தீயாகிய மங்கை நீயடி – 18

ei34NQ073963-2297238b

கிருஷ்ணா என்கிற பெயரைக் கேட்டதுமே அருந்ததிக்கு கண்களை இருட்டிக் கொண்டு வருவது போல இருக்க, சட்டென்று தன் அருகில் இருந்த தூணைப் பிடித்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள் வைஜயந்தியைத் திரும்பிப் பார்க்க, அவரோ என்னவென்று சொல்ல முடியாத ஒரு நிலையில் நின்று கொண்டிருந்தார்.

“எங்க பையன் இந்த ஊருக்கு, அதுவும் உங்களைப் பார்க்கணும்னு சொல்லித்தான் வந்தானாம், எங்க ஊரில் அவனோட பழகின பசங்க எல்லோரும் அப்படித்தான் சொல்லுறாங்க. தயவுசெய்து எங்க பையனை எங்க கூட அனுப்பி வைச்சுடுங்க. அவனுக்கு பொண்ணு மாதிரி தான் வாழணும்னு ஆசையா? பரவாயில்லை, அவன் அப்படியே இருக்கட்டும், நானோ, அவனோட அப்பாவோ எதுவுமே சொல்ல மாட்டோம். தயவுசெய்து அவனை எங்க கண்ணில் ஒரு தடவை காட்டுங்க. அவனைப் பார்க்காமல் எங்களுக்குப் பச்சத் தண்ணீ கூட தொண்டையில் இறங்க மாட்டேங்குது. ஆசை ஆசையாக, தவமிருந்து பெற்ற ஒற்றைப் பிள்ளை அவன், அவனை விட்டால் எங்களுக்கு வேறு நாதியே இல்லைங்க. ஊரில் யாராவது ஏதாவது சொல்லுவாங்கன்னு அவன் பயந்தான்னா அவனுக்காக நாங்க இந்த ஊரில் வந்திருக்கோம், ஆனா அவனை எங்க கூட மட்டும் வந்திருக்க சொல்லுங்கம்மா” என்றவாறே கிருஷ்ணாவின் அன்னை வைஜயந்தியின் காலில் விழப்போக,

அவசரமாக அவரருகில் ஓடி வந்து அவரைக் கீழே விழ விடாமல் பிடித்துக் கொண்ட அருந்ததி, “ஏன்ம்மா நான் கேட்கிறேன்னு தப்பாக நினைத்துக் கொள்ள வேணாம். இதேமாதிரி உங்க பையனோட நிலைமையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும், பண்பும் அவன் தன்னோட ஆசையைச் சொல்லும் போது என் உங்களுக்கு வரவே இல்லை? அவன் அத்தனை தூரம் தன்னோட நிலைமையை எடுத்துச் சொன்ன போது கூட நீங்க அவனைப் புரிஞ்சுக்கலயே. ஒருவேளை அப்போவே நீங்க அவனோட நிலைமையைப் புரிந்து கொண்டு அவனுக்கு ஆதரவாக இருந்திருந்தால் இன்னைக்கு அவன் உயிரோடாவது இருந்திருப்பானே?” என்று கூற,

“என்…என்ன சொன்னீங்க? கிருஷ்ணா… கிருஷ்ணா உயிரோடு இல்லையா?” தவிப்போடு நடுங்கியபடி தன் கையிலிருந்த பையை இறுக அணைத்தபடி வினவிய கிருஷ்ணாவின் அன்னையைப் பார்த்து அருந்ததி மறுப்பாக தலையசைக்க,

அவரோ, “என் தங்கமே கிருஷ்ணா!” என்றவாறே மயங்கிச் சரிந்தார்.

மயங்கிச் சரிந்த தன் மனைவியைக் கையில் பிடித்துக்கொண்டு அவர்களைப் பார்த்து இரு கரம் கூப்பி அழுத கிருஷ்ணாவின் தந்தை, “அம்மா! என் பொண்டாட்டிக்கு என்ன ஆச்சுன்னு பாருங்கம்மா. எனக்கு சொந்தம்ன்னு சொல்லிக்க இருக்கும் ஒரு உயிரும் இவதான். அவளுக்கு ஏதாவது ஆனால் நான் நாதியற்றுப் போயிடுவேன்ம்மா. தயவுசெய்து என் பொண்டாட்டிக்கு என்ன ஆச்சுன்னு பாருங்கம்மா” என்றவாறே கண்ணீர் விட, சிவகுரு அவசர அவசரமாக தனக்குத் தெரிந்த வைத்தியரை அந்த இடத்திற்கு வரும்படி தகவல் சொல்லிவிட்டு கிருஷ்ணாவின் அன்னை வள்ளியம்மையை அருந்ததியின் வீட்டிற்க்குள் தூக்கிக் கொண்டு சென்றான்.

