம், போகுதுப்பா. நோ ப்ராப்ளம்!”

“கம்பெனிகளுக்கு ஃபைனல் செட்டிமெண்ட் கரெக்டா அனுப்புறியாடா?”

“யாஹ் டாட், இட்’ஸ் கோயிங் ஸ்மூத்!”

“உன்னை தனியா ஆபிஸ் மானேஜ் பண்ணிக்க  சொல்லிட்டேன்னு, அப்பா மேல கோபம் இல்லையேடா பாப்பா?” வாஞ்சையுடன் கேட்க,

“இதுல என்னப்பா இருக்கு? எப்படி இருந்தாலும் ஒருநாள் நானும் நிர்வாகத்துல பொறுப்பெடுத்துக்கணும் தானே! டோன்ட் வொரி டாட்… ஃபீல் ப்ரீ!” மெல்லிய சிரிப்புடன் அவரை ஆசுவாசப்படுத்தினாள்.

“ஏதாவது ஃபோன் வந்ததா லக்கிமா?” ரெங்கேஸ்வரன், தன் மனதில் நினைத்ததை கேட்க ஆரம்பிக்க,

“எந்த ஃபோன் கேக்குறீங்க டாடி? ஆபிஸ் காலர் ஐடியில நான் அட்டெண்ட் பண்ணின ஃபோன் கால்ஸ் எல்லாமே சேவ் ஆகி இருக்கும். நீங்க நம்பர் அனுப்புங்க, நாளைக்கு செக் பண்ணி சொல்றேன்” என்றவளுக்கு அப்பொழுதும் தந்தை கேட்டதை புரிந்து கொள்ள முடியவில்லை.

“ம்ப்ச்… நான் கேக்குறது உனக்கு புரியலயா ம்மா? அவன்கிட்ட இருந்து ஃபோன் எதுவும் வந்ததா? உன்கூட அவன் பேசலயா?” கோபம் மேலிட்ட குரலில், அமிரின் பெயரைச் சொல்லவும் உறவைக் கொண்டாடவும் கூட பிடித்தமில்லாமல் வெறுத்து கேட்டார்.

அப்பாவின் சலிப்பான கேள்வியில், அவரை அனுமானித்தவள் சளைக்காமல் அவருடன் வார்த்தையாட ஆரம்பித்தாள் லக்கி.

“அது யாருப்பா, அவன்? அவனுக்கு பேர், ஊரு, உறவுன்னு எதுவுமே இல்லையா?” தந்தையின் கேள்வியை அறிந்து கொண்டாலும் வேண்டுமென்றே தெரியாததைப் போல மகள் கேட்க.

“கடுப்படிக்காதடா, உன்னை இந்த நிலமையில நிக்க வைச்சுட்டு போயிருக்கானே! அவனை பத்திதான் கேக்குறேன்!”

“போதும் பா, நான் இப்படி இருக்க காரணம் நான் மட்டும்தான். தேவையில்லாம யாரையும் இதுல இழுக்காதீங்க!” பட்டும் படாமலும் உரைத்த மகளின் பதிலில் ரெங்கேஸ்வரன் கோபத்தில் பொறியத் தொடங்கினார்.

“ஓஹோ, நீயும் யாரோன்னு தான் பதில் சொல்வியா? சரி விட்டுத்தள்ளு! இந்த அமிர் பய எங்கே இருக்கான், உன்னோட பேசினானா? அன்னைக்கு அவ்வளவு சண்டை போட்டும் வெளியே போய் உன்கூட அரைமணி நேரம் பேசுனவன், அதுக்கடுத்து எப்போ பேசுனான்? எங்கே இருக்கானாம்?” படபடவென  மூச்சு விடாமல் கேட்டுக் கொண்டே போக,

“ப்பா… என்ன இது? எங்கப்பாவுக்கு இப்படி யாரையும் இறக்கிப் பேசி பழக்கமில்லையே? அதுவுமில்லாம டிவோர்ஸ் கிடைக்கிற வரை நாங்க ஹஸ்பண்ட் அண்ட் வொய்ஃப்தான்! அதனால நீங்க தாராளமா மாப்பிள்ளை, மருமகன்னே உறவை கொண்டாடலாம்” கோபத்துடன் கணவனை விட்டுக் கொடுக்காமல் பேசிவிட்டாள்.

