நான் பிழை… நீ மழலை… 30

நான் பிழை… நீ மழலை… 30

நான்… நீ…30

தணிகைவேல் – வடிவாம்பாள் தம்பதிக்கு ஆண் ஒன்று, பெண் இரண்டு என மூன்று வாரிசுகள். மூத்தவன் சண்முகம் பிறப்பிலேயே சற்று சீக்கு பேர்வழி. எந்த வேலைக்கும் வளையாமல் தந்தைக்கு உதவியாக மட்டுமே நடமாடிக் கொள்வான். காரியங்கள் இருக்காது. மீறிச் செய்தால் ஆஸ்துமா வந்து இவனை மூச்செடுக்க வைத்து பிழிந்து போட்டுவிடும்.

இவனுக்கு அடுத்தபடியாக பிறந்த ரூபாவதி காரியத்தில் நேர்த்தி, ஆனால் வெகுளி… யார், எதைச் சொன்னாலும் நம்பி விடும் சுத்த ஆத்மா!

அக்காவிற்கு நேர்மாறான சுபாவத்திலும் குணத்திலும் வளர்ந்தவள் சின்னப்பெண் கலாவதி. பொறாமை, வஞ்சகத்தோடு அனைத்தையும் பார்ப்பவள்.

திருப்பூரில் அனைத்து தொழில்துறைகளிலும் இரு தலைமுறைகளாக வெற்றிகரமாக தடம் பதித்து செல்வாக்குடன் நிமிர்ந்து நிற்கும் குடும்பத்துடன் சம்மந்தம் பண்ணிக் கொண்டார் தணிகைவேல். 

அந்தப் பெரிய குடும்பத்தின் ஆண் வாரிசான செல்வராஜனுக்கு ரூபாவதியை கொடுத்து, பெண் வாரிசான சிந்தாமணியை சண்முகத்திற்கு பெண்ணெடுத்து ஒரே நாளில் இரண்டு திருமணங்கள் நடைபெற்றன.

கிலோ கணக்கில் தங்கமும் வெள்ளியும், கரன்சிகளுக்கு பதில் பலநூறு ஏக்கர்களும் பெண்ணிற்கு அன்பளிப்பாக(வரதட்சனை) கொடுத்து நிறைவான சீர்வரிசைகளை செய்தார் தணிகைவேல்.

செல்வராஜன், ரூபாவதி தம்பதிகளுக்கு பிறந்தவர்கள் ஆதித்யரூபன் ஆனந்தரூபன். சண்முகத்திற்கு இல்லற வாழ்வில் சற்று தேக்கநிலை ஏற்பட பெரும் அதிருப்தியுடன் நடமாடினாள் சிந்தாமணி.

மகனை சரியாக கவனிக்கவில்லையென மாமனார் மாமியாரையே நிற்க வைத்து கேள்வி கேட்டாள். இந்த நிலையில் நாத்தியும் அண்ணியுமான ரூபாவதி இரட்டையர்களை பெற்றெடுக்க, சிந்தாமணியின் உள்மனம் வன்மத்தில் கொதிக்கத் தொடங்கியது.

வளைகாப்பு, பிள்ளைப் பேறு என அதற்கும் சிறப்பாக மகளுக்கு சீர்வரிசைகளை அடுக்கி வைத்தார் தணிகைவேல். பேரன்கள் பிறந்த பொழுதே அவர்களின் பெயரிலும் நிலபுலன்களை எழுதி வைக்க, ரூபாவதியின் குடும்பத்தை சிந்தாமணியும் கலாவதியும் பரம எதிரியாக பார்த்து பொருமித் தீர்த்தனர்.

கலாவதி, அந்தஸ்தில் குறைந்த கதிரேசனை காதலித்து மணம் புரிந்த காரணத்தினால் அவளுக்கு சொத்தில் பங்கில்லை என்று ஒரேடியாக இளைய மகளை ஒதுக்கி வைத்தார் தணிகைவேல். அவளும் திருமணம் முடிந்த சிறிது நாட்களிலேயே பிள்ளை பெறும் பாக்கியத்தை இழந்து போனாள்.

இரட்டையர்கள் மட்டுமே தணிகைவேலின் வருங்கால சந்ததியாக இருக்க, அவர்களின் பெயரிலேயே அசையா சொத்துகள் யாவும் பதியப்பட்டன.

