தீயாகிய மங்கை நீயடி – 21 (இறுதி அத்தியாயம்)

ei34NQ073963-b577c812

சிவகுருவின் பெற்றோரின் திருமண நாள் நிகழ்வுகள் முடிந்து தங்கள் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்த நேரம் முழுவதும் வைஜயந்தியும், அருந்ததியும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவே இல்லை.

அருந்ததியின் மனதிற்குள் கதிரை எப்படி வீழ்த்தி மண்ணோடு மண்ணாக்குவது என்கிற சிந்தனையும், வைஜயந்தியின் மனதிற்குள் அருந்ததியை எவ்வாறு கதிரின் வழியில் செல்ல விடாது தடுப்பது என்கிற சிந்தனையுமே மாறி மாறி ஓடிக் கொண்டிருந்தது.

தங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்த பின்னரும் வைஜயந்தி எந்தவொரு வேலையிலும் கவனமே இன்றி ஏனோதானோ என்பது போல செய்து கொண்டிருக்க, அவரது அந்த விசித்திரமான நடவடிக்கைகளைப் பார்த்து சற்றே குழப்பம் சூழ்ந்தவளாக அவரருகில் சென்ற அருந்ததி, “வைஜயந்தி ம்மா, உங்களுக்கு என்ன ஆச்சு? வீட்டிற்கு வந்ததிலிருந்து நீங்க எதையோ யோசிச்சுட்டே இருக்குறீங்க போல இருக்கு? ஏதாவது பிரச்சனையா?” என்று வினவ,

அவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவர், “எனக்கு இருக்கும் ஒரே பிரச்சனை உன் கோபம் தான் அருந்ததி, அது மட்டுமில்லேன்னா எனக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை” என்று கூற, அவளோ சிறு சலிப்புடன் அங்கிருந்து விலகிச் செல்லப் பார்க்க, அதற்குள் வைஜயந்தி அவளது கைகளை எட்டிப் பிடித்துக் கொண்டார்.

“நீ எனக்கு ஒரு சத்தியம் பண்ணிக் கொடு அருந்ததி”

“வைஜயந்தி ம்மா! என்ன விளையாட்டு இதெல்லாம்? நான் தான் அன்னைக்கே சொல்லிட்டேனே, நானாக எந்தவொரு பிரச்சினைக்கும் போகமாட்டேன்னு சொன்னேன் தானே? அப்புறம் என்ன?”

“இல்லை, நீ எதுவாக இருந்தாலும் எனக்கு சத்தியம் பண்ணிக் கொடு, அந்தக் கதிர் விஷயத்தில் எனக்குத் தெரியாமல் எதுவும் செய்ய மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் கொடு அருந்ததி”

“வைஜயந்தி ம்மா!” தன் பொறுமையை இழுத்துப் பிடித்தவளாக அவரது கரத்தின் மேல் தன் கரத்தை வைத்தவள்,

“நானாக அந்தக் கதிர் சம்மந்தப்பட்ட எந்தவொரு விஷயத்திலும் தலையிட மாட்டேன், போதுமா?” என்று வினவி விட்டு,

‘ஆனா அவனாக என்னைத் தேடி வந்தால் அவனை சும்மாவும் விடமாட்டேன் வைஜயந்தி ம்மா, இது சத்தியம்’ என்றவாறே தனது மனதிற்குள்ளும் ஒரு பெரிய வாக்குறுதியை எடுத்துக் கொண்டாள்.

அருந்ததி தனக்குப் பண்ணிக் கொடுத்த சத்தியமே அவருக்கு ஒரு பெரும் ஆறுதலாக இருக்க, அப்போதைக்கு அவளது வாக்கை நம்பி ஏற்று அங்கிருந்து நகர்ந்து சென்றவர் அதன் பிறகு அதைப்பற்றி எந்தவொரு கவலையும் இன்றி நிம்மதியாக தனது வேலைகளைக் கவனிக்கத் தொடங்கியிருந்தார்.