என்னதான் வெளியில் அவன் வேண்டாமென்று முடிவெடுத்து தன்னை திடமாய் காட்டிக் கொண்டாலும், அவளின் சுபாவம் அத்தனை எளிதில் கணவனை விட்டு விலகிப் போவதை விரும்பவில்லை. தனது இளகிய மனதைக்கூட அறிந்து கொள்ளாததும் இவளின் துரதிர்ஷ்டமே!

“கோபப்படாதே லக்கிமா… அன்னைக்கு நடந்தத நீ பார்த்த தானே! அத்தனை பேர் முன்னாடி அப்பாவுக்கு மதிப்பு கொடுத்து பேசத் தெரியாதவனுக்கு எப்படி மரியாதை கொடுக்குறது?” தன்மனம் படும் அவஸ்தையை எதிர்கேள்வியாக கேட்டதும் மகளின் கோபம் தண்ணீர் தெளித்த தணலாய் அமுங்கிப் போனது.

“அதுக்கு நான் என்னப்பா செய்ய? அவரோட சுபாவமே அப்படிதானே இருக்கு. நான் சொன்னாலும் எதையும் காதுல வாங்கிக்க மாட்டார். அதுக்காக, நீங்களும் அவரை மரியாதை இல்லாம பேசுறது உங்களுக்கு அழகில்லப்பா!

எங்கே இருந்தாலும் தனக்கான மரியாதை குறையாம இருக்கணும்னு சொல்லிச் சொல்லியே என்னையும் அப்படி பழக்கப்படுத்தி விட்டுட்டார். அந்த வேகத்துலதான் நானும் உங்ககிட்ட கொஞ்சம் அதிகமா பேசிட்டேன், சாரி டாடி! ப்ளீஸ்…” மகள் கண்களால் கொஞ்சி, வார்த்தைகளில் கெஞ்ச அந்த தகப்பனுக்கு உள்ளமெல்லாம் உருகிப்போனது.

“ஏன்டா பாப்பா ஃபீல் பண்றே! உங்கப்பாட்ட, நீ பேசாம வேற யாரு பேசப்போறா? ஆனா அவனுக்கு, நீ சப்போர்ட் பண்றதுதான் இந்த அப்பாவால தாங்க முடியல லக்கிமா!” விலகிப் போக விரும்பும் கணவனுக்காக, தன்னை எதிர்த்து பேசுகிறாளே என்று ஆதங்கப்பட்ட தகப்பனுக்கும் சற்று பொறாமையாகத் தான் இருந்தது.

“அதுதான் சொல்லிட்டேனே டாடி! அவர் பழக்கபடுத்தி விட்டதுன்னு… இனி நீங்களும் அவரை அப்படி பேசாதீங்கப்பா! எனக்கும் சங்கடமா இருக்கு” இறங்கிய குரலில் மகள் கூறியதில் தகப்பனின் மனம் பாவமே என மகளை கனிவாய் பார்த்தது.

“சரி சரி, விடும்மா. மாப்பிள்ளை ஃபோன் பண்ணினாரா? எங்கே தங்கியிருக்காருன்னு உனக்கு தெரியுமாடா?”

“அன்னைக்கு பேசினதோட சரி. இதுவரைக்கும் எந்த ஃபோனும் வரலப்பா! பேச டைம் இல்லைன்னாலும் வாட்ச்-அப்ல லோகேஷன் ஷேர் பண்ணி ரூமுக்கு வந்துட்டதா வாய்ஸ் மெசேஜ் போடுவாரு. ஆனா, இந்த முறை எந்த இன்ஃபர்மேசனும் ஷேர் பண்ணல.

அவர் இப்படியெல்லாம் என்னை அவாய்ட் பண்ணினதே இல்லைப்பா! எவ்வளவு கோபம் என்ன சண்டையா  இருந்தாலும் எங்கே இருக்கேன், எவ்வளவு நாள் தங்கப்போறேன்னு மெசேஜ் பண்ணிடுவார்…” தங்களுக்குள் நடக்கும் அன்றாடங்களை விளக்கிக் கூறும்போதே மகளின் குரல் கரகரத்து விட, பெற்றவரின் உள்ளமும் வலிக்கத் தொடங்கியது.

