தீயாகிய மங்கை நீயடி – 19

ei34NQ073963-e58547d0

அருந்ததியின் வார்த்தைகளைக் கேட்டு திகைத்துப்போய் நின்ற வைஜயந்தி சிவகுரு தன் தோளைத் தொட்டு உலுக்கும் வரை அப்படியே தான் நின்று கொண்டிருந்தார்.

“வைஜயந்தி ம்மா! என்னாச்சு உங்களுக்கு? எதுக்காக இப்படி திகைச்சுப் போய் நிற்குறீங்க? ஏதாவது பிரச்சனையா?” சிவகுருவின் கேள்விக்கு மறுப்பாக தலையசைத்து விட்டு அமைதியாக நின்று கொண்டிருந்தவர்,

ஒரு சில நொடிகள் கழித்து, “நான் இதோ வர்றேன்” என்று விட்டுச் சென்று விட, அவனோ அவரைப் புரிந்து கொள்ள முடியாதவனாக குழப்பம் சூழ்ந்தவனாக அவரைப் பின் தொடர்ந்து நடந்து சென்றான்.

அருந்ததி கோபமாக வள்ளியம்மை மற்றும் முனுசாமியிடம் ஏதாவது பேசி விடுவாளோ என்கிற அச்சத்துடன் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு விரைந்து சென்ற வைஜயந்திக்கு அங்கே அவள் அவர்கள் இருவருடனும் இயல்பாக பேசி சிரித்த வண்ணம் அமர்ந்திருந்ததைப் பார்த்த பின்னர் தான் நிம்மதியாக மூச்சே வெளிவந்தது.

ஆரம்பத்தில் இருந்து அவரது நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் கண்காணித்துக் கொண்டு நின்ற சிவகுரு வைஜயந்தியின் அருகில் வந்து நின்று, “அருந்ததி கோபக்காரியாக இருக்கலாம் வைஜயந்தி ம்மா, ஆனா அந்தக் கோபத்தை தேவையில்லாத இடத்தில் அவங்க காண்பிக்க மாட்டாங்க” என்று அவருக்கு மாத்திரம் கேட்கும் வகையில் கூற, அவனது கூற்றைக் கேட்டு சட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்தவர் அவனது ‘தனக்கு எல்லாம் தெரியும்’ என்கிற கண் ஜாடையை உணர்ந்து கொண்டவராக சிறிது புன்னகை செய்து கொண்டார்.

“சரி வைஜயந்தி ம்மா, எனக்கு ரொம்ப நேரம் ஆகிடுச்சு, நான் இன்னொரு நாளைக்கு வர்றேன். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும்” என்றவன் அருந்ததியின் புறம் திரும்பி,

“அருந்ததி, ஒரு நிமிஷம் இங்கே வாங்களேன்” என்று கூற,

அவனது அழைப்பை ஏற்று அவனெதிரில் வந்து நின்றவள், “சொல்லுங்க சிவகுரு பிரசாத், என்ன விஷயம்?” என்று வினவ,

அவர்கள் இருவரையும் பார்த்து புன்னகை செய்தவன், “நாளைக்கு என்னோட அம்மா, அப்பாவோட முப்பது வருட கல்யாண நாளை செலிபிரேட் பண்ணுற மாதிரி ஒரு சின்ன பங்ஷன் வைச்சு இருக்கோம் எங்களோட குழந்தைகள் காப்பகத்தில், ஷோ அந்த பங்ஷனுக்கு நீங்க இரண்டு பேரும் கண்டிப்பாக வந்தே ஆகணும், இது என்னோட பணிவான வேண்டுகோள்” எனவும், வைஜயந்தி சிறு தயக்கத்துடன் அருந்ததியைத் திரும்பிப் பார்த்தார்.

வைஜயந்தியைப் பார்த்து, ‘எதுவும் ஆகாது’ என்பது போல பாவனை செய்தவள்,

சிவகுருவின் புறம் திரும்பி, “நிச்சயமாக நானும், வைஜயந்தி ம்மாவும் வருவோம். உங்களுக்காக இல்லைன்னாலும் உங்களோட அம்மாவை சந்திப்பதற்காக சரி நான் கண்டிப்பாக வருவேன்” என்று கூற, அவனும் புன்னகை முகமாக அவர்களிடம் விடைபெற்று விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.

