நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…42

குழந்தை பிறந்த இரண்டு வாரம் கழித்து தனது பயிற்சிகளை முழுவதுமாய் முடித்து விட்டு மனஷ்வினி வந்து சேர்ந்த நேரம், நகுலேஷும் வந்து இறங்கினான்.

புனேவில் ரோபோடிஸ்க் ஆட்டோமேஷன் முடித்து அங்கேயே வேலை கிடைத்து பணியாற்றி வருகிறான். தொலைவில் இருந்தாலும் உடன் பிறப்புக்களின் பாசம் பற்றெல்லாம் காணொளி பேச்சுகளில் அமோகமாக வளர்ச்சி காண்கின்றது.

மனஷ்வினி வந்து இறங்கிய பொழுதில் இருந்து, கணவனிடம் இவள் காட்டிய அலட்டலில், ‘போடி!’ என முறுக்கிக் கொண்டு தனது அறைக்குள் முடங்கி விட்டான் ஆனந்தன்.

‘என்னை தள்ளி நிறுத்தினாய் அல்லவா, அனுபவி ராஜா… நல்லா அனுபவி!” என்ற சிறுபிள்ளைத்தனம் இன்னும் இவளை விட்டு ஒழிந்தபாடில்லை. உரிமையுள்ள இடத்தில் தானே கொடிபிடித்து சாதிக்க முடியும். அதை செவ்வென செய்து வருகிறார்கள் இருவரும்.

‘கண்ணே… கட்டிக் கரும்பே!’ என பிறந்த பிள்ளையை கொஞ்சிப் பேசியவள், தம்பி மற்றும் வருணுடன் நடனமாடி மகிழ, ரூபம் மாளிகை வெகு நாட்களுக்கு பிறகு களைகட்டியது.

“என்ற சின்ன பேத்தி மாதிரி வருமா!” அருணாச்சலம் பெருமை பேச, ராஜசேகர் சுலோச்சனாவின் பார்வைகள் பிள்ளைகளின் வளர்ச்சியில் நெகிழ்ந்து போனது.

“நான் இருக்கப் போற பத்துநாளும் குட்டியை நான்தான் வச்சுப்பேன்!” மனு ஆசையாக கூறவும் முறைத்தாள் தேஜஸ்வினி.

“என்னடி சொல்ற… கோர்ஸ் இன்னும் முடியலையா?”

“ஒன்றரை வருஷம் ட்ரைனிங்க்கு செலக்ட் ஆகி இருக்கேன் க்கா சிங்கப்பூர் போகணும்!” என்றதும் பலமான கொட்டு அக்காவின் பரிசாக விழுந்தது.

“ஏன்க்கா?” தங்கை பாவமாக கேட்க,

“என்ன ஏன்க்கா… உன் இஷ்டத்துக்கு முடிவெடுப்பியா? நாங்க இருக்கோம்ங்கிறதயே மறந்து போயிட்டியாடி?”

“என் பிராக்டீஸுக்கு கிடைச்ச ஆஃபர்… எப்படி வேண்டாம்னு ஒதுக்க முடியும்? என் நல்லதுக்கு நான் டிசைட் பண்ணக் கூடாதா!”

“நீ போறது ஆனந்தனுக்கு தெரியுமா? அவன் சரின்னு சொல்லிட்டானா மனு?” அழுத்தமாக கேட்டான் ஆதி.

“இன்னும் சொல்லல மாமா… எப்படியும் சரின்னு சொல்லிடுவார்!” நம்பிக்கையுடன் சொல்ல,

“எல்லாம் அவர் கொடுக்கிற இடம். அதான் நீ உன் இஷ்டத்துக்கு ஆடுற!” மேலும் கடிந்து கொண்ட தேஜூ,

“படிப்பை கொஞ்சநாள் மூட்டை கட்டி வைடா மனு… ஆனந்தனோட இரு!” அமைதியாக புரியவைக்க முயன்றாள்.

“ஐயோ என்னக்கா… ரொம்ப பெரிய மனுஷியா பேச ஆரம்பிச்சுட்ட!”

