ஜீவநதியாக நீ – 16

JN_pic-19cdaba3
Akila kannan

ஜீவநதியாக நீ…  

அத்தியாயம் – 16

கீதா சில இடங்களில் வேலைக்கு முயற்சி செய்வதற்காக செய்தித்தாளில் வந்த விளம்பரங்களை குறித்து வைத்திருந்தாள். அவளறியாமல் அவளை நோட்டமிட்டு கொண்டிருந்தான் ரவி. அவள் அவர்கள் அறையிலிருந்து சமையலறை நோக்கி சென்றதும் வேறொரு விளம்பர தாளை வைத்து அவளைப் போலவே அங்கு வட்டமிட்டு வைத்தான்.

அவள் ரவியின் தாய்க்கு சில உதவிகளை செய்துவிட்டு மீண்டும் அறைக்குள் வந்து, வெளியே கிளம்பினாள்.  வெளியே கிளம்புமுன் அவள் வட்டமிட்டு வைத்திருந்த விளம்பர தாள்கள், செய்தி தாள் என அனைத்தையும் அவள் எடுக்க, அவள் கண்கள் சுருங்கியது. ‘இதை நான் வைக்கலையே?’ அவள்  யோசனையோடு தன் தாடையை தடவ, “கீதா, வெளிய கிளம்புறியா? நான் உன்னை விட்டுட்டு போகட்டுமா?” அக்கறையோடு கேட்டான் ரவி.

“உங்களுக்கு எதுக்கு சிரமம்? நானே பார்த்துக்கறேன்.” அவள் கூற, “நான் உன்னை கையில் தூக்கிட்டு போனால் கூட எனக்கு சிரமம் கிடையாது. இப்ப என் வண்டி தானே உன்னை தூக்கிட்டு போகப் போகுது. அதனால் எனக்கு கொஞ்சம் கூட சிரமம் கிடையாது. வரியா என் கூட?” அவன் குறும்பாக கேட்க, அவள் அவனை முறைத்துப் பார்த்தாள்.

“கீது, நாம சண்டை போட்டு என்ன ஆகப்போகுது? நான் உனக்கு கணவன். நீ எனக்கு மனைவி. நாம நட்போடு இருக்கலாமே?” என்றான் அவன் புத்தி வந்தது போல. “இருக்கலாம். ஆனால், வழியில் என் அண்ணனை பார்த்துடீங்கன்னா, உங்க மனசு மாறிடும். என்னை கீழ தள்ளிவிட்டுட்டு போக மாட்டீங்கன்னு என்ன நிச்சியம்?” அவள் புருவம் உயர்த்த, “அதெல்லாம் தள்ளி விட மாட்டேன். விட்டுட்டு போகவும் மாட்டேன்” அவன் இப்பொழுது கலகலவென்று சிரிக்க, “ஏன் இப்படி சத்தமா சிரிக்கறீங்க? அத்தை, மாமா வந்திற போறாங்க” அவள் எம்பி அவன் வாயை மூடினாள்.

அவளறியாமல் அவள் அவன் அருகே நெருங்கியிருக்க, படபடத்த அவள் இமைகள் அவன் மனதை கொள்ளைக் கொள்ள அவள் இதழ்கள் பேசிய வார்த்தைகள் அவனுக்கு ராகமாகவே ஒலிக்க, அவன் அனைத்தும்  மறந்து போனான். அவளை கோவிலில் பார்த்ததும், அவள் பாடியதும் அவன் அதில் மயங்கி நின்றதும் நினைவு வர, அவன் அவள் கைகளை பிடித்து தனக்குள் பொதித்து கொண்டான்.

“கீதா, ஒரு பாட்டு பாடேன்” அவள் அருகாமையில் முழு காதலனாக மாறி அவன் குரல் மென்மையாக வெளி வந்தது. “எனக்கு பாட தெரியாது” அவள் தலையை குனிந்து கொண்டு கூற, “என் மனைவி கீதாவுக்கு பொய் பேச வராது. தலை குனியவும் தெரியாது” அவன் அவள் முகத்தை நிமிர்த்த, “பாட பிடிக்கலைனு சொல்லு கீதா. பாட தெரியாதுன்னு சொல்லாத” அவன் முகத்தில் ரசனை வழிந்தது.

