தண்ணிலவு தேனிறைக்க… 16

TTIfii-ea13982a

தண்ணிலவு தேனிறைக்க… 16

மறுநாள் மீண்டும் அதே கோச்சிங் சென்டரில் முகம் கடுகடுக்க, பாஸ்கருடன் அமர்ந்திருந்தாள் சிந்தாசினி. இவர்களுடன் மிதுனாவும் வந்திருக்க, சண்டைக்கோழிகள் மிகவும் பவ்யமாக தங்களை காட்டிக் கொண்டனர்.

“நேத்து சார் வந்திருந்தாரே சிஸ்டர்… இன்னைக்கு வரலையா?” தயாவை குறிப்பிட்டு அந்த நிறுவனத்தின் நிர்வாகி திவாகர் கேட்க,

“அவர் வேற ஒரு அவசரவேலையா வெளியே போயிட்டாரு!” சிரித்துக்கொண்டே பூசி மொழுகினாள் மிதுனா.

அவரவர் மனம் போனபோக்கில், தங்களின் இஷ்டத்திற்கு பேசி முடிவெடுப்பதை பார்த்து ஏக கடுப்பிலிருந்த தயா, எதையாவது செய்து கொள்ளுங்கள் என்று விலகிவிட்டான்.

மரகதமும், பாஸ்கர் கூறியதை அனைவரிடமும் தெரிவித்து, மகளை வற்புறுத்தி படித்தே ஆகவேண்டுமென்று உத்தரவாகவே கூறிவிட்டார்.

‘இனி உன் சம்பந்தமான செலவுகளை கணவனிடம் பகிர்ந்து கொள்… அவனின் மேற்பார்வையில் அனைத்து நடக்கும்படி பார்த்துக்கொள்’ என கட்டளையாக கூறிவிட, சிந்துவால் பதில்பேச முடியவில்லை. எல்லாம் இவன் ஊருக்கு செல்லும் வரைதானே என்று அமைதியாக இருந்துவிட்டாள்.

ஒரு வழியாக ஃபவுண்டேஷன் எக்ஸாமிற்கு பணத்தை கட்டிவிட்டு வெளியேவர, அப்போதும் சிந்தாசினியின் முகம் தெளியவில்லை.

நேற்றிலிருந்து யாருடனும் பேசாமல் மௌனவிரதம் மேற்கொண்டு வந்தவளுக்கு, கணவனின் மேல்தான் அத்தனை கோபமும் திரும்பியிருந்தது.

இவன் ஒருவன் வந்து நின்றதில், தான் சம்மந்தபட்ட அனைத்தும் தலைகீழாக மாறிப்போனதாக அர்த்தம் பண்ணிக் கொண்டாள். உண்மை அதுதானே என்ற கடுப்பில்,

“நெனச்சத சாதிச்சு முடிச்சாச்சு! சந்தோஷமா உங்களுக்கு…” பல்லைக் கடித்துக் கொண்டு இவள் முணுமுணுக்க,

“என்மேல காமிக்குற கோபத்த, ஃபவுண்டேசன் எக்ஸாம் எழுதி பாஸாகுறதுல காமி! அடுத்து குரூப் எக்ஸாம்ஸ் எழுதணும். அடுத்துதான் சிஏ-க்கு உள்ளேயே போகமுடியும். அப்படிபோனா ஸ்டைஃபண்ட் வர ஆரம்பிச்சிடும். அதை சேர்த்து வைச்சு திருப்புகுடு! வேணாம்னு சொல்லாம வாங்கிக்கிறேன்! உன் சொந்த காசுலயே படிச்ச மாதிரியும் இருக்கும், திருப்தியா உனக்கு?” மெல்லிய குரலில் பாஸ்கர் கடுகடுக்க, உடனிருந்த மிதுனாவிற்கு பொறுமை பறந்து போனது. 