சிவகுரு புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் முனுசாமியும், வள்ளியம்மையும் தங்கள் ஊருக்கு திரும்பிச் செல்லப் போவதாக சொல்லி தங்கள் உடைமைகளை ஒழுங்கு படுத்திக் கொண்டு நிற்க, வைஜயந்தி அவர்களை போக வேண்டாம் என்று சொல்வதா? அல்லது அவர்களை போக அனுமதிப்பதா? என்கிற குழப்பத்துடன் நின்று கொண்டிருந்தார்.

வைஜயந்தியின் முகபாவனைகளை வைத்தே அவர் என்ன மாதிரியான மனநிலையில் உள்ளார் என்பதை புரிந்து கொண்ட அருந்ததி அவரது தோளில் தன் கையை வைத்து அழுத்திக் கொடுத்து விட்டு, வள்ளியம்மை மற்றும் முனுசாமியின் எதிரே சென்று, “இந்த நேரத்தில் இப்படி பேசுவது சரியா? இல்லையான்னு எனக்குத் தெரியல, ஆனா நீங்க இன்னும் ஒண்ணு, ரெண்டு நாள் இங்கே இருக்கணும்னு வைஜயந்தி ம்மா ஆசைப்படுறாங்க, ஆனா என்னோட ஆசை வேறு.

கிருஷ்ணாவை எப்படி எப்படி எல்லாமோ வாழ வைக்கணும்னு நீங்களும் சரி, நாங்களும் சரி ரொம்பவே ஆசைப்பட்டோம், ஆனா அந்த ஆசைக்கு ஆயுள் ரொம்ப சின்னதா போயிடுச்சு, அதற்காக கிருஷ்ணாவுக்காக நாங்க செய்ய நினைத்த விஷயங்களை அப்படியே விட்டு விடவும் முடியாது.

அவனே மாதிரியே ஒரு பையன் அவன் ஒரு திருநங்கையாக மாற விரும்புவதை சொல்லவும் அவனோட வீட்டு ஆளுங்க அவனை விரட்டி விட்டுடாங்கன்னு சொல்லி எங்களைத் தேடி தஞ்சம் வந்திருக்கான், அவனுக்கு அவனோட ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ நிறைய ஆவல் இருக்கு, ஆனால் அதற்கான வசதிகள் அவனிடம் கிடையாது, அதனால கிருஷ்ணாவோட சிகிச்சைகளுக்காக நாங்க சேமித்த பணத்தை அந்தப் பையனோட சிகிச்சைக்காக பயன்படுத்தலாம்ன்னு இருக்கோம், நாளைக்கு அவனுக்கு ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்குது, எப்படியும் இன்னும் இரண்டு அல்லது மூணு வாரங்களில் அவன் ஒரு முழுமையான திருநங்கையாக வந்துடுவான், அதனால நான் என்ன சொல்ல வர்றேன்னா கிருஷ்ணாவைத் தான் அவனோட ஆசைப்படி உங்களால் பார்க்க முடியல, அட்லீஸ்ட் இந்த பையனையாவது நீங்க பார்த்து உங்க அன்பையும், ஆதரவையும் அவனுக்கு கொடுக்கணும்னு நான் தனிப்பட்ட முறையில் ஆசைப்படுறேன், நீங்க என்ன சொல்றீங்க?” என்று வினவ, வள்ளியம்மை மற்றும் முனுசாமி ஒருவரை ஒருவர் சிறு தயக்கத்துடன் திரும்பிப் பார்த்துக் கொண்டனர்.

“நான் உங்களைக் கட்டாயப்படுத்தி இதைப் பண்ணச் சொல்லல, ஆனா நீங்க இதைப் பண்ணால் எல்லோருக்கும் கொஞ்சம் மனநிம்மதியும், திருப்தியும் கிடைக்கும்ன்னு நம்புறேன்” அருந்ததி அவர்கள் இருவரும் என்ன பதில் சொல்வார்களோ என்கிற ஆவலுடன் அவர்கள் இருவரது முகத்தையுமே மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நிற்க,

ஒரு சில நொடி சிந்தனைகளுக்குப் பின்னர் அவளைப் பார்த்து புன்னகை செய்தவர்கள், “நாங்க கண்டிப்பாக அந்தப் பையனோட சிகிச்சை முடியும் வரை அவனுடனேயே இருந்து அவனுக்கு முழு ஆதரவையும் கொடுப்போம்” என்று கூற, அருந்ததி முகம் நிறைந்த புன்னகையுடன் அவர்கள் இருவரையும் இறுக அணைத்து விடுவித்தாள்.