அன்றோடு சிவகுருவின் பெற்றோரினது திருமண நாள் நிகழ்வுகளுக்கு அருந்ததி மற்றும் வைஜயந்தி சென்று வந்து முழுமையாக ஒரு வாரம் நிறைவு பெற்றிருந்தது.

இந்த ஒரு வார காலத்திற்குள் கதிர் மற்றும் அருந்ததிக்கு இடையே எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் இருக்க, அதுவோ வைஜயந்திக்கு பெரியதொரு நிம்மதியான விடயமாக அமைந்திருந்தது.

அருந்ததி எப்போதும் போல தனது வேலைகளில் மும்முரமாக ஈடுபடத் தொடங்கியிருக்க, அவளது அந்த அமைதியை நல்லதொரு விடயமாக கருத்தில் கொண்டிருந்த வைஜயந்தி சக்தியினது சிகிச்சை விடயங்களை கவனிக்கத் தொடங்கியிருந்தார்.

ஆனால் புயலுக்கு முன்னால் ஒரு பாரிய அமைதி நிலவக்கூடும் என்பது அவருக்குத் தெரியவில்லை போலும்.

அருந்ததியின் மனதிற்குள் கொழுந்து விட்டெறிந்து கொண்டிருந்த கதிர் மீதான பகை என்னும் தீ நாளாக நாளாக அதிகரித்துக் கொண்டே சென்று கொண்டிருந்த தருணம் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பது போல அவனே தானாக வந்து அவளது வழியில் சிக்கிக் கொண்டான்.

அன்று வழமைக்கு மாறாக வானம் அளவில்லாத மழையை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்க, தனது வேலைகளை எல்லாம் முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்த அருந்ததி அந்தக் கனமழை அதிகரிப்பதற்குள் வீட்டிற்கு சென்று விட வேண்டும் என்கிற வேண்டுதலுடன் பயணித்துக் கொண்டிருந்த தருணம் திடீரென எங்கிருந்தோ வந்த ஒரு வாகனம் ஒன்று அவளது கண்களுக்கு ஒளியைப் பாய்ச்ச, அந்த வெளிச்சத்தை தாங்க முடியாமல் தன் கண்களை மூடிக் கொண்டவள் எதிரே இருந்த பள்ளத்தை கவனிக்கத் தவறியிருந்தாள்.

ஒரு சில நொடிகளுக்குள் அந்த இடத்தில் எல்லாம் நடந்து முடிந்திருக்க, தன் நிலை தடுமாறி அந்த ஈரமான வீதியில் சறுக்கி வீழ்ந்த அருந்ததி தன் தலையில் பலமாக அடிபட்டதின் தாக்கத்தினால் மெல்ல மெல்ல மயக்க நிலைக்குச் சென்று கொண்டிருந்தாள்.

அவள் அவ்வாறு மயக்க நிலைக்குச் சென்று கொண்டிருந்த தருணம் யாரோ நான்கைந்து நபர்கள் அவளது வாயைப் பொத்தி வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல முயல, அவர்களிடமிருந்து விடுபட எண்ணிப் போராடியவள் ஒரு நிலைக்கு மேல் தன் சக்தி மொத்தமும் வடிந்து போக அந்த நபர்களின் மேலேயே முழுதாக மயங்கிச் சரிந்திருந்தாள்.

அருந்ததி எவ்வளவு நேரமாக அந்த மயக்க நிலையில் இருந்தாலோ அவளுக்கே தெரியவில்லை, கீழே விழுந்ததில் உடலில் அங்கங்கே அடிபட்டிருக்க அந்த வலியின் தாக்கத்தினால் தன் கண்களை சுருக்கிக் தன் விழி திறந்தவள் தான் அமர்ந்திருந்த நிலையைப் பார்த்து முற்றிலும் அதிர்ச்சியாகித்தான் போனாள்.