“உன் கடமைய செய்றேன்னு நீயும் சொல்லமாட்ட… இவளும் உன்மேல இருக்குற கோபத்த விட்டுத் தள்ளமாட்டா! குரங்குங்க சண்டைகூட உங்ககிட்ட தோத்து போயிடும்டா! எந்த வயசுலயும் படிக்கலாம்னு நினைச்சு படிக்க ஆரம்பி சிந்து. உன்னை, நீயே குறைச்சு எடை போட்டுக்காதே! உனக்கு உண்மையாவே படிக்க முடியலன்னா எப்போனாலும் இதைவிட்டு வெளியே வா… வேற நல்லவழி பார்த்துக்கலாம். உங்களைப் பார்த்து விபு வளர்ந்தாகணும். இனியும் இப்படி சின்னபசங்க மாதிரி சண்டை போட்டுறத விட்டுத் தள்ளுங்க…” இருவருக்கும் பொதுவாக சொல்லி முடிக்க,

“எனக்கு மட்டும் வேண்டுதலா அண்ணி? அது என்னமோ இவரைப் பார்த்தாலே இப்படிதான் பேசத் தோணுது. அதான்,                                                                                                                                      அம்மாகிட்ட நேத்து அத்தனை பேசியிருக்காரே! இனி எப்படி, எனக்காக பார்த்து பார்த்து செய்றாருன்னு பார்ப்போம். எல்லாரோட ஆசைக்கும் நான் ஏன் குறுக்கே நிப்பானேன்! அதுவுமில்லாம படிக்க முடியாதுன்னு எல்லாம் எனக்கு பயமில்ல அண்ணி… அஞ்சு வருசத்துக்கு படிப்பு இழுத்துட்டு போகுமேன்னுதான் நான் யோசிச்சேன்…” உண்மையான காரணத்தை சிந்து சொல்லிவிட,

“அவ்வளவுதான் சிந்து! இந்த மனசு போதும். மாற்றம் எல்லாம் மொத்தமா உடனே வந்திடாது. இனி எல்லாமே தம்பி பார்த்துப்பான். உன்கூட நாங்கெல்லாம் இருக்கோம். இதை எப்பவும் நீ மறக்ககூடாது!” மிதுனாவும் நம்பிக்கையை கொடுத்திட, அந்த நேரமே பாஸ்கருக்கு சொல்ல முடியாத மகிழ்வைக் கொடுத்தது.

“என்மேல இருக்குற கோபமெல்லாம் போயிருச்சாடா? எப்பவும் உனக்காக நான் இருப்பேன்டா சிந்தா!” பரவசத்துடன் கூறிய பாஸ்கர், அவளது கைகளை தன்கைக்குள் கோர்த்துக் கொள்ள,

“அந்த கோபமெல்லாம் அவ்வளவு சீக்கிரத்துல கரையாது… நீங்க எப்படின்னு பார்க்கத்தானே போறேன்?” வெட்டிவிட்டுப் பேசியபடியே சிந்து கைகளை விலக்கிக் கொண்டு முறைத்துப் பார்த்தாள். 

“அடேய்… வீட்டுல போயி பொறுமையா பேசு! நான் இப்படியே கம்பெனிக்கு போறேன் சிந்து! வேலைய முடிச்சிட்டு, சீக்கிரம் வீட்டுக்கு வர்றேன்” என்றபடியே மிதுனா ஆட்டோவில் கிளம்பி விட்டாள்.

இப்பொழுது இவர்கள் இருவர் மட்டுமே! அடித்தாலும் பிடித்தாலும் ஒழுங்காக வீடு போய்ச் சேரவேண்டுமென்ற நினைவும், சற்று முன்னர் நடந்த பேச்சும் அவர்களை அமைதியாக இருக்கச் செய்தது.

“கொஞ்சம் திங்க்ஸ் வாங்கணும் சிந்தா! நீ வீட்டுக்கு போக தனி ஆட்டோ பிடிக்கவா? இல்ல என்கூட கடைக்கு வர்றியா?” பாஸ்கர் கேட்க,

“உங்க கூடவே வர்றேன்… இல்லன்னா சேர்ந்து போயிட்டு, தனியா ஏன் வந்தேன்னு, அதுக்கொரு திட்டு வாங்கிக் கட்டிக்கணும் நான்…” பதிலுக்கு வெடிக்க,

“எல்லாம் சரியாகிடுச்சுன்னு இப்பதானே சந்தோசப்பட்டேன்… அதுக்குகூட ஆயுசு கம்மியா? மெதுவா பேசுடி… நம்ம சண்டை ஊருக்கே தெரியணுமா?” என்றவன், ஆட்டோவை அழைத்து, மனைவியுடன் டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு சென்று இறங்கினான்.

