தண்ணிலவு தேனிறைக்க… 9

TTIfii-0df0e9a9

தண்ணிலவு – 9

உடலோடு மனமும் நடுநடுங்கிக் கொண்டிருக்க, அசையவும் முடியாமல் படுத்திருந்தாள் சிந்தாசினி. மனமெங்கும் நடந்த தவறை நினைத்துப் பார்த்தே ஓலமிட்டுக் கொண்டிருந்தது.

ஒன்றரை மணிநேர காமன் விளையாட்டில் வன்மையுடன் தனது தீராத ஆசையை, பன்முறை தாக்குதலாக பாஸ்கர் தொடுத்திருக்க, மொத்தமாய் துவண்டு போயிருந்தாள் சிந்தாசினி. உடலும் மனமும் தனது ரணத்தை வெளிப்படுத்தி, அவளை படுத்த படுக்கையாக்கி விட்டிருந்தது. 

வெளியில் சொன்னால் வெட்கக்கேடு மட்டுமா? மானக்கேடும் கௌரவப் பிரச்சனையும் கூட அல்லவா? யாரிடம் பாவமன்னிப்பை கேட்டு மனபாரத்தை இறக்கி வைப்பதென்றே தெரியாமல் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தாள்.

காய்ச்சல் வந்து படுத்து இன்றோடு இரண்டு நாட்களாகியிருந்தது. நேற்றைய தினம் அண்ணன் கொண்டு வந்து கொடுத்த மாத்திரையும், தாய் மரகதம் தயாரித்துக் கொடுத்த கசாயத்தையும் எடுத்துக் கொண்டும்கூட உடல்சூடும் படபடப்பும் அவளுக்கு அடங்கவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன், உணர்ச்சியின் வேகத்தில் சற்றும் யோசிக்காமல் இசைந்து, தன்னையே விட்டுக் கொடுத்த முட்டாள்தனத்தை, என்ன செய்தாலும் நேர்பண்ணி விடமுடியாது என்கிற அவலம் பலமாய் தாக்க, அதை நினைத்தே உடல் நடுக்கமும் மீண்டும் கூடிக்கொண்டேதான் போகிறது.

“சின்னகுட்டி இப்படியே படுத்திருந்தா காய்ச்ச கொறைஞ்சுடுமா? ஒரு எட்டு ஆசுபத்திரிக்கு போயிட்டு வந்திறலாம்… எழுந்திரு கண்ணு” கெஞ்சாத குறையாக மகளை எழுப்பினார் மரகதம்.

எத்தனை அன்பாகக் கூறினாலும் மருத்துவமனைக்கு வரமாட்டேன் என அழிச்சாட்டியம் செய்பவளை என்ன சொல்லி அழைத்துச் செல்வதென்று அந்த அப்பாவி அம்மாவிற்கும் தெரியவில்லை.

இவளுக்கோ டாக்டரிடம் சென்றால், தனது கள்ளத்தனம் வெளியில் தெரிந்துவிடுமோ என்கிற பயமும் சேர்ந்து ஆட்டிவைக்க, உயிரே போனாலும் வெளியில் வரமாட்டேன் என பிடிவாதம் பிடித்தபடி கிடந்தாள்.

உடல் அவஸ்தையோடு மனதளவிலும் மொத்தமாக உடைந்து போயிருந்தாள். காதல் மயக்கமும் வயதின் கிளர்ச்சியும் போட்டி போட்டுக் கொண்டு அவளைப் பந்தாடியதில் இன்று தன்னையே தொலைத்துக் கொண்டு நிற்கிறாள்.

“எதைப்பார்த்து பயந்து போச்சோ, என் புள்ள! தெரியலையே? நான் ஒரு கூறுகெட்டவ… புள்ள என்ன பண்ணுதுன்னு பக்கத்துல இருந்து பார்த்துக்க வக்கில்லா எனக்கு… உடம்பு நோவ பெருசா நினைச்சு, மாத்திரை போட்டு கட்டைய கெடக்கேன்!” தன்னைதானே இறக்கிக் கொண்டு, மகளைப் பற்றிய கவலையில் புலம்பலை ஆரம்பித்தார் மரகதம்.