“அட்வைஸ் இல்ல மனு… என்னோட ஆர்டர்ன்னே கூட நினைச்சுக்கோ! ஆனந்தனை பாரு… வெளியே சகஜமா இருந்தாலும் உள்ளுக்குள்ள அத்தனை ஆசைகளையும் அடக்கிட்டு இருக்கான். முன்னாடி கோபத்தை வெளியே கொட்டிட்டு இருந்தவனுக்கு இது எவ்வளவு கொடுமையா இருக்கும்னு அவன் நிலைமையில இருந்து பார்த்தாதான் தெரியும். அதுக்காக உன்னை உடனே குழந்தை பெத்துக்க சொல்லல… வாழ்க்கைய அழகா, அர்த்தமுள்ளதா வாழச் சொல்றேன்!” ஆதி கட்டளையாக கூறிவிட, அந்தநொடியே மனுவிற்கு மனம் விட்டுப் போனது.

‘கணவனுடன் வாழமாட்டேன்!’ என்று இவளா வீம்பு பிடித்துக் கொண்டிருக்கிறாள்? அவன்தானே, ‘படிப்பை பார்… உன் ஆசைதான் என் ஆசை!’ என எந்த நேரமும் ஒதுக்கி தள்ளி நிறுத்தியே வதைக்கிறான். இதெல்லாம் இவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது!

‘சரியான அமுக்குணி… வெளியே நல்லவன் வேஷம் போட்டுட்டு எனக்கு மட்டும் எப்பவும் வில்லனாவே இருக்கான்!’ உள்ளுக்குள் பொருமிக் கொண்டவளை குழந்தையின் சிணுங்கல் நிகழ்விற்கு அழைத்து வந்தது.

“என்ன டாக்டரே? மச்சான்னு சொன்னதும் உடனே டுயட் பாட போயிட்டியா!” நகுல் கேட்க,

“வேண்டாம் டா ரோபோ… தம்பின்னு பார்க்காம முகத்துல கீசி விட்ருவேன்!” கடுப்பாகக் கூறி குழந்தையிடம் கவனத்தை திருப்பினாள்.

கடந்த ஐந்து வருடங்களாக மனஷ்வினியின் விருப்பத்திற்கு மறுபேச்சு இல்லாமல் அனைத்தும் நடந்து கொண்டிருக்க, இப்பொழுது இவளின் விருப்பம் மறுக்கபட்டதும் இவளின் மனம் சொல்ல முடியாத வேதனைகளை தூக்கிச் சுமந்தது.

அந்த வருத்தத்தோடு தங்களின் அறைக்குள் நுழைய, எந்த உணர்வுமின்றி கட்டிலில் அமர்ந்திருந்தான் ஆனந்தன். வருண் எப்பொழுதோ அவனுக்கு அருகில் உறங்கிப் போயிருந்தான்.

“உங்களுக்கு இப்ப சந்தோசமா?” கோபத்துடன் கேட்க இவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனால் இவள் சத்தம் போட்டு பேசுவது சுத்தமாய் பிடிக்கவில்லை

“மெதுவா பேசு மனு… வருகுட்டி முழிச்சா நைட் தூங்க மாட்டான்!” பிள்ளை பாசத்தில் கூற, இவளுக்குள் ஆத்திரம் மூண்டது.

வேகத்துடன் தலையணையை எடுத்துக் கொண்டு முன்னறை சோபாவில் வந்து அமர, மனைவியின் பின்னோடு வந்தான் ஆனந்தன்.

“என்ன ஆச்சு மனு?”

“உங்க மனசுல இருக்கிறதை எப்பவும் வெளியே சொல்ல மாட்டீங்களா?”

“இப்ப எனக்கு என்ன கேடு வந்துடுச்சுன்னு நீ சண்டைக்கு நிக்கிற?”

“போதும் ஆனந்த்… உங்க குற்ற உணர்ச்சியில இருந்து வெளியே வாங்க! அதுலயே உழண்டுட்டு இருக்கிறதாலதான் எந்த ஃபீலிங்ஸுக்கும் ரியாக்ட் பண்ண முடியாத ஜடமா இருக்கீங்க!”

“இதென்னடி… புதுசா பழி போடுற?”

“எனக்காக நீங்க பார்க்கறதுல எனக்கு சந்தோசம்தான்! ஆனா, அந்த நல்லதை உங்களை, நீங்க தொலைச்சுட்டு செய்ய வேண்டிய அவசியமில்ல!” கூறியவளின் மூக்கும் முகாரி பாடியது.