“உனக்கு என்ன வேணுமோ பார்த்து எடுத்துவை… எனக்கு பொடி, ஊறுகாய் அயிட்டம் கொஞ்சம் தேவைபடுது. அதை எடுத்துட்டு வந்துடுறேன்” பாஸ்கர் விலகிச் செல்ல,

“எனக்கு இப்போதைக்கு எதுவும் தேவையில்ல…” என்றவாறே அவனின் பின்னோடு வந்தாள் சிந்தாசினி.

மிளகு, மசாலா, இட்லி மிளகாய்பொடி வகைகளையும் மற்றும் பல இன்ஸ்டாண்ட் பேஸ்ட், பொடி பாக்கெட்டுக்களையும் இவன் எடுத்துக் கொண்டேவர,

“இதெல்லாம் அங்கே கிடைக்காதா? இப்படி பாக்கெட்டுல இருக்குறதெல்லாம் ரொம்ப கலப்படமா இருக்கும்னு தெரியாதா?” கேட்டபடியே முகம் சுளித்தாள் சிந்து.

“அங்கே போயி வாங்குறதுக்கு நேரமில்ல சிந்தா… அதிகமா எடுத்த லீவுக்கு அஞ்சுநாள்ல வேலை பார்த்து கொடுக்குறேன்னு கமிட் பண்ணியிருக்கேன். குறைஞ்சது பதினெட்டு மணிநேரம் வேலை பார்த்தே டயர்டு ஆகிடுவேன்.

அதுவுமில்லாம இங்கேயுள்ளத விட, அங்கே பாக்கெட்ல வர்ற ஃபுட் அயிட்டம்ஸ் எல்லாம் இன்னும் மோசமாக இருக்கும். அதான் முடிஞ்ச வரைக்கும் இங்கே மேனுஃபாக்ஸர் பண்ணதா பார்த்து வாங்குறேன்!” என்றவன் ஊறுகாய் வகைகள் இருக்கும் பக்கம் சென்று,

“இதுல எக்ஸ்பயரி டேட் அதிகமா இருக்குற பேக் பார்த்து எடு… நான் புளிகரைசல் இருக்கான்னு பார்த்துட்டு வர்றேன்”

“இதென்ன, எல்லா நேரத்துக்கும் பாக்கெட்ல இருக்கிறதையே  சாப்பிடுற மாதிரி வாங்கிட்டே போறீங்க?”

“பின்ன… நானென்ன வகைதொகையா சமைச்சு சாப்பிடுற ஆளா? வாங்கிட்டு போறதை எல்லாம் ஃபிரிட்ஜ்ல போட்டு வைச்சுருவேன்! குக்கர்ல ரைஸ் வைச்சு, தயிர் இல்ல புளி கரைசல் கலந்துப்பேன்… முட்டை ஆம்லெட் மட்டுமே போட்டுப்பேன்! பால்கூட வாங்கிக்க மாட்டேன் பிளாக் காஃபி ஆர் க்ரீன் டீதான்…”

“மூணு வேளையுமா ரைஸ் சாப்பிடுவீங்க?”

“அங்கே, நம்மூர் பன், ப்ரெட்ல நாலுவகை சட்னி ஊத்தி பாவ்பாஜின்னு குடுப்பான். அதை ஒருநேரம் எடுத்துப்பேன்… அப்புறம் நைட்டுக்கு நூடுல்ஸ் இல்லன்னா ரெடிமேட் சப்பாத்தி அண்ட் சாஸ்… மதியத்துக்கு கண்டிப்பா சாப்பாடு சாப்பிட்டாதான் எனக்கு திருப்தி. முன்னாடியெல்லாம் ஆபீஸ் கேண்டீன்ல வெரைட்டி ரைஸ் கிடைக்கும், அதுவே எனக்கு சரியாகிடும்.