அவளது கைகளும், கால்களும் ஒரு நாற்காலியில் இறுக்கமாகக் கட்டி வைக்கப்பட்டிருக்க, தான் எங்கே இருக்கிறோம் என்பது கூடப் புரியாமல் அவள் அந்த இடத்தை சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்ட தருணம் அவள் மயக்கத்தில் இருந்து எழுந்து கொள்ளும் வரை காத்திருந்தது போல அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு நான்கைந்து நபர்கள் அவளை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தனர்.

முதலில் அந்த நபர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் குழப்பத்துடன் அவர்களைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவள் சிறிது நேரத்தில் அந்த நபர்கள் எல்லோருக்கும் பின்னால் ஏளனமான சிரிப்புடன் நடந்து வந்து கொண்டிருந்த அந்த நபரைப் பார்த்து, ‘தான் நினைத்தது சரிதான்’ என்பது போல புன்னைகைத்துக் கொண்டாள்.

அருந்ததியின் புன்னகை நிறைந்த முகத்தைப் பார்த்து சிறு கோபத்துடன் அவளெதிரில் கிடந்த நாற்காலியை எட்டி உதைத்த கதிர், “உன்னைக் கடத்திக் கொண்டு வந்து என் இடத்தில் கட்டி வைத்தும் உனக்கு இந்த நக்கல் சிரிப்பு குறையல இல்லை?” என்று வினவ,

அவளோ, “எப்படியோ நானே உன்னை எப்படியாவது ஒரு தனியான இடத்தில் சிக்க வைக்கணும்னு ரொம்ப முயற்சி பண்ணேன், ஆனா அந்த விதி நீயாகவே எனக்கு ஒரு வழியை ஏற்படுத்தி தர வைத்து இருக்கு பாரேன், அதுதான் அதை நினைத்து சிரித்தேன்” எனவும், அவனுக்கோ கோபம் எல்லை மீற ஆரம்பித்தது.

இருந்தாலும் தன்னை சிறிது நிதானப்படுத்திக் கொண்டு அவளெதிரே அமர்ந்து கொண்டவன், “பரவாயில்லை வக்கீல் மேடம், இல்லை இல்லை சார். நீ என்ன வேணும்னாலும் பேசிக்கோ ஏன்னா இன்னைக்கு நீ பேசுற பேச்சுத்தான் உன்னோட வாயில் இருந்து வரும் கடைசிப் பேச்சு, அதற்கு அப்புறம் உன்னால் நினைச்சாலும் பேசுவது என்ன? அதைப்பற்றி நினைக்கக் கூட முடியாது ஏன் தெரியுமா? ஏன்னா இன்னைக்கு உனக்கு நான் இறுதிச் சடங்கு பண்ணச் போறேன்” என்று விட்டு வாய் விட்டுச் சிரிக்க ஆரம்பிக்க, அவளோ தன் முகத்தில் எந்தவொரு மாற்றமும் இன்றி அவனைப் பார்த்து புன்னகைத்தபடியே அமர்ந்திருந்தாள்.

“நல்லா சிரி, எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிரிச்சுக்கோ, ஏன்னா இதற்கு அப்புறம் நீ விடப்போகும் ஒவ்வொரு மூச்சும் நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கேன்னு உன்னை யோசிக்க வைக்கும் பாரு”

“அட பரவாயில்லையே! ரொம்ப நல்லா பேசுற, ஆனா உன்னோட இந்த தைரியம், பேச்சு எல்லாம் என் கையையும், காலையும் கட்டிப் போட்டு வைத்த பின்னாடி தானே வருது. உண்மையாகவே உனக்கு அவ்வளவு தைரியம் இருந்திருந்தால் இப்படி என் கை, காலைக் கட்டிப் போட்டு அரை மயக்கத்தில் என்னைக் கடத்திட்டு வர்ற மாதிரி இருந்திருக்காதே! இப்போ கூட என்னைப் பார்த்து பயந்து தானே இப்படி எல்லாம் பேசுற?” அருந்ததியின் பேச்சைக் கேட்டு சத்தமாக சிரித்த கதிர்,

