தண்ணிலவு தேனிறைக்க..11

TTIfii-cb7343ea

தண்ணிலவு – 11

மனதில் மூண்ட கோபம், நேரம் காலம் பார்க்காமல், ஆவேசத்தை குத்தகைக்கு எடுத்துக்கொள்ள, அந்த இரவு நேரத்தில் கீழ்வீட்டுக் கதவைத் தட்டிவிட்டான் தயானந்தன்.

வீட்டுப் பெண்கள் தடுத்தும் கேளாமல் இவன் கிளம்பியிருக்க, அவனின் பின்னே மகளை அழைத்துக் கொண்டு மரகதமும் வந்து விட்டார்.

அந்த இரவில் கதவைத் திறந்த பாஸ்கரை பார்த்தவுடன், தனது கோபத்தை ஒன்று திரட்டி நான்கு அறைவிட, அடிவாங்கிய அதிர்ச்சியில் அவனும் கீழே விழுந்து விட்டான்.

சத்தம் கேட்டு முன்னறைக்கு வந்த மிதுனா, மஞ்சுளா இருவரும் என்ன நடக்கின்றதென்று கணிப்பதற்குள், தனது தாக்குதலை தயானந்தன் தீவிரப்படுத்தியிருக்க, அந்த இடமே ஏக களேபரமாகிப் போனது.

மஞ்சுளாவும், மரகதமும் சத்தம் போட்டும், அதட்டியும் தயாவினை தடுக்க முயல, யாருடைய பேச்சும் அங்கே செல்லுபடியாகவில்லை.

தயானந்தனின் அடுத்தடுத்த தாக்குதலில் பாஸ்கர் அடி வாங்கிக் கொண்டிருக்க, அங்கேயே ஒருஓரத்தில் நின்று சிந்து அழுது கொண்டிருந்தாள்.

என்னதான் நடக்கின்றது என்பதை அனுமானிக்க முடியாத நிலையில் பெரும் பாடுபட்டே தயானந்தனை, தம்பியிடம் இருந்து பிரித்து நிற்க வைத்திருந்தாள் மிதுனா.

அந்த நேரத்தில் அடிவாங்கிய வேதனையுடன் பாஸ்கர், சிந்துவைப் பார்த்த பார்வையில் ‘ஏன் இப்படி?’ என்கிற இயலாமையே கூடியிருந்தது. என்மேல் நம்பிக்கை இல்லாமல் காட்டிக்கொடுத்து விட்டாயே என்றே அவளை ஓரக்கண்ணால் முறைக்க, இவளோ தலைதாழ்த்திக் கொண்டாள்.

மிதுனாவின் கேள்வியிலும், தயாவின் ஆக்ரோஷமான பதிலிலும் இவர்களது கள்ளத்தனம் வெளியே தெரிய வந்திருக்க, அக்காவின் வெறுப்பினை மொத்தமாக சம்பாதித்துக் கொண்டான் பாஸ்கர்.

பொறுப்பில்லாதவன், சோம்பேறி என்று தம்பியை கணித்து வைத்திருந்த மிதுனாவிற்கு, ஜென்மத்திற்கும் மன்னிக்க முடியாத தவறை செய்து நின்றவன் மீது அத்தனை ஆவேசம் வந்தது.

ஏற்கனவே நிதானத்தை இழக்கத் தொடங்கியிருந்த பாஸ்கருக்கும் அக்காவின் உஷ்ணப் பார்வையும் சேர்த்து, பயத்தை ஏற்படுத்திவிட,

“இல்லக்கா… நான் எதுவும் பண்ணல! இவங்க பொய் சொல்றாங்க” வாய்கூசாமல், பாஸ்கர் இல்லையென்று மறுக்க, சிந்து பெருங்குரலெடுத்து அரற்றி விட்டாள்.

பாஸ்கரின் எண்ணமெல்லாம், தன்அம்மா, அக்காவின் முன்னால் தான்மோசமானவனாக சித்தரிக்கப்படக் கூடாதென்கிற நினைவொன்றே இருக்க, தன்னையும் மறந்து ஏதோ ஒரு வேகத்தில் மறுத்துவிட்டான்.