இப்ப கொரானா வந்ததுல இருந்துதான் மூணு வேளையும் வீட்டுச் சமையல்ல போகுது. ஒரு நேரத்துக்கு சமைச்சு சாப்பிடவே அவ்வளவு கஷ்டமா இருக்கு. பாதிநேரம் பாக்கெட் ஃபுட், மீதி சொந்த சமையல்ல காலத்தை ஒட்டிட்டு இருக்கேன்…” தனது நளபாகத்தை பாஸ்கர் விளக்கிக் கொண்டேவர,

அவன் எடுத்து வைத்த சில பொடி மற்றும் ஊறுகாய் வகைகளை எடுத்த இடத்திலேயே சிந்து, திருப்பிக் கொண்டு போய்வைக்க, புரியாமல் பார்த்தான் பாஸ்கர். 

“வீட்டுல இதெல்லாம் இருக்கு… அத எடுத்துட்டு போகலாம்”

“வேண்டாம் சிந்தா… திரும்பவும் செய்யணும்னா அத்தைக்குதான் வேலை ஜாஸ்தியாகும். என்னதான் வேலைக்கு ஆளிருந்தாலும் அவங்கதானே பக்குவமா செய்யனும்”

“ஏன்? உங்க அத்தை மட்டும்தான் வேலை பாக்கிறாங்களா? நாங்க எந்த நேரமும் ஊஞ்சல்ல உட்கார்ந்து காத்து வாங்கிட்டு இருக்கோமா? அய்யோ பாவமேன்னு வீட்டுல இருக்குறத கொடுத்து விடலாம்னு பார்த்தா, கொண்டு போறேன்னு சொல்ல வாய்வரல… இதுல இந்த நல்லவரு, ஒரு வருஷம் கழிச்சு வந்து, பொண்டாட்டி பேச்சை கேட்டு சந்தோசமா குடும்பம் நடத்தப் போறாராம்…” மனைவி பொரியத் தொடங்க, அடுத்த வார்த்தை பேசுவானா கணவன்?

அவளையும் அறியாமல் வந்த, உரிமைப் பேச்சினைக் கேட்டு அவனுக்குமே ஆனந்த அதிர்ச்சிதான். நேரடியாக சொல்லாமல், மறைமுகமாகவே தன்னுடன் சேர்ந்து வாழப்போவதை கோடிட்டு காட்டிவிட்டாளே! இதைவிட பேரின்பம் வேண்டுமா அவனுக்கு…

அதன்பிறகு மனைவி கைகாட்டிய சிறுசிறு ஏர்டைட் கன்டெய்னர்களையும், பாட்டில்களையும் எந்த கேள்வியும் கேட்காமல் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

அதற்கு பிறகான பொழுதுகளில் இவன் எதையாவது மறுத்துபேச, பதிலுக்கு மனைவியின் முறைக்கும் பார்வையே பரிசாகக் கிடைத்ததில், வாயை பிளாஸ்திரி போட்டுக் அடைத்துக் கொண்டவன், உணவு உண்பதற்கு மட்டுமே திறந்தான்.

இரவு பத்து மணிக்கு ரயில்வே ஸ்டேசனுக்கு செல்ல வேண்டும் என்றிருக்க, பயணத்திற்கு தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் பாஸ்கர்.

சிந்தாசினியின் கைவண்ணத்தில் வீட்டிலுள்ள பொடி வகைகள் அனைத்தும் சிறுசிறு டப்பாக்களில் அதற்குரிய ஸ்பூனுடன் அடைத்து பார்சல் செய்யப்பட்டிருந்தது.

வீட்டிலிருந்த மாங்காய், எலுமிச்சை, பூண்டு ஊறுகாயும், மரகதத்தை விரட்டியே செய்ய வைத்திருந்த வத்தல் குழம்பும், புளிகரைசலும் அலங்காரமாக பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.

“நீயாவது கேட்டு வைக்ககூடாதா மிதுனா? இவங்க ரெண்டுபேரும் சேர்ந்து கடைக்கு போகவும்தான், சிந்து இங்கே இருக்கிறத கொண்டுபோக சொல்லிட்டா! பொழுதுக்கும் பாக்கெட்டுல அடைச்சு வைக்கிறத கலந்து சாப்பிட்டா உடம்பு என்னத்துக்கு ஆகுறது?” மருமகளுக்கு கொட்டு வைத்து, மகளின் அக்கறையை பறைசாற்றினார் மரகதம்.