ஐந்து வருடங்களுக்கு பிறகு சிந்தாமணிக்கு பெண்குழந்தை பிறக்க, தணிகைவேலுவுக்கு பெரும் அதிருப்தி… தனது வம்சம் தழைக்க சொத்துக்களை கட்டிக்காக்க ஆண் வாரிசு இல்லாமல் போய் விட்டதே என மனதளவில் பொருமத் தொடங்கினார்.

பெண்பிள்ளை பிறந்த சிறிது நாட்களில் சண்முகம் இறந்து போக, பேத்தி மிருதுளா ராசில்லாத பெண் என்ற முத்திரை குத்தப்பட்டாள். சின்னப்பெண் கலாவதி தனது பிள்ளையாக ஆனந்தனை தத்தெடுத்துக் கொண்ட காலகட்டம் அது.

பெற்றோர் கைவிட்டாலும் அக்காவும் மாமாவும் தங்களை தாங்கிக் கொண்டனர் என்ற நெகிழ்ச்சியில் ரூபனின் குடும்பத்தை துதிபாடத் தொடங்கி இருந்தாள் கலாவதி.

கதிரேசனும் அவ்வாறே ரூபன் குடும்பத்திற்கு வெண்சாமரம் வீசி, தான் நிலையாக வாழ சொந்த வீடும் தொழிலையும் செல்வராஜனின் தயவில் அமைத்துக் கொண்டான்.

சகோதரிகள் இருவரும் ஒன்றாகக் கூடிவிட, இப்போது மகள்களை ஒன்றாக அருகில் வைத்து சீராட்ட முடியவில்லையே என்று அவர்களின் தாய் வடிவாம்பாளுக்கு சற்றே சுணக்கம்!

மனனவியின் மனவாட்டத்தை அறிந்தவராக சின்னப்பெண்ணை வீட்டிற்குள் சேர்த்துக் கொண்டு சீர் வரிசைகளை செய்தார் தணிகைவேல்.

தனது அன்பளிப்பாக கொடுக்கும் அசையா சொத்துகள் அனைத்தையும், தற்போது அவர்களின் தத்துப்பிள்ளையாக இருக்கும் ஆனந்தனின் மீது எழுதி வைத்தார்.

மாமனாரின் இந்தச் செயலை செல்வராஜினால் கூட தடுக்க முடியவில்லை. “என் பொஞ்சாதி சந்தோசத்துக்கு ஓடிப் போனவளை சேர்த்துக்கிட்டேன். அதுக்குன்னு எனக்கு சமதையான அந்தஸ்து இல்லாதவனுக்கு சொத்து கொடுத்து என் பக்கத்துல உக்கார வச்சுக்க மாட்டேன்!” என்று அனைவரின் முன்பும் தணிகைவேல், கதிரேசனை மட்டம் தட்டிப் பேச, அவனது மனதில் வன்மம் மிகுந்து, பழி வாங்கும் அளவிற்கு வெறியாகவே மாறியது.

தணிகைவேல் தனது சொத்துக்களின் நன்மைக்கென அடுத்தடுத்து செய்த காரியங்கள் யாவும் பெண்கள் முதற்கொண்டு அனைவரையுமே கோபங்கொள்ளச் செய்தன.

தனது காலத்திற்கு பிறகு, தனது பரந்த விரிந்த சொத்துக்களை நிர்வகித்து, பண்ணையம் நடத்த சரியான ஆண்மகனை நியமிக்கும் யோசனையை மேற்கொண்டார் தணிகைவேல்.

ரூபன்களின் தந்தை செல்வராஜ், தன்னால் சொத்துக்களை நிர்வகிக்க முடியாது என்று விலகி விட்டார். தனது தங்கை சிந்தாமணியின் வசம், அந்தச் சொத்துக்களை ஒப்படைக்க வேண்டுமென்பது செல்வராஜின் எண்ணமாக இருந்தது.