இது மகாபாவமான செயலென்று வாய்வழி வார்த்தைகளை உதிர்த்த பிறகு, மனசாட்சி காறித் துப்பினாலும் தன்னையும் மீறி வெளிப்பட்ட வார்த்தைகளுக்கும் அவனே பொறுப்பாளியாகிப் போனான்.

இதனைதான் சொல்லவேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. தப்பிக்கும் மார்க்கத்தை மூளை யோசிக்க ஆரம்பித்த நேரத்தில், வாய் தன்னால் மறுப்பினை தெரிவித்து, பொய்யை புனைந்திருந்தது.

யோசிக்காமல் பொய் பேசுவதில் கைதேர்ந்தவன், இன்று  அவனை அறியாமலேயே பொய்யுரைத்து அழிக்க முடியாத பாவத்தை சேர்த்துக் கொண்டான்.

அவனது பதிலில் பெரிதும் வதைபட்டவளாய் சிந்து தலையிலடித்துக் கொண்டே அழ ஆரம்பிக்க, உண்மை நிலவரம் அங்கே வெட்ட வெளிச்சமானது.

தம்பியின் பதிலைவிட, சின்னப்பெண்ணின் அழுகையில், நடந்த அவலத்தை புரிந்து கொண்ட மிதுனா இவன்தான் காரணமென்ற முடிவிற்கே வந்துவிட்டாள்.

பாஸ்கரின் மறுப்பினைக் கேட்டதும் மீண்டும் எரிமலையான தயானந்தன், அவனை சுவற்றோடு சாய்த்து, கழுத்தை இறுக்கி மேலேற்றி விட, இந்தமுறை காப்பாற்ற பெண்கள் யாரும் முன்வரவில்லை. மாறாக நடப்பதை பார்த்து அதிர்ச்சியுடன் வாயடைத்து நின்றனர்.

உலக்கையாக இறுக்கிய தயாவின் கைகளை, அகற்ற பெரும்பாடுபட்ட பாஸ்கர், ஒருகட்டத்தில் மூச்சிற்கும் தவிக்க தொடங்க, மரகதத்தின் இடையீட்டால், பாஸ்கர் காப்பாற்றப்பட்டான்.

“கிராமத்தான்டா… அருவா தூக்க, அஞ்சமாட்டேன். நொங்கு சீவுற மாதிரி, சீவிட்டு போயிட்டே இருப்பேன். இனி, நீ உசுரோட எப்படி நடமாடுறன்னு, நானும் பாக்குறேன்டா…!” கண்கள் சிவக்க கர்ஜித்தவன்,

குரோதத்துடன் கைகளை முறுக்கிக்கொண்டு அவனை மீண்டும் தாக்கவர, அந்தச் செயலிலேயே நடுங்கிப்போன பாஸ்கர், உண்மையை அக்கணமே ஒத்துக் கொண்டு விட்டான்.

மகனின் லட்சணத்தை அறிந்து கொண்ட மஞ்சுளா அதிர்ந்தாலும், தயானந்தனின் செயல் உள்ளுக்குள் உயிர்பயத்தை வரவழைத்திருந்ததில் என்ன பேசுவதென்று தெரியாத ஊமையாகிப் போனார்.

சிறியவர்களின் அத்துமீறிய செயலில் அனைவரும் திகைத்துப் போயிருக்க, அப்போதைய சூழ்நிலையை கையில் எடுத்துக் கொண்டது தயா மட்டுமே!

“இன்னும் ரெண்டு நாள்ல, என்தங்கச்சி கழுத்துல தாலிகட்டி, நல்லவனாகிடு… இல்லன்னா எங்கஊரு அய்யனாருக்கு படையலாகி பரலோகம் போயிடு! எது உனக்கு இஷ்டமோ… அத முன்னே நின்னு, நானே முடிச்சு வைக்கிறேன்…” எச்சரிக்கையும் நக்கலும் கலந்த குரலில், மிரட்டியே அன்றைய இரவினை கடக்க வைத்தான்.

அந்த பின்னிரவில் பாஸ்கருக்கும் மஞ்சுளாவிற்கும், தயானந்தனின் குடும்பம் பயத்தையும் வெறுப்பையும் கொடுத்திருக்க, மிதுனாவிற்கோ முற்றிலும் வேறான உணர்வைக் கொடுத்திருந்தது.