“சரி, பாட பிடிக்கலை” அவள் அழுத்தமாக கூற, அவள் பிடிவாதம் அவனை என்னவோ செய்தது. “ஏன் பிடிக்கலை?” அவன் அவளை தன்னருகே நிறுத்தி, அழுத்தமாக கேட்டான். “எங்க அண்ணனுக்கு நான் பாடினா ரொம்ப பிடிக்கும்” அவள் குரல் பிசிறு தட்டியது. “உங்க அண்ணனுக்கு பிடித்தா, எனக்கு பிடிக்க கூடாதா? நீ எனக்காக பாட கூடாதா? உங்க அண்ணனுக்காக மட்டும் தான் பாடுவியா?” அவன் குரல் கோபம் கொள்ளவே விரும்பியது. ஆனால் கோபத்தை விட அதில் வேட்கை மிதமிஞ்சி இருந்தது.

“ம்… என் அண்ணனுக்காக மட்டும் தான் பாடுவேன்னு வச்சிக்கோங்க” அவள் கடுப்பாக கூறிவிட்டு கிளம்ப எத்தனித்து விலக, அவன் அவள் கைகளை அழுந்த பற்றினான். அவள் பிடிவாதத்தில் அவன் கோபம் அவன் வேட்கையை அவன் மென்மையை வென்றது. “நீ பாடுற, நீ பாடி முடித்ததும் நாம கிளம்புறோம். நான் தான் உன்னை கொண்டு போய் விடுவேன். நீ திரும்பி வரும் பொழுது நம்ம டிரைவர் வந்து கூட்டிட்டு வருவான்.”  அவன் உறுதியாக கூறிக்கொண்டு அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.

“ஆக, நான் பாடணுமிங்கிறது கணவனாக உங்க கட்டளை! என்னை கட்டளைக்கு கட்டுப்படுத்த நினைத்தால், உங்களுக்கு சேதாரம் அதிகமாக இருக்கும்” அவள் புருவம்  உயர்ந்து நெளிந்தது. “உனக்கு கட்டளையா தெரிந்தால், அதுக்கு நான் பொறுப்பில்லை கீதா. ஆனால், நீ பாடி நான் கேட்கணுமிங்கிறது என் ஆசை” மனைவியின் கம்பீரத்தை ரசித்து அவன் குறுஞ்சிரிப்போடு கூற, அவன் முன் அமர்ந்து கண்களை மூடியபடி பாட ஆரம்பித்தாள்.

 

“தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே

தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்று தானம்மா

அன்பு கொண்டு பாடிடும் தங்கை என்னை பாரம்மா…” அவள் கண்கள் எங்கும் அவன் அண்ணன் ஜீவாவே நிறைந்து நின்றான். அவள் இந்த பாடலை பாடுவாள் என்றும் அவன் கிஞ்சித்தும் நினைத்து பார்க்கவில்லை. ரவிக்கு கோபம் விண்ணென்று ஏறியது. ஆனால், அவள் குரல் அவனை ஆட்கொண்டது.

“கோவில் தேவை இல்லையே நேரில் வந்த கோவிலே

பாடும் எந்தன் காதிலே நாளும் வாழும் தேவனே

கூடு வாழும் குருவிகள் பாடும் பாச பறவைகள்

வாழ்த்துவேன் உன்னை போற்றுவேன்

வாழ்வெல்லாம் உன்னை ஏற்றுவேன்…”

            அவன் பாடல் வரிகளை ஒதுக்கிவிட்டு, அவள் குரலில் மயங்க ஆரம்பித்து கண்மூடியபடி பாடிய தன் மனைவியின் மீது அவன் முழு கவனத்தை திருப்பினான். அவள் முகம் காட்டிய பாவனை அவனை எங்கோ தொட்டது.

“காலம் யாவிலும் சேர்ந்து வாழ வேண்டுமே

நாம் சேர்ந்து வாழ வேண்டுவேன்…” அவள் குரலில் ஏக்கமும், ஆசையும் அவனை எங்கோ அசைத்து பார்த்தது.

 

“இசை பாடும் ஒரு காவியம்

இது ரவிவர்மாவின் ஓவியம்

பாசம் என்னும் ஆலயம்

உன்னை பாட வேண்டும் ஆயிரம்…” அவள் கண்களிலிருந்து நீர்த்துளி அவள் கன்னத்தில் உருண்டோட, சட்டென்று தன் முகத்தை அசைத்து அவள் தன்னை மீட்டுக் கொண்டாள். அவள் தன் முகத்தை அசைத்த பொழுது வெளிவந்த நீர்த்துளி, அவனை தீண்டி அவன்  இதயத்தை தொட்டது.