அந்த வீட்டின் ஒரே மருமகள்… இவருக்கு அடுத்தபடியாக அந்தக் குடும்பத்தை நிர்வகித்து நடத்தப் போகிற பொறுப்பாளியும் அல்லவா! அதை நாசூக்காக செல்வராஜ் எடுத்துச் சொல்ல, ‘பெண்ணை நம்பி எதையும் ஒப்படைக்க மாட்டேன்.’ என்று ஆணித்தரமாக கூறிவிட்டார் தணிகைவேல்.

செல்வராஜிற்கு அடுத்தபடியாக இருப்பவன் கதிரேசன்… அவனது கைவண்ணமும் சொல்வண்ணமும் ஊரறிந்த சேதியாக இருக்க, தனக்கு அடுத்து பொறுப்பான ஆண்மகனிடம் சொத்துக்களை ஒப்படைக்க நிரம்பவே யோசித்து வெற்றியும் கண்டார்.

குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவரின் பெயரிலும் அசையும் அசையா சொத்துக்களை எழுதி வைத்தாலும், எந்தக் காலத்திலும் அவர்கள் அனுபவித்துக் கொள்ளலாமே தவிர சுயவிருப்பத்துடன் விற்கவோ, அடமானம் அல்லது கை மாற்றவோ முடியாது என்று முதல் அணுகுண்டை போட்டு முடித்தார்.

மகனான சண்முகத்தின் வாரிசும் பெண் பிள்ளையாக இருக்கவே, அந்த குழந்தை வளர்ந்து திருமணம் முடித்தாலும் அதே நிலைமையே!

‘பின் யாரின் பெயரில் சொத்துகள் அனைத்தும் பதிவு செய்வாய்!’ என ஊராரும் கேட்க, தணிகைவேல் கை காட்டியது அவரது பேரன்களை தான்!

இருவரில் யார் தன் பேத்தி மிருதுளாவை திருமணம் செய்து கொள்கின்றனரோ அவர்களுக்கே தனது சொத்துக்களை பரிபாலனை செய்து ஆண்டு அனுபவிக்கும் உரிமை உள்ளது என்பதை சட்டப்படி சாஸ்வதமாக்கி வைத்தார்.

அதாவது தனது பேரன் மற்றும் பேத்தியின் வாரிசுகளுக்கு நேரடியாக அந்த சொத்துக்கள் அனைத்தும் போய்ச் சேரும் என்பதை எழுத்து வாயிலாக ஊர்ஜிதம் செய்து வைத்தார்.

அதற்கு முன்னர் தாத்தாவின் சொத்துக்களாக பேரன்களுக்கு என கணிசமான ஏக்கர்களை அவர்களின் பெயரில் எழுதி வைத்தார். இதில் ரூபாவதியின் பிள்ளைகள் இருவருக்குமாக தனித்தனியாக கொடுக்கும் போது, கலாவதியின் பிள்ளையின் கணக்கு என ஆனந்தனுக்கு கூடுதலாக ஒரு பங்கும் வந்து சேர்ந்து கொண்டது.

இரு மகள்களுக்கு எனவும் தனியாக சொத்துகளை பிரித்து கொடுத்து அவர்களின் வாரிசுகளுக்கு மட்டுமே முழு உரிமையும் எழுதிக் கொடுத்தார். அதன்படி ரூபாவதியின் பங்காக வந்த தாய்வீட்டு சொத்துக்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஆனந்தனுக்கு ஒரு பங்கு வந்து சேர்ந்தது.

கலாவதியின் ஒரே பிள்ளை என்ற கணக்கில் அவளது தாய் வீட்டு சொத்து முழுவதும் அவனது பெயரிலியே பதியப்பட்டு இருந்தது.

ஆக, தத்துப்பிள்ளையாக சென்றதில் மும்முனை வரவாக தாத்தாவின் சொத்து, அம்மாவின் சொத்து, வளர்ப்புத் தாயின் சொத்து என தனது பத்து வயதிற்குள் கணிசமான கோடிகளுக்கு அதிபதி ஆகியிருந்தான் ஆனந்தன்.

தணிகைவேலின் இந்த செயலை ஒத்துக்கொண்டு அனைவரும் அமைதியாக இருந்தாலும், ஒவ்வொருவரின் மனதிலும் சொல்லாத நெருடலும் வன்மமும் கூடிக் கொண்டே சென்றதை பெரியவர் அறியவில்லை.