“ஊருக்கு போறியா தங்கம்? உன்பாட்டி கையால கசாயம் குடிச்சா தெம்பா எந்திருச்சு உக்காந்திடுவ…” மகளை மீண்டும் எழுப்ப முயல,

“எனக்கு ஒண்ணுமில்லம்மா… நான் எங்கேயும் போகல” முனகிய குரலில் மறுத்தாள் சிந்து.

மகளின் பலகீனமான பின்னடைவில் பெரிதும் பயந்து போய்விட்டார் மரகதம். அமைதியுடன் மிக நேர்த்தியாக தன்னை சீர்படுத்திக் கொண்டு வீட்டில் வளையவரும் பெண்ணை, பழையபடி நடமாட வைப்பதற்கு எங்கு சென்று காவடி எடுப்பதென்று அவருக்கும் புரியவில்லை.

“அண்ணன் திட்டுவான்னு பார்க்காதேடி! நான் சொல்லி அனுப்பி வைக்கிறேன். ஒருவேல உன்னோட அலமு அம்மாவ பார்த்தா, நீ சரியாகிடுவியோன்னு தோணுது” வளர்த்தவரை நினைத்து மருகுகிறாளோ என நினைத்து, மரகதம் யோசனை கூறினாலும் மகள் அசைந்து கொடுக்கவில்லை.

“அதெல்லாம் சின்ன வயசுலதான் தோணும், இப்ப இல்ல… அப்டி பார்க்க நினைச்சா… நானே சொல்றேன்மா!” என்றவள் மீண்டும் கண்களை மூடிக்கொள்ள,

“நேத்து போல, மாத்திரை வாங்கிட்டு வாரேன். அதையாவது ஒழுங்கா போடு… பிடிவாதம் பிடிக்காதே! நான் போயிட்டு வந்துடுறேன், பத்திரமா இருந்துக்கோ சிந்து!” என்று மரகதம் கிளம்பிவிட, அடுத்த இரண்டு நிமிடங்களிலேயே பாஸ்கர் மேலே வந்து நின்றான்.

“சிந்தாசினி… என்னடி ஆச்சு உனக்கு? ரெண்டுநாளா கீழே வரல… உங்கம்மா வேற புலம்பிட்டே போறாங்க!” பதட்டத்துடன் வந்து அவளைத் தொட்டுப் பார்க்க, சிந்து அவன் கையை தட்டி விட்டாள்.

“இப்டி உருகி உருகிப் பேசியே ரொம்ப பெரியதப்ப, கொஞ்சமும் யோசிக்க விடாம என்னை செய்ய வச்சுட்டீங்க மாமா… பக்கத்துல வராதீங்க, கீழே போயிடுங்க!” என்று இவள் அழ ஆரம்பிக்க,

“இதுக்குதான் காய்ச்ச வந்து படுத்து கெடக்கியா? போடி பைத்தியம்! நானும் என்னமோ ஏதோன்னு பதறிப் போயிட்டேன்…” சர்வ சாதாரணமாக சொன்னவனை வெட்டிப் போடும் ஆத்திரம்தான் வந்தது பெண்ணிற்கு…

“ஏதாவது பெரிய வார்த்தை பேசுறதுக்குள்ள இடத்தை காலி பண்ணுங்க!” குரலை முயன்று உயர்த்த, அவளிடம் நெருங்கி அமர்ந்து, அவள்புறம் தன்கைகளால் அணைகட்டிக் கொண்டான். ஏனோதானோவென்று படுத்திருந்தவளுக்கோ இவனின் இந்தச் செயலால் அசையக்கூட முடியவில்லை.

“இப்ப எதுக்கு இவ்வளவு பதட்டபடுற? உன்மாமா பக்கத்துல இருக்கும்போது பயப்படலாமா சினிகுட்டி? என்னை நம்புடி, உன்னை கைவிட மாட்டேன்!” பாஸ்கர் ஆறுதலாய் கூறவும் சற்றே ஆசுவாசமடைந்தாள் சிந்து.