“செல்லாயி… என்னாச்சு உனக்கு? ஏன் ஏதோதோ பேசுற!” பரிவாய் கேட்டவனின் கரங்கள் அவளை அரவணைத்துக் கொள்ள, வெகு நாட்களுக்கு பிறகான ஸ்பரிசத்தில் இருவருமே நொடிநேரம் லயித்துப் போனார்கள்.

“யார், என்ன சொன்னா?” ஆனந்தன் மெதுவாக கேட்க, ஆதி, தேஜுவின் கண்டிப்பான பேச்சுக்களை மனுவும் கூறி விட, இவனுக்கு வருத்தமே மேலிட்டது.

“நீ, உன் புரஃபசன்ல கான்சென்ரேட் பண்ணு… நான் அவங்ககிட்ட பேசுறேன்!”

“இன்னும் எத்தனை வருஷம் இப்படியே இருக்கிறதா உத்தேசம்?”

“உனக்கு படிப்பு முடியட்டும்மா… உன் மைன்ட் டிஸ்டர்ப் ஆகக்கூடாதுன்னு தான்…” என்றிவன் இழுத்த இழுவையில் பொறுமை பறந்து போனது அவளுக்கு.

“மெடிக்கல் புரஃபசன் எல்லாம் ஒரு புள்ளியில ஸ்டாப் பண்ண முடியாது. அதை நான் செய்யவும் மாட்டேன். ஓரளவுக்கு நின்னு ஸ்டடி பண்ணிக்கவே பத்து வருஷம் போயிடும். உங்களுக்கு இதைவிட தெளிவா எப்படி சொல்ல?” இயலாமையுடன் கூற, யோசனையில் இருந்தான் ஆனந்தன்.

கணவனின் பதிலற்ற நிலையைப் பார்த்து, “பேசாம காவி கட்டிட்டு நீங்க இமயமலைக்கு போங்க… நானும் எனக்கேத்த ஆசிரமமா பார்த்து போய் சேருறேன்!” வெடுக்கென்று கூறினாள்

“ஏன் டி இப்படி?”

“பின்ன என்ன மேன்? படிக்கிறவன் எல்லாம் குடும்பம் நடத்துறது இல்லையா… இல்ல, பிள்ள பெத்துகிட்டவன் படிக்க வர்றதில்லையா? என்னை இன்னும் சின்னப் பொண்ணாவே தாங்கிப் பேசி, ரொம்ப டேமேஜ் பண்றே நீ!”

“ஐயோ… வாயாடி ஃபார்முக்கு வந்துட்டா!”

“என்ன உளறல்?”

“ஒன்னுமில்ல செல்லாயி… நீ கண்டினியூ பண்ணு!”

“கிளாஸ் எடுத்துட்டு இருக்கேன்னு நக்கல் பண்ணறீங்களோ! உனக்கெல்லாம் பொண்டாட்டி கிடைக்கிறதே ஓவர் குவாலிபிகேஷன் தான்டா!”

“என் செல்லாயிக்கு இத்தனை கோபம் ஆகாதுடி!” என்றவாறு அவளை மார்பில் சாய்த்துக் கொள்ள, மாட்டேன் என முரண்டு பிடித்தாள்.

“இப்ப நீதான்டி தள்ளி விடுற… நான் இல்ல!”

“நீ கூப்பிட்ட உடனே நான் வந்திடணுமா… அன்னைக்கு மாதிரி ஏதாவது சொல்லி காரியத்தை முடிச்சே, விடிஞ்சதும் சதக் சதக்தான்!”

“படிக்க போனியா… கொலை பண்ண கத்துக்க போனியா?” சீண்டலுடன் மனைவியை தன் கை வளைவிற்குள் வைத்துக் கொண்டான்

“சகவாச தோஷம் மச்சான்… நீ பக்கத்துல இருந்தாலே நான் ஆன்டி ஹீரோயின் மோடுக்கு போயிடுறேன்!”

“அதுவும் நல்லதுதானே செல்லாயி… அப்பதானே நானும் வில்லனா பெர்ஃபார்ம் பண்ண முடியும்!” வெகு நாட்களுக்கு பிறகான மடைதிறந்த பேச்சில் இருவரும் பதிலுக்குபதில் பேசி வாரிவிட்டுக் கொண்டனர்.

இவளின் முகச் சுருக்கமும் அவனது எகத்தாளப் பேச்சும் நீண்டு கொண்டே செல்ல, பேச்சு சுவாரஸ்யத்தில் மனைவியின் மடியில் தலைவைத்து படுத்து விட்டான் ஆனந்தன்.