‘கடவுளே என் பொண்ணுக்கு ஏன் இந்த நிலைமை? எப்போதான் இவங்க புரிஞ்சு வாழப் போறாங்க!’ மனதிற்குள்ளாக தனது ஆதங்கத்தை கடவுளிடம் கொட்டியவர்,

“உன் மனசுல அவர்கூட வாழணும்னு விருப்பம் இருக்குதானேடா! பின்ன எதுக்கு அவர் எடுக்குற முடிவுக்கு நீ சம்மதிச்ச?” ஆற்றாமையுடன் கேட்டார்.

“எனக்கு, அவர் கூட கடமைக்காக வாழுற ஃபீல் இருக்குப்பா! எனக்கும் அவருக்கும் ஒரு விசயத்துல கூட ஒத்துப் போகல… அதான், யாராவது ஒருத்தர் நிம்மதியா இருக்கட்டுமேன்னு அவர் சொல்றதுக்கு சரின்னு சொல்லிட்டேன்.

இதுவே, ஒருத்தர் மேல ஒருத்தர் விருப்பபட்டு, ரெண்டு பேருமே புரிஞ்சு நடந்த காதல் கல்யாணமா இருந்திருந்தா, எனக்கும் இப்படி விலகி நிக்க மனசு வந்திருக்காது. அவரையும் அப்படிப் போக விட்டிருக்க மாட்டேன்!” தன் மனதிற்கு தானே நீதிபதியாகி தனது அறியாமையை தீர்ப்பாக சொல்லிக் கொண்டிருந்தாள் லக்கீஸ்வரி.

‘அடக் கடவுளே! இதென்ன புது பிரச்சனை? இந்தப் பெண்ணிற்குள் இப்படியொரு குழப்பமா? மனதில் பாசம், நேசம் இல்லாமலா கணவனுடன் எட்டுமாதம் சேர்ந்து வாழ்ந்திருக்கிறாள்!’ மனதிற்குள் உண்டான அங்கலாய்ப்பை மகளிடத்தில் வாய்விட்டு ஒரு தந்தையாக கேட்க முடியவில்லை.

பெண்ணரசி இல்லாத வீட்டில் மகளுக்கு புத்திமதி சொல்ல யாரை நாடுவதென்று தெரியாமல் தவித்துப் போனார் ரெங்கேஸ்வரன். எத்தனையோ சந்தர்ப்பங்களில் மனைவியின் இழப்பை எண்ணி மனம் மருகித் தளர்ந்தவர்தான்.

ஆனால் அந்த தவிப்பை எல்லாம் தோற்கடிக்கும் வண்ணம், இன்றைய மகளின் அறியாமையில் அவர் மனதோடு நொறுங்கிப் போனார். இவர்களுக்குள் ஏற்பட்ட விலகலில் இருவருக்கும் சரிபங்கு இருப்பதாகவே தோன்றியது அந்த தந்தைக்கு.

பிரிவென்னும் கசடை வெளியேற்ற, கத்தியால் புண்ணைக் கீறியே ஆக வேண்டுமென்ற கட்டாயம் உரைக்க, அந்தக் கணமே மனதிற்குள் பல கணக்குளை போடத் தொடங்கி விட்டார்.

இருவரின் பிழையில் சிக்கலாகிக் கிடக்கும் முடிச்சை அவிழ்க்கும் உபாயத்தை மனம் தேட ஆரம்பிக்க, அமைதியாக தன்னை சமன்படுத்திக் கொண்டவர்,

“எதையும் மனசுல போட்டு குழப்பிக்காதடா பாப்பா! எல்லாத்தையும் அப்பா பார்த்துக்கறேன். நிம்மதியா போய் தூங்கு!” வாஞ்சையுடன் மகளின் தலையை தடவிவிட்டு அங்கிருந்து அகன்று விட்டார்.

கோபமாக பேச ஆரம்பித்த தந்தை, திடீரென்று அமைதியாக விலகிப் போனதில் எதையும் கிரகித்துக் கொள்ள முடியாமல்  விழிக்க ஆரம்பித்தாள் லக்கீஸ்வரி.

திருமணத்திற்கு முன்பிருந்தே தனது நிலையை தந்தையிடம் தெளிவுபடுத்திக் கொண்டிருப்பவளுக்கு, தந்தையின் மௌனம் வருத்தத்தைக் கொடுத்தது.

எந்த நிலையிலும் தந்தை மனம் கலங்கக் கூடாதென்று தானே, பிடிக்காத திருமணத்திற்கும் இவள் சம்மதித்தது. தன்னை உயிராய் நினைத்த தகப்பனுக்கு, தன்னால் முடிந்த பிரதியுபகாரமாய் விருப்பமில்லாத திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாள்.