“என்னடா நடக்குது இங்கே? எனக்கே கொட்டு விழுது! என் முன்னாடி சண்டை போட்டுட்டு, தனியா கூட்டிட்டு போயி டூயட் பாடுனியா பாஸ்கி? உனக்காக எல்லாம் உனக்காகன்னு, என் வீட்டு கிட்சனை காலி பண்ணி வைச்சிருக்கா உன் வீட்டுக்காரி…” கிசுகிசுப்புடன் மிதுனா கிண்டலுடன் கேட்க,

“ம்க்கும்… இவளை வச்சுட்டு நான் டூயட் பாடிட்டாலும்…” அலுப்போடு சலித்துக் கொண்டவன்,

“இதையெல்லாம் என்மேல இருக்குற பிரியத்துலதானே செய்றேன்னு கேட்டா, சாதாரண மனுசனா இருந்திருந்தாலும் இப்படிதான் அக்கறைபட்டுருப்பேன்னு லெக்சர் அடிப்பா என் எஜமானி… வந்த வரைக்கும் லாபம்னு போயிட்டே இருக்க வேண்டியதுதான்” அனுபவசாலியாக சொன்னவனின் முகமும் வெட்கத்துடன் சிரிப்பைக் கொட்டியது.

மனைவி தனக்காக இறங்கி வந்து இத்தனை செய்ததை கனவா நனவா என்றே அவ்வப்பொழுது தன்னை கிள்ளிப்பார்த்தே சோதித்துக் கொண்டிருந்தான் பாஸ்கர்.

“குறையாத சிடுசிடுப்புடன், குடித்தனம் நடத்த தயாராகிட்டேன்னு சொல்லு…” மீண்டும் மிதுனா நக்கலில் இறங்க,

“யக்கா, என்னை வச்சு நல்லாவே ஓட்டுற நீ!”

“விடுடா… விடுடா! குடும்ப அரசியல்ல இன்னும் எத்தனையோ அடி வாங்க வேண்டியிருக்கு. இதுக்கு போயி அலட்டிக்கலாமா?” நமுட்டு சிரிப்புடன் தம்பி கிளம்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தாள்.

அந்த நேரத்தில் அங்கே வந்த தயானந்தனும், புன்னைகை மாறாமல், அதேநேரம் வெகுகண்டிப்புடன் பேசினான்.

“முன்னாடி மாதிரி, போனவன் போனவனாவே இருக்ககூடாது மாப்ளே! அப்புறம் நானும், தங்கச்சிக்கு அண்ணனா மட்டுமே இருக்க வேண்டி வரும். பையன் வளர்ந்துட்டு வர்றான். அதை மனசுல வச்சுட்டு ரெண்டும்பேரும் பேசி ஒண்ணாயிருக்கற வழியப் பாருங்க!” சொல்லிக் காட்டவும் செய்ய,

“அதெல்லாம் தானா நடக்கும் தயா! இனி நமக்கு வேலையில்ல… அப்படிதானே பாஸ்கி?” ஜாடைமாடையாக பேசிய மிதுனாவிற்கும் மனம் முழுவதும் மகிழ்ச்சியே! 

இவன் ஊருக்கு புறப்படுவதை பார்த்தே விபாகர் அழ ஆரம்பிக்க, அவனை நைனிகாவும் தொடர, நந்தாவும் அழுகையில் கரைய ஆரம்பித்தான்.

“சீக்கிரமா வந்துடுவேன் குட்டீஸ்… டெய்லி வீடியோகால்ல பேசுவோம்டா பசங்களா!” மூவரையும் பாஸ்கர் சமாதானம் செய்ய,

“அப்ப சாக்கியும் வீடியோல வந்து தருவியா பாஸ்மாமா?” அதிமேதாவி கேள்வியை முன்வைத்தாள் நைனிகா.

“ஹேய் நைல்நதி… உனக்கு ஒண்ணுமே தெரியல! வீடியோல மாமாவ டச் பண்ணவே முடியாது. அப்புறம் எப்படி ஸ்க்ரீன்ல இருந்து சாக்கி கொடுக்க முடியும்?” நந்தா கேட்கவும் சின்னகுட்டிக்கு விளங்கவில்லை.

