தேன் பாண்டி தென்றல் _ 14

0_IMG-20210831-WA0182-dbf1bea3

 

 
14
 
பூதப்பாண்டியன தன்னிடம் ஏதோ பேச நினைப்பதைப் புரிந்தவர் “ என்ன தம்பி?” என்றார். 
 
 
“வந்து.. நீங்க என்னை தப்பா ஒன்னும் நினைக்கலியே?” என்றான்
 
“ச்சே!ச்சே! உங்களைப் போய் நான் தப்பா .. என்ன தம்பி இது?” என்றார் சங்கடமாக.
 
“இல்ல ..உங்களுக்கு எங்க அப்பா அம்மா பத்தி சொன்னதும் கொஞ்சம் முகம் சுளுங்குச்சு. அதான்”
 
“இதுல என்னப்பா?அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க நியாயம். அதுல நான் சொல்லவோ நினைக்கவோ என்ன இருக்கு?”
 
“சந்தோசம்மா. இவ்ளோ நேரம் என்கூட போன்ல பேசுனது யாருன்னு தெரியமாம்மா?”
 
“எனக்கு எப்டிப்பா தெரியும்?”
 
“சொல்றேன். அவங்க உங்களுக்கு ரொம்ப தெரிஞ்சவங்கதான்”
 
“அப்படியா? என்கிட்ட படிச்ச ஸ்டுடன்ட் யாருமா?”
 
“அப்படியும் சொல்லலாம்”
 
“சரி விடுங்கப்பா. அதை அப்புறம் பாக்கலாம். எனக்கு மாத்திரை போட்டது கண்ணை கட்டுது. இதுக்குதான் பஸ்ல வர்றது. நிம்மதியா தூங்கலாம்.” என்றவர் சீட்டை சாய்த்து படுத்துவிட்டார்
 
பூதப்பாண்டியனின் பிளான்கள் புஸ்வாணம் ஆனதில் அவன் நொந்து போனான்.
இந்த பேருந்து பயணம் முடிவதற்குள் அவரிடம் நல்ல பெயரை வாங்க வேண்டும் என்பது அவன் திட்டம். 
 
அதற்காகவே சென்னையில் இருந்து வெள்ளி அதிகாலையில் பயணப்பட்டு கோவையில் இருந்த தன் மேலதிகாரி வீட்டிற்குச் சென்றிருந்தான். அவரிடம் பரபரவென விசயங்களைப் பேசி முடித்துவிட்டு மல்லிகா டீச்சருக்காக காத்திருந்தான். 
 
அவனது மானேஜர் வீட்டில் இருந்து அவனைத் தேடி வந்த கல்யாண சம்பந்தம் அது. மானேஜர் தனது பெண்ணிற்கு இவனை கட்டி வைக்க ஆசைப்பட்டுக் கேட்டிருந்தார். (ப்ளீஸ் நோட் த பாயின்ட் யுவர் ஆனர். அடுத்த கதையின் ஒரு ஹீரோயின் இவங்க)
 
இவன் ‘முடியாது’ என்றதற்கு “ அதை நீயே வந்து உன் மேடம்கிட்ட சொல்லி விடு” என்று சொல்லி விட்டார்.
தொலைபேசி மூலம் சொல்ல நினைத்தான். அது மரியாதையாக இருக்காது என்ற நேரில் வந்திருந்தான்.
 
 
இவனது தாடியையும் மீசையையும் பார்த்து நக்கல் செய்பவள் அவர் பெண் சம்யுக்தா.
 
ஆனால் அவன் பேரை ஒருநாளும் கிண்டல் செய்ததில்லை. வீட்டிற்கு ஒரே பிள்ளை அல்லவா அவன்? அவளை ஒரு செல்ல பிடிவாத தங்கையாக பிடிக்கும் அவனுக்கு. 
 
தென்றல் சொன்னபடி டிராவல்ஸிலும் சொல்லி வைத்து மல்லிகா எந்த பேருந்தில் செல்கிறார் எனக் கண்டு கொண்டான். 
 