வீட்டை காலிசெய்ய வேண்டுமென்று, தயா வந்து நின்ற நாளிலிருந்தே அவனது ஒவ்வொரு பரிமாணங்களை பார்த்து வருகிறவளுக்கு, முன் எப்போதுமில்லாத அளவிற்கு அவனைப் பற்றி இன்னும் யோசிக்க வைத்தது.

மறுநாள் மீண்டும் தங்கையின் பிரச்சனையை முன்னிட்டே பாஸ்கரின் வீட்டிற்கு சென்ற தயானந்தன், திருமணத்தை நடத்தியே ஆகவேண்டுமென்ற பிடிவாதத்தில் நின்று விட்டான்.

மஞ்சுளாவும் சாந்தினியும் சேர்ந்து அவன் முடிவிற்கு தடைபோட முயல, அவையெல்லாம் பஸ்பமாகித்தான் போனது.

“வர்ற முகூர்த்தத்துல கல்யாணம் வைக்க நான் ரெடி… நீங்கதான் உங்க முடிவ சொல்லணும்” முடிவாக தயானந்தன் சீற்றத்துடன் பேசிவிட,

“இப்போதைக்கு கல்யாணம் செய்து வைக்கிற சூழ்நிலை இங்கே இல்ல..” மஞ்சுளா தன்மறுப்பை ஆரம்பிக்க,

“அப்போ அருவாள, கையில எடுத்துற வேண்டியதுதான்!” மிரட்டலோடு எழுந்து கொண்டான் தயா.

“நாங்க, உங்க பொண்ண வேண்டாம்னு சொல்லல, இப்போதைக்கு முடியாதுன்னு சொல்றோம். அக்காவுக்கு கல்யாணம் முடிக்காம, எப்டி தம்பிக்கு முடிக்க முடியும்? அவனுக்கு இன்னும் ஸ்திரமான வேலையும் இல்ல… இதையெல்லாம் கொஞ்சம் யோசிங்க, தம்பி!” பணிவாய் நிலையை மஞ்சுளா விளக்க,

“அப்போ என்தங்கச்சிக்கு என்ன பதில்?” தயா அழுத்தத்துடன் சீற,

“இதெல்லாம், இந்த காலத்துல சர்வ சாதாரணமாகிப் போச்சு. என்ன செய்யணுமோ செஞ்சு சுத்தப்படுத்திக்க சொல்லுங்க. எங்க சூழ்நிலை சரியான பிறகு கல்யாணத்தை வச்சுக்கலாம்”

தன்போக்கில் அடுத்தடுத்த திட்டங்களை தீட்டியவர், பெரிய யோசனையை சொல்லி விட்டவர்போல் பெருமூச்சு விட்டுக்கொள்ள, தனது முழுஉயரத்திற்கும் நிமிர்ந்து விட்டான் தயானந்தன்.

“உங்களுக்கும் பொண்ணு இருக்கு, பதிலுக்கு பதில்னு இறங்கிப்பேச எனக்கே நாக்குகூசுது. உங்க பொண்ணுக்கு கல்யாணத்த முடிச்சு, புள்ளைக்கு ஒருவேலையும் ஏற்பாடு பண்ணிட்டு சொல்லுங்க… நானும் அப்பவே வர்றேன்.” என தீர்மானமாகக் கூறியவன்,

“அதுவரைக்கும், உங்க புள்ள என் பொறுப்புல பத்திரமா இருக்கட்டும். நீங்க சொன்ன வழிக்கே நானும் வந்துட்டேன். இதுல மாற்றமில்ல…” என்றபடியே பாஸ்கரின் சட்டையை பிடித்திழுத்துக் கொண்டே வெளியேறி விட, அவனை யாராலும் தடுக்க முடியவில்லை.

“அராஜகம் பண்றீங்க சார்! இப்பவும் சொல்றேன், யோசிச்சு முடிவெடுப்போம்…” மிதுனா மட்டுமே அவன் முன்னே நின்று பேச,

“நான் இறங்கி வந்தாச்சு. இதுக்கு மேலயும் பேசணும்னா என்னைத் தேடி, நீங்க வாங்க! இல்லன்னா, உங்க தம்பிய மறந்துடுங்க!” என்றவாறே, பாஸ்கரை தள்ளிக் கொண்டே நடையைக் கட்டினான்.