“இதுக்கெல்லாம் ஸ்கூலுக்கு போகணும் நந்து… பாப்பாதான் எழுதவே அடம் பிடிக்கிறாளே!” விபாகர் அவளை சீண்டிவிட, குழந்தைகளின் சண்டை அங்கே ஆரம்பமாகியது.

இந்த தர்க்கத்தில் பாஸ்கர் ஊருக்கு செல்லப்போவது மறந்து போனது பிள்ளைகளுக்கு… அனைவரும் இவனை வழியனுப்புவதற்கென வீட்டின் முன்னறையில் இருக்க, சிந்தாசினி மட்டும் மேலேயே இருந்தாள்.

அவளுக்கு ஏதோ ஓர் உணர்வு அங்கே நிற்க விடாமல் செய்திருக்க, மேலே தன்அறைக்கு வந்திருந்தாள். இவள் எப்போதும் இப்படிதானே என்று மற்றவர்களும் அப்டியே விட்டுவிட, பாஸ்கருக்கு மனைவியிடம் பேசிவிட்டு செல்லவேண்டுமென்ற ஆசை துளிர்விட்டது.

வெளியே கடையில் இருக்கும்போது பேசிக்கொண்டதோடு சரி… வீட்டிற்கு வந்த பிறகு வேலைகள் இருவருக்கும் சூழ்ந்து கொண்டு, தனிமையும் வாய்க்காமல் போய்விட, மனைவியிடம் தனியாக சொல்லிக்கொள்ள வேண்டுமென்று மனம் அலைபாயத் தொடங்கியது.  

குழந்தைகளை பார்த்துக் கொண்டே மெதுவாக இவனும் மேலேறிவிட, இங்கும் அங்குமென்று எதையோ ஒன்றை குடைந்து கொண்டிருந்தாள் சிந்து.

“இந்த நேரத்தில என்ன தேடுற சிந்தா?” கேட்டவாறே, மனைவியின் பின்னோடு மிகஅருகில் வந்து நின்றான்.

அமைதியாக இருந்த இடத்தில் திடீரென்று பேச்சு சத்தம் கேட்டதில், திகைப்படைந்து விதிர்த்து நிமிரவும் முடியாமல் அவனோடு இடித்துக் கொள்ள, அப்படியே மனைவியை தாங்கிப்பிடித்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான் பாஸ்கர்.

“எதுக்கு பதட்டப்படுற? நான்தான்… நீ மட்டுமே இங்கே என்ன செஞ்சுட்டு இருக்கன்னு பார்க்க வந்தேன்” என்றவனின் அணைப்பிற்குள் இப்போது முழுதாய் வந்திருந்தாள்.

அதை அறிந்து கொள்ளும் நிலையில் இல்லை சிந்தாசினி. அவளின் இயல்பான படபடப்பு, அவளுக்குள் எட்டிப்பார்க்க தொடங்கியிருந்தது.

“அது… அது… என்னோட ஹெட்செட்ட தேடிட்டு இருந்தேன்” முகம் பார்க்காமல் இவள் பதில் சொல்ல,

“நான் போறேன்னு சொன்னதே, உனக்கு மறுபடியும் பயத்தை கொடுக்க ஆரம்பிச்சிருக்குன்னு நினைக்கிறேன் சிந்தா! அதான் கீழே வராம இங்கேயே இருந்துட்ட… என்மேல நம்பிக்கை வைடி! இனிமே அடிக்கடி வருவேன். எல்லாம் மாறும். மாத்துவோம்!” ஆறுதலாய் கூறும் கணவனை இமைக்காமல் பார்த்தாள் மனைவி.

“நடந்து முடிஞ்ச வலிகளையே நினைச்சு, நமக்காக காத்திட்டு இருக்குற நல்ல வாழ்க்கைய கோட்டை விட வேணாம். உன்னை, என்னை மறந்திடுவோம்! நம்ம குடும்பம், நம்ம பையன்னு பார்ப்போம் சிந்தா… இதுக்குமேல ரொம்ப யோசிக்காதே! நிதர்சனம் இதுதான்…” அணைப்பினை விடாமல் இவன் பேசிக்கொண்டே போக, இவளும் விலகாமல் பதிலளித்தாள்.