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைத்து தனது தலையில் கல்லைப் போட்டுக் கொண்டான்.
 
தனக்கு வந்த கல்யாண சம்பந்தத்தை முறித்துவிட்டு தனக்கான திருமண உறவை உறுதிப்படுத்திக் கொள்ள இந்த பயணத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்தான். அவன் நினைத்த காரியத்தில் ஒன்று உடனே நடந்தது. மற்றது அவனை  தவிக்க விட்டது.
 
மல்லிகா எப்போதும் ஒரே நிறுவனம் மூலம்தான் பேருந்து டிக்கெட்டுகளை புக் செய்வர் என்பதை தென்றல் மூலம் அறிந்து கொண்டவன்  அதன் பிரகாரம் அவர் போகும் பஸ்ஸில் அவருக்கு அடுத்த அல்லது பக்கத்து சீட்டை புக் செய்ததில் இப்படி வந்து நிற்கிறது அவன் பிழைப்பு.
 
பஸ்ஸில் இருந்து இறங்கியதும் அவரை ஒரு மதிப்பான ஓட்டலில் தங்க வைக்கவும் திட்டம் இருந்தது. மாமியார் மடங்கி விட்டால் இங்கே அவன் தங்கி இருக்கும் நடுத்தர அடுக்கு மாடி வீட்டிற்கே அழைத்துச் செல்ல இருந்தான். 
 
சரிதான். மாமியார் உறங்கி எழவும் மேலே பேசலாம் என நினைத்து அமைதியாகிவிட்டான்.
 
வேறு என்ன செய்ய முடியும் அவனால்?
 
பூதப்பாணடியன் அம்மாவிற்கு ஒரே பிள்ளை. அப்பா இப்போது உயிருடன் இல்லை.அம்மா இப்போது தனது அண்ணன் வீட்டில் மதுரையில் வசிக்கிறார்.
 
இவன் தனிக்காட்டு ராஜாவாக சுற்றுகிறான்.
 
எப்படி அத்தனை இலகுவாக தனது தாய்க்கும் தந்தைக்கும் காதல் திருணம் நடந்தது என்று யோசிக்கிறான். அதேப் போல தனக்கும் அமையும் என்று நம்புகிறான்.
 
தென்றல்! பெயரைப் போல இனிமையானவள். தென்றல்- பெயரைப் போல மனதுக்கு சுகம் தருபவள்.
 
 
 
யாரோ போல வருகிறாய்
யாரோ போல போகிறாய்
ஆனாலும் 
எனக்கு உன்னை உணர்த்திவிடும்
மனிதர்கள் நம்மை மறந்த பொழுதுகளில்
எனை நோக்கிய உனது விழியுயர்த்தல் 
 
அவளை நினைத்து அவன் விழித்திருக்கும் சமயங்களில் அவனது ஒரே ஆறுதல் கவிதைகள் மட்டுமே. 
 
அவளது செல்லுக்கு அனுப்பிய இந்த கவிதைக்கு அரிவாள் அனுப்பி இருந்தாள் அன்றொரு இனிய நாள்.
 
தென்றலுக்கு இரண்டு வருட பி.ஜி கோர்ஸ் அது. முதல் வருடம் தான் ‘அப்படி இப்படி’ என்று போராடி அவளை கவர்ந்திருந்தான்.
 
அதற்கே நெஞ்சு உலர்ந்துவிட்டது அவனுக்கு. 
 
பின்னே? 
 
விருப்பமாகவே அன்னையின் அத்தனை கட்டுப்பாடுகளுடன் இருப்பவள் இந்த பூதப்பாண்டியைப் பார்த்ததும் மயங்கி விடுவாளாமா?
 
அவள் மனதையும் வென்று சாதித்தவன் அவன். அதற்கு அவளின் குறும்புத்தனம்; பிள்ளையார்சுழி போட்டிருந்தது.
இருப்பினும்; அவளது அன்னை குறித்த பயங்கள்தான் இவனுக்கு சவாலாகத்தான இருக்கின்றன.
 