“இதோ பாருங்க டா! இந்த இரண்டும் இல்லாத ஒரு ஆளைப் பார்த்து நான் பயப்படுறேனாம், இந்த வருஷத்தோட மிகப்பெரிய காமெடியே இது தான்” என்றவாறே தன்னுடைய சகாக்களைப் பார்த்து அருந்ததியின் கை, கால் கட்டுக்களை அவிழ்த்து விடும் படி சைகை செய்ய, அவளோ தான் நினைத்தது போலவே எல்லாம் நடக்கிறது என்கிற குதூகலத்துடன் அவர்களை எல்லாம் பரிதாபமாக பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“இதோ, உன் கை, கால் கட்டுக்களை எல்லாம் அவிழ்த்து விட்டாச்சு. இப்போ என்ன சொல்லப் போற?” கதிரின் கேள்விக்கு அவனை மேலிருந்து கீழாக பார்த்தபடியே உச்சுக் கொட்டியவள்,

“நீ படிக்கும் போது தான் ஒண்ணும் தெரியாத தண்டம்ன்னு நினைச்சேன், ஆனா ரவுடித்தனம் பண்ணுறன்னே பேரில் நீ இப்போ ஒரு விஷயம் பண்ணியே, அதைப் பார்த்த அப்புறம் நீ இன்னும் அப்படியே தான் இருக்கன்னு உறுதியாகிடுச்சு. ஏன்டா உனக்கு சுத்தமாகவே அறிவில்லையா? என் கை, காலைக் கட்டி இருக்கும் போதே உன்னை எந்தளவுக்கு பாடு படுத்தினேன், இப்போ என் கட்டுக்குளை எல்லாம் அவிழ்த்து விட்டுட்ட, இதற்கு அப்புறம் நான் சும்மா இருப்பேன்னு நினைச்சியா?” என்றவாறே அவர்கள் எல்லோரும் சுதாரித்துக் கொள்ளுவதற்கு முன்னர் தன் காலடியில் கிடந்த ஒரு இரும்பு கட்டையைத் தாவி எடுத்தவள் அங்கே நின்று கொண்டிருந்த அத்தனை நபர்களையும் சராமாரியாக அடித்து துவம்சம் செய்ய ஆரம்பித்தாள்.

ஆரம்ப நாளில் இருந்து கதிரின் மீதான தனது கோபத்தை தீர்க்க இன்று ஒரு நல்ல சந்தர்ப்பம் அமைந்து விட்டதாக எண்ணியவள் தன் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதையும் பொருட்படுத்தாமல் அவர்களை விடாமல் அடித்துக் கொண்டே இருந்தாள்.

ஒரு நிலைக்கு கதிரும், அவனது சகாக்களும் அருந்ததியின் அடிகளைக் தாங்கிக் கொள்ள முடியாமல் கீழே விழுந்து விட, அருந்ததிக்கு மாத்திரம் அவளது கோபம் குறையவே இல்லை.

இத்தனை நாட்களாக அவன் செய்த அநீதிகளையும், குற்றங்களையும் நினைத்து நினைத்துப் பார்த்த வண்ணம் தன் கையிலிருந்த உலோகக் கம்பியைக் கொண்டு அங்கேயிருந்த பொருட்கள் எல்லாவற்றையும் அடித்து துவம்சம் செய்தவள் கீழே விழுந்து கிடந்த கதிரின் அருகில் சென்று அவனது சட்டைக் காலரைப் பற்றி அவனை எழுந்து நிற்கச் செய்தாள்.

அருந்ததியின் அந்தக் கோபத் தாண்டவத்தைப் பார்த்து கதிரின் சகாக்கள் தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடி விட, இப்போது கதிரின் வாழ்க்கை அருந்ததியின் கையில் தான் என்கிற நிலை உருவாகியிருந்தது.