இந்த பாகப்பிரிவினை நடந்த நேரத்தில் செல்வராஜின் அனைத்து விதமான தொழிற்பங்குகள் மற்றும் சொத்துக்களும் அந்த நேரமே இரு சம பாகங்களாக பிரிக்கப்பட்டு ஆதித்யன், ஆனந்தனின் பெயர்களில் மாற்றி எழுதப்பட்டன.

இரட்டை பிள்ளைகளாக இருந்தாலும் அவர்களின் பெயரில் எழுதி வைக்கப்பட்ட சொத்துக்களே அவர்களிடம் ஏற்ற இறக்கங்களை கொண்டு வந்தன.

ஆனந்தனின் சொத்து மதிப்பினை மனதில் வைத்தே, ‘தனது மகள் ஆனந்தனுக்கு தான்!’ என்ற உறுதியான முடிவினை எடுத்து பகிரங்கமாக அறிவிக்கவும் செய்தாள் சிந்தாமணி.

இதன் காரணமாக அன்பும் வாஞ்சையும் அவனிடத்தில் கூடிப்போனதில், ஆதித்யன் உறவுகளின் மத்தியில் ஒதுக்கி வைக்கப்பட, அவனுக்கு வெளியாட்களின் மீது நம்பிக்கை குறைந்து வெறுப்பும் கூடிப்போனது.

சிந்தாமணியின் முடிவில் குடும்பத்தார் அனைவருக்கும் ஏக சந்தோசம். அந்த பத்து வயது இளம் பிராயத்தில் கிராமத்து வழக்கமாக தணிகைவேலின் பிடிவாதத்தில் நிச்சயத் தாம்பூலமும் மாற்றிக் கொள்ளப்பட்டதில் செல்வராஜ் பெரும் அதிருப்தி கொண்டார்.

அதன் பிறகு ஆனந்தனின் வளர்ப்பில் கூடுதலான வாஞ்சையையும் அன்பையும் காட்டத் தொடங்கினார் வடிவாம்பாள். தத்துப்பிள்ளையாக வந்ததில் இருந்து கலாவதியின் அடக்கு முறையில் பிடிவாதக்காரனாக மாறத் தொடங்கியிருந்த ஆனந்தனை கவனித்துக் கொள்வதற்கென்றே செல்லாயி பாட்டியை மகளின் வீட்டில் வேலைக்கு அமர்த்தினார் வடிவாம்பாள்.

“நீ அடம் பிடிக்காம சாப்பிட்டு பலசாலியா வளர்ந்தா தானே தெம்பா உனக்கு வேண்டியதை கேட்டு பிடிவாதம் பிடிக்கலாம்.” என்ற செல்லாயி பாட்டியின் போதனையில் வீம்பு பிடிக்கும் பிள்ளை, மூர்க்கத்தனத்தை கற்றுக் கொண்டது.

ஆனந்தனுக்கு சாதகமான புத்திமதிகளை மட்டுமே கூறி தன்வழிக்கு கொண்டு வருவதை பழக்கப்படுத்தினார் செல்லாயி பாட்டி.

“உனக்காக யாரும் சாப்பிடப் போறதில்ல… உனக்காக யாரும் வரப்போறதும் இல்ல… உன்னை நீதான் பார்த்துக்கணும்!” என்று ரூபாவதியை பார்க்க வேண்டுமென்று அழும் ஆனந்தனின் மனதில் வன்மத்தை வளர்த்தே சமாதானப்படுத்துவாள் அந்த மூதாட்டி.

தன்னைச் சுற்றி உள்ளவர்கள் அனைவரும், அவனை உருட்டி மிரட்டிக் கொண்டிருக்க, தான் சொல்வதை மட்டுமே கேட்டு நடக்கும் செல்லாயி பாட்டியின் சொல் பேச்சிற்கு மகுடியாக மயங்கிப் போனான் ஆனந்தன்.

“உனக்கு எப்படி இருக்கத் தோணுதோ அப்படி இரு… என்ன தோணுதோ அதை மட்டுமே செய்! அடுத்தவங்களுக்கு பாவம் பார்த்தா நீ வாழ முடியாது!” என்று செல்லாயி போதித்து வளர்க்க, யாரையும் துச்சமாகவே பார்க்க பழகிக் கொண்டான் ஆனந்தன்.