“இல்ல மாமா… என்ன இருந்தாலும் நாம எல்லை மீறியிருக்ககூடாது. கல்யாணத்தோட புனிதத்தையே தீயில போட்டு பொசுக்கிட்டோமோன்னு மனசு கெடந்து அடிச்சுக்குது. உங்க அவசரத்துக்கு நானும் சரின்னு சொல்லி இருக்ககூடாது” என மீண்டும் அழுகையில் அரற்றி வைக்க, அவளை மடி தாங்கிக் கொண்டான் பாஸ்கர்.

“இப்பவே ஒரு மஞ்சகயிற வாங்கி உன் கழுத்துல கட்ட எனக்கு ரொம்ப நேரம் ஆகாதுடி! ஆனா அதுக்கப்புறம் யோசிச்சு பாரு… எல்லாரும் நம்மள தப்பா பேசியே தலைகுனிய வைப்பாங்க.

அதுவுமில்லாம, இன்னும் நான் சம்பாதிக்க ஆரம்பிக்கல… கொஞ்சநாள் பொறுத்துக்கோ! குறைச்ச சம்பளமா இருந்தாலும், கிடைக்கிற வேலையில சேர்ந்துட்டு, வீட்டுல நம்ம கல்யாணத்தை பத்தி பேசுறேன்!” வாஞ்சையுடன் பெண்ணின் தலைதடவி, கன்னத்தை தட்டிக் கொடுத்தவாறே பாஸ்கர் சமாதானம் சொல்ல, ஏற்றுக்கொள்ள மறுத்தாள் சிந்து.

“இத்தனை யோசிக்கிறவர் அந்த நேரமே கொஞ்சம் சுதாரிச்சிருந்தா, இப்ப இவ்வளவு வருத்தம் தேவையா மாமா? உடனே நம்ம கல்யாணத்துக்கு உங்க வீட்டுல எப்படி சம்மதிப்பாங்க? உங்க அக்கா இருக்கும்போது உங்களால எப்படி பேச முடியும்?” இவள் வரிசையாக கேள்விகளை அடுக்கிக் கொண்டேபோக, அதற்கே பெருமூச்சு விட்டான் பாஸ்கர்.

“நம்ம நிம்மதிய நாமலே கெடுத்துக்கிட்டோம் மாமா… எனக்கு பயமெல்லாம், இதனால நாளைக்கு பிள்ள தங்கிட்டா, அது நம்ம ரெண்டு குடும்பத்துக்கும் அசிங்கமா போயிடும்… அதைவிட வேற அவமானமே வேணாம். அப்படி நினைச்சாலே ஈரக்குலையே நடுங்குது எனக்கு. செத்துப் போயிடலாம் போலிருக்கு…” என உள்ளதை உடைத்துச் சொல்லிவிட, பாஸ்கரும் அரண்டு விட்டான்.

“இப்படியெல்லாம் பயமுறுத்தாதடி… செத்துபோறேன், காணமா போறேன்னு எல்லாம் பேசி என்னை கொல்லாதே! இனிமே கவனமா இருப்போம்டா சிந்தாசினி! நான் மெடிக்கல் போயி பில்ஸ் வாங்கிட்டு வர்றேன். அதை போட்டுக்கோ! உன்னோட பயத்துக்கு அவசியமே இல்ல…” தைரியம் கொடுத்தவனை புரியாமல் பார்த்தாள் சிந்து.

கிராமத்தில் வளர்ந்தவளுக்கு உண்மையில் பாஸ்கர் சொன்னது புத்தியில் ஏறவே இல்லை.

“அது… கரு தாங்காம இருக்க மாத்திரை வாங்கிட்டு வரேன்டா… அத போட்டுக்கிட்டா போதும். சீக்கிரமா வர்றேன். சாப்பிட்டு முடிச்சுக்கோ! எதையாவது அசட்டுத்தனமா யோசிச்சு தப்பான முடிவெடுத்துடாதடா… உன்னை இப்படியே காலம்பூரா மடியில தாங்கிக்கனும்னு கனவெல்லாம் கண்டுகிட்டு இருக்கேன்! என்னை ஏமாத்திடாதடி!” நெகிழ்ந்து சொன்னவனின் குரலும் கரகரத்துவிட, இவளுக்கும் உருகிவிட்டது.