உண்மையில் பாஸ்கருக்கு அந்த சமயத்தில் எப்படி பிரச்சனைகளை எதிர்கொள்வதென்றே தெரியவில்லை. வெட்டிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன் என்ற தயாவின் ரௌத்திரத்தில் அனைவரும் மிரண்டு போயிருக்க, எதிர்த்து பேசும் யோசனையையும் கைவிட்டவனாய், அவனிழுத்த இழுப்பிற்கு தலைகுனிந்து மாடிவீட்டிற்கு சென்றான். 

தயாவின் வீட்டில், மகனின் செயலை மரகதமும் ஆட்சேபிக்க,

“அவங்க சொல்றதெல்லாம் சரின்னு தலையாட்டிட்டு வந்தா, என்னை மாதிரி கேணகிறுக்கன் வேற யாருமே இல்ல… ரெண்டுநாள் மட்டுமே அவங்களுக்கு டைம்… அப்புறம் எல்லாமே என்னோட முடிவுதான். இவங்க கல்யாணத்த முடிச்சு வச்சு, நல்ல வேலைக்கு ஏற்பாடு பண்ண வேண்டியது என் பொறுப்பு!” என்றவன்,

“நான் சொன்னது சரிதானே மாப்ளே? மாத்த நினைச்சா… அடுத்து நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பெடுத்துக்க மாட்டேன்! சம்மதம்தானே…” எகத்தாளமாய் அவனின் முதுகில் அடித்துப்பேசி, அப்போதுதான் அவனுக்கு பேசவே வாய்ப்பினை அளித்தான் தயா.

“சார்… சார்… என்மேல இரக்கம் காட்டுங்க சார்! நான் அப்படியெல்லாம் ஒடுற ஆளில்ல… நான் செஞ்சது தப்புதான். இன்னும் கொஞ்சநாள்ல நானே, உங்க தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கிறேன்.

அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க சார்… என்னை விட்ருங்க சார்!” மூச்சுக்கு முந்நூறு கும்பிடு போட்டு, கெஞ்சியபடியே பாஸ்கர் வாயைத் திறந்துபேச, அவனை இகழ்ச்சியாய் பார்த்தவன்,  

“உன்ன எந்த வகையில சேர்க்குறதுன்னு தெரியலடா? உன்மேல நம்பிக்கை வச்சு, நான் ஏமாற விரும்பல… உனக்கு கல்யாணமும் பண்ணி, வேலைக்கும் நான் பொறுப்பெடுக்குறேன்னு சொல்றேனே? இன்னும் என்னடா உனக்கு பிரச்சன? சரின்னு சொல்லிட்டு, கெத்தா மாப்ள வேஷம்போட தயாராகிக்கோ!” இலகுவாய் தயா, அவனுக்கு யோசனை சொல்ல,

“இல்ல சார்… வீட்டுல எங்க அம்மா, அக்கா எல்லாரையும் பாக்கணும் சார்!” மென்று முழுங்கினான் பாஸ்கர்.

“இவ்ளோ பாசம் இருக்குறவன், எப்படிடா என் தங்கச்சிய ஏமாத்த துணிஞ்ச? அவளும் ஒரு பொண்ணுதானேடா? படுபாவி!” முறைத்துக் கொண்டே காறித்துப்ப, பதில் பேசமுடியாமல் பாஸ்கர் அமைதியாகிப் போனான்.

தனது தவறை புரிந்து கொண்டவனுக்கு சிந்துவின் வலியும் தெரியாமல் இல்லை. இவர்களைப் போல், தனது வீட்டுச் சூழ்நிலையை முன்னிட்டுதானே, நானும் திருமணத்திற்கு மறுத்தது என தன்பக்கமே நின்று யோசித்தான்.

மறந்தும் கூட சிந்துவின் பக்கம் தன்பார்வையை திருப்பவில்லை. உருகி உருகிக் காதலித்த பெண்ணிவள் என்ற எண்ணமெல்லாம் நேற்றைய இரவோடு காற்றோடு கரைந்து போயிருந்தது.