சிவகுருவின் அழைப்பை ஏற்று ஒரு சில நிமிடங்களிலேயே அந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருந்த வைத்தியர் வள்ளியம்மையைப் பரிசோதித்து விட்டு, “இவங்க ரொம்ப நாளாக எதுவுமே சாப்பிடல போல இருக்கு, உடம்பு ரொம்ப வீக்காக இருக்காங்க. குளுக்கோஸ் ஒரு பாட்டில் சரி ஏற்றி ஆகணும். நான் அதற்கான ஏற்பாடுகளைப் பார்க்கிறேன். வேறு எதுவும் பிரச்சினை இல்லை” என்று விட்டு சென்று விட, அப்போதுதான் முனுசாமியின் முகத்தில் சிறு நிம்மதி பிறந்தது.

தன் மனைவியின் அருகில் அமர்ந்து கொண்டு கண்ணீர் வடித்தபடி அமர்ந்திருந்த முனுசாமியின் தோளில் தன் கையை வைத்த சிவகுரு, “நீங்க எத்தனை நாளாக சாப்பிடாமல் இருக்கீங்க?” என்று கேட்க,

அவரோ சிறு தயக்கத்துடன், “அது பத்து, பன்னிரெண்டு நாளாச்சு தம்பி” என்று கூற, அவர் சொன்னதைக் கேட்டு அந்த அறை வாயிலில் சூடான உணவை அவசர அவசரமாக சமைத்து எடுத்துச் கொண்டு வந்து நின்ற அருந்ததி திகைத்துப்போய் நின்றாள் என்றால் மிகையாகாது.

ஒரு மனிதனால் இத்தனை நாட்களாக சாப்பிடாமல் இருக்க முடியுமா? என தனக்குள் சிந்தித்தபடியே தன் கையிலிருந்த உணவை அவர் முன் எடுத்து வைத்தவள், “முதல்ல இதை சாப்பிடுங்க ஐயா, அதற்கு அப்புறம் எது வேண்டுமானாலும் பேசிக்கலாம். அம்மாவுக்கு குளுக்கோஸ் ஏற்றினால் அவங்க கண்ணு முழிச்சுடுவாங்க, நீங்க இதை சாப்பிடுங்க” என்று கூற, அவளைப் பார்த்து தன் இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்தவர் தன் பசியை நீக்க அவசர அவசரமாக அந்த உணவை அள்ளி சாப்பிட ஆரம்பித்தார்.

அவர்கள் இருவரும் இருக்கும் நிலையைப் பார்த்து மனமும், கண்களும் கலங்கியவளாக அருந்ததி அங்கிருந்து விலகிச் சென்று விட, சிறு தயக்கத்துடன் அவளைப் பின் தொடர்ந்து வந்த சிவகுரு, “என்ன அருந்ததி நீங்க? எல்லாவற்றையும் தைரியமாக எதிர்கொள்ளும் ஆளு நீங்க, நீங்களே இப்படி கலங்கிப் போகலாமா?” என்று வினவ,

அவனைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவள், “மற்ற எல்லா விடயங்களிலும் நீங்க சொல்வது சரியாக இருக்கலாம்ங்க, ஆனா கிருஷ்ணா விஷயத்தில் மாத்திரம் என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியல. ஆசை ஆசையாக ஒரு மரம் வளர்த்து, அதற்கு ஒவ்வொரு நாளும் நீர் பாய்ச்சி, அதிலிருந்து எப்போ ஒரு கனி வரும்ன்னு ஆசையாக காத்துட்டு இருக்கும் போது அந்த மரத்தில் இருந்து மொட்டு வரும்போதே அந்த மரத்தை நெருப்பில் போட்டு எரித்தால் எப்படிங்க இருக்கும்? அப்படியான ஒரு நிலைமையைத் தான் கிருஷ்ணாவுக்கு அவங்க கொடுத்து இருக்காங்க. எத்தனையோ தடைகள், பிரச்சினைகளைத் தாண்டி அவனோட வாழ்க்கையை வாழ அவன் நினைத்த போது இரக்கமே இல்லாத அரக்கனுங்க அவனைக் கொன்னுட்டானுங்க, இப்போ இந்த அம்மா, அப்பாவுக்கு என்னங்க பதில் சொல்ல முடியும்? கடைசியாக அவனோட முகத்தைப் பார்க்கக்கூட இவங்களுக்கு கிடைக்கலையே” என்று கூற, சிவகுருவிற்கு அதற்கு மேல் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

ஒவ்வொரு மனிதனது வாழ்விலும் ஏதாவது ஒரு வகையில் ஒரு அரக்கன் வரத்தான் செய்கிறான், அதைத் தாண்டி நம் வாழ்வை வாழ்வது தான் இந்த உலகு நமக்குக் கற்றுத் தரும் பாடம்.

இன்று அருந்ததி, வைஜயந்தி, கிருஷ்ணா மற்றும் அவனது பெற்றோரை சந்தித்த பின்னர் சிவகுரு தனது வாழ்வைப் பற்றிய மிகப்பெரும் பாடம் ஒன்றை கற்றுக் கொண்டது போலவே உணர்ந்தான்.

அருந்ததியும், சிவகுருவும் பேசிக் கொண்டிருந்த போதே வள்ளியம்மை தன் மயக்கத்தில் இருந்து எழுந்திருக்க அவரின் அருகில் வந்து அமர்ந்து கொண்ட வைஜயந்தி, “நீங்க கொஞ்சம் ஓய்வெடுங்கம்மா. இப்போவே எழுந்து உட்காரப் பார்த்தீங்கன்னா மறுபடியும் மயக்கம் வந்து விடும்” என்று கூற,

கண்கள் கலங்க அவரது கைகளைப் பிடித்து தன் முகத்தில் அழுத்திப் பிடித்துக் கொண்டவர், “நீங்களும் எங்களை மாதிரி ஒரு சாதாரண மனுஷங்க தான்னு புரிஞ்சுக்காம இத்தனை நாளாக ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டோம்மா. நாங்க இந்த ஊருக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகப்போகுது. கையில் கொண்டு‌ வந்த பணம் எல்லாம் எப்படியோ கரைஞ்சு போயிடுச்சு, சாப்பிடக் கூட வழியில்லாமல் தெருத்தெருவாக அலைஞ்சு திரிஞ்சோம். நாங்க யாரை மனுஷன்னு நினைத்து உதவி கேட்க நினைத்தோமோ அவங்க எல்லாம் எங்களை அவங்க வீட்டு வாயிலில் கூட நிற்க விடல, ஆனா நீங்க எங்களை இந்தளவிற்கு ஆதரித்து, உபசரித்து எங்க மனதில் இத்தனை நாளாக இருந்த அந்த தப்பான எண்ணங்களை ஒட்டுமொத்தமாக அழிச்சுட்டீங்க. நீங்க நல்லா இருக்கணும்மா, நல்லா இருக்கணும்” என்று கூற, வைஜயந்தி சிறு புன்னகையுடன் அவரது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தார்.

“ஒரு சில விஷயங்கள் நமக்கு கெட்டதாகத்தான் அமையும், ஆனா அது நமக்கு கற்றுத் தரும் பாடம் எப்போதுமே மறக்காது. அது போலத்தான் கிருஷ்ணாவோட இழப்பு நம்ம ஒவ்வொருத்தர்குள்ளேயும் பல மாற்றங்களை உண்டு பண்ணி இருக்கு” என்று கூறிய வைஜயந்தியின் கையைப் பிடித்துக் கொண்ட வள்ளியம்மை,

“என் பையனுக்கு என்ன நடந்ததும்மா? இத்தனை சீக்கிரமாக அவனை எதுக்காக அந்தக் கடவுள் தன்கிட்ட எடுத்துக்கிட்டாரு?” என்று வினவ, அவரோ அருந்ததியின் புறம் தயக்கத்துடன் திரும்பிப் பார்த்தார்.