 

அவன் கண்களை சுருக்கியபடி அசைவில்லாமல் அமர்ந்திருந்தான். பாடி முடித்த அவள், நிமிடங்களில் தன்னை சமன் செய்து கொண்டு அவன் முன் சுடக்கிட்டு, “பாடிட்டேன், நான் கிளம்பி ரெடியா இருக்கேன். என்னை கொண்டு விடறீங்களா?” அவள் கண்களில் குறும்பு மின்ன கேட்க, அவனிடம் மௌனம். “நான் தான் சொன்னேனில்லை, எங்க அண்ணன்…” அவள் பேச, அவன் ஒற்றை விரலால் அவள் இதழ்களை மூடினான்.

“கிளம்பலாம் கீதா.” அவன் எதுவும் பேசாமல் அறையை விட்டு வெளியே சென்று முன்னே நடக்க, “நீங்க கோபப்படுவீங்கன்னு நினச்சேன்” அவள் அவனை ஆழம் பார்த்தாள். “கோபப்பட என்ன இருக்கு? நல்ல பாட்டு. கவிஞர் வாலி எழுதினது. இசை இளையராஜா. சிவகுமார், லட்சுமி, மோகன், ராதிகா எல்லாரும் நல்ல நடிச்சிருப்பாங்க.” அவன் எதுவும் அறியாதவன் போல் கூற, “ரொம்ப முக்கியம்…” கீதா முணுமுணுத்தபடி  தன் பற்களை நறநறத்தாள். “எதுவும் சொன்னியா கீதா?” அவன் அக்கறையாக வினவ, “இல்லை…” அவள் தன் இதழ்களை பெரிதாக்கி சிரித்தாள்.

இருவரும் பேச்சீனோடு ஹாலுக்கு வந்திருந்தனர். அவர்கள் ரவியின் பெற்றோரிடம் கூறிவிட்டு கிளம்பினர். கீதா காரை நோக்கி செல்ல, ‘பாட்டு பாட சொன்னா, அண்ணனை பத்தியா பாடுற?’ அவன் அவளை நக்கலாக பார்த்து, “நாம புல்லட்டில் போறோம் கீதா” என்றான் அவன் தன் இதழ்களை பெரிதாக்கி. அவளைப் போலவே!

“ஏன்? ” அவள் கண்களை பெரிதாக்க, “இப்படி நீ கண்ணை பெருசாக்கி பார்த்தாலே போதும். நான் காதல் பாட்டு பாடுவேன்” அவன் அவளை ரசனையாக பார்த்தபடி கூற, ‘இது என்ன ஒரு நாள் சண்டைக்கு அப்புறமே, இப்படி அன்பா பேசுறாங்க’ எண்ணியபடி அவள் தன் கண்களை சுருக்கி கொண்டாள். “ஆனால்…” அவன் நிறுத்த, ‘என்ன?’ என்பது போல் அவள் புருவத்தை உயர்த்தினாள்.

“அண்ணனை பத்தி பாடுற உன்னை… எப்படி நான் என் மேல் உருகி கரைந்து காதல் பாட்டு பாட வைக்க? அதுக்கு தான் இந்த இருசக்கர வாகன  பயணம். மேடம் நீங்களே ஏறுவீங்களா? இல்லை, கை பிடித்து ஏறவைக்கணுமா?” அவன் வண்டியை கிளப்பி கொண்டே கேட்க, அவள் ஒரு மைல் தூரம் இடம் விட்டு எங்கோ அமர, “ஒழுங்கா, என் தோளில் கை வைத்து உட்கார்ந்தா, வண்டி ஒழுங்கா போகும். இல்லைனா, மேடு பள்ளத்தில்…” அவன் வாக்கியத்தை நிறுத்தி பின் பக்கம் திரும்பி அவளை மேலும் கீழும் பார்க்க, அவன் தோள் மேல் கைகளை வைத்து அவன் அருகே அமர்ந்து கொண்டாள் அவள்.

சடாரென்று அவன் கிளப்பிய வேகத்தில் அவன் மீது மோதி நேராக அமர்ந்தாள் கீதா. அவன் கேலியாக சிரித்தபடி வண்டியை செலுத்தினான்.