அந்தச் சிறு வயதிலும் உறவுமுறையை கூறிக் கூட யாரையும் அழைத்து விடமாட்டான்.

“என்ன கதிரேசா!” இளக்காரமாக கேட்டுச் சிரிக்கும் ஆனந்தனிடம்,

“மரியாதை இல்லாம கூப்பிடக் கூடாதுடா!” கலாவதி அதட்டினால்,

“பிடிக்கலன்னா காதை பொத்திக்கோ கலாவதி!” திமிராக அவளின் வாயை அடைப்பான்.

சிறுவனை அடக்க முடியாத கோபத்தில் செல்லாயி பாட்டியை வேலையை விட்டு நிறுத்த, வீட்டையே போர்க்களமாக்கி வைத்தான் ஆனந்தன்.

இவனது அடாவடிக்கு பயந்தே, மீண்டும் அவனை கவனித்துக் கொள்ள வந்து சேர்ந்தாள் செல்லாயி பாட்டி. அந்த முதியவளையும், ‘செல்லாயி’ என்றே அழைத்து தனது கோபத்தை தீர்த்துக் கொண்டான் சிறுவன்.

“எனக்காக இங்கே இருக்கேன்னு சொல்லாம, அவங்க சொன்னதும் என்னை விட்டுப் போயிட்டே இல்ல நீ!” குதர்க்க பேச்சினை ஆதங்கமாக கொட்டி தன்னைத்தானே சமாதானபடுத்திக் கொண்டான் ஆனந்தன்.

கலாவதியும் ஆனந்தனின் மீதான கோபத்தை எல்லாம் அவனை நிந்தித்து, வசைமொழி பேசியே தீர்த்துக் கொள்வாள். அதுவும் யாரும் கேட்டுவிடாத பொழுதுகளில் மட்டும் அவளின் அர்ச்சனைகள் நடக்கும். வெளியில் தெரிந்தால் சொத்தும் வீடும் பறிபோய் விடுமே என்கிற பயம் அவளை ஆட்டிப்படைத்தது.

ஆனால் கதிரேசன் நேர்மாறாக, தனது சட்டத்திற்குப் புறம்பான வேலைகளுக்கு சிறுவனை உபயோகப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தான்.

தோட்டத்திற்கு பின்புறம் கஞ்சா செடியை ஊடு பயிராக வளர்த்து, அதை ஆனந்தனின் பாடபுத்தகப் பையில் வைத்து விடுவான். பிள்ளையை பள்ளிக்கு கொண்டு விடும் நேரத்தில் தனது கூட்டாளிகளை அங்கே வரச்செய்து அந்த செடியை கை மாற்றி விடுவான்.

நாள்போக்கில் இந்த வேலைக்கு ஆனந்தனை தனியாகவே அனுப்பி வைத்தான். ஏழு, எட்டு வயதில் என்னவென்றே தெரியாத சூழ்நிலையில், “இந்த கீரைய, கதிரேசன் கொடுக்கச் சொன்னான்!” என்று கூட்டாளிகளின் முகத்தில் வேண்டாவெறுப்பாக வீசி எறிவான் ஆனந்தன்.

பள்ளி வளாகம், சின்னஞ்சிறு சிறுவன் என எங்கும் சந்தேகம் கொள்ளமுடியாத வகையில் ஆனந்தனின் பத்து வயது வரை, அவனைப் பலவித கடத்தல் தொழிலில் ஈடுபடுத்தி சம்பாதித்தான் கதிரேசன்.

இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக செல்வராஜ் தனது மேற்பார்வையில் ஆனந்தனை வளர்க்க முடிவெடுத்து விட, அது அவரின் குடும்பத்திற்கே உலை வைத்தது.

பாரம்பரிய கௌரவமும் பெரும் செல்வத்தின் மீதான ஆசையும், யாரும் சிந்திக்கவே முடியாத பெரிய பாவங்களை எல்லாம் மிக எளிதாக செய்துவிட முடியும் என்பதை காலமும் சூழ்நிலையும் ஆனந்தனுக்கு மிக அழகாக, ஆழமாக அறிய வைத்தது.

***

Leave a Reply

error: Content is protected !!