“இவங்க கிட்ட நடந்த விஷயங்களை மறைத்து எதுவும் ஆகப்போவதில்லை வைஜயந்தி ம்மா, நம்ம கிருஷ்ணாவுக்கு என்ன நடந்ததுன்னு தயங்காமல் அவங்க கிட்ட சொல்லிடுங்க” என்றவாறே அருந்ததி வைஜயந்தியின் தோளில் ஆதரவாக அழுத்திக் கொடுக்க, அவளைப் பார்த்து சரியென்று தலையசைத்தவர் கிருஷ்ணா எப்படி இறந்தான் என்று அவனது பெற்றோரிடம் விவரமாக சொல்லி முடித்தார்.

வைஜயந்தி பேசி முடிக்கும் வரை அமைதியாக அமர்ந்திருந்த முனுசாமி, “என் பையனோட இறப்புக்கு நாங்களே காரணமாகிட்டோமேம்மா. நாங்க மட்டும் அவனை அடித்து, அடக்கி, ஒடுக்காமல் வைத்திருந்தால் இந்நேரம் எங்க பையன் உயிரோடு சரி இருந்திருப்பானே! இப்படி ஒத்தப் பிள்ளையை மொத்தமாக காவு கொடுத்துட்டேனே” என்றவாறே தன் தலையில் அடித்துக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறியழ சிவகுரு அவரை ஆதரவாக அணைத்துக் கொண்டான்.

“நடந்து முடிந்த விஷயத்தைப் பேசி இனி எதுவும் மாறாது ஐயா, இனிமேல் நம்மால் என்ன செய்ய முடியுமோ அதைத்தான் நம்ம யோசிக்கணும். கிருஷ்ணா இந்த உலகத்தில் பல கஷ்டங்களை சந்திச்சிருக்கான், அவனோட நிம்மதிக்காக இனி உங்களால் என்ன செய்ய முடியும்ன்னு யோசிங்க, அதை விட்டுட்டு இப்படி உங்களை வருத்திக் கொள்வதில் எந்தப் பயனுமில்லை” என்ற சிவகுருவைப் பார்த்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டவர்,

“நீங்க சொல்லுவது சரிதான் தம்பி, ஆனா ஆசை ஆசையாக வளர்த்த புள்ளைக்கு இப்படி ஒரு நிலைமைன்னு தெரிஞ்சதும் பெத்த மனசு தாங்க மாட்டேங்குது” என்று கூற,

அத்தனை நேரம் அவர் பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்த வள்ளியம்மை, “இதற்கு எல்லாம் இருபத்தைந்து வருஷத்துக்கு முன்னாடி நம்ம பண்ண தப்புத் தான் யா, தப்புத் தான்” என்றவாறே மௌனமாக கண்ணீர் வடிக்கத் தொடங்கினார்.

“என்னம்மா சொல்லுறீங்க? இருபத்தைந்து வருஷத்துக்கு முன்னாடி தப்பு பண்ணீங்களா?” அருந்ததி சிறு குழப்பத்துடன் அவரைப் பார்த்து வினவ,

அவளை நிமிர்ந்து பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவர், “ஆமாம்மா, எங்களுக்கு கிருஷ்ணா மட்டும் தான் பையன்னு சொன்னோமே, அது உண்மை இல்லை. இருபத்தைந்து வருஷத்துக்கு முன்னாடி எங்க சொந்த ஊர் இந்தப் பூஞ்சோலை நகரம் தான், அது மட்டுமில்லாம எனக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது, ஆனா அது முழுமையாக பெண் குழந்தை கிடையாதுன்னு எனக்குப் பிரசவம் பார்த்த வைத்தியர் சொன்னாரு.