இப்பொழுது அதுவே பொய்யாகிப் போய்விட, அவளின் மனம் தந்தையை கோபித்துக் கொண்டது.

‘திருமணம் வேண்டுமென்று நானா கேட்டேன்? எல்லாவற்றையும் இவராகவே தீர்மானித்து விட்டு, இப்பொழுது அதுவே என் கழுத்தை நெறிப்பதை பார்த்து ஏன் கவலை கொள்ள வேண்டும்?

ஏதோ ஒரு அவசர சூழ்நிலையில் திருமணம் நடந்து விட்டதுதான். அதற்காக கணவனின் நியாயமற்ற போக்கினை எப்படி ஆதரிக்க முடியும்? எந்த நேரமும் மூச்சு முட்டும் அளவிற்கு குற்றச்சாட்டுகள் ஏற்றி வைப்பவனை எவ்வாறு வாழ்நாள் முழுவதும் சகித்துக் கொண்டு வாழ்வது?’ மனதில் படையெடுத்த கேள்விகளுக்கு நியாயம் கூறத் தெரியாமல் தவித்தாள்.

திருமணம் என்பது பெண்ணின் ஆயுட்கால சிறை. முன்னால் சென்றால் உதைக்கும்; பின்னால் சென்றால் மிதிக்கும் என்பதை மிகக்குறுகிய காலகட்டத்திலேயே அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டிருந்தாள்.

திருமணத்திற்கு முன்பு, தான்வாழ்ந்த வாழ்வென்ன? தற்போது தான்இருக்கும் நிலை என்ன? நினைத்துப் பார்த்தால் அது மலையையும் மடுவையும் ஒப்பிட்டுப் பார்க்கும் மடத்தனம்.

அழகான பெரிய மாளிகையில் சுதந்திரப் பறவையாக வளர்ந்தவள் லக்கீஸ்வரி. மகள் ஆசைப்பட்டதை கேட்கும் முன்பே வாங்கிக் குவிப்பவர் ரெங்கேஸ்வரன்.

அப்பாவிற்கும் பெண்ணிற்கும் உள்ள பாசத்தை, அவர்களின் நட்பும் சுற்றமும் பார்த்து புகையுமளவிற்கு அத்தனை செல்லம் கொடுத்து வளர்த்தவர். தாயில்லாத பெண்ணிற்கு தாயாக அவரிருக்க, தன் தந்தைக்கு சகலமுமாக லக்கி இருந்தாள்.

***

கோவை ஆர்.எஸ்.புரம் ‘ஈஸ்வர் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் முழுமுதற் சொந்தக்காரர் ரெங்கேஸ்வரன். சுமார் ஐநூற்றி சொச்ச வகை ஸ்டேஷனரி பொருட்களை மொத்த விலையில் சில்லறை வியாபாரிகளுக்கு விநியோகம் செய்யும் நிறுவனம் அவருடையது.

கோவை மாநகரத்தின் மிகப்பெரிய ஸ்டேஷனரி டிஸ்ட்ரிபியூட்டர் அவர். மாவட்டம் முழுவதிலும் உள்ள, சில்லறை விற்பனை நிலையங்களில், அவரது நிறுவனம் மூலம் பொருட்களை விநியோகம் செய்து சுலபத் தவணைகளில் வசூலித்து வருபவர். உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாநிலங்கள் என இவரது விநியோக முறை பரந்து விரிந்து நடக்கின்றது. 

ஆரம்ப காலத்தில் தனது கையில் இருந்த சிறு முதலீட்டைக் கொண்டு ‘ஈஸ்வர் எண்டர்பிரைசஸ்’ நிறுவனத்தை நண்பர் சடகோபன் உதவியுடன் ஆரம்பித்தார். சிறுவயதில் இருந்தே இருவரும் நகமும் சதையுமாக நட்பு பாராட்டுபவர்கள்.

தங்களது சொந்த முயற்சியில் தனித்தனியாக சொந்த நிறுவனம் ஆரம்பிக்க வேண்டுமென்பதே இருவரின் ஆசை, கனவு லட்சியம் என எல்லாமுமே!