அவன் வண்டியை ஒரு பள்ளியின் வளாகத்தில் நிறுத்தினான். கீதா இறங்க, “வேலை கண்டிப்பா கிடைக்கும். நீ பயப்பட வேண்டாம்” அவன் கூற, “சாதாரணமாவே நான் பயப்பட மாட்டேன். ஆனால், இந்த வேலை கிடைக்கும்னு எனக்கு நல்லா தெரியும்.  அந்த விளம்பரத் தாளை வைத்ததும் நீங்க. அதில் வட்டமிட்டதும் நீங்க. உங்க சிபாரிசும் இருக்குமுன்னு எனக்கு தெரியும்” அவள் சிரிக்க, “சிபாரிசு எல்லாம் நான் செய்யலை கீதா. ஆனால், எனக்கு தெரிந்த இடம்” அவன் நிதானமாக கூறினான்.

“உங்க கிட்ட வேலை பார்க்க கூடாதுன்னு மட்டும் தான் என் குறிக்கோள். உங்க சிபாரிசு இருந்தாலும் பரவால்லை. உங்க மனைவியா ஏத்துப்பேன்.” அவள் தலை அசைத்து கூற, “அப்பாவுக்கு நீ வேலைக்கு போறதில் உடன்பாடில்லை கீதா. எனக்கு உன் பாதுகாப்பு ரொம்ப முக்கியம். என்னை விட, உன் அண்ணனுக்கு எதிரிகள் அதிகம். அதனால் தான் எனக்கு தெரிந்த இடத்தில நீ இருக்கணும்னு நினைச்சேன்.” அவன் குரலில் இப்பொழுது அக்கறை மட்டுமே இருக்க, “என் அண்ணன் பண்ணது தப்பு தான். ஆனால், அதில் உங்க தங்கைக்கும் சரிபாதி பங்கு இருக்கு. என் அண்ணன் நல்லவன்.”  அவள் கூற,

‘ஜீவாவை கட்டுப்பாட்டிற்குள் வைக்க இந்த கல்யாணம் நடந்திருக்கலாம். ஆனால், ஜீவாவை கட்டுப்பாட்டிற்குள் வைக்க மட்டும் நான் உன்னை கல்யாணம் செய்யலை. நான் உனக்காக உன்னை கல்யாணம் செய்திருக்கிறேன். அதை உன் அருகாமையும், கோபமும் உரக்க சொல்லுது கீதா.’ சிந்தித்தபடி ரவி தன் மனைவியை ஆழமாக பார்த்தான். “நான் கிளம்புறேன்…” கீதா கிளம்ப, “ஆல் தி பெஸ்ட். டீச்சராம்மாவா வீட்டுக்கு வாங்க” அவன் கூறிக்கொண்டு தன் புல்லட்டை கிளப்பினான்.

‘என்றாவது ஒரு நாள் எல்லாம் சரியாகுமா?’ என்ற ஏக்கத்தோடு அவள் பள்ளி வளாகத்திற்கு உள்ளே சென்றாள்.

***

ரவியின் புல்லட் ஜீவா வேலை பார்த்துக் கொண்டிருந்ததாக கேள்விப்பட்ட தேநீர் கடை நோக்கி சென்றது. அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் தான் ஜீவா வேலைக்கு சேர்வதாக அவனுக்கு தகவல் வந்திருந்தது. ஜீவா தேநீர் கடைக்கு வந்திருப்பான் என்று கணித்தே அங்கு சென்றான். ரவி அந்த தேநீர் கடைக்கு சென்றான். அவன் கணிப்பு தப்பவில்லை.”பெரியவரே, சூடா ஒரு டீ” என்றான் அங்கு கிடந்த மேஜையில் அமர்ந்தபடி. அவர் தேநீர் தயாரித்து கொண்டு வர எத்தனிக்க, “கடை பையன் கிட்ட கொடுத்து விடுங்க பெரியவரே” என்றான் ஜீவாவை நக்கலாக பார்த்தபடி.

ஜீவா அவன் அருகே வந்ததும், அவன் கொடுத்த தேநீர் கோப்பையை வாங்காமல், “நீ நடுரோட்டுக்கு வருவன்னு தெரியும். ஆனால், இவ்வளவு சீக்கிரம் வருவன்னு தெரியாது” ரவி உதட்டை பிதுக்கி பாவமாக கூற, “டீ சூடா இருக்கு” என்றான் ஜீவா அழுத்தமாக. “வேலை கிடைக்காம லோலோனு அலைஞ்ச போல  ஜீவா?” என்றான் அவன் கொடுத்த தேநீர் கோப்பையை வாங்காமல்.”டீ சூடா இருக்கு” என்றான் ஜீவா அழுத்தமாக.