“அப்படியெல்லாம் பண்ணமாட்டேன் மாமா!” என்றவளின் வாய்வார்த்தையே அவனுக்கு நிம்மதியைக் கொடுத்திட, அவசரகதியில் சென்று விட்டான்.

பாஸ்கர் வந்த ஆறுதல்படுத்தியதில் சற்றே தெளிந்தாள் சிந்து. ஆனாலும் நிமிடத்திற்கு நிமிடம் வீட்டினரை ஏமாற்றி வருகிறோம் என்கிற குற்ற உணர்வு மட்டும் குறையவில்லை.

நடந்த தவறுக்கு இருவருமே காரணம் என்பதை நிலைநிறுத்திக் கொண்டவள், அவனை மட்டுமே குற்றம் சொல்வதில் பிரயோஜனமில்லை என்பதிலும் தெளிவாக இருந்தாள்.

ஆனாலும் இன்றைய இவளது மனபோராட்டம் சற்றும் குறையாமல் நாளொரு இன்னலும் பொழுதொரு பழிச்சொல்லுமாக தன்னை குத்திக் கிழிக்கப் போவதை அறியாமலும் போனாள்.

அவசரகால கர்ப்பத்தடை மாத்திரைகள் என்பது முழுக்க முழுக்க நம்பகத்தன்மையானது என்பதை உறுதியாகச் சொல்லிவிட முடியாது.

முறையாக உட்கொள்ளும் போது 90 முதல் 95% என்கிற அளவில் மட்டுமே அவை உறுதியளிக்கின்றன.

உடலுறவிற்கு பிறகு குறைந்தது 12 மணிநேரத்திற்குள், அதிகபட்சம் 72 மணிநேரத்திற்குள் உட்கொள்ள வேண்டும். அதாவது மூன்று நாட்களுக்குள் அந்த மாத்திரையை எடுத்துக் கொண்டால் மட்டுமே, கரு தாங்காமல் இருப்பதற்கான தடுப்பேற்பாடுகள் உடலில் நடைபெறும். 

இங்கே சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் முழுதாய் முடிந்து விட்டிருந்தது. இருவருமே இந்த விசயத்தில் கத்துக்குட்டிகள் என்பதை சரியாக நிருபிக்கத் தொடங்கியிருந்தனர். தனது அவசர ஆசைகளை தீர்த்துக் கொண்ட பாஸ்கரும் அதன் பின்விளைவை யோசிக்க மறந்து போயிருந்தான்.

தனக்குள் உடைந்து போயிருந்தவள், நன்றாக யோசித்து தனக்குண்டான பயத்தை கூறிய பிறகே இவனுமே அதைப் பற்றிய சிந்தனையில் யோசிக்கத் தொடங்கினான்.

கர்ப்பத்தடை மாத்திரையை நாசூக்காக வெளியிடத்தில் கேட்டு பெற்று வருவதற்குள் மூன்றாம்நாளின் பனிரெண்டு மணிநேரம் முடிந்திருந்தது. 

ஒருவழியாக அதை எடுத்துக் கொண்டு சிந்துவிடம் கொடுக்க வரும்போது வீட்டில் மரகதம் இருக்க, செய்வதறியாது திகைத்து நின்று விட்டான் பாஸ்கர்.

மரண அவஸ்தைதான் இருவருக்கும்… எப்படியாவது கொடுத்துவிட வேண்டுமென்ற அலைபுறுதல் மட்டுமே மனதில் நிற்க, மரகதத்தை மீறி எப்படி சிந்துவிடம் பேசுவதென விளங்காமல், வழக்கம் போல் தனது பொய்யை அன்றும் அவிழ்த்து விட்டான் பாஸ்கர்.