பெண்ணைப் பெற்றவர்கள் போற்றிப் பாதுகாக்கத்தான் செய்வார்கள். ஆனால் அவளிடம் இவன் மனம் சிக்கிக்கொண்டதே?
 
இந்தப் பயணத்தில் மல்லிகா டீச்சரை சரிகட்டி தனது பெயரில் நல்ல அபிப்ராயம் ஏற்படச் செய்து விட்டால்… ஏற்படச் செய்து விட்டால் என்ன? ஏற்படச் செய்து விட்டால்? 
 
நிஜமாகவே அவன் நல்லவன்தானே?
 
தென்றலைப் பார்த்துவிட்டு தனது வீட்டில் மாமியாரை  தங்க வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தான்.  இத்தனையும் சரியாக வந்து விட்டால் அடுத்து அடுத்து அவனது திருமணத் திட்டங்கள் அவனிடம் தயாராக இருந்தன. 
 
இங்கானால் மல்லிகா உறங்கப் போய்விட்டார்.
 
ஆனால் அவனால் எப்படித் தூங்க முடியும்?
 
இதோ போனில் எப்படியாவது அம்மாவிடம் நல்ல பேரை வாங்குமாறு படித்து படித்துச் சொல்லி இருக்கிறாளே அவனது தென்றல்?
 
அவளை முன்முதலில் பார்த்த நாளை நினைத்துப் பார்க்கிறான். நினைவு வரவே இல்லை. வங்கிக்கு எத்தனையோ மாணவ மாணவியர் வந்து கட்டணம் செலுத்துவார்கள். அவர்களுடன் இவளும் கூட்டத்தோடு கூட்டமாக அவன் கண்களில் சிலதடவைகள் பட்டிருக்கிறாள். அப்போது பெரிதாக கவனத்ததில்லை. அவன் வேலைக்கு ஏற்ற பொறுப்புடன் இருப்பான். 
 
அதன்பிறகு..அன்றொருநாள் காலையில் …
 
எஸ்எம்எஸ் அலார்ட் அவளது அம்மாவின் தொலைபேசி எண்ணுக்குதான் சென்று கொண்டு இருந்தது. அதை தனது எண்ணுக்கு மாற்ற விண்ணப்பத்துடன் வந்தாள். 
 
மாணவர்களுக்கு தனி கவுண்டர் இருக்கும். காலை மற்றும் மதியம் குறிப்பிட்ட சமயங்களில்  அங்கே வேலை நடைபெறும். 
 
தென்றலுக்குத் தேவையான சேவைக்கு அசிஸ்டன்ட் மானேஜர் ஒப்பமும் தேவைப்பட்டதால் இவனை கை காட்டினார்கள் வங்கி அலுவலர்கள். 
 
தனி கண்ணாடி அறையில் போனில் இந்தியில தொலைபேசியில் பேசிக் கொண்டு இருந்தவனைப் பார்த்தவள் இவன் வயதையும் பார்த்து விட்டு 
“எல்லா எடத்திலயும் இவங்கதான் இருக்காங்க” என முணுணுத்தாள். அது அட்சரசுத்தமாக இவன் காதுகளில் விழுந்தது.
 
“எவங்க இருக்காங்க? எங்க இருக்காங்க?” என்றான்!
 
இளம்கன்று பயமறியாது அல்லவா? 
 
“எல்லா இடத்திலயும் இந்திக்காரங்கதான் இருக்காங்கனு சொன்னேன்” என்றாள் வெட்டென.
 
“எங்கேயும் யாரும் இருக்கலாம். அதுக்கான தகுதியை அவங்க வளத்துக்கனும். முயற்சி செய்யனும்” என்றான் அழுத்தமாக.
 
இப்போதுதான் அவன் தமிழில் பேசியதையே கவனித்தாள். 
 
ஒரே ஆச்சரியமாகிவிட மற்றதை மறந்து “சார் நீங்க தமிழா? பேரு சார்?” என்றாள் முகம் மலர.
 