 

“உன்னை நம்பி வந்த என் முட்டாள் தங்கைக்கு மூணுவேளை சோறு போடறியா?” என்று ரவி நக்கலாக கேட்க, “டீ சூடா இருக்கு” என்றான் ஜீவா அழுத்தமாக. “உன் தங்கை… சாரி… என் மனைவி கீதா ரொம்ப நல்லாருக்கா. என்னை அவளுக்கு பிடிச்சிருக்கு” அவன் கூற, “ரொம்ப சந்தோசம்” என்றான் அமைதியாக. “எப்படியும் நீ போக போற வேலை உனக்கு ஒத்து வராது. நீ வெளிய வந்திருவ. என் தங்கை இன்னும் ஒரு மூணு மாசம் கூட உன் கூட தாங்க மாட்டா. அப்புறம் என்ன பண்றதா உத்தேசம்?” ரவி ஜீவா நீட்டிய தேநீரை வாங்காமல் கேள்வியாக நிறுத்த, “டீ சூடா இருக்கு” என்றான் ஜீவா நிதானமாக.

“என் தங்கையை உன்னை விட்டுட்டு வந்தாலும், நீ பயப்படாத… நான் உன் தங்கையை விடமாட்டேன். அவ தானே எனக்கு துருப்பு சீட்டு. அவளை வீட்டை விட்டு துரத்தி…” ரவி பேச, கையிலிருந்த தேநீரை அவன் மீது ஊற்றினான் ஜீவா. சட்டை, பனியன் என அனைத்தும் தாண்டியதாலும், அவன் சில மணித்துளிகள் பேசியதாலும் அந்த தேநீரின் சூடு சற்று தணிந்திருந்தது. இருந்தாலும் சூட்டின் வேகம் அவனை தாக்கத்தான் செய்தது.

ரவி ஜீவாவின் சட்டையை வேகமாக கொத்தாக பிடிக்க, ஜீவாவின் கைகளிலிருந்த கண்ணாடி  குவளை கீழே விழுந்து உடைந்தது. “டேய்…” என்று ரவி உறும, “என்ன? நான் தான் சொல்லிட்டே இருந்தேனில்லை டீ சூடா இருக்குனு. வாயை மூடிக்கிட்டு போகாம என்ன பேச்சு? உன் மூஞ்சியில் ஊத்திருப்பேன். என் மனைவிக்கு அண்ணனு பார்க்க மாட்டேன். என் தங்கை புருஷன்னு தான் பொறுமையா இருக்கேன். நான் உன் வழியில் வரலை ரவி. நீ அப்படியே போய்டு” ஜீவா ஒற்றை விரலை உயர்த்தி மிரட்டினான்.

“நீ என் வழியில் வரமாலே இருந்திருந்தா பிரச்சனை வந்திருக்காது ஜீவா. பழசை நான் மறக்க மாட்டேன். நான் பட்ட அவமானத்தை நீ படணும். என் குடும்பம் பட்ட அவமானத்தை நீ படணும். அது வரைக்கும் இந்த ரவி ஓயமாட்டான்.” ரவி ஜீவாவை தள்ளிவிட, “நீ பட்ட அவமானம், நீ செய்த தப்புக்கு தண்டனை.” ஜீவாவை தன் கைகளை தட்டிவிட்டு கூற, “அதை சொல்ல நீ யாருடா, வேலை வெட்டி இல்லாத வெட்டிப்பயலே” ரவி தன் சட்டையை சரி செய்தபடி கேட்க, “யாரை பார்த்து வெட்டிப்பையன்னு சொல்ற?” ஜீவா அவன் மீது பாய்ந்து அடிக்க, ரவி அவனை அடிக்க இருவரும் அந்த சாலையில் கட்டி பிரண்டு உருண்டு சண்டையிட்டனர்.

அவர்களை தேநீர் கடைக்காரர் தடுக்க முயன்று தோற்று போக அங்கு கூட்டம் கூடி காவல்துறையும் வந்தது.

நதி பாயும்…