நாகப்பட்டின மாவட்டத்தில் காலை பொழுதில், பொன்சேய் கிராமத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பால், வானை தொடுமளவு பரந்து விரிந்து அசைந்தாடும் வேப்பமரத்தின் நிழலில் ஆட்சி புரியும் ஓம்கார தேவி அம்மன் ஆலயத்தில் தெய்வீக மணி ஒலிக்கிறது.
மரத்தில் இயற்கையாகவே கீழ்பகுதியில் இருந்து எட்டு அடி நீளமும் ஆறடி அகலமும் கொண்ட முக்கோண வடிவிலான விரிசல்.
நடுவே சிம்மவாகனத்தில் அமர்ந்த சிம்மவாகிணியின் தரிசனம். காணக்கிடைத்தால் கோடி புண்ணியம்.
கோவில் உள்ளே செல்ல நேரமில்லாமல் ஓம்கார தேவியை மனதில் அமர்த்தி விட்டு ஐவிரல்கள் பதிய நெஞ்சை அழுத்தி, அதே விரல்களை இதழில் ஒற்றிக்கொண்டாள். ‘இனி எல்லாவற்றிற்கும் நீயே பொறுப்பு’ என மனமுருகினாள் அவள்.
கோவிலுக்கு அப்பால் வாகன நெரிசல் அதிகரிக்க செல்ல, கோவிலில் இருக்கும் பக்தர்களின் கைகள் அம்பாளை பார்த்து கூப்பி இருந்தாலும் பல கண்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தன. ஏன் கோவிலின் பூசாரி கூட அவளைத்தான் பார்த்தார். ‘இந்த பொண்ணு ஏன் இப்படி ஓடுது?’ என வாயை பிளந்து.
மேலும் பார்ப்பவர்களுக்கு வியப்பைத்தான் ஊட்டியது!
அவள் ஒன்றும் தனியாக ஓடவில்லை. ஒருவனின் கையை பிடித்துக்கொண்டல்லவா ஓடுகிறாள்!
ஓ… அதனால்தான் அம்பாளை ஒற்றை கையால் வணங்கினாளா!
ஒரு ஆண்மகனை பெண் இழுத்துக்கொண்டு ஓடுவதா!
கலிகாலமடா இது!
அவனோ, அந்தோபாவம்!
வாங்கிங் செல்லும் பெண்கள் கூடவே நாய்க்குட்டியை தன் பின்னே அழைத்து வருவது போல, அவளும் அவனை இழுத்துக்கொண்டு ஓடுகிறாள்.
அவனும் நாய்க்குட்டி போல குடுகுடுவென ஓட முயற்சி செய்தான், ஆனால் அவன் முயற்சி தோல்வியே!
அவனை இழுத்துக்கொண்டு ஓடுபவளோ, மாட்டைக் கட்டி இழுத்துக்கொண்டு வருவதாய் உணர்வு.
‘இவன இழுத்துக்கிட்டு ஓடுறதுக்கு, மாட இழுத்துட்டு ஓடிவந்துருக்கலாம். அதாவது ஸ்பீடா வந்துருக்கும்.’ ஓடுவதால் தலையில் அடித்துகொள்ள முடியவில்லை. பரிதாபமே!
பையன் பொண்ண இழுத்துட்டு போற காலம் போய், பொண்ணே பையனை இழுத்துட்டு போகும் காலமென, நடைபயணிகள் ஏதோ காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடி வருவது போல் கிசுகிசுப்பாக பார்த்தனர்.
“என்னால முடியலடீ. ப்ளீஸ்டீ” ஓடமுடியமால் அவளிடம் இறைஞ்ச,
“அப்போ நீ கெட!” என்றவள், அவன் கையை தளர்த்தி முன்னே ஓடினாள்.
‘ஒரு பேச்சுக்கு சொன்னா, அப்படியே விட்டுட்டு ஓடுறாளே!’ சற்று அவனுடைய வேகத்தை அதிகரித்து செல்ல முயன்றான்.