“டாக்ரம்மா சரியா சாப்பிடுறதே இல்லையா!”

“பாருடா… இவரோட அக்கறைய…”

“ஜீரோ சைஸுக்கு மாறி எப்பவும் வறண்ட பாலைவனமா, சப்ப ஃபிகரா இருக்கடி! பாரு… இத்தனை வருஷம் கழிச்சு நீ பக்கத்துல இருந்தும் எனக்கு ஆசையே வரல!” ஏகமாய் முகம் சுழித்துக் கொள்ள

“உன்னை கொலை பண்ணாம விடமாட்டேன் மச்சான்…. கேப்மாரித்தனமா பார்த்து, ரொம்ப நல்லவனாட்டம் பேசுறடா!” அவனை தள்ளி விட முயற்சிக்க, அவளது முயற்சிகள் பலிக்கவில்லை.

மனைவியின் கைகளை இறுக்க பிடித்துக் கொண்டு கணவனாய் கரியமாற்றும் முயற்சியில் இறங்கி விட்டான்.

“நீ இப்படி கோபத்துல வெடிச்சாதான் எனக்கும் மூடே வருதுடி… இப்ப எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா?” என்றபடியே கன்னத்தில் கடித்தவனை விட்டு விலக முயற்சித்த நேரத்தில், அவள் இதயத்தில் அழுத்தமாய் முத்தம் பதித்து விட்டான் ஆனந்தன்.

அவளுக்கு சட்டென முகம் சிவந்து விட்டது. தலையை சாய்த்து அவள் முகத்தை பார்த்தவன், “ரொம்ப அழகா இருக்க!” தாபத்துடன் கூறியவனின் குரல் அவளை கிறங்கடித்தது.

“என்னடி இது? புதுசா வெக்கப்படுற நீ!” சீண்டலாய் கேட்டதும், அவனை சோபாவில் தள்ளி விட்டு நகர முயல, அவளின் துப்பாட்டாவை பற்றி இழுத்தே தன் மேல் விழ வைத்துக் கொண்டான்

“வம்பு பண்ணாதீங்க… தம்பி இருக்கான்!” அவள் மெல்லிய குரலில் கூற,

“அவன் இருக்கிறது பெட்ரூம்ல… நாம் இருக்கிறது ஹால்ல செல்லாயி!” என்றவனின் முத்தப் பயணம் கழுத்தில் மையம் கொண்டிருந்தது.

அதன் பிறகான நிமிடங்கள் இதழ் ஒற்றலில் கரையத் தொடங்கின. முகத்தில் வரைபடக் கோலங்களாய் முத்தக் கோடுகளை போட்டு முடித்து அவள் இதழில் வந்து இளைப்பாறிட, சந்தோஷ சிவப்பில் அவளின் இமையோரம் கண்ணீர்த் துளிகள்.

“செல்லாயி!” என்றழைத்து மீண்டும் முத்தத்தில் இறங்க, ஒரு நிலைக்கு மேல் அந்த முத்தம் மனைவியால் தொடரப்பட்டது.

அவனும் கிறக்கத்துடன் அவளை மொத்தமாய் தன்னுள் புதைத்துக் கொண்டான். தரையில் நடந்த கூடல்… இருவருக்கும் அடித்துப் போட்டதாய் சோர்வை உணரச் செய்தது.

விடிந்ததும் ஆதி வந்து, தூங்கும் மகனை வாங்கிக் கொண்டு போய்விட்டான். “ஒருவாரம் இவன் பக்கம் திரும்பிப் பார்க்க கூடாது நீ!” கண்டிப்பான தோரணையில் கூறிவிட்டு சென்று விட, பெரிதாக யோசித்துக் கொண்டிருந்தாள் மனு.

“என்ன யோசனை?” என கேட்டவனிடம் சற்று தயங்கியவள்,

“இல்ல… நேத்து இருந்த அதே ஃபீல் அன்னைக்கு ஃபர்ஸ்ட் டைம் இருந்ததான்னு யோசிக்கிறேன்! உங்களுக்கு எப்படி?” மிகப்பெரிய சந்தேகமாக கேட்க, சந்தோசமாய் அலுத்துக் கொண்டான்.

“இன்னும் நாலு ரவுன்ட் போகத் தோணுது!”