“ரொம்ப ரொம்ப நன்றிங்க, நான் இப்போவே சக்திகிட்ட போய் உனக்கு ஒரு அம்மா, அப்பா கிடைச்சுட்டாங்கன்னு சொல்லிட்டு வர்றேன்” என்றவாறே அருந்ததி சிறு பிள்ளை போல குதூகலத்துடன் அங்கிருந்து ஓடிச் செல்ல,

அவள் சென்ற வழியைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே வள்ளியம்மையின் எதிரே வந்து நின்ற வைஜயந்தி, “அருந்ததிக்கு நானும், இங்கே இருக்கிற மற்ற மூன்றாம் பாலினத்தவர்களை சேர்ந்தவர்கள் தான் உலகமே. அவள் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கப் போகும் வரைக்கும் எங்களைப் பற்றி மட்டும் தான் யோசிச்சுட்டே இருப்பா, அதனாலதான் இப்போவும் அவ இவ்வளவு உரிமையாக இந்த விஷயத்தைப் பற்றி பேசி இருக்கா. ஒருவேளை உங்களுக்கு இதில் ஏதாவது மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் என்கிட்ட தயங்காமல் சொல்லுங்க, நான் அருந்ததி கிட்ட சொல்லி புரிய வைப்பேன்” என்று கூற,

அவரைப் பார்த்து மறுப்பாக தலையசைத்த வள்ளியம்மை, “நாங்க அப்படி எதுவும் நினைக்கவே இல்லைம்மா, அந்தப் பொண்ணு சொன்ன விஷயம் எல்லாமே சரிதான், எங்களால் எங்க பையனோட ஆசை வாழ்க்கையைத்தான் அமைச்சுக் கொடுக்க முடியல, அதற்குப் பதிலாக இந்தப் பையனோட ரூபத்தில் எங்க பையனோட ஆத்மாவைப் பார்த்து திருப்தி அடையலாம்ன்னு நினைச்சோம்” என்று கூற, அவரோ கண்கள் கலங்க அவரது தலையை வருடிக் கொடுத்து விட்டு தன் கண்களைத் துடைத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

அதன் பிறகு வள்ளியம்மையும், முனுசாமியும் அருந்ததி சொன்ன அந்த இளைஞன் சக்தியுடன் தங்கச் சென்று விட, அவளும் அடுத்த நாள் காலை வழமை போல தன் வேலைக்குச் செல்வதற்காகத் தயாராகிக் கொண்டு நின்றாள்.

அருந்ததி தயாராகிக் கொண்டிருந்த சமயம் அவளிடம் ஏதோ பேச வருவதும், பின்பு தயக்கத்துடன் அங்கிருந்து நகர்ந்து செல்வதுமாக வைஜயந்தி செய்து கொண்டிருக்க, தன் அறைக் கண்ணாடி வழியே அவரது நடவடிக்கைகளை அவதானித்துக் கொண்டு நின்றவள் இம்முறை அவர் அவளது அறை வாயிலில் வந்து நின்ற போது சட்டென்று அவரெதிரில் சென்று நின்று கொண்டாள்.

அவளை திடீரென தன் எதிரில் பார்த்ததும் ஒரு கணம் திடுக்கிட்டு நின்றவர் உடனே தன்னை சுதாரித்துக் கொண்டு, “நீ ரெடியாகிட்டேன்னா சாப்பிட வான்னு சொல்லத்தான் வந்தேன்” என்று கூற,

அவளோ, “நான் உங்ககிட்ட எதுவுமே கேட்கலேயே!” என்றவாறே அவரைப் பார்த்து கேள்வியாக தன் புருவம் உயர்த்தினாள்.

“அது, அது…”

“என்னாச்சு வைஜயந்தி ம்மா? எதற்காக காலையிலேயே இவ்வளவு பதட்டம்? உடம்புக்கு ஏதாவது பண்ணுதா?”