“ஆண்ட்டி… கீழே ரெண்டு கிராமத்து ஆளுங்க யாரையோ வீடுவீடா தேடி விசாரிச்சுட்டு இருக்காங்க… அனேகமா உங்களை தேடிதான் வந்திருப்பாங்கான்னு நினைக்கிறேன். கீழே வந்து என்ன எதுன்னு கேக்குறீங்களா?” என வாய்கூசாமல் கட்டுக்கதையை அவிழ்த்துவிட, அது சரியாக வேலை பார்த்தது.

மகளுக்கு இட்லியை விண்டு ஊட்டி விட்டுக் கொண்டிருந்த மரகதமும், “அப்படியா தம்பி! நான் போய் பாக்குறேன்!” என்றுவிட்டு,

“சிந்து, நான் வந்து ஊட்டி விடுறேன்! அதுக்குள்ள படுத்துறாத…” என்ற மரகதம் அங்கிருந்து செல்லவும், தன் கையில் இருந்த பில்ஸை சிந்துவின் கைகளில் திணித்தான் பாஸ்கர்.

“சாப்பிட்டு முடிச்சுக்கோன்னு சொன்னேனே… என்னடி நீ?” கடுகடுத்தவன், “பரவால்ல… இத உடனே போட்டுக்கோ!” என அவசரமாக மாத்திரையை உறையிலிருந்து பிரித்து, சிந்துவின் கைகளில் கொடுக்கப் போகும் நேரத்தில்,

மரகதம் குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே வர, மாத்திரையை பெண்ணின் கைகளில் திணித்து விட்டு அவசரமாக வெளியில் வந்து விட்டான் பாஸ்கர்.

“தம்பி நீயும் கூட வர்றீயாப்பா? எனக்கு தெரியாதவங்களா இருந்தா யாருன்னு கேட்டு வச்சுக்கலாம்” என்று சொல்ல, அவனாலும் தட்ட முடியவில்லை.

சிந்துவைப் பார்த்து கண்களால் மாத்திரையை போட்டுக்கொள் என சொல்லிவிட்டு மரகதத்துடன் அவன் கீழிறங்கி விட, மிகுந்த பயத்தோடும் மிதமிஞ்சிய வெறுப்போடும்தான் அந்த மருந்தை முழுங்கினாள் சிந்து.

அதன்பிறகும் அவளால் எல்லாம் முடிந்தது, இனி பயமில்லை என்று ஆசுவாசமாய் மூச்சு விட முடியவில்லை.

தவறு தவறுதானே… இனி அவனுடன் ஒரு எல்லையில் நின்று பழக வேண்டுமென்ற காலம் கடந்த முடிவை மனதில் பதிய வைத்துக் கொண்டாள்.

சற்று நேரத்தில் கீழே சென்ற மரகதமும் வந்து, “கீழே போயி பார்த்தா… அந்த தம்பி சொன்ன மாதிரி யாருமே இல்ல… தெருவுலயும் அப்டி யாரையும் தேடுற மாதிரி யாரும் நடக்கல. மறுபடியும் வந்தா அந்த தம்பி கூப்பிடுறேன்னு சொல்லியிருக்கு… அதான் நான் வந்துட்டேன்” என்று அப்பாவியாக விளக்கியதில் சிந்துவிற்கு, பாஸ்கர் சொன்னது முழுக்க பொய் என்பது புரிய உள்ளுக்குள் குமுற ஆரம்பித்தாள்.

இனிவரும் நாட்கள் எல்லாம் பொய், புரட்டு என்றேதான் வாழ்க்கை செல்லப்போகிறதா என எண்ணியவள், இப்படியொரு கேவலமான பிறவியா நான் என்ற வெறுப்புணர்வில் தன்னைதானே நிந்தித்துக்கு கொள்ள, உமட்டிக் கொண்டு வந்தது.

இரண்டு நாட்கள் உணவை எடுத்துக் கொள்ளாமல், ஒரே நேரத்தில் இரண்டு இட்லியை எடுத்துக் கொண்டதில் அன்றைய தினம் மூன்றுமுறை வாந்தி எடுத்தாள் சிந்து.