அந்த ஆசை முதலில் ரெங்கேஸ்வரனுக்கு நிறைவேறியது. தனது சொற்ப நிலத்தினை விற்று சொந்த நிறுவனத்தை தொடங்கினார். ஆரம்ப கால கட்டத்தில் விநியோகமும் வியாபாரமும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சுறுசுறுப்பாக நடக்கவில்லை.

சுயதொழிலில் அத்தனை எளிதில் லாபம் சம்பாதித்து விட முடியாது. முதலீட்டு விசயத்தில் நம்பிக்கையும் நாணயமும் நம்மை வந்து சேர்வதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டும்.

இதையெல்லாம் அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொள்ள ரெங்கேஸ்வரனுக்கு சிறிது காலம் தேவைப்பட்டது. அந்த கால கட்டத்தில் நண்பனின் தொழிலில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் லாப நஷ்டங்களில் அவரை பெரிதும் தாங்கிக் கொண்டவர் ஆருயிர் நண்பன் சடகோபன்.

நண்பனின் தொழில் நிலையை நன்றாக அறிந்து கொண்ட காரணத்தினால், சடகோபனுக்கு சொந்த நிறுவனம் என்ற ஆசை விட்டுப் போயிற்று.

நாலுகாசு குறைவாக சம்பாதித்தாலும் நிம்மதியாக உண்டு உறங்க வேண்டும் என்ற அவரது குடும்பத்தாரின் அறிவுரையும் சேர்ந்து, அவரின் லட்சியத்தை திசைமாறிப் போக வைத்தது.

அதன் எதிரொலியாக கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் கணக்குபிள்ளை வேலைக்கு கிளம்பிச் சென்றார் சடகோபன். அங்கே சென்ற பிறகு அவரின் வாழ்வில் வசந்தகாலம் தொடங்கியது.

நண்பர்கள் இருவருக்கும் சமகாலத்தில் திருமணம் நடக்க, இருவரின் வாழ்க்கை பாதையும் வேறுவேறு திசைகளில் பயணிக்க ஆரம்பித்தது. சடகோபனுக்கு திருமணம் முடிந்த அடுத்த வருடமே அமிர்தசாகர் பிறந்தான்.

ரெங்கேஸ்வரனுக்கு தொழில் அழுத்தங்கள் கூடிக்கொண்டே போனதில், குடும்ப வாழ்க்கை சற்று பின்தங்கிப் போனது.  சில வருடங்கள் மருத்துவ ஆலோசனை, கோவில், பரிகாரம் என மனைவியுடன் நாட்களை கடத்தத் தொடங்கினார்.

திருமணம் முடிந்த போதிலும் நண்பர்களுக்கு இடையேயான நட்புறவு அவர்களின் மனைவிகளின் துணையோடு மேலும் மேம்பட்டது. இருவரின் துணைவியரும் பிறந்த வீட்டு முறையாக இருவர் வீட்டிலும் ஒருவர் மாற்றி ஒருவர் விருந்தாடி விட்டும் வருவர்.

வேலைப்பளு காரணமாக சடகோபன் பணியிடத்தில் தங்கிக் கொண்டாலும் ரெங்கேஸ்வரனின் மனைவி கலாவதி வந்து வசுமதியையும் சிறுவன் அமிர்தசாகரையும் அழைத்து சென்று விடுவார். பிள்ளையில்லாத அவருக்கு அமிர் செல்லப்பிள்ளையாகிப் போனான்.

இந்த வேளையில் ரெங்கேஸ்வரன் திருமணம் முடிந்த சுமார் எட்டு வருடங்களுக்கு பிறகு அவரது குடும்பத்திலும் தொழிலும் அதிர்ஷ்ட தேவதை தனது காலடி தடத்தை பலமாக பதித்தாள்.

மகள் கருவாக உருவாகிய நேரம் தொட்டே தொழிலில் ஏற்றத்தை கண்ட ரெங்கேஸ்வரன், மகளை அதிர்ஷ்ட தேவைதையாகவே நினைத்து லக்கீஸ்வரி என பெயரிட்டு கொஞ்சி மகிழ்ந்தார். சிறிய அளவில் என்டர்பிரைசஸ் ஆக இருந்த நிறுவனம் ‘ஈஸ்வர் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ என்ற பெயர் மாற்றமும் கண்டது.