“வெண்பா நீ வேணுனே பண்ற!” என்றவன் அப்பாவியாய் கூச்சலிட, அவள் செவிகளுக்குள் செல்லவில்லை.
சில செயல்களை வேணுமென்று செய்வதே கதைநாயகியின் தனித்துவம், அதுவே சிறப்பும்கூட!
கட்டுப்பாடற்ற டிராபிக்ஜாமில் ஓரளவு சனநெரிசல் கொண்ட பஸ் பொடிநடையென நகர்ந்து செல்ல, பஸ்ஸை பிடிக்க குறுக்கும் நெடுக்குமிருக்கும் வாகன வளைவில் அவளும் வளைந்தோட பஸ் சற்று நகர ஆரம்பித்தது.
அதனை கவனித்தவள் வேகத்தை கூட்டி ஓடிச்சென்று பஸ்ஸின் கைபிடியைப் பிடித்து ஒரு வழியாக ஏறி நின்றாள். “ஏன்மா நீயெல்லாம் பொண்ணா, ஓடுற பஸ்ல ஏர்ற, படிச்ச பொண்ணுதானே?” என கண்டக்டர் கடிந்துகொண்டார்.
அதனையெல்லாம் பொருட்படுத்தாதவள், “ஏய் குண்டா!” என நான்கு விரலை விரித்து மடக்கி அழைக்கவும், அதை பார்த்த கண்டக்டர் தலையில் அடித்துக்கொண்டார்.
வழக்கமாக ஆண்கள்தான் ஓடும் பஸ்ஸில் ஏறி பெண்களுக்கு கை கொடுக்க வேண்டும். இங்கு நடப்பதென்னவோ தலைகீழ்!
“சீக்கிரம் ஓடி வா குண்டா, கமோன் குண்டா!” குறும்புத்தனம் நிறைந்த வெண்பா அவனை அழைத்தாள்.
அவன் வெண்பாவிடம் மாட்டிக்கொண்டு தவிப்பதை உணர்ந்து கண்டக்டர் விசிலடித்து பஸ்ஸை நிறுத்தினார்.
கண்டக்டர், அவன் ஆமை வேகத்தை பார்த்து, “சீக்கிரம் வாப்பா. பஸ் ஸ்டாப் இல்லாத இடத்துல ரொம்ப நேரம் நிக்காது.”
அவருடைய பணிவன்பில் கட்டுண்டவன், வேகமாக வந்து “கையக் குடுடீ.” என்றான்,
அவள் வெண்பற்களை காட்டியவாறு, மூச்ச வாங்க வாங்க ஓடி வந்தவனுக்கு கையை நீட்டினாள்.
அவள் கையைப் பற்றி இழுத்த வேகத்தில், அவள் மேல் குண்டன் விழுந்தே இருப்பான். அத்தனை பலமிருந்தது அவளது செயலில்!
“நீ இழுத்த வேகத்துக்கு, உன் மூஞ்சில முட்டியிருப்பேன் லூசு. ஏதோ நான் சுதாரிச்சிட்டேன். நீ தப்பிச்ச!” என்றவன், ஏதோ சாதனை செய்த ரேஞ்சில் கூற,
“மூஞ்சில முட்டுனா பரவாயில்ல குண்டா. என் வாயில முட்டாம இருந்தியே!” அதுவேபோதும் என்றவாறு உதடுக்கு மேல் பூத்திருந்த வியர்வை துளிகளை கைக்குட்டையால் ஒற்றியெடுத்தாள்.
அவளது உதட்டை பராமரிப்பத்தில் அதிக கவனம். பெண்களுக்கு தங்கள் அழகை மெருகூட்டுவதை விட வேறென்ன வேலை!
மூச்சை இறைத்தவாறே அவன், “ஹா… சரியா பாத்தா அதிகாம பேசுற இந்த வாயத்தான் முட்டிருக்கணும்.”