இதற்கு காரணம் உடல் அசௌகரியத்தின் வெளிப்பாடா அல்லது பாஸ்கர் கொடுத்த மருந்தின் ஒவ்வாமையா அல்லது தனது பயந்த குழப்பமான மனநிலையா என எதுவும் விளங்காமல் பொழுதினைக் கடத்தினாள்.

மனதிற்குள் உருண்ட பயபந்து, எதையும் சரியாககூட யோசிக்க விடாமல் அவளை அலைக்கழித்துக் கொண்டே இம்சித்தது.

ஒரு வழியாக இரண்டு நாட்களுக்கு பிறகு எழுந்து நடமாட ஆரம்பித்தவள் மறந்தும்கூட கீழே சென்று பாஸ்கரை சந்திக்க  தயாராய் இல்லை. இங்கே இவனும் அவளை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சமாகிப் போயிற்று.

தனது ஏமாற்றத்தை எல்லாம் சிந்துவின் மீது கோபமாக ஏற்றி வைத்தவன், அவளைப் பார்த்தால் கடித்துக் குதறிவிடும் மனதோடுதான் இருந்தான்.

தன்மேல் இவள் நம்பிக்கை வைக்காத காரணத்தினால்தான், தன்னை பார்க்க வராமல் தவிர்க்கிறான் என்றே தப்பர்த்தம் பண்ணிக்கொண்டு, அவள் வரவினை எதிர்நோக்கிக் கொண்டிருந்தான்.

நாள்தோறும் ஓயாமல் இவன் மேலே பார்வையை படரவிடுவதைப் பார்த்தே, சிந்துவும் மனமிறங்கி அவனைப் பார்க்க கீழே வந்துவிட்டாள்.

“என்ன மேடம் அதிசயமா என்னை பார்க்க வந்திருக்கீங்க” இவன் நக்கலாக கேட்க,

“ம்‌ப்‌ச்… நானே நொந்து போயிருக்கேன் கடுப்ப கெளப்பாதீங்க!” வெறுப்புடன் சிந்து பதில் சொல்லவும்,

“பத்துநாள் ஆச்சுடி நீ, என்னை பார்க்க வந்து… தப்பு நடந்தா திரும்பி பார்க்காம இருக்க சொன்னாங்களா? நமக்குள்ள அவ்வளவுதானா? எல்லாம் முடிஞ்சு போச்சா? என்மேல இருந்த நம்பிக்கை விட்டுப் போயிடுச்சா? உனக்கு வேணும் போதுதான் என்னை பார்க்க வருவியா? நீ இப்படிதானா?” என கோபத்தில் வார்த்தைகளை தணலாய் கொட்டிக் கொண்டேபோக, காதினைப் பொத்திக் கொண்டாள் சிந்து.

பாஸ்கரின் ஒவ்வொரு கேள்வியும் குத்தீட்டியாய் தாக்கத் தொடங்கியதில், இவளும் நிதானத்தை இழந்து விட்டாள்.

“வாய்க்கு வந்தத பேசாதீங்க… இப்பவும், என்னை பார்க்கறதுக்காக, நீங்க தவிக்குறீங்களேன்னு தான் கீழே வந்தேன். எனக்கு ஒண்ணும் நீங்க தேவையா இல்ல… உங்களுக்கு தான்…” என அடுத்த வார்த்தை பேசப்போக, அவள் வாயின் மேலேயே அடித்திருந்தான் பாஸ்கர்.

“இதுக்கு மேல எதையாவது பேசினா, கொன்னு போட்ருவேன்… என்னை என்ன அலையுறவன்னு நினைச்சியாடி? இனிமே உன்கிட்ட எனக்கு பேச்சில்ல… எப்போ நானா வந்து உன்னை கூப்பிடுறேனோ, அப்போ பேசலாம், இப்போ போயிடு!” வந்தவளை விரட்டிவிட, அதுவே சிந்து உக்கிரமாவதற்கும் போதுமானதாக இருந்தது.