“உனக்கு அடுத்தவங்க வாழ்க்கை என்ன அவ்வளவு விளையாட்டா? இதுவரைக்கும் எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை அழிச்சு இருப்ப? எத்தனை ஏழை மக்களோட வயிற்றில் அடிச்சு அப்பனும், பிள்ளையும் சொத்து சேர்த்து வைச்சு இருக்கீங்க? நீங்க செஞ்ச பாவத்துக்கு எல்லாம் தண்டனை தர வேண்டாமா? நீங்க செய்த தப்பை சட்டரீதியாக நிரூபித்து, உங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கணும்னு எனக்கும் ஆசைதான், ஆனா இந்தச் சட்டம் கூட எல்லோருக்கும் நியாயமானதாக இல்லையே? அதனால உனக்கான தண்டனையை இந்த வக்கீல் முடிவு பண்ணப் போற” என்றவாறே கதிரை அங்கேயிருந்த தூண் ஒன்றில் கட்டி வைத்தவள் தன் கையிலிருந்த உலோகக் கம்பியைக் கொண்டு அவனை விடாமல் அடித்துக்கொண்டே இருந்தாள்.

வலி தாளாமல் கதிர் துடிதுடித்துக் கதறியழ அது எதையுமே காதில் வாங்காமல் அவனை அடித்துக் கொண்டே இருந்தவள் ஒரு நிலைக்கு மேல் கதிரின் சத்தம் மொத்தமாக அடங்கிப் போனதும் அவனது கட்டுக்களை அவிழ்த்து விட, அவனோ அவளது காலடியில் மொத்தமாக மயங்கிச் சரிந்திருந்தான்.

“ஏய்! இங்கே பாரு! ஏய்!” அருந்ததி தன் காலடியில் விழுந்து கிடந்த கதிரின் முகத்தை தட்டி எழுப்ப முயல, அவனோ அவள் தொடுகையைக் கூட உணர முடியாத நிலையில் மயங்கிக் கிடந்தான்.

“உன்னை மயக்கத்தில் வைத்து அடிப்பதில் எனக்கும் விருப்பம் இல்லை தான் கதிர், ஆனா நீ செய்த விஷயங்களை எல்லாம் யோசித்துப் பார்த்தால் உன்னை எந்த நிலையில் வைத்து அடித்தாலும் தப்பே இல்லை” என்றவாறே மீண்டும் அவனை அடிக்கத் தொடங்கியவள், தன் சுற்றுப் புறம் மறந்து, தன் நிலை மறந்து தன் கோபம் தீரும் மட்டும் அவனை அடித்துக் கொண்டே இருந்தாள்.

இதற்கிடையில் கதிரின் சகாக்கள் அருந்ததியிடம் கதிர் சிக்கிக் கொண்டதையும் அவர்கள் இருவரும் தற்போது இருக்கும் இடத்தையும் அவனது பெற்றோரிடம் சொல்லி இருக்க, தன் அத்தையைப் பார்ப்பதற்காக அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்த சிவகுரு அந்த செய்தியைக் கேட்டு மொத்தமாக உறைந்து போய் நின்றிருந்தான்.

அருந்ததி மற்றும் கதிருக்கு இடையிலான பகையைப் பற்றி அவனுக்கு ஏற்கனவே தெரியும் என்பதனால் அவசர அவசரமாக வைஜயந்தியைத் தேடிச் சென்றவன் இந்த விடயங்களைப் பற்றி கூற, அவருக்கோ உலகமே தன் சுழற்சியை நிறுத்தியது போல இருந்தது.

எந்த ஒரு விடயம் நடந்து விடக் கூடாது என்று அவர் இத்தனை நாட்களாக பயந்திருந்தாரோ இன்று அந்த விடயம் அரங்கேறப் போகின்றது என்கிற அச்சமான மனநிலையுடன் சிவகுருவுடன் இணைந்து அருந்ததி இருக்கும் இடம் நோக்கி வேகமாகப் புறப்பட்டுச் சென்றவர் தான் போகும் வழி முழுவதும் அருந்ததிக்கு எதுவும் நடந்து விடக்கூடாது என்று கடவுளிடம் வேண்டிக் கொள்ளாமல் இல்லை.