“அதெல்லாம் தப்பு குண்டா, எவ்ளோ கஷ்டப்பட்டு என் லிப்ஸ பிங்காக்கி வச்சிருக்கேன்.” என்று கூறியது அவளது செர்ரிபழ லிப்ஸ்.
“சரி சரி, மூச்சு வாங்குதுல, தண்ணி குடிக்கிறீயா குண்டா?” மூச்சு வாங்குவதை பார்த்து பரிதாபமாக வெண்பா கேட்க,
“மூச்சு வாங்கும்போது யாரவது தண்ணீ குடிப்பாங்களா?” அவன் கடிந்துகொள்ள,
கண்களை இமைத்த வெண்பா, ‘சித்தவைத்தியம் படிக்கிறவன்கிட்ட போய் மூச்சு வாங்கும்போது தண்ணி குடிக்கிறியான்னு கேட்டுட்டேன்னே! என்னைய சொல்லணும்.’ என சலித்துக்கொண்டாள்.
இருவரின் கூத்தை பார்த்த கடுப்பான கண்டக்டர், “பஸ்ஸுக்கு டிக்கட்ட வாங்கிட்டு நீங்க ரெண்டுபேரும் அப்பறமா சண்ட போடுறீங்களா?”
‘நீதானே பஸ்ல போகணும்னு ஆசப்பட்ட நீயே டிக்கெட் எடு.’ வெண்பாவிற்கு அவன் கண்ணால் ஜாடை காட்டா,
விழிகள் பிதுங்க, பற்களால் நாக்கை கடித்து, “ஜமட்ரி பாக்ஸ் கார்ல டா குண்டா, அதுலதான் காசு இருக்கு.”
வெண்பாவை பார்த்து அவன் முறைக்க, வெண்பா, அவனின் சட்டை பாக்கெட்டில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொடுத்தாள்.
“காலைலயே உசுர வாங்குறத்துக்கே வந்துருதுங்க.” தலையில் அடித்துவிட்டு, சிறு அறிவுரையாய், “இந்தமாதிரி ஓடுற ட்ரைன்ல ஏற முயற்சி பண்ணாதம்மா!” அதன் பின் அவரது பணியை தொடர்ந்தார்.
அவன், “காலேஜ் வந்ததும் காச திருப்பி தந்துரு.”
“இருவது ரூவாக்கு ஏன் டா உசுர விட்டுற?”
கைவிரல்களால் நாடியை அளந்தவன், “என் தேவைக்காக நான் பஸ்ல வரலயே!”
“காலேஜ் வந்ததும் வட்டியோட திருப்பி தந்துறேன் குண்டா!”
“உனக்கு வர வர லேடி உசைன் போல்டுனு நெனப்பு கூடிப்போச்சு. அதான் இந்த மாதிரி பண்ற” அவனது கண்டன பார்வையில் தணல் எறிந்தது.
“உசைன் போல்ட் அளவுக்கு நெனப்பில்ல. ஆனா, திருச்சி தனலட்சுமிக்கா டார்கேட் உடைக்கணும். அதுதான் என்னோட ஹேம்” என தீவிரமாய் உறுதி பூண்டாள். நூறு மீட்டர் அல்லது இருநூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய அளவிலாவது சாதனை படைக்க வேண்டுமென்பது அவளது ஊன்றுகோல்.
“நீ டார்கேட்ட உடைப்ப, உங்க அப்பன் உன் மண்டைய உடைக்க போறார்” அவன் கூறிய கணமே வெண்பாவின் முகம் துயர்பாடியது. அதனை உணர்ந்தவன் உடனே பேச்சைத் திருப்பினான்.
“நல்ல போய்கிட்டு இருந்த கார நிப்பாட்டி திடீர்னு ஓடுற பஸ்ல ஏர்ற? என்னால சுத்தமா ஓட முடியலடீ.” சீறாக காலேஜுக்கு சென்ற காரை நிறுத்தி ஓடும் பஸ்ஸில் ஏறிகொண்டாள். அவனோ ஓட முடியாமல் ஓடி வந்தான்.