இனி அவளை நேருக்குநேராகப் பார்த்தால் வெட்டிவிட்டுப் போய்விடும் எண்ணம் மட்டுமே புதிதாக முளைத்திருக்க, இருக்கும் பிரச்சனையில் இந்த பொல்லாத எண்ணம் வேறா? என தனக்குள் நொந்துகொண்டு, சிந்துவை ஏறிட்டுப் பார்க்கவும் விரும்பாமல் இருந்து விட்டான்.

“என்ன சொன்னாலும், நீ செய்றது சரியில்ல ஆனந்தா… அவங்க வீட்டுல எதிர்த்து கேக்க ஆள்பலம் இல்லாதத காரணமா வச்சுட்டு, உன் இஷ்டத்துக்கு செய்யாதே!” மரகதம் மேலும் கடிந்து கொள்ளும்போதே, மஞ்சுளா தன்மகள்களுடன் மேலே வந்து விட்டார்.

“உங்க பிடிவாதம் மட்டுமே நடக்கனும்னு நினைக்கிறது ரொம்ப தப்பு… எங்க வீட்டு நிலவரத்தையும் தெரிஞ்சுட்டு பேசுங்க” நியாயவாதியாய் மஞ்சுளா படபடக்க,

“என்ன சொன்னாலும் உங்களுக்கு ரெண்டுநாள்தான் டைம்…” தயாவும் இறுதியாக கூறிவிட்டான்.

“பொண்ணுக்கு மாப்பிள்ளை அமையுறது குதிரக் கொம்பா இருக்கிற காலத்துல, தம்பி கல்யாணம் முடிச்சவன்னு தெரிஞ்சா, எங்க வீட்டுப் பொண்ண யார் கேட்டு வருவாங்க? இதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க, நான் ஒத்துக்கறேன்…” பிரச்சனையின் முடிவை தயாவிடமே திருப்ப,

“உங்க பொண்ண பத்தின கவலை எனக்கெதுக்கு? விட்டா, நகைநட்டு போட்டு கல்யாணம் பண்ணி வைக்க சொல்வீங்க போல?” நக்கலாய் பேசியவன், மூன்று பெண்களையும் பார்த்துக் கொண்டே,

“உங்க பிரச்சனைய நீங்கதான் பார்த்துக்கணும்… உங்க பொண்ணுக்கு கல்யாணம் முடியுற வரைக்கும், இவன் எங்க வீட்டு மாப்பிள்ளையா இருக்கட்டும், இல்லன்னா… எங்கையால வெட்டுப்பட்டு சாகட்டும்..!” வெறுப்பில் வார்த்தைகளை உமிழ்ந்துவிட்டு, வேண்டா விருந்தாளியாக அவர்களை பார்வையால் வெளியேறச் சொன்னான்.

“அப்டியே எங்களையும் வெட்டிப் போடுங்க… அவனோட சேர்ந்தே நாங்களும் செத்துப் போறோம். அப்புறம் எந்த இளிச்சவாயன், உங்க பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க வர்றான்னு பார்க்கலாம்” தயாவின் பேச்சிற்கு ஆக்ரோஷம் கொண்டு மஞ்சுளா கத்த ஆரம்பித்து விட்டார்.

உண்மைதானே! இவன் கோபத்தில் ஏதோ ஒன்று செய்யப்போக, பதிலுக்கு இவர்களும் யோசிக்காமல் உணர்ச்சிக் கொதிப்பில் தகாத முடிவொன்றை எடுத்து விட்டால், யாருக்கென்ன லாபம்?

எந்த காரணத்திற்காக இதையெல்லாம் செய்கிறோமோ, அதுவே கேள்விக்குறியாகி நின்று விடுமே? இதையெல்லாம் மனதில் நினைத்து இதற்கான தீர்வைத் தேடிவிழைந்தது மரகதம் மட்டுமே!

மகளின் நல்வாழ்விற்காக மற்றவர்களை நிர்பந்தப்படுத்தி, அவர்களின் வெறுப்பில் திருமணம் நடைபெற்றால், அந்த வாழ்வு நிலைக்குமா?

இருக்கின்ற காலம்வரை, தோள் கொடுக்க வேண்டிய உறவை, வம்படியாகப் பிடித்து இழுப்பதில் அவருக்கும் அத்தனை விருப்பம் இல்லை.