“இல்லை, இல்லை அப்படி எல்லாம் எதுவும் இல்லை. உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும், ஆனா அதை எப்படி சொல்லுறதுன்னு தான் தெரியலை”

“அட! இதைத்தான் இவ்வளவு நேரமாக யோசிச்சீங்களா? எதுவாக இருந்தாலும் வாயால் தானே சொல்லணும் வைஜயந்தி ம்மா” அருந்ததி இதழோரம் தவழ்ந்த சிரிப்பை மறைத்தபடியே அவரைப் பார்த்துக் கொண்டு நிற்க,

ஆரம்பத்தில் அவள் சொன்னதை சரியாக கவனிக்காமல் நின்றவர் சில நொடிகள் கழித்து அவள் சொன்னதைப் புரிந்து கொண்டு, “வாலு! உனக்கு எப்போ பாரு விளையாட்டு தான்” என்றவாறே அவளது தலையில் மெல்லத் தட்டி விட்டு,

“அதில்லை அருந்ததி, இன்னைக்கு சாயந்திரம் சிவகுரு தம்பி அவங்க அம்மா, அப்பாவோட கல்யாண நாள் பங்ஷனுக்கு நம்மளை வரச் சொல்லி இருந்தாரே, அதற்கு நம்ம கண்டிப்பாக போய்தான் ஆகணுமா?” என்று வினவ, அருந்ததியோ சற்று அதிர்ந்து போனவளாக அவரை நிமிர்ந்து பார்த்தாள்.

“என்ன வைஜயந்தி ம்மா பேசுறீங்க? சிவகுரு பிரசாத் நல்லவரு, அவங்க வீட்டு ஆளுங்களும் ரொம்ப ரொம்ப நல்லவங்கன்னு நீங்க தானே வாய் ஓயாமல் அடிக்கடி பேசிட்டே இருப்பீங்க. இப்போ திடீர்னு உங்களுக்கு என்ன ஆச்சு? எதற்காக இப்படி ஒரு கேள்வியைக் கேட்குறீங்க?”

“அந்த தம்பியும், அவங்க வீட்டு ஆளுங்களும் எனக்குத் தெரிந்த வரை நல்லவங்க தான், அதை நான் தப்பு சொல்லல, ஆனா அது அவங்க ஃபேமிலி பங்ஷன், அங்கே நம்ம போனால் தேவையில்லாத பேச்சுக்கள் எல்லாம் வரப் பார்க்குமே, அதுதான்” வைஜயந்தி சிறு தயக்கத்துடன் தன் கையைப் பிரிப்பதும், கோர்ப்பதுமாக நின்று கொண்டிருக்க,

அவரது கையைப் பிடித்து அவரை அழைத்துக் கொண்டு சென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டவள், “வைஜயந்தி ம்மா! நீங்க இன்னும் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி எல்லோரை விட்டும் ஒதுங்கிப் போக முடியும் சொல்லுங்க? நம்ம காரணமே இல்லாமல் ஒதுங்கிப் போவதைப் பார்த்துத்தான் ஒரு சிலர் நம்மை மொத்தமாக இந்த சமூகத்தை விட்டே ஒதுக்கி வைக்கப் பார்க்குறாங்க. அதற்கு நாமே இடம் கொடுக்கலாமா, சொல்லுங்க?

நாமும் எல்லோர் மாதிரியும் சகஜமாகப் பழகினால் தானே இப்போதைக்கு இந்த சமுதாயத்தில் நம்மைப் பிரித்துப் பார்க்கும் வேற்றுமை இல்லாமல் போகும், வெறும் பேச்சாக மாத்திரம் நாங்களும் சாதாரண மனுஷங்க தான்னு சொல்லிட்டு இருப்பதில் பயனில்லை வைஜயந்தி ம்மா, அதற்காக நம்ம என்ன விஷயங்களை செய்ய முடியுமோ அதைச் செய்துதான் ஆகணும். அதற்காக எதிலும் எடுத்த எடுப்பிலேயே வெற்றி கிடைத்து விடாது, தோல்விகள் வரும்தான், ஆனா அதை எல்லாம் கடந்து போவதுதான் நம்ம திறமையே! நீங்க கண்டதையும் யோசிச்சு உங்க மனதை குழப்பிக் கொள்ள வேண்டாம் சரியா? நான் சாயந்திரம் நேரத்திற்கே வீட்டுக்கு வந்துடுவேன், நீங்களும் நல்லா ரெடியாகி இருங்க, நம்ம இரண்டு பேரும் சிவகுரு பிரசாத் வீட்டு பங்ஷனுக்கு போவோம், சரியா?” என்று விட்டு அவரது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு விட்டு தன் கைப்பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்று விட, வைஜயந்தி எப்போதும் போல அன்றும் அவளைப் பார்த்து வியந்து போய் தான் அமர்ந்திருந்தார்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விடயங்களிலும் அருந்ததி இத்தனை தெளிவாக சிந்தித்து நடப்பதைப் பார்த்து அவருக்கு அளவில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டாலும் அவளது கோபம் தான் அவளது ஒரே எதிரியாக அவருக்குத் தெரிந்தது.

