ஜீவநதியாக நீ – 12

JN_pic-dd87d394

ஜீவநதியாக நீ…

அத்தியாயம் – 12

ஜீவா, வீட்டுக்கு கெந்தி கெந்தி நடந்து வந்தான். அவன் மாடிப்படி ஏறவும்,”ஜீவா…” கதறிக்கொண்டு அவனை கட்டிக் கொண்டாள் தாரிணி. பல மணி நேரம் தாயை பார்க்காத குழந்தை போல் அவனே ஆதாரம் என்று அவன் மீது தன் பலத்தை இறக்கினாள் தாரிணி.

அவனுக்கு வலித்தது. ஆனால், அதை விட தன்னை தேடி இத்தனை மணி நேரம் காத்திருந்த தாரிணியின் வலி அதிகம் என்பது போல், அவன் வலியை பொறுத்துக் கொண்டான்.

அவன் அவள் தலை முடியை ஆறுதலாக தடவினான். அவள் மேல் அவனுக்கு கோபம் இருக்கிறது. அதை தாண்டிய காதலும் இருக்கிறதல்லவா? அவன் வீட்டிற்கு வந்ததும், முதலில் அவன் அன்பையே வெளிப்படுத்தினான். சில நிமிடங்கள் தாரிணியின் கேவலுக்கு பின், அவள் அவன் முகத்தை அண்ணாந்து பார்த்தாள்.ஆங்காங்கே காயங்கள்.

“என்ன ஆச்சு ஜீவா?” அவள் கேட்க, “ம்…ச்… கீழ விழுந்துட்டேன். சின்னதா காயம். அவ்வுளவு தான். வீட்டுக்குள்ள போவோமா?” அவன் கேட்க, அவள் அவனை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள்.

அவள் கண்கள், அவனையே பரிதவிப்போடு பார்த்தன. வெளியில் இருந்த ஒளியை விட, வீட்டிற்குள் வந்ததும் காயங்கள் அதிகமாகவே தெரிந்தது.

“ஜீவா, சட்டையை கழட்டு” அவள் கூற, “ம்… ச்…” அவன் மறுப்பாக தலை அசைத்தான்.

“ஜீவா, சட்டையை கழட்டுன்னு சொல்றேனில்லை” அவள் அதிகாரமாக கூற, “எதுக்கு தாரிணி? நான் கோபக்காரன்” அவன் நிறுத்த, தாரிணி அவனை புரியாமல் பார்த்தாள்.

“என்ன தாரிணி அப்படி பார்க்குற? நீ தானே சொன்ன… என் கிட்ட குறை இருக்குன்னு. நான் கோபக்காரன்னு நீ தானே சொன்ன? அந்த மாதிரி கோபத்தில், நாலு பேரை அடிச்சேன். அவனும் திருப்பி அடிச்சான்.” ஜீவா மடமடவென்று குளியறைக்குள் சென்றான்.

தாரிணி ஸ்தம்பித்து நின்றாள். அவள் கண்கள் கலங்கியது. அவன் வெளியே வரும்வரை  அதே இடத்தில் காத்திருந்தாள்.

“அப்ப கீழ விழுந்தேன்னு சொன்ன ஜீவா, இப்ப யாரோ அடிச்சாங்கன்னு சொல்ற?” தாரிணி கண்களை சுருக்கி கேட்க, “நாலு பேரு அடிச்சதில் கீழ விழுந்துட்டேன்” அவன் அசட்டையாக கூற, தாரிணி ஏதோ பேச ஆரம்பித்தாள்.

“எனக்கு பசிக்குது” அவன் அழுத்தமாக கூற, அவள் சாப்பாட்டை எடுத்து கொண்டு வைத்துவிட்டு விலக, அவன் அவள் கைகளை பிடித்தான்.

ஜீவாவின் தீண்டலில் காதலை விட கோபம் அதிகமாக இருந்தது. அன்பை விட, அழுத்தம் அதிகமாக இருந்தது.

 “உட்கார், நீயும் சாப்பிட்டிருக்க மாட்ட” அவன் கூற, அவள் கண்கள் கண்ணீரை சொரிய, அது அவன் கைகளை தொட்டது.