அப்போ எங்களுக்கு அது பற்றி எல்லாம் எதுவும் தெரியாது, ஏதேதோ பெரிய பெரிய விஷயம் எல்லாம் சொல்லிட்டு கடைசியாக இந்தக் குழந்தை வெளித்தோற்றத்தில் ஆண் பிள்ளை போலவும், உள் அமைப்பு பெண் பிள்ளை போலவும் இருக்கும்ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. எங்களுக்கு அப்போ என்ன பண்ணுறதுன்னே தெரியல,

ஆனா அந்தக் குழந்தையை சாதாரணமாக எல்லாக் குழந்தைகளும் மாதிரி எங்களால் இந்த ஊரில் வளர்க்க முடியாதுன்னு மட்டும் தெரிஞ்சது, அதனால அந்தக் குழந்தையை அப்படியே எங்க பழைய வீட்டுக்கு பக்கத்தில் இருந்த ஒரு வயசான அம்மாக்கிட்ட கொடுத்துட்டு நாங்க இந்த ஊரை விட்டுட்டே போயிட்டோம். அதற்கு அப்புறம் ஒரு நாலு, அஞ்சு வருஷம் கழிச்சு தான் கிருஷ்ணா எங்களுக்கு கிடைச்சான், ஆனா நாங்க பண்ண பாவம் எங்களுக்கு ஒரு குழந்தையைக் கூட அந்தக் கடவுள் விட்டு வைக்கல” என்று கூற,

வைஜயந்தியோ சிறு தயக்கத்துடன், “அந்த முதல் குழந்தை பிறந்த தேதி உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” என்று வினவ, ‘இந்த சமயத்தில் இந்தக் கேள்வி அவசியம்தானா?’ என்பது போல அருந்ததி சிறு கண்டிப்புடன் அவரைத் திரும்பிப் பார்த்தாள்.

ஆனால் அவளது பார்வையை பொருட்படுத்தாதவர் போல வள்ளியம்மையை வைஜயந்தி பார்த்துக் கொண்டு நிற்க சிறிது நேரம் தன் நெற்றியை நீவி விட்டபடியே சிந்தித்துப் பார்த்தவர், “அது வந்து சித்திரை மாத ஆரம்பத்தில்ன்னு நினைக்கிறேன், ஏன்னா நாங்க புது ஊருக்கு போன சமயம் அங்கே சித்திரை பண்டிகை கொண்டாட எல்லோரும் தயாராகிட்டு இருந்தாங்க” என்று கூற, வைஜயந்தி புன்னகை முகமாக அருந்ததியின் கையைப் பிடித்துக் கொண்டு அந்த அறையில் இருந்து அவசர அவசரமாக வெளியேறிச் சென்றார்.

“வைஜயந்தி ம்மா! நீங்க என்ன பண்ணுறீங்க? இவ்வளவு அவசரமாக எதுக்கு என்னை இழுத்துட்டுப் போறீங்க?”

“எல்லாம் விவரமாக சொல்லுறேன், கொஞ்ச நேரம் அமைதியாக வா அருந்ததி” என்றவாறே அவளைத் தனது அறைக்குள் அழைத்துக் கொண்டு சென்றவர், அவரது கப்போர்டில் இருந்த ஒரு ஃபைலை எடுத்து, அதிலிருந்த அருந்ததியின் பிறப்புச் சான்றிதழை அவளிடம் நீட்டினார்.

“இது என் பர்த் சர்டிபிகேட், இப்போ இதைப் பார்க்க என்ன அவசியம் வந்தது வைஜயந்திம்மா?” அருந்ததி சிறு சலிப்புடன் அவரைப் பார்த்து வினவ,

அவளது தலையில் மெல்லத் தட்டியவர், “பேருதான் பெரிய வக்கீல், ஆனா இந்த சின்ன விஷயத்தைக் கூட உனக்குப் புரிஞ்சுக்க முடியாதா?” என்றவாறே அவளது கையிலிருந்த அந்த சர்டிபிகேட்டில் போடப்பட்டிருந்த அவளது பிறந்த தேதியை சுட்டிக் காட்டி,

“உள்ளே இப்போ வள்ளியம்மை சொன்ன விஷயத்தை நல்லா யோசிச்சு பாரு, அப்படியே நீ பிறந்த திகதியையும் பாரு. சர்டிபிகேட்டில் நான் பதிவு பண்ணது நீ என் கைக்கு கிடைத்த திகதி அதாவது ஏப்ரல் 15. வள்ளியம்மை அவங்க குழந்தையை இந்த ஊரில் விட்டுட்டு போனது சித்திரை அன்னைக்கு அப்படின்னா ஏப்ரல் 14. இப்போதாவது ஏதாவது புரியுதா?” என்று விட்டு அவளது முகத்தை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டு நிற்க, அவளோ சிறிதும் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் தன் கையிலிருந்த சர்டிபிகேட்டை மீண்டும் அந்த பைலில் வைத்து விட்டு சிரித்துக் கொண்டே அவரெதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

“நீங்க அதை அங்கேயே வைத்து சொல்லியிருக்கலாமே வைஜயந்தி ம்மா? எதற்காக இங்கே வந்து சொல்லணும்?”