ஒற்றை கண்ணை சிறுதாக்கி, “கொஞ்சம் கிட்டவாயேன்” அவனை அருகில் அழைக்க,
“என்ன?”
“தூஉஉஉ” என்றாள்.
அவனும் தெறிக்காத எச்சிலை துடைத்தபடி, சர்ட்டு காலரை சரிப்படுத்தினான்.
“பொண்ணு நானே ஓடும்போது உனக்கென்ன டா”
“நீ காம்படிஷன் ப்ராக்டிஸ்காக ஓடுற, நான் எதுக்குடீ சும்மா ஓடணும். ஆடி கார்ல அழகா வருவீயா, அதை விட்டுட்டு பஸ்ல ஏன்டீ வர்ற?”
“இதெல்லாம் ஒரு கிக்குதான் குண்டா, கார் இருக்கவங்க பஸ்ல வரக்கூடாதுன்னு சட்டமா போட்டுருக்காங்களா?”
“ஐய்யோ! என்னமா பேசுற, இதெல்லாம் உங்க அப்பாகிட்ட பேசுவேன். உங்க அப்பா என்னையதானே திட்டுவாரு.” அந்த கேள்விக்கு அவளிடம் பதிலில்லை.
அதன்பிறகு இருவரும் எதுவும் பேசாமல் வடக்கே உனக்கு, தெற்கே எனக்கென்று திரும்பிக்கொண்டனர்.
கிடைத்த இடத்தில் அவன் அமர்ந்துகொண்டான். இடமிருந்தும் அமராதிருந்தாள் வெண்பா.
கல்லூரி வளாகத்திற்கு ஐந்நூறு மீட்டர் முன்னிலையில் ஓடும் பஸ்ஸில் இறங்குவதற்கு படியில் நிற்க, “ஏய் வெண்பா ஓடுற பஸ்ல இறங்க போறீயா?”
“இல்ல டா, எனக்கு எதும் ஆகாது. எதுனாலும் உன் உசுரதான் பணய வப்பேன்!”
அவனுக்கு பகீரென்றது, ”அடிப்பாவி!” வெண்பாவின் தலையில் குட்டு வைக்க தோன்றியது. பஸ் என்பதால் தப்பித்தாள்.
கல்லூரிக்கு அருகில் பஸ்ஸை நிறுத்த, அவன் கீழே இறங்கிவிட்டு, “கீழ எறங்கு வெண்பா”
“பஸ் கெளம்ப ஆரம்பிச்சதும் உடனே எறங்கிறேன் குண்டா.”
“இன்னைக்கு எனக்கு ப்ராக்டிகல் டீ. நான் சீக்கிரம் கிளாஸுக்கு போகணும்” வேற வழியில்லாமல் இறங்கிக்கொண்டாள்.
“நீ பண்ற ஒவ்வொரு வேலைக்கும் நான்தான் திட்டு வாங்குறேன். உன்னைய துணைக்கு அனுப்பி வச்சா, நீயும் சேர்ந்து ஆடுறியான்னு என்னையதான் கேப்பாரு உங்கப்பா”
“எனக்காக இதைகூட பண்ணமாட்டீயா குண்டா!” பரிதாபமாக கேட்க,
“இதை சொல்லியே என் வாய அடச்சிரு”
“கார் வந்துருச்சு டா, இரு உன் காச எடுத்துத்தாரேன்.” ஐம்பது ரூபாய் நோட்டை நீட்ட,
“எங்கிட்ட சேஞ்ச் இல்லையே”
“இருக்கட்டும் குண்டா, நாளைக்கும் பஸ்ல வரலாம்!” நளன் அதிர்ச்சியோடு வெண்பா நோக்கினான்.
“என்ன அப்படி பார்க்குற, பெல் அடிக்க முதல் நீ உன் கிளாஸுக்கு போ, நான் என் கிளாஸுக்குப் போறேன்.” அவளை ஒரு முறை முறைத்துவிட்டு நகர்ந்தான்.