என்னதான் வேறு வேறு விடயங்களைப் பற்றி பேசி அருந்ததியின் மனதிற்குள் எரிந்து கொண்டிருக்கும் கதிரின் மீதான கோபத்தீயை அவர் அணைக்க முயற்சித்திருந்தாலும், அந்தக் கோபத்தீ என்றாவது ஒரு நாள் அவளது வாழ்க்கையை புரட்டிப் போடத்தான் போகிறது என்பது அவர் அறிந்திருக்கும் மறுக்கமுடியாத ஒரு உண்மை.

அந்தக் கோபத்தில் இருந்து எப்படியாவது அருந்ததி வெளியே வந்து விட வேண்டும் என்கிற வேண்டுதலுடன் வைஜயந்தி தன் வேலைகளைக் கவனிக்கச் சென்றிருக்க, அன்று மாலையே அவரது வேண்டுதல் தவிடு பொடியாகப் போகிறது என்பது அவருக்கு தெரிந்திருக்க நிச்சயம் வாய்ப்பே இல்லை.

**********

வைஜயந்தியிடம் சொன்னது போலவே நேரத்திற்கு வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்த அருந்ததி அவரது தயக்கத்தையும் மீறி அவரை அழைத்துக் கொண்டு ‘காயத்ரி இல்லம்’ நோக்கி புறப்பட்டுச் சென்றாள்.

பெரிதாக ஆடம்பரமான எந்தவொரு அலங்காரமும் இன்றி எளிமையான முறையில் அந்த ஆதரவற்றோர் இல்லம் அலங்கரிக்கப்பட்டிருக்க, அந்த இடத்தை சுற்றிப் பார்த்தபடியே அருந்ததி மற்றும் வைஜயந்தி நடந்து சென்று கொண்டிருந்த வேளை தூரத்தில் வைத்தே அவர்கள் இருவரையும் அடையாளம் கண்டு கொண்ட சிவகுரு புன்னகை முகமாக அவர்கள் எதிரில் சென்று நின்று, “வாங்க, வாங்க! ரொம்ப நேரமாக உங்க இரண்டு பேருக்காகவும் தான் காத்துட்டு இருந்தேன். ஒருவேளை நீங்க மட்டும் வராமல் இருந்திருந்தால் நான் இவங்க எல்லோரையும் அழைச்சிட்டு உங்க வீட்டுக்கு வந்திருப்பேன்” என்று கூற, அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.

“சரி, சரி, முதல்ல உள்ளே வாங்க. அம்மா உங்களைப் பார்க்கணும்னு ரொம்ப நேரமாக வெயிட்டிங்” என்று விட்டு சிவகுரு முன்னே நடந்து செல்ல, வைஜயந்தி மற்றும் அருந்ததி அவனைப் பின் தொடர்ந்து நடந்து சென்றனர்.

அந்த இல்லத்தின் பின்புறமாக இருந்த ஒரு தோட்டத்தில் சிறு சிறு கூடாரங்கள் அமைக்கப்பட்டு, பல நாற்காலிகளும் போடப்பட்டிருக்க அந்தத் தோட்டத்தின் நடுவே ஒரு வட்ட வடிவமான மேஜையில் அடுக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை அங்கிருந்த குழந்தைகளுக்கு எடுத்துக் கொடுத்தபடி ஒரு தம்பதியினர் நின்று கொண்டிருக்க, அவர்கள் தான் சிவகுருவின் பெற்றோர் என்று அருந்ததி புரிந்து கொண்டாள்.

சிவகுருவின் பெற்றோர் முகத்தில் மறையாதிருந்த புன்னகையும், அவர்கள் கண்களில் தெரிந்த அன்புமே அவர்கள் நிச்சயமாக இந்த இல்லத்தை தங்கள் மனதார விரும்பித் தான் நடாத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்தியது.