ஆனாலும் இந்த பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வரவேண்டுமென்றால், அதற்கு தடையாக இப்பொழுது கருதுவது, அவர்கள் வீட்டுப் பெண்ணின் திருமணம்தானே…

பலரும் பல எண்ணங்களில் உழன்று கொண்டிருக்க, சட்டென்று மரகதத்தின் பார்வை தயாவையும் மிதுனாவையும் இணைத்துப் பார்த்தது. பொருத்தமான ஜோடியாக இருவரும் அவரின் கண்களுக்கு நிறைவைத்தர, துணிந்து மஞ்சுளாவிடம் கேட்டு விட்டார்.

தான்சொல்வதை தட்டாது கேட்பான் என்னும் நம்பிக்கை மகன் மீது மலையளவு இருக்க, நேரடியாகவே மஞ்சுளாவிடம் தன்எண்ணத்தை வெளிப்படுத்தி விட்டார் மரகதம்.

பிரச்சனைக்கு தீர்வு இப்படிதான் கிடைக்க வேண்டும் என்றால், யாரால், எவ்வாறு அதை தடுக்க முடியும்? இரு குடும்பத்திற்கும் பொதுவான தன்மானமும் கௌரவமும் உயரத்தில் தனது கொடியை நாட்டிக் கொண்டிருக்க, மரகதம் சொல்வதில் பாதகமென்று எந்த விசயமும் கண்களுக்கு புலப்படாமல் போனது.

இதற்கு மஞ்சுளா பதில் சொல்லும் முன்னரே, அடுத்தநாள் தன்முடிவை கூறுவதாக மரகதத்திடம் மிதுனா சொல்லிவிட, அன்றைய பிரச்சனையும் ஒருவழியாக முடிவிற்கு வந்தன.

மறுநாள் தயானந்தனுடன் சுமூகமாக பேச ஆரம்பித்த மிதுனா, காதலுடன் திருமணத்திற்கு சம்மதமும் சொல்லியிருக்க, இரண்டு திருமணத்தையும் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

அடுத்து வந்த வாரத்தில், தொடர்ச்சியாக இரண்டு முகூர்த்தநாட்கள் குறிக்கப்பட்டு, திருமணத்தை மிகஎளிதாக நடத்தினர்.

முதல்நாள் பிரம்ம முகூர்த்தத்தில் மகனின் திருமணத்தை ஏற்பாடு செய்த மரகதம், மறுநாள் மகளின் திருமணத்தை நடத்தினார். பெண்ணிற்கு தாய் தந்தையாக தயாவும் மிதுனாவும் தாரை வார்த்துக் கொடுக்க, சிந்து பாஸ்கரின் திருமணமும் எளிமையான முறையில் சென்னையிலேயே நடைபெற்றது.

அவசரமாய் கல்யாணம் நடந்தேறிய சூழ்நிலையில் நகை, சீர்வரிசை, செய்முறைகளை பற்றி இரண்டு குடும்பங்களும் எதையும் பேசிக்கொள்ளவில்லை.

தயானந்தனின் குடும்ப சூழ்நிலை, கடன்சுமையென அனனைத்தையும் அறிந்து வைத்திருந்த மஞ்சுளாவிற்கு அவர்களோடு சம்மந்தம் பண்ணிக்கொள்வதில் கொஞ்சமும் இஷ்டமில்லை.

பாஸ்கரின் திருமணத்தை எல்லைமீறிய காதல் என்ற பார்வையில் ஒத்துக்கொண்ட மஞ்சுளாவால், மகள் மிதுனாவின் மனமொப்பிய திருமணத்தில் சிறிதும் விருப்பமில்லை. இக்காரணமே பின்னாளில் மகளென்றும் பாராமல் மஞ்சுளா குற்றம் சொல்வதற்கு, அடித்தளமாகிப் போனது.

திருமணம் முடியும்வரை அமைதியாக யாரிடமும் பேசாமல் நடமாடிக் கொண்டிருந்த சிந்து-பாஸ்கர் இருவரும், திருமணத்திற்கு பிறகு முற்றிலும் வேறுபட்டு நின்றனர்.

உணர்ச்சிகளின் வீரியத்தில் விளைந்த தவறுக்கு தனித்தனியாக அழுத்தங்களை அனுபவிக்க ஆரம்பித்திருந்த காலகட்டம் அது.