கூரையை பிய்த்துக் கொடுத்த தெய்வம், அவரின் மனைவியை நோகாமல் தட்சணையாக எடுத்துக் கொண்டது. சீரற்ற உடல்நிலையும், கடினமான பிரசவ உபாதைகளிலும் லக்கியின் தாயார் கலாவதி மிகவும் தளர்ந்து போனார். மகளுக்கு இரண்டு வயதாக இருக்கும் பொழுது கர்ப்பப்பை புற்றுநோயின் ஆரம்ப கட்டத்திலேயே இறைவனிடம் சென்று விட்டார்.

அன்றிலிருந்து கண்ணுக்குள் பொத்தி வைக்காத குறையாக தன் மகளை பார்த்துக் கொண்டார் ரெங்கேஸ்வரன். உறவுமுறைகள் உதவிக்கு வந்தாலும் மறுத்து விடுவார். தனக்கும் மகளுக்கும் இடையில் யாரையும் அனுமதிக்க மாட்டார். அவரது செல்லமகளும் அப்படியே!

அவ்வப்பொழுது வயநாடு சென்று வசுமதியோடு தங்க அனுமதிப்பார் அவ்வளவே! ஐந்து வருடங்கள் பெரியவனான அமிர்தசாகருக்கு லக்கியை பார்க்கும் போதெல்லாம் சீண்டத் தோன்றும்.

அந்த இளம் பிராயத்திலேயே அவள் மற்றவர்களுடன் விளையாடுவதை விரும்பமாட்டான். அவளை சீண்டுவதற்கென்றே ‘மியாவ்குட்டி, மின்னி’ என்று அவளை அழைத்து கடுப்படிக்க, அழுகையுடன் வசுமதியிடம் தஞ்சமடைவாள் குட்டிலக்கி.

“அத்தான் விளையாட்டுக்கு சொல்றான் டா! நீயும் உனக்கு எப்படி தோணுதோ அப்படி கூப்பிட்டு பாரு! அப்படியாவது இவன் அடங்குறானா பார்ப்போம்” சிறுமியை  சாமதனப்படுத்திய வசுமதி, மருமகளிடம் சரிக்குசரியாக அமர்ந்து மகனை கடுப்பேற்றுவதற்கு என்றே ‘சாச்சு’ என அழைக்க வைத்தார்.

“நான் அமீர்! வேற என்ன சொல்லி கூப்பிட்டாலும், கொன்னுடுவேன் உன்னை” மிரட்டி, பலமான கொட்டினை லக்கிக்கு பரிசாக கொடுப்பான் பத்தே வயதான அமிர்தசாகர்.

“போடா சிடுமூஞ்சி சாச்சு! என் அத்தம்மா சொல்லிட்டாங்க, நீ எப்பவும் எனக்கு சாச்சுதான்” மல்லுக்கு நிற்பாள் ஐந்து வயதான லக்கீஸ்வரி.

இருவரின் சண்டையின் போதெல்லாம் வசுமதியின் ஆதரவு சின்னப்பெண்ணிடம் மட்டுமே இருக்க, சிறுவனான அமிருக்கு அது பிடிக்காமல் போனது.

“அம்மா இல்லாத கொழந்தடா! அவளுக்கு எந்த ஏக்கமும் வராம நாமதான் பார்த்துக்கணும்” பேச்சிற்கு பேச்சு அவளுக்கான வாஞ்சைகளே வசுமதியிடத்தில் நிரம்பி வழிய, அதை சற்றும் விரும்பவில்லை அமிர்தசாகர்.

இளம் வயதிலேயே துடிப்புடன் சுறுசுறுப்பாக செயல்படுபவன் அமிர். படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டிலும் இவனது பங்கு எப்போதும் முதன்மையான இடத்தில் இருக்கும்.

அப்பேற்பட்டவனுக்கு தன்வீட்டினில் தானே இரண்டாம் பட்சமாக பார்க்கப்பட்டதும், தன்னை விட சிறியவள் அழைக்கும் பட்டப்பெயரும் அவளின் அலட்சியபாவனையும் சேர்ந்து அவளின் மேல் வெறுப்பினை வரவழைத்தது.

சிறுவயதிற்கே உரிய போட்டி மனப்பான்மை, மற்றும் தனது வாய் துடுக்கில்தான் அவளும் தன்னுடன் மோதுகிறாள் என்பதை வசதியாக மறந்து போனான். கனிவாக பெற்றோர்கள் எடுத்துச் சொன்னாலும் கேட்டுக் கொள்ளாதவன், அந்த வயதிலேயே அவளிடம் எரிந்து விழ ஆரம்பித்தான்.