“யோவ் ஃபீலிங் கேட்டா… உன் காரியத்துலயே இருக்க நீ!”

“நீ மொதல்ல சொல்லு!”

“எனக்கு சட்டு சட்டுன்னு முடிஞ்ச ஃபீல் மச்சான்!” உள்ளத்தில் இருப்பதை மறைக்காமல் கூறிவிட,

“ஹாஹா… சென்னை வெயில்ல காஷ்மீர் குளிருல கிடந்த ஃபீல் எனக்கு… இனிமேயும் அப்படிதான்!” என்றவனை வாய் மூடாமல் பார்த்தாள்.

“அதொன்னுமில்ல தங்கமே… ஃபர்ஸ்ட் டைமே நாம நாலு ரவுன்ட் போயி அதுக்கு சாட்சியும் வந்திருந்தா, உனக்கு இப்பேற்பட்ட சந்தேகம் எல்லாம் வந்திருக்காது!”

“அடப்பாவி மச்சான்!”

“ஆமாடி, உனக்காக பார்த்து நான்தான் கிறுக்கனா திரிஞ்சேன்!”

“உங்க பேச்சு சுத்தமா சகிக்கல மச்சான்!” விளையாட்டாய் கன்னத்தில் இடித்தவளின் கைகளை தன் கைகளுக்குள் பொதித்துக் கொண்டான் ஆனந்தன்.

“மத்தவங்க மாதிரி சாதரணமா என்னோட வாழ முடியாதுன்னு தெரிஞ்சும், நீ ஏன் மனு என்னை விட்டுப் போகல?” உணர்ச்சிவசப்பட்டு பேசியவனை இமைக்காமல் பார்த்தாள் மனு.

“எனிதிங்க் பார் யூ மச்சான்!” சந்தோசத்துடன் கூறி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“அதே எனிதிங் பார் யூ ஃபீல் தான் உனக்காக வெயிட் பண்ணச் சொன்னது மனு… என் மனசு திறந்து சிரிக்க வச்சவ நீ! எனக்காக உயிரையே பணயம் வச்சு கஷ்டப்பட்ட பொண்ணு… உள்ளுக்குள்ள நான் தனியாள்ன்னு தவிச்சு நின்னப்ப எல்லாம் உன்னை நம்பியே நான் இருக்கேன்னு எனக்கு நீ உணர்த்திக்கிட்டே இருந்தே… உன்னை எப்படி விட்டு கொடுப்பேன் சொல்லு!” ஆதூரமாய் கூறி அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான். சில நிமிடங்கள் அமைதியாகவே கழிந்தன.

“இதெல்லாம் நிஜமான்னு என்னால நம்ப முடியல மச்சான்! அத்தனை சந்தோசமா இருக்கு. ஓவர்லோட் ஹாப்பினஸ்! என்னால கண்ட்ரோல் பண்ண முடியல… நீங்க என்னை விட்டுத் தள்ளிப் போகவும், பழையபடி என்மேல உங்களுக்கு வெறுப்பு வந்துடுச்சோன்னு பயந்துட்டே இருந்தேன்!” மார்பில் சாய்ந்துகொண்டே பேச ஆரம்பித்தாள்.

“படிக்கிற வேலையை விட்டுட்டு இப்படிதான் தப்புதப்பா யோசிச்சியா?”

“என்ன பண்ணச் சொல்றீங்க? நீங்க செல்லாயின்னு கூப்பிடுறது கூட மிஸ்ஸிங்… அப்போ எனக்கு பயம் வருமா வராதா? அந்த விசயத்துல உங்கமேல ஏகப்பட்ட கோபம் எனக்கு.”

“இப்ப உனக்கு கோபம் போயிடுச்சா?”

“ஏதோ கொஞ்சமா போயிருக்கு!” என்றவளின் கன்னத்தில் முத்தமிட்டு, “லவ் யூ மனு!” ஆழ்ந்த குரலில் தன் அன்பை வெளிபடுத்தி விட, அன்றைய பொழுதை காதலில் மொத்தமாய் கரைத்து மீண்டனர்.

***

அவள் விழி மொழியை படிக்கும் மாணவன் ஆனேன்

அவள் நடை முறையை ரசிக்கும் ரசிகனும் ஆனேன்

அவன் அருகினிலே கனல் மேல் பனி துளி ஆனேன்

அவன் அணுகயிலே நீர் தொடும் தாமரை ஆனேன்

அவளோடிருக்கும் ஒரு வித சிநேகிதன் ஆனேன்

அவளுக்கு பிடித்த ஒருவகை சேவகன் ஆனேன்.