“அது… அது உனக்கு ஆதாரபூர்வமாக காட்டினால் தானே நம்புவ? அதனாலதான் இங்கே உன்னை அழைச்சிட்டு வந்தேன்”

“சரி, நீங்க சொன்னது எனக்குப் புரிஞ்சுடுச்சு. நான் தான் அவங்க வேணாம்னு விட்டுட்டுப் போன அவங்களோட முதல் குழந்தை, இப்போ அதற்கு என்ன பண்ணலாம்?”

“என்ன அருந்ததி இவ்வளவு சாதாரணமாக கேட்குற? ஒரு பிள்ளையை இழந்துட்டு அநாதரவாக நிற்கும் அவங்களுக்கு அவங்களோட பிள்ளை மறுபடியும் கிடைச்சு இருக்கு, இது தெரிந்தால் அவங்க எவ்வளவு சந்தோஷப்படுவாங்க?”

“சந்தோஷப்பட்டால் மட்டும் இழந்தது எல்லாம் திரும்ப வந்துடுமா வைஜயந்தி ம்மா?” அருந்ததியின் தவிப்பு நிறைந்த குரல் கேட்டு வைஜயந்தி கலக்கத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டு நிற்க,

அவரைப் பார்த்து புன்னகை செய்தவள், “அவங்க அவங்களோட கதையைச் சொல்லும் போதே அந்தக் குழந்தை நானாகத் தான் இருக்கக் கூடும்ன்னு எனக்கு அப்போவே ஒரு சின்ன யூகம் வந்துடுச்சு வைஜயந்தி ம்மா, ஆனா நான் அதை வெளியே காட்டிக் கொள்ள விரும்பல, ஏன் தெரியுமா? காலம் கடந்த ஞானோதயம் எந்த வழியிலும் பயனளிக்காது. ஒரு விஷயத்தை இழந்து கஷ்டப்பட்ட பிறகுதான் அதோட அருமை புரியும், இப்போ அதுதான் அவங்க நிலைமை. இப்போ வரைக்கும் அவங்க அந்தக் குழந்தையை நினைச்சு உண்மையாக மனசு வருந்தல, அவங்களுக்கு இருந்த ஒரு பிள்ளையும் போயிடுச்சு, அதற்கு காரணம் இதுதான்னு நினைக்குறாங்க, அவ்வளவுதான். அதோடு பிறந்த ஒரே நாளில் குழந்தையை விட்டுட்டுப் போன அவங்க மேல எனக்கு உண்மையாக எந்தவொரு உணர்வும் தோன்றல வைஜயந்தி ம்மா. அவங்களோட நிலைமையைப் பார்த்து பரிதாபமாக இருந்ததுதான் ஆனா அது கிருஷ்ணாவுக்காக மட்டும்.

எனக்கு அம்மா, அப்பா, சொந்தம் பந்தம் எல்லாமே நீங்க தான், நீங்க மட்டும் தான். இதை எந்தவொரு சூழ்நிலையிலும் நான் மறக்க மாட்டேன், நீங்களும் மறக்க வேண்டாம், அப்புறம் இந்த விஷயம் நம்ம இரண்டு பேருக்கும் மட்டுமே தெரிந்த ஒரு விஷயமாக இருக்கட்டும், அவங்களுக்கு அவங்க இரண்டு குழந்தைகளும் இல்லைன்னே இருக்கட்டும், இது நீங்க எனக்குத் தரும் வாக்கு” என்றவாறே அவரது கையை எடுத்து தன் கையில் வைத்து சத்தியம் செய்வது போல் சொல்லி விட்டு சென்று விட, வைஜயந்தி செய்வதறியாமல் அவள் சென்ற வழியையே திகைத்துப்போய் பார்த்துக் கொண்டு நின்றார்……