அந்த அழுத்தத்தோடு குடும்பத்தாரின் ஏச்சு பேச்சுக்களும் இகழ்வான பார்வையும் சேர்ந்தே படர, ஒருவரின் மேல் மற்றவர்க்கு சொல்லாமலேயே வெறுப்புணர்வு அதிகரிக்க தொடங்கியிருந்தது.

இதில் பெரிதும் அடிபட்டு, மிதிபட்டு உணர்வுகளையும் மறத்துப்போய் நின்றவள் சிந்தாசினி மட்டுமே! அவளது சுயத்தையே மறக்க வைத்த புகுந்தவீடும், நிராகரிப்பையும் வெறுப்பையும் காட்டிய கணவனின் சுபாவத்திலும் உயிரோடு புதைந்தே போனாள்.

திருமணம் முடிந்த முதல் நாளிலேயே தன்னை நிந்திக்க தொடங்கிய மாமியாரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளை தணலில் நிற்க வைத்தன.

“இவ வந்த அழகுக்கு நல்லநேரம், நல்லநாள் பார்த்து உள்ளே அனுப்புறதுதான் குறைச்சலா இருக்கு” முதல்நாள் இரவிற்கு வந்து நின்ற மருமகளை சாடிய மஞ்சுளா, தனது மாமியார் தோரணையை வெகுகம்பீரமாக காட்ட ஆரம்பித்தார்.

பரமபத பாம்பாய் இவர் நச்சினை கக்கத் தொடங்க, அந்த விஷத்தில் வீழ்ந்த, வாயில்லா பூச்சியான சிந்துவால் எழுந்து நிற்கவே முடியவில்லை.

கண்ணீர் மல்க, ஓரத்தில் அமைதியாக நின்று கொண்டிருந்தவளை, “போ… போ… வீட்டுல சீர்செனத்தி செய்ய வக்கில்லன்னு நல்லா தெரிஞ்சுதானே, என் புள்ளைய மயக்கி, வயித்தை நிரப்பி அம்சமா வீட்டுக்குள்ள வந்து நிக்குற… இந்த வேசத்துக்கு அழுக ஒரு கேடா?” என்று வசைபாடியவர், அதையும்விட கீழிறக்கிப் பேசியே மருமகளை ஊமையாக்கி விட்டார்.

அறைக்குள் வந்தவள் அதே கண்ணீருடன் மாமியார் பேசியதை கணவனிடம் சொல்ல, அதனைப் பற்றிய கவலை சிறிதும் இல்லாமல்,

“இன்னைக்கு பூச்சி மருந்து கொண்டு வந்திருக்கியா? ரெண்டுபேருமே குடிச்சு செத்துப் போவோம்…” இடியாய் வார்த்தைகளை இறக்கினான் பாஸ்கர்.

எதிர்காலத்தை பற்றி பேசவில்லையென்றாலும், நிகழ்காலத்தின் இன்னல்களை மறந்து பயணிப்போம் என ஆறுதல்படுத்தியே, தனக்கு நம்பிக்கையளிப்பான் கணவன்  என இவள் நினைத்திருக்க, அது முற்றிலும் தலைகீழாகிப் போனது.

“ஏன் மாமா இப்டி பேசுறீங்க? என் மனசுக்கு சங்கடமா இருக்குனு உங்ககிட்ட சொன்னேன்… அதுகூட சொல்லக்கூடாதா?” மனம் கனத்தவளாய் சிந்து மீண்டும் கண்ணீர் வடிக்க,

“நாம செஞ்சது கின்னஸ் ரெகார்டு பாரு! உனக்கு வக்காலத்து வாங்கி, அம்மாட்ட நான் சண்டைபோட… என்மேல நம்பிக்கையில்லாம பெரியபெரிய வேலையெல்லாம் நீ செஞ்சுட்டு, இப்போ அழுது என்ன பிரயோஜனம்? இந்த கருமத்துக்குதான் எழவுபுடிச்ச இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்… கேட்டியா நீ?” என அப்பொழுதும் திருமண முடிந்ததை வெறுப்புடன் சொல்ல, கதறத் தொடங்கி விட்டாள் அந்த அப்பாவி.