***

ஒருவாரம் கழித்து இருவரையும் அழைத்து பேசினான் ஆதித்யன்.

“இந்தமுறை மனு கூட நீயும் போறது மாதிரி ஏற்பாடு பண்ணிக்கோ ஆனந்தா! அவளை இன்னும் எத்தனை நாளைக்கு தனியா விடுறது? புது ஊர் உனக்கும் ஒரு மாற்றத்தை கொடுக்கும்.” மீற முடியாத குரலில் கூறியதும் யோசனையுடன் சம்மதித்தான் ஆனந்தன்.

“வரு பத்தி கவலைப்படாதே… அவனை சமாளிக்க எனக்குத் தெரியும்!” தம்பியை புரிந்து கொண்டவனாக ஆதி பதிலளிக்க மறுவார்த்தை இல்லை.

“நீ வொர்க் பண்ணப்போற ஹாஸ்பிடல் லோகேஷனும் கிளம்புற தேதியும் சொல்லு மனு… அங்கேயே வீடு அரேன்ஞ் பண்ணி, டிக்கெட் புக் பண்ணிடுறேன்! நம்ம பிசினெஸ் டீலர் இருக்காங்க. அவங்ககிட்ட சொல்லி எல்லா ஏற்பாட்டையும் பண்ணிடலாம்!” பொறுப்பாக கூறவும் அனைவருக்கும் அத்தனை நிறைவு.

நாட்கள் வெகு வேகமாக நகரத் தொடங்கின. சிங்கப்பூருக்கு வந்து ஐந்து மாதம் முழுதாய் முடிந்திருந்தது. இணையமும் காணொளி அழைப்புகளும் இருக்கும் வரை, பிரிவின் ஏக்கங்களோ, தாக்கங்களோ இந்த தலைமுறையினருக்கு எட்டுவதில்லை. ஆனாலும் ஒரு குறைவு மனதோடு இருக்கத்தான் செய்யும்.

“இன்னும் ஒரு வருசம் இருக்கு மனு!” ஏக்கப் பெருமூச்சுடன் குழந்தைகளின் புகைப்படங்களை பார்த்துச் சொன்னான் ஆனந்தன்.

“ஏன் அவங்களை பர்த்துக்க முடியலன்னு கவலபடுறீங்களா மச்சான்?” மனு கேட்க,

“இருக்காதா பின்ன… வரு என் கையிலேயே வளர்ந்தவன், சின்னவனை அப்படி வைச்சுக்க முடியலையேன்னு வருத்தமா இருக்கு!” சோர்வுடன் கூறினான்.

“இன்னும் எட்டு மாசம் பொறுங்க மச்சான்… அப்புறம் நம்ம பேபியையும் சேர்த்து பார்த்துக்கலாம்!” மனைவி கூறியதும், அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தவன் சட்டென்று அவளை பார்த்தான்.

அந்த பார்வையில் அத்தனை உணர்ச்சிகள் கொட்டிக் கிடந்தன. சொல்ல முடியாத தவிப்பில் தத்தளித்துப் போனான் ஆனந்தன்.

“நான் அப்பா… நிஜமா?” நம்ப முடியாமல் திணறிக் கேட்டான்

“நிஜமாவே நீ அப்பா ஆகப் போற ஆனந்தா!” கன்னம் கிள்ளி கொஞ்சிக் கொண்டே கூறினாள் மனஷ்வினி.

அவனால் தன் மகிழ்ச்சியை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவளை இறுக்கி அணைத்து இதழில் வெகுநேரம் முத்தமிட்டு தன்னை ஒரு நிலைக்கு கொண்டு வந்தான் ஆனந்தன்.

திடீரென்று அவன் முகம் யோசனையில் சுருங்க, என்னவென்று பார்வையாலேயே கேட்டாள் மனு.

“நம்ம குழந்தைக்கு என் புத்தி வராது தானே மனு?” கலக்கமாய் கேட்கவும் இவளுமே பரிவுடன் பார்த்தாள்

“ஏன் இந்த மாதிரி யோசிக்கிறீங்க ஆனந்த்? ஒரு குழந்தையோட குணம் அவன் இரத்தத்துல இல்லை, நம்ம வளர்ப்புலதான் இருக்கு. நீங்க வருகுட்டிய நல்லபடியா வளர்க்கலையா… அதே மாதிரி நம்ம பிள்ளையையும் நீங்கதான் வளர்க்கணும்!” தீர்க்கமாய் கூறி முடித்தாள்.