“இப்டி சொன்னா சரியா போயிடுமா? நான் பட்ட கஷ்டம் என்னோட வேதனைகள், அழுகைக்கு எல்லாம் அர்த்தமில்லாம போச்சா…?” கேட்டவளின் பார்வையும் கூர்மையாக கணவனை பார்த்தது.

“ம்ப்ச்… இப்படியே சொல்லிட்டு இருந்தா, விடிவுகாலம் கிடைக்காதுடா! நம்ம வாழ்க்கை வீணாப்போறதுதான் மிச்சமாகும். லைஃப் ரொம்ப சின்னது. அதுல கோபம், வருத்தம் எல்லாத்தையும் கடந்து, வாழ்க்கைய நேசிக்க கத்துப்போம் சிந்தா… எனக்கு அந்த நம்பிக்கை வந்திடுச்சு! பி ஸ்ட்ராங்…

என் தப்பை உணர்ந்து, திருந்தி, திரும்பி வந்திருக்கேன் உனக்காக எதையும் செய்ய தயாரா இருக்கேன்னு உனக்கு புரியவைக்க முடியலடி! என் நிலைமை இதுதான்” அமைதியாக அழுத்தமாக உணர்வு பூர்வமாய், தன் எண்ணங்களை பாஸ்கர் கூறியதில், சிந்துவின் மனதிலும் மெல்லிய சலனம் எட்டிப் பார்த்தது.

அதற்கு நெய்வார்ப்பது போல அவனது அணைப்பு இன்னும் நெருக்கமாய் இறுக்கிக் கொண்டது. இருவருக்குமான நேசம் அக்கணத்தில் அவர்களை ஈர்த்துக் கட்டிப்போட்டது என்பதே உண்மை.

இவன் நிஜம்தானா? இந்த பேச்சு உண்மைதானா? அத்தனை அன்பான வாழ்க்கையா எனக்காக காத்துக் கொண்டிருக்கிறது என்று கேள்வியாய் கணவனை நோக்க, ஏனோ முன்னம் நடந்தவை எல்லாம் மனதில் தோன்றி, அவளின் முகம் வெகுவாக இறுகி விட்டது.

“இத்தனை இறுக்கம் வேணாம்டா… என் தப்புக்காக இறுகிப் போயி, என்னை தள்ளி வைச்சு நீ அவஸ்தைபடாதே… அதே இறுக்கத்தோட, பக்கத்துலயே இருந்து என் தப்புக்கு தண்டனை குடு! நீ அனுபவிச்ச வலிகளுக்கு எனக்கான சின்ன காயமா அது இருந்துட்டு போகட்டுமே சிந்தா…” என்ற உணர்ந்து சொன்னவனின் பேச்சு ஒவ்வொன்றும்,  உள்ளிருக்கும் சின்னப்பெண் சிந்தாசினியை உருக வைத்துக் கொண்டிருந்தது.

கணவனின் பேச்சுக்களை எல்லாம் அவனது அணைப்பில் இருந்தவாறேதான் கேட்டுக் கொண்டிருந்தாள். இவனுடன் வாழ்வெதென்று முடிவெடுத்து விட்டாள்தான். அது வலிந்து, தனக்குதானே திணித்துக் கொண்ட முடிவாகவே இவள் நினைத்திருந்தாள். ஆனால், இப்போது இவனது அணைப்பை கள்ளத்தனமாக ரசித்துக் கொண்டிருக்கும் தனது மனதை எதைக் கொண்டு சாத்துவதென்று இவளுக்கு தெரியவில்லை. 

கணவனுக்கு என்ன பதில் சொல்லி அனுப்பி வைப்பதென்றும் புரியவில்லை. இவனை விட்டு விலகி நிற்கவும் மனம் வரவில்லை. ஆனாலும் எதையாவது ஒன்று பேசியே ஆகவேண்டுமே? என்ன சொல்வது? என யோசித்த மூலையில் பளிச்சென்று மின்னல் வெட்டியது, இவனது சிந்தா அழைப்பு….