“கடைசியில நீங்களும் ஆம்பள புத்திய காமிச்சுட்டீங்கல்ல… அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே! இனிமே என்ன இருக்குனுதானே, என்னை கை கழுவ நினைக்கிறீங்க?” கோபத்தில் வெடித்தவள் அழுகையில் கரைய ஆரம்பிக்க, பாஸ்கர் தலையில் கைவைத்துக் கொண்டான்.

தான் பேசும்போது அவளின் மனநிலையை உணராதவன் இவள் உஷ்ணத்துடன் பதில் கொடுக்கவும்தான், அவனது பேச்சின் வீரியம் அவனுக்கே புரிந்து போனது. என்ன இருந்தாலும் தான் அப்படி பேசியிருக்ககூடாது என்கிற நிதர்சனம் பிடிபட, முயன்று தன்னை சமன்படுத்திக் கொண்டவன்,

“அப்டியெல்லாம் கேவலமா யோசிக்கிறவன் இல்லடா நானு… அழாதடி! ஏதோ உன்னை பார்க்க முடியலங்கற கோபத்துல பேசிட்டேன். நடந்தத, நான் பேசினத எல்லாத்தையும் மறந்திடு!” அமைதியாக சொல்ல, இவளின் அழுகையோ இன்னும் அதிகமானது.

“ஏய் சிந்தாசினி! இங்க பாருடி… இந்த ஜென்மத்துல நீயா என்னை விட்டு விலகிப் போனாதான் உண்டு… என்னால உன்னை தட்டி கழிக்கவோ வெறுத்து ஒதுக்கவோ முடியாது. மாமா கோபத்துல பேசிட்டேன்டா! வேணும்னா நான் அடிச்ச ஒரு அடிக்கு, நீ பத்துஅடி அடிச்சிக்கோ!” என அவள் கைகளை கொண்டு, அவன் கன்னத்தில் அடித்துக் கொள்ள, அவன் மார்போடு ஒன்றி அழுகையில் கரைந்தாள் சிந்து. 

சில கொஞ்சல்கள், பல சீண்டல்கள், கெஞ்சல்கள் என நீண்டு இருவரும் ஒருவரையொருவர் சமாதானப்படுத்திக்கொள்ள அடுத்து வந்த நாட்கள் மிக அமைதியுடனே கழிந்தன.

முன்னைப் போன்ற அணைப்போ, இழைதலோ என எதையும் அனுமதிக்கவில்லை சிந்து. முடிந்த மட்டும் அவனை விட்டு விலகியே நின்று பேசினாள்.

பாஸ்கருக்கு இவளின் நடவடிக்கை வலிக்க செய்தாலும், நடந்த தவறுக்கு தண்டனையாகவே அதை ஏற்றுக் கொண்டான்.

ஆனாலும் ஆண்மகனாக அவன் மனதும் உள்ளுக்குள் முரண்பட்டுக் கொண்டே இருந்தது. ‘உன்மேல் அவள் முற்றிலும் நம்பிக்கை இழந்து விட்டாள். அதனால்தான் பேச்சிலும்கூட பட்டும்படாமல் கேட்பதற்கு மட்டும் பதில் சொல்லிக்கொண்டு வருகிறாள். ஆகமொத்தம் அவளைப் பொருத்தவரை நீ பொய்யனாகி விட்டாய்’ என ஏகத்திற்கும் மனசாட்சி தனது கணிப்பை எடுத்து வைக்க, அவளின் மனதை எப்படி சரிசெய்வதேன்றே அவனுக்கும் தெரியவில்லை.

இருவரின் மனக்குழப்பங்களோடும், மனமருகலோடும் இருபது நாட்களுக்கு மேலேயே அமைதியாக கடக்க, இருவருக்குள்ளும் வெறுமை, வெறுப்பு என ஏதோ ஒன்று புகைந்து கொண்டேதான் இருந்தது.

அதே உணர்வில் இருந்தவர்களை முற்றிலும் புரட்டிப் போடும் விதமாக அடுத்தடுத்த சோதனைகள் இருவருக்கும் காத்துக் கொண்டிருக்க, காதல் என்பதே கசப்பான மருந்தாகிப் போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!