“இந்த மாதிரி அழுது, கதறி, ஆர்பாட்டம் பண்ணணும்னு நினைச்சே… உன்னை ஒண்ணும் பண்ண மாட்டேன்! நான் வீட்டை விட்டுப் போயிடுவேன். அப்புறம் இதுக்கும் சேர்த்து நீதான் வாங்கிக் கட்டிக்குவ…” வெறுப்புடன் மிரட்டிவிட்டு, அவனுக்கென இருந்த கட்டிலில் உறங்கிவிட்டான்.

இவளுக்காக கீழே போர்வையை விரித்து படுத்துக் கொண்டவளுக்கு, அடுத்தநாளின் விடியல்கூட அத்தனை பயத்தைக் கொடுத்தது.

மறுநாள் காலையில் கண் முழிக்கும்போதே மசக்கையின் உபத்திரவாதம் தொடங்கிவிட, அப்படியே அமர்ந்துவிட்டாள் சிந்து. பிறந்த வீட்டில் சிறிய தலைவலிக்கும் கூட மருந்தோடு சீராட்டலையும் அனுபவித்து வந்தவளுக்கு, முதன்முறையாக காலையில் உண்டான தலைசுற்றல் தாங்கமுடியாத அவஸ்தையைக் கொடுத்தது.

கடந்த ஒரு வாரமாக தாயின் பரிவான கவனிப்பில் மசக்கையின் இன்னல்களை கொண்டாடியவளுக்கு இன்றைய தலைசுற்றலை சமாளித்துக் கொள்ள முடியவில்லை.

வெளியே சென்று தனது சுகவீனத்தை மாமியாரிடம் சொல்வதற்கும் பயமாகிப் போய்விட, அறைக்குள்ளேயே முடங்கிக் கொண்டாள் சிந்து. பாஸ்கரோ இன்னமும் உறக்கம் கலையாமலிருக்க, வெளியே மஞ்சுளாவின் சத்தம் கேட்கத் தொடங்கியது.

“மணி ஒன்பதாகியும் சீமை சித்ராங்கிக்கு வெளியே வர மனசு வருதா பாரு? இந்த பயலுக்கும் வெவஸ்த இல்லை…” குரலை உயர்த்தியே மஞ்சுளா பலமாக கதவினைத் தட்ட, பாஸ்கர்தான் எழுந்து கதவை திறந்தான்.

“எங்கேடா அவ… பொழுது விடிஞ்சது தெரியுமா இல்லையா? இன்னும் உள்ளேயே முடங்கிட்டு அப்டியென்ன ஆசையோ உன் பொண்டாட்டிக்கு…” தணலை அள்ளிக் கொட்ட, பாஸ்கரும் மனைவியை பார்வையாலயே எரித்தான். 

“நிப்பாட்டும்மா… அவ எந்திரிக்கலன்னா, அவகிட்ட கேளு! என் காத எதுக்கு பஞ்சர் பண்ற?” என கடுகடுத்தவன்,

மனைவியை பார்த்து, ”நேரத்துக்கு முழிச்சுக்க மாட்டியா? கையில காபி குடுத்து, சுப்ரபாதம் பாடினாதான் எழுந்திரிப்பியோ? இதுதான் உங்கவீட்டு வழக்கமா?” என பல்லிடுக்கில் கோபத்தை கட்டுப்படுத்தியே மனைவியை வறுத்துவிட்டான்.  

“தலைசுத்தலா இருந்தது மாமா! என்னால முடியல…” என சொன்னவளின் குரலும் உள்ளே இறங்கி, கண்களும் சோர்வினைக் காட்டியும், மஞ்சுளா அசரவில்லை.

“உலக அதிசயம்தான் நீ கர்ப்பமா இருக்குறது… உடம்புல தண்ணிபட்டா எல்லா மயக்கமும் காணாம போயிடும். போயி சீக்கிரம் குளிச்சுட்டு வா! வெளக்கு பொருத்தணும்… அந்த பழக்கம் எல்லாம் இருக்குதானே!” என குத்தலாக கேட்டு, மருமகளை விரட்டிவிட, அவதி அவதியாய்  குளிக்க சென்றவள் வெளியே வரும்போதே மயங்கி விழுந்திருந்தாள்.

தனக்குள் உண்டான பயத்தையும் படபடப்பையும் சமாளிக்க முடியாமல் அன்று மயக்கமாகியிருக்க, இன்று வரையிலும் சிந்தாசினிக்கு இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.  .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!