கதிரின் பெற்றோரும், சிவகுரு மற்றும் வைஜயந்தியும் அருந்ததி மற்றும் கதிர் இருப்பதாக சொன்ன இடத்துக்கு விரைவாக வந்து சேர்ந்திருக்க, அந்த இடத்திலோ மயான அமைதி நிலவிக் கொண்டிருந்தது.

அந்த அமைதியான சூழல் அங்கே நின்று கொண்டிருந்த அத்தனை பேரையும் அச்சம் கொள்ள வைக்க, அங்கே என்ன நடந்திருக்குமோ என்கிற அச்ச உணர்வுடன் அந்த இடத்தில் அமைந்திருந்த ஒரு பாழடைந்த அறைக்குள் நுழைந்து கொண்டவர்கள் அங்கே தாங்கள் கண்ட காட்சியில் மொத்தமாக வெலவெலத்துப் போய் நின்றனர்.

தலை விரி கோலத்தில் ருத்ர தாண்டவம் ஆடி முடித்தது போல அருந்ததி தன் கையில் இரத்தம் சொட்ட சொட்ட ஒரு உலோகக் கம்பியை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருக்க, மறுபுறம் கதிர் அவளது காலடியில் உயிரற்ற வெற்று உடலாகக் கிடந்தான்.

தங்கள் மகனை அந்த நிலையில் பார்த்ததும் சரஸ்வதி மயங்கிச் சரிய, மாணிக்கமோ சட்டென்று அவரைத் தன் கைகளில் தாங்கிக் கொண்டார்.

என்னதான் தன் மகன் தவறான ஒரு நபராக இருந்தாலும் பெற்றாரைப் பொறுத்தவரை அந்தப் பிள்ளை நல்ல பிள்ளை தான்.

இப்போதும் அதே மனநிலையுடன் தன் மகனைக் கொன்றவளை சாதாரணமாக விட்டு விடக்கூடாது என்கிற மனநிலையுடன் மாணிக்கம் அமர்ந்திருக்க, மறுபுறம் வைஜயந்தி அதற்கு முற்றிலும் எதிரான ஒரு மனநிலையில் நின்று கொண்டிருந்தார்.

தான் எது நடக்கக் கூடாது என்று நினைத்தாரோ அது நடந்து விட்டதே என்கிற குற்றவுணர்வுடன் வைஜயந்தி அப்படியே மண்டியிட்டு அமர்ந்து கொள்ள, அருந்ததி சிறு தடுமாற்றத்துடன் அவரெதிரில் வந்து நின்று கொண்டாள்.

“வைஜயந்தி ம்மா! உங்களுக்கு தந்த வாக்கை நான் காப்பாற்றல வைஜயந்தி ம்மா. என்னை மன்னிச்சுடுங்க வைஜயந்தி ம்மா. இதுவரைக்கும் நான் உங்களுக்கு கொடுத்த எல்லா வாக்குறுதியையும் காப்பாற்றி இருக்கேன், ஆனா இதை மட்டும் காப்பாற்றல, ஏன் தெரியுமா? இவனை மாதிரி ஆளுங்களை எல்லாம் வேரோடு அழிச்சுடணும் வைஜயந்தி ம்மா, இல்லைன்னா இவனைப் பார்த்து இன்னும் பல பேர் அதே தப்பான மனநிலையுடன் இந்த உலகத்தில் வலம் வர ஆரம்பிச்சுடுவாங்க.