“உட்காரு தாரிணி” அவள் அழுகையை தாங்கவும் முடியாமல், அவளை சமாதானம் செய்யும் மனநிலையும் இல்லாததால் அவன் சிடுசிடுத்தான். “நான் சொன்னதை நீ கேட்டியா ஜீவா?” அவள் கேட்க, “பசிக்குது தாரிணி” அவன் இரு வார்த்தை தான் பேசினான்.

அவனுக்கு தட்டை வைத்து அவள் பரிமாறினாள். அவன் அவளுக்கு ஊட்டிவிட, அவள் தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“என் கிட்ட குறை இருக்கு. நான் கொடுக்கறதை நீ வாங்க மாட்ட? அப்படி தானே தாரிணி” அவன் சன்னமான குரலில் கூற, தன் விழிகளை விரித்து அவன் சொல்லின் வீரியம் தாங்காமல் அவனை பார்த்தாள். அவன் கைகளில் இருந்த உணவை வாங்கி கொண்டாள். அவன் புன்னகைத்து கொண்டான். கோபத்தை தாண்டிய புன்னகை!

அவன் மீண்டும் அவளுக்கு கொடுக்க, “நீயும் சாப்பிடு ஜீவா” அவள் சற்று விலகல் தன்மையோடு கூறினாள்.

அவன் பேசாமல் தானும் சாப்பிட்டு, அவளுக்கும் ஊட்டினான்.

“எனக்காக காத்திருக்காத தாரிணி. நான் வேலை தேடி போறவன். நான் வர நேரம் ஆகலாம். நீ சாப்பிட்டிரு” அவன் அவள் பசியறிந்தவன் போல அக்கறையோடு கூற,

“என் மேல கோபமா ஜீவா?” அவள் கேட்க, அவன் பதில் பேசவில்லை.

“பேசமாட்டியா ஜீவா?” அவள் கேட்க, “சாப்பிடு தாரிணி…” அவனும் தன் உணவை முடித்து கொண்டான்.

அவன் படுக்க எத்தனிக்க, “ஜீவா, பேச மாட்டியா?” அவள் அவன் முன் கோபமாக நின்றாள்.

“நான் பேசிட்டு தானே இருக்கேன்” அவன் பாயை விரித்து படுத்து கொண்டே கேட்க, “என் மேல கோபமா இருக்கியா ஜீவா?” அவன் தோள் பிடித்து அழுகுரலில் கேட்க,

“நீ வருத்தப்படுவன்னு என்னை பொய் சொல்ல சொல்றியா தாரிணி.” அவன் அழுத்தமாக கேட்க, அவள் பேசவில்லை.

“எனக்கு உன் அண்ணனை பிடிக்காது. என் தங்கை வாழ்க்கை பத்தி நான் யோசிக்குறேன். நீ இடையில் சம்பந்தமே இல்லாம, என்னை காயப்படுத்தற” அவன் கூற, “சாரி ஜீவா” அவள் இறங்கி பேச, “மனசில் இருக்கிறது தானே வெளிய வருது தாரிணி. நான் கோபக்காரன் தானே” அவள் இறங்கி பேசவும், அவன் குரலும் தணிந்தது.

“அதோட, எனக்கு உன்னை பிடிக்குமுன்னு சொன்னனே ஜீவா. அதை விட்டுட்டே?” அவள் கேட்க, அவன் அவளை வேகமாக இழுக்க, அவள் அவன் மீது மோதி சாய்ந்தாள்.

“தாரிணி…” அழமான அழைப்பு! காதலோடு கலந்த அழைப்பு! அவள் அவனுக்கானவன் என்ற பரிதவிப்போட ஒலித்த அழைப்பு!

“நான் தப்பே பண்ணாலும் கோபப்படாத ஜீவா. எனக்கு யார் இருக்கா? உன்னை விட்டா… நான் தாங்க மாட்டேன் ஜீவா. நீ வர நேரமானதும் நான் ரொம்ப ரொம்ப பயந்துட்டேன் ஜீவா.  ” அவள் குரல் கெஞ்ச, “நான் கோபமே பட்டாலும், உன்னை விட்டு விலக மாட்டேன் தாரிணி” அவன் குரல் உறுதியளிக்க, “இதனால் தான் எனக்கு ஜீவாவை ரொம்ப பிடிக்கும்” அவள் இழைந்தாள்.

“சட்டையை கழட்டு ஜீவா. எங்க அடிபட்டிருக்குன்னு நான் பார்க்கணும்.” அவள் குரலில் இருந்த அன்பு கலந்த கட்டளையில், அவன் சட்டையை கழட்ட, “ஜீவா…” அவள் அதிர்ந்து அழைத்தாள்.

“யார் உன்னை அடிச்சா?” அவள் இப்பொழுது கண்டிப்போடு கேட்க, “சும்மா சொன்னேன் தாரிணி. நான் கீழ தான் விழுந்தேன். விழுந்த வேகத்தில் அடிபட்டிருச்சு” அவன் கூற, அவள் அவனை சந்தேகமாக பார்த்தாள்.

“தாரிணி, நான் காலையிலிருந்து வேலைக்காக அலைந்தேன். படுப்போமா?” அவன் கேட்க, “நீ படு ஜீவா…” கூறிவிட்டு, சமயலறைக்குள் நுழைய தாரிணி எத்தனிக்க, “ஒன்னும் வேண்டாம் தாரிணி” அவன் அவள் கைகளை பிடித்தான்.

சற்று முன் அவன் அவள் கைகளை பிடித்த பொழுது இருந்த கோபமும் அழுத்தமும் இப்பொழுது இல்லை. அன்பும், காதலும் மேலோங்கி இருந்தது. தாரிணியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

குனிந்து, அவன் கன்னத்தில் அவள் இதழ் பதிக்க, அவன் கைகள் அவள் இடையை சுற்றி வளைக்க, அவள் இதழ்கள் அவன் முகமெங்கும் கோலமிட்டு, “லவ் யூ ஜீவா… லவ் யூ ஜீவா…” என்று எண்ணிக்கையில்லாமல் முணுமுணுக்க ஆரம்பித்தது.

அவன் காயங்களில் மெலிதாய் உரிமையோடு வருடி, “வலிக்குதா ஜீவா?” என்று அவள் அதரங்கள் அன்பை பொழிய, அவன் அவள் முகம் நிமிர்த்தி, “எனக்கு எவ்வளவு வேணும்ன்னாலும் காயம் படலாமுன்னு தோணுது தாரிணி” அவன் குறும்பாய் சிரிக்க, “ஜீவா…” அவள் செல்லமாக சிணுங்கினாள்.

அவள் அவன் கன்னத்தோடு தன் கன்னத்தை சேர்த்துக்கொண்டு, “என்கிட்டே எதுவும் மறைக்கறியா ஜீவா?” உரிமையோடு அவனிடம் கேட்க, “…” அவன் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.

“தாரிணி, ரொம்ப யோசிக்காத. அப்படி எல்லாம் இல்லை. நான் புக்ஸ் வாங்கிட்டு வரேன். நீ நாளைல இருந்து படி. அப்புறம் எப்படியாவது உன்னை காலேஜில் சீக்கிரம் சேர்த்து விடறேன். நீ படிப்பை முடி” அவன் கூற, “தேங்க்ஸ் ஜீவா” அவன் கன்னத்தில் இதழ் பதித்து அவள் சமையலறை நோக்கி ஓடினாள் அவனுக்கு உப்பு ஒத்தடம் கொடுக்க.

அவள் காட்டிய அன்பில் அவன் இன்னும் தழைந்து போனான். அவன் கண்களில் வருத்தமும், புன்னகையும் ஒரு சேர வந்தது.

‘தாரிணி நீ எங்கையும் வருத்தப்பட கூடாதுன்னு நான் நினைக்குறேன். உன் கிட்ட நான் பொய் சொல்றேன். விஷயங்களை மறைக்குறேன். என்னை மன்னிச்சிரு தாரிணி’ அவன் தலையணையோடு தன் முகத்தை பொதித்து கொண்டான்.

***

மறுநாள் காலையில், ரவி சற்று உல்லாசமாக கண்களை விரித்தான். அவனுக்கு இருந்த சந்தோஷத்தில், அவனுக்கு தூக்கமே வரவில்லை.

‘நம்ம கீது முழிச்சிடலான்னு பார்ப்போம்’ அவன் அவர்கள் அறைக்குள் இருக்கும் கீதா படுத்திருந்த மெத்தை அருகே சென்றான்.

ஓவியமாய் படுத்திருந்த அவளை அவன் கண்கள் ரசித்தது. உறக்கத்தின் தாக்குதலில் மெலிதாக இடம்மாறி இருந்த அவள் சேலை அவள் அங்கவடிவை எடுத்துக்காட்ட அவன் கண்கள் அவளை ரசனையோடு தழுவியது.

‘காபி வித் பிஸ்கேட்டை விட, இது நமக்கு ரொம்ப புத்துணர்ச்சியா இருக்கே’ அவன் விரல் அவள் அருகே சென்று மெல்லிய இடைவெளியோடு நின்று கொண்டது.

‘கீதா என் மனைவி தான். ஆனால்?’ அவன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான். அவள் சம்மதம் இல்லாமல், அவள் காதல் இல்லாமல் நான் அவளை நெருங்க கூடாது. உறுதியோடு அவன் அவள் பாதம் அருகே சென்று அவள் காயத்தை ஆராய்ந்தான்.

இப்பொழுது அவன் விரல்கள் காதலை ஒதுக்கி அக்கறையோடு அவள் பாதத்தை தீண்ட, அவள் சரேலென்று எழுந்து அமர்ந்தாள்.

“என்ன பண்றீங்க?” தூக்க கலக்கத்தில், மெல்லிய பய உணர்வோடு அவள் கேள்வி பதட்டமாக வெளி வந்தது.

எந்தவித ஒப்பனையுமில்லாமல் அவள் அழகு அவனை ஈர்க்க, அதை விட அவள் அச்சம் கலந்த பார்வை அவனை ஈர்த்தது.

“நான் என்ன செய்யறேன்னு நீ நினைக்குற கீதா?” அவள் உறங்கும் பொழுது தான் எடுத்துக்கொண்ட உறுதி மொழியை ஒன்றுமில்லை என்று கருதுபவன் போல் அவள் அருகாமையில் அமர்ந்தான்.

அவனின் அருகாமையில் அவள் தன் உடைகளை கடகடவென்று சரி செய்து கொள்ள, அவன் அவள் இருப்பக்கமும் கையூன்றி, “என்ன செய்யறேன்னு நீ நினைச்ச கீதா?” காலை முட்டோடு மடக்கி அவள் அமர்ந்திருக்க, அதில் தன் தாடையை வாகாக பதித்து கேள்வி கேட்டான் ரவி.

“உங்களுக்கு என்ன வேணும்?” அவள் இப்பொழுது கறாராக தூக்கம் கலைந்து, அத்தோடு அவள் அச்சமும் கலைந்து உறுதியாக கேட்க, அவன் சிரித்து கொண்டு, அவள் முகம் நிமிர்த்தி,”காபி  வித் பிஸ்கேட்” என்றான்.

அவள் முறைக்க, “சரி முறைக்காத கீது. இப்ப தான் எழுதிருச்சிக்க? காபி செய்ய கஷ்டமுன்னா, பிஸ்கேட் போதும்” அவன் ஒற்றை கண்ணை சிமிட்டினான்.

அவனுக்கு பதில் கூறாமல் அவள் எழுந்து குளியலறை நோக்கி செல்ல, அவன் முகத்தில் மந்தகாச புன்னகை அமர்ந்தது.

‘போடீ… போ… இன்னும் கொஞ்சம் நேரத்தில், என் தங்கை வருவா. கதறுவா. அப்புறம் நீ என் காலில் விழுந்து கதறுவ…’ அவன் வெற்றி சிரிப்போடு கீழே இறங்கி ஹாலுக்கு சென்றான்.

“என்னடா சீக்கிரம் எழுந்து வந்துட்ட?” புஷ்பவல்லி கேட்க, “அம்மா, தீர்க்கப்படாத கணக்கு ஒன்னு இருக்கு. அதை தான் பார்க்க போறேன்.” அவன் இருபொருள் படப் பேசினான்.

“கீதா இன்னும் எழுந்திருக்கலையை?” அவர் சாதரணமாக கேட்க, “அம்மா, இன்னும் சரியா விடிய கூட இல்லையே? இருந்தாலும், அவ எழுந்திருச்சிட்டா. நான் தான் பேசிட்டு இருந்தேன், அவகிட்ட. அப்புறம் தான் குளிக்க போனா” ரவி மடமடவென்று பேச,

‘நான் என்ன கேட்டனு, இவன் இப்படி அவன் பொண்டாடிக்கு வக்காலத்து வாங்குறான்?’ என்று அவர் கண்கள் தன் மகனை ஆராய, அவர் மனதில் மெல்லிய நிம்மதி பரவ ஆரம்பித்தது.

“அம்மா, காபி…” அவன் கேட்க, கீதா மேலிருந்து சமையலறை நோக்கி சென்றாள்.

காபியை கலந்து வேலை செய்யும் பெண்மணியிடம் குறுஞ்சிரிப்போடு கொடுத்தனுப்பினாள். காபியை அனுப்பிவிட்டு, அவள் கண்கள் ஹாலில் இருந்த ரவியை பார்த்தது.

வீட்டில் வேலை செய்யும் பணியாள் காபியை கொண்டு வரவும் அவனுள் கோபம் கனன்றது. ‘திமிர் பிடித்தவள்… திமிர் பிடித்தவள்…’ அவன் அவளை திட்டி கொண்டே சமையலறை நோக்கி பார்வையை செலுத்த, குறுஞ்சிரிப்போடு இருந்த அவள் பார்வையை அவன் கண்டுகொண்டான்.

‘காபியை கொடுத்திட்டு வேடிக்கையா பார்க்குற… இரு வரேன்…’ அவன் சமையலறை நோக்கி சென்றான்.

‘இது என்ன இவன் இங்கு வாரான்.’ அவள் முகம் மிரள, அவன் முகத்தில் கர்வ புன்னகை.

அவள் சமையல் கட்டோடு திரும்பி நின்று கொள்ள, “ரவி, உனக்கு என்ன வேணும்?” அவன் தாயார் கேட்க, தன் மனைவியை பார்த்தபடி, “பிஸ்கேட்…” என்றான்.

கீதாவின் கால்கள் உதறல் எடுக்க, அவள் தக்காளியை வெட்ட ஆரம்பித்தாள்.

“கேட்டா நான் தர போறேன்…” புஷ்பவல்லி அப்பாவியாக கூற, கீதா இப்பொழுது கிளுக்கென்று சிரித்தாள்.

“இந்தா…” அவர் இரண்டு பிஸ்கெட்டை தட்டில் வைத்து நீட்ட, “அத்தை, உங்க பையன் நேத்து நாலு பிஸ்கேட் சாப்பிடுவேன்னு சொன்னாரு. கூட இரண்டு கொடுங்க” அவள் ஆர்வமாக கூட இரண்டை வைக்க எத்தனிக்க, அவன் இவளை கடுப்பாக பார்த்தான்.

“என்னடா இது சின்ன பிள்ளை மாதிரி பிஸ்கட் கேட்டுட்டு. அது தான் இப்ப இட்லி ரெடியாகிருமில்லை?” அவர் கண்டிப்போடு கூற, ‘என்னை பார்த்தா, சின்ன பிள்ளை பிஸ்கேட் சாப்பிடுற மாதிரியா இருக்கு’ அவன் பற்களை நறநறக்க,

“கீதா சும்மா சும்மா இவன் கேட்குறான்னு நீ பிஸ்கேட் எல்லாம் கொடுக்காத” அவர் கண்டிக்க, “அத்தை நீங்க சொல்லி நான் கேட்காமல் இருப்பேனா?” அவள் சமத்தாக தலை அசைத்து அவனை பார்த்து நாக்கை துருத்தினாள்.

ரவி வெளியே சென்று அன்றைய நாளிதழை படிக்க ஆரம்பித்தான். நேரம் கடந்து தாரிணி வராமல் போக, அவனுள் சந்தேகப் பொறி தட்டியது.

‘ஜீவா ஒருவேளை தப்பித்திருப்பானோ?’ அப்படி ஓர் எண்ணம் தோன்ற படபடவென்று கிளம்பினான். கார் சாவியை தேட, அதையும் காணவில்லை.

“கார் சாவி எங்க?” அவன் கத்த, அவன் தாய் தான் பதறிக்கொண்டு ஓடி வந்தார்.

‘கண்ணாபின்னானு தூக்கிப்போட்டா அது என்ன கீ ஸ்டாண்டில் ஏறியா உட்காரும்’ கீதா கண்டும் காணாமல் சமையலறையில் இருந்து கொண்டாள்.

ரவி தாட்பூட் என்று குதிக்க, “இப்ப அவசரமுன்னா பைக்ல போ” அப்பொழுது உள்ளே நுழைந்த அவன் தந்தை கூற, அவன் பைக்கை சாலையில் வேகமாக செலுத்தினான்.

அவன் ஒரு கார் ஷெட் முன்னே வண்டியை நிறுத்த, அங்கிருந்த காரில் ஒய்யாரமாக கால் மேல் கால் போட்டு காரின் மீது அமர்ந்திருந்தான் ஜீவா.

“மச்சான் வாங்க… வாங்க…” என்ற ஜீவாவின் ஏளன குரல் அவனை வரவேற்க, ரவி கடுப்பாக அவன் அருகே சென்றான்.

ஜீவா,வேகமாக முன்னே குதித்து இறங்கினான்.

“நான் இங்க இப்படி உட்காந்திருப்பேனு நீ நினைக்கலைல? ஆனா, நீ எனக்கு இங்க வருவேன்னு தெரியும் மச்சான். நீ வரும் பொழுது, நான் இங்க இல்லைனா நீ வருத்தப்படுவ பாரு. என் தங்கை புருஷன். என் மனைவிக்கு அண்ணன்” ஜீவா அவன் இரு தோள்களில் கையை போட, ரவி அவனை தட்டிவிட்டு விலகி நின்றான்.

“என் தங்கை வாழ்க்கையை கெடுக்கறதா நினைச்சி நீயே வலைக்குள்ள மாட்டிக்கிருக்கிற மச்சான். நான் இதை நம்ம வீட்டு பொம்பளைங்க கிட்ட சொன்னேன் வை… சும்மா பத்திகிட்டு எரியும்” ஜீவா அவன் கைகளை சொடக்கிட்டான்.

“ஆனால், நான் சொல்ல மாட்டேன். ஏன் தெரியுமா?” ஜீவா நிறுத்த, ரவியின் கண்களில் தீப்பொறி.

“மச்சான், நீ நேத்து பண்ண வேலை நல்லா இருந்தது. நேத்து உன் தங்கை என்னை செம்மையா கவனிச்சா. அப்பப்ப இப்படி ஏதாவது செய் மச்சான். என் வாழ்க்கையும் கொஞ்சம் கிக்கா இருக்கும்”  ஜீவா கூறிவிட்டு நடக்க, திரும்பவும் முன்னே வந்து அவன் முன் நின்றான்.

ரவியின் முன் சொடக்கிட்டு, “உன்னால் ஒரு மண்ணும் கிழிக்க முடியாது. போடா… போய் உன் வேலையை பாரு. அதையாவது ஒழுங்கா பாரு. இல்லை, உன்னை கிழிகிழின்னு நான் கிழிப்பேன்” ஜீவா கூற, “ஹா… ஹா…” இப்பொழுது ரவி பெருங்குரலில் சிரித்தான்.

“இன்னைக்கு நான் அடைச்சு வச்சி நீ தப்பிச்சிட்டா நீ என்ன பெரிய கொம்பா? நான் ஆரம்பிச்ச ஆட்டத்தில், நேத்தே உன் வீட்டில் சண்டையும், கண்ணீரும் வந்திருக்கும். இட்’ஸ் ஜஸ்ட் எ  ஸ்டார்ட்…” என்று கூறி புன்னகைத்து தன் புல்லட்டை எடுத்து மடமடவென்று சென்றான் ரவி.

ஜீவாவின் புருவ மத்தியில் முடிச்சுகள் விழுந்தன.

நதி பாயும்…   

(குழந்தைகள் பரீட்சை, விடுமுறை என அடுத்தவாரம் பதிவு தருவது கொஞ்சம் கடினம். மன்னிக்கவும். முடிந்தளவு விரைவில் அடுத்த அத்தியாயத்தோடு விரைவில் வருகிறேன்)