“அதென்ன? இப்போ எல்லாம் சிந்தா வருது… என்ன ஆச்சு உங்க சிந்தாசினிக்கு?” நயாபைசாவிற்கு பிரயோசனம் இல்லையென்றாலும் அதிமுக்கிய கேள்வியாக கேட்க, அவளின் அந்த பாவனையிலேயே மனம்விட்டு சிரித்து விட்டான் பாஸ்கர்.

“அதுவா… அப்படி கூப்பிட்டா, என் மாமாவுக்கு பிடிக்காதுன்னு என் பொண்டாட்டி சொல்லித் தெரியும். அதுவுமில்லாம அந்தபேரு அவ்வளவா ராசியில்ல… சிந்தான்னு கூப்பிட ஆரம்பிச்ச பிறகுதான் என் பேச்சை கேட்டு படிக்கவே சம்மதிச்சா என் வீட்டுக்காரி… அது தெரியுமா உனக்கு?” கேட்டவாறே புருவத்தை ஏற்றி இறக்கி, அவளை பார்த்து புன்னகைத்தவன், மனைவியின் நெற்றியிலும் தன்தலையை மெதுவாய் முட்டிக்கொள்ள, அந்த இயல்பு மிகவும் பிடித்துப் போனது மனைவிக்கு…

இவளின் இளகலில் தன்னை மறந்து நின்றவன் அணைப்பை இறுக்கி மனைவியை மார்பில் சாய்த்துக் கொள்ள, அவளும் மறுப்பின்றி தலைசாய்த்தாள்.

“எனக்கு சிந்தாசினிதான் பிடிக்குது… சிந்தா வேணாம்” கிசுகிசுப்புடன் மார்பில் ஒன்றிக் கொண்டு மனைவி சட்டம் பேச,

“மாமான்னு கூப்பிடுற சின்னபொண்ணு வெளியே வந்தா, சிந்தாசினியும் வருவா!”

“அப்ப, அவளையே தேடிப்போக வேண்டியதுதானே? எதுக்காக என்னைத் தேடி வந்தீங்க?”

“அவ ஒளிஞ்சிருக்கிற இடம் உனக்குத்தானே தெரியும்… அதான் உன்கிட்ட நான் சரண்டர் ஆகிட்டேன்!” என்றவன் மனைவியின் நெற்றியில் வாஞ்சையுடன் முத்தம் பதிக்க, அப்போதுதான் நிகழ்விற்கு வந்தாள் சிந்தாசினி.

வேண்டாமென்று வெறுத்த கணவனின் இறுகிய அணைப்பு,  மார்போடு தஞ்சமடைந்த இவளின் இளகிய கோலம், கணவனின் இயல்பான முத்தம் இவையெல்லாம் எப்படி சாத்தியமென்று யோசித்தபடியே அவனைவிட்டு வேகமாக விலகினாள்.

“என்னடி? என்ன ஆச்சு…?” என்றவன் விரலால் அவளின் தாடையை நிமிர்த்த, ஊருக்கு புறப்படும் நேரத்தில் வெடுக்கென்று பேச மனம் வரவில்லை.

“வண்டிக்கு நேரமாகுது, கிளம்புங்க…” என்றவாறே கணவனுடன் சேர்ந்து கொண்டு கீழேவர, அப்படி வந்து நின்றதே அனைவருக்கும் நிம்மதியை கொடுத்தது.

எல்லாம் சரியாகிவிடும் காலம் வெகுதொலைவில் இல்லையென்ற நம்பிக்கையுடனே பாஸ்கரை இன்முகத்துடன் அனைவரும் வழியனுப்பி வைத்தனர்.

காருக்குள் சென்றமர்ந்த பிறகு, மனைவிக்கே உரிய கூடுதலான தலையசைப்புடன் சிந்தாசினி மெலிதாய் புன்னகைத்து விடைகொடுக்க, அந்தகணமே பாஸ்கருக்கு மனைவியுடனான பிரிவு, பல இன்ப அவஸ்தைகளை கொடுத்தது.

நேசத்தை மட்டுமே பற்றுகோலாய் கொண்ட நெஞ்சங்கள் குற்றம் குறைகளை களைந்து புறம் தள்ளுவதில் நாள் நட்சத்திரம் பார்ப்பதில்லை. இனி எல்லாம் சுகமாகுமா… ஆகுமென்றே நம்புவோம்…