வெண்பாவின் கிளாஸில் மகி, “ஏய் எங்கடீ உன் பார்டிகார்ட் பூமிநாதன்?” காவலன் படத்தில் விஜயின் பெயர் வைத்து ண்டல் செய்ய,
“என்ன மகி கிண்டல் பண்றியா? அவன் அவனோட கிளாஸுக்கு போயிட்டான்.” உதட்டை சுழித்துக்கொண்டாள் .
“நீ வேண்ணா பாரு காலம்பூரா நளமாகாராசன்தான் உன் பின்னாடி அலைய போறாரு” என நிகிதாவும் வேண்டுமென்று வம்பிழுத்தாள்.
ஆம் அவனுடைய பெயர் நளன்.
“ஆமா டீ நான் கல்யாணமாகி போனாகூட நளன்தான் எனக்கு பார்டிகார்டா வருவான். அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை” கடிந்துகொண்டாள்.
“ஓ.. அப்படியா, ஒரு வேள நளன் அண்ணாவையே நீ கல்யாணம் பண்ணிட்டா?” மகி வினவும் கேள்விக்கு வெண்பாவின் வாயிலிருந்து வார்த்தையே வரவில்லை.
“என்ன டீ, இதுக்கு பதில் இல்லையா?” மகி, வெண்பாவை உசுப்பி விட,
“எங்கப்பாவ பத்திதான் உனக்கு தெரியுமே! ஜாதி பாப்பாரு, இதுல எங்க நான் நளன கல்யாணம் பண்றது.”
“அதுமட்டுமில்லடீ, நளன் அண்ணா உன்னைய கல்யாணம் பண்ணி கஷ்டப்படணும்ன்னு தலையேழுத்தா என்னா?” நிகிதா விடாமல் வம்பிழுத்தாள்.
நிகிதாவை அடிப்பதற்கு எத்தனிக்க, “அப்படியே ஒண்ணு உட்டேன்னா தெரியும் நிகி! கல்யாணத்த பத்தி நான் இதுவரைக்கு யோசிக்கலடீ. வீட்ல பேசுனா பார்க்கலாம்.”
தோழர்கள் கூடி வெண்பாவையும் நளனையும் சேர்த்து வைத்து பேசுவதில் சிறந்தவர்கள், கோர்க்கும் வார்த்தைகளை நளன் செவிக்குள் புகுத்தமாட்டான். வெண்பா அவ்வப்போது மூளையைப் போட்டு குழப்பிக்கொள்வாள்.
காலேஜ் நேரம் முடிவடைந்து. நளன், வெண்பாவுக்காக காத்திருக்க, “என்னடா உன் வாலு இன்னும் வரலையா?”
“நீ வேற சரத், அந்த பிசாசத்தான் பார்த்துட்டு இருக்கேன்.”
“சரி டா, என் ஆளு வெய்டிங்க நான் கெளம்புறேன்.”
“சரி மாச்சான்.” சரத்துக்கு கையை காண்பித்துவிட்டு வெண்பா படிக்கும் செக்ஷனுக்கு சென்றான்.
அங்கு கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பெண்கள் குழுமியிருக்க, ‘பிசாசு கண்டிப்பா இந்த கூட்டத்துக்குள்ளதான் இருக்கும்.’ என உறுதியோடு கூட்டத்திற்குள் பெண்களின் உடல் தீண்டாதவாறு நுழைந்தான்.
உச்சகட்ட கோபத்தில் வெண்பா,
“ஏய், வெண்பா!” அவளருகில் சென்றவன், “என்னாச்சு, யாரிது, சர்ட் காலர புடிச்சிட்டு இருக்க? கைய எடு.” நளனுக்கு படபடப்பாக இருந்தது ஆனால், வெண்பா இப்படி செய்வதெல்லாம் புதிதல்ல.