லக்கி பள்ளிக்கு செல்ல ஆரம்பிக்க, அவள் அமிரின் வீட்டிற்கு வருவதும் குறைந்து போனது. பள்ளிப் படிப்பு, விளையாட்டு என இருவருக்கும் வருடங்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்க, சந்திப்பும் மொத்தமாக நின்றுபோனது.

சில வருடங்களில் வசுமதியும், சுகவீனம் கண்டு மேலுலகம் பயணமாகி விட, மகன் அமிர்தசாகருடன் வெகுவாய் தவித்து விட்டார் சடகோபன்.

அன்னையின் மறைவின் போது, அமிரின் வயது பதினேழு. லக்கீஸ்வரிக்கு பனிரெண்டு வயது.

“அம்மா இல்லன்னு கவலைபடாதே சாச்சு! எங்கப்பா மாதிரியே கோபிமாமாவும் உன்னை நல்லா பார்த்துப்பாங்க!” லக்கி ஆறுதல் கூற, அந்த நிலையிலும் கடுகடுத்த அமிர்,

“ஏய் மின்னி, சின்னி! எனக்கே சொல்லி கொடுக்கிற அளவுக்கு பெரிய மனுஷி ஆகிட்டியா நீ? என்னை பார்த்துக்க எனக்கு தெரியும். உன்னை மாதிரி தத்தின்னு நெனைச்சியா என்னை?” அதட்டலுடன் கடிந்தும் கொண்டான்.  

“போடா, லூசு சாச்சு! இனிமே உன்கூட பேசமாட்டேன். சின்ன பொண்ணுகிட்ட எப்படி கைண்டா பிஹேவ் பண்றதுன்னு உனக்கு தெரியல, வெரி பேட்பாய்!” என முறுக்கிக் கொண்டு சென்றவள், அடுத்து அவனிடம் பேசியது அவர்களுக்கான வாழ்க்கை பந்தம் பற்றிய முடிவினை எடுக்கும் பொழுதுதான்.

பிள்ளைகளின் வளர்ப்பினை முன்னிட்டே நண்பர்களின் உறவும் சற்று தேங்கிப் போக, நேரம் கிடைக்கும் பொழுது தங்களுக்குள் ஆறுதல் கூறி ஆசுவாசப்படுத்திக் கொண்டனர். 

தாயின் மறைவை அந்த சிறுவயதிலும் தாங்கிக் கொண்டு அமைதியாக, துடிப்புடன்  வலம் வந்த அமிரை, ரெங்கேஸ்வரனுக்கு அந்த சமயத்திலேயே மிகவும் பிடித்துப் போனது. நண்பனிடம் மனம் திறந்த பாராட்டை அந்தக்கணமே தெரிவித்தவர், அமிர்தனையும் ஆரத் தழுவிக் கொண்டார்.

வருடங்கள் உருண்டோட, அமிர்தசாகர் டெக்ஸ்டைல் என்ஜீனியரிங் முடித்து, அதனுடன் எம்.பி.ஏ மார்கெட்டிங் மானேஜ்மெண்ட் படித்து முடித்தான். படிக்கும் பொழுதே கல்லூரி வளாக நேர்காணலில் பணி நிமித்த ஆணை கிடைக்க, அதுவே அவனது வாழ்க்கையின் ஏணிப்படியானது.

பயிற்சி முடிந்தவுடன் லகரத்தை தாண்டிய வருமானத்துடன் வெளிநாட்டில் வேலை கிடைக்க, ஆளுமையான ஆணவக்காரன் அவன் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து கொண்டான்.

தன்னம்பிக்கைக்கும் ஆணவத்திற்கும் ஒரு நூலிழை மட்டுமே வித்தியாசம். எதையும் சாதிக்க கூடிய வல்லமை கொண்டவனாக தன்னை மேம்படுத்திய நம்பிக்கையை கர்வத்தின் சிகரத்தில் கம்பீரமாக ஏற்றிவைத்து வலம் வந்தான் அமிர்தசாகர்.  

                                 

கொல்லாமை முன்இனிது கோல்கோடி மாராயஞ்

செய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல்

எய்துங் திறத்தால் இனிதென்ப யார்மட்டும்

பொல்லாங் குரையாமை நன்கு.