அருந்ததி மற்றும் வைஜயந்தியை தன் பெற்றோரின் அருகில் அழைத்துக் கொண்டு சென்றவன், “அம்மா, அப்பா, யாரு வந்திருக்காங்கன்னு பாருங்க. நம்ம இடத்தை மீட்டுத் தந்த லாயர் அருந்ததி மேடம் அன்ட் அவங்களோட அம்மா வைஜயந்தி” என்றவாறே அவர்கள் இருவரையும் அறிமுகப்படுத்தப்படுத்தி வைக்க,

தன் கையிலிருந்த பொருளை அப்படியே வைத்து விட்டு அருந்ததியை வந்து இறுக அணைத்துக் கொண்டவர், “உங்களுக்கு எத்தனை தடவை நன்றி சொன்னாலும் போதாதும்மா, ஏன்னா நீங்க மீட்டுத் தந்தது சாதாரண ஒரு நிலம் கிடையாது, பல குழந்தைகளோட வாழ்க்கை. நீங்க பண்ண இந்த உதவிக்கு காலத்திற்கும் நான் உங்களுக்கு நன்றியோடு இருப்பேன்” என்று கூற,

அவரைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவள், “நீங்க சொல்லுவது எல்லாம் ரொம்ப பெரிய வார்த்தை மேடம், நான் பண்ணது என்னோட தொழில் அவ்வளவுதான், இன்னும் சொல்லப்போனால் என்னை நம்பி உங்க கேஸைத் தந்ததற்கு நான்தான் நன்றி சொல்லணும்” என்றவள் சிறு சிந்தனைக்கு பின்னர்,

“அப்புறம் நான் ஒரு விஷயம் சொல்லணும், நீங்க தப்பாக நினைக்க கூடாது மேடம். என்ன இருந்தாலும் நான் உங்களை விட ரொம்ப சின்ன பொண்ணு, வயதிலும் தான், வாழ்க்கை அனுபவத்திலும் தான், அதனால நீங்க என்னை வா, போன்னே சொல்லலாம் மேடம்” என்று கூற, அவரோ அவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தார்.

“நீங்க மட்டும் என்னை மேடம்ன்னு சொல்லி ரொம்ப தூரமாக நிறுத்தி வைக்கும் போது நான் மட்டும் எப்படி அப்படி பேச முடியும்?” சிவகுருவின் அன்னை கார்த்திகாவின் பேச்சில் வாய் விட்டுச் சிரித்த அருந்ததி,

“ஓகே, ஓகே ஆன்டி. உங்களுக்கும், அங்கிளுக்கும் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்” என்றவாறே வைஜயந்தியுடன் இணைந்து தான் கொண்டு வந்திருந்த பரிசுப் பொருளை நீட்ட,

புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டவர்கள், “ரொம்ப ரொம்ப நன்றி” என்று விட்டு தங்கள் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணை அழைத்து,

“இதுதான் எங்க பொண்ணு, சிவாவோட தங்கச்சி பைரவி” என்று கூற,

அவளைப் பார்த்து புன்னகை செய்த அருந்ததி, “ஹாய்! ஐ யம் அருந்ததி!” என்றவாறே தன் கையை நீட்ட, அவளோ தன் முகத்தை வேறு புறமாக திருப்பிக் கொண்டாள்.

பைரவியின் செயலில் அங்கே நின்று கொண்டிருந்த அனைவரும் ஒரு கணம் தடுமாறிப் போக, உடனே தன்னை சுதாரித்துக் கொண்ட சிவகுரு, “பைரவி எங்க வீட்டில் கொஞ்சம் வித்தியாசமானவ, யாரு கூடவும் டக்குன்னு க்ளோஸ் ஆகிட மாட்டா” என்று விட்டு தன் அன்னையின் கையிலிருந்த அருந்ததி கொடுத்த பரிசுப் பொருளை வாங்கி,

“பைரவி, இந்த கிஃப்டை உள்ளே கொண்டு போய் வை” என்று கொடுக்க,

அவனை ஏற இறங்கப் பார்த்தவள், “இந்தக் குப்பையை நான் என் கையால தொடணுமா? உன் கெஸ்ட் கொண்டு வந்த குப்பை தானே நீயே கொண்டு போய் வை, எனக்கு வேறு வேலை இருக்கு” என்று விட்டுச் சென்று விட, சிவகுரு சிறு தயக்கத்துடன் அருந்ததி மற்றும் வைஜயந்தியின் புறம் திரும்பிப் பார்க்க, அவர்களோ அந்தப் பெண்ணின் பேச்சைக் கேட்டு மனம் வருந்தியவர்களாக அமைதியாக நின்று கொண்டிருந்தனர்……..