“நான் செவனேன்னு நடந்து வந்தே, ஏன் இவ்ளோ அழகா இருக்கேன்னு கேட்டான், உனக்கென்னடா பிரச்சனைனு கேட்டேன். அதுக்கு, தப்பா பேசுறான், இந்த விக்னேஷ்.” என தலை குனிந்தவாறு சலனத்தோடு கூறினாள்.
அவளுக்கென்ன பேரழகிதான்! பார்ப்பவர்கள் கண்ணை பறிக்கும் பால் வர்ணம். வில் வளைந்த புருவங்கள் அடர்த்தியான இமைகளுக்குள் நேர்த்தியான கருவிழிகள், கிளி போல மூக்கு, செர்ரி பழ தோலை சீவி ஒட்டிய இதழ்கள், சற்று பூசினாற் போல இருக்கும் கன்னங்கள், எடுப்பான கூர்ந்த நாசி.
முன்னாடி ஃப்ரெஞ் பின்னி, படர்ந்திருந்த இடைதாண்டா கூந்தலை ஒரு க்ளிப்பில் அடக்கி, லேடஸ்ட் லாங் கூர்த்தி, கூர்த்தியின் டாபின் மேல் கோர்ட் அணிந்த கிராமத்தின் ட்ரெடிஸ்னல் குயின் என்றே கூறலாம்.
விக்னேஷ் ஆரம்பத்திலிருந்து வெண்பாவை சைட் அடித்துக்கொண்டு இருப்பவன்தான்.
நளன் கோபத்தில், “வெண்பாவ பார்த்து என்னடா சொன்ன?” வெண்பா குனிக்குறுகியதில் ஆத்திரமாகிய நளன் விக்னேஷின் சட்டை காலரை பற்றினான்.
அதற்கு அவனோ ஒரு பெண்ணை கேலி செய்துவிட்டோமென கெத்தான உணர்வுடன் சோக்காக நின்றுக்கொண்டிருந்தான்.
“கண்ணு நல்லாருக்கு, மூக்கு நல்லாருக்கு சொன்னது மட்டுமில்லாம, கழுத்து…” அதற்கு மேல் வெண்பாவால் ஒருவார்த்தையேனும் கூறமுடியவில்லை.
ஒரு ஆண்மகனிடம் எப்படி கூறுவதென்று கலங்கிய கண்களுடன் உதட்டை கடித்து தலை குனிந்து நின்ற வெண்பாவை பார்த்த நளனுக்கு புரிந்தது, அந்த கேடுகெட்டவன் எந்த வார்த்தையை கூறியிருப்பானென்று.
“அப்படி சொன்னீயா?”
“டேய், உன்தான் டா கேக்குறேன்.” நளன் அதட்டலில் சற்றும் அசரவில்லை.
“ஆமா ஜீ, ப்ராங்கா சொன்னேன். கழுத்துக்கு கீழ பாடி சூப்பரா இருக்கு. சும்மா ப்ராங்க் பண்ணேன் ஜீ.”
“ஏது? சரியா கேக்கல திருப்பி சொல்லு”
“என்ன ஜீ, கழுத்துக்கு கீழ…” என்று கூறிமுடிக்கும் முன்னதாக,
“நாங்கூட நல்லாவே பிராங்க் பண்ணுவேன்.” என கூறிய நளன் ஆக்ரோஷமாக கைமுஷ்டியை முறுக்கி ஓங்கி குத்தினான் விக்னேஷின் மூக்கில். அவன் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.
வெண்பாவும் ஏனைய பெண்களும் மலைத்துப்போய் பார்த்தனர். அவன் மூக்கிலிருந்து இரத்தம் ஒழுகியது.
“என்ன ஜீ, பேசும்போது மேல கை வக்கிறீங்க, இதெல்லாம் சரில்ல ஜீ.” மூக்கில் இருந்து வழியும் இரத்தத்தை துடைத்தவாறு கலங்கிய குரலில் பேசினான்.
“இதுவே உங்கம்மா, அக்கா, தங்கச்சியா இருந்தா இப்படி பார்ப்பியா டா நாயே!” நளன் கண்களில் உக்கிரம். அவன் எதுவும் பேசவில்லை.