எத்தனையோ வருடப் போராட்டத்திற்கு பிறகு இப்போ தான் நமக்கான அங்கீகாரம் இந்த சமுதாயத்தில் கிடைக்க ஆரம்பித்திருக்கு வைஜயந்தி ம்மா, அதை மறுபடியும் இழக்க நான் விரும்பல. நீங்க சொல்லுவது போல இந்த உலகத்தில் அமைதியும் முக்கியமானது தான், ஆனா இந்த மாதிரி ஆளுங்களைப் பார்த்து நம்ம அமைதியாகிப் போகக்கூடாது வைஜயந்தி ம்மா. சில இடங்களில் நம்ம தேங்கியிருக்கும் நீர் மாதிரி அமைதியாக, சலனம் இல்லாமல் இருக்கணும், அதேமாதிரி சில இடங்களில் கொழுந்து விட்டெரியும் நெருப்பு மாதிரி நம்மை அழிக்க நினைக்குறவங்களை அழிச்சுடணும் வைஜயந்தி ம்மா. இதில் நீங்க நான் சொன்ன முதலாவது ரகம், ஆனா நான் இரண்டாவது ரகம் நெருப்பு, அதுதான் என் பெயரிலேயே தீயை வைத்திருக்கேன் போல!” என்றவாறே அருந்ததி சிறு புன்னகையுடன் சிவகுருவின் புறம் திரும்பி,

“நான் செய்தது நம்ம பார்வைக்கு சரியான விஷயமாக இருந்தாலும் இந்த சட்டத்தைப் பொறுத்தவரை தவறு தான், அதனால எனக்கான தண்டனையை நான் அனுபவித்தே ஆகணும். எனக்கான அந்த தண்டனை முடியும் வரைக்கும் என் வைஜயந்தி ம்மாவையும், அவங்களோட அந்த சின்ன உலகத்தையும் பத்திரமாக பார்த்துக்கோங்க குரு” என்றவாறே அங்கிருந்த காவலாளிகளிடம் சென்று தன் கையை நீட்டி கை விலங்கை வாங்கிக் கொள்ள, சிவகுருவின் பார்வை இன்று அவளை என்றுமில்லாதவாறு மிகவும் பெருமிதத்துடன் நோக்கியது.

ஒரு மூன்றாம் பாலினத்தவராக இந்த சமுதாயத்தில் எத்தனை பிரச்சினைகள், எத்தனை கஷ்டங்கள், எத்தனை எத்தனை வன்முறைகளை இதுநாள் வரையிலும் அவர்கள் அனுபவித்திருக்கிறார்கள் என்பதை அறிந்திருந்த சிவகுரு இன்று அருந்ததி செய்த செயலை தவறான ஒரு செயலாக நினைக்கவில்லை.

மாறாக தங்களையும் சக மனிதனாக நடத்தச் சொல்லிக் கேட்டதற்கு தேவையே இன்றி அடக்குமுறைகளைப் பாவித்த ஒரு அரக்கனை அழித்த செயலைப் போலத்தான் அதை எண்ணச் செய்திருந்தது.

அருந்ததி தன்னிடம் கேட்டுக் கொண்டது போல இனி அவள் தனது தண்டனைக் காலம் முடிந்து திரும்பி வரும் வரை அந்தப் பகுதியில் இருக்கும் அத்தனை மூன்றாம் பாலினத்தவர்களையும் தனது பொறுப்பாக எடுத்துக் கொள்ளுவேன் என்று தனக்குள்ளேயே முடிவெடுத்துக் கொண்டவன், இந்த சமுதாயத்தினால் ஒரு மங்கையாக ஏற்றுக் கொள்ளப்படாத ஆனால் நிஜ மங்கையாக தன் பார்வைக்கு தோற்றமளித்த அந்த தீயாகிய மங்கை ‘அருந்ததீ’யை பெருமிதாகப் பார்த்துக் கொண்டு நின்றான்.

அருந்ததியைப் போல தங்களுக்கு எதிரான அநீதியைத் தட்டிக் கேட்கும் அனைத்து மங்கைகளுமே அவனைப் பொறுத்தவரை இனி தீயாகிய மங்கைகள் தான்.

கதிரின் அழிவோடு இனி பூஞ்சோலை நகரில் வசிக்கும் அனைத்து மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் விடிவு காலம் வரும் என்கிற நம்பிக்கையுடன் நானும் விடைபெற்று கொள்ள, அதேபோல தன் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தைக் காண ஆவலுடன் தன் பயணத்தை ஆரம்பித்திருந்தாள் அந்த தீயாகிய மங்கை ‘அருந்ததீ.

**********சுபம்**********