“ஓஹோ… அப்போ நீங்க என்ன பண்ணப் போறதா உத்தேசம்?” குறும்பாய் அவனும் கேட்க,

“ஹாஸ்பிடல், பிராக்டீஸ்ன்னு நான் எப்பவும் பிசி மச்சான்! வீட்டுல பெரியவங்க இருக்காங்க… அவங்க நம்மை, நம்ம குழந்தைகளை கைட் பண்ணுவாங்க! சோ, என் வேலைன்னு எதுவுமே இல்லை!” இலகுவாய் தோள் குலுக்கி சொல்ல, இவனது பார்வையும் ரசனையுடன் மனைவியை அளந்தது.

“சரியாச் சொன்னே செல்லாயி… பொறுப்பை அவங்ககிட்ட கொடுத்துட்டு நம்ம செகன்ட் புராசஸ் ஸ்டார்ட் பண்ணிடலாம்!” கண்சிமிட்டிக் கூறியவனின் மார்பில் ஆசையாய் சாய்ந்து கொண்டாள் மனு.

மாதங்கள் காற்றை விட வேகமாய் கரைந்தே போனது. ஐந்தாம் மாத முடிவில் கருவின் வளர்ச்சியில் இரட்டை குழந்தைகள் என்று தெரியவர, ஆனந்தனின் ஆனந்தத்துக்கு குறைவேது!

மனஷ்வினியின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு குடும்பமே சிங்கப்பூரில் வந்து குடியேறியது. பெரியவர்கள் உடனே வந்து அவர்களுடன் தங்கிக்கொள்ள, ஆதியும் தேஜுவும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பிரசவத்தின் போது வந்து சேர்ந்தனர்.

இரட்டை பெண் குழந்தைகள்… அழகான முல்லை மொட்டாக, பன்னீர் ரோஜாவாக ரூபம் குடும்பத்தின் வரமாய் பூத்தனர்.

“நமக்கு ரெண்டு பொண்ணு தேஜுமா!” அளவில்லாமல் ஆர்ப்பரித்து கொண்டாடியது ஆதித்யனே! அதனைக் கேட்ட ஆனந்தனின் கண்களில் ஆனந்தத்தின் துளி எட்டிப்பார்த்து கீழிறங்கியது.

தங்கைகளின் வரவில் வருணின் ஆட்டமும் துள்ளலும் அதிகப்படியாக இருக்க, ஆரவ் குட்டியும் அண்ணனுடன் சேர்ந்து குதிக்கத் தொடங்கினான்.

“நிறைவா இருக்குடா ஆனந்தா… நீ சொன்ன மாதிரியே நம்ம நாலு குழந்தைகளையும் ஒன்னு போலவே வளர்க்கலாம். நம்ம அப்பா அம்மாவோட கனவு நனவாகிடுச்சு!” பெருமிதத்துடன் தம்பியை முதன்முறையாக சந்தோசத்துடன் அணைத்து கொண்டான் ஆதித்யரூபன். மட்டற்ற மகிழ்ச்சியில் அண்ணனை அணைத்துக் கொண்ட ஆனந்தரூபனின் மனதிலும் குறையாத சந்தோசச் சாரல்கள்.

வளர்பருவத்தில் தங்களை பிழையாய் உருவகப்படுத்தி, தனியாய் நின்ற சகோதரர்களின் மனமெல்லாம் தங்களை முழுதாய் தாங்கிக் கொண்ட துணைகளை நினைத்தே பெருமை கொண்டது.

ஏதுமறியா மழலையாய் வந்தவர்களின் ஆத்மார்த்தமான காதலின் ஆராதனையில், தடங்கல்கள் நீண்டாலும் நம்பிக்கை எனும் வண்ணப் பூச்சரத்தோடு தாங்கிக் கொண்ட மனைவிகளின் வருகையே, சகோதரர்களின் பிழையான வாழ்வினை நேர்செய்திருக்க, தனித்து வாழ்ந்தவர்களின் வேதனை எல்லாம் கானல்நீராகிப் போயின!

இனியெல்லாம் சுபமே!!