மல்லிகா டீச்சரிடம் சொன்னதுபோல இவளிடம் கூட அன்று சொல்லி இருந்திருப்பான். ஆனால் அவன் அங்கே தனது பதவியின் நிமித்தம் மற்ற கதைகள் பேசாமல் ‘என்ன விசயமாக வந்திருக்கிறாய்?’ என்பதாக விழிகளை உயர்த்தியவன் கைகள் தாமாக நீண்டு இவள் கையில் இருந்த படிவத்தை நோக்கி வந்தன. 
 
அவளுக்கும் கல்லூரிக்கு நேரமாவதால் தனது விணணப்பத்தை எடுத்துக்காட்ட அவன் எப்போதும் போல தனது கையெழுத்தை கூட்டெழுத்தில் எழுத அதை உற்று உற்றுப் பார்த்தபடி அவள் அந்த அறைக் கதவை தள்ளிக்கொண்டு வெளியேறியதை ஏனோ ஒருமுறை நிமிர்ந்து பார்த்தான் அவன்.
 
அதன் பின் சில நாட்கள் அவளைக் காணவில்லை. எத்தனையோ வாடிக்கையாளர்கள் . அவர்களில் அவளும் ஒருத்தி. அதுவும் மாணவி. அவளைப் பறறி அவனுக்கு என்ன? என்று தான் இருந்தான். ஆனால் அவளும் அப்படி இருக்க வேண்டும் அல்லவா?
 
வயதிற்கு உரிய குறும்புத்தனத்துடன் இவன் பெயரைக் கண்டுபிடிக்கும் ஆசையில் அவள் இருந்ததை அறிந்த பின்போ சிரிப்புதான் வந்தது அவனுக்கு. வங்கி ஊழியர்களிடம் இவன் பெயர் என்ன என்று கேட்டு சல்லடை போட்டிருப்பார்கள் போல அவளும் அவள் தோழிகளும். பலன் பூஜ்ஜியம் என்றபோது-  
 
மீண்டும் ஒருநாள் அதேப்போல வந்தவள் ஒரு கடிதத்தை எடுத்து நீட்ட அவன் தொண்டையில் எச்சில் விழுங்கினான்.
 
 “என்ன அது?” என்றான் அந்தக் கடிதத்தை கண்களால் சுட்டிக் காட்டி.
அவனது சந்தேகம் புரியாமல் திருதிருத்தவள் “எஸ்எம்எஸ் அலார்ட் நம்பர் சேஞ்ச்” என்றாள்.
 
அவளது முந்தைய சேவைக்கு கொடுத்திருந்த எண்ணை இந்த எண்ணுக்கு மாற்றச் சொல்லி இருந்தாள் அந்தக் கடிதத்தில்.
 
அவனுக்குக் கோபம் வந்துவிட்டது.
 
“சும்மா சும்மா நம்பர் மாத்திட்டே இருந்தா நாங்களும் எங்க சர்வீசை கண்டினியூ செய்ய சார்ஜ் செய்ய வேண்டி இருக்கும்” என்று மிரட்டிப் பார்த்தான்.
 
“இட்ஸ் ஓகே. சார். “ என்ற பல்லைக் காட்டி கையெழுத்துக் கேட்கவும் யோசனையாகப் பார்த்தான் அவளை. 
 
இருந்தாலும் கையெழுத்தைப் போட்டு அனுப்பி வைத்தவன் அவள் என்ன செய்கிறாள் என மற்ற பணியாளர்களை கண்காணிப்பது போன்ற போர்வையில்  பார்த்தான். 
எதையோ சாதித்த துள்ளாட்டத்தில் அவள் திரும்பியதில் தலையில் இருந்து உதிர்ந்த செண்பகப் பூவிதழை ஆசையாகப் பார்த்தான். அது அவனுக்கும் மிகவும் பிடித்த மலர்.
 
தென்றல் தங்கி இருந்த பெண்கள் விடுதியில் பூ கிடைக்காது. ஆனால் அங்கிருந்த செண்பகப்பூ மரத்தில் காலையில் முதல் ஆளாக எழுந்து பூக்களைப் பறித்து அறைத் தோழிகளுக்கும் கொடுத்து தானும் வைத்துக் கொள்வாள் இவள். 
 