“நீயெல்லாம் எதுக்கு டா காலேஜ் வர, உனக்கு இதெல்லாம் பத்தாது. பிரின்சிபல்கிட்ட போய் உனக்கு டிசி வாங்கலாம்.” அவனுடைய சட்டை காலரை பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு செல்ல,
“அண்ணா, அண்ணா வேணா ணா ப்ளீஸ் ணா” என்றவன் இறைஞ்ச,
“இவ்ளோ நேரம் ஜீ, இப்போ உனக்கு அண்ணாவா? நடடா பிரின்சில் ரூமுக்கு”
வெண்பா, நளனின் தைரியத்தை பார்த்து, “இன்னும் நாலு போடு குண்டா!” மேலும் நளனை உற்சாகப்படுத்தினாள்.
அருகில் இருந்த மகியும் நிகிதாவும், வெண்பாவிடம் மெல்லிய குரலில் கிசுகிசுப்பாக, “உனக்கு ஒண்ணுனா நளன் அண்ணா இரத்தம் கொதிக்குது. பார்த்தியா, அவர்தான்டீ உனக்கு பேர்பெக்ட் மெச்!”
இங்கு நடப்பதை விட்டு விட்டு மகி மற்றும் நிகிதாவின் சிலாகிப்பு வெண்பாவை முறைக்க வைத்தது.
“ப்ராளம் இல்ல டீ, நாங்க பார்த்துப்போம். நீங்க கெளம்புங்க.” இருவரும் பேசாமல் சென்றால் கோடிபுண்ணியம் என வெண்பாவின் பேச்சு உணர்த்தியது.
அதற்கு மேல் இருவரும் கப்சிப் என்று கிளம்பினர்.
கல்லூரி அதிபரிடம் நடந்தவற்றை கூற, “நாளைக்கு நீ காலேஜ்க்கு அம்மா அப்பாவ கூட்டிட்டுதான் வார உன் சீட்ட கிழிச்சு அனுப்புறேன்.”
“சார், சார் வேணா சார். இனிமே இந்த மாதிரி பண்ணமாட்டேன். ப்ளீஸ் சார்.”
“உன்ன மாதிரி ஒருத்தன் இருந்தாலேபோதும் காலேஜுக்கு கெட்ட பேர்தான்!” அதிபர் நளனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.
“கால்ல வேணா விழுகுறே சார், அம்மா, அப்பா கடன் வாங்கிதான் காலேஜூக்கு சேர்த்துருக்காங்க சார் இந்த ஒரு வாட்டி மன்னிச்சிருங்க சார்.” அவனது குடும்ப நிலையை விளக்க முற்பட்டான்.
“அக்கா, அக்கா நீங்களாவது சொல்லுங்க கா?” அக்காயென்று அழைக்கும்போது வெண்பாவிற்கு சிரிப்புத்தான் வந்தது.
“நீதான் அடிச்சுட்டியே! டிசி குடுக்க வேணாமே!” என அவனது குடும்ப வறுமையை எண்ணி வெண்பா பரிந்துரைக்க,
“நீ மூடிட்டு இருக்கியா?” என அதிபரின் முன்னிலையில் மெதுவாக கூறினான் நளன்.
“பாவம்ல, அவனுக்காக வேணாம். அவன் அம்மா, அப்பாகாக இந்த ஒரு வாட்டி விட்டுரலாம்.” என வெண்பா கூறும்போது, நளனின் தாய், தந்தை கடன் பட்டு படிக்க வைப்பதால், நளனின் மனம் சற்று இளகளானது.
முதலில் நளன் கூறும்போது அதிபர் மறுத்தாலும், பின்பு பெண்களை கேலி செய்வதொன்று கெத்தில்லையென்று அவனுக்கு அறிவுரை வழங்கினார் அதிபர்.
