ஜீவநதியாக நீ… – 13

JN_pic-cf1d5538
akila kannan

ஜீவநதியாக நீ…

அத்தியாயம் – 13

ரவி கோபமாக சென்றதும் அங்கு மறைந்திருந்த ஜீவாவின் நண்பன் கதிர் என்று அழைக்கப்பட்ட கதிரேசன் அவனருகே வந்தான். “என்ன ஜீவா நடக்குது?” அவன் கேட்க, “என்ன நடக்க போகுதுன்னு யோசிக்கிறேன் கதிர்” ஜீவா நடந்தபடியே பேசினான். “ரவி, நேரடியா பிரச்சனை பண்ணுவான்னு எதிர்பார்த்தேன். ஆனால், அவன் ரொம்ப கிரிமினலா விளையாடுறான். எங்க அம்மா அப்பா வருவாங்க எனக்கு இரண்டு அடி விழும். இப்படி எல்லாம் நினைச்சேன். எதுவும் நடக்கலை. எங்க அம்மா, அப்பா வரலை. ரவி ரொம்ப நல்லவன் மாதிரி தாரிணி  முன்னாடி நடந்துக்குறான். என் தங்கையை கல்யாணம் பண்ணிகிட்டான். இப்ப, என் குடும்பம் ரவியின் பிடியில் இருக்காங்க” ஜீவா நிதானமாக கூற, “ரவி குடும்பம் உங்க குடும்பத்தை மிரட்டி வச்சிருக்காங்கன்னு சொல்லறீயா ஜீவா?” கதிரேசன் கண்களை விரித்தான்.

“மிரட்டின்னு சொல்ல முடியாது. ஆனால், ஒரு விதமா ஏதோவொரு பிடியை கீதாவை வச்சி பண்ணிட்டாங்க மாதிரி தெரியுது.” ஜீவா யோசனையோடு கூற, “உங்க அம்மா, அப்பாவை போய் பார்க்கலாமில்லை?” கதிரேசன் கேட்க, “போகணும். அவங்க கோபம் கொஞ்சம் தனியட்டுமுன்னு பார்க்குறேன்” ஜீவா தன் நெஞ்சை நீவியபடி கூறினான்.

“நேத்து உன்னை ரவி தான் அடைச்சு வச்சிருந்தானோ?”என்று கதிர் கேட்க, “நமக்கு பல எதிரிகள் உண்டு. ஆனால், இப்பதைக்கு நம்ம எதிரி ரவி தான். அவன் தான் இதை பண்ணிருக்கணும். அவன் தங்கை அவன் கிட்ட போய் கெஞ்சுவான்னு எதிர்பார்த்திருப்பான். நம்மளை சுத்தல்ல விடலாமுன்னு யோசிச்சிருப்பான்” ஜீவன் கைகள் கோபத்தில் முறுங்கியது.

“ரவி இனி சும்மா இருப்பானா?” கதிர் கேட்க, “நிச்சயமா மாட்டான். நமக்கு இடைஞ்சல் கொடுப்பான்.” ஜீவா கூற, “அவனால் என்ன பண்ண முடியும்?”கதிர் இப்பொழுது அசட்டையாக கூறினான்.

“சூழ்ச்சியிலே சுவரமைத்து

 சுயநலத்தால் கோட்டைகட்டிச்

சுடர்விட்ட நீதிதனைத் தூக்கி எறிந்துவிட்டுச்

சாட்சிகள் வேண்டாம் சகலமும் நானென்று

சதிராடும் வீணர்களின் அதிகார உலகமடா

புதிரான உலகமடா  உண்மைக்கு

எதிரான உலகமடா  இதில்

பொறுமையைக் கிண்டிவிடும்

போக்கிரிகள் அதிகமடா” கூறிவிட்டு சிரித்தான் ஜீவா.

“பட்டுக்கோட்டை சும்மாவா சொல்லிருக்கிறார். இது மொத்தமும் ரவிக்கும், அவன் அப்பனுக்கும் பொருந்தும்” ஜீவா அருகே இருக்கும் மரத்தை குத்தினான். “உன் தங்கை பாவம்” இப்பொழுது கதிரேசன் வருத்தப்பட, “எனக்கு தங்கையா வந்து பிறந்த பாவத்துக்கு அவ கஷ்டப்படுறா” ஜீவா குரலில் வருத்தம் இழையோடியது. சட்டென்று, “கீதா சமாளிப்பான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்றான். வருத்தத்தோடு அவன் குரலில் கொஞ்சம் நம்பிக்கையும் இருந்தது.

“நமக்கு இப்ப என்ன பிரச்சனை கதிர்?” ஜீவா கேட்க, “அம்மா, அப்பா உன்னை ஏத்துக்கணும்” கதிரேசன் கூற, “அதுக்கு முற்று புள்ளி வச்சிட்டான் இந்த ரவி. கீதாவை கல்யாணம் பண்ணிகிட்டத்துக்கு பின்னாடி அவங்க குடும்பம் இதை தான் எங்க வீட்டில் பேசிருக்கணும். எங்க அப்பாவும் உடனே சம்மதிச்சிருப்பாங்க. அம்மா தான் பாவம்” தன் தாடையை தடவினான் ஜீவா.

“சரி அதை விடுவோம். கொஞ்சம் நாள் போனா, எல்லாம் மாறும். அடுத்த பிரச்சனை?” ஜீவா சிந்திக்க, “வேற என்ன வேலை தான். ஊரில், நாம வேலை பார்த்த இடத்தில் எல்லாம் தப்பை தட்டி கேட்டு வேலை போச்சு. இங்க இனி தான் வேலை தேடணும். கம்ப்யூட்டர்… கம்ப்யூட்டர்… எங்க போனாலும் இதைத்தான் சொல்றாங்க. அதுவே எல்லா வேலையையும் முடிச்சிருமாம். 2000 ஆண்டுக்கு அப்புறம் எங்கையும் மனுஷனே தேவை இல்லையாம். எல்லாம் கம்ப்யூட்டர்ன்னு சொல்லிட்டாங்க” கதிரேசன் சோகமாக கூறினான்.

“அது எப்படி கதிர்? கம்ப்யூட்டரை இயக்கவாவது மனுஷன் நாம வேணுமில்லை?” ஜீவா கேட்க, “இப்பவே கையில் காசு இல்லை ஜீவா. நினைச்சப்பல்லாம் டீ கூட குடிக்க முடியலை. எனக்கும் ஊரில் வேலை இல்லை. நானும் உன் கூடவே மெட்ராஸுக்கு வந்துட்டேன். இங்க வேலை பார்த்துக்கலாமுன்னு. நம்ம நண்பர்கள் கிட்ட சொல்லிருக்கேன் வேலைக்கு.” கதிரேசன் கூற, ஜீவாவுக்கு பொறி தட்டியது.

“ரவி அடுத்ததா எனக்கு வேலை கிடைக்குற இடத்தில் தான் இடைஞ்சல் கொடுப்பான்” ஜீவா பட்டென்று கூற, “என்னடா சொல்ற” கதிரேசன் இப்பொழுது அதிர்ந்தான். “ஏற்கனவே வேலை கிடைக்குற மாதிரி தெரியலை. எல்லாரும் முன் அனுபவம் கேட்குறாங்க. எனக்கு வேலையில் பெரிய முன் அனுபவமில்லை. உனக்கு போன இடத்தில் எல்லாம் சண்டை வளர்த்த அனுபவம் தான் இருக்கு” நண்பன் புலம்ப, “நான் எந்த தப்பும் பண்ணலை. தப்பு நடந்த இடத்தில் தப்பை தட்டி கேட்குறேன் அவ்வளவு தான். அதுக்காக நான் தப்பு நடக்குற இடத்தில் வேலை பார்க்க முடியுமா?” ஜீவா கோபமாக கேட்டான்.

“இப்ப உன்னை நம்பி ஒரு பொண்ணு வந்திருக்கா” கதிர் கூற, “தாரிணி என்னை மட்டும் நம்பி வரலை. என் கொள்கைகளையும் விரும்பி தான் வந்திருக்கா” ஜீவாவின் குரலில் அழுத்தம் இருக்க, “ஜீவா காதலிக்கும் பொழுது கொள்கைகளை பிடிக்கலாம். ஆனால், கல்யாணத்துக்கு அப்புறம் பசி வயிற்றை கிள்ளும் பொழுது…” சற்று தயக்கமாக பேசினான் கதிர்.

ஜீவாவிடம் இப்பொழுது மௌனம். “நாம உன் கல்யாணம் முடிந்த கையோட வேலைக்கு சொல்லி வச்சிட்டோம். நாம்ம போஸ்ட் க்ராடூயேட். நம்ம படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்குற மாதிரி எனக்கு தெரியலை.” கதிரேசன் புலம்ப, “கிடைக்கும். நாம்ம எங்க வேணும்ன்னாலும் கணக்கு வழக்கை பார்க்க முடியும். நமக்கு வேலை கிடைக்கும்.” ஜீவா உறுதியாக கூற, “அதுக்கு தான் கம்ப்யூட்டர் வந்திருச்சே” கதிரேசன் இப்பொழுது வாக்குவாதம் செய்ய, “சரி கத்துப்போம்” ஜீவா நம்பிக்கையோடு பேச, “காசு வேணும் ஜீவா. எல்லாத்துக்கும் காசு வேணும்” நிறுத்தினான் கதிர்.

‘வேலை இல்லை. ஆதரவுக்கு குடும்பம் இல்லை. எது நடந்தாலும், கெடுப்பதற்கு ரவி இருக்கிறான். எல்லாம் அச்சுறுத்தும் நிலை தான். ஆனால், அனைத்தையும் தாண்டி மீண்டு வருவான் ஜீவா.’ அவன் இதயம் உறுதியாக துடித்தது.

***   

ரவி ஜீவாவிடம் தன் திட்டம் தோற்றத்தில் மிருகம் போல் வெறி கொண்ட கோபத்தோடு வீட்டிற்குள் நுழைந்தான். அவன்  ஷூ அங்குமிங்கும் பறந்தது.

“ரவி. சாப்பிடாமலே எங்க போன? சாப்பிட வா” அவன் தாயார் அழைக்க, “எனக்கு சாப்பாடு வேண்டாம் அம்மா” மடமடவென்று அவன் அறை நோக்கி சென்றவன், “கார் சாவி எங்க?” இப்பொழுது கோபமாக கேட்க, அன்று அவன் சாவியை தூக்கி எறிந்த பொழுது கீதா அதை எடுத்ததை பார்த்த வேலையாள் கீதாவை நோக்கி திரும்ப, அதை நொடிப்பொழுதில் கண்டுகொண்டான் ரவி.

‘இவ கூட கொஞ்சி விளையாடவா, நான் இவளை கட்டிகிட்டேன்?’ அவன் கோபம் அவன் மீதே திரும்பியது. “கீதா ரூமுக்கு வா” அவன் குரலில் அதிகாரமும் கோபமும் இருக்க, ரவியின் தாய் புஷபவல்லி முகத்தில் கலவரம். மகனின் குணம் அறிந்த ஷண்முகம், “ரவி, சாப்பிட்டுட்டு உன் ரூமுக்கு போயேன்” தன் மகனை நிதானப்படுத்த முயற்சித்தார். ஜீவா தான் அவர் எதிரியேயொழியே, கீதா அல்ல. கீதா, தன் மாமியார், மாமனாரின் குணத்தை ஓரளவு பிடித்துவிட்டாள். ரவியை அசட்டையாக பார்த்தாள். ‘இவர் அப்படியே பெரிய கோபக்காரர். நம்மளை கொத்தி பிடுங்கிருவாங்க’ என்று தன் கணவனை அசட்டையாக பார்த்தாள்.

“கீதா உன்னை வர சொன்னேன்” ரவி கோபமாக முன்னே செல்ல, ஷண்முகம் அங்கிருந்து சென்றுவிட்டார்.  சிறிதும் கலக்கமின்றி கீதா அவர்கள் அறை நோக்கி செல்ல எத்தனிக்க, “ரவி கோபமா இருக்கான் போல தெரியுதும்மா” புஷ்பவல்லி கூற, “நான் பார்த்துகிறேன் அத்தை” கீதா சிரித்த முகமாக  ரவியின் அழைப்புக்கிணங்கி சென்றாள்.

அறைக்குள் ரவி குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான். அங்கிருந்த மெத்தையில் அமர்ந்த கீதா, தன் கணவனை ஆழமாக பார்த்தாள். ‘தன்னிடம் மயங்கி நிற்கும் ரவி இவனில்லை.’ சற்று நிதானித்துக் கொண்டாள். “என் கார்  சாவி எங்க?” என்றான் கடுப்பாக. கோபத்தை அவளிடம் வெளிப்படுத்த அவனுக்கோர் சாக்கு. ‘சாவிக்கு இவ்வளவு கோபம் வரணுமா?’ அவளிடம் மௌனம்.

“ஏய், நான் கார் சாவியை தேடிட்டு வெளிய போனேன். அதை தேடி எடுத்து வைக்கணும்னு உனக்கு அறிவில்லை? பொண்டாட்டியா நீ எனக்கு வேலை செஞ்சி கொடுக்கணும். என் கிட்ட விளையாடிகிட்டு இருக்கியா?” அடிபட்ட பணக்கார வீட்டு பிள்ளையாக அவன் கர்ஜிக்க, ‘சாவியை விளையாட்டா நான் தானே ஒழிச்சு வச்சேன். அதை வைத்து இப்படி கோபப்படுவாங்கன்னு நான் நினைக்கலையே’ அவன் கோபத்தில் அவள் தன் வாயை இன்னும் இறுக மூடிக்கொண்டாள்.

“ஏய், கேட்குறேனில்லை?” அவன் அவள் கைகளை பற்றி இழுக்க, அவன் மேல் மோதி அவள் சுவரில் சாய்ந்து நின்றாள். “என்ன நினைச்சுகிட்டு இருக்க நீ? உன் அண்ணன் பண்ண வேலைக்கு, உன் குடும்பத்தை போட்டு தள்ளாம ஏன் விட்டு வச்சிருக்கேன் தெரியுமா? உன்னை வைத்து உங்க அண்ணனை அடிக்க. உன்னை அடிக்குற அடியில் உங்க அண்ணன் என் காலில் விழணும்னு… நீ என்னமோ என் காதல் மனைவி மாதிரி என்னை கொஞ்சிகிட்டு அலையுற?” அவன் சீற, அவள் கண்கள் கலங்க எத்தனித்தது.

“என்ன என்னை மயக்கிடலாமுன்னு பார்த்தியா?” அவன் எகிற, அவள் உடல் கூசியது. “கேட்குறேனில்லை சொல்லுடி. உங்க அண்ணனுக்கு வேலைக்கு போக துப்பில்லை. என் தங்கையை மயக்கி கல்யாணம் பண்ணிகிட்டான். நீ என்னை மயக்கிடலாமுன்னு பார்த்தியா?” அவன் கடுப்பாக கேட்க, “எங்க அண்ணனை உங்க தங்கை தான் மயக்கி இருக்கணும். இந்த மாதிரி காட்டுமிராண்டி கூட்டம் வேண்டாமுன்னு உங்க தங்கை தான் என் அண்ணனை மயக்கி இருக்கணும். பணத்துக்கு அலையுற ஆள் எங்க அண்ணனும் கிடையாது. எங்க குடும்பமும் கிடையாது. பணம் பணமுன்னு அலையுற குடும்பம் உங்க குடும்பம் தான்.” அவளும் அவனுக்கு ஈடாக சீறினாள்.

“அப்ப ஏன்டீ கார் சாவி ஒழிச்சு வைத்து விளையாடிகிட்டு இருக்க?” அவன் உண்மையில் அவள் விளையாடுகிறாள் என்று நினைக்கவில்லை. எடுத்து வைத்திருக்கிறாள் என்று மட்டும் தான் எண்ணினான். கேட்டதும் சொல்லவில்லை, அவள் அண்ணன் மீதிருந்த கோபத்தில் இவளிடம் வெடித்தான்.

அவன் இவளை மிகவும் நெருங்கியிருக்க, அவர்களுக்கு இடையே இடைவெளி ஏற்படுத்தும் விதமாக, அவள் தன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொள்ள, “என்னை உன் பக்கம் இழுக்க, எல்லா வேலையும் செய்திட்டு என்ன டீ நல்லவ வேஷம் போடுற?” அவன் அவள் கைகளை பிடித்து பின்னே வளைத்தான். அவள் கைகள் வலியில் துடிக்க, “அண்ணா…” அவள் இதழ்கள் முணுமுணுத்தன.

“ஏய், அவனை ஏன்டீ கூப்பிடுற?” அவன் அவள் கைகளை அழுத்த, “அண்ணா… அண்ணா…” அவள் இதழ்கள் அழுத்தமாக அழைத்தன.

வலியோடு, அவள் சிந்தை அவளை நிந்தித்தது.  ‘இவனிடம் நான் ஏன் மயங்கி நின்றேன்? இவனிடம் எனக்கு என்ன விளையிட்டு? நான் என்ன முட்டாள்தனம் செய்துவிட்டேன்!’ தன் இடையில் தான் வைத்திருக்கும் சாவியை இவன் கண்டுகொள்ள கூடாதே’ அவள் எண்ணப்போக்கிற்கு இசைவாக அவள் விழிகள் அவள் இடை பக்கம் செல்ல, அவன் கைகள் அவள் விழிகள் சென்ற பக்கம் சென்றது. அங்கு அவள் சேலை சற்று விலக, அங்கு அவன் கார் சாவி தெரிய, அவன் திடுக்கிட்டு போனான். ‘தன்னிடம் விளையாட எண்ணினாளா?’ அவளின் எண்ணத்தை அறிந்தவன்… அவள் மேல் காதல் கொண்டவன்… தடுமாறினான். ‘நான் தான் தேவை இல்லாம இவள் மேல் கோபப்பட்டேனா?’ அவன் கைகள் அவள் இடையை பற்றியது. அவன் தொட்டதும் அவள் தேகம் நெகிழ்ந்தது.

அவன் தீண்டியதும் நெகிழ்ந்த தன் தேகத்தை கடுமையாக திட்டினாள் கீதா. ‘இவனின் தொடுகை என்னை நெகிழ வைக்குமா?’அவள் உடல் இறுக, அவள் எண்ண ஓட்டத்தை அவன் கண்டுகொண்டான். அவன் விரல்கள் அவள் இடையை இப்பொழுது மென்மையாக வருடியது. அவன் அவள் இடைக்கும், சேலைக்கும் இடையே தொங்கிய சாவியை உரிமையோடு தழுவி எடுத்துக்கொண்டு, அவள் தோளில் தாடையை பதித்து, அவளை சுவாசிக்க, அவள் வெறுப்பாய் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவளின் செய்கையில் அவன் கோபம் தணிய ஆரம்பிக்க, அவன் பேச்சில் அவள் கோபம் உச்சத்திற்கு செல்ல ஆரம்பித்தது. அவள் கோபம் இப்பொழுது அவனை ஏதோ செய்ய, அவள் செவியோரம், “தேங்க்ஸ்…” என்றான் சற்று சமாதானமாக. “எதுக்கு? உங்களை மயக்கி என் பக்கத்துல நிக்க வச்சதுக்கா?”  அவள் அவன் முகம் பார்த்து கேட்க, “கீதா…” அவன் சற்று நிதானத்திற்கு வந்தான்.

“கார் சாவிக்கு நீங்க கோபப்படலை. எங்க அண்ணன் கிட்ட மண்ணை கவ்விட்டு வந்திருக்கீங்க” அவள் ஏளனமாக கூறினாள். “கீழ விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டலைன்னு மீசையை முறுக்கிட்டு உங்க வீரத்தை என் கிட்ட காட்ட வந்திருக்கீங்க” அவள் நக்கலாக கூறினாள். “கீதா” அவன் இப்பொழுது கர்ஜிக்க, “என்ன சத்தம் போடுறீங்க?” அவள் புருவத்தை உயர்த்தினாள்.

“உங்களை மயக்கனும்னு எனக்கு அவசியமில்லை. உங்களை நான் கல்யாணம் பண்ணலை. என் அண்ணனை அடக்க வழி தெரியாம, உங்க குடும்பம் என் குடும்பம் காலில் விழாத குறையா என்னை கலயாணம் பண்ணிருக்கீங்க” அவள் கூற, “திமிர் டீ… உனக்கு உங்க அண்ணனை மாதிரி உடல் முழுக்க திமிர்” அவன் அவள் முடியை கொத்தாக பிடிக்க, “நேர்மையா வேலை செய்யுற எங்களுக்கு திமிர் இருக்கத்தான் செய்யும். காசு இல்லைனாலும், நேர்மையும் உழைப்பும் எங்க கிட்ட இருக்கு. உங்க லட்சணம் எனக்கு தெரியாதா?” அவள் கேட்க, அவன் கைகள் இறுகியது.

“கீதா, போதும் நிறுத்து. நீ ரொம்ப பேசுற.” ரவி எச்சரிக்க, “ரொம்ப பேசலை. உண்மையை பேசுறேன். என் அண்ணன் பக்கம் எப்பவும் நியாயம் இருக்கும். எங்க குடும்பத்தில் நேர்மை இருக்கும். என் அண்ணன் கொள்கை நிறைந்தவன். அவன் கஷ்டப்படலாம். ஆனால், அவன் எங்கையும் நிமிர்ந்து நிற்பான். அவன் கொள்கைக்கு முன்னாடி உங்க குறுக்கு வழி அவன் காலில் விழுந்து கதறும். இன்னைக்கும், நீங்க ஏதாவது பண்ணிட்டு தோத்து போய் வந்திருப்பீங்க” அவள் ஏற, “மூடு வாயை” அவன் கீதாவை அறைய கை ஓங்கினான்.

“அடிங்க… என்னை அடிங்க…” அவன் முன் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நின்றாள் கீதா. “நீங்க என்னை அடிச்சா, இதையே காரணம் காட்டி என் வீட்டுக்கு போய்டுவேன். உங்க லட்சணம் எங்க அப்பாவுக்கு தெரிய வரும். உங்க தங்கையை நீங்க இப்படி கொடுமை பண்ணதால் தான் என் அண்ணன் காப்பாற்ற வேண்டிய நிலை வந்துச்சுன்னு சொல்லுவேன். என் மேல கையை வச்சி பாருங்களேன்” தன் மனைவியின் கோப பேச்சு கூட அவனுக்கு எங்கோ ருசித்தது. அவள் நெஞ்சை நிமிர்த்தி தன் முன் நின்ற விதத்தில் அவன் சற்று மயங்கித்தான் போனான்.

அவன் மயக்கத்தை சட்டென்று தெளிய வைத்தாள் அவள். “என் அண்ணன் கிட்ட போவேன். உங்களை, என் அண்ணன் நார்நாரா கிழிப்பான். வீரம் இருந்தா, என் அண்ணா கிட்ட போய் மோதுங்க. உன்னால ஒரு ம… நான் எதுவும் சொல்ல விரும்பலை” கீதா தலையை குலுக்கி கொண்டு வெளியே செல்ல எத்தனிக்க, “ஏய், நில்லுடி” அண்ணன் என்ற சொல்லில் அவன் உச்சந்தியில் கத்தினான்.

“உன் அண்ணனுக்கு ஒரு வேலை கூட கிடையாது. இனியும் கிடைக்காது. வேலை இல்லாமல், உங்க அண்ணன் பாரதியார் பாட்டும், பட்டுக்கோட்டை பாட்டும், பாவேந்தர் பாட்டும் பாடிகிட்டு தெருவில் பிச்சை தான் எடுப்பான். நான் எடுக்க வைப்பேன். பசி வயித்தை பிடுங்க, காதலாவது மண்ணாவதுனு என் தங்கை தன்னை போல் என் காலில் வந்து விழுவா. அப்ப, என் அண்ணனை தனியாவாது வாழ விடுங்கனு, நீ என் காலில் வந்து விழுந்து கதறுவடி” அவன் அவள் சங்கை பிடித்து மிரட்டினான்.

அவள் மூச்சு திணற, “அண்ணன் அண்ணன் அப்படினு பேசாத… உங்க அண்ணன் பசியில் சாவான். நீ அண்ணன் அண்ணன் அப்படினு சாக போற” அவன் கூற, அவள் சத்தமாக சிரித்தாள்.

அவள் சிரிப்பை பார்த்து அவன் முறைக்க, “தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்! இப்படி வாழறவன் என் அண்ணன். அவன் உன்னை அழிப்பான்” அவள் சவால் விட நக்கலாக சிரித்தான். “என் அண்ணன் உன்னை விட பணத்திலும், அதிகாரத்திலும் உயர்ந்து நிக்குற நாள் ஒன்னு வரும்.” அவள் கூற, அவன் இப்பொழுது பெருங்குரலில் சிரித்தான்.

“ஏய், ஒரு பொண்ணு உனக்கு என்ன தெரியும்? காலேஜ் போய் படிச்சிட்டா எல்லாம் தெரியுமா உனக்கு? சவால் விடுற? இவ்வளவு தைரியம் உனக்கு நல்லதில்லை. பயம்… நீ பயப்படணும்… இல்லை உனக்கு நான் பயத்தை காட்டுவேன்” அவன் கேலி போல் எச்சரிக்க, அவள் இப்பொழுது கம்பீரமாக சிரித்தாள்.

அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள்

அழகிய தமிழ்நாட்டின் கண்கள்

உச்சி இருட்டினில் பேய் வந்ததாக

உளறினால் அச்சமா? பேய் என்பதுண்டா?

மடமைதான் அச்சத்தின் வேராம் – அந்த

மடமையால் விளைவதே போராம்.

மடமையும் அற நல் ஒழுக்கமும் வேண்டும்

கல்வி வேண்டும் அறிவு கேள்வியும் வேண்டும்” அவள் படபடவென்று பொரிய அவன் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றான்.

“பாரதி பாட்டை மட்டுமில்லை, பாவேந்தர் பட்டையும் சொல்லி வளர்த்திருக்கான் என் அண்ணன். பாட்டை பாட்டோடு நிறுத்தாமல், வாழ்க்கையில் கைப்பிடிக்கிறவங்க நாங்க. எங்க கொள்கையும், அறிவும் தைரியமும் அப்படி” அவள் கூறிவிட்டு ஒயிலாக அறையை விட்டு செல்ல, “அண்ணனும், தங்கையும் கனவுலையே வாழறீங்களா? உங்களுக்கு நான் நிஜத்தை காட்டுறேன்” அவன் சூளுரைத்துக் கொண்டான்.

நதி பாயும்…