வங்கியில் அன்று பூதப்பாண்டியன் நோட்டம் விட்டதில் தென்றல்  அந்த படிவத்தை ரசீதுகள் பூர்த்தி செய்ய அங்கே போடப்பட்டிருந்த சிறிய மேஜையில் வைத்து தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தாள்.
 
‘என்னவாம் அவளுக்கு?’ என ஆச்சரியப்பட்டவன் அவள் அதைக் கொடுக்க இருக்கும் பணியாளரிக்கு வேறு வேலை கொடுத்து அனுப்பிவிட்டு அந்த இடத்தில் போய் உட்கார்ந்தான்.
 
அவனது அதிகாரங்களை இப்படி அவன் பயன்படுத்தியதில்லை. அவள் விசயத்தில்  அது தப்பு என்று ஏனோ தோன்றவில்லை. அதற்கு துறுதுறுவென அலையும் அவள் கண்கள் காரணம் என்பதை ஓரளவு  அவன் அறிந்திருந்தான்.
 
‘வெட்டு வெட்டுனு எப்படி முழிக்கிறா?’ என மனதினுள் ஆனந்தமாகக் குறைபட்டுக் கொண்டான். 
 
தென்றல் தனது முறை வந்தபோது சற்று தயங்கியே அவன் எதிரில் அமர்ந்தாள். ‘போய் விடுவான் என்று பார்த்தால் இங்கேயே உட்கார்ந்துவிட்டானே?’ என அவன் இவனைக் கரித்துக் கொட்டியது கண்ணாடியாக அவள் முகத்தில் தெரிந்தது.
 
“கிவ் தட் பேப்பர்” என்றவாறு வலதுகையை நீட்ட 
 
“இல்லை.. வந்து..” என அவள் தடுமாறினாள்.
 
“ப்ரசீட் செய்யனுமா? வேணாமா?” என முறைத்தான் கணிணியைப் பார்தவாறே.
 
அவள் முழிக்க அவன் பேசாமல் அவள் கையில் இருந்த காகிதத்தை வாங்கி வைத்தவன் “ ஆட்டோமேட்டிக்கா சேஞ்ச் ஆகிடும். இதே வேலையா இருக்காதே” என்று சொல்லவிட்டு அந்த செக்சன்  வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
 
அதற்குள் அங்கிருந்த சென்ற பணியாளர் கொடுக்கப்பட்ட வேலையை முடித்துவிட்டு வந்துவிட்டார். இவனும் எழுந்;து கொண்டான்.
 
அங்கே அனாவசிய பேச்சுகள் என்றும் இருக்காது. 
 
அவன் தனது அறைக்குப் போய் சிறிது நேரத்திற்குள் அலுவலக தொலைபேசி அடித்தது.
 
எடுத்து காதில் வைத்தவன் காலர் ஐடியில் எண்களைப் பார்த்துக் கொண்டான். 
இவன் எடுத்ததும் “குட்மார்னிங் சார். நான் உங்க கஸ்டமர். பேரு தென்றல். அசிஸ்டன்ட் மானேஜர்கிட்டப் பேசனும்” என்றாள் எதிர்முனையில் அந்த குறும்புக்காரி.
 
“அசிஸ்டன்ட் மானேஜர் தான் பேசறேன். சொல்லுங்க” என்றான்.
 
அவள் பெயர் அவளது தொலைபேசி எண்கள் அவனுக்கு மனப்பாடம் ஆகி இருந்தது. என்ன நினைக்கிறோம் என்று அவனுக்குத் தெரியவில்லை. இது தவறு என்றும் கொஞ்சம் புரிந்தது. ஆனால் புத்தி கேட்கவில்லை. அவனாகப் போய் எதுவும் பேசப்போவதில்லை. அவளைப் பற்றி தெரிந்து வைத்துக் கொள்வது ஒரு குற்றமா? என்று மனதிற்கு சப்பைக்கட்டு கட்டினான்.
 
“சார் உங்க பேர் என்ன?’ என்றாள் அவள்.