“மறுபடி எந்த பொண்ணையாவது தப்பா பார்த்த… புடுங்கிருவேன்!” என நளன் எச்சரிக்கை விடுக்க, தலை குனிந்து நின்றான்.
பிரச்சனை முடிய, வண்டியை நோக்கி நடந்துவரும் வழியில் சரத் அவனுடைய காதலியுடன் பஸ்ஸுக்கு காத்திருந்தான். “என்ன நளன், உன் பிசாசு வரத்துக்கு இவ்ளோ நேரமா?”
சரத்துடைய கூச்சல் வெண்பாவின் செவிகளை சென்றடைய, வெண்பாவின் விழிகள் தீப்பந்தம்.
“சரத் உன்ன சொல்லல வெண்பா நீ அப்படி பார்க்காத.” நளன் பல்லை காட்ட,
‘காருக்குள்ள ஏறு, குமுறு குமுறுன்னு குமுறுறேன்.’
“சரி குண்டா, நான் நம்பிட்டேன். வண்டிக்குள்ள ஏறு” போலி சிரிப்போடு காரில் ஏறினாள்.
நளனும் நம்பி காருக்குள் ஏறினான். வழக்கம் போல நளன் முன் சீட்டில் அமர்ந்துகொள்ள, வெண்பா பின்னமர்ந்தாள்.
அடுத்தநொடி நளனின் தலைமுடியைப் பற்றிய வெண்பா, “ஏன் குண்டா, நான் உனக்கு பிசாசா?”
அவள் பிடியை புரிந்துகொண்டவன், “உனக்கு நான் அண்டா குண்டாவா இருக்கும்போது, நீ எனக்கு பிசாசா இருந்துட்டு போயேன்.” பதிலை கேட்டு மேலும் அவனுடைய தலை முடியை பிடித்து ஆட்ட ஆரம்பித்தாள்.
கார் ஓட்டுனர் இவர்கள் செய்யும் அட்காசத்தை எப்பொழுதும் கண்டு கொள்வதில்லை.
“விடு வெண்பா, வலிக்குது ப்ளீஸ் விடுடீ.”
பிடியை சற்று தளர்த்தி, “இதுக்கு அப்பறம் பிசாசுன்னு சொல்லுவ?”
“இனி பிசாசு சொல்லமாட்டேன். தேவதைன்னு சொல்றேன். கைய எடு.”
“ஐய், நான் தேவதையா, சரி கைய எடுத்துறேன்.” நளனின் அற்ப வார்த்தைக்கு மயங்கித்தான் போனாள்.
சிறிது நேரம் செல்ல, நளனிடம் அதை கேட்க வேண்டும். அதை கேட்டால், நளன் எப்படி எடுத்துக் கொள்வானென சற்று அச்சமாய் இருந்தது. இருந்தாலும் அதை கேட்டிட முடிவு செய்தாள்.
“குண்டா… எனக்கொரு டவுட்?”
“சொல்லு?”
“காதுலதான் சொல்லுவேன்.” பிடிவாதமாய் காதில்தான் கூறினாள்.
“அவன பார்த்து, புடுங்கிருவேனு சொன்னீயே! எதை புடுங்கிருவேன்னு சொன்ன?”
“பொண்ணுங்கள தப்பா பாக்குற கண்ண!”
“ஓ… அப்படியா?”
“நீ எதை நெனைச்ச?” என அவனது குதர்க்கமான கேள்வியில் மலங்க மலங்க விழித்தாள் வெண்பா.
“நான் ஒண்ணும் நெனைக்கலயே குண்டா!”
“நீ எதையுமே நெனைக்கலனு நானும் நம்பிட்டேன்.” என கூறியதோடு முன்னே திரும்பிக்கொண்டான்.
கண்ணிமைகளை டிங்கு டிங்கென அடித்து, ‘ஏன் வெண்பா உன் மூளை மட்டும் இப்படியெல்லாம் யோசிக்குது. நல்ல நேரம் வெளிய சொல்லல!’ தன்னைத்தானே திட்டிக்கொண்டாள்